Search This Blog
2.12.08
மாலேகான் வழக்கில் கவனம் தேவை!
இந்தியத் துணைக்கண்டத்துக்குள் தீயசக்திகளால் வன்முறைக்குப் பயன்படுத்தப்படும் களம் பெரும்பாலும் மகாராட்டிர மாநிலம் - மும்பையாகத்தானிருந்து வருகிறது.
பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மும்பையில்தான் கலவரம் வெடித்தது. 17 இடங்களில் குண்டுவெடித்ததில் 300 பேர் பலியானார்கள் (1993 மார்ச், 12).
மும்பையில் மட்டும் அடிக்கடி வன்முறைகள் வெடிப்பதற்கு முக்கிய காரணம் இருக்கவேண்டும்; அதுகுறித்து புலனாய்வுத் துறை ஆழமாக ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளது.
மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட காந்தியார் அவர்களைப் படுகொலை செய்த அமைப்பின் உற்பத்தி கேந்திரம் அதுதான். வன்முறையை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். தாய் வீடும் அதுதான்.
மண்ணின் மைந்தர் என்ற பெயரில் வெளி மாநிலத்தவர்களைத் தாக்குவது - கொல்வது - வணிக நிறுவனங்களைத் தாக்கி அழிப்பது - தீ வைப்பது எல்லாமே பெரும்பாலும் அங்கு தான் நடைபெறுகிறது.
மகாராட்டிர மாநிலம் மாலேகான் பகுதியில் இப்பொழுது குண்டுவெடித்ததே (செப்டம்பர் 29) அதே இடத்தில் 2006 செப்டம்பர் 6 இல் குண்டு வெடித்து 40 பேர் கொல்லப்பட்டனர் என்பதும் நினைவுகூரத் தக்கதாகும்.
தனியார் இராணுவக்கல்லூரி நடத்தி இந்துத்துவா தீவிரவாதிகளை உற்பத்தி செய்து கொண்டிருப்பதும் அந்த வட்டாரம்தான்.
இந்துத்துவாவின் இத்தகு தீய நடவடிக்கைகள் மற்றவர்களை ஈர்த்திருப்பதற்கும் கூடுதல் வாய்ப்பு உண்டு என்பதை மறுக்க முடியுமா?
1993 இல் மும்பையில் வெடித்த கலவரத்திற்கு சிவசேனா - அதன் நிறுவனர் பால்தாக்கரே உள்ளிட்டோர் முக்கிய முனைப்புச் சக்திகளாகவிருந்ததை நீதிபதி சிறீ கிருஷ்ணா ஆணையம் அறிக்கையாக அதிகாரப்பூர்வமாக அளித்த பிறகும்கூட, அதன்மீது ஒரு துரும்பைக்கூடக் கிள்ளிப் போடவில்லை அரசுகள்.
1992 டிசம்பர் 6 ஆம் தேதி - அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்வு செய்து 450 ஆண்டுகால வரலாறு படைத்த முசுலிம் சிறுபான்மையினரின் வழிபாட்டு இடத்தை ஒரு பட்டப் பகலில் இடித்து நொறுக்கிய குற்றவாளிகள் கொஞ்சம்கூட அச்சம் இல்லாமலும், வெட்கம் இல்லாமலும் ராஜநடை போட்டுத் திரிகிறார்கள்.
அந்த இடிப்புக் காரணமாக நாடு தழுவிய அளவில் 900 பேர் வன்முறை நடவடிக்கைகளால் கொல்லப்பட்டனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வன்முறைகள் வெடித்துக் கிளம்புவதற்கான பொறுப்பை ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் உள்ளிட்ட (அரசியல் கட்சி பி.ஜே.பி.) கூட்டம் ஏற்றுக்கொண்டுதான் தீரவேண்டும்.
இன்றைக்கும்கூட பெண்கள் உள்பட துப்பாக்கிச்சுடும் பயிற்சியினை ஆர்.எஸ்.எஸ். அளித்துக்கொண்டுதானிருக்கிறது. சிறுபான்மை மக்களை வன்முறையில் படுகொலை செய்ய விசுவ இந்துபரிசத் திரிசூலங்களை வெளிப்படையாக வழங்கிக் கொண்டுதானிருக்கிறது.
இத்தகையவர்கள் ஆயிரம் பேர் இந்திய இராணுவத்தில் ஊடுருவியிருக்கின்றனர் என்கிற தகவல்களும் ஏடுகளில் இடம்பெறு கின்றன.
இப்படி வன்முறையில் ஈடுபடும் இந்துத்துவாவைச் சேர்ந்தவர் மீது எந்தவித விசாரணையும் கூடவே கூடாது என்று பி.ஜே.பி. - சங் பரிவார்த்தலைவர்கள் மிகவும் வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள். இதன்மூலம் சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கூட்டம் நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. இவர்கள் மத்திய ஆட்சியிலும் இருந்தனர். பல மாநிலங்களிலும் ஆட்சியைக் கையில் வைத்துக் கொண்டுள்ளனர்.
அடுத்த பிரதமர் என்று (பாபர் மசூதி இடிப்பு வழக்குக் குற்றப் பத்திரிகையில் முதல் குற்றவாளி) எல்.கே. அத்வானியை பி.ஜே.பி. அறிவித்திருக்கிறது.
இப்படிப்பட்ட ஒரு நாட்டில் வன்முறைகள் நாளும் வெடிக்காதா? மக்கள் மத்தியிலே வன்முறை என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற மனோபாவம் செழித்து வளராதா?
அந்நிய வன்முறைச் சக்திகளை எந்த எல்லைக்கும் சென்று அழிக்கவேண்டியது என்பதிலே இன்னொரு கருத்துக்கு இடம் இல்லை. அதேநேரத்தில், நம் நாட்டுக்குள்ளேயே வன்முறையை இயக்கமாக நடத்தும் சக்திகளை வேரும் வேரடி மண்ணோடும் அழிக்கவேண்டுமா - வேண்டாமா?
தாஜ் உள்ளிட்ட 5 நட்சத்திர தங்கும் விடுதிகளில் பெரும் வன்முறை வெடித்தது என்பதற்காக மாலேகான் பற்றிய நடவடிக்கைகளை ஓரம் கட்டி வைத்துவிடக் கூடாது.
மாலேகான் குண்டுவெடிப்புச் சதிகாரர்களைக் கைது செய்ததிலும், புலன் விசாரணையிலும் மிக முக்கியமான பங்கு வகித்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கார்கர் (தீவிரவாத எதிர்ப்புப் படையின் தலைவர்) மும்பைக் குண்டுவெடிப்பில் பலியானார் என்பது அதிர்ச்சிக்குரியதாகும். இந்த நிலையில், மாலேகான் வழக்கு விசாரணையும், குற்றப் பத்திரிகை தாக்கலும் பலகீனமாக ஆகிவிடக்கூடாது!
---------------------"விடுதலை" தலையங்கம் 2-12-2008
Labels:
பார்ப்பனியம்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment