மதச் சார்பற்ற தோழமைக்கான ஒருங்கிணைப்பு
முன்னணி - கலந்துறவாடலும் - ஆலோசனைகளும் Consultation and Discussion on
forming a secular solidarity alliance Chennai - October 24, 2013 எனும்
அமைப்பில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களின் கட்டளைப்படி திராவிடர் கழகத்
துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் பங்கேற்றுக் கருத்துரை வழங்கியதன்
பின்னணியில் உருவாக்கப்பட்ட கட்டுரை இது; பல்துறை அறிஞர் பெருமக்கள்
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களி லிருந்தும் கலந்து கொண்டனர்.
வகுப்புத்
துவேஷம் வகுப்புவாதம் என்ற சொற்கள் தமிழ்நாட்டில் உச்
சரிக்கப்படுவதற்கும், மற்ற மற்ற பகுதிகளில் ஒலிப்பதற்கும் அடிப்படை யிலேயே
வேறுபாடு உண்டு.
இந்த நாட்டிலே நூற்றுக்கு மூன்று பேர்களாக
இருக்கக் கூடிய ஒரு சிறு கூட்டம் பிறப்பால் தாங்கள்தான் உயர்ந்தவர்கள்
என்றும், பிர்மாவின் நெற்றியில் பிறந்தவர்கள் என்றும், பிர்மா இந்த
உலகத்தைப் படைத்ததே எங் களுக்குத்தான் என்றும் சாஸ்திரங் களை எழுதி வைத்து -
அவற்றைக் கடவுள் உண்டாக்கினார் - மதம் இப்படித்தான் கூறுகிறது - அதனை
மீறக் கூடாது என்றும் கூறுகிறவர்கள் மத்தியில் அந்த ஆதிக்கத்தை எதிர்த்து,
ஜாதி கூடாது என்றும், பிறப்பின் அடிப்படையில் பேதம் கூடாது என்றும்
பெரும்பான்மையான மக்கள் சூத்தி ரர்கள் என்று இழிவுபடுத்தப்பட்டு கல்வி
உரிமை, உத்தியோக உரிமை மறுக்கப் பட்ட மக்களுக்காக உரிமையைக் கோருபவர்களை,
போராடுபவர்களைப் பார்த்து ஆண்டாண்டுக்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்தவர்கள்
அந்த ஆதிக்கத்துக்கு ஆபத்து வந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் உரிமைக்காகக்
குரல் கொடுப்பவர்களைப் பார்த்து இயக்கம் நடத்துபவர்களைப் பார்த்து
வகுப்புத் துவேஷிகள், வகுப்புவாதிகள் என்று தூற்றுவதுண்டு.
லாலா லஜபதிராய் ஒருமுறை அழகாகச் சொன்னார்.
தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் தாங்களே வகுப்புத் துவேஷிகளாக இருந்து கொண்டு
மற்றவர்களைப் பார்த்து வகுப்புத் துவேஷிகள், வகுப்புத் துவேஷிகள் என்று
கூறுவார்கள் என்று சொல்லி யிருக்கிறார். அதை இந்த இடத்தில் நினைவூட்டுவது
பொருத்தமாகும்.
தந்தை பெரியார் அவர்களின் அணுகுமுறை எப்படி இருந்தது என்பதுதான் முக்கியம்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா
மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் என்று கருதி, ஒன்றுக் கொன்று
குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக்
குணமாக இருக் குமோ, அதுபோலத்தான் எனக்கும் தோன்றுகிறது. மற்றும் அந்த தாய்
தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப்போய், வலிவு குறைவாய் இருக்கிற
மகனுக்கு, மற்ற குழந்தை களுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான
போசனையை கொடுத்து,
மற்ற குழந்தைகளோடு சரிசமானமுள்ள
குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அது போலத்தான் நான் மற்ற
வலுக்குறை வான பின்தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன். அந்த அளவுதான்
நான் பார்ப்பனரிடமும், மற்ற வகுப்புகளிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி
ஆகும்.
(விடுதலை 1.1.1962, பக்கம் 1)
இந்த மனிதாபிமான உணர்வைப்
புரிந்துகொள்ளாமல், புரிந்திருந்தும்கூட தங்களின் ஆதிக்கத்திற்கும் இது
சம்மட்டி அடியாக இருக்கும் என்ற காரணத்தால் பிராமணத் துவேஷி என்று அவருக்கு
முத்திரை குத்தினார்கள்.
கொசு கடிக்கிறது என்பதற்காகக் கொசு வலை கட்டிக் கொண்டால் கொசுத் துவேஷியா என்று பதில் அடிகொடுத்து அடக்கினார் பெரியார்.
பெரியார் அன்று கொடுத்த குரல் எச்சரித்தது
- அதைத்தான் வேறு பெயர் கொடுத்து இன்றைக்குப் பலரும் கையில்
எடுத்துக்கொண்டு இருக் கிறார்கள்.
1925ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார்
காங்கிரஸ் கட்சியில் இருந்த போதே சேலம் பொதுக் கூட்டத்தில் என்ன பேசினார்
என்பது இந்து ஏடு தனது நூற்றாண்டு விழாவின் போது வெளியிட்ட மலரின் 337ஆம்
பக்கத்தில் வெளியிட்டுள்ளதை இங்கு நினைவூட் டுவது மிகவும்
பொருத்தமானதாகும்.
While speaking at a public meeting, at
Salem, E.V.Ramasami Naiker said that they must settle the brahmin
question while the British supremacy lasted; otherwise they would have
to suffer under the tyranny of what he called Brahminocracy.
வெள்ளைக்காரர்கள் இந்த நாட்டு ஆட்சியில்
இருக்கும்போதே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும்;
அவ்வாறு காணாவிட்டால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் கீழ் தான் மற்றவர்கள்
அவதிப்பட நேரும் என்றார் - இன்றைக்கு 88 ஆண்டு களுக்கு முன்.
இன்றைக்கு இந்துத்துவா என்பதும், இந்து ராஷ்டிரம் என்பதும், ராமராஜ் ஜியம் என்பதும் அன்று பெரியார் சொன்னதுதானே!
இந்துத்துவா கோட்பாடு என்பது
வருணாச்சிரமம்தானே? அன்று சம்பூ கன் என்பவன் தவம் இருந்தான் - அவ்வாறு
சூத்திரன் தவம் இருப்பது வருணாசிரமத்துக்கு எதிரானது என்று கூறி இராமன்
அவனை வாளால் வெட்டினான். இன்று.....
பாபர் மசூதியை இடிக்கவில்லையா?
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ் லிம்களை ஆட்சி அதிகாரம் கொண்டு ஒரு
முதல் அமைச்சரே தலைமை தாங்கி படுகொலை செய்யவில்லையா?.
அந்த முதல் அமைச்சர் ஆளும் மாநிலத்தில்
மனுதர்மம் பாடமாக வைக்கப்படுகிறது. பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில் நான்கு
வருணத்தையும் நானே படைத்தேன் என்று கூறும் கிருஷ்ணனின் கீதை
பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.
இதில் நாம் கவனிக்க வேண்டியது அவர்கள் அவர்களின் சித்தாந்தப் படியேதான் செயல்படுகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் ‘Bunch of Thoughts’ என்ற அவர்களின் வேதப் புத்தகத்திலே கூறுவது என்ன?
நம்முடைய மக்களின் மூலாதாரம் எது என்பது
சரித்திர மேதைகளுக்கே தெரியவில்லை. ஒரு வழியில் நாம் அநாதிகள். துவக்கம்
இல்லாதவர்கள். பெயர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறோம். நாம் நல்லவர்கள்; நாம்
அறிவுத்திறம் கொண்டவர்கள். இயற்கையின் விதி களை அறிந்தவர்கள் நாம்தான். ஆன்
மாவின் விதிகளை அறிந்தவர்களும் நாம்தான். மனிதனுக்கு எவை எவை நன்மை
பயக்குமோ, அவை அவைகளை எல்லாம், மனித சமூகம் நன்மை பெறுவதற்கே
வாழ்க்கைக்குக் கொண்டு வந்தது நாம்தான்!
அப்போது நம்மைத்தவிர, மற்றவர்கள் எல்லாம்
இரண்டு கால் பிராணிகளாகத்தான் அறிவற்றவர்களாகவே இருந்தனர். எனவே
தனிமைப்படுத்தி நமக்குப் பெயர் எதையும் அவர்கள் சூட்டவில்லை. சில
நேரங்களில் - நமது மக்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட நாம்
ஆரியர்கள் அதாவது அறிவுத் திறம் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம்.
நம்மைத் தவிர, மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்
(The origin of our People is unknown to scholors of history. In a way
we are anadhi; without a beginning or we existed when there was no need
of any name. We were the good, the enlightened people. We were the
people who know about the laws of nature the laws of spirit. We had
brought into actual life almost every thing that was beneficial to
mankind. Then the rest of humanity was just bipeds and so no distinctive
name was given to us. Sometimes in trying to distinguish or people from
others, we were called the enlightened - the Aryas - and the rest the
melachas’.
-(From “Bunch of Thoughts”)
ஆரியர்கள்தான் பூர்வீகக் குடிகள் என்றும் ஆரியர்களைத் தவிர, மற்ற வர்கள்
எல்லாம் மிலேச்சர்கள் என்றும், ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல் வால்கர்
எழுதியுள்ளாரே!
வர்ண வியாவஸ்தா என்று சொல்வதையே - நமது
மக்கள் இழிவு என்று நினைக்கிறார்கள். அது ஒரு சமூக அமைப்பாகும்; சமூக
ஏற்றத்தாழ்வு அல்ல; பிற்காலத்தில்தான் இது திரித்துக் கூறப்பட்டது.
பிரித்தாளும் சூழ்நிலையை விரும்பிய பிரிட்டிஷார் தான் இப்படிப் பிரச்சாரம்
செய்தனர். நான்கு சமூகப் பிரிவுகளும், அவர வர்கள் - சக்திக்கேற்ற கடமைகளைச்
செய்வதன்மூலம் கடவுளை வணங்க லாம் என்பதுதான் இதன் தத்துவம்.
பிராமணர்கள் தங்கள் அறிவுத் திறமையால்
உயர்ந்தவர்கள்; சத்தி ரியர்கள் எதிரிகளை அழிப்பதில் வல்லவர்கள்; வாணிபம்,
விவசாயம் செய்பவர்கள் வைசியர்கள்; தங்கள் தொழிலைச் செய்வதன் மூலம் சமூகத்
துக்கு சேவை செய்பவர்கள் சூத்தி ரர்கள். இந்த நான்குப் பிரிவுகளிலும்
ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. இது ஒரு சமூக அமைப்பு; இதைப் புரிந்து கொள்ளாமல்
இந்த அமைப்பு முறை தான் வீழ்ச்சிக்கே காரணம் என்று பிரச்சாரம்
செய்கிறார்கள்.
- என்கிறார் கோல்வால்கர் (Bunch of Thoughts) (8ஆவது அத்தியாயம் பக். 107, 108)
குருஜி கோல்வால்கர் வரையறுக்கப் பட்ட நமது தேசியம் (We or our nationhood defined) என்ற நூலில் குறிப்பிடு கிறார்.
இந்துஸ்தானில் உள்ள இந்து அல்லாதவர்கள்
அன்பு, தியாகம் போன்ற வைகளை வளர்த்துக் கொள்ள வேண் டும். அவர்கள் தங்களை
அயல்நாட்டி னராகக் கருதக் கூடாது. அப்படி இந்தத் தேசத்தை முழுவதும்
ஆதரித்து வாழ வேண்டும். எதையும் கேட்காமல், எந்த சலுகைகளையும் பெறாமல்,
எதற்கும் முன்னுரிமை தராமல் குடிமக்கள் உரிமையும் இன்றி இருத்தல் வேண்டும்
என்று எழுதியுள்ளார்.
ஸ்ரீராமபிரான், ஸ்ரீகிருஷ்ண பகவான்
ஆகியோருடைய ரத்தம்தான் தங் களுடைய நரம்புகளில் ஒடிக்கொண்டி ருக்கிறது
என்பதை முஸ்லிம்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். (ஆர்.எஸ்.எஸ். தலைவர் கே.எஸ்.
சுதர்சன் - தினமணி 16.10.2000)
நரேந்திர மோடி பிற்படுத்தப்பட்ட ஜாதியைச்
சேர்ந்தவர் - பார்ப்பனரை முன்னிறுத்தாமல் ஒரு பிற்படுத்தப் பட்டவரை
முன்னிறுத்துகிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
ஆர்.எஸ்.எஸின் சிந்தனைக் கர்த்தா (Think
Tank) என்று சொல்லப்பட்ட கோவிந்தாச்சார்யா அளித்த திட்டம் Social
Engineering என்பது; பார்ப்பனத் தலைவர்களை நீக்கி பிற்படுத்தப்பட்டவர்களைத்
தலைவர் களாக நியமித்தது. அதன் விளைவே, உத்தரப்பிரதேசத்தில் கல்நாத் மிஸ்
ராவுக்குப் பதில் கல்யாண்சிங், மத்திய பிரதேசத்தில் உமாபாரதி, குஜராத்தில்
நரேந்திர மோடி, பீகாரில் சுசில் மோடி முதலிய மாற்றங்களாகும்.
(ஏ.எஸ்.பன்னீர்செல்வம் - நக்கீரன் கட்டுரை - பக்கம் 161)
தமிழ்நாட்டில் டாக்டர் கிருபாநிதி
(தாழ்த்தப்பட்டவர்) அகில இந்திய பா.ஜ.க. தலைவராக பங்காரு லட்சுமண்
(தாழ்த்தப்பட்டவர்) அறிவிக்கப்பட்டதும் அந்த அடிப்படையில்தான்.
பிற்படுத்தப்பட்டவரான மோடி பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்ளும்போது அவர்களின் வேலை இலகுவாகிவிட்டதே.
பார்ப்பனர்பற்றி மோடியின் அபிப் பிராயம் என்ன? இதோ ஓர் எடுத்துக் காட்டு.
Brahmins kept Indian culture alive
- NARENDRA MODI
(Daily news and analysis)
Brahmins
are custodians of Indian culture and shastras. The brahmin community
has helped & preserved Indian culture. If our culture is still
thriving, it is because of brahmins. He said that social system can be
created by two methods - by the gun or shastras.
(சூரத்தில் பார்ப்பனர்கள் ஏற்பாடு செய்த சம்மேளனத்தில் நரேந்திர மோடி)
இந்தியக் கலாச்சாரத்துக்குப்
பார்ப்பனர்கள்தான் பாதுகாவலர்கள் என்கிறார். மோடியையும் சேர்த்துதான்
சூத்திரன் என்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியவில்லையா?
தந்தை
பெரியார் ஒன்றைக் கூறுவார். நிஜப் புலியை விட வேஷம் கட்டிய புலி அதிகமாகக்
குதிக்கும் (விடுதலை 21.5.1954) அந்த வகையைச் சேர்ந்த வர்தான் குஜராத்
மோடி!
குஜராத்தை இந்துத்துவாவின் பரிசோதனைக்
கூடமாகப் பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றுவிட்டதாக நினைக்கிறார்கள். அந்தப்
பாணியை இந்தியா முழுமையும் அரங்கேற்றுவது என்பதுதான் அவர்களின் திட்டம்.
மோடி மாதிரி முரட்டு ஆள் கிடைத்து
விட்டால் அவர்கள் கெட்டிக்காரத் தனமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தானே
செய்வார்கள்? அதுதானே இப்பொழுது நடக்கிறது.
குஜராத்தில் கிராமம் ஒன்றில் நுழை யும்போது நீங்கள் இந்து ராஷ்டிரத்தில் நுழைகிறீர்கள் என்ற ஓர் அறிவிப்புப் பலகை வரவேற்கும்.
(சமநிலைச் சமுதாயம் - மே 2011 பக்கம் 62, 63)
பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் - தலைமை வகித்து நடத்திய அந்த வன்முறைகளை அரங்கேற்றியவர்கள் தண்டிக்கப்படவில்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து
மும்பையில் வெடித்த மதக்கலவரம் - அதனை பால் தாக்கரே தலைமை வகித்து
நடத்தினார். தண்டிக் கப்படவில்லை.
2000 முஸ்லிம்கள் படுகொலை
செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த மோடி தண்டிக்கப்படாததோடு அல்ல; அவர்
பிரதமருக்கான வேட் பாளராகவே அறிவிக்கப்பட்டுவிட்டாரே.
இந்த நிலையில் வன்முறைகள் - வகுப்புவாத வெறித்தனங்கள் எப்படி அடங்கும் - ஒடுங்கும்?
கோத்ராவில் ரயில் பெட்டி எரிக்கப் பட்டது. அதில் 59 பேர் மரணமடைந்தனர். வருத்தத்திற்குரிய ஒன்றுதான் அது.
பொறுப்பான முதல் அமைச்சராக இருந்தால் என்ன
செய்ய வேண்டும்? பிரச்சினை வேறு வடிவமாக - வன்முறை யாக உருவெடுக்காமல்
பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற பொறுப் புணர்ச்சியோடு நடந்து கொண்டு இருக்க
மாட்டாரா?
மாண்டவர்களின் உடல்களை அவரவர்கள் ஊருக்கு
அங்கிருந்து அனுப்புவதாக இருந்ததை மாற்றி அகமதாபாத்துக்குக் கொண்டு சென்று
அத்தனை உடல்களையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல உத்தரவிடுகிறார் என்றால் அதன்
உள்நோக்கம் என்ன?
மக்கள் உணர்ச்சி வயப்பட்டு வன்முறையில் இறங்கட்டும், மதக்கல வரம் நடக்கட்டும் என்பதுதானே அதன் நோக்கம்? அதுதானே நடக்கவும் செய்தது.
அதிகாரிகளை அவசர அவசரமாகக் கூப்பிட்டு
மூன்று நாட்கள் என்ன கலவரம் நடந்தாலும் கண்டு கொள் ளாதீர்கள் என்று
சொல்லுகிறார் ஒரு முதல் அமைச்சர் என்றால், ஹிட்லரே இவரிடம் பிச்சை வாங்க
வேண்டும் தானே?
காவல்துறை அதிகாரிகள் நடந்த உண்மையை வெளியிட்டு விட்டார்கள்.
குடியரசுத் தலைவர் மாண்புமிகு கே.ஆர்.
நாராயணன், பிரதமர் வாஜ்பேயி யிடம் பலமுறை தொடர்பு கொண்டு குஜராத் கலவரத்தை
அடக்கிட இராணு வத்தை அனுப்புவும் - ராணுவத்திற்குச் சில அதிகாரத்தைத் தர
வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் பிரதமர் அதைச் செய்யவில்லையென்று சொல்
லியுள்ளாரே!
மானவ சம்ஸ்கிருதி (மனிதப் பண்பாடு - மலையாள இதழில் பேட்டி 15.4.2005 - நானாவதி ஆணையத் திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது)
பெரிய மனிதர் என்று வெளிச்சம் போட்டுக்
காட்டப்படும் பிரதமர் வாஜ் பேயி குடியரசு தலைவர் கேட்டுக் கொண்டும் அதனைக்
கண்டு கொள் ளாதது - ஏன்?
அவர் இந்துத்துவாவின் தலைமை ஆசிரியர் - வேறு எப்படி நடந்து கொள்ள முடியும் அவரால்?
அமெரிக்காவின் ஸ்டேட்டன் தீவிலே விசுவ
ஹிந்து பரிசத் மாநாட்டில் பேசியபோது என்ன சொன்னார்? எங்களுக்குப்
பெரும்பான்மை கிடைத் தால் ராமன் கோயில் கட்டுவோம் என்று சொல்லவில்லையா?
1995 மே 7 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். ஏடான
ஆர்கனைசரில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதற்குரியவர் ஏ.பி.வாஜ் பேயிதான்.
அந்தக் கட்டுரையின் தலைப்பு Sangh my Soul என்பதாகும். அதுதான் பாரதீய ஜனதா
கட்சியின் வெப்சைட்டிலும் இடம் பெற்றதாகும்.
ஆர்.எஸ்.எஸ். என் ஆன்மா என்ற அந்தக் கட்டுரையில் நல்லவர் என்ன சொல்லுகிறார்?
முஸ்லிம்களை வழிக்குக் கொண்டு வர என்ன செய்ய வேண்டுமாம்? இதோ அவர் எழுதுகிறார்:
(1) இந்துக்களை அணி திரட்ட வேண்டும் (Organising).
(2) முஸ்லிம்களை உட்கொள்ளுவது
(Assimilation) (இதன் பொருள்: முஸ்லிம்களுக்கென்று உள்ள அடை யாளங்களை
அழித்து அவர்களை இந்து மயமாக்குவது).
அப்படி முஸ்லிம்களை உட்கொள் ளுவதற்கு அவர் கூறும் வழிகள் மூன்று:
(1) முஸ்லிம்கள் நம் வழிக்கு வராவிட்டால், இந்நாட்டுக் குடிமக்கள் என்ற நிலையிலிருந்து ஒதுக்கிவிட வேண்டும்; விரட்டி விட வேண்டும்.
(2) முஸ்லிம்களை நமது வழியில் கொண்டுவர சலுகைகள், இலஞ்சங்கள் தருதல் - இது காங்கிரசின் அணுகு முறை.
(3) முஸ்லிம்களை நமக்கு ஏற்றவாறு மாற்றி நம்முள் உட்கொள்ளுதல்.
இம்மூன்று வழிகளில் முதல் மற்றும் மூன்றாம் வழிகள்தான் நம் வழி என்றார் வாஜ்பேயி.
இது எவ்வளவுக் குரூரம் என்பதை எண்ணிப்
பார்க்க வேண்டும். பாசிஸ்டு களின் அச்சில் வார்த்தெடுத்த சிந்தனை அப்படியே
இதில் வழிகிறதா இல்லையா?
வாஜ்பேயியே இப்படியென்றால் அவரின் சீடர் மோடி நான் ஒரு ஹிந்து நேஷனலிஸ்ட் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.
இப்படிப்பட்டவர் எப்படி மதச்சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமராக வரமுடியும்?
மதச்சார்பற்ற தன்மை என்பது தன் வசதிக்கு ஏற்ப திரித்தும் கூறுகிறார்.
என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங் களை நிறைவேற்றுவதுதான் மதச்சார் பின்மை.
(சென்னை காமராஜர் அரங்கில் துக்ளக் ஆண்டு விழாவில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி பேச்சு)
ஆதாயத்துக்காக சலுகை காட்டும்
அணுகுமுறைக்கு மரண வியாபாரி மோடி - இது சோவின் உரை. அதே கூட்டத்தில்
துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மோடி சொல்லும் மதச் சார்பின்மை சரியானதுதான்
என்கிறார். இப்படி ஒரு விளக்கத்தை சட்டத்தை உருவாக்கிய அண்ணல் அம்பேத்கர்
சொன்னதுண்டா?
ஒரு பேரபாயம் நாட்டு மக்கள் தலைக்குமேல் கொடு வாளாகத் தொங்கிக் கொண்டு இருக்கிறது.
1998 மக்களவைத் தேர்தலில் பிஜேபிக்கு சிறுபான்மையினர் வாக்கு 6.9 சதவிகிதம். 2004இல் 5.07 சதவிகிதம், 2009இல் 2.33 சதவிகிதம்.
குஜராத்தின் முஸ்லிம்களும் பிஜேபிக்கு
வாக்களித்ததாகச் சொல்லப் படுகிறது. அது உண்மையெனில் அச்சத்தில் முரட்டுப்
பிடியிலிருந்து அவர்கள் இன்னும் விடுதலை பெற வில்லை என்று பொருள்.
அண்மையில் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் பிஜேபி சார்பில் ஒரு முஸ்லிம் கூட நிறுத்தி வைக்கப்படவும் இல்லை.
இன்னொன்று முக்கியமானது; பி.ஜே.பி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மை மக்களுக்கு மட்டும் ஆபத்தும் இழப்பும் அல்ல.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட
மக்களுக்கும் கேடுகள் உண்டு. இட ஒதுக்கீடு கேள்விக்குறியாகிவிடும்.
ஒட்டுமொத்தமாக பெண்களுக்குப் பெரும் கேடு. ஹிந்துத்துவாவில் பெண் களுக்கு
உரிய இடம் என்ன என்று தெரியுமே.
பிஜேபியில் பார்ப்பனர் அல்லாதார் நிலை என்ன என்று உ.பி. கல்யாண் சிங்கு, ம.பி. உமாபாரதி வெளிப் படையாகச் சொன்னதுண்டே!
இந்தியா முழுமையும் உள்ள சிறுபான்மை
மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மதச்சார்பின்மையில் நம்பிக்கை உள்ளவர்கள்
பாசிச பிஜேபிக்கும் எதிராக ஒன்று திரட்டப்பட வேண்டும்.
ஊடகங்களில் குறிப்பாக இணைய தளங்களில் நம் ஆதிக்கம் செலுத்தப்பட வேண்டும்.
ஜாதி அமைப்புக் கூட்டணி என்ற பெயரால் வேறு
திசைக்கு இழுத்துச் செல்லப்படும் மக்களும் தெளிவடையும் வகையில்
பிரச்சாரங்கள் நடத்தப்பட வேண்டும்.
குறிப்பாக 18 வயதில் முதன்முதலாக
வாக்களிக்கும் இளைஞர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட
வேண்டும். போதிய தகவல்களும் உண்மை நிலைகளும் அவர்களிடத்தில் இல்லாமையால் -
ஏதோ மாற்றம் நடக்கட்டுமே என்ற மிதப்பில் அவர்கள் நடந்து கொள்ளக் கூடும்.
இந்தப் பேராபத்தைஉணர்ந்து அவர்கள்
மத்தியில் உண்மை வெளிச்சம் ஊடுரு வப்பட உரியது செய்யப்பட வேண்டும். 18
வயதுள்ளவர்களுக்கும் வாக்குரிமை உண்டு என்பதை மறந்து விடக் கூடாது.
சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்தியா முழுமையும் ஹிந்துத்துவாவை
வீழ்த்துவதற்கு பெரியார் தேவைப்படு கிறார். அது முன்னிறுத்தப்பட வேண்டும்.
இராமனைப் பற்றி பெரியார் சொன்ன போது,
இராமன் படத்தைக் கொளுத்திய போது அதன் முக்கியத்துவத்தை உண ராதவர்கள்,
இப்பொழுது ராமராஜ்ஜி யத்தை உருவாக்க முனைகிறார்களே - இப்பொழுதாவது
புரிந்துகொள்ள வேண்டும். முதலில் பெரியாரைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று
கேட்டுக் கொள்கிறோம்.
------------------- --------------- கலி.பூங்குன்றன் துணைத் தலைவர்,திராவிடர் கழகம் அவர்கள் 26-10-2013 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை