
நமது திமுக ஆட்சியில் 13 அமைச்சர்களில் 13 பேரும் தமிழர்கள் என்பதோடு 18 அய்க்கோர்ட் ஜட்ஜுகளில் 14 பேர்கள் தமிழர்கள் (பார்ப்பனரல்லாதவர்கள்). டில்லி ஆதிக்கமில்லாத அதிகாரங்களில் 100-க்கு 50-க்கு மேல் 75 வரை பார்ப்பனரல்லாதவர் இருக்கும்படி ஆகிவிட்டது.
அரசியலில் ஆளும் கட்சியிலும், எதிர்க்கட்சியிலும் தலைவர்கள், பணியாளர்கள் யாவருமே 100-க்கு 100-ம் தமிழர்களே யாவார்கள். இதை அனுசரித்தே மற்ற நிலைகளும் மாற்றமடைந்து வருகின்றன. இவ்வளவுக்கும் காரணம் திமுக ஆட்சி என்றே சொல்லுவேன். காங்கிரஸ் மத்திய ஆட்சி ஆதிக்கத்திலும் பச்சையாகப் பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிளவும், வடநாடு - தென்னாடு என்கின்ற உணர்ச்சியும் காணப்படும் தன்மை உருவாகிவிட்டது. இவையெல்லாம் நம் தமிழர் சமுதாய விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் நல்ல வெற்றி வாய்ப்பு என்றே சொல்லத் தக்கவையாகும். மற்றும் 90-வது பிறந்த நாள் விழா’ மலரின் `எனது நிலை’ கட்டுரையில் நான் குறிப்பிட்ட சலிப்புகள் இப்போது எனக்கு குறைவென்றே சொல்லலாம். உதாரணமாக, 90-வது `பிறந்த நாள் விழா’ மலரில் `எனது நிலை’ என்ற கட்டுரை முடிவில் `துறவி’ யாய்ப் போய் விடலாமா? என்று எழுதி இருக்கின்றேன்.
இன்று எனக்கு அப்படி இல்லை. அந்த எழுத்தைப் பார்த்து உயர்திரு காமராஜரும், அறிஞர் அண்ணாவும் எனக்குத் தெரிவித்தது போல், அதாவது ``இப்போது உங்களுக்கு எதற்காகக் கவலை? நீங்கள் நினைத்த காரியம் எது நடவாமல் இருக்கிறது? கவலையை விட்டு விடுங்கள்’’ என்று சொன்ன சொற்கள் எனக்கு உற்சாகத்தைக் கொடுக் கின்றன. இன்று எனக்குள்ள குறையெல்லாம் தமிழர் சமுதாயத்தில் `வீபீஷணப் பரம்பரை’’ வளர்ந்து வருவதுதான். இது தமிழரில் சில `ஜாதிக்கு’ (வகுப்புக்கு) இயற்கை என்றாலும் இது வருந்தத்தக்கதேயாகும். ஆகவே எனது 90-வது வயதைவிட 91+வது வயது திருப்தியையும் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது என்பது எனது கருத்து. விபீஷணர்கள் திருந்துவார்களாக. திமுக ஆட்சி இனியும் குறைந்தது 10 ஆண்டுகளுக்காவது இருக்கும்படி மக்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். எனக்கு இதற்கு மேல் கருத்தும் ஓடவில்லை எழுதவும் முடியவில்லை.
--------------------- தந்தை பெரியார் பிறந்த நாள் `விடுதலை மலர்’ 17.9.1969
0 comments:
Post a Comment