Search This Blog

3.10.08

சங்கராச்சாரி பதவித் தற்கொலை!



ஈட்டிய பொருளில் வாழ்க்கைக்குத் தேவையானது போக மீதியைச் சொத்தாகவும், சுகபோகக் கருவியாகவும் மாற்றாமல், ஏழைகள் உய்யச் செலவிட வேண்டும் என்ற உருக்கமான இந்த உபதேசம், துறவு நிலை பூண்டு உள்ளவரால், இல்லறவாசிகளுக்கு எடுத்து ஓதப்படுகிறது. மிகச் சரி! ஆனால், சுவாமிகளின் நிலைமை என்ன? அவர் வாழ்க்கை இருக்கும் விதம் எப்படி? மேனி வாடாது, பாடுபடாது, பல்லக்குத் தூக்கிகள் வேகமாகச் செல்லவில்லையே, பக்த கோடிகள், மேலும் மேலும் பணம் தரவில்லையே, சூடிய பூ வாடிற்றே, பட்டாடையின் பளபளப்பு மங்குகிறதே, மணியின் மெருகு குலைகிறதே, பஞ்சணையில் மல்லிகையின் காம்பு உறுத்துகிறதே என்ற கவலைகள் தவிர, வேறு கவலையற்றுப் பாதத்தைப் பலர் தடவிக் கண்களில் ஒற்றிக் கொள்ள பகவானின் பிரதிநிதி நான் என்று கூறிக்கொண்டு கரி, பரி, காவலருடன் காடு உலவி வரும் ராஜபோகமன்றோ சங்கராச்சாரியாருடையது! முதல் இல்லா வியாபாரம்! சோகமில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு மிராசுதார், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்குக் கீதை உபதேசம் புரிவது, ஏதேனும் பொருளுடையதாகுமா? கன்னக்கோலன் - கள்வன் கேடு பற்றியும், காமவண்ணத்தான் ஒழுக்க போதனையும், கசடன் கற்றதனால் ஆன பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ!

சாமரம் வீச, சல்லாபிக்க, சோபித வாழ்வுக்குச் சொத்து தர, பரிவாரம் பெற்றுள்ள சங்கராச்சாரியார் வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக, மீதியை ஏழைக்கு அளிக்கவேண்டும் என்று கூறுகிறார். இந்த ஏட்டுச் சுரைக்காயை எவரே போற்றுவார்! யாரை ஏய்த்துவிட முடியுமென்று இவர் கனவு காண்கிறார் என்று கேட்கிறோம்.

இல்லறவாசிகள் நியாயமான செலவு போக, மீந்த பணத்தை (விஷம்) நஞ்சு எனக் கருதவேண்டும் என்கிறார் வேத விற்பன்னர். வெகு நன்கு. நாம் இல்லறவாசிகள் இன்ன இன்னவற்றையே நியாயமான செலவாகக் கொள்ளவேண்டும் என்று குறிப்பிடத் தயார்! விஷம் அவர்களிடம் கூடாது என்று விளம்பத் தயார்!

ஆனால், சுவாமிகள்! தங்கள் விஷயம் என்ன? தங்களுக்கு உலகமே மாயை என்ற தத்துவ ஆசிரியருக்கு, துறவிக்கு மடம் ஏன்? சொத்து சுகம் எதுக்கு? பணம் பரிவாரம் ஆகுமா? விஷமென்று எந்தப் பணத்தைக் குறிப்பிடுகிறீரோ அதனைத் தாங்கள் பருகியபடி தானே இருக்கிறீர்! மற்றவர்களாவது ஓரளவுக்கேனும் உழைத்து தமது திறமையைக் காட்டிப் பொருள் ஈட்டுகின்றனர். தாங்கள் உழைப்பது உண்டா? உடலில் உழைப்பு தரும் ஒய்ச்சல் என்ற அனுபவம் தங்களுக்குத் தெரியுமா? உழைத்துப் பயனில்லை என்ற நிலையில் உண்டாகும் சலிப்பு என்ற அனுபவம் தங்களுக்கு உண்டா? பசியை நீர் அறிவீரா? பஞ்சத்தில் அடிபட்டது உண்டா? இல்லையே! உழைக்காமல், ஊரார் உழைப்பில் உபாதானம் பெறுகிறீர். தங்கள் வாழ்க்கையின் வசீகரம் தங்கள் திறமையால் கிடைத்ததும் இல்லை! பிறரின் மடத்தனத்தால் தங்களுக்குக் கிடைப்பது, இத்தகைய வாழ்விலே இருப்பது நியாயமா? பிறருக்கு நீதி புகட்டும் பெரியோய், உமது வாழ்க்கையின் நியாயம் யாது என்று உரைக்க முடியுமா? என்று சங்கராச்சாரியாரை நாம் அறைகூவி அழைத்துக் கேட்கிறோம். அவரோ, அவரது அதிகாரம் பெற்ற வேறு யாரேனுமோ விடை கூறட்டும்; கேட்போம். வாழ்க்கைக்கு நியாயமான செலவு போக மிகுவதை ஏழைகளுக்குத் தரவேண்டும் என்று இவர் மொழிகிறார். இவர் துறவியினுடைய நியாயமான செலவு போக, மேலும் பணம் குவிப்பானேன்! இவரது இன்றைய வாழ்க்கை நியாயமான செலவினங்கள் கொண்டதுதானா?


மற்றொன்று கூறுகிறார்: ஆஸ்திகமும், அறியாமையும் ஒன்றே என்று கூறுவது போன்றுள்ளது அஃது. யுத்தம் முடியும் வரையிலாவது (இரண்டாவது உலகப் போர்) பகவான் நாமாக்களைச் சொல்ல வேண்டும் என்கிறார்.

இதிலிருந்து இரண்டு எண்ணங்கள் எழும். ஒன்று இதுவரை பகவானைத் தொழவில்லை என்பது. மற்றொன்று இடருற்ற போது ஈசனைத் தொழுதால் போதும் என்பது. இரண்டும் எத்துணை மடமையின் சிகரம் என்பதை நாம் விவரிக்கத் தேவையில்லை. மக்கள் இன்றுவரை பகவானை மட்டுமல்ல, அவரது பிரதிநிதி என்றுரைக்கும் பரபிரம்ம சொரூபிகளையும் தொழுது வந்தனர். வருகின்றனர். கண்ட பலன் என்ன? இதோ குண்டுவீச்சு! கடலில் கொந்தளிப்பு! உள்ளத்திலே பதைபதைப்பு! இதுவரை தொழாதவர் போலவும், இன்றேனும் தொழுது பாருங்கள் என்று கெஞ்சும் முறையிலும் சங்கராச்சாரியார் பேசுவதன் சூதை என்னவென்பது? சண்டை நேரத்திலே மக்கள் உயிரையும், உடைமைகளையும், ஊரையும், உற்றாரையும் காப்பாற்றும் வேலையில் இருந்துவிட்டுக் கோயில் பெருச்சாளிக்குக் கொழுப்பேற்றும் வேலையைச் செய்ய மறந்துவிட்டால், ஆரிய இனம் இளைக்குமே என்றெண்ணி போர் முடியுமட்டேனும் ஆண்டவனைத் தொழுவீராக என்று கூறினார்.

இத்தகைய பேச்சு பாமரரை மேலும் மடத்தனத்தில் ஆழ்த்தும் சூது என்று நாம் கூறுகிறோம் இவரது உபதேசத்தின்படி முதலிலே இவர் தமது சொத்து, சுகத்தைத் துறந்து, பாடுபட்டு உழைத்து, பசித்தால் புசித்து, வியர்த்தால் குளித்து வாழும் வாழ்க்கையை மேற்கொள்ளட்டும். பார்ப்போம். சங்கராச்சாரியார் என்ற பதவியைத் துறக்கத் தயாரா? என்று கேட்கிறோம். உண்டா பதில்? ஊரார் கேட்பாரா? சங்கராச்சாரி பதவித் தற்கொலை!


------------ அண்ணா("திராவிட நாடு" இதழ், 19.4.1942)

0 comments: