
பேய் இருக்கிறது என்பது எவ்வளவு பொய் சங்கதியோ அவ்வளவு பொய் சங்கதி கடவுள் இருக்கிறது என்பதும் தேவர்கள் என்பதும் பெரும் பொய்யேயாகும். மேல் உலகம் என்பதும் மகா மகா பொய்யேயாகும்.
ஏனெனில் இந்த உலகத்தில் இருந்து ஆகாய மார்க்கத்தில் சுமார் மூன்று கோடி மைல் தூரத்தில் சூரியன் இருக்கிறது. அதுவரை தூரதிருஷ்டிக் கண்ணாடியால் ஆகாயம் பார்க்கப்பட்டாகி விட்டது. எங்கேயும் உஷ்ணம் தவிர எந்த உலகமும் தென்படவில்லை. இது வான சாஸ்திரிகள் கண்டுபிடித்த செய்தி. இராட்சதர் என்பதும் சுத்தப் பொய். ஏனென்றால் இராட்சதர், அசுரர் என்போர் எல்லாம் இந்த பூமியில் இருந்ததாகத்தான் சொல்லப்படுகிறது. இதற்கு பாட்டி கதைகளை, புராணங்களைத் தவிர எந்த ஆதாரமும் இன்னமும் இல்லை. இவர்கள் கடவுள்களுக்கு எதிரிகளுக்கு இருந்து கொல்லப்பட்டார்கள் என்றால் `கடவுளுக்கு' எதிரி இருக்க முடியுமா?
ஜோசியம் என்பதும் பெரும் பொய், வெறும் ஏமாற்றுதலே ஆகும்.இராகு, காலம், குளிகை, எமகண்டம், நல்ல நேரம், கெட்ட நேரம் எல்லாம் பொய், பட்சி சாஸ்திரமும் பச்சைப் பொய்; நட்சத்திரப்பலன், கிரகப் பலன், வாரப் பலன், மாதப்பலன், வருடப்பலன் என்பவை யாவும் பொய். பல்லி விஷம் பலன், கனவு காணும் பலன், தும்மல் பலன் எல்லாம் பொய், கழுதை கத்துதல், ஆந்தை அலறுதல், காக்கை கரைதல், நாய் ஊளையிடுதல் ஆகியவற்றிற்கு பலன் என்பதெல்லாம் பொய். மந்திரம், மந்திரத்தால் அற்புதம் செய்தல் முதலிய எல்லாம் சுத்த பித்தலாட்டம் பொய். ``தெரியாத புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆக வேண்டும்'' என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பலனே இவ்வளவு பொய்களையும் மனிதன் நம்ப வேண்டியவனாகி விட்டான். நம்பினதன் பலனாக பலன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் அவற்றிற்குத் தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளுகிறான். பஞ்சேந்திரியங்களுக்குத் தட்டுப்படாத விஷயம், பொருள், நடப்பு எதுவானாலும் அது பொய். இதுதான் பகுத்தறிவுவாதியின் கொள்கை.
-------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் - "விடுதலை", 9.2.1970
0 comments:
Post a Comment