Search This Blog
1.12.08
பழனியில் மாநாடு கூட்டி, ஊர்வலத்தில் பார்ப்பனர்கள் பாடைகட்டி தூக்கிச் சென்றவருக்கு பிறந்த நாள்
வாழ்க தமிழர் தலைவர்!
திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ஆசிரியர் - தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களின் பவள விழா நிறைவு (76 ஆம் அகவை) நாள் டிசம்பர் 2 ஆகும் (2008).
இந்நாளில் உலகத் தமிழர்கள் சார்பிலும், உலகப் பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள், மனிதநேய மாண்பாளர்கள் சார்பிலும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம்.
கடந்த ஆண்டு (அகவை 75- பவள விழா) தமிழக முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, அவருக்காக எடுக்கப்பட்ட விழாவில் நேரிடையாகப் பங்கு கொண்டு அனைவரையும் மகிழ்வித்தார்.
சென்ற ஆண்டு மட்டும் விதிவிலக்கு என்றும், நான் நேரில் பங்கேற்க இனி இயலாது என்றும் கழகத் தலைமைச் செயற்குழுவில் (20.11.2008) கறாராகக் கூறிவிட்டார்.
ஒரு இயக்கத்தின் - அதுவும் ஒரு சமூகப் புரட்சி இயக்கத்தில் புத்தம், சங்கம், தம்மம் மூன்றும் முக்கியமான ஆயுத எழுத்துப் போன்றவை.
தலைமை - இயக்கம் - கொள்கை மூன்றும் மிகவும் போற்றத் தக்கவையாகும். இது நாமாகக் கற்பித்துக் கொண்டதும் அல்ல - தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த விளக்கக் கருவூலமாகும்.
அந்த வகையில் தலைவருக்கு விழா என்ற பெயரில் தலைமையின் சிறப்புகள், தலைமைப் பண்புகள், வழிகாட்டுதல்கள், சாதனைகள், செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் எடுத்துரைக்க, விளக்கம் அளிக்க, பிரச்சாரம் செய்ய தலைவரின் பிறந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதுதான் இதன் விழுமிய பொருளாகும்.
நமது கழகத் தலைவரைப் பொறுத்தவரை - தந்தை பெரியார் அவர்களால் நேரிடையாக வார்த்துத் தயாரிக்கப்பட்டு நமக்கு அளிக்கப்பட்ட கடைசித் தலைவர் ஆவார்.
தந்தை பெரியார் தந்த புத்தி போதும் என்று அவர் சொல்வது என்பது ஒவ்வொன்றிலும் தந்தை பெரியார் அவர்கள் அணுகிச் செயல்படும் முறையை அப்பழுக்கின்றி அப்படியே பின்பற்றுவது என்பது பொருளாகும்.
தாய் எட்டடிப் பாய்ந்தால் (இந்த) குட்டி பதினாறடி பாய்கிறது என்று நம் இன எதிரிகள் சொன்னதும், பழனியில் மாநாடு கூட்டி, ஊர்வலத்தில் பார்ப்பனர்கள் அவரைப் பாடைகட்டி தூக்கிச் சென்றதும், நமது தலைவர் மிகத் துல்லியமாக தந்தை பெரியார் வழியில் பயணிக்கிறார் என்பதற்கான சான்றொப்பமாகும்.
(1) இயக்கச் செயல்பாடு என்று வருகிறபோது இளைஞரணி, மாண வரணி, தொழிலாளர் அணி, மகளிரணி, மகளிர் பாசறை, பெரியார் சமூகக் காப்பு அணி என்று அணி வகை செய்து அணிவகுத்துச் செயல் படவைக்கும் முறையை உருவாக்கி, அவற்றின் செயல்பாட்டையும் தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் மாதம்தோறும் ஆய்வு செய்து வரு கிறார். அத்தகு கூட்டங்களில் அடுத்த மாதத்துக்கான திட்டத்தையும் வகுத்துக் கொடுக்கிறார்.
(2) தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம், சுயமரியாதைத் திருமண நிலையம் (இணைய தள வசதியுடன்), இளைஞர் களம், பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி, புதுமை இலக்கியத் தென்றல் (சென்னையில்), பெரியார் வலைக்காட்சி (பெரியார் வெப்-விஷன்), பெரியார் சுய மரியாதை ஊடகத் துறை என்று கால மாற்றத்திற்கேற்ப புதுமைகளைப் புகுத்தி வருகிறார்.
(3) பிரச்சாரத்தில் இயக்க வெளியீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், இயக்க வரலாற்றில் வேறு எப்பொழுதும் இல்லாத வகையில் ஏறத்தாழ 350 நூல்களை வெளியிட்டுள்ளார்.
பெரியார் நூலகம் - ஆய்வகம் என்பதை விரிவாக்கி சகல வசதிகளுடனும் செயல்படும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
பழைய ஏடுகளை, இதழ்களை நவீன முறைகளைப் பயன்படுத்திப் பாதுகாத்து வருகிறார்.
விடுதலை, உண்மை, தி மாடர்ன் ரேஷனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என்ற ஏடுகளை - இதழ்களை எழிலார்ந்த முறையிலும், கருத்தடக்கம் செறிந்த தன்மையிலும் வார்த்துக் கொடுத்துள்ளார்.
(4) கிராமப் பிரச்சாரம், கல்வி நிறுவனங்கள் முன் பிரச்சாரம், பெரியார் நகர்வுப் பேருந்து மூலம் இயக்க நூல்கள் பரப்புவதற்கான ஏற்பாடுகள் என்கிற முறையில் புது சாதனைகளைப் படைத்துள்ளார்.
தமிழகம் தழுவிய அளவில், ஏராளமான எண்ணிக்கையில் பெரியார் புத்தகக் கடைகளைத் திறக்கும் முயற்சியில் ஈடுபட்டும் வருகிறார்.
(5) சமூகநீதிக் களத்தில் அளப்பரிய சாதனை புரிந்துள்ளார். எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் புகுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான வருமான வரம்பு ஆணையை எதிர்த்து வெற்றி கண்டு அதன்மூலம் இட ஒதுக்கீட்டின் விழுக்காட்டை அதிகரிக்கச் செய்தார்.
மத்திய அரசுத் துறைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்தது!
(6) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் ஆணையை நிறைவேற்றும் வகையில் நம்பிக்கை ஊட்டும் ஒரு இடத்தை எட்டச் செய்தது.
(7) மதச்சார்பின்மையை மய்யப்படுத்தி அரசியல் கட்சிகளை ஓரணியில் திரளச் செய்தது.
(8) இந்தியாவின் தலைநகரான டில்லியில் பெரியார் மய்யம் உருவாக்கியமை, உலகப் பகுத்தறிவு - மனிதநேய அமைப்புடன் திராவிடர் கழகத்தை இணைத்துக் கொண்டு உலகளாவிய வகையில் தந்தை பெரியார் சிந்தனைகளைக் கொண்டு சென்றது. சிகாகோவைத் தலை நகரமாகக் கொண்டு பெரியார் பன்னாட்டு மய்யத்தை (பெரியார் இன்டர் நேஷனல்) உலகின் பல்வேறு நாடுகளிலும் ஏற்படுத்தி, பகுத்தறிவுப் பகலவனின் மண்டைச் சுரப்பினை பரவும் வகை செய்திருப்பது.
(9) தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட கல்வி நிறுவனங்களை பல்கலைக் கழகம் என்ற அளவுக்கு வளர்த்து ஆளாக்கியிருப்பது என்று பவள விழா நிறைவினை எட்டும் தலைவரின் தொண்டும் பணியும் எதிரிகள் அச்சமுற, நல்லுள்ளம் கொண்டோர் போற்றும் வகையில் அரும்பணியாற்றி வரும் தமிழர் தலைவருக்கு நன்றி உணர்வுடன் நல்வாழ்த்துகளைக் கூறுவோம்!
அவர்தம் வழி தொடர்ந்து அய்யா பணி முடிக்க உறுதி கொள்வோம்! சூளுரைப்போம்!! வாழ்க பெரியார்! வாழ்க தமிழர் தலைவர்!!
--------------------"விடுதலை" தலையங்கம் 1-12-2008
"தமிழ் ஓவியா" வலைப்பூ வும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்சி அடைகிறது.நன்றி.
Labels:
வீரமணி
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பத்து வயதில் மேடையேறி
பாங்காகக் கொள்கை பாடி
பெரியாரின் தொண்டணானாய்!
விடுதலையின் விடுதலைக்கே
வழக்கறிஞர் தொழில் விடுத்தே
ஆசிரியர் தொண்டே ஏற்றாய்!
தலைவரின் சிந்தனையே தான்
சரியான சிந்தனை ஆகும்!
யார் எதிர்த்தாலும் ஏற்றாலும்
சரியான முடிவுகள் என்றாய்!
தமிழனுக்கு இன்னல் என்றால்
தன்மானம் போனாலும் சரிதான்
இனமானம் காப்பேன் என்றே
சோதனைகள் வேதனைகள் வென்றாய்!
அகவைகள் எண்ணிக்கை தான்
ஆக்கமிகு செயல்கள் செய்தால்
அன்பர்களின் உள்ளம் வென்றால்
இளமையிலே துள்ளும் உள்ளம்
என்றென்றும் உண்டு என்றாய்!
வாழிய பல்லாண்டு வாழியவே!
வற்றாத தமிழர் அன்பில்
வாழ்த்திடும் உண்மை அனபர்
போற்றுவோம் உம் திறமை!
தங்களின் வருகைக்கும்
கவிதைக்கும்
மிக்க நன்றி
Post a Comment