Search This Blog

2.10.08

பிற்படுத்தப்பட்டோர்க்கு மட்டும் "கிரீமிலேயர்" ஏன்?








சமூகநீதிக்குப் போராடும் இயக்கங்களே, தலைவர்களே!

அய்.அய்.டி., அய்.அய்.எம். மற்றும் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் என்ற ஒரு திட்டமிட்ட சூழ்ச்சிப் பொறி, உச்சநீதிமன்றத்தால் - அரசியல் சட்டத்தால் பொருளாதார அளவுகோலுக்கு இடமில்லாமல் இருந்தபோதிலும்கூட, வலிந்து புகுத்திய காரணத்தாலும், அதற்கு வருமான வரம்பு இரண்டரை லட்சம் என்று வைக்கப்பட்டதாலும், 27 சதவிகிதத்தினை மூன்று கட்டங்களாக 9, 9, 9 என்று தருவது என்ற மத்திய அரசின் தவறான கொள்கை முடிவினாலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இன்றைய சூழலில் - வருமானங்கள் உயர்ந்த நிலையில், இரண்டரை லட்சம் என்பதை நான்கரை லட்சமாக்கிடவேண்டும் என்று ஜஸ்டிஸ் இரத்தினவேல் பாண்டியன் தலைமையில் அமைந்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் பரிந்துரை செய்ததில், மத்திய அரசின் சமூகநலத் துறை ஏற்று - அமைச்சரவையிலே வைத்து முடிவு எடுக்கத் தாமதமானதாலும் (உரிய நேரத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதிய நிலையிலும்), உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பாக தெளிவற்ற நிலைப்பாட்டினால், இவ்வாண்டு 96 பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நுழைவு வாய்ப்பு பறிக்கப்பட்டு, அது முன்னேறிய ஜாதியினரும் போட்டியிடும் பொதுப் போட்டிக்கே சென்று, அவாளுக்கு அதிகமான வாய்ப்பு ஏற்படும் அசாதாரண நிலை ஏற்பட்டுவிட்டது.

வேதனை! வேதனை!! வேதனை!!!

எனவே, இந்த கிரீமிலேயரை எதிர்த்து அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்த முன்வரவேண்டும் அனைத்து சமூகநீதி ஆர்வலர்களும்.

முன்னேறிய ஜாதியினர் போட்டியிடுவதற்கு கிரீமிலேயர் இல்லை.

மூன்றாவது அடுக்கான எஸ்.சி., எஸ்.டி., பிரிவுக்கு அது கிடையாத போது,OBC என்ற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் கிரீமிலேயர் என்பது அநீதி அல்லவா? யாருக்கும் தேவையில்லை, 15(4) சட்டம் எல்லோரையும் ஒரு சம அளவில்தான் பார்க்கிறது. ஏன் இந்த அவலம்?


-------------- தி.க.தலைவர் கி.வீரமணி அவர்கள் 2-10-2008 "விடுதலை" யில் விடுத்துள்ள அறிக்கை

2 comments:

Anonymous said...

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியாதது ஏன்?திரிபுவாத திம்மன்கள் - யார்? (3)



பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்.”
- மீ.கி.வீரமணி, ‘விடுதலை’ (30.8.2008)


மேலே எடுத்துக்காட்டிய “24 காரட் பொன் மொழிகளுக்கு” முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் ‘திரிபுவாத திம்மன்’ ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் ‘விடுதலை’யின் ‘அதிர்ச்சி’ எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்.
பெரியாரியலையே புரட்டிக் கொண்டிருக்கிற இவர்கள் - அவற்றை கடந்தகால வரலாறுகளில் செய்தால்கூட பலருக்கும் தெரியாது போக வாய்ப்பு உண்டு. நடப்பு நிகழ்வுகளிலேயே - இந்தப் புரட்டுகளை வெட்க மின்றி அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்; இதோ, ஒரு புரட்டு.


கலைஞர் தலைமையில் நடக்கும் தி.மு.க. ஆட்சி, அனைத்துசாதி யினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமியற்றிய பிறகு, அதை எதிர்த்து உச்சநீதிமன்றத் தில் மீண்டும் வழக்கு தொடரப் பட்டது. என்ன காரணத்தினாலோ, தமிழக அரசு சட்டப்படியான எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை. கலைஞர் மிகவும் சாதுர்யத்தோடு செயல்படுவதாக கி.வீரமணி அதை பாராட்டினார். தொடர்ந்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெறும் பயிற்சி நிறுவனங்கள், தமிழ்நாட்டின் 6 முக்கிய கோயில்களில் ஏற்படுத்தப்பட்டு, அனைத்து சாதியினருக்கும் பயிற்சிகளும் தரப்பட்டன. பயிற்சி முடித்து வெளியே வந்த மாணவர்கள் இப்போது அர்ச்சகராக முடியவில்லை.


உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க முடியாது என்று தமிழக அரசு அறிவித்துவிட்டது என்று ‘இந்து’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


“அர்ச்சகருக்கான ஓராண்டு பயிற்சியை முடித்தவர்கள், இப்போது தாங்கள் பெற்ற பயிற்சியைப் பயன்படுத்தக்கூடிய வேறு ஏதாவது மாற்று வேலைகள் கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், அர்ச்சகர் வேலை கிடைக்கும் என்று காத்திருப்பது, நீண்டு கொண்டே போகிறது. காரணம் - உச்சநீதிமன்றத்தில், வழக்கு இருப்பதால், அரசாங்கம், சாதி வேறுபாடற்ற அர்ச்சகர் நியமனத்தை நிறுத்தி வைத்துவிட்டது” என்று செய்தி வெளியிட்டுள்ளது ‘இந்து’ ஏடு.


இதை ‘விடுதலை’ நாளேடு எப்படி வெளியிட்டிருக்கிறது? “அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்பட்டதன் பலன்கள்; அரசுப் பணிக்கு முன்பே அர்ச்சகராகப் பணி புரிகிறார்கள்; ‘தி இந்து’ ஏட்டின் படப்பிடிப்பு” என்று புரட்டி செய்தி போடுகிறது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதையோ, வழக்கின் காரணமாக - அறநிலையத் துறையின் கீழ் உள்ள ஆகமக் கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிப்பதை அரசு நிறுத்திவிட்டது பற்றியோ, ‘இந்து’ வெளியிட்டதை இருட்டடித்து விட்டு, ‘விடுதலை’, ‘இந்து’ ஏட்டின் செய்தியை திரித்து மொழி பெயர்க்கிறது.


ஆகமங்களுக்கு உட்படாத கிராமக் கோயில்களில், தனியார் கோயில்களில் அர்ச்சகர்களாக ஏற்கனவே பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்கள். பெரியார் எழுப்பிய பிரச்சினையே ‘பார்ப்பனருக்கு மட்டுமே அர்ச்சகர் உரிமை உண்டு’ என்பதை நிலைநாட்டும் ஆகமக் கோயில்களில் அதைத் தகர்த்து, அதன் மூலம் ‘கர்ப்பகிரகத்துக்குள்’ நிலைநாட்டப்பட்டுள்ள ‘சூத்திர’ இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படவேண்டும் என்பது தானே! அந்த மாற்றம் இப்போது வந்துவிட்டதா? இந்தக்கேள்விக்கு ‘இல்லை’ என்பதுதான் பதில்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளாமல், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கிய அரசின் முடிவு தோல்வியில் முடிந்துவிட்டது. இது யார் தந்த ஆலோசனை? கலைஞர் எடுத்த ‘சாதுர்யமான’ முடிவு என்று, கி.வீரமணி பாராட்டியதற்கான காரணம் என்ன?


(‘31சி’ புகழ் !) வீரமணிதான் ஆலோசனை வழங்கினாரா? மீண்டும் தோல்வியில் முடிந்து விட்டதா? - இந்தக் கேள்விகள் - மக்கள் மன்றத்தில் எழத்தானே செய்யும்?


அதற்காக - மக்களை உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு குழப்பலாமா? செய்திகளையே திரித்து வெளியிடலாமா? ‘முரசொலி’ நாளேடுகூட இப்படி திரித்துப் போட்டு வெளியிட முன் வராத நிலையில் ‘விடுதலை’ ஏன், இப்படி புரட்டல் வேலை செய்கிறது?


ஏதோ, வேலை வாய்ப்புக்காக - அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது போலவும், அந்த நோக்கம் வெற்றிப் பெற்றது போலவும் ஒரு தோற்றத்தை உருவாக்கி பெரியார் கொள்கையை திரிப்பது புரட்டு அல்ல! மகா புரட்டு!
திரிபுவாத திம்மன்கள் பதில் கூறுவார்களா?

நன்றி - பெரியார் முழக்கம் 02.08.2008

தமிழ் ஓவியா said...

உண்மையான “திரிபுவாத திம்மன்கள் யார்?”

பார்ப்பன சனாதானிகளுக்கு சவுக்கடி கொடுத்தது: பாமரமக்களிடம் பகுத்தறிவைப் போதித்தது;அரசுகளையும் ஆட்சியாளர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மக்கள் நலனே முக்கியமானது என்பதை வலியுறுத்தி பல சாதனைகளைச் செய்த பெரியாரின் பச்சைஅட்டை“குடிஅரசு” தற்போது 2008 –இல் கூட பெரியார் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவர்களின் பார்வையிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

பெரியார் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கும் ஒரு அமைப்பான பெ.தி.க. பெரியாரின் “குடிஅரசு” இதழ்களை நூலாக வெளியிடுகிறோம் என்று அறிவித்தது. பெரியார் நிறுவிய திராவிடர்கழகம் என்ற அமைப்பின் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களோ பதிப்புரிமை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திடம் உள்ளது. வேறு யாரும் வெளியிடக்கூடாது என்று அறிவிப்புச் செய்து நீதிமன்றத்தில் தடைஆணையும் வாங்கி வைத்துள்ளார். அதையொட்டி வாதங்களும் எதிர் வாதங்களும் நடந்ததையெல்லாம் மற்றவர்கள் போல் நானும் கூர்மையாக கவனித்து வந்தேன்.
தற்போது அதுகுறித்து விவாதிப்பது நமது நோக்கமல்ல என்றாலும் பெரியாரின் கொள்கைகளை யாரும் திரித்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.”குடிஅரசு” வெளியீடு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் நாம் அதற்குள் செல்லாமல் பெரியார் கருத்தை யாரும் திரிக்க கூடாது என்பதை மட்டும் விவாதிக்க இருக்கிறோம். முதலில் இவ்விவாதம் “பெரியாரைத் திரிப்பது யார்? என்ற தலைப்பில் தொடங்கி தற்போது “திரிபுவாத திம்மன்கள் யார்?” என்ற தலைப்பில் நடந்து வருகிறது “புரட்சி பெரியார் முழக்கம்” இதழில்
கடைசியாக வந்த இதழில் “திரிபுவாத திம்மன்கள் யார்?” -3 இல் கீழ் கண்டவாறு எழுதியுள்ளனர்.
அது இதோ:
“ பெரியாரை பரப்புவதைவிட, திரிபுவாத திம்மன்களிடமிருந்தும் சுயநலத் துரோகி கூட்டத்திலிருந்தும் அவரைப் பாதுகாப்பதே முக்கியம்! (புத்தர் கொள்கையை திரித்தது போன்ற ஆபத்திலிருந்து) அய்யா அவர்தம் உண்மைத் தொண்டர்களின் பணி அதுதான்."
- மீ.கி.வீரமணி, 'விடுதலை' (30.8.2008)

மேலே எடுத்துக்காட்டிய "24 காரட் பொன் மொழிகளுக்கு" முழு உரிமை படைத்த ஒரே தலைவரான வீரமணி தான் 'திரிபுவாத திம்மன்' ஆக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு கடந்த இதழ்களில் பல்வேறு புரட்டல்களை 'புரட்சிப் பெரியார் முழக்கம்' எடுத்துக்காட்டியிருக்கிறது. ஆனால் 'விடுதலை'யின் 'அதிர்ச்சி' எழுத்தாளர்கள் பேனாவை மூடிக் கொண்டு விட்டார்கள்”
. இவ்விவாததில் கலந்து கொள்ளக் கூடாது என்று இருந்தேன். தவிர்க்க இயலாமல் கலந்து கொள்ளும் சூழலை இக்கட்டுரைத் தொடர் உருவாக்கிவிட்டது. குறிப்பாக மேற்கண்ட வரிகள் இவ்விவாதச்சூழலுக்கு தள்ளி விட்டது என்றே சொல்லலாம்.
இரண்டு அமைப்புக்களுமே பெரியாரின் கொள்கைகளை அவரவர்களின் சக்திக்கேற்ப பரப்பிவருகிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவர்கள் இருவரும் அவரவர் அணுகு முறையில் சகோதரயுத்ததைத் தவிர்த்து பெரியார் கொளகையைப் பரப்பவேண்டும் என்பதே எனது விருப்பம் மட்டுமல்ல அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக திராவிடர்கழகத்தில் தொண்டாற்றாமல் பெரியார்கொள்கையை பேசுபவர்கள் மிகக் குறைவே. அப்படிப்பட்டவர்கள் நேற்றுவரை ஒன்றாக தொண்டாற்றியவர்களைப் பற்றி எழுதும் போது குறைந்த பட்சம் மரியாதைக்குறைவின்றி நாகரிகமாக, சுயமரியாதைக்கு பங்கமின்றி எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

எங்கோ ஒரு மூலையில் உள்ள சிற்றூரில் பிறந்த என்னைபோன்றவர்கள் பெரியார் தொண்டனாகப் பரிணமித்ததுக்கு நீங்கள் குறிப்பிடும் “விடுதலையின் அதிர்ச்சி எழுத்தாளர்கள்” தான் காரணம்.அதிர்ச்சி எழுத்தாளரின் எழுத்து தமிழ் மக்களுக்கு விடுதலையை “விடுதலை” மூலம் வாங்கித்தந்துள்ளதுக்கு சான்றுகள் ஏராளம் உண்டு. அதை அப்புறம் பார்ப்போம்.
திரிபுவாதத்தை உண்மையில் செய்வது யார்? என்பதைப் பார்ப்போம்.

. திரிபுவாதத் திம்மன்கள் –யார்? -2 இல் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார் அந்த “ஆணவ எழுத்தாளர்” ( நம்மாலும் இப்படி அடைமொழியுடன் எழுத முடியும் என்பதற்காக எழுதப்பட்டதே தவிர யாரையும் நோகடிக்க வேண்டும் என்பதற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளவும்)
“இதிலே இன்னுமொரு புரட்டையும் வீரமணி செய்தார். 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கி.வீரமணி, உச்சநீதிமன்றத்தின் சட்டத்துக்கு புதிய வியாக்யானம் தரத் தொடங்கினார். அதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகராக தடை விதிக்கவில்லை என்ற வியாக்யானம். தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!

“அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்பதுதான் நூலின் தலைப்பேதவிர “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் ஏன்? என்பதல்ல என்பதை இக்கட்டுரை எழுத்தாளருக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் நூலின் தலைப்பை சரியாகச் சொன்னவர் நாம் மேலே சுட்டிக்காட்டிய பகுதியில் தவறாக சுட்டியது தெரிந்தே செய்ததா? அல்லது தெரியாமல் செய்ததா? இக்கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறாரோ இல்லையோ ஏன் அப்படி எழுதினார் என்ற உண்மையை நாம் தெரிந்து கொள்வோம்.

“தமிழக அரசு மகராசன் குழுவை நியமித்ததோ - 1979 ஆம் ஆண்டில். இதற்கும் ‘அறிவுசார் சொத்துரிமை’ கோர முடிவு செய்துவிட்ட கி.வீரமணி, ஒரு போடு போட்டார். தாம், இப்படி ஒரு கருத்தை கூறிய பிறகு தான், எம்.ஜி.ஆர். அரசு ஏற்றுக் கொண்டு மகராசன் குழுவையே நியமித்தது என்று கூறிவிட்டார். அதாவது, 1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”
இக்கட்டுரையாளர் சொல்ல வருவது “கி. வீரமணி அவர்கள் 1982 இல் சொன்ன கருத்தை ஏற்று 1979 இல் எம்.ஜி.ஆர் அரசு மகராசன் குழுவை எப்படி அமைக்க முடியும் என்பது”.சரிதானே. எப்படி அமைக்க முடியும்? இக்கட்டுரையாளர் சாதிக்க விரும்புவது வீரமணி இப்போது மட்டுமல்ல எப்போதும் திரிபுவாதி தான்.
“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் கட்டுரையாளர் குறிப்பிடும் திரிபுவாதத்திற்கான வாசகம் ஏதாவது உள்ளதா? என்று நாம் தேடிப்பார்த்ததில் கீழ்கண்ட உண்மை உறுதியானது.
அந்த உண்மை இதோ:
“ நமது அறிவுஆசான் தந்தைபெரியார் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோயில் கருவரைக்குள் (கர்ப்பகிரகம்) நுழைய சாதிப் பாகுபாடின்றி அனைவருக்கும் உரிமை என்பது, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகாரக வாய்ப்பு அளிப்பதன் மூலமே ஏற்பட முடியுமென்று கூறித்தான். அன்று ஆட்சியிலிருந்த –மதிப்பிற்குறிய கலைஞர் தலைமையில் இருந்த தி.மு.க. அரசினை வலியுறுத்தினார்கள்.
அதன் தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டு இத்திருத்தம் சட்டமாக தமிழக சட்டமன்றத்தில் திமு.க. ஆட்சியில் நிறைவேறியது.இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றனர்.
“அப்ரேசன் வெற்றி, ஆனால் நோயாளி செத்தார்” என்பது போல் அரசியல் சட்டத்தின் 25, 26 –வது விதிகளுக்கு முரணல்ல, சட்டம் செல்லும் என்று கூறி நடைமுறைப்படுத்துவதற்கு குறுக்குச்சால் ஓட்டினார்கள். அய்யா மறைவுக்குப் பின் அன்னை மணியம்மையார் தலைமையில் கழகம் தொடர்ந்து போராடிவந்தது.
தந்தைபெரியார் அவர்களது நூற்றாண்டு விழாவினை மதிப்புக்குரிய எம்.ஜி.ஆர். தலைமையில் நடந்த அ.இ.அ.தி.மு.க அரசு அமைத்த குழுவின் தீர்மானத்திற்கும், நமது வற்புறுத்தலுக்கும் ஏற்ப, ஜஸ்டிஸ் திரு. மகராசன் அவர்கள் தலைமையில் ,திருமுருக கிருபனந்த வாரியார், பல குருக்கள், இந்து மத அபிமானிகள்,ஆஸ்திக சிரோன்மணிகள் ஆகிய 12 பேர்களையும் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துரை கமிசனரையும் உள்ளடக்கி ஒரு வல்லுநர் குழு போடப்பட்டு, அது அதன் அறிக்கையை 1982 ஆம் ஆண்டு தந்தது.
அதன்படி அர்ச்சகர்களை சாதி வேறுபாடின்றி தேர்ந்து எடுத்து பயிற்சி அளிக்க ஆகமக் கல்லூரி ஏற்பாடு செய்யவேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது”.


------------------------------“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூலில் பக்கம் 34 -35

1982 இல் இவர் தெரிவித்த கருத்தையேற்று, 1979 இல் எம்.ஜி.ஆர். அரசு மகராசன் குழுவை நியமித்ததாம்! “அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் - ஏன்?” என்ற நூலிலேயே இந்த ‘அறிவுசார் அபத்தங்களும்’ இடம் பெற்றுள்ளன!”
என்று உண்மைக்கு மாறாக எழுதியது அதிர்ச்சி எழுத்தாளரா? ஆணவ எழுத்தாளரா? பெரியாரின் தொண்டர்களே வெறும் கண்ணில் பார்த்தாலும் சரி, ஈரோடு கண்ணாடி போடுப் பார்த்தாலும் சரி ; யார் புரட்டிப் பேசுவது, திரிபுவாததிம்மன்கள் – யார்? என்ற உண்மையை ஊருக்கு உரையுங்கள்.
“ அனைத்துச் சாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?” என்ற நூல் மிகச்சிறந்த வரலாற்று ஆவனம். நூலினைத் தொகுத்தவர் தி.க. பொதுச்செயலாளர் மானமிகு கலி. பூங்குன்றன் அவர்கள் ஆவார்.அந்நூலில் எனது அறிவுக்கு எட்டிய வரை எந்த திரிபும் இல்லை. இப்போதும் அந்நூல் விற்பனைக்கு கிடைக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் அந்நூலை வாங்கிப் படித்து உண்மைத்தன்மையை அறியுங்கள். தெளியுங்கள். நன்றி.