Search This Blog

3.10.08

பேரறிஞர்அண்ணாவின் பகுத்தறிவுச் சிந்தனைகள்

அடுத்த வீட்டு அகிலாண்டம்

அடுத்த வீட்டு அகிலாண்டம் கட்டிக் கொண்ட தாலி, எட்டாம் மாதம் அறுக்கப்பட்டது. அவளை மணந்தவருக்கு இருமல் நோய் என்று ஊராருக்குத் தெரியும். ஆசாமி மெத்த இளைத்து, மேனி கருத்துத் தள்ளாடி நடந்து, தடி தூக்கி நின்றான் என்பது கண்ணால் கண்ட காட்சி. ஆனால், சாதகம் பார்த்த அய்யர், ஜாம் ஜாமென்று முடிக்கலாம் முகூர்த்தத்தை. ஜாதகப் பொருத்தம் பேஷாக இருக்கு. பெயர் ராசிக்கும் பார்த்தேன், பூ வைத்தும் கேட்டேன்! என்று கூறினார். கலியாணம் முடிந்தது. களிப்புக் கொஞ்சம் ஆடிற்று, அதனால் களைத்தார், நோயாளி மாப்பிள்ளை! சனிக் குற்றம் என்றார் அய்யர், விளக்கேற்றிப் பார்த்தார்கள். வீண் சிரமமே கண்ட பலன்! விண்ணுலகம் சென்றார் வயோதிகர். விம்மி விம்மி அழுகிறாள் விதவை.

இதைக் கண்டீர்கள் கண்ணால்? எத்தனையோ பொருத்தம் பார்த்தாரே சோதிடர், எல்லாம் என்னாயிற்று என்ற கருத்துக்குச் சிறிது வேலை கொடுத்தீர்களா? இல்லை! வீட்டிலே மகனுக்கோ, மகளுக்கோ திருமணம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் பிறந்ததும் சோதிடரை நாடுகிறீர்கள். அவர் வந்ததும் கண்ணால் கண்டு பேசுகீறர்கள் முன்பு பார்த்தது என்ன ஆயிற்று என்று கேட்டீர்களா? கண்ணால் கண்டீர்கள். கருத்திலே தெளிவு கொண்டால்தானே கேட்பீர்கள், அதுதானே இல்லை. அய்யோ தோழரே!

அய்யர் பார்த்த சோதிடம் அவருக்குத் தட்சணை தந்ததேயன்றி, சோதிடம் கேட்பவருக்குப் பலன் தரவில்லையே என்று யோசிக்கிறீர்களா? இல்லையே! வழியிலே குடியிருப்பது தெரிந்தும், அவ்வழி நடப்பவர் விழியற்றவர் என்று உரைப்பர். உங்களின் கருத்து குருடானதைக் கூறினாலோ கடுங்கோபம் கொள்கிறீர்; தெரிந்தும் தெளிவு கொள்ள மறுக்கிறீர்!

-அண்ணா ("திராவிட நாடு" இதழ், 10.1.1943).


கண்ணால் கண்டும்

பகவான், வைர நாமம், கெம்பு ஸ்ரி சூரணம் அணிந்து அபயஸ்தங்களில் நவரத்தின இழைப்பு வேலைப்பாடுகளும், இடையில் தங்க அரைஞாணும், மார்பிலே தங்கப் பூணூலும் விதவிதமான ஒளி வீசும் ஆபரணங்களும் அணிந்திருக்கக் கண்டு, சடாரி சாய்க்கும் அய்யரின் காதிலே வைரக் கடுக்கண் ஜொலிப்பதையும் (மின்னுவதையும்) சஹஸ்ரநாம அர்ச்சனை செய்யும்போது மலரை வீசும் சுகத்திலே டால் அடிக்கும் மோதிரத்தையும், வெள்ளி வட்டிலில் பகவத் பிரசாதத்தையும் கண்டு, பக்தி ரசத்தை உண்டு வெளியே வருகிறீர்கள். ஒரு கை, உலர்ந்த உதடு, ஒடிந்துபோன கால், ஈ மொய்க்கும் புண், ஈளை கட்டிய குரல், வீங்கித் தவிக்கும் உருவம், கோபுர வாயிலிலே குமுறிக் கைநீட்டி, மகாராசா என்று உங்களைக் கூப்பிடக் காண்கிறீர்கள்! உள்ளே உலக இரட்சகர் ஒய்யார உடையுடன், சிங்கார நகையுடன், சீமானாக இருக்க, அவன் படைப்பிலே ஒன்று சீந்துவார் அற்று செத்திட நேரமின்றி பிச்சை எடுத்திடக் காண்கிறீர்கள். அவன் சோதியை உள்ளே கண்டீர்கள். அவன் ஆலய வாயிலேயே, சோக செகத்தின் சேதியைக் கூறும் பராரியைக் கண்டீர்கள். கண்ணால் கண்டும் என்ன செய்தீர்கள்? கருத்துக்கு ஒரு வினாடியாவது வேலைக் கொடுத்தீர்களா? கொடுத்திருந்தால் உலகு இப்படியா இருக்கும்? உள்ளே இருக்கும் ஓங்காரச் சொரூபம் (வடிவம்), கல்லார்க்கும், கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பு! வெளியே முள் பாயிலே உருள்பவன் வேதனையில் புரள்பவன் சோற்றுக்குத் தாளமிடுபவன் கண்டது என்ன? தன்னைப் பிறப்பித்து இக்கதியில் விட்ட தந்தையின் அரண்மனை வாயிலிலேயே அவன் அடி மூச்சுக் குரலால் அழுகிறான். அந்தச் சத்தம் உங்கள் காதிலே விழுந்து என்ன பலன் உண்டாகிறது?

-அண்ணா ("திராவிட நாடு" இதழ், 10.1.1943).

சிவ நேசர்கட்கு!

அன்பே சிவமானால் அன்பை வளர்க்கப் பாடுபடுவதுதானே சைவர் கடமை, வேறு எதற்கு? அன்பு வளர, அறிவு வேண்டும், பேதம் ஒழிய வேண்டும். ஆதிக்கம் செய்வோர் அழியவேண்டும். வறுமை போக வேண்டும். வாட்டம் தீரவேண்டும். ஒருவரைச் சுரண்டினால்தான் மற்றவர்கள் வாழ முடியும் என்ற முறையிலுள்ள அமைப்புகள் மாறவேண்டும். அன்பு அப்போதுதான் வளரும். அதைச் செய்ய நாடெங்கும் கோயில்கள் ஏன்? அங்கு கொட்டு முழக்கம் கூத்தும் ஏன்?

அதைக் காட்டிப் பிழைக்க ஓர் ஆரியக் கூட்டம் ஏன்? அது கட்டிவிட்ட கதைகள் ஏன்? ஆறுகாலப் பூசையும் அபிடேக விசேடமும் ஏன்? அன்பு வளர அவசியமா? அன்றி ஆலயங்களில் அடைபட்டுள்ள பொருளை வறுமை போக்கும், வளமான திட்டங்களுக்குச் செலவிடல் முறையா என்பதுபற்றிச் சிவநேசச் செல்வர்கள் சற்றே சிந்திக்கக் கூடாதா? என்று கேட்கிறேன். என் சத்தம் அவர்கள் செவி புகுமோ, புகாதோ, நானறியேன்.

---- அண்ணா ("திராவிட நாடு" இதழ், 10.1.1943)

0 comments: