இந்துப் பண்டிகைகள் என்றால் - அதன் பின்னணியில் "அசுரன்" ஒருவன் அழிக்கப்பட்ட ஒரு கதை (வதம்) கண்டிப்பாக இருக்கும்.
தீபாவளியென்றால் நரகாசுரன் வதம் வருவதுபோல சூரசம் ஹாரம் என்றால் சூரபத்மன் சொல்லப்படுவதுபோல இராமாயணம் என்றால் இராவணன் அரக்கன் என்று அழிக்கப்பட்டது போலவே!
நவராத்திரி! அதுவும் ஒன்பது இரவு விழாக்கள் என்றால் அசுரன் அழிக்கப்படாமலா?
அசுரன், அரக்கன் ராட்சதன் என்று சொல்லப்படுவது எல்லாம் - திராவிடர்களைத்தான். பூதேவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் சாட்சாத் ஆரியப் பார்ப்பனர்கள்தான் என்று வரலாற்று ஆசிரியர்கள் அறுதியிட்டு உறுதி செய்துள்ளார்கள்.
சீனிவாச அய்யங்கார்களிலிருந்து, பண்டித ஜவகர்லால் நேரு வரை எழுதியிருக்கிறார்களே.
இந்த வரலாற்றுக் கண்ணோட்டத்தில் அறிவைத் துலக்கிப் பார்த்தால் திராவிடர்கள் இத்தகைய பண்டிகைகளைக் கொண்டாடுவது முட்டாள்தனம் என்பதைவிட மிகக் கேவலமான வெட்கக் கேடாகும்!
மந்திரம் சொல்லி மலத்தைக் கொடுத்தால் அதனைத் தின்னும் காட்டு விலங்காண்டித்தனத்துக்கு ஒத்ததாகும்.
நம் இன மக்களைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இதுபோன்ற நாள்களில் இயல்பாக வர வேண்டும். அப்படி வராவிட்டாலும் அத்தகு பண்டிகைகளை குறைந்தபட்சம் புறக்கணிக்க வேண்டாமா?
ஏகலைவனின் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்ட துரோணாச்சாரியை எதிர்த்து நடத்திய பழங்குடி மக்களின் ஒரு கலை நிகழ்ச்சியைக் கண்டுகளித்த பிரதமர் நேரு அவர்கள், அந்தவுணர்ச்சியைப் பாராட்டினார், வரவேற்கவும் செய்தார்.
அதே உணர்ச்சி ஆரியர்களால் உருவாக்கப்பட்ட இந்தப் பண்டிகைகளின் போது திராவிடர்களுக்கு வருவது தானே நியாயம்!
மானமும், அறிவும் மனிதர்க்கழகு என்று தந்தை பெரியார் கூறியது இந்த அடிப்படையில்தானே!
இந்த நவராத்திரி பண்டிகைதான் என்ன? முதல் மூன்று நாள்கள் துர்க்கைக்குப் பூஜை; அடுத்த மூன்று நாள்கள் லட்சுமிக்குப் பூஜை; கடைசி மூன்று நாள்கள் சரஸ்வதிக்குப் பூஜையாம். இதில் சக்தி பூஜையாக துர்க்கையை வழிபடுவதற்குச் சொல்லப்படும் புராணம்.
ரம்பன் என்னும் அசுரன் அக்னி தேவனை நோக்கி கடும் தவம் புரிந்தானாம்! மிகப் பலசாலியான மகனைப் பெற்றெடுக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தவத்தின் நோக்கமாம்.
அவ்வாறே வரமும் அளிக்கப்பட்டதாம். ரம்பனே நீ விரும்பிய படியே உனக்கொரு மகன் பிறப்பான். நீ எந்த மங்கையைக் கண்டு முதன் முதலில் ஆசை கொள்கிறாயோ, அவளிடமிருந்தே அப்புத்திரன் தோன்றுவான்! என்றானாம்.
மகிழ்ச்சி அடைந்த ரம்பன் முதன் முதலில் கண்டு மோகித்தது ஒரு பெண் எருமை மாடாம் (அறிவுக்குப் பொருத்தமற்றது ஒருபுறம் இருக்கட்டும்; அசுரன் என்றால் அவனை எந்த அளவு கேவலப் படுத்துகிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்)
வரம் கொடுத்தபடியே எருமைக்கும், ரம்பனுக்கும் எருமைத் தலையையும் அசுரன் உடலையும் கொண்டு ஒரு மகன் பிறந்தானாம். அவனுக்குப் பெயர் மகிஷாசுரனாம்.
அவனும் பிரம்மனை நோக்கிக் கடும் தவம் புரிந்தானாம். ஒரு கன்னிகையைத் தவிர வேறு யாராலும் அவன் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்ற வரத்தைப் பெற்றுக் கொண்டானாம்.
மகிஷாசுரன் அட்டகாசங்களைத் தாங்க முடியாத தேவர்களும் (பூதேவர்களாகிய பார்ப்பனர்தான்) முனிவர்களும் மும்மூர்த்திகளை சரணடைந்தனராம் (சிவன், விஷ்ணு, பிர்மா ஆகியோர்தான் மும்மூர்த்திகள்)
மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து பிரார்த்திக்க, ஸத்வ, ரஜஸ், தமஸ் ஆகிய மூன்று குணங்களும் ஒருங்கேயமைந்து எழில் கோலத்துடன் பராசக்தி துர்க்கையானவள் அவதரித்தாளாம் (மும்மூர்த்திகளின் சக்தி அவ்வளவுதானா?)
தேவி ஒன்பது நாள் தவமிருந்து ஒன்பதாம் நாள் மகிஷா சுரனையும், அவன் பரிவாரங்களையும் வாதம் செய்து உலகிற்கு நன்மை விளைவித்தாளாம் - இந்த நாள்களே, நவராத்திரி நாள்களாம்!
இந்தக் கதை கடுகளவாவது அறிவுக்குப் பொருந்தி வருகிறதா? இந்த 2008-லும் இந்த அருவருக்கத்தக்க புழுத்த மூடநம்பிக்கைகளை விரிவாக ஏடுகள் வெளியிடுகின்றனவே எண்ணிப் பார்க்க வேண்டாமா? கதை மூடத்தனத்தில் குளித்தெழுந் தாலும் கதையின் நோக்கம் திராவிடர்களை வதம் செய்வதும், அதற்காக பார்ப்பனர்கள் கொண்டாடுவதும்தானே!
மானமுள்ள திராவிடன் இவற்றையெல்லாம் விழாவாகக் கொண்டாடலாமா?
- 6-10-2008 "விடுதலை" இதழில் கறுஞ்சட்டை எழுதியது.
Search This Blog
6.10.08
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment