Search This Blog

31.5.11

காலவிரயம் என்பதில் ஆன்மீகம்தான் முதல் இடம்!


காலம் கண் போன்றது, கடமை பொன் போன்றது என்று கூறப்படுவதுண்டு. காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் (டி.ஜி.பி.) ஆர். நடராஜ் இந்த வகையில் ஒரு கருத்தினைக் கூறியுள்ளார்.

எல்லாருக்கும் நேரம் ஒரே அளவாகத்தான் இருக்கிறது. எத்தனைப் பேர் எடுத்துக் கொண்ட செயலில் சாதனை படைத்திருக்கின்றனர்?

நேரத்தை செலவிடுவது குறித்து 100 ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட ஒரு சிறிய புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையானது.

எதை வேண்டுமானாலும் ஈட்ட முடியும். ஆனால் இழந்த நேரத்தை மீட்க முடியாது. கிடைக்கக் கூடிய வாய்ப்புகளைப் பற்றி கொண்டு முன்னேற வேண்டிய கடமை மாணவர்களுக்கு உள்ளது என்பதை உணர வேண்டும் என்று கூறியுள் ளார்.

இது வரவேற்கத்தக்க கருத்துதான்; பொருளை இழந்தால் மீண்டும் மீட்டு விடலாம்; காலத்தை இழந் தால் மீட்கவே முடியாது - அது காலாவதியான கதை தான்.

இப்படியெல்லாம் உயர் எண்ணங்களை அவ்வப் போது உதிர்க்கும் பெரிய நிலையில் உள்ளவர்கள் மூட நம்பிக்கையின் பெயரால் நாள் ஒன்றுக்கு இராகு காலம், எமகண்டம், குளிகை காலம் என்று நாள் ஒன்றுக்கு நான்கரை மணி நேரத்தை காவு கொடுக்கிறார்களே இது குறித்து இந்தப் பெரிய மனிதர்கள் எப்பொழுதாவது வாய் திறப்பதுண்டா?

நாள்களில்கூட செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை என்றால் ஆகாதவை என்று ஆணி அடித்தாற்போல நம்பித் தொலைக்கிறார்களே. இதுகுறித்து இம்மியளவாவது எதிர்ப்புக் குரல் கொடுத்த துண்டா?

மார்கழி மாதம் என்றாலே அது பீடை மாதம் என்று பிதற்றுகிறார்களே. இது குறித்து மக்களுக்குத் தெளிவை உண்டாக்கும் வார்த்தைகளை வெளியிட்ட துண்டா?

கோயில் குளம் என்று வெட்டித்தனமாகச் சுற்றி காலத்தையும் பொருளையும் நாசப்படுத்துகிறார்களே - கண்டித்ததுண்டா?

மழை பெய்வதற்காக நெருப்பில் உணவுப் பொருள்களைக் கொட்டி விரயம் செய்கிறார்களே, பல நாள்களை இதற்காக செலவழிக்கிறார்களே, இந்த அநியா யத்தைப்பற்றி எப்பொழுதாவது சுட்டிக் காட்டியிருந்தால் முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் போன்றவர்கள் காலத்தின் அருமை குறித்து கதைப் பதில் கொஞ்சமாவது அர்த்தம் இருக்கும்.

காலவிரயம் என்பதில் ஆன்மீகம்தான் முதல் இடத்தில் இருக்கிறது.
கும்பகோணம் சங்கர மடத்தில் கடந்த பத்து நாள்களாக நடைபெற்ற ஏகாதச அதிருத்ர சகஸ்ர சண்டா மகா யாகம் திங்கள் கிழமை முடிவுற்றதாக தின மணியில் இன்று செய்தி வெளி வந்துள்ளதே! பத்து நாள்கள் பாழாய்ப் போனது என்பதில்லாமல் இந்த யாகத்தால் காதொடிந்த ஊசிமுனை அளவுக்காவது ப(ய)லன் உண்டா?
ஏதோ ஒரு வகையில் மூடநம்பிக்கைக்கு மகுடம் சூட்டுபவர்கள், எந்த முற் போக்குக் கருத்தையும் கூறுவதற்குத் தகுதியற்றவர்களே!

------------------ மயிலாடன் அவர்கள் 31-5-2011 “விடுதலை” யிலெழுதிய கட்டுரை

0 comments: