Search This Blog

15.5.08

"சகலகலா" சாமியார்

கொஞ்சகால இடைவெளிக்குப் பிறகு சர்வ தகிடுதத்தங்களும் கொண்ட ஒரு ‘சகலகலா’ சாமியார் அடையாளம் காணப்பட்டிருக்கிறார், கேரளாவில்! வெளிநாடுகளிலும் போய் இவர் தன் கைவரிசையைக் காட்டியிருப்பதால் சர்வதேச போலீஸாரால் தேடப்படும் பெருமை(?) இவருக்குக் கிடைத்திருக்கிறது.

அந்த ஜெகஜ்ஜால சாமியாரின் பெயர் அமிர்த சைதன்ய சுவாமி. கொச்சியின் புறநகர்ப் பகுதியிலுள்ள ஓர் ஆசிரமத்தில் பக்திப் பழமாக இருந்து ஆன்மிக அன்பர்களுக்கு சேவை செய்து வந்திருக்கிறார் இவர். அவரது ஆன்மிக வேடத்திற்கு ஆப்பாக அமைந்தது, சர்வதேச போலீஸார் தங்கள் இணையதளத்தில் வெளியிட்ட ஒரு தகவல்தான். கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் மாதவன் என்பவரை ஆயுதக் கடத்தல் தொடர்பாக தாங்கள் தேடுவதாகக் குறிப்பிட்டு, அதில் தாடி வைத்த நபர் ஒருவரின் புகைப்படத்தையும் இணைத்திருந்தனர். அந்தப் புகைப்படம் அச்சு அசலாக, அமிர்த சைதன்ய சுவாமிகளைப் போலவே இருந்துவிட... ஆரம்பித்தது வில்லங்கம்!

‘கேரள சப்தம்’ என்கிற அரசியல் புலனாய்வு வார இதழ் இந்த விவகாரத்தைத் தோண்டியெடுத்து, அந்த ‘ஆயுதக் கடத்தல்’ சந்தோஷ் மாதவன்தான் இந்த அமிர்த சைதன்ய சுவாமிகள் என்பதுபோல் செய்தி வெளியிட்டது. உருவ ஒற்றுமை மட்டுமல்லாது, சைதன்ய சுவாமிகளின் இயற்பெயரும்கூட சந்தோஷ் மாதவன்தான். இதைத் தொடர்ந்து ஒட்டுமொத்த கேரள மீடியாக்களும் சைதன்ய சுவாமிகளின் நதி மூலம், ரிஷிமூலத்தையெல்லாம் தோண்ட ஆரம்பித்தன.

இந்த விவகாரம் தொடங்கியதுமே தலைமறைவாகிவிட்ட சைதன்ய சுவாமிகள், கடந்த எட்டாம் தேதி ‘ஏசியாநெட்’ டெலிவிஷனில் மட்டும் தோன்றி, ‘ஆயுதக் கடத்தலுக்கும் எனக்கும் சம்பந்தம் கிடையாது. சர்வதேச போலீஸார் வெளியிட்டிருக்கும் தகவலில் உள்ள பிறந்த தேதியும், போட்டோவும் என்னுடையது அல்ல’ எனத் திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனாலும் நாளுக்குநாள் இந்த விவகாரம் மீடியாக்கள் மூலம் பரபரப்பாகிக்கொண்டிருக்க... போலீஸ§ம் வேறு வழியின்றி கொச்சியிலுள்ள சாமியாரின் ஆசிரமத்தில் கடந்த ஒன்பதாம் தேதி சோதனை நடத்தியது. அதில் சாமியாரை குற்றம்சாட்டுவதுபோல் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை.

இதனால் சோர்ந்து போயிருந்த போலீஸாரை ஒரு ஃபேக்ஸ் தகவல் மறுபடியும் நிமிர வைத்தது. அந்த ஃபேக்ஸை அனுப்பியவர் துபாயில் வசிக்கும் செராஃபில் எட்வின் என்கிற பெண்மணி. இவரது பூர்வீகம், திருவனந்தபுரம். தன்னிடம் சைதன்ய சுவாமிகள் நாற்பத்தைந்து லட்ச ரூபாய் வாங்கிவிட்டு மோசடி செய்ததாக இவர் சொன்ன புகாரின் அடிப்படையில், திரும்பவும் சைதன்ய சுவாமியின் ஆடம்பர கெஸ்ட் ஹவுஸில் சோதனை போட்டது போலீஸ். கடந்த பத்தாம் தேதி நள்ளிரவில் நடைபெற்ற இந்தச் சோதனையில்தான் சுவாமியின் கெஸ்ட் ஹவுஸிலிருந்து புலித்தோல், சந்தனக்கட்டை, கஞ்சா, ஆபாச சி.டி.க்கள் ஆகியன பிடிபட்டுள்ளன.

சுவாமியின் கெஸ்ட் ஹவுஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு நிகராக சகல வசதிகளுடன் இருந்தது கண்டு, சோதனைக்குப் போன போலீஸாரே பிரமித்துப் போயிருக்கிறார்கள். சோதனையின்போது போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்தும் காக்கி யூனிஃபார்ம் ஒன்றும் உள்ளே கிடைத்திருக்கிறது. இதன்மூலம் சாமியாருக்கு நெருங்கிய அந்த போலீஸ் அதிகாரி யார்? என்கிற கேள்வியும் எழுந்திருக்கிறது. கேரள இடதுசாரி அரசு இந்த சாமியார் விவகாரத்தை படு சீரியஸாகவே எடுத்துக்கொண்டு விசாரணையை முடுக்கி விட்டுள்ளது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சாமியாரின் சொகுசு கெஸ்ட் ஹவுஸில் செக்ஸ் சல்லாபங்களும், போதை, கேளிக்கைகளும் மிகத் தாராளமாகவே நடைபெற்று வந்திருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. ஆனாலும் இதுபற்றி இதுவரை யாரும் புகார்கள் கொடுக்கவில்லை. அனுமதியின்றி புலித்தோல், சந்தனக்கட்டை ஆகியவற்றை வைத்திருந்ததற்காக கேரள வனத்துறை மூலம் சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செராஃபில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பணமோசடி வழக்கும் பதிவாகியிருக்கிறது. இதைத் தொடர்ந்து சாமியார் எஸ்கேப்பாகிவிட... போலீஸ§ம் அவரது சகல தொடர்புகளையும் தோண்டத் தொடங்கியிருக்கிறது.

ஆயுதக் கடத்தலில் தேடப்படும் சந்தோஷ் மாதவன் இவர்தானா? என்பது இன்னும் உறுதியாகாவிட்டாலும், பொருளாதார ரீதியாக சைதன்ய சுவாமிகள் அடைந்திருக்கும் விறுவிறு வளர்ச்சியும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் நிலவும் மர்மங்களும் சாமியாரை சந்தேகக்கண் கொண்டு பார்க்க வைக்கின்றன. சாமியாரின் பூர்வீகம், இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனை. அங்கு இவரது தந்தை மாதவன், அரசு உணவுக்கிடங்கு ஒன்றில் சாதாரண சுமை தூக்கும் தொழிலாளிதான். உள்ளூரில் உள்ள ஒரு கல்லூரியில் மேல்நிலைக்கல்வி முடித்துவிட்டு, சிவகிரி தர்மசங்கத்தில் சிறிது காலம் படித்திருக்கிறார். பிறகு ஜோதிடத்தில் நாட்டம் ஏற்பட்டு அதைக் கற்றிருக்கிறார்.

ஜோதிடக்கலையையும், பூஜைகள் நடத்தும் திறனையும் வைத்துக்கொண்டு கொச்சிக்கு வந்தவர், இங்கு ‘சாந்திதீரம்’ என்ற பெயரில் ஆசிரமம் தொடங்கினார். கூடவே ரியல் எஸ்டேட் பிஸினஸ§ம் செய்தாராம். 2002_ம் ஆண்டு ஒரு பெண்ணை மணந்து, குறுகிய காலத்திலேயே விவாகரத்தும் செய்திருக்கிறார். அடிக்கடி அரபு நாடுகளுக்குப் போய்வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். அதன்பிறகுதான் செல்வச்செழிப்பிலும் மிதக்கத் தொடங்கிவிட்டாராம்.

இவருக்கு நெருங்கிய நண்பராகச் சொல்லப்படும் செய்ஃபுதின் அலிக்கண்ணு என்பவரது விஸ்வரூப பொருளாதார வளர்ச்சியும் போலீஸாரை திகைக்க வைத்துள்ளது. கிளிமானூரில் உள்ள அவரது வீட்டில் ஏராளமான சொத்து ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதேபோல் சைதன்யசுவாமிகளுக்கும் கேரளா முழுக்க பல மாவட்டங்களில் குறைந்தபட்சம் பதினைந்து கோடி ரூபாய் அளவுக்காவது சொத்துக்கள் இருக்கும் என போலீஸார் மதிப்பிட்டுள்ளனர்.

ஆயுதக் கடத்தல் மற்றும் சர்வதேச தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்தால்தான் குறுகிய காலத்தில் இவ்வளவு சொத்து குவித்திருக்க வாய்ப்பு உண்டு என்கிற சந்தேகம் போலீஸ் வட்டாரத்தில் அழுத்தமாகவே எழுந்துள்ளது. தவிர, கடந்த ஆண்டு நவம்பர் 26_ம் தேதி கட்டப்பனையில் மிக பிரமாண்டமாக விழா நடத்தி சொப்னா என்ற பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்திருக்கிறார் சாமியார். அந்தப் பெண்ணுடனும் சுமார் இருபது நாட்கள்தான் இல்லறம் நடத்தினாராம். அதற்குள் தனது சொந்த ஊரில் சொப்னாவை விட்டுவிட்டு, இவர் துபாய்க்குப் பறந்திருக்கிறார். இப்போது மீண்டும் கொச்சிக்குத் திரும்பியிருந்த நிலையில்தான் போலீஸ§க்கு பயந்து தலைமறைவாக வேண்டியதாகிவிட்டது.

‘2004_ம் ஆண்டு மும்பையில் சந்தோஷ் மாதவன் என்னும் ஆயுதக் கடத்தல்காரன் ஒருவனை சி.பி.ஐ. கைது செய்திருக்கிறது. அவன்தான் தற்போது சர்வதேச போலீஸ் தேடும் ஆயுதக் கடத்தல்காரன். அவனது நெற்றியில் பெரிய மச்சம் உண்டு. எனவே அது இந்த சாமியார் அல்ல’ என்று காவல்துறை வட்டாரத்திலேயே சிலர் கூறுகிறார்கள். வேறு சிலரோ, ‘துபாயில் வசிக்கும் செராஃபில் அங்கு கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே சர்வதேச போலீஸ் சைதன்ய சுவாமிகளை தனது இணையதளத்தில் குற்றவாளியாக வெளியிட்டிருக்கக்கூடும். ஆயுதக் கடத்தல் என்கிற புகார் இணையதளத்தில் தவறுதலாக இடம்பெற்றிருக்கலாம்’ என்கிறார்கள். எது எப்படி இருப்பினும், மடியில் கனம் இல்லாவிட்டால் சாமியார் ஓடி ஒளிய வேண்டியதில்லையே?!

-----------நன்றி: "குமுதம் ரிப்போர்ட்டர்" 18-5-2008

0 comments: