Search This Blog

2.5.11

வ.உ.சிதம்பரம் பிள்ளை சிதம்பர அய்யராயிருந்தால்?...

வ.உ.சி.யை அறிவோம்!

வ.உ.சி. திலகர், காந்தி

அகில இந்தியக் காங்கிரஸின் 34ஆவது கூட்டம், 7031 பிரதிநிதிகள் கலந்துகொள்ள, 1919 டிசம்பர் 27 முதல் 30 வரை, பண்டிட் மோதிலால் நேருவின் தலைமையில் அமிர்தசரஸில் நடைபெற்றது.

அமிர்தசரஸ் காங்கிரஸில் கலந்து கொள்வதற்கு முன்னர், லோகமான்ய பாலகங்காதர திலகர் சென்னைக்கு வந்திருந்தார். பம்பாய் மெயிலில் பயணஞ் செய்து சென்னை பெரம்பூரில் வந்து இறங்கிய திலகரை 17.12.1919 இல் தேசபக்தர் வ.உ.சியும், சுப்பராய காமத்தும், திரு.வி.க.வும் சென்று சந்தித்தார்கள். அந்தப் பயணத்தின்போது திலகர் பெருஞ்செல்வந்தர் ஒருவரது வீட்டின் மாடியில் தங்கியிருந்தார்.

இது தொழிலாளர் காலம், தாங்கள் செல்வந்தர் வீட்டு மாடியில் தங்கினால் ஏழை மக்கள் தங்களைக் காண இயலாது வருந்துவார்கள்; ஆதலால் தாங்கள் எங்களில் ஒருவர் குடிலில் தங்குவதற்கு உளங் கொள்ளல் வேண் டும் என்று திலகரிடம் துணிவுடன் சொன்னவர் வ.உ.சி.

சிதம்பரம்பிள்ளை எனக்கா விண்ணப்பம்? எனக்கு எந்தக் குடிசையிருந் தாலென்ன? (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (1982) பக்.255) என்று திலகர் வ.உ.சியிடம் பதில் தந்தார்.

திலகரிடம் நேருக்கு நேர் துணிவுடன் கேள்வி கேட்கும் ஆற்றலும் தகுதியும் பெற்றிருந்தவர் வ.உ.சி.

ரவுலட் சட்ட எதிர்ப்பு


அய்யப்பாட்டின் பேரில் ஒருவரைப் பணயம் கட்டச் சொல்லவும், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வசிக்குமாறு செய்யவும், ஒரு குறிப்பிட்ட செயலில் ஈடுபடாமல் இருக்கச் செய்யவும், காவல் நிலையத்தோடு தொடர்பு கொள்ளுமாறு ஆணையிடவும், மாநில அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டு, தகுந்தபடி ஆணை (வாரண்ட்) இன்றி ஒருவருடைய இருப்பிடத்தைச் சோதனையிடவும், விசாரணையின்றி ஒருவரைக் காவலில் வைக்கவும், மனித உரிமைகளைப் பறிக்கவும் 1919 ஆம் ஆண்டில் வந்தது ரவுலட் சட்டம்.

ரவுலட் சட்டத்தை சாத்வீக நெறியில், சத்யாக்ரக முறையில் எதிர்க்க வேண்டும் என்று நாடு முழுவதற்கும் காந்தி அறிவித்தார்.

இந்தியாவிலுள்ள முக்கியமான நகரங்களிலெல்லாம் இந்தச் சாத்வீகப் போராட்டத்தை ஆதரிப்பவர்களின் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இந்தியாவிலேயே முதன்முதலாக ரவுலட் மசோதாவை எதிர்த்துச் சென் னையில்தான் கூட்டம் நடைபெற்றது.

பிரிட்டிஷாரின் கொடுங்கோன்மை, தன்னிச்சையான அக்கிரமம், அநீதி, குரூரம் காரணமாகவே அதற்கு எதிரான சதிகள் தூண்டப்பட்டன. இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. நாட்டைவிட்டு ஓடிவிட வேண்டும்; அல்லது அரசாங்கத்தின் வழியில் இருந்து வெளியேறிவிட வேண்டும்; அல்லது அரசாங்கத்திட மிருந்து விடுபடவேண்டும். என்று வ.உ.சி. ரவுலட் சட்டத்தை எதிர்த்து முழங்கினார். (என். சம்பத் _ பெ.சு.மணி, வ.உ.சிதம்பரம் பிள்ளை (1995) பக்.209).

மிருக சக்தியைப் பெருக்குவதில் மேற்கு நாட்டார் திறமைசாலிகள். இந்த மிருக சக்திக்கும், ஆன்மசக்திக்கும் நடைபெறும் இந்தப் போரில் ஆன்மசக்தியானது வெற்றி பெறுவது உறுதி. நாட்டின் உண்மையான பக்தர் கள் யார் என்பதை இனங்கண்டு கொள் வதற்கு இதுவே தகுந்த தருணமாகும் என்றும் ரவுலட் சட்ட எதிர்ப்புக் கூட்டங்களில் கலந்து கொள்ள காந்தி சென்னைக்கு வருவதற்கு முன்பே வீரத்தலைவர் வ.உ.சி. வெள்ளை ஏகாதிபத்தியத்தின் ரவுலட் சட்டத்தை எதிர்த்து போர்க்குரல் எழுப்பினார்.

ஒரே மேடையில் வ.உ.சி.காந்தி


17.3.1919 இல் ரவுலட் சட்ட எதிர்ப்புக்குழுவின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் சென்னைக் கடற்கரையில் முதன்முதலாக காந்தியார் (அ.இராமசாமி, தமிழ் நாட்டில் காந்தி (1969) பக்.232) எஸ். கஸ்தூரிரங்க அய்யங்கார் தலைமையில் பேசினார். கூட்டத்தில் ஏ.ரெங்கசாமி அய்யங்கார், சரோஜினிநாயுடு, எஸ். சத்தியமூத்தி, சி. இராஜகோபாலாச் சாரியார், அய்ரோப்பிய டாக்டர் கில் பெர்ட் ஸ்லேட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மதுரையைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப், ஆங்கிலத்தில் உரையாற்றினார்; ஹரிசர்வோத்மராவ் தெலுங்கில் பேசினார்; செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. செந்தமிழில் உரை யாற்றினார்.

ஒரே மேடையில் காந்தியுடன் கூட்டத்தில் கலந்து கொண்டு ரவுலட் சட்டத்தை எதிர்த்து உரையாற்றிய தலைவர் வ.உ.சி., வ.உ.சியும் பெரியாரும் என்ற தலைப்பில் சில விஷயங்களைச் சொல்லப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, அமிர்தசரஸ் காங் கிரசுக்கு முன்பு வ.உ.சி_ திலகர், வ.உ.சி._ காந்தி உறவைப் பற்றிச் சொல்லிக் கொண்டு செல்கிறாயே என்ற கேள்வி காதில் விழுகிறது.

அமிர்தசரஸ் பயணம்


அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட் டுக்குச் செல்லப் பயணச் செலவிற்காக பணவசதியில்லாமல் இருந்தார் வ.உ.சி. அவரது நண்பர் என்.தண்டபாணி பிள்ளை செய்த ஏற்பாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. அவர்களுடன் அமிர்தசரஸ் காங்கிரசுக்கு சென்றவர் வ.உ.சி.

1919ஆம் ஆண்டு டிசம்பரில் அமிர்தசரசில் அகில இந்திய காங்கிரசு மாநாடு நடைபெற்றது. அம்மாநாட் டிற்குப் பெரியார் சென்றார். சென்னையில் இருந்து 300 பேர் சென்றனர். வ.உ.சிதம்பரம்பிள்ளை அம்மாநாட் டிற்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பெரியாரே அவருக்கு ரயில் டிக்கட் எடுத்து அழைத்துச் சென்றார் என்ற தகவலை திரு.ஏ.எஸ். வேணு தனது நூலில் (பெரியார் ஒரு சரித்திரம் (1980) பக்.26) தெரிவிக்கிறார்.


அமிர்தசரஸ் செல்லும் வழியில் பூனாவை அடைந்ததும் அங்கிருந்த திலகரின் சீடர்கள் வ.உ.சி.யை அடை யாளங் கண்டு மகத்தான வரவேற்பளித்தனர்.

இதுவரை மூன்றாம் வகுப்பில் பயணம் செய்து வந்த வ.உ.சிக்கு பூனாவில் இருந்து முதல் வகுப்பில் செல்லும் பயண வசதி ஏற்பாடு செய்யப்பட்டது என்ற தகவலை ஆய்வாளர் பெ.சு.மணி தனது வ.உ.சிதம்பரம் பிள்ளை என்ற நூலில் தெரிவித்திருக்கிறார். வீரத் தலைவர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றினைப் பின்னால் எழுதுகிறபோது இது தொடர்பான செய்திகளை விரிவாகத் தர இருக்கிறேன்.

ஆனால் இங்கே ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.

அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட் டுக்கு செல்வதற்கு ரயில் டிக்கட் எடுக்க இயலாத வறிய நிலை வ.உ.சிக்கு; எந்த வ.உ.சி.க்கு? அய்ம்பது பேரை அழைத்துச் சென்ற வ.உ.சி.

1907 இல் சூரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபைக் கூட்டத்திற்கு, தீவிரவாதிகளை அதிக அளவில் திரட்டி வருமாறு வங்கத் தலைவர் அரவிந்த்கோஷ் வ.உ.சி.க்குத் தந்தி கொடுத்தார்.

சிதம்பரனார் சென்னைக்கு வந்து பாரதியாருடனும், மண்டயம் சீனி வாசாச்சாரியாருடனும் கலந்து பேசினார். நூறு பேருக்குக் குறையாத அளவில் பிரதிநிதிகளைத் திரட்டிக் கொண்டு போகத் தீர்மானமாயிற்று. அவர்களில் சரிபாதிப் பேருக்கான ரயில் செலவைத் தாம் ஏற்பதாக வ.உ.சி. கூறினார். எஞ்சிய சரிபாதிப் பேருக்கு மண்டயம் சீனிவாசாச்சாரியார் பொறுப்பேற்றார். (ம.பொ.சிவஞானம் விடுதலைப் போரில் தமிழகம் (1982) பக். 186). சூரத் காங்கிரசுக்கு 50 பேரைத் தன் சொந்தப் பணத்தில் அழைத்துச் சென்றவர் வ.உ.சி.

பெசன்ட் எதிர்ப்பில் பெரியாரும், வ.உ.சியும்


1847 இல் லண்டனில் பிறந்த வஸந்தை இந்திய அரசியல் வானில் அன்னிபெசன்ட் அம்மையாராகப் பிரகாசித்தார்.

சென்னையிலிருந்து நியூ இந்தியா என்ற ஆங்கில தினசரியை நடத்தினார்; அதில் இந்தியாவிற்கு ஹோம்ரூல் (சுய ஆட்சி) கொடுக்க வேண்டும் என்று தக்க காரணங்களுடன் பயமின்றி எழுதிவந்தார். அவரது இராஜாங்க எதிர்ப்புக் கட்டுரைகளுக்கு அபராத மாக ரூ. 20,000 பென்ட்லண்டு பிரபுவால் விதிக்கப்பட்டது.

அபராதத் தொகையைக் கட்டிய அன்னிபெசன்ட் தொடர்ந்து சுய ஆட்சியின் வேட் கையின் நியாயத்தை எடுத்துரைத்து கட்டுரைகள் தீட்டி வந்தார். அதனால் அரசு அவரைச் சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து விடுதலையானதும் 1917 இல் கல்கத்தா காங்கிரசிற்கு அன்னிபெசன்ட் தலைமை வகித்தார்.

ஸ்மார்த்தப் பிராமணர்கள் துணையுடன் மிதவாதக் கொள்கைகளைக் கொண்டிருந்த பெசன்ட் அம்மையார் மீது அரசியல் வானில் ஒரு பிரிவினருக்கு வெறுப்பு ஏற்பட்டது.

ஸ்ரீரங்கத்தில் திரு. கே.வி. ரங்கசாமி அய்யங்காரின் வீட்டில் ஈ.வெ.ரா., சி. ராஜகோபாலாச்சாரியார், வ.உ.சிதம் பரம்பிள்ளை விஜயராகவாச்சாரியார், டாக்டர் ராஜன், வரதராஜலுநாயுடு, ஜார்ஜ் ஜோசப், ஆதிநாராயண செட்டியார், கே.வி. ரெங்கசாமி அய்யங்கார் ஆகிய ஒன்பது பேரும் கூடி பெசன்ட் அம்மையாருடைய ஹோம்ரூல் கிளர்ச்சிக்கு விரோதமாய்ப் பிரச்சாரம் செய்வதென முடிவு செய்து கொண்டனர். (சாமி. சிதம்பரனார்- தமிழர் தலைவர் (1959) பக்.70).

அன்னிபெசன்டை எதிர்ப்பதில் வ.உ.சியும் பெரியாரும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

----------------தொடரும்

வ.உ.சி.யை அறிவோம்! 2

பிராமணர் அல்லாதார் மாநாடு

1919 இல் திருச்சியிலும், 1920 இல் நெல்லையிலும், 1921 இல் தஞ்சையிலும், 1922 இல் திருப்பூரிலும், 1923 இல் மதுரை, திருச்சி சேலத்திலும், 1924 இல் திருவண்ணாமலையிலும், 1925 இல் காஞ்சிபுரத்திலும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகளிலும், கமிட்டிக் கூட்டங்களிலும், வகுப்புரிமைக்காகப் போராடியவர் தந்தை பெரியார்.

காங்கிரசால், பார்ப்பனரல்லாதார் நன்மை பெறமுடியாது. காங்கிரசை ஒழிப்பதே இனி என் வேலை எனச் சூளுரைத்து, காங்கிரசிலிருந்து 1925 இல் வெளியேறிய பெரியார், பிராமணரல்லாத மக்களின் நன்மைக்காகத் தொண்டாற்றிட, 1926 டிசம்பரில் மதுரையில் பிராமணர் அல்லாதார் மாநாட்டைக் கூட்டினார்.

இம்மாநாட்டில் நீதிக்கட்சியினர் மட்டுமல்லாது காங்கிரசுக்காரர்கள் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கதாகும். கப்பலோட்டிய தமிழன் என்ற சிறப்புக்கு உரியவரான வ.உ.சிதம்பரனார் போன்றோரும் இதில் பங்கு கொண்டனர். இந்த மாநாட்டினால் பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் புத்துயிர் பெற்றது. (பண்ணன் தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார் (1990) பக்.86)

1926 இல் மதுரையில் பெரியார் கூட்டிய பிராமணர் அல்லாதார் மாநாட்டில் கலந்து கொண்ட வ.உ.சி. 1927 இல் சேலம் ஜில்லா மூன்றாவது அரசியல் மாநாட்டில் தலைமை தாங்கி உரையாற்றினார்.

சேலம் ஜில்லா மாநாட்டில்


5.11.1927 இல் சேலம் ஜில்லா மாநாட்டில் வ.உ.சி. ஆற்றிய உரை தனி நூலாக வெளி வந்துள்ளது. நூலாசிரி யர் செ.திவான் பதிப்பித்தவர்கள் வ.உ.சி யுடன் அரசியல் பெருஞ்சொல்.

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித் தும், பிராமணரும் பிராமணரல்லாதார் குறித்தும் வ.உ.சி. ஆற்றிய அந்த உரையில் தாங்கள் மேலான ஜாதியார்கள் என்று கொண்ட கொள்கை அழியா திருக்கும் பொருட்டுப் பிராமணர்கள் மற்றை ஜாதியார்களுக்கு விதித்த அபராதத் தண்டனை.

அத்தண்டனையை மாற்றிக் கொள்வதற்குரிய அதிகாரம் பிராமணரல்லாதார்கள் கையிலேயே இருக்கிறதைக் கண்டு பிடித்து நம் திருவாளர் ஈ.வெ. ராம சாமி நாயக்கரவர்கள் பிராமணரல்லாதார்களுக்குக் கூறி அதனை உப யோகிக்கும்படி செய்து கொண்டு வருகிறார்கள். என்று தந்தை பெரியார் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பெரியாரின் குரு. வ.உ.சி


தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து 1986 இல் கவிஞர் இளந்தேவன் தொகுத்து வெளியான வ.உ.சிதம்பரனார் வரலாறு நூலில் பக்கம் 27 இல் வ.உ.சிதம்பரனாரே எனது அரசியல் குரு என்று தந்தை பெரியார் சொல்லிய செய்தியைக் குறிப்பிட்டிருக்கிறார்.

பெரியார் படத் திறப்பு விழாவில் வ.உ.சி.


2.6.1928 இல் நாகப்பட்டினத்தில் தேசபக்த சமாஜ 7 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் வ.உ.சி பங்கேற்ற செய்தியினையும், விழாவின்போது தந்தை பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் படத்தை வ.உ.சி திறந்து வைத்த செய்தியையும் 10.6.1928 குடிஅரசு இதழ் வெளியிட் டிருக்கிறது.

அந்தச் செய்தி அப்படியே இங்கே சுட்டிக் காட்டப்படுகிறது.

நாகை தேசபக்த சமாஜ 7ஆம் ஆண்டு விழா வைபவம்
திரு.வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் அக்கிராசனம்; சுயமரியாதை வீரர்களுக்கு
ஆடம்பரமான வரவேற்பு; சமாஜ கூட்டத்தில்
வைக்கம் வீரரின் படத்திறப்பு
நிகழும் ஜூன் 2ஆம் தேதி காலை 10 மணி வண்டிக்கு நேரே விருதுநகரி லிருந்து தேச பக்த சமாஜத்தின் 7 ஆம் ஆண்டு விழாத் தலைவர் ஸ்ரீ.வி.ஒ.சிதம் பரம் பிள்ளை அவர்களும் திராவிடன் ஆசிரியர் கண்ணப்பர் அவர்களும், ஸ்ரீமான்கள் மயூரமணி, ஆர். சின்னை யாப்பிள்ளை, என்.தண்டபாணி பிள்ளை, எல்லன்ன நாயக்கர், திரு நெல்வேலி லட்சுமணப்பிள்ளை, திருச்சி விஸ்வநாதபிள்ளை முதலியவர்களும் வந்து சேர்ந்தார்கள்.

வண்டி வந்ததும், தேச பக்த சமாஜ அங்கத்தினரும், நாகூர், வெளிப்பாளையம், புத்தூர், நாகை சுயமரியதை அங்கத்தார்களும், இன்னும் உள்ளூர் பிரபலஸ்தர்களும் தலைவர் களை வரவேற்று உபசரித்து ரயில்வே வெயிட்டிங் ரூமில் தங்கவைத்து சிற் றுண்டி அளித்தார்கள். ஆனால் அவ்வண்டியில் சுயமரியாதை தலைவர்கள் வைக்கம் வீரர் வராததைக் கண்டு ஜனங்களெல்லாம் அதிக வருத்தமுற்று தலைவர்களை ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டாம்; நாயக்கர் வந்த பிற்பாடு அழைத்துச் செல்லாம் என்று ஆட்சேபித்தார்கள்.

அவர்களை ஒருவாறு சமாதானம் செய்து சரியாய் 11.30 மணிக்கு ரயில்வே ஸ்டேஷனிலி ருந்து இரண்டு குதிரை பூட்டிய வண்டி யில், திருவாளர்கள் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, கண்ணப்பர், என். தண்ட பாணி பிள்ளை, சின்னையா பிள்ளை, நாகை தொழிலாளர் சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி பிள்ளை, கண்ணப்பர், என்.தண்டபாணி பிள்ளை, லட்சுமண பிள்ளை முதலானவர்களை வைத்து ஜோடி மேளவாத்திய கோஷத்துடனும் 1000 கணக்கான ஜனங்களோடும் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட் டது.

வழி நெடுக, வளைவுகளும், தோர ணங்களும், தட்டிகளும் அவைகளில் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றிய முத்துப் போன்ற எழுத்து மொழிகளும் மக்களுடைய மனதை ஆனந்த பரவசப்படுத்தியது. அதோடுகூட எந்த வருடமும் இல்லாத ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதாவது, கடைத்தெரு கொடிகளாலும், தோர ணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந் தோடுகூட ஒவ்வொரு கடையிலும் தலைவர்களுக்கு மாலை சூட்டப்பட்டது.

ஊர்வலமானது 1 மணிக்கு சமாஜம் வந்து சேர்ந்தது. சமாஜக் கட்டம் ஒரு மாளிகை போல் அலங்கரிக்கப்பட்டு, நாயக்கரின் படம் ஒரு பக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. தலைவர்கள் வந்ததும், திரு. நாயக்கர் படத்தை வி.ஒ.சிதம்பரம் பிள்ளை, அவர்களை திறக்கும்படி கேட்டுக் கொள்ளவே சிதம்பரம் பிள்ளை அவர்களும் எழுந்து படத்தை திறக்கும்போது நாயக்கரைப் பற்றி சொன்னதாவது:

பெரியார் பற்றி வ.உ.சி.


சகோதரர்களே!
என்னை இன்று உங்களுடைய சமாஜத்திற்கு வரவழைத்து ஸ்ரீ நாயக்கர் படத்தை திறக்கும்படி கட்டளையிட் டதற்கு நான் அதிக சந்தோஷமடைகி றேன். நாயக்கரைப்பற்றி நீங்கள் எல் லாம் அதிகம்தெரிந்திருக்கும்போது நான் அதிகம் சொல்ல வேண்டியது இல்லை.

நாயக்கரைப் பற்றி அய்ரோப்பாவில் உள்ள பார்லிமெண்டில் பேசப்படுகிறது என்றால் அவரின் புகழைப்பற்றி நான் என்ன சொல்லப் போகிறேன். நாயக்கரிடத்தில் உள்ள விசேஷ குணம் என்னவென்றால், மனதில் படும் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் ஒரு உத்தமகுணம் தான்.

அவரை எனக்கு 20 வருடமாய்த் தெரியும். அவரும் நானும் ஒரே இயக்கத்தில் சேர்ந்து வேலை செய்து வந்தோம். அந்த இயக்கத்தில் அயோக்கியர்கள் சிலர் வந்து புகுந்த பிற்பாடு, நானும், அவரும் விலகிவிட்டோம். பிறகு, நாயக்கர் அவர்களால் ஆரம்பித்து நடத்தப்பெறும் சுயமரியாதை இயக்கத்தை பார்த்து இது எல்லா இயக்கத்திலும் நல்ல இயக்கமாயிருப்பதால் நானும் என்னால் ஆன உதவியை அவ்வியக்கத்திற்குச் செய்து வருகிறேன்.

---------------தொடரும் - "விடுதலை” 2-4-2011

வ.உ.சி.யை அறிவோம்! 3

பெரிய தியாகி பெரியார்!

இன்னும் நாயக்கரைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் அதிக நேரம் பிடிக்கும் என நினைக்கிறேன். சுருக்கமாக, நாயக்கர் அவர்கள் தமிழ்நாட்டில் எல்லாத் தலைவர்களைவிட பெரிய தியாகி என்றுதான் சொல்லவேண்டும்.

ஆகையினால் அவருடைய திருஉருவப் படத்தை ஒவ்வொருவரும் வைத்து காலை, மாலை, பகல் முதலிய வேளை களில் வணங்கவேணுமாய் கேட்டுக் கொள்ளுகின்றேன். நாயக்கர் படத்தைப் பார்த்தால் அவரைப் போலவே இருக்கிறது. சில படங்கள் படத்திற்கும் ஆளுக்கும் வித்தியாசமாயிருக்கும். அம்மாதிரி இல்லாமல் சரியாய் அவரைப்போலவே எழுதிய போட்டோ கிராபர் திரு.ஜி.பி. நாயுடு அவர்கள் நீடுழி வாழ்ந்து இன்னும் நன்றாய்....

வேலையில் புகழ் பெறும்படி எல்லாம் வல்ல இறைவனை வாழ்த்துகின்றேன் என்று பேசி முடித்தார். பிறகு ஸ்ரீமான்கள் கண்ணப்பர், தண்டபாணி பிள்ளை சின்னையா பிள்ளை, லட்சு மண பிள்ளை முதலியவர்கள் நாயக் கரின் உயர்தர குணத்தையும் தியாகத் தையும் பற்றி போற்றிப் புகழ்ந்தார்கள். அதன் பின்னர் வந்தவர்களுக்கும் தலைவர்களுக்கும் சந்தனம், பூ வழங்கப்பட்டு கூட்டம் கலைந்தது. அன்று மாலை 5.30 மணிக்கு நாகை காந்தி சவுக்கத்தில் ஒரு பெரிய கூட்டம் கூடியது.

நாகை திரு. ஜே.கிருஷ்ண மூர்த்தி ராஜாவால் சுயமரியாதைப் பாட்டு பாடப்பெற்று கூட்டம் ஆரம்ப மானது. அக்கூட்டத்திற்கு ஸ்ரீமான் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை அவர்கள், கேட்டுக் கொள்ளப் பட்டதற்கிணங்கி தலைமை வகித்தார். தலைமை வகித்த தலைவருக்கு சமாஜத்தார் ஒரு வரவேற்பு பத்திரம் வாசித்துக் கொடுத் தார்கள். பத்திரத்திற்குப் பதில் புகன்று விட்டு பிராமணர் அல்லாத இயக்கத் தைப்பற்றியும், சுமரியாதையைப் பற்றியும் முகவுரையாக சுமார் 2 மணி நேரம் பேசினார்.

பிறகு திரு. தண்டபாணி பிள்ளை பேச எழுந்து பேசிக் கொண்டு வரும்போது மழை தூறியது. பின்னால் மழை வரும் போக்கு அதிகரித்ததினால் அன்று கூட்டம் கலைக்கப்பெற்றது. அடுத்த நாள் மாலை அதே இடத்தில் கூட்டம் கூடியது. நாயக்கர் வராதது தெரிந்திருந்தும். முதல் நாள் கூடிய கூட்டத்தைவிட இன்னும் ஒரு பங்கு அதிகமாக கூடியது. தலைவர்கள் கண் ணப்பரை பேசச் சொன்னார்கள்.

திரு. கண்ணப்பரும் சுமார் 1.30 மணி நேரம் அரசியல் என்னும் உத்தியோகங்களிலும், சமய சமூக சம்பந்தமான விஷயங்களி லும் உள்ள கொடுமைகளைப் பற்றி வெகு விஸ்தாரமாக எடுத்துச் சொன் னார். பிறகு திருவாளர்கள் தண்ட பாணி பிள்ளை, விஸ்வநாதம் பிள்ளை, லட்சுமண பிள்ளை முதலியவர்கள் பேசிய பின்னர் இரவு 9.30 மணிக்கு வந்தனோபசாரத்துடன் கலைந்தது. (குடி அரசு 10.6.1928)

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டுத் திரும்பிய வ.உ.சி. சூன் 6 இல் பெரியாருக்கு அது குறித்துக் கடிதம் எழுதினார்.

வ.உ.சி. பெரியாருக்கு எழுதிய கடிதம்


பல ஆண்டுகளுக்கு முன்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமிகு. வை. கோபால்சாமி எம்.ஏ.பி.எல்., அவர்கள், கழகப் பிரச்சார நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்றபோது அவர்களுடன் செல்லும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைத்தது. கூட்டம் முடிந்த மறுநாள் தந்தை பெரியார் இல்லத்தைப் பார்வையிட அவர்களுடன் சென்றிருந்தேன்.

பெரியார் அவர்கள் அமர்கின்ற நாற்காலியின் அடிப்பகுதியில் ரகசிய அறை இருந்ததைப் பார்த்தேன். அது இன்னும் எனது நினைவில் இருக்கிறது. எண்ணற்ற விஷயங்களைப் புரிந்து கொண்ட வாழ்வில் மறக்க முடியாத அந்தப் பார்வையிடலின்போது, எனது கண்ணில் பட்ட அரிய விஷயம் வ.உ.சி. அவர்கள் 6.6.1928 இல் பெரியாருக்கு எழுதிய கடிதம்.

அந்தக் கடித வாசகங்கள் இதோ:

V.O. Chidambaram Pillay,
KOILPATTI, S.I.R. PLEADER, 6.6.1928

அன்பார்ந்த சகோதரர் அவர்களே,

சேமம், சேமத்துக்கும் கோருகிறேன்.

நாகபட்டணத்திலும், கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லாருக்கும் அசந்தோஷத்தை உண்டு பண்ணிற்று ஒருவாறு இரண்டிடங்களிலும் எங்கள் வேலைகளைச் செய்து முடித்தோம். இப்பொழுது உங்கள் உடம்பு பூரண சவுக்கியம் அடைந்து விட்டதா?

ஆம் என்றால், நீங்கள் எப்பொழுது சென்னைக்குச் செல்லுதல் கூடும்.

என் மகன் School Final Examinationஇல் தேறிவிட்டான். இனிமேல் என்னால் அவனைப் படிக்க வைக்க முடியாது. போலீஸ் டிப்பார்ட்டுமெண்டுக்கு அவனை அனுப்பலாமென்று நினைக்கிறேன். தகுதியான சிபார்சு இருந்தால், முதலிலேயே Circle Inspector ஆகலாம், சாதாரண சிபார்சு இருந்தால் Sub-Inspector ஆகலாம். தகுதியான சிபார்சு நமக்குக் கிடைக்குமா என்பதைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்.

கடவுள் துணை.
அன்புள்ள,
வ.உ.சிதம்பரம்

நாகபட்டினத்திலும், கும்பகோணத்திலும் நீங்களில்லாமை எல்லோருக்கும் அசந்தோஷத்தை உண்டு பண்ணிற்று என்ற வ.உ.சி.யின் வரிகளுக்கு விளக் கமாக நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தேசபக்த சமாஜ விழாச் செய்தி முன்னரே தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் விவரங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இறைவன் அருளால் அது கிடைத்தால் வ.உ.சியின் விரிவான வாழ்க்கை வரலாற்று நூலில் அதனை வெளியிடுவேன்.

சிதம்பரம் சிதைவு


ஈரோட்டில் பெரியார் அவர்களின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமி அவர்களை ஆசிரியராகக் கொண்டு உண்மை விளக்கம் பிரஸில் அச்சிடப்பட்டு 24 பக்கங்களில் ஒரு அணா விலையில் வெளிவந்த குடிஅரசு இதழில் 1936 நவம்பர் 22 இல் வ.உ.சி.யின் மறைவு குறித்து வெளியான செய்தி இதோ:

தோழர் வி.ஒ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் முடிவெய்திவிட்டார். தனக்கு இயங்கும் சக்தி இருந்து ஓடி உசாவித் திரியும் காலமெல்லாம் தனக்கு சரி யென்று தோன்றிய வழிகளில் உழைத்து விட்டு ஒடுக்கம் ஏற்பட்டவுடன் அடக்கமாகி விட்டார். இது மக்கள் வாழ்க்கையின் நியாயமான நிலையேயாகும்.

மிக்க மந்தமான காலத்தில் அதாவது மனிதன் பொதுநலம் என்றால் மத சம்பந்தமான காரியம் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றும், அரசியல் என்றால் அது தெய்வீக சம்பந்தமானது என்றும் எப்படி எனில் கூனோ, குருடோ, அயோக்கியனோ, கொள்ளைக்காரனோ ஒருவன் புருஷனாய் அமைந்துவிட்டால் பெய்யெனப் பெய்யும் மழை என்பதற்கு இலக்காகவும், பின்தூங்கி முன்னெழுபவள் போலவும் இருப்பதுதான் பெண்ணின் கற்புக்கு குறியென்றும்

அக்கூட்டு தெய்வீக சம்பந்தமாய் ஏற்பட்டதென்றும் சொல்வதுபோல் அரசன் எப்படிப்பட்ட வனாய் இருந்தாலும் ஆட்சி எப் படிப்பட்டதாய் இருந்தாலும் அரசனை விஷ்ணுவாய் கருதி ஆட்சியை வேதக் கோட்பாடாகவும் கருதி வாழவேண்டும் என்று இந்த பார்ப்பனிய ஆதிக்க காலத்தில் மற்றும் தண்டனை, சிறை என்பவைகள் மகா அவமானமாகவும், மகா இழிவாகவும் மகா கொடுமை யாகவும், துன்பமாகவும் இருந்த காலத்தில் தென்னாட்டில் முதல் முதல் வெளிவந்து அரசனை எதிர்த்து அரசியலை இகழ்ந்து, துச்சமாய்க் கருதி தண்டனையை அடைந்து, சிறைக் கொடுமையை இன்பமாய் ஏற்று கலங்காமல் மனம் மாறாமல் வெளிவந்த வீரர்களில் முதன்மை வரியில் முதன்மை லக்கத்தில் இருந்தவராவார் நமது சிதம்பரம். அதன் பலன் எப்படியோ ஆனாலும் அவராலேயே அனேக பார்ப்பனரல்லாத மக்கள் உண்மை வீரர்களாகவும் சுயநலமற்றவர்களாகவும் வெளிவர முடிந்தது.

-------------- தொடரும் -- “விடுதலை” 16-4-2011


வ.உ.சி.யை அறிவோம்! 4

தோழர் சிதம்பரம் ஒரு பார்ப்பனராய் இருந்திருப்பாரானால் லோக மானியர், முனீந்திரர், சிதம்பரம் கட்டம், சிதம்பரம் உருவச் சிலை, சிதம்பரநாதர் கோவில், சிதம்பரம் பண்டு, காங்கிரஸ் மண்டபங்களில் காங்கிரஸ் பக்தர் வீடுகளில் சிதம்பரம் கழுத்து சிலை, சிதம்பரம் உருவப் படம் இருக்கும் படியான நிலையை அடைந்திருப்பார். ஆனால் அவர் பிள்ளை; அதுவும் சைவப் பிள்ளை ஆனதால் அவர் வாழ்வு அவருக்கே அவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்காமல் இருந்தது என்பதோடு அவருக்காக ஏற்படுத்தப் பட்ட பண்டுகூட வெளியிட யோக்கியதை இல்லாததாய் இருந்து வருகிறது.

சிதம்பரம் பிள்ளையின் அனுபவத்தை மற்ற தேசாபிமான பார்ப்பனரல்லாதாரும் அறியட்டும் என்ப தற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

அரசியல் உலகம் அவர் இறங்கின காலத்தில் ஒரு விதமாகவும் இப்போது ஒரு விதமாகவும் இருக்கிறபடியால் ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாத தேச பக்தர்களைப்பற்றி ஆறுதல் அடை கிறோம். எப்படியெனில் பார்ப்பனரல் லாத தேசபக்தர்களை பார்ப்பனர் ஒரு அளவுக்காவது வேஷத்துக்காகவாவது அணைத்துத் தீர வேண்டிய நிலையில் வேறு பல இயக்கங்கள் நிர்பந்தித்துக் கொண்டிருப்பதால் அதிகம் பயப்பட வேண்டியதில்லை.

ஆகையால் சிதம்பரம் பிள்ளையை ஒரு உதாரணமாகக் கொண்டு மற்ற தேச பக்தர்கள் அதற்கேற்றபடி நடந்து கொள்வார்களாக, (22.11.1936குடிஅரசு)

சிதம்பரம் பிள்ளை சிதம்பர அய்யராயிருந்தால்?...


அதனைத் தொடர்ந்து அடுத்த வாரம் வெளிவந்த 29.11.1936 குடிஅரசு இதழில் வ.உ.சி. மறைவு குறித்து வெளியான இன்னொரு செய்தி இதோ:

ஹிந்து, மெயில், மித்திரன், ஜெயபாரதி,
தினமணி இடம் கொள்ளுமா?
பிறப்புக்கும் பேருக்கும் அடிமையான
பித்தலாட்ட தேசம் இதுதானே?

ஏ _ பி வகுப்பு சிறையில்லாத முப்பதாண்டுகட்கு முன்பு சிறைபுகுந்து, வக்கீல் தொழிலிழந்து, தியாகம் பல புரிந்து, கஷ்ட நஷ்டங்கள் அடைந்து, கடைசி வரையில் ஏழையாகவே வாழ்ந்து, சென்ற 18ஆம் தேதியன்று, 65ஆம் வயதில் உயிர் துறந்த வ.உ.சிதம்பரம்பிள்ளை பிரம்மா தலையிலிருந்து வெடித்தெழுந்த வ.உ.சிதம்பர அய்யராயிருந்தால்,

ஹிந்து சுதேசமித்திரன், ஜெயபாரதி, தினமணி முதலிய பழுப்பு வெள்ளை பத்திரிகைகளிலும் மெயில் போன்ற வெளுப்பு பார்ப்பன பத்திரிகைகளிலும் வேறு விஷயங்களுக்கு இடமிருக்குமா? இதுவரையில் இந்நாட்டில் இறந்த வடநாட்டு படேக்களாயிருந்தாலும் சரி _ தென்னாட்டுப் படேக்களாயிருந் தாலும் சரி _ சிதம்பரம் பிள்ளை தியாகத்துக்கு ஒப்பாகுமா? ஜெயிலிருக்கும் திக்கே தெரியாத கஸ்தூரி ரங்கய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார் முதலியோரின் சேவையும் தியாகமும் பிள்ளை அவர் களின் தியாக முன்பு உறை போடவும் கூடுமா?

ரௌலட் சட்டத்தில் கையொப்பமிட்ட சர்.சி.வி. குமாரசாமி சாஸ்திரிக்கும், பார்ப்பனரல்லாதாரிடமே பத்துலட்சக் கணக்கில் கொள்ளை யடித்து _ எல்லா சொத்தையும் பார்ப் பனருக்கே உதவ வேண்டுமென்று வில் எழுதிவைத்துவிட்டு இறந்து போன டாக்டர் ரங்காச்சாரிக்கும் கொடுத்த இடத்தில் 1000இல் ஒரு பங்குகூட, தேசபக்த சிங்கம் சிதம்பர தங்கத்துக்கு, ஹிந்து முதலிய தேசிய பத்திரிகைகள் கொடுக்கவில்லையென்றால் _ இந்த வகுப்புவாதமே உருவெடுத்த சண்டாள பத்திரிகைகள் தேசியம் பேசி, பாமர மக்கள் தலையில் எத்தனை காலம் மிள காய் அரைக்க உத்தேசித்திருக்கின்றனவோ தெரியவில்லையே? போதாக்குறைக்கு சிதம்பரம் பிள்ளை காங்கிரஸ் என்று சொல்லியே உயிர் துறந்தாராம்!

சி.ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனத் தலைவர்களின் சூழ்ச்சியை கண்டித்தும், காங்கிரசைவிட தேசமே பெரிதென்று கர்ஜித்த சிங்கமா, அக்ரகாரப் புலிகள் அதிகாரம் செலுத்தும் காங்கிரசைப்பற்றி மகா கவலை கொண்டு இறந்திருப்பார்? ஒரு வேளை காங்கிரசின் பேரால் பாமர மக்கள் தலைமேல் கல்விழப் போகிறதே என்று வேண்டுமானால், கவலைப்பட்டி ருக்கலாம்.

தாலி அறுப்பு _ ஜவஹர் கூட்டத்தில் யானையைவிட்டது_ ருக்மணி லட்சுமிபதியை சுந்தரராவ் குத்தப் போனது _ போன்ற தேர்தல் அபாண்டங்களோடுதான், சிதம்பரம் காங்கிரஸ், காங்கிரஸ் _ என்று உயிர் விட்டார் என்ற அபாண்டத்தையும் சேர்க்க வேண்டும்.

சிதம்பரம்பிள்ளை விஷயத்தில் மவுனம் சாதிக்கும் ஜாதிப்பித்து பிடித்த பார்ப்பன பத்திரிகைகளின் போக்கைக் கண்ட பின்னாவது, பார்ப்பனரல்லாதாருக்கு ஆத்திரம் பொங்குமா? (29.11.1936 குடிஅரசு)

தியாகத் திருவிளக்குகள்!


தேசப்பிதா வ.உ.சியின் வரலாற்றில் தமிழர் பிதா பெரியார் ஈ.வெ.ரா. அவர்களும் இரண்டறக் கலந்து பணியாற்றிய செய்திகள் சிலவற்றைத் தொகுத்துத் தந்துள்ளேன்.

26.4.1961 விடுதலை இதழில், 3.4.1961 இல் சேலம் நகரசபை வரவேற்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை இதோ:

டாக்டர் வரதராஜலு நாயுடு, வ.உ.சிதம்பரம்பிள்ளை, திரு.வி.க, நான் (ஈ.வெ.ரா) இப்படி நாங்கள் பேசி னால்தான் கூட்டம் வரும். அய்யங்கார் என்று யாராவது பேசினால் கூட்டமே நடக்காது; நடக்கவும் விடமாட்டார்கள்.

எனவே எங்களது உழைப்பைக் கொண்டு காங்கிரஸ் இங்கே நன்கு வளர்ந்தது. காங்கிரஸ் ஒரு நாளும் பொதுமக்களது ஸ்தாபனமாக இருந்தது கிடையாது. அவர்களது இனநலத்துக் காகவே ஒரு சிலர் அமைத்த ஸ்தாப னம்தான் அது. இன்றைய காங்கிரஸ் காரர்களிலே பல பேருக்கு இது தெரி யாது (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பாகம் 1, பக்கம் 362) வ.உ.சி. பெரியார் உறவு தொடர்ந்து நிலைத்திருந்தது. தனது இறுதிக்காலம் வரையில் வ.உ.சி. குறித்து பெரியார் முழங்கிவந்தார்கள்.

நாட்டிற்காக, தாங்கள் சார்ந்திருந்த இயக்கத்திற்காக தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் ஈந்திட்ட தியாகிகளை இயக்கங்கள் மறுத்தன; மறந்தன.

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சுதேசிக்கப்பல் விட்டு, நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த வ.உ.சியின் புதல்வர் திரு.ஆறுமுகம் பிள்ளையை கோவில்பட்டி மக்கள் தேர்தலில் தோற்கடித்தனர். ஆனால் வரலாற்றில் தியாகச் செம்மல்கள் தியாகத் திருவிளக்குகளாக என்றும் பிரகாசிக்கிறார்கள்; பிரகாசிப்பார்கள்.

உலகம் உள்ளவரை,
உன்னதத் தலைவர்களின்
உண்மை வரலாறு போற்றப்படும். நாமும்
உறுதியெடுத்து அதனைப் போற்றுவோம்!

-----------------------(நிறைவு) -----------”விடுதலை”30-4-2011

0 comments: