Search This Blog
3.12.08
அடிக்கடி அடியும், உதைக்கு உதையும் கொடுக்க நம்மால் முடியாதா?
இனி அரசியலிலும்
காங்கிரஸ்காரர்கள் காலிகளுக்குப் பணம் கொடுத்தும் கூலிகளை ஏவிவிட்டும் என்னை காங்கிரசிலிருந்து பணம் எடுத்துக் கொண்டதாகச் சொல்லிக் கூச்சல் போடச் சொல்லுகிறார்கள். தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டைப் பிரசண்டன் என்பது போல இவர்கள் செய்கை இருக்கிறது.
நீ காங்கிரசிலிருந்து 5,000 ரூபாய் எடுத்துக் கொண்டாய் என்கிறார்கள். நான் 5,000 ரூபாய் எடுத்துக் கொண்டிருந்தால் அப்பொழுது சத்தியமூர்த்தி 10,000 ரூபாயும் ராஜகோபாலாச்சாரி 20,000 ரூபாயும் திருடி இருப்பார்கள். அதனால்தான் அவர்கள் அப்போதும் என்னை சும்மா விட்டுவிட்டு இப்போதும் காங்கிரசுக்குக் கூப்பிடுகிறார்கள் என்று சொல்லவேண்டும். பின் ஏன் அவர்கள் அந்த நாளிலேயே என்னைக் கேட்கவில்லை? நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக் கொண்டால் அதை வட்டியோடு கொடுக்கத் தயாராக இருக்கிறேன். அவர்கள் என்னிடம் வசூல் பண்ணிக் கொள்ளமுடியாதா? என்னால் கொடுக்க வழியில்லா விட்டால் இப்பவே சோலை நாடாரையும், சவுந்திரபாண்டியனையும் கையொப்பம் போட்டுக் கொடுக்கச் சொல்லுகிறேன். எப்பொழுது - எதில் என்று எந்தக் கழுதையாவது சொல்லட்டும்.
நான் காங்கிரஸ் பணத்தை எடுத்துக் கொண்டால் ராஜகோபாலாச்சாரியாரும் காங்கிரஸ் பக்தர்களும் என்னை ஏன் காங்கிரசில் சேரும்படி இன்றும் (1936) கூப்பிடுகிறார்கள்? இதோ சத்தியமூர்த்தி முதலியவர்கள் பேசியதும், பத்திரிகையில் எழுதியதும், எனக்குக் கடிதம் எழுதினதும் பத்திரிகைகளைப் பாருங்கள். (கடிதம் பத்திரிகை படிக்கப்பட்டது). வரதராஜுலு நாயுடு காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; கல்யாண சுந்தர முதலியார் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; ஜியார்ஜ் ஜோசப் காங்கிரசில் சேர்ந்துவிட்டார்; இனி ஈ.வெ.ராமசாமி நாயக்கர்தான் பாக்கி என்று சொல்லிக் கொண்டு அவர்கள் என்னைக் கூப்பிடுகிறார்கள். ஏன்? நான் இன்னும் ரூபாய் திருடி இவர்களுக்குப் பங்கு கொடுக்கவா?
எங்கள் கூட்டத்தில் இவர்கள் ஏன் காந்திக்கு ஜே என்று கூச்சல் போடவேண்டும்? இவர்கள் யோக்கியமும் நாணயமும் இல்லாமல் இருக்கிற பொழுது மற்றவர்கள் இவர்களிடத்தில் எப்படி யோக்கியமாயும் நாணயமாயும் நடந்து கொள்ள முடியும்? பொப்பிலிக்குக் கண் பெரியது; ஈ.வெ.-ராமசாமி தாடி வைத்துக் கொண்டிருக்கிறான்; ராமசாமி முதலியார் தேசத்துரோகி; ஷண்முகம் செட்டி தேசத்துரோகி என்று இப்படி அவர்கள் நாணயமில்லாமல் பேசுகிறார்கள். ஜஸ்டிஸ் கட்சியில் இன்ன குற்றம் செய்து இருக்கிறது என்று உண்மையாக எடுத்துச் சொன்னால் அது ஆண்மையாகும்.
டாக்டர் சுப்பராயனைவிட, தோழர் சத்தியமூர்த்தியைவிட மோசமான ஆள் ஜஸ்டிஸ் கட்சியில் யார் இருக்கிறார்கள்? சொல்லட்டும். பிறகு வேண்டுமானால் தோழர்கள் உபயதுல்லாவுக்கும், கிருஷ்ணசாமி பாரதிக்கும் மோசமானவர்கள் யார் என்று கேட்கலாம்.
கழுதை கழுத்தில் அட்டை எழுதிக் கட்டி நம் கூட்டத்தின் நடுவில் ஓட்டி விடுதல் கவுரவமுடையதா? கொஞ்சமும் யோக்கியம் இல்லை. அவர்கள் நம் கூட்டங்களில் கல்லையும், முட்டையையும், செருப்பையும் வீசினால் என்ன பிரயோஜனம்? நாம் கோழைகளா? அடிக்கடி அடியும், உதைக்கு உதையும் கொடுக்க நம்மால் முடியாதா?
சேலத்தில் ஒருவருக்கொருவர் இப்படி செருப்பால் அடித்துக் கொண்டதால் அது வழக்கத்துக்கு வந்து (செருப்படி மாரியம்மன் விழா) இப்பொழுது அங்கு செருப்படித் திருநாள் என்று திருவிழா நடக்கிறது. அதில் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக் கொள்ளுகிறார்கள். அதுபோல் இனி அரசியலிலும் நேருக்கு நேர் செருப்படித் திருநாள் ஏற்பட்டுவிடும்.
------------------------ திண்டுக்கல்லில் பெரியார் ஈ.வெ.ரா.பேச்சு, 'குடிஅரசு', 18.10.1936
Labels:
பெரியார்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment