Search This Blog

4.3.08

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள் யார்?

{14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசிய போது பல அறிவார்ந்த வினாக்களை எழுப்பியுள்ளார். இச்சொற்பொழிவைப் படிப்பவர்கள் தாராளமாக சிந்தித்து விருப்பு வெறுப்பின்றி ஒரு முடிவுக்கு வர வேண்டுகிறேன்.}


உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான் ! .

வருடந்தோறும் கல்யாணம் ? தேவடியாள்கள் ?

கடவுள் இருக்கட்டும் - நாங்கள் வேண்டாமென்றுகூறவில்லை! எங்கும் வியாபித்திருக்கும் அந்தக்கடவுளுக்கேன் சொந்தமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்?

அவருக்கேன் 10 - ஏக்கர், 20 - ஏக்கர்,விஸ்தீரணத்திற்கு மாடமாளிகையும் கூடகோபுரங்களும்? அவருக்கேன் ஒரு கோடி இரண்டுகோடி மதிப்பு பெறும்படியான நகைகள்?

அவருக்கேன்பல லட்சரூபாய் பெறுமான தங்கக் குல்லாய்கள் -வைரக் குல்லாய்கள்?அவருக்கேன் நித்தியம் ஆறுவேளை பூஜை?
பாடுபட்டும் பல பாட்டாளி மக்கள் பசியுடன் இருக்க அவருக்கேன் 10 - படி, 20 - படி சோற்றுருண்டைகள்? அவருக்கேன் பாலாபிஷேகம் - தேனாபிஷேகம்?

அவருக்கேன் வருடந்தோறும் கல்யாணம்? அவருக்கேன் தேவடியாள்கள்?
அவருக்கேன் தேரும் - திருவிழாவும்?

சர்வசக்தி படைத்த அவருக்கேன் ஏராளமான பொருள் செலவு செய்து நாம் இதையெல்லாம் சம்பாதித்துக் கொடுக்க வேண்டும்?
இவை அவருக்குத் தேவையில்லை என்றால் நாஸ்திகமா?
அவர் பேரைச் சொல்லி நம்மை ஏமாற்றும் பார்ப்பான் தன்மையை ஏன் இன்னும் நீ ஒழிக்காமல் இருக்கிறாய்?
நீ கொடுப்பதால் இத்தனையும் நடக்கிறதா?

அல்லது நீ கெடாமல் இருந்தால் கூட இத்தனையும் நடக்குமா?
நீ கொடாமல் இருந்தால் ஒரு நாள் வைத்திருப்பானா இந்தக் கல்லுப்பொம்மைக் கடவுளை - இந்தப் பேராசை பார்ப்பான்?

உனக்கு முன்னாலன்றோ கடப்பாரை எடுத்துக் கொண்டு போவான் - கோயிலை இடித்து உள்ளதையும் அபகரித்துக் கொள்ள?
இதை அறியாமல் பைத்தியக்காரத்தனமாக ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?
கடவுள் பேரால் ஏனப்பா ஒரு கூட்டத்தை சோம்பேறிகளாக்கி வருகிறாய் - என்று கேட்பதா பாவம்? கடவுள் சொத்தால் யாருக்கு லாபம்?

கடவுளின் சொத்துக்களைக் கொண்டு எத்தனைத் தொழிற்சாலைகள் ஆராய்ச்சிப் பண்ணைகள் நடத்தலாம்!

இத்தனை சொத்துக்களையும் கடவுளுக்கு அழுதவன் நீயும், உன் பாட்டனும் பூட்டனும் தானே? ஒரு பார்ப்பானாவது ஒரு அடி நிலம் விட்டிருப்பானா சாமிக்கென்று? அப்படிச் செய்ய அவனென்ன உன்னைப் போல் பைத்தியக்காரனா?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் கூட வீதியிலுள்ள சாமான் வீட்டுக்குள் போகுமே ஒழிய, ஒரு ஓட்டை உடைகல் சட்டிப்பானைக்கூட வீதிக்கு வராதே – தெரியுமா உனக்கு அது?

எந்தப் பார்ப்பானாவது தன் வீட்டு எண்ணெயைக் கொண்டு கடவுளுக்கு தீபம் வைக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது திருவண்ணாமலை தீபத்திற்கு நெய் டின்கள், எண்ணெய் டின்கள் அனுப்பியிருக்கிறானா?
எந்தப் பார்ப்பானாவது சூத்திரனுக்குச் சமாராதனை செய்திருக்கிறானா?
ஏன் ஒரு குண்டு விறகாவது உங்கள் சமாராதனைக்காக அவன் அனுப்பியிருப்பானா?

ஏன் அப்பா நீ மட்டும் இப்படி அழ வேண்டும்? அவன் மட்டும் ஏன் டிக்கெட் கொடுத்து வர வேண்டும் என்றால் இதையா நாஸ்திகம் என்பது?
ஒரே அடியாக மோஷத்தில் இடம் பிடித்துக் கொள்ள வேண்டுமென்று நீங்கள் ஆசைப்பட்டால் அதற்கு எங்களைத்தானா தூற்ற வேண்டும்?

ஒழுக்கமுள்ளவனுக்குத்தான் மோஷத்தில் இடம் இருக்குமென்றால் நீங்கள் நினைக்கிறீர்களா? ஒரு பார்ப்பானுக்காவது மோஷத்தில் இடம் கிடைக்குமென்று?

கடவுளுக்குத்தான் நேர்மை நீதி இருக்குமானால் அவர் பேரால் நம்மை வஞ்சித்துப் பிழைக்கும் பார்ப்பான் ஒருவரையாவது மோஷத்திற்கு அனுப்பி வைப்பாரா அவர்?

அப்படிப்பட்ட பார்ப்பானா உனக்கு மோஷத்திற்கு டிக்கட் கொடுப்பது? அதற்காகவா நீ அவன் காலைக் கழுவி தண்ணீர் குடிப்பது?
அறிவிருக்கும் போது நீங்கள் சிந்திக்க வேண்டாமா இவற்றையெல்லாம்?

நம்பத்தகாத காட்டுமிராண்டிக் காலத்திய சங்கதிகளைக் கொண்டு வந்து புகுத்தி மதம் கடவுள் என்ற பேரால் நம்மை ஏமாற்றி வாழும் பார்ப்பானை நம்பியா இந்த 1947-லும் நீ சூத்திரனாயிருப்பது?

இந்த இருபதாவது நூற்றாண்டிலா நீ உன் கடவுளைத் தாசி வீட்டிற்கு அழைத்துச் செல்லுவது?

உன் மனிதத்தன்மை ஒப்புக் கொள்கிறதா இதை?ஆண் மகன் தான் தானும் கடவுளைப் போல் இரண்டு பெண்டாட்டி வைத்துக் கொள்ளலாம். கடவுளைப் போல் தாசி வீட்டிற்குச் சென்று வரலாம் என்று நினைத்துக் கடவுளைக் கும்பிடுவானானால் என்னருமைத் தாய்மார்களே நீங்களுமா அந்தக் கடவுளுக்குத் தேங்காய், பழம் கொண்டு சென்று படைப்பது?

உன்னைப் போல் என் புருஷனும் தினம் தேவடியாள் வீட்டுக்குச் செல்லட்டும் என்று துதிக்கவா நீங்கள் கோயிலுக்குச் செல்லுவது அல்லது என் புருஷனைப் போல் எனக்கும் இன்னும் இரண்டாரு மாப்பிள்ளைமாரைத் தேடிக் கொடு என்று கேட்கவா சொல்லுகிறீர்கள்?

இல்லையே! பின்னையேன் போக வேண்டும்?
உங்களுக்கு அறிவிருந்தால் மனிதத் தன்மையில் விருப்பமிருந்தால் ஒழுக்கத்தில் நாட்டமிருந்தால் தாய்மார்களே! நீங்கள் ஆளுக்கொரு கம்பு எடுத்துச் செல்ல வேண்டும் - கோயிலுக்குப் போகும்போது!
சாமி உனக்கேன் இரண்டு பொண்டாட்டி? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்!

இரண்டு பொண்டாட்டி இருந்தும் சாமி உனக்கேன் தேவடியாள்?

உன்னைப் பார்த்துத்தானே என் புருஷனும் தேவடியாள் வீட்டுக்குச் சென்று விடுகிறான்! என்று கூறி உடைத்து தூளாகும்படி அடிக்க வேண்டும் - அந்தக் கம்பால்.என் சகோதரியை ஏன் சாமி பொட்டிக் கட்டிக் கொள்ள வேண்டுமென்கிறாய்? என்று கேட்டு அடிக்க வேண்டும் - அந்தச் சாமியை!


அய்யரோ, தர்மகர்த்தாவோ அதைத் தடுக்க வந்தால் நியாயம் கூறையா?
அந்தச் சாமிக்கேன் வருடத்திற்கொரு கல்யாணம் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று?

அதுவும் போதாமல் தேவடியாள் வேறு ஏன்? என்று அவர்களையும் அடித்துக் கேளுங்கள். உங்களைக் கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றால் அங்கும் கேளுங்கள்.

கம்பைக் காட்டி நாங்கள் ஏனையா சட்டப்படி சாஸ்திரப்படி கடவுள் வாக்குப்படி சூத்திரச்சிகள் தாசிகள்?

இதை ஆதரிக்கும் இவர்களையும் இதை அனுமதிக்கும் கடவுளையும் இந்த இரும்புத்தடி கம்பால் அடித்தாலென்ன பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்!

இப்படிச் செய்தாலன்றோ பாபம் வந்துவிடும்? என்று ஓங்கிக் கேளுங்கள்! இப்படிச் செய்தாலன்றோ உங்கள் இழிவு நீங்கும்!இதை விட்டு உங்களைப் பழிக்கும் கடவுளர்களுக்கு நீங்கள் ஒய்யார நடை நடந்து தேங்காய், பழம் எடுத்துச் செல்கிறீர்கள் என்றால் உங்கள் இழிவு நீங்குவது தான் எப்போது?

உங்கள் தாசிப்பட்டம் போவது தான் எப்போது? சூத்திரனுக்கும், சூத்திரச்சிக்கும் கடவுளுண்டா என்பது தெரியுமா உங்களுக்கு?

மனுநீதிப்படி சூத்திரர்களுக்குக் கடவுள்கள் இந்தப் பார்ப்பனர்கள் தான் இவர்கள் தான் சூத்திரர்களுக்குப் பூதேவர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?


கடவுளை நோக்கி தவம் செய்தான் என்பதற்காக சூத்திரனான சம்பூகன் ராமன் என்ற கடவுளால் கொல்லப்பட்டான் - மனுதர்மப்படி என்பது சாஸ்திரம். இதை நீங்கள் படித்திருக்கிறீர்களா?

நீங்களெல்லோரும் பார்ப்பானுக்கு அடிமைகள்! உங்கள் சொத்துக்களையோ, உங்கள் மனைவி மக்களையோ அனுபவிக்க அவனுக்குச் சகல உரிமையுண்டு என்று கூறும் சாஸ்திரங்கள் இன்றும் இருந்து வருகின்றன என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நாங்கள் இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டிக் கண்டித்து வருவதால் ஏதோ தந்திரமாக சில சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றனவே அல்லாது நாங்களே இல்லாவிட்டால் சூத்திரத் தாய்மார் ஒவ்வொருத்தரும் பொட்டுக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருக்குமே இந்நாட்டில்!

உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் நான் கூறினால் சமீப காலம் வரைக்கும் நம் திராவிட நாட்டின் ஒரு பாகத்தில் பக்குவமடைந்த பெண் ஒவ்வொருத்தியும் முதலில் ஒரு ஜாதி பிராமணனால் தான் ருசி பார்க்கப்பட வேண்டும் என்ற முறை இருந்து வந்ததை நீங்கள் அறிவீர்களா?
இதை நான் கூறவில்லை.தோழர் அம்பேத்கர் அவர்கள்,

காந்தியாரும் காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் சாதித்ததென்ன? என்ற தமது புத்தகத்தில் 205 –ம் பக்கத்தில் மேல்நாட்டு ஆசிரியர்களின் மேற்கோள்ளுடனும் மலபார் கெஜட்டின் ஆதாரத்துடனும் இப்படிப்பட்ட ஒரு பழக்கம் - சம்பந்தமுறை திருமணம் செய்து கொண்ட மக்களிடையே இருந்து வந்ததாக விளக்கிக் கூறுகிறார்! வாங்கிப் பாருங்கள் அதில் ஊர் பேர் இருக்கிறது.

இப்படிப்பட்ட அக்கிரம அந்தணர்களுக்கா நீங்கள் அடிபணிவது?ஆகவே உங்கள் இழிவு நீங்க வேண்டுமாயின் ஒன்று இப்படிப்பட்ட இந்து மதம் ஒழிய வேண்டும் அல்லது அதை விட்டு நீங்கள் வெளியேற வேண்டும்!

நீங்கள் வெளியேறும் பட்சத்தில் கும்பிடவோ, கொடுக்கவோ மொட்டையடித்துக் கொண்டு காணிக்கை செலுத்தவோ, காவடி தூக்கிக் கொண்டு குரங்காட்டம் குதிக்கவோ அக்கிரகாரத்தில் ஆள் கிடையாது.

உண்மையாகவே கேட்கிறேன், ஒரு பார்ப்பானாவது பார்ப்பன அம்மையாவது திருப்பதியில் மொட்டை அடித்துக் கொள்ளும்போதோ அல்லது திருத்தணிக்குக் காவடி தூக்கும் போதோ அல்லது கோவிந்தா கோவிந்தாவென்று கூறிக் கொண்டு தெருவில் உருளும் போதோ நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

நீங்கள் கொடுப்பது ஒழிந்தால் கோயில்கள் தாமாக ஒழியும். அவை ஒழிந்தால் ஆரியத்தின் மோச வேலைகளும் அன்றே ஒழிந்துவிடும்.

ஒருவேளை ஆற்று மண்ணையாவது எண்ணி விடலாம். நமது சாமிகளை எண்ண முடியாது போல் இருக்கிறதே! எத்தனைச் சாமிகள்!

நூல் கேட்கும் சாமிகள், துணி கேட்கும் சாமிகள், மயிர் கேட்கும் சாமிகள், வெடி கேட்கும் சாமிகள், தேங்காய் கேட்கும் சாமிகள், காசு கேட்கும் சாமிகள், கற்பூரங் கேட்கும் சாமிகள்!இன்னும் என்னன்னமோ கேட்கும் சாமிகள். எத்தனை எத்தனை கோடியோ இன்னும் நம் நாட்டில் இருக்கின்றனவே!

அத்தனைக்கும் படைத்துத்தானே நாம் வர வர குட்டிச் சுவராகி வருகின்றோம்.

இதைக் கூறுவதா நாஸ்திகம்? நாஸ்திகம் என்றால் அர்த்தம் தெரியுமா உனக்கு? நாஸ்திகன் என்றால் அவனை தலைசிறந்த அறிவாளி என்று உலகம் போற்றும் என்பதை நீ அறிவாயா?

மேல் நாட்டார் தம் குழந்தைகளுக்கு ஒரு நாஸ்திகன் பெயரை இடுவதில் அளவற்ற பெருமையும், மகிழ்ச்சியும் கொள்வார்கள். உருவச் சிலை வைப்பார்கள் என்பது உனக்குத் தெரியுமா?

ஒருவன் கடவுள் இல்லை என்று கூறுவானானால் அவனே கடவுள் தன்மை பெற்றிருக்க வேண்டும். அவனுக்கு உலகில் நடக்கும் சகல காரியங்களுக்கும் காரணங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பதை நீ அறிந்திருக்கிறாயா?கடவுள் இல்லை என்று ஒருவன் கூறுவானானால் கடவுள் தன்மை என்பதை தெரிந்த அவ்வளவு அறிவு பெற்று இருக்கிறான் என்று தான் அர்த்தம். கடவுள் இல்லையென்றால் யாருக்குக் கடவுள் இல்லை?

உண்மை ஞானிக்குத்தான் கடவுள் இல்லை! வேதாந்தி உண்மையின் முடிவு கண்டவனுக்குத்தான் அப்படிப்பட்ட ஒரு ஞானியை யாரும் வெறுக்க மாட்டார்கள். அவனும் யாரையும் வெறுக்க மாட்டான். அவனை யாரேனும் வெறுப்பார்களானால் அவர்களை அறிவிலிகள், முட்டாள்கள் என்று தான் உலகம் கூறும். அப்படியிருக்க என்னைப் போன்ற சாதாரண ஆட்கள் கடவுள் இல்லை என்று கூறும்படியான அவ்வளவு பெரிய அறிஞர்கள் அல்ல!

சாக்ரடீஸ், இங்கர்சால், பிராட்லா, ஸ்பென்சர் போன்றவர்கள் தான் அதற்குத் தகுதி வாய்ந்தவர்கள். நாங்களென்ன கடவுள் இல்லை என்று கூறி தப்பட்டையா அடித்துக் கொண்டு வருகிறோம்?

கடவுள் பேரைச் சொல்லி யாரும் யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று தானே கூறி வருகிறோம்? அப்படி ஏதாவது கடவுளைப்பற்றிப் பேச நேர்ந்தால் எது கடவுள்? அது எப்படி இருக்கும்? எதைக் கொண்டு அதைக் கடவுளென்று தீர்மானிப்பது என்று தானே நாங்கள் கேட்கிறோம்?

சரியான சமாதானம் கூறத் தெரியவில்லையானால் தெரியவில்லை என்று சொல்லி விட்டுப் போயேன். எங்களை ஏன் நாஸ்திகர்கள் என்று கூறி மக்களிடம் எங்கள் மீது துவேஷத்தை உண்டாக்குகிறாய்?

ஒன்றரை முழம் குழவிக்கல் பொம்மையைக் கடவுளென்று கூறி அதற்கு பாலாபிஷேகம் செய்து, பட்டாடையும் உடுத்தி பல நகைகளும் போடுகிறாய்! அம்மனை அய்யர் தொடுகிறாரே என்ற கவலை இல்லையே உனக்கு!
மறுநாள் காலையில் போய்ப் பார்த்தால் அம்மணமாயிருக்கிறதே அந்த அம்மன் வந்தத் திருடன் நகையைக் கழட்டிக் கொண்டு போனதல்லாமல் சேலையையும் அவிழ்த்துப் போய்விட்டானே! உன் சாமியால் அதைத் தடுக்க முடியவில்லையே!


உண்மையில் சாமி அந்தக் கல்லில் இருக்குமானால் கிட்டப் போவானா அந்தத் திருடன்? போனாலும் தொடுவான் அந்தச் சாமியை? நினைத்தவுடன் நெஞ்சு புகைந்து போகாதா அவனுக்கு?ஏன் இப்படி என்று சிந்தித்துப் பார்த்தாயா நீ?

மற்ற உலக மக்களுக்கெல்லாம் முஸ்லீம், கிறிஸ்துவர்களுக்கெல்லாம் கடவுள் இல்லாமலா போயிற்று?

அவர்களெல்லாம் இப்படி ஒரு முழ பொம்மையை வைத்துக் கொண்டு கும்பாபிஷேகம், பூஜை, கல்யாணம், கருமாதி, உற்சவம் முதலியன செய்து கொண்டா கூத்தடித்தார்கள்?உன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தாயா? திராவிடனுக்கு எங்காவது குழவிக்கல் பொம்மை சாமி இருந்தது என்று எழுதப்பட்டிருக்கிறதா அதில்?

அப்படித்தான் உனக்கு ஒரு சாமி வேண்டுமென்றால் அது உன்னைப் போலல்லவா இருக்க வேண்டும்?

உன்னைத் தொட்டாலும் உன் நிழல்பட்டாலும் தான் செத்துப் போவதாகக் கூறுவதா உனக்குச் சாமி? வெட்கமில்லையா உனக்கு?கோயில் கட்டுவதும் நீ! கும்பாபிஷேகம் செய்வதற்குப் பொருள் கொடுப்பதும் நீ! சாமியின் பூஜைக்கும் சாப்பாட்டிற்கும் படியளப்பதும் நீ!

அந்தச் சாமிக்கு தன்னைப் போல் உச்சிக்குடுமி வைத்து விட்டு தன்னைப் போல் பூணூலும் போட்டு விட்டு நீ கொடுத்த துணியை தன்னைப் போல் பஞ்சகச்சம் வைத்து அதற்கு உடுத்திவிட்டு அதன் மீது மாட்டு மூத்திரத்தைத் தெளித்துவிட்டு சாமிக்கு உயிர் வந்துடுத்து இனி எட்டி நில் - தொடாதே! என்று உன்னிடம் கூறிவிடுகிறானே பார்ப்பான்!

நீ அவனையும் தொடக்கூடாது. சாமியையும் தொடக்கூடாது. நீ அவன் சாப்பிடும் போதும் பார்க்கக்கூடாது! ஆனால் இரண்டு பேருக்கும் நீ தானே படியளக்க வேண்டும்?

இது யோக்கியமா ? ஏமாற்றுதல் அல்லவா என்று கேட்டால் இதற்கா நாஸ்திகம் என்று பெயர் கொடுப்பது? மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

புத்தியிருக்கா உனக்கு ?இங்கு உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய் எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய். அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய்.

கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ ?

மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ? இன்றாவது தெரிந்து கொள்.

ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள். அதுதான் நுரைவரக் காரணம் என்றும் அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.


ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா, தப்பா என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது ?

இதற்கா நரகத்திற்குப் போக வேண்டும் ?
உண்மையான கடவுள் இருந்தால் அவர் பேரைச் சொல்லி மக்களை வஞ்சித்து வரும் இந்தப் பார்ப்பனர்களையன்றோ நரகத்திற்கு அனுப்பிவிட்டு நமக்கு மகிழ்ச்சி செய்தி அனுப்பி வைப்பார்.

இதைக் கேட்பதா நாஸ்திகம்? இந்த அக்கிரமங்களைக் கண்டு இரத்தம் துடிக்க வேண்டாமா உங்களுக்கு ?

எங்களை நாஸ்திகர்களென்று கூறும் இவர்கள் மட்டுமென்ன மகாபக்தர்கள்? எவனாவது கடவுள் காப்பாற்றித் தருவார் என்று நினைத்துத் தன்னுடைய பணத்தை மேஜை மீது வைத்து விட்டுப் போய்விடுவானா ?

அப்படித்தான் கடவுளை காவல் வைத்துவிட்டுப் போனாலும் அந்தப் பணம் அப்படியே இருக்குமா?

கடவுள் காவலிருக்கும் போது பணம் வைக்க இரும்புப் பெட்டி ஏன்? அதற்குப் பூட்டேன்? அவரையே ஜெயில் கைதி மாதிரி பூட்டி வைப்பதேன்?

அப்படி பூட்டு போட்டுங்கூட அவரைப் பெயர்த்து விட்டு அடியில் இருப்பதை அடித்துக் கொண்டு போவானேன்? கோயில் நகைகள் கொள்ளைப் போவானேன்?
அன்பர்களே!

கோயிலும் கடவுள்களும் மதங்களும் பார்ப்பனர் தம் வாழ்வுக்காக வகுத்துக் கொண்ட வழிகள். அவை இருக்க வேண்டிய அவசியமில்லை !

அப்படி இருக்க வேண்டுமென்றாலும் அறிவுக்கேற்ற ஒரு நாணயமான, பாராபட்சமற்ற கடவுளை வணங்குங்கள். உங்களை இழிவுபடுத்தாத முட்டாள்களாக்கி வைக்காத ஒரு மதத்தை தழுவி நடவுங்கள் என்று தான் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

(14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 23-12-1947 "குடிஅரசு" இதழில் வெளியானதில் ஒரு பகுதி)(பெரியார் களஞ்சியம் 2-ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :202)

-------நன்றி:சிந்திக்க உண்மைகள்

0 comments: