Search This Blog
1.12.08
மக்களைப் பிரிக்கத்தான் ஜாதி - மக்களை ஒன்றுபடுத்தவே பகுத்தறிவு இயக்கம்
மணமக்களுக்குக் குருதிப் பொருத்தம் பார்ப்பீர்!
உடல் பரிசோதனைக்குப் பிறகே திருமணம்!!
தமிழர் தலைவரின் புதிய சிந்தனை வெளிச்சம்
தருமபுரி டி.பி. பழனியப்பன் - ஆர். மலர்விழி ஆகியோரின் செல்வன் டி.பி. அமுதன் பி.இ., திருப்பத்தூர் கருப்புச்சட்டை மா.சீ. பாலன் - சொரூபராணி ஆகியோரின் செல்வி குறிஞ்சிமலர் பி.இ. ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 30.11.2008 ஞாயிறு காலை 11 மணிக்கு, வாணியம்பாடி பாரத் மகால் திருமண மண்டபத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் தலைமையில் இனிதே நிறைவேறியது.
மணமகளின் தந்தையார் கருப்புச்சட்டை மா.சீ. பாலன், திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கே.சி. எழிலரசன் ஆகியோர் வரவேற்று உரையாற்றினர்.
திருப்பத்தூர் அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் ரத்தின நடராசன், மூத்த வழக்கறிஞர் டி.சி. ஆறுமுகம், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.
வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்த தமிழர் தலைவர் அவர்கள் செறிவாக பல கருத்துகளை எடுத்து வைத்தார்.
மணமகன் - இயக்கத்தில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர். அவரது தாத்தா பென்னாகரம் பி.கே. இராம மூர்த்தி, பாட்டி சாரதா அம்மையார், அடுத்து மணமகனின் பெற்றோர் பழனியப்பன் - மலர்க்கொடி, அதற்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்தான் மணமகன் அமுதன்.
மணமகள் குறிஞ்சிமலர் - அவர் குடும்பத்தில் கொள்கைக் கண்ணோட்டத்தில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந் தவர். மணமகளின் தந்தையார் எப்பொழுதும் கருப்புச் சட்டை அணிவதால் அவர் கருஞ்சட்டை பாலன் என்றே அழைக்கப் படக் கூடியவர்.
கொள்கைக் கருத்துகள் அடங்கிய துண்டு வெளியீடுகளை மக்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கக் கூடியவர்! அது போல தந்தை பெரியார் பொன்மொழிகளை, கல்வெட்டு களாகச் செதுக்கி மக்கள் மத்தியில் அறிவைக் கொடுத்துக் கொண்டு இருக்கக் கூடிய சீரிய தோழர் ஆவார்.
இந்த இரண்டு கொள்கைக் குடும்பங்கள் இணைந்த வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவாக வெகுசிறப்புடன் நடைபெற்றது. மிகப்பெரிய மண்டபத்தில் ஏராளமானவர்கள் கூடி தமிழர் தலைவரின் உரையைச் செவிமடுத்தனர். பெண் கள் மிக ஆர்வமாகக் கேட்டனர். அனைவரும் அமைதியாக ஆசிரியர் உரையினைக் கேட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
மூன்று முக்கிய கருத்துகளை அவ்விழாவில் எடுத்து வைத்தார் தமிழர் தலைவர்.
(1) ஜாதி ஒழிப்பு அடிப்படையில் இத்திருமணம் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தின் முயற்சியில் நடைபெறக் கூடியதாகும். (திருமண நிலைய இயக்குநர் திருமகளும் இவ்விழாவில் பங்கேற்றார்).
மனிதர்களுக்கு ஜாதி என்பது வெறுக்கத்தக்கதாகும். இந்த ஜாதிக்கு இந்த அடையாளம் என்று யாராவது சொல்ல முடியுமா? மக்களைப் பிரிக்கத்தான் ஜாதி இருக்கிறது. மக்களை ஒன்றுபடுத்தவே பகுத்தறிவு இயக்கம் இருக்கிறது.
அய்யங்கார், பார்ப்பனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அவசர அவசரமாக ரத்தம் தேவைப் படுகிறது. ஏபி பாசிட்டிவ் பிரிவு ரத்தம் தேவைப்படுகிறது. எங்கு தேடியும் அந்தப் பிரிவு ரத்தம் உடையவர் அவசரத் துக்குக் கிடைக்கவில்லை. தாழ்த்தப்பட்ட தோழர் ஒருவரின் குருதி பொருந்தி வந்தது. அந்த நேரத்திலே தாழ்த்தப்பட்டவரின் ரத்தம் தேவையில்லை - தீட்டுப்பட்டுவிடும் என்று மறுத்துவிடுவார்களா? இப்பொழுதெல்லாம் யார் சார் ஜாதி பார்க்கிறார்கள்? நான் பெரியார் கட்சியில் சேர்ந்து ரொம்ப நாளாகிவிட்டது என்றுதானே சொல்லுவார்? என்ற வினாவை தமிழர் தலைவர் எழுப்பியபோது அனைவரும் அக்கருத்தை ஆதரிக்கும் வகையில் பலத்த கரவொலி எழுப்பினர்.
மணமகன் குடும்பத்தில் இதற்கு முன்பே ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக மணமகனின் மாமா டாக்டர் கவுதமன் - டாக்டர் பிறைநுதல் செல்வி ஆகியோர் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள்தாம்; அது காதல் திருமணம்; அவர்களின் மகனுக்கும் ஜாதி மறுப்புத் திருமணம்தான்.
இப்பொழுது நடக்கும் இந்தத் திருமணம் காதல் திருமணம் அல்ல - பெற்றோர்களால் - கொள்கையின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் என்று விரிவாக எடுத் துரைத்தார் கழகத் தலைவர்.
(2) மணமகன் - மணமகளுக்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்பது மூடத்தனம். உண்மையிலே பார்க்கப்பட்ட வேண்டியது குருதிப் பொருத்தமாகும். இன்னும் சொல்ல வேண்டுமானால், மணமகன், மணமகள் ஆகியோரின் உடல் பரிசோதனை செய்யவேண்டும்! அத்தகைய ஒரு காலம் விரைவில் வரும் - வரவேண்டும் என்ற அரிய கருத்தினை அறிவுக் கருத்தினை இத்திருமண விழா வில் தமிழர் தலைவர் சிறப்பாக - மிகவும் தேவையான ஓர் கருத்தை எடுத்து வைத்தார். மக்கள் மத்தியிலே இந்தக் கருத்து விவாதத்திற்கு வைக்கப்பட்டுள் ளது இத்திருமணத்தில் முதன் முதலாக.
(3) மூன்றாவதாக தமிழர் தலைவர் சொன்ன கருத்து பொறி தட்டியதுபோலவிருந்தது.
உடல் உறுப்புகளை தானம் செய்யும் போக்கு அண்மைக் காலமாக வளர்ந்து வருவது வர வேற்கத்தக்க நல்ல அறிகுறியாகும்.
திருக்கழுக்குன்றம் மருத்துவர் அசோகன் அவர்களின் மகன் ஹிதேந்திரன் சாலை விபத்தில் மரணமடைந்த நிலையில், மகனின் உடலுறுப்புகளைத் தானம் செய்தார். அந்த உறுப்புகள் பலரின் உயிரைப் பிழைக்க வைத்தது. இந்த மனப்பான்மை, மனிதத்தன்மை நாட்டில் வளரவேண்டும்.
பெரியார் உடல்கொடை அமைப்பினை திராவிடர் கழகம் நடத்தி வருகிறது. கழகத் தோழர்கள் பலரும் தங்கள் மறைவுக்குப் பிறகு மருத்துவமனைகளில் உடலைக் கொடையாக அளிக்க ஏற் பாடு செய்த வகையில், அவ்வாறே அளிக்கப்பட்டும் வருகிறது.
நமது பார்வையில் மற்றொரு முக்கிய விஷயம் ஒன்று அடங்கி யிருக்கிறது. உடலுறுப்புகள் ஜாதி பார்த்து தானம் செய்யப்படு வதில்லை. யாருக்கு உயிர் காக்க உறுப்புகள் தேவைப்படுகின் றனவோ - அவர்கள் எந்த ஜாதி என்று பார்க்காமல் அளிக்கப்படு கிறது.
இதன்மூலம் முக்கியமாக ஜாதி ஒழிக்கப்படுகிறது (பலத்த கைதட்டல் - வரவேற்பு).
பிரச்சாரத்தால் ஜாதி ஒழிக்கப்படுவதைவிட இத்தகு நடவடிக்கைகள் மூலம் செயலளவில் ஜாதி ஒழிக்கப்பட வாய்ப்பு கிட்டுகிறது என்று முத்தாய்ப்பாக மூன்று கருத்துகளை எடுத்து வைத்தார் தமிழர் தலைவர்.
மணமகள் பொறித்த முத்திரை
இந்த விழாவில் மணமகள் குறிஞ்சிமலர் தானாகவே முன்வந்து ஒரு சிற்றுரையை நிகழ்த்தி, அனைவரின் புருவத்தையும் நிமிரச் செய்தார்.
ஜாதி ஒழிப்புத் திருமணங்கள் மிகவும் அவசியம்தான். அந்த ஜாதி ஒழிப்பு ஒத்த கொள்கையுடையவர்களிடையே நிகழ்வது மேலும் சிறப்புடையதாக இருக்கும். எங்கள் திருமணம் இந்த வகையில் நடந்திருக்கிறது என்று சொன்னபோது பலத்த கைதட்டல் கிடைத்தது.
திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் பிறைநுதல்செல்வி நன்றி கூறினார். விழாவுக்கு ஏராளமான கழகத் தோழர்கள் வருகை தந்தனர்.
--------------------"விடுதலை" 1-12-2008
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment