Search This Blog

4.12.08

நாகரிகமான வேண்டுகோள்

டிசம்பர் 2 ஆம் தேதி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்து இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி அரசு கூட்டிய அனைத்துக்கட்சிக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்பின் தமிழகச் சட்டப்பேரவையிலும் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு - இன்று தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பிரதமருடன் சந்திப்பு என்று இப்பிரச்சினையில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்குமேல் மத்திய அரசை வலியுறுத்துவதற்கு வேறு வாய்ப்பே இல்லை என்று கருதும் அளவுக்குச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், இலங்கையில் சண்டையை நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இந்த முறையாவது இந்த உறுதி காப்பாற்றப்படும் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் எதிர்ப்பார்க்கிறோம்.

இதற்கு முன்பேகூட இதுபோன்ற உறுதி மொழி கூறப்பட்டதுண்டு. ஆனால், அவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகவே ஆகிவிட்டன என்கிற சலிப்பும், ஏமாற்றமும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல - உலகத் தமிழர்கள் மத்தியிலும் இருந்து வருகின்றன.

மும்பையில் பாகிஸ்தானை மய்யமிட்ட பயங்கரவாதிகள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள வன்முறை முகாம்களை அழிக்கலாமா? என்கிற அளவுக்கு ஆலோசனைகள் கூறப்படுகின்றன.

வன்முறைக்கான ஊற்றுக்கண் எங்கு தென்பட்டாலும் அதனை அழிக்கவேண்டியது நியாயம்தான். அதே கண்ணோட்டம், இலங்கைப் பிரச்சினையில் ஏன் இல்லை?
ஒரு இனத்தையே அழிக்கும் ஒரு வெறிச் செயலில் அரசப் பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டு வருகிறதே - அந்தக் கொடுமையை இந்திய அரசாங்கம் அறிந்திருக்க வில்லையா? முன்னாள் பிரதமர் திருமதி இந்திராகாந்தி இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே (Genocide) என்று நாடாளுமன்றத்திலேயே திட்டவட்டமாகத் தெரிவித்தாரே - அவர் வழிவந்த இந்தப் பிரதமரும் அந்தக் கண்ணோட்டத்தில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டாமா?

கிளிப்பிள்ளைக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதுபோல திருப்பித் திருப்பி எத்தனை முறைதான் எடுத்துரைப்பது? நிஜமாகத் தூங்குபவர்களை விழிக்க வைக்கலாம்; தூங்குவதுபோல பாசாங்கு செய்பவர்களை என்ன செய்வது? என்பதுதான் நம்முன் உள்ள பிரச்சினையாகும்.

மத்திய அரசுக்கு இந்தப் பிரச்சினையில் ஒரு திறந்த மடை இருக்கவேண்டும். அது சரியாக இருக்குமேயானால், ஒரு நொடியில் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும். இந்தியா ஒரு உறுமல் உறுமினால்போதும், இலங்கைக் குட்டித் தீவு - தன் வாலை சுருட்டிக்கொண்டு ஒரு மூலையில் ஒடுங்கி உட்கார்ந்துவிடுமே!

தமிழர்களுக்கு விரோதமாகச் சிந்திப்பது என்றே கங்கணம் கட்டிக்கொண்டு, ஊசிமுனையில் தவம் இருக்கும் ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுமையிலும் இருக்கிறது. அது ஊடகங்களிலும் இருக்கிறது - நிருவாகத் துறையிலும் - ஆலோசக வட்டாரத்திலும் பலமாக நங்கூரம் அடித்துக்கொண்டு இருக்கிறது.

இந்தக் கூட்டத்தின் அழுத்தம் என்ற சிறையிலிருந்து பிரதமர் அவர்கள் தம்மை விடுவித்துக் கொண்டு, இலங்கையில் நடைபெறும் அட்டூழியத்தை, இனப் படுகொலையைக் கண் திறந்து பார்க்கவேண்டும். தமிழர்களுக்காக மட்டும் இதனைக் கூறவில்லை. மனிதநேய அடிப்படையில் பார்த்தால்கூட, இந்தக் கொடுமையை எந்த விலை கொடுத்தேனும் தடுத்தாகவேண்டும் என்ற எண்ணம் முதலில் வரவேண்டும்.

தமிழர்களின் ஜனநாயக அணுகுமுறையைப் பலகீனமாக இந்திய அரசு எடை போடவேண்டாம் என்பதே நமது நாகரிகமான வேண்டுகோளாகும்.

-------------------"விடுதலை" தலையங்கM 4-12-2008

2 comments:

Unknown said...

தமிழர்களின் ஜனநாயக அணுகுமுறையைப் பலகீனமாக இந்திய அரசு எடை போடவேண்டாம் என்பதே நமது நாகரிகமான வேண்டுகோளாகும்.

Veeramani talks like vadivelu, a
comedian.UPA govt. survives on the support of DMK.Why cant DMK quit the ministry and mount pressure?.

தமிழ் ஓவியா said...

முட்டாளின் உளறலாகவே இருக்கிறது மேல் கண்ட நபரின் பின்னூட்டம்