Search This Blog

28.5.11

பக்தர்களே!மதவாதிகளே!பதில் சொல்லுங்கள்!


தமிழர்களின்சிந்தனைக்கு...

பேரன்புமிக்க தமிழினப் பெருமக்களே வணக்கம். இந்த துண்டறிக்கை மூலம் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி யடைகிறோம்.

தமிழன் கடவுள் நம்பிக்கையால் தன்னம்பிக்கையை இழந்தான்.


மதம், ஜாதகம், ஜோதிடம், மந்திரவாதம், கன்வென்ஷன் கூட்டங்களுக்கெல்லாம் சென்று பகுத்தறிவை பாழாக்கி வருகிறான். கற்சிலைக்கு பாலாபிஷேகம் செய்கிறான்.

பசியால் உணவு கேட்கும் குழந்தையை அடித்து விரட்டுகிறான். சாமி, மத மோதல்களால் சண்டையிட்டு மடிகிறான். அயல் நாட்டுக்காரன் சாண எரிவாயுவை கண்டுபிடிக்கிறான்.

ஆனால் நம் நாட்டுக்காரனோ, சாணத்தைப் பிடித்து கடவுளாக வழிபடுகிறான். மதுபோதைக்கு அடிமையாகி தமிழன் உழைக்கிற காசையெல்லாம் மதுக்கடையில் செலவு செய்கிறான்.

தமிழின ஜாதி, மத, மூட நம்பிக்கை போதைகளுக்கு அடிமையாகாமல் தன்னம்பிக்கையோடு பகுத்தறிவோடு உலக மக்களைப் போல் உயர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையோடு இந்த துண்டறிக்கையை வெளியிடுகிறோம். தமிழர்களே, படியுங்கள், சிந்தியுங்கள்.

உலகைப் படைத்தது கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்?

நடமாடும் மனிதனுக்கு இருக்க குடிசையில்லை, நடமாடாத கற் சிலைக்கு கோவில் தேவையா?

ஜெபம் செய்தே நோயைக் குணப் படுத்துவதாக கூறும் பாதிரியார்கள் இருக்கும் போது கிறிஸ்துவமருத் துவமனைகளில் மருத்துவர்கள் எதற்கு?

இறைவனிடம் கையேந்தினால் அவர் இல்லையென்று சொல்வதில்லையாமே! வாங்கியவர்கள் முகவரி எங்கே?

கடவுளுக்குச் சக்தியிருந்தால் கோவிலுக்கு பூட்டும், காவலும் எதற்கு? எல்லாம் அவன் செயல் என்றால், புயலும், வெள்ளமும், நில அதிர்வும், கடல் பேரலையும் எவன் செயல்?

பில்லி, சூனியம், செய்வினை, தகடு, மந்திரம் செய்து ஒருவருக்கு சாவு ஏற்படுமென்றால், நமது மந்திரவாதி சாமியார்களை நாட்டின் எல்லைக்கு அனுப்பி எதிரிகளை கை, கால் விளங்காமலோ, சாகடிக்கவோ செய்து விட்டால் ராணுவத்துக்கு ஆண்டு தோறும் செலவாகும் ஒரு லட்சம் கோடி ரூபாய் பணத்தை மிச்சப்படுத்தலாமே!

அக்னி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பிடித்தால் அக்னி பகவானுக்கு பூசைசெய்வார்களா? அக்னியை அடித்து விரட்ட தீயணைப்பு வண்டியை அழைப்பார்களா?

பத்து அவதாரங்கள் எடுத்த கடவுள், விலைவாசியை குறைக்க, தீவிர வாதத்தை, பயங்கரவாதத்தை அழிக்க ஓர் அவதாரம் கூட எடுக்காது ஏன்?

ஜெபக்கூட்டத்தில் நாங்கள் குருடனுக் குப் பார்வை கொடுக்கிறோம் , முட வனை நடக்க வைக்கிறோம் என்று கூறுகின்ற போதகர்கள் எய்ட்ஸ் நோயாளியையும், புற்றுநோயாளியையும், ஜெபத்தால் குணப்படுத்தத் தயாரா?

அவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலைகள் வெளிநாடு செல்வது எவன் செயல்?

குழந்தைகளைப் படைப்பது கடவுள் சக்தி என்றால், குடும்பக்கட்டுப்பாடு செய்தபின் அவரால் படைக்க முடியுமா?

முப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்றுகோடி பேருக்கு உணவும், வேலையும் இல்லாமல் வறுமையும், ஏழ்மையும் உள்ளதே -_ ஏன்?

பசியால் வாடும் குழந்தைகளுக்குப் பால் கிடைக்காத நாட்டில் கல்லுரு வுக்கு பாலாபிஷேகம் தேவையா?

சாத்தானும், சைத்தானும், பைபிளிலும், குர் ஆனிலும் தானே உள்ளது? நேரில் கண்டவர்கள் யார்? ஆண்டுகள் பல வாகியும் ஆண்டவர்களால் இவற்றை ஒழிக்க முடியவில்லையே _ ஏன்?

எல்லாம் இறைவனால் முடியும் என்றால் கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் ஏன் இடிதாங்கி வைத்துள்ளார்கள்? இடியிலிருந்து அவற்றைப் பாதுகாக்க கடவுளுக்கு சக்தியில்லையா?

தலைவிதிப்படிதான் எல்லாம் நடக்கு மென்றால் கடவுளெதற்கு?

கடவுள் உலகத்திலுள்ள எல்லாவற்றை யும் படைத்தாரென்றால் தனக்கென கோவில் உண்டாக்க முடிய வில்லையே! காணிக்கை, வரி என்று மனிதர்கள் தானே வசூலித்து உழைத்து, கோவிலை, தேவாலயங்களை, மசூதிகளை கட்டி திருவிழாக்களை நடத்துகின்றனர்?

கர்த்தர் ஊசா என்பவரை அடித்துக் கொலை செய்திருக்கிறார் (பைபிள் 11 சாமுவேல் 6-6, 7 -ஆம் வசனம்) இது தான் கருணையான இரக்கமுள்ள தேவனின் அடையாளமா? கிறித்து வர்கள் இவரை அன்புள்ள ஆண்ட வர் என்று வழிபடலாமா?

ஆயுதங்களைக் கண்டுபிடித்த வெளி நாடுகளில் ஆயுத பூஜை உண்டா?

எட்டுகிலோ கடவுள் உருவுக்கு என்ப தாயிரம் கிலோ எடையுள்ள தேர் தேவையா?

நீங்கள் வணங்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போல் உங்களுக்கு குழந்தை பிறந்தால் கொஞ்சுவீர்களா? அஞ்சுவீர்களா?

வாயிலிருந்து லிங்கமும், வெறுங்கை யிலிருந்து விபூதியும், மந்திரசக்தியால் எடுத்துக் கொடுக்கும் சாமியார்கள் வாயிலிருந்து பூசணிக்காயையும், வெறுங்கையிலிருந்து ஓர் உயிருள்ள யானையையும் எடுத்துக் கொடுப் பார்களா?

பச்சை ரத்தம் குடித்துக்காட்டும் பூசாரி பாலிடால் அல்லது ஆசிட் குடித்துக் காட்டுவாரா?

நெருப்பில் நடப்பது கடவுள் சக்தி என்றால் பக்தர்கள் அதில் படுத்து உருண்டு காட்டுவார்களா?

இயேசுவின் பிறப்பை மருத்துவர்கள் ஏற்றுக் கொள்கிறார்களா?

தெருவில் டேப் அடித்து பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிற பக்கிரிசாக்கள் புனித யாத்திரை (மெக்கா பயணம்) கடமை முடிப்பது எப்போது?

நமக்கு வரும் நோய்களுக்கெல்லாம் பிரார்த்தனை, தொழுகை நேர்த்திக் கடன் செய்தால் மருத்துவரிடம் காண்பிக்காமல் நோய்கள் தீர்ந்து விடுமா?

எல்லாம் இறைவன் செயல் என்றால் இறைவனை வழிபட சபரிமலை, திருப்பதி, வேளாங்கண்ணி, நாகூர் தர்கா, மெக்கா செல்லும் பக்தர்கள் விபத்தில் உயிரிழப்பது எவன் செயல்? தன்னைத் தேடிவருபவர் களுக்கு இறைவன் கொடுக்கும் பரிசு இதுதானா?

புதிதாக கார் வாங்குபவர்கள், இது கடவுளின் பரிசு என்று எழுது கிறார்கள். பலகோடி பேருக்கு கார் கொடுக்காத கடவுள் இவர்களுக்கு மட்டும் கார் கொடுப்பது நியாயம் தானா?

நாம் பள்ளிக் கூடத்தில், உயிரியல் பாடம் படிக்கத் துவங்கும் போது எல்லா உயிர்களையும் கடவுள் படைத்தார் என்றா சொல்லித்தருகிறார்கள்?

பக்தனே நீ கைவைக்காமல் கடவுள் நகருமா?

சிவாய நமஹ என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தைத் தொட முடியுமா?

ஆடு, மாடு, கோழி, பன்றி ஆகிய வீட்டு விலங்குகளை கடவுளுக்கு பலிகொடுக்கும் பக்தர்கள் புலி, சிங்கம், சிறுத்தை ஆகிய காட்டு விலங்கு களை பலி கொடுப்பதில்லையே _ ஏன் பயமா?

ஜாதகம் பார்த்து நடக்கும் திருமண வாழ்க்கையில் தரித்திரமும், சண்டையும், சாவும், விவாகரத்தும் வருகிறதே _ ஏன்?

அன்று பேசிய, தோன்றிய கடவுள் இன்று, பேசவும் காணோம், தோன்றவும் காணோமே ஏன்?

சாமிக்கு தலை மயிரை காணிக்கை யாகக் கொடுக்கும் பக்தர்கள் ஒரு கையையோ அல்லது காலையோ காணிக்கையாகக் கொடுப்பார்களா? சாமியாடுபவர் கையில் மின்சார கம்பியை கொடுத்தால் சாமி ஆடுவாரா?

கடவுள் அருளால் நாக்கில், கன்னத்தில் வேல் குத்தும் பக்தர்கள், நெற்றி யிலோ, நெஞ்சிலோ வேல்குத்திக் காட்டுவார்களா?

தன்னையும், தமது நகைகளையும் காப்பாற்றிக் கொள்ள முடியாத கடவுள் உங்களையும், ஊரையும், உலகத்தையும் எப்படிக் காப்பாற்றும்?

இயேசு அதோ வருகிறார் இதோ வருகிறார் என்றால் தற்சமயம் எங்கு இருக்கிறார்? எந்தத் தேதியில், எந்த இடத்தில், எத்தனை மணிக்கு வர இருக்கிறார் யாராவது கூறமுடியுமா?

அறிவாளி கண்டு பிடித்தது மின்சக்தி, அடிமுட்டாள் கண்டுபிடித்தது ஓம் சக்தி, மின் சக்தியால் கிடைக்கும் நன்மைகளுள் ஒரு துளியாவது ஓம் சக்தியால் கிடைக்கிறதா?

பாலாபிஷேகம், தேனாபிஷேகம் செய் வதன் மூலம் தான், கடவுளின் ஆசி கிடைக்கும் எனில் வழி யற்ற ஏழைக்கு, கடவுளின் ஆசி எப்படி கிடைக்கும்?

கடவுள் முன்பு அனைவரும் சமமெனில் சிறப்பு கட்டண நுழைவாயில் எதற்கு?

மதங்கள் என்பவை மனித மனதை ஒழுங்குபடுத்தத் தோன்றியவை எனில் கோயில்களும், - மசூதிகளும் ஏன் இடிக்கப்படுகின்றன?

பாவத்தின் சம்பளம் மரணமே என் றால், பிறந்த குழந்தைகளும் இறப்பது ஏன்?

நீரின் மேல் நடந்து காட்டியவரும், மோசேயை கடலில் மூழ்குவதிலிருந்து காப்பாற்றியவரும், புதைக்கப்பட்ட லாசரை எழுந்து வரச் செய்தவ ருமான இயேசு கிறிஸ்துவால் சிலுவையைத் தூக்குவதிலிருந்தும், சவுக்கடி துயரத் திலிருந்தும், அவருக்கு ஏற்பட்ட மரணத்திலிருந்தும் தம்மைக் காப் பாற்றிக் கொள்ள முடியவில்லையே _ ஏன்?

பேய், பூதம், பிசாசு, ஆவி, பில்லி சூனியம் பற்றி கூறும் மதவாதிகளும், பிழைப்புவாதிகளும் அறிவியல் ஆய்வுக்கு தயாரா? பேயை, பிசாசை, வீடியோ மூலம் படம் எடுத்துக் காட்ட முன் வருவார்களா?

பத்து அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு ஓர் அவதாரத்தை ஆஸ்திரேலியாவிலும், ஜப்பானிலும், அமெரிக்காவிலும் எடுக்கக் கூடாதா? எல்லா அவதாரமும் இந்த நாட்டிலே தானா?

பழைய ஊர்களுக்கு கடவுள் வந்ததாகக் கூறி அதற்கென்று ஸ்தல புராணங்கள் எழுதியுள்ளனர். இப் போது புதிய புதிய ஊர்கள், குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக் கின்றன. அவற்றுக்கெல்லாம் கடவுள் எழுந்தருளுவது எப்போது? ஸ்தல புராணங்கள் எழுதப்படுவது எப்போது?

இறை இல்லம் என்று வர்ணிக்கப் படுகிற மெக்காவில், புனித நாளில் பக்தர்கள் கூடியிருந்தபோது தீவிபத்து ஏற்பட்டு 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மடிந்தார்களே! உண்மையிலே இது இறைவனுடைய இல்லம்தானா? மெக்காவிற்குச் சென்றவர்களுக்குப் பணச்செலவு தானே ஆகிஇருக்கும், வேறென்ன பயன் கிடைத்தது?

கற்களில் செய்யப்பட்டு கதவுகளால் அடைக்கப்பட்டவர் கடவுள் எனில், கதவுகளுக்கு வெளியே பாதிக்கப்பட்ட வர்களுக்கு கடவுள் எப்படி உதவுவார்?

நீங்கள் ஆர்வத்துடன் கருத்தூன்றிப் படித்தமைக்கு நன்றி. இந்த கருத்துகளை ஆராய்ந்து அலசிப் பாருங்கள். சரியென்றுபட்டால், அறியாமையில் துன்புறும் தமிழர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களும் சிந்தனைத் தெளிவுபெற உதவுங்கள் என வேண்டுகிறோம். மேலும் தகவலறியவும், செயல்படவும் விரும்பினால் திராவிடர் கழக அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.

-------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 28-5-2011

0 comments: