Search This Blog

3.10.08

மனிதனால் கற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டுக் கதைகள்



கற்பனைகள் நிர்த்தூளி...!

கடவுள், மதம், ஆத்மா, நான், பாவ புண்ணியம், மோட்சம், நரகம், ஒழுக்கம் என்பனவெல்லாம் மனிதனால் கற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டுக் கதையேயொழிய வேறல்ல. இன்னும் தெளிவாகக் கூற வேண்டுமானால் ஒவ் வொரு நாட்டிலுமுள்ள ஒரு சில சுயநலக் கூட்டத் தார் - ஊரார் உழைப்பில் உடல் நோகாது உண்டு வாழ வேண்டுமென்று விரும்பும் மனிதப் புல்லுருவிகள் - புரோகிதர்கள் இத்தகைய கற்பனை களைச் செய்து மக்களை மூடர்களாக்கி, அறி விற்குப் பகைவர்களாக்கி, தன்னம்பிக்கையை இழக்கும்படிச் செய்து, இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தை மக்கள் வெறுக்கும்படி தூண்டி, தாங்கள் இவ்வுலக வாழ்க்கை யில் பூரண இன்பம் துய்த்துக் கொண்டு, மற்ற மக்களுக்கு மறுஉலக வாழ்க்கையில் மோகங் கொள்ளும்படிச் செய்துவிட்டனர்.

எனவே, பகுத்தறிவுவாதிகள் - மனித ஜீவ அபிமானிகள் தங்கள் பகுத்தறிவினால், சுயநலப் புரோகிதர்களால் கட்டப்பட்ட இந்த மறு உலக நம்பிக்கைகளைத் தகர்த்தெறிந்து, மக்களை இவ்வுலக வாழ்க்கையில் பற்றுள்ளவர்களாகச் செய்ய வேண்டும். விஞ்ஞான அறிவு நாளடைவில் லோகாயதவாதிகளுக்கு அனுகூலமாக வளர்ந்து கொண்டே வருகிறது. விஞ்ஞான வளர்ச்சி என்னும் சம்மட்டியினால் கடவுள், ஆத்மா, மோட்சம், நரகம், பாவ - புண்ணியம், ஒழுக்கம் என்னும் கற்பனைகள் நிர்த்துளி செய்யப்பட்டுக் கொண்டேதான் வருகின் றன. ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் இவ்விஞ்ஞான முறையைக் கைக்கொண்டு சுயநலப் புரோகிதர்களால் நிறுவப்பட்ட மறு உலக வாழ்க்கையின் நம்பிக்கையை விரைவில் உலகை விட்டோட்டி இவ்வுலக வாழ்க்கையை இன்பமாய்ச் செய்ய முயலுவோமாக!

தந்தைபெரியார் - குடிஅரசு 11.6.1949

0 comments: