Search This Blog

21.5.11

பெரியார் மொழியைப் பார்த்த பார்வை - 2

ஆயிரம் புலவர்கள் ஒன்று கூடி பாடினாலும் தான் உண்ட ஒரு மீனையாவது முதலை கக்கிடுமா?

தமிழ்மொழியின் தெய்வீகத் தன்மை - தமிழர் தலைவர் தர்க்கரீதியான வினா

ஆயிரம் புலவர்கள் ஒன்று சேர்ந்து தமிழில் பாடினாலும் முதலை தான் உண்ட ஒரு மீனையாவது கக்குகிறதா? என்று பார்ப்போம் என கேள்வி எழுப்பினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சை பல்கலைக்கழகத்தில் (21.2.2011) திரா விடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

இதைக்கூட மறைமலை அடிகளார் புலவர்களின் முற்காலம், பிற்காலம் என்று மிகத்தெளிவாக எழுதியிருக்கின்றார்.

வில்லில் ஏறிவிட்ட அம்பு


வில்லில் ஏறி விட்ட அம்பிருக்கிறதே அது ஒரு மிருகத்திற்குள்ளே போய் வயிற்றைக் கிழித்து இன்னொரு மிருகத்தின் வயிற்றைக் கிழித்தது என்று எழுதினார்.

இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லுகிறார். மறைமலை அடிகளே ஒப்பிட்டுச்சொன்னார். இராமன் அம்பை நம்ப முடியாது. இது வில்லை விடக்கூடியவர்களின் ஆற்றலைப் பொறுத்தது என்று சொன்னார்கள்.

இன்றைக்கு வில் அம்பு கருவிகளை வைத்துக் கொண்டு நாம் யுத்தம் நடத்த முடியுமா? போர் நடத்த முடியுமா? அண்ணா அவர்கள் ஒரு முறை சொன்னார். பெரியார் போர் முறை என்பதிருக்கிறதே அது தனித்த போர் முறை. எப்படிப்பட்டது என்று சொன்னால் மற்றவர்களுடைய போர் முறை கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை மட்டும்தான் போரிடுவது. பெரியாரின் போர் முறை ஆனால் பெரியாரின் போர்முறை மூலபலத்தை முறியடிப்பதுதான் அவருடைய தனிப்போர்முறை என்று அழகாகச் சொன்னார். எனவே மூலபலம் என்று சொல்லும்பொழுது மொழிக்குக்கூட ஆபத்து எங்கேயிருக்கிறது என்பதைப் பார்த்து வெகுவேகமாக அவர்கள் இந்தப் பணியை செய்ய ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, அய்யா அவர்கள் இன்னொரு கருத்தையும் ரொம்ப அழகாக எடுத்துச்சொன்னார்கள்.

மொழிக்கு எல்லைக் கோடு இருக்கலாமா?


மொழி என்பது எல்லோருக்கும் பயன்பட வேண்டும். ஏவுகணை என்றால் அந்த ஏவுகணை எல்லோருக்கும் பயன்பட வேண்டும். அது குறிப்பிட்ட மதத்திற்கு, குறிப்பிட்ட ஜாதிக்கு, குறிப்பிட்ட இடத்திற்கு என்று ஓர் எல்லைக்கோடு இருந்தால் அதற்கு எந்தப் பயனும் இல்லை.

தமிழ்மொழி வளமிக்க ஒரு மொழி. அந்த மொழி வளர்ந்து வேகமாகச் செல்லமுடியாத அளவிற்கு வந்ததற்கு என்ன காரணம் என்ற உணர்வைப் பார்க்கக்கூடிய வகையிலே அய்யா அவர்கள் சொன்னார்கள்.

புதுமைகள் வரவேண்டும்


மிகப்பெரிய அளவிற்குப் புதுமைகள் வர வேண்டும். அவருக்கு இருந்த கோபம் என்ன? அவருக்கு இருந்த வாய்ப்புகள் என்ன? கி.மு. காலத்துக் கருவிகளைப் பயன்படுத்திக்கொண்டு நாம் போர்க்களத்திற்குப் போக முடியுமா?

அறிவு வளர வளர போர்க்கருவிகள் வளருகின்றன. நமது தமிழ்மொழியோ உலக மொழிகளுள் மூத்த மொழி என்று சொல்லுகிறார்கள்.

புத்தக சாலையைப் புதுப்பிக்க வேண்டும்


புரட்சிக் கவிஞருடைய பாடல்கள் உங்களுக்கு நன்றாக நினைவிருக்கும். அவர் சொல்லுகிறார். கைத்தர சித்திரங்கள், கணிதங்கள், வான நூல்கள், சிற்படம், விஞ்ஞானம், காவியங்கள், வைத்துள்ள தமிழர் நூல்கள் வையத்தில் புதுமை என்ன? புத்தக சாலை எங்கும் புதுப்பிக்கும் நாள் எந்நாளோ என்று சொன்னார்.

இவ்வளவும் புதுப்பித்தார். புதுக்கருவியைக் கண்டு பிடிப்போம் என்று அர்த்தம். அந்த மொழி புதுக்கருவிகளைக் கொண்டிருக்கிறது. போர்க் கருவிகளிலே இது புதிதாக வந்திருக்கிறது என்று அர்த்தம். அது மட்டுமல்ல அது எப்படி மேலும் வளர வேண்டும் என்று சொல்லுகின்ற நேரத்திலே, பெரியாருடைய கருத்துகள், பெரியாருடைய மொழிச்சிந்தனைகள், பண்பாட்டுப்படை எடுப்பை எதிர்க்கக் கூடியவைகளை மய்யப்படுத்தி புரட்சிக் கவிஞர் அவர்கள் சொன்னார்கள்.

மொழி சுயமரியாதை கொண்டதாக....!


அறிஞர் அண்ணா அவர்கள் ஆனாலும் சரி, முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆனாலும் சரி, அதே போன்ற சுயமரியாதை வழி வந்த புலவர் குழந்தை போன்றவர்கள் ஆனாலும் சரி, அவர்களுடைய சிந்தனைமொழி சுயமரியாதையை ஒட்டியதுதான். பாவாணர் உள்பட, சரித்திரம் படைத்த அத்துணை தமிழ்ப்புலவர்கள், நாவலர் சோமசுந்தர பாரதியாராக இருந்தாலும், மறைமலை அடிகளாராக இருந்தாலும், மொழி சுயமரியாதையைக் கொண்டதாக இருக்கவேண்டும் என்று விரும்புவார்கள்.

மொழியில் புதுமைகள் வரவேண்டும். பெரியாருக்கு இருந்த கோபம் என்ன? இவர்கள் பழைமையை சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

நம்முடைய துணைவேந்தர் அவர்கள் இரண்டு வார்த்தையில் சொன்னாலும் ரொம்ப அழகாகச் சொன்னார்.

பெரியாருக்கு வந்தது பாருங்கள் கோபம்


பாடல் பாடியவுடனே மறைக்கதவு திறந்தது என்று சொல்லுவார்கள். தமிழ்மொழிக்கு என்ன சிறப்பு என்றால் இந்த பழைய கதையை சொல்லிக் கொண்டு வந்தார்கள். தொண்டர்நாதனை தூதினை விடுத்ததும் முதலை உண்ட பாலகனையும் அழைத்ததும் என்று பாடினார்கள். ஏன் பெரியாருக்குக்கோபம் வந்தது?

பெரியார் ஏன் ஆத்திரப்பட்டார்? தமிழ் மொழியை புதுக்கருவியாக ஆக்க முடியுமா? உலக மொழியாக ஆக்க முடியுமா? அந்த மொழியின் மீது அதிகமாக இருக்கின்ற கவலையோடு பொறுப்போடு கேட்டார். ஏனென்றால் ஒரு பெற்றோர் தனது பையன் புத்திசாலியாக வரவேண்டும் என்று விரும்புவார்கள்.

என்னுடைய மொழி உலக அரங்கிலே மற்ற மொழிகளோடுபோட்டி போட வேண்டும். போட்டி என்று வருகின்ற பொழுது என்மொழி முன்மாதிரி மொழியாக இருக்கவேண்டும் என்று நினைப்பது தான் சரியான அணுகுமுறை. அப்படி வருகிறபொழுது அவர்கள் சொல்லுகிறார்கள். தொண்டர் நாதனை தூதினை விடுத்ததும் முதலை உண்ட பாலகனை அழைத்ததும்

எலும்பு பெண்ணுருவாகக் கண்டதும்
மறைக்கதவினைத் திறந்ததும்

என்று பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் புராணத்தில் எழுதியிருக்கிறார். அவருக்கு ஒரு காலத்தில் தேவைப்பட்டிருக்கலாம். நம்மாள் இது கடவுள் மொழி. இது தேவபாஷை என்று தமிழ்மொழியை சொல்லிவிட்டான். உன் மொழி என்ன பெரிது? அதைவிட பெரிது எங்கள் மொழி என்று கடவுளை போட்டி மொழியாகப், பந்தய பொருளாக வைத்திருப்பார்கள்.

எலும்புக் கூட்டைப் பெண்ணாக ஆக்க முடியுமா?


ஆனால் அந்தக் காலத்தில் சொன்னதை இந்தக் காலத்தில் பயன்படுத்த முடியுமா? இதை அய்யா அவர்கள் மனதிற்கு எல்லா முறையும் புரியும்படியாகப் பேசிய பெரியார் அவர்கள் இந்தப் பாட்டைச் சொல்ல மந்திர சக்தி நிறைந்தது. தமிழ்மொழி என்று சொல்லுகின்றீர்களே இதுவா பெருமை? என்று கேட்டார்.

எலும்புக் கூட்டைப் பெண்ணாக்கிக் கொடுத்த தாம் தமிழ்மொழி. தமிழைக் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லுவது, தமிழ் வாழ்க என்று சொல்லு வது இந்திக்கு எதிராக நான் போராட்டம் நடத் துவது, வடமொழிக்கு எதிராக நான் போர்க்குரல் கொடுப்பது-இதெல்லாம் எதற்காக என்று அய்யா விளக்கம் சொல்லுகிறார். ஆயிரம் புலவர்கள் சேர்ந்து பாடுங்களேன் ஆயிரம் முதலலைகளை வைத்துக்கொண்டு தமிழ்ப்புலவர்கள் பாட்டுப்பாடுங்களேன். அது தான் தின்ற ஒரு மீனையாவது கக்குகிறதா? என்று பார்ப் போம்; தாழ்ப்பாளிட்ட சிற்றறையிலிருந்து மனமுருகிப் பாடுங்களேன். சிறிதாவது தாழ்ப்பாள் அசைகிறதா? என்று பார்ப்போம் முதலை உண்ட பால கனை கக்கியது என்று சொன்னார்கள் பாருங்கள்.

கோயில் கதவுகளுக்கு ஏன் பூட்டு போட வேண்டும். இரவு ஒரு பாட்டு, பொழுது விடிய ஒரு பாட்டுப் பாடினால் தானாக திறந்துகொள்கிறதா என்று பார்ப்போம். எல்லா கோயில்களையும் பூட்டித்தான் வைத்திருக்கின்றான்.

மதம் என்று வந்தாலே மனம் திறந்திருக்காது. நாம் மனங்களைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள். மதங்களைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அல்லர்.

எவ்வளவுதான் உருகிப்பாடினாலும்....


எவ்வளவுதான் உருகிப்பாடினாலும் சிறிதாவது தாழ்ப்பாள் அசைகிறதா? இப்படி அற்புத சக்திகள் கொண்ட மொழி தமிழ்மொழி என்ற சொல்லுவது அறியாமைதான். அது தமிழ்ப்பண்புகூட அன்று.

பெரியார் அவர்கள் அடக்கமாக சொல்லுவார், எனக்கு அவ்வளவாகத் தமிழ்தெரியாது என்று. நான் முறைப்படித் தமிழைப் படிக்கவில்லை என்று சொல்லுவார். அய்யா அவர்கள் எதையும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லக்கூடியவர்.

உண்மையை மட்டுமே பேசி உயர்ந்த தலைவர்


உண்மையை மட்டுமே பேசி உலகத்தலைவராக உயர்ந்தவர் தந்தை பெரியார். ஒரு முறை ஒரு பொதுக்கூட்டத்தில் கோபமாகச் சொன்னார். நான் சொல்லுவதை எல்லாம் நம்புங்கள் என்று சொல்ல மாட்டேன். உங்கள்அறிவுக்கு ஏற்ப சிந்தியுங்கள் என்று சொல்லிவிட்டு, நான் மரணவாக்கு மூலம் கொடுக்கிற மாதிரி உண்மையைத்தான் சொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, உண்மையை சொல்லுவதற்கே எனக்கு நேரமில்லை. நான் எங்கே பொய் சொல்லப்போகிறேன் என்று சொன்னார் (கைதட் டல்). அய்யா அவர்களுடைய நகைச்சுவையையும், ஆழமான கருத்துகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சீர்திருத்தம் செய்ய வேண்டாமா?


மொழி எவ்வளவு பழையது? எவ்வளவு தெய் வீகத்தன்மை கொண்டது என்று சொல்லிக் கொள்கின்றோமோ-அய்யா அவர்கள் எவ்வளவு தர்க்கரீதியாகச் சொல்லுகிறார் பாருங்கள்.


மூத்தமொழி, முன்னோடி மொழி, நீண்டகால மொழி எவ்வளவு பழையது, அல்லது தெய்வீகத் தன்மை கொண்டது என்று சொல்லிக்கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவற்றில் சீர்திருத்தம் செய்யவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும்.

ரொம்ப பழைய கட்டடம் என்றால் என்ன அர்த்தம்? அதில் உள்ளே போக வேண்டாம் என்று அர்த்தம். எவ்வளவுதான் பழைமையானது என்று சொன்னாலும் நாம் யோசிக்க வேண்டாமா? மதங்களால் மனிதர்கள் பிரிந்திருக்கிறார்கள். அதையும் தாண்டி மொழி இணைத்திருக்கிறது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கால்டுவெல் நினைவுச்சின்னத்தை தொடங்கி வைக்கிறார் என்றால் எதற்காக? அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று பொருளா? அல்லது அந்த மதத்தை நாம் ஏற்றுக்கொண்டோம் என்று பொருளா? மதங்களால் மற்றவர்கள் பிரிந்திருக்கலாம். ஆனால் நமது தமிழ்மொழிக்கு கால்டுவெல் செய்த உதவிக்கு நாம் நன்றி காட்டு கிறோம்.

அது மட்டுமல்ல. அவருடைய பணி எத்தகையது என்பதை இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக செய்தார். புரட்சிக் கவிஞர் அவர்கள் தந்தை பெரியாருடைய கருத்தை மய்யப்படுத்தி பண்பாட்டுப் படை எடுப்பை எதிர்க்க வேண்டும். மொழியை பண்பாட்டுப் படைஎடுப்பிலிருந்து பாதுகாக்க வேண் டும். ஏனென்றால் சமஸ்கிருதமயம் என்பது எப்படி வந்தது என்பதைச் சொல்லுகின்றேன்.

இலக்கண நூல் புதிதாக....


எளிய நடையில் தமிழ்நூல்கள் எழுதிட வேண் டும். இலக்கண நூல் புதிதாக இயற்றிட வேண்டும். செந்தமிழை செழுந்தமிழரால் செய்திட வேண்டும் இதுதான் இன்றைக்குத் தேவைப்படுகிறது. செந்தமிழ், செந்தமிழ் என்று காலம் காலமாகச் சொல்லிக்கொண்டிருந்தால் போதாது, செந் தமிழால் ஆக்கிடவும் வேண்டும் இதுதான் பெரியார் அவர்களுடைய சிந்தனையின் பார்வை.

அதைத்தான் புரட்சிக்கவிஞர் ரொம்ப அழகாக சொல்லுகிறார். செந்தமிழை செழுந்தமிழால் செய்திடவும் வேண்டும். எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நாணிடவும் வேண்டும். தமிழ்நாட்டில் பொற்காலம் இருக்கிறதென்றால் கலைஞருடைய ஆட்சிக்காலம் தான் பொற்காலம். ஒரு தமிழன் படிப்பில்லை என்று சொல்ல முடியாது.

பட்டதாரிகள் இல்லாத குடும்பமாக வாருங்கள். உங்கள் முதல்தலைமுறைக்கும் நாங்கள் கல்வியைக் கொடுக்கிறோம் என்கிற அளவிற்கு செயல்படுகிறார்.

சூரிய வெளிச்சத்தால் பயனடையாதோர் உண்டா?


சூரியனை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இருப்பார்கள். சூரிய வெளிச்சத்தால் பயனடையாதவர்கள் இருப்பார்களா? அருள்கூர்ந்து எண்ணிப்பார்க்க வேண்டும். எனக்கு சூரியன் பிடிக்காதுங்க என்று அரசியல் பார்வையோடு பார்ப்பார்கள். சூரியன் வரவில்லை என்றால் என்னங்க வெளிச்சமே இல்லையே என்று நினைப்பார்கள்.

ஆகவே சூரியனை வெறுப்பது வேறு. சூரிய வெளிச்சத்தினால் பயனடைபவர்கள் வேறு. இன்றைக்கு கலைஞர் ஆட்சியினாலே சூரிய வெளிச்சத்தால் அவ்வளவு பேரும் பயனடைகிறார்களோ அதுபோல பயனைடந்து வருகிறார்கள் இது அரசியல் அல்ல. செந்தமிழை செழுந்தமிழாக ஆக்கியதற்கு ஒரு அடையாளம் புரட்சிக் கவிஞர் சொல்லுகிறார். ஒருத்தர் தயை இல்லாமல் ஊரறியும், தமிழில் சலசலவென எவ்விடத்திலும் வாசித்திடல் வேண்டும்.

நீங்களே புரிந்துக்கொள்ளக் கூடிய அளவுக்கு அது எழுதப்பட வேண்டும் என்று சொல்லுகின்றார். அடுத்தவர்களிடம் போய் பொருள் கேட்கக் கூடாது. நீங்களே புரிந்துக்கொள்ளக் கூடிய அளவிற்கு அருவி பாய்வது போல உங்கள் மனதில் பாயவேண்டும் என்று சொல்லுகின்றார்.

இந்த உணர்வை எண்ணிப்பாருங்கள். மொழியில், கருத்துகள், நடை, வளர்ச்சி பற்று அத்துணை யும் இதில் அடங்கியிருக்கிறது. பெரியாருடைய சிந்தனையை உள்ளடக்கி கவிதை அடிப்படையிலே சொல்லியிருக்கின்றார் புரட்சிக்கவிஞர்.

தமிழ்மொழியை மதங்களிலே சாய்க்காமல் இருக்க வேண்டும். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் மொழியைக் காப்பாற்றவதற்கு மொழி சுயமரியாதை வேண்டும் என்று சொன்னார். ஒரு கருத்தை நம்முடைய துணைவேந்தர் ஆழமாகச் சொன்னார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், எங்கள் இயக்கமும் சேர்ந்து அறக்கட்டளை சொற்பொழிவு நடத்தவேண்டும் என்று கேட்டார்.

------------ தொடரும் ---------"விடுதலை” 21-5-2011

0 comments: