Search This Blog
3.10.08
அறிவு உலகில் நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும்!
களிமண்ணும் கையுமாக....
வீரர் வாளும் கையுமாக இருந்து நாட்டையும், வீட்டையும், மானத்தையும் காப்பாற்றுகின்றனர்.
தர்ப்பையும் கையுமாக இருந்துகொண்டு வஞ்சகர்கள் மன உறுதியற்றவர்களை மயக்கியும், மிரட்டியும், அடக்கி வருகின்றனர்
பேனாவும் கையுமாக நீ இருக்கிறாய் பரதா! பயன் என்ன? என்று வீரன் சலித்துக் கொண்டு கேட்டான்.
திடீரென்று உனக்கு ஏனப்பா, கைகளின் நிலை பற்றிய ஆராய்ச்சியிலே ஆர்வம் பிறந்துவிட்டது? என்று வீரனை நான் கேட்டேன்.
கை செய்யும் வேலை கருத்தைக் காட்டுவதுதான் என்றான் வீரன்.
உண்மைதான்! கருத்து இருக்கும் விதத்திற்கு ஏற்றபடிதான் கையின் நிலையும் இருக்கும். ஆனால், இன்று என்ன விசேஷம்? இந்த ஆராய்ச்சியிலே இறங்கிவிட்டாய்? என்று மேலும் கேட்டேன்.
அந்தக் கரங்கள், விமான விசையைப் பிடித்துச் செலுத்துகின்றன; டாங்கிகளை ஓட்டுகின்றன; பீரங்கிகளைப் பேச வைக்கின்றன. துப்பாக்கியைப் பிடித்துக் கொண்டுள்ளன; எதிரியின் பிடரியிலே பாய்கின்றன; சுதந்திரக் கொடியைத் தாங்குகின்றன; ஆராய்ச்சி வாளைப் பிடிக்கின்றன; அறிவுச் சுடரை ஏந்தி உள்ளன; ஆர்ப்பாட்டக்காரரை அடக்குகின்றன; அரசுகள் நடத்துகின்றன; அந்தக் கரங்களே கரங்கள், மற்றவை மரங்கள்! என்றான் வீரன் ஆர்வத்தோடு.
வெளிநாட்டவரின் கரங்களைப் புகழ்வதே உன் வேலையா வீரா? நம்நாட்டுக் கரங்கள் இலேசா? என்றேன் நான்.
கூப்பிய கரம்! தலையிலே மோதும் கரம்! வயிற்றைப் பிசையும் கரம்! என்று வருணித்தான் வீரன் வெறுப்புக் கலந்த குரலுடன்.
அதற்கு என்ன செய்யலாம்? என்று நான் கூறினேன். வீரன் திருப்தி அடையவில்லை. பரதா! கப்பல் ஓட்டும் கரம், கோட்டை எதிரே நின்று கொடி தாங்கும் கரம்; பாட்டு மொழி ஏட்டைத் தாங்கும் கரம் இல்லை என்பதற்கு, வெளிநாட்டான் மீது மட்டும் பழி சுமத்தினால் போதாது. களிமண்ணும் கையுமாக நம்மவரை இருக்குமாறு அவனா சட்டம் இயற்றி இருக்கிறான்? வெட்டி வேலைக்குக் கரங்களைப் பயன்படுத்தும்படி வெள்ளையனா பணித்தான்? வீணருக்கு உழைக்கும்படி அவனா ஏவுகிறான்? என்று வீரன் கேட்க, எனக்கு ஒன்றும் புரியவில்லையே. களிமண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்? என்று நான் வீரனைக் கேட்டேன். கைவண்ணம் காணத்தானே போகிறாய்! திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா - அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர். யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேஸ்வரன் மைந்தனை ஈரக்களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு விநாயக சதுர்த்தி பூஜை செய்வர் என்று வீரன் விளக்கிய பிறகே, அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான்! களிமண்ணும், கையுமாகத்தான் இருப்பர் என்று கூறிக்கொண்டே நான் சிரித்தேன். கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான் என்றான் நண்பன் கோபத்தோடு. திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே!, ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்?
வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் - நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப்பார்! நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன்தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் பிரதிநிதிகள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால் கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணைபொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும்,சாந்தியையும் நோக்கு. பக்கத்தில் பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுளின் காட்சி எனும் கூத்திலே கணபதி ஒரு விதூஷகரராகவே பாவிக்கப்படுவார் என்று வீரன் உரைத்தான்.
இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த உளைச் சேற்றிலே உழலுமட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது? களிமண்ணும் கையுமாக இருக்கும் தோழர்களே, கசடர் புனைந்துரைகளைக் கடவுள் கதையென்று நம்பி ஏமாளிகளாக இருக்குமட்டும், அறிவு உலகில் நம் நாட்டுக்குக் கோமாளிப் பட்டமே சூட்டப்படும். இவற்றை விட்டுவிடும் நாளே, சுயமரியாதை பிறக்கும் வேளையே, மக்களின் விடுதலை நாள்! அந்த நாள் என்று வரும் என்ற ஏக்கமே எனக்குப் பிறந்தது. வீரனின் பேச்சுக்கேட்டு, இதனைத்தான் உங்கட்கும் உரைத்தேன்/ உள்ளத்தில் கோபமின்றி. யோசித்துணர்க!
------------------------- பேரறிஞர் அண்ணா "திராவிட நாடு", 12.9.1942
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சரஸ்வதி பூஜை செய்யும் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்,
லட்சுமி பூஜை செய்ய்ம் ஏழை உழைப்பாளி,
பிள்ளையார் சுழியும்,ஸ்ரீராம ஜெயமும் போட்டவரின்,
ஆய்த பூஜை செய்ய விஞ்ஞானி கண்டு பிடித்தக் கருவிக்குப் பொட்டு இட்டவர்
இவர்களிடம் தோன்றி வளர்ந்து கணினியில் எழுதும் நாம்
இன்னும் மூடத்தனத்தில் மூளையை அடகு வைத்திருப்பது ஏன்?ஏன்?
குத்து விளக்கு வெளிச்சம் தருவதற்கா?
இல்லாத சரஸ்வதிக்கு இன்னும் பூஜைகளா?
குழந்தைகளையாவது அடிமைகளாக ஆக்காமல் விட்டு விடுங்கள்.
ஊதுகின்ற சங்கை நாமும் சளைக்காமல் ஊதிக் கொண்டேயிருப்போம். இனிவரும் தலைமுறைகளாவது மூடத்தனத்திலிருந்து விடுதலை பெறட்டும். நன்றி தோழரே.
Post a Comment