Search This Blog

22.3.08

பார்ப்பனீயத்தை நீக்கிய கல்யாணங்கள்

சேலம் அடுத்த தாதம்பட்டி என்னும் கிராமத்தில் பல்ஜிய நாயுடு வகுப்பைச் சேர்ந்த வீடுகளில் மூன்று கல்யாணங்கள் வெகு விமரிசையாய் நடந்தன. அம்மூன்று கல்யாணங்களுக்கும் பார்ப்பன புரோகிதர்கள் இல்லாமல் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே முகூர்த்தம் செய்விக்கப்பட்டது. இவைகளில் ஒரு கல்யாண வீட்டுக்காரருக்கு மாத்திரம் ஆரம்பத்தில் நாம் ஏன் இதை முதன் முதலாகச் செய்ய வேண்டும், மற்றும் யாராவது செய்து பிறகு நாம் செய்யலாம் என்கிற எண்ணம் மனதுக்குள்ளாக இருந்திருக்கிறது. அதற்கேற்றாப் போல் அவர் ஒரு பார்ப்பனப் புரோகிதரையும் தருவித்து விட்டார். ஆனால் மற்ற இரண்டு கல்யாண வீட்டுக்காரரும் தைரியமாய்ச் செய்ய ஆரம்பித்த பிறகும் ஈரோட்டிலிருந்து கல்யாணத்திற்கு வந்திருந்த சிறீமான்களான கோவிந்த நாயக்கர், வெ.முத்து நாயக்கர், ரா. துரைசாமி நாயக்கர், வெ. எல்ல நாயக்கர், எ.எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர், ஈ.வெ.ராமசாமி நாயக்கர் முதலிய இன்னும் பல கனவான்கள் சொன்ன பிறகும் தான் தருவித்த பார்ப்பனப் புரோகிதருக்கு ஏதோ பணம் கொடுத்தனுப்பிவிட்டு அவரும் பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே தனது வீட்டு முகூர்த்தத்தையும் நடத்திக் கொண்டார்.

ஆகவே, இந்த மூன்று கல்யாணங்களும் எவ்வித சடங்கும் பார்ப்பன சம்பந்தமில்லாமலே இனிது நிறைவேறிற்று. அதோடு அங்கு வந்திருந்த மற்ற பந்து மித்திரர்களும் தங்கள் வீட்டு சுபா சுப காரியங் களையும் இனி பார்ப்பனரல்லாதாரைக் கொண்டே செய்து கொள்வது என்னும் அபிப்பிராயத்தையும் தெரிவித்துக் கொண்டார்கள்.

இந்த வகுப்பார் பார்ப்பனீயத்தை நீக்கி கல்யாணம் செய்த கெளரவம் சேலம் தாதம்பட்டிக்கே கிடைத்ததோடு மற்றவர்களுக்கும் வழி காட்டின பெருமையும் அவர்களுக்கு கிடைத்ததைப் பற்றி நாம் மிகுதியும் மகிழ்ச்சி அடைகிறோம். அதோடு இதற்கு முக்கியமாய் நின்று வேலை செய்த சிறீமான்கள் எல்ல நாயக்கர், கே. ராமசாமி நாயக்கர் முதலிய கனவான்களையும் பாராட்டுகிறோம்

----------- தந்தைபெரியார்- "குடிஅரசு" 21.11.1926

0 comments: