Search This Blog

22.6.11

மதம் பாதி-அரசியல் பாதி-மடங்களில் டி.வி.க்கள்-ராம்தேவ் மருந்தில் மாட்டுக்கொழுப்பு

நெருக்கடி காலத்தில்தான் மதச்சார்பின்மை வார்த்தையே அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டது

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் விளக்கம்

அரசியல் சட்டத்தில் நெருக்கடி காலத்திற்கு முன்பு மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லை. அதன் பிறகுதான் அந்த வார்த்தை சேர்க்கப்பட்டது என்ற செய்தியை திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறினார். ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா-அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 12.6.2011 அன்று சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரை வருமாறு:


ஊழல் - லஞ்சம் ஒழிக்கப்பட வேண்டியதுதான்


நம்முடைய நாட்டில் ஊழல், லஞ்சம் இவைகளை எல்லாம் ஒழிக்கவேண்டும் என்று சொல்லுவதிருக்கின்றதே இதிலே யாருக்கும் இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.

அதனால் வருவாய் பெறுகிறவர்கள் கூட, அதனால் லாபம் அடைகிறவர்கள் கூட, ஊழலி னாலோ அல்லது லஞ்சத்தினாலோ லாபம் அடையக்கூடியவர்கள் கூட, வெளிப்படையாக வந்த அதனைத் தீர்க்க வேண்டும். அது நல்ல முறைதானே என்று யாரும் சொல்வதில்லை.

காரணம் என்ன? ஊழல் மீது வெறுப்பு இருக்கிறது என்பது அல்ல. அதில் விருப்பம் இருந்தால் கூட அதை சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று நினைத்து ஊழல் ஒழிய வேண்டியது தான். லஞ்சம் ஒழிய வேண்டியது தான் என்று பொத்தாம் பொதுவிலே பேசுவதற்குத் தயாராக இருப்பார்கள். ஆனால் அவரே கூட லஞ்சம் கொடுப்பதற்கு அவர் தயங்குவாரா என்று கேட்டால் சுலபமாகத் தயங்க மாட்டார்.


சகப்பயணியிடம் ரயிலில் விவாதம்!


நீண்ட காலத்திற்கு முன் ஒரு நண்பரிடம் இதுபற்றி பேசினேன். அந்த நண்பர் ஒரு வியாபாரி. நான் ரயிலில் பயணம் பண்ணிக் கொண்டிருந்தேன். அவரும் நான் பயணம் செய்த ரயில் பெட்டியிலேயே வந்தார்.

எங்கள் இருவருக்குமிடையே லஞ்ச, ஊழலைப் பற்றி விவாதம் ஏற்பட்டது. இது இப்பொழுதைய செய்தி அல்ல. நான் சொல்லுவது 25 ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம். மோசமான அளவுக்கு லஞ்சம், கையூட்டுகள் எல்லாம் நடக்கிறதே என்று பேச்சில் வரும்பொழுது அவர் சொன்னார்.

அவர் நமது நாட்டைச் சேர்ந்தவர் அல்லர். அவர் வேறு நாட்டைச் சார்ந்தவர். ஏதோ எதிர்பாராத விதமாக ஒரு சக பயணியாக பயணம் செய்து கொண்டு வருகின்றார்.

எங்களுடைய உரையாடல் ஆங்கிலத்தில்தான் நடந்தது. என்னங்க லஞ்சத்தை தவறு என்று ஏன் நீங்கள் சொல்லுகிறீர்கள்? நான் பெரிய அளவுக்கு மூலதனம் போட்டு லாபம் அடைகிறேன்.

எனக்கு மூலதனத்தைப் பெருக்க வசதியாக இருப்பது இந்த லஞ்சம். அந்த லாபத்தில் ஒரு பகுதியை அவனுக்கு லஞ்சமாக கொடுக்கின்றேன். அதனால் சீக்கிரமாக வேலை வாங்குகிறேன்.

நீங்கள் தத்துவார்த்தம் எல்லாம் பேசுகிறீர்கள். முறைப்படி சென்றால் சீக்கிரம் உத்தரவு கிடைப் பதில்லை.


உத்தரவு என் வீடு தேடி வருகிறதே!


நான் வியாபாரிங்க. நான் ஒன்றை செய்யச் சொல்லி கொடுத்தால் அந்த உத்தரவை என்வீட்டிற்கே வந்து கொடுத்து விடுகின்றான்.

நான் பெரிய வியாபாரத்தில் இருக்கின்றேன். அதிகாரிகள் படித்தவர்கள் என்றெல்லாம் சொல் லுகின்றீர்கள். நீங்கள் போய் அவர்களைப் பார்க்கலாம். எனக்கு அப்படி இல்லிங்க.

பத்தாயிரம் ரூபாயை நான் அவரிடம் கொடுத்தால் அவர் என்னை அலுவலகத்திற்கு வரச்சொல்ல மாட்டார். என் வீட்டிற்கே வந்து ஆர்டரை கொடுத்து விட்டுப் போய்விடுவார் என்று சொன்னார்.


வியாபாரத்தில் வசதியாக இருக்கிறதே!


அது எனக்கு வியாபாரத்தில் எவ்வளவு நேரம் மிச்சம்? அலைச்சல் இல்லை. அது எவ்வளவு வசதியாக எனக்கு இருக்கிறது? ஆகவே லஞ்சம் கொடுக்கின்ற முறை எனக்கு வசதியாக இருக்கிற துங்களே என்று சொன்னார். இது மாதிரி வெளிப் படையாகப் பேசக் கூடியவர்கள் அவர்கள்கூட, தனிப்பட்ட உரையாடல்களில் பேசுவார்களே தவிர, அவர்கள் பொது அரங்கத்தில் இந்த மாதிரி சொல்ல முடியாது.

அந்த மாதிரி ஊழல், லஞ்சம் இந்த மாதிரி எல்லாம் பேசுவதிருக்கிறது பாருங்கள். அது நவீன மயமான ஒரு ஃபேஷன் மாதிரி இருக்கிறது. உள்ளபடியே அதை ஒழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பாருங்கள். அவர்கள் அந்தரங்க சுத்தியாக வாழ்க்கையில் அதை கடைப்பிடிக் கிறார்கள்.

சில நேரங்களில் சிலர் சொல்லுவார்கள். ரொம்ப ஆபாசமாக இருக்கிறதுங்க. ரொம்ப மோசமாக இருக்கிறதுங்க என்று சொல்லுவான்.

ஏனென்றால் இவன் மனதிற்குள் ஒன்றை நினைத்துக் கொண்டு வெளியே ஒன்றை சொல்வான். எப்படி இரட்டை மனப்பான்மையோடு! அது போல சிலர் லஞ்சம் கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள். இவன் ஊழல் செய்வதற்குத் தயாராக இருக்கின்றான்.


தனக்கு இமேஜ் வரும் என்று கருதி...


ஆனால் வெளியில் ஊழலை ரொம்ப அளவுக்கு கண்டிக்கிற மாதிரி காட்டினால் அது மிகப் பெரிய வரவேற்பு கொடுக்கும். தனக்கு ஒரு பெரிய உருவத்தை, மரியாதையை உருவாக்கும். தனக்கு ஒரு இமேஜ் அதாவது ஒரு சிறப்பைத் தரும் என்கிற அந்த எண்ணத்தில் தான் இதை ஒரு ஆயுதமாகப் பலபேர் கையாளுகிறார்கள்.

சமீபத்தில் ஒரு ஃபேஷன் என்னவென்று சொன்னால் ஊழலை ஒழிப்போம். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வருவோம் என்பது நமது நாட்டில் பல விதமான பாபாக்கள் இருக்கின்றனர்.


பலவித பாபாக்கள்


சிவசங்கர் பாபா, சத்யசாய் பாபாவிலிருந்து பாபா ராம் தேவ் வரை பல பாபாக்கள் இருக்கிறார்கள். பாபா பிளாக் ஷிப் என்று படித்திருக்கிறோம். அதுமாதிரி இருக்கக்கூடிய கறுப்பு ஆடுகள் ஏராளமாக வந்திருக்கிறது.

சில பேர் சொல்லுகிறார்கள். பாபா இமய மலையில் இருக்கிறார். இரண்டாயிரம் வருடமாக இருக்கிறார் என்று அப்படி சொன்னவரே இமயமலைக்குப் போகவில்லை. அவர் வேறு எங்கேயோ சென்றிருக்கிறார் (பலத்த கைதட்டல். சிரிப்பு). பாபா என்று சொன்னால் பெரிய சாமியார் மாதிரி நினைக்கிறார்கள்.


காங்கிரசுக்குள்ளே-இந்துத்துவா!


இந்த நாட்டில் அரசியலை அரசியலாகப் பாருங்கள். அரசியலில் கொண்டு போய் காவியை, மதத்தை நுழைத்தது மிகப் பெரிய தவறு. இதை முதன்முதலில் எங்கிருந்து ஆரம்பித்தது என்று சொன்னால் திலகர் காலத்திலிருந்து ஆரம்பித்தது.

திலகர் சுயராஜ்ஜியம் தனது பிறப்புரிமை என்று சொன்னார். பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து பாடுபட்டார் என்று மட்டும் தான் சொல்லு வார்கள்.

ஆனால் இந்து மத உணர்வை, ஆரிய மத உணர்வை அதாவது கீதா ரகசியம் என்று சொல்லக்கூடிய கீதையை எடுத்துச் சொல்லி வன்முறையை ஞாபகப்படுத்தி, அதை நியாயப் படுத்தி இந்துத்துவா என்ற கருத்தையும் உள்ளே கொண்டு போய் அதற்காக வீர சவர்க்கார் போன்ற வர்களை உள்ளே விட்டு திலகர் போன்றவர்கள் இந்து மகா சபை தனியாக இருந்தால் அது சரியாக வராது, காங்கிரசிற்குள்ளேயே இந்துத்துவா தத்து வத்தை கொண்டு வர வேண்டும் என்பதற்காக மதத்தையும், அரசியலையும் போட்டுக் குழப் பினார்கள்.

திலகருக்கு செல்வாக்கு இருந்த கால கட்டத்தில் தான் காந்தியார் தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்திய அரசியலுக்கு வருகிறார்.


காந்தியாருக்கும் திலகருக்குமே போட்டி


காந்தியாருக்கும் திலகருக்குமே உள்ளுக்குள் ஒரு அரசியல் போட்டி. இதை பெரியார் கண்ணா டியைப் போட்டு பார்த்தால்தான் தெரியும். பழைய குடிஅரசு பதிப்பாய்வுகள் வருகிறது. பழைய குடிஅரசு நூல்களை நீங்கள் வாங்கிப் பார்க்க வேண்டும்.

பழைய வரலாற்றைப் பார்த்தால் உங்களுக்குத் தெரியும். அவர்களுடைய காலத்தில் இருந்துதான் போட்டி வந்தது. அப்பொழுது காந்தியார் வந்து பார்த்தார். இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு செல்வாக்கு வரவேண்டும் என்றால் வெறும் சுயராஜ்ஜியம் மட்டும் எதிர்க்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதாது. இதிலே மதத்தையும் கலந்தால்தான் மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும்.


மதம் பாதி-அரசியல் பாதி


பாதி மதம், பாதி அரசியல் என்று நினைத்தார். எந்த இந்துத்துவாவை திலகர் வெளிப்படையாக நினைத்தாரோ - திலகருக்கு மாற்று வழியாக காந்தியார் இன்னொரு மாற்று வழியைக் கண்டார். மதத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பி, அவரே கடைசியில் மதச்சார்பின்மை இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு வந்தார்.

மதத்தினால் எவ்வளவு பெரிய கேடு என்று நினைக்கக் கூடிய அளவிற்கு வந்தார். 1948இல் அந்த காலகட்டத்தில் அவரை விட்டு வைக்கவில்லை. ஆரியம், இந்து மதம், இந்துத்துவா, கோட்சே காந்தியை விட்டு வைக்கவில்லை இது பழைய வரலாறு. ஆகவே எதற்காக இதை எடுத்துச் சொல்கிறோம் என்றால் மதத்தையும், அரசிய லையும் போட்டுக் குழப்பினால் வன்முறைதான் வரும்.


மதவாதம் இருக்கக் கூடாது


அரசியல் வேறு, மதவாதம் இருக்கக் கூடாது, இங்கிலாந்து நாட்டு அரசியலைப் பார்த்தீர் களேயானால் முதலில் அரசியலும், மதமும் ஒன்றாகத் தான் இருந்தது.


ராஜாவை நிர்ணயிப்பவர் இங்கிலாந்து பிஷப்


இங்கிலாந்து பிஷப்தான் ராஜாவை நிர்ணயம் பண்ணிக்கொண்டிருந்தார். இங்கிலாந்து ஜனநா யகத்தைப் பார்த்து தான் நாம் வந்திருக்கிறோம். ஆனால் அதற்குப் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து செக்குலரிசம் என்று சொன்னால் அரசியல் வேறு மதம் வேறு. செக்குலரிசம் என்று சொன்னால் மதச்சார்பின்மை.


மதம் - தனிப்பட்ட எண்ணம்


மதம் என்பது ஆண்டவனைத் தேடுவது அல்லது இன்னொரு உலகத்தை ஆராய்ச்சி பண்ணுவது ஒரு மனிதனைப் பற்றிய சிந்தனை அவனுடைய தனிப்பட்ட எண்ணங்கள். இது மதம். அரசியல் என்பது சமுதாய வாழ்க்கை கூட்டு வாழ்க்கை.

கூட்டு வாழ்க்கையை பூட்டு வாழ்க்கையாக ஆக்குவதற்குத்தான் மதம் பயன்படுமே தவிர வேறு இல்லை.

செக்குலரிசம் - மதச் சார்பின்மை என்கிற கருத்து 19 ஆம் நூற்றாண்டிலே மிக ஆழமாக வடபுலத்திலே மட்டுமல்ல அதையும் தாண்டி அய்ரோப்பிய நாடுகளிலே வளர்ந்தது.

அய்ரோப்பிய நாடுகளில் வளர்ந்த தேசியத்தை அடிப்படையாக வைத்துத் தான் மீண்டும் அதையே காப்பி அடித்துத்தான் இந்துத்துவா என்பது இந்து ராஷ்டிரா இந்து தேசியத்தை அமைக்க வேண்டும் என்று சொன்னவர் யார்?


இத்தாலிய பாசீசமுறை


வெளிநாட்டில் போய் படித்து அங்கேயிருந்த அய்ரோப்பிய நாடுகள் குறிப்பாக இத்தாலிய பாசிச முறை இவைகளை எல்லாம் அங்கு பார்த்துத் திரும்பிய வீரசவர்க்கார் அதைத்தான் பதிவு செய்து வந்தார்.

அவர் தான் இந்துத்துவா என்ற வார்த்தையையே தயார் பண்ணினார். அதற்கு மூலக் கரு எங்கிருந்து வந்தது? திலகருடைய மத கருத்துகள்தான் காரணம்.


பிளேக் நோய் வந்த நேரத்தில்...


முழுமையாக வெள்ளைக்காரர்களே எதிர்க்க வேண்டும் என்றால் இந்த உணர்ச்சியை, மத உணர்ச்சியை, கொண்டு வரவேண்டும் என்று நினைத்தார். Ganapathy Festival பாம்பேயில் சாதாரணமாக விநாயக சதுர்த்தி விழாவை மிகப்பெரிய விழாவாக ஆக்கி, அதை உண்டாக்கினார்கள்.

இந்தியாவில் பிளேக் நோய் வந்த நேரத்தில் கூட, பிளேக் நோயை ஒழிக்க எலிகளை சாகடிக்க வேண்டும் என்று வெள்ளைக்காரர்கள் உத்தர விட்டார்கள். பிளேக் நோய் எலிகள் மூலம் தான் பரவுகிறது என்று தெரிந்தது.

இந்த உணர்வை எப்படித் திருப்பினார்கள் என்றால் எலி என்பது சாதாரணம் அல்ல. அது கணபதிக்கு வாகனம். அதை இவர்கள் செய்கிறார்கள் என்றால் இந்து மதத்தையே ஒழிக்க வெள்ளைக்காரன் பார்க்கிறான். அதன் மூலமாக கிறிஸ்தவ மதத்தை ஆதிக்கம் செலுத்தவேண்டும் என்று பிரிட்டிஷ்காரர்கள் நினைக்கிறார்கள்.

நம்முடைய நாட்டில் வெள்ளைக்காரன் காலூன்ற இவைகளை செய்கிறான் என்று சொல்லி பிளேக் நோய் ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட வெள்ளைக்கார கலெக்டரை கொல்லும்படியான அளவுக்கு மதவெறித்தனத்தை உருவாக்கினான்.

நமது கடவுளை அசிங்கப்படுத்த இப்படி செய்கிறார்கள் என்று சொன்னான். இவை அத்துணையும் நான் சொல்வது-புத்தகங்களில் ஆதாரங்கள் இருக்கின்றன. வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.


மதச்சார்பின்மை எப்படி வந்தது?


கர்சன் டூ நேரு என்று எழுதப்பட்டிருக்கின்ற புத்தகம். அதில் இந்த வரலாறு அத்துணையும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

நடுவில் மதச்சார்பின்மை நமக்கு வந்தாகி விட்டது. நம்முடைய அரசியல் சட்டத்தில் எங்கே மதத்தைக் கொண்டு வந்து போட்டுவிடுவார்களோ என்கிற பயம் இந்திராகாந்தி காலத்தில், நெருக்கடி காலத்திலேயே அவருக்கு வந்தது.

அரசமைப்புச் சட்டத்தின் பூர்வ பீடிகையில் அதன் முகப்பில் இதற்கு முன்பு செக்குலர் என்கிற வார்த்தை இல்லை. 1976 இல் நெருக்கடி காலம் வந்த நேரத்தில்தான் அது மறுபடியும் திருத்தப்பட்டது.

பலபேருடைய கவனத்திற்கு அது வராத நேரத்திலேயே அப்பொழுது திருத்தப்பட்டு, மறுபடியும் எங்கே மதவாத அரசியல் உள்ளே புகுந்து விடுமோ! எங்கே தனக்கு எதிராகப் பயன்படுத்துவார்களோ என்கிற எண்ணம் அந்த காலகட்டத்திலே வந்ததாலும், எதிர்ப்பு இருக்காது அந்த நேரத்திலே என்று உணர்ந்த காரணத்தினால் தான் அரசியல் சட்டத்தில் செக்குலர் சோசிலிஸ்ட் என்ற இரண்டு வார்த்தையை அதிலே புதிதாக சேர்த்தார்கள்.

-------------"விடுதலை”-(தொடரும்) 17-6-2011

ஹசாரே, ராம்தேவ்களை காங். ஒருபக்கம் கண்டித்து இன்னொரு பக்கம் மத்திய அமைச்சர்கள்-இவர்களை வரவேற்பதா?

காங்கிரஸ் கட்சிக்கு ஏன் இந்த பன்முக வேலை? சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர்தலைவர் கேள்வி

ஊழல் ஒழிப்பில் ஈடுபடும் அன்னா ஹசாரே, ராம்தேவ்களை காங்கிரஸில் இருப்பவர் ஒரு பக்கம் கண்டிப்பதும், இன்னொரு பக்கம் முக்கிய மத்திய அமைச்சர்கள் வரவேற்பது என்றால் என்ன இது இரட்டை நிலை? காங்கிரஸ் இதுமாதிரி தவறுகளுக்கு மேல் தவறு செய்வதா?


மக்கள் என்ன நினைப்பார்கள் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார். ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா-அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன? என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 12.6.2011 அன்று சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

உங்களுக்கு தெரியும். அரசியல் சட்டத்தில் எடுத்த எடுப்பிலேயே பீடிகை என்று வருகிற பொழுது அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை சென்ற முறை நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்திலும் நான் சொல்லியிருக்கிறேன். அதேபோல மற்ற பல மேடைகளிலும் சொல்லி யிருக்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தில் We the people of India என்று துவங்குவதில் இருக்கும்.


நமது அரசு எப்படிப்பட்ட அரசு?


நம்முடைய அரசாங்கம் எப்படிப்பட்ட அரசாங்கமாக இருக்கவேண்டும் என்றால் முழு இறையாண்மை கொண்ட, சமதர்மத்தை உள்ள டக்கிய மதச்சார்பின்மை உடைய, ஜனநாயக குடியரசு. இத்துணை தன்மை இந்த அரசுக்கு இருக்கவேண்டும்.

இன்றைக்கு பாபாக்கள் வந்து சட்டத்தை நிர்ணயம் செய்வதா? இது மிகப்பெரிய அளவுக்கு தவறான ஒரு நிலை.

திடீரென்று லஞ்சம் ஊழல் பெருகியிருக்கிறது. அதை யாரும் மறுக்கவில்லை. அதை ஒழிக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தே கிடையாது.

இன்னும் கேட்டால் கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டும் என்பது இருக்கிறது பாருங்கள். அதிலே யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது.


வெள்ளைப் பணமே கிடைப்பதில்லை- இதில் கறுப்புப்பணம் எங்கே?


கறுப்புப் பணத் திமிங்கலங்களாக இருக்கிற வர்கள்தான் அதை நியாயப்படுத்த முடியுமே தவிர, சாதாரண குடிமக்கள், சாதாரண நடுத்தர மக்கள். அல்லது கீழ் மட்டத்திலே இருக்கக் கூடிய மக்கள் அன்றாடம் காய்ச்சிகள் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு வெள்ளைப் பணமே கிடைப் பதில்லை.

அவர்களுக்கு கறுப்புப் பணம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்களைப் பொறுத்த வரையிலே இன்றைக்கு இந்த பிரச்சினை இவ்வளவு பெரிய அளவுக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் நான் சென்ற கூட்டத்திலேயே தெளிவாகச் சொன்னேன். அந்த கூட்டத்திற்கு வந்த பலர் இங்கே இருக்கிறீர்கள்.


இன்றைய தேர்தல்முறையில் அடியோடு சீர்திருத்தம்


அதன் தொடர்ச்சியாகவே ஒன்றை சொல் லுகின்றேன். இன்றைக்கு இருக்கின்ற தேர்தல் முறையை அடியோடு அதில் சீர்திருத்தம் செய் யாமல், நாட்டில் கறுப்புப் பணத்தையோ, ஊழலையோ ஒழிக்க முடியுமா? என்பதை நாணயத்தோடு எல்லா அரசியல் கட்சிகளும் ஆளுங்கட்சி உள்பட, தேர்தல் ஆணையம் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட எல்லோரும் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றார்கள்.


வேட்பாளர்கள் ஒப்படைத்தார்களா?


இன்ன தேதிக்குள் வேட்பாளர்கள் தங்களுடைய செலவு கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர். 25 லட்ச ரூபாய் செலவு செய்யலாம் என்று ஒரு உச்சவரம்பு இருந்தால் 24 லட்சத்து 99,999 ரூபாய் தான் செலவு செய்யப் பட்டிருக்கிறது என்றுதான் கணக்கு எழுதி கொடுப்பார்களே தவிர, யாராவது உண்மையான கணக்கை எழுதிக்கொடுப்பார்களா? இன்றைக்கு பெட்ரோல் விற்கின்ற விலையில் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.

தொகுதி முழுக்கச் சென்று ஒரு வேட்பாளர் திரும்பி வந்தார் என்றால் என்ன ஆகும்? அவருடைய ஏஜெண்டுகள் வாக்குசாவடிக்கு உட்கார்ந்து பணி புரிவது உணவு, மற்றவர்களை கவனிப்பது அந்த குறிப்பிட்டத் தொகைக்குள் ஒருவர் தேர்தலில் நிற்க முடியுமா என்றால் நடைமுறையில் அது இல்லை.


இரண்டு பேருக்குமே பொய் என்பது தெரியும்


ஆகவே சொல்கிறவருக்கும் பொய் சொல்லு கிறோம் என்பது தெரியும். இதைவாங்கி வைக்கிறார் பாருங்கள் அவருக்கும் பொய் சொல்லுகிறோம் என்பது தெரியும். இது ஒரு தொடர்ச்சியான, வழக்கமான நடைமுறை.

அதாவது இது ஒரு சாதாரணமாக ஆகிவிட்டது. யாருக்கும் பெரியதாக ஒன்றும் தோன்றுவதில்லை. பொய் சொல்லாதே என்று நாம் பள்ளிக்கூடத்தில் சொல்லிக்கொடுக்கிறோம். பொய் சொல்லக் கூடாது என்று சொல்லிக்கொடுக்கின்ற ஆசிரியர் அந்தத் தகுதிக்கு நம்மை ஆளாக்கிக் கொண்டுதான் சொல்லிக்கொடுக்கிறோம் என்பது கிடையாது.

பையன் பள்ளிக்கு வருகிறான். ஏன் இரண்டு நாள்களாக வரவில்லையென்று கேட்டால் பாட்டி செத்துவிட்டது என்று சொல்வான்.


எத்தனை முறைதான் பாட்டி சாவது?


எத்தனை தரம்தான் உங்கள் பாட்டி சாவது? வேறு வாசகத்தையாவது எழுதிக்கொடுக்கக் கூடாதா என்று வேடிக்கையாக ஆசிரியர்கள், மாணவர் களைக் கேட்பதுண்டு.

நமது நாட்டில் ஒழுக்கத்திற்கே விளக்கம் எப்படி வைத்திருக்கிறார்கள் என்றால் அதாவது நான் செய்தால் தவறு இல்லை. அதையே என் கீழ் வேலை செய்கிறவர் செய்தால் தவறு. இதுதான் ஒழுக்கத்திற்கு இருக்கிற டபுள் ஸ்டாண்டர்டு, இரட்டை அளவுகோல்.


ஊழலை ஒழிக்க கடுமையான சட்டம் வரட்டும்


ஆகவே நண்பர்களே மதச்சார்பின்மை என்று வரும்பொழுது ஊழலை ஒழிப்பது என்பது எவ்வளவு கடுமையான சட்டத்தை வேண்டுமானாலும் அரசாங்கம் கொண்டு வரட்டும்.

அதற்கு நாம் எல்லோரும் துணையாக இருப்போம். அதிலே யாருக்கும் மாறுபட்ட எண்ணம் வேண்டாம். ஊழலை செய்தவர்கள் அத்துணை பேரையும் தூக்கிலே போட வேண்டும் என்றால் அத்துணை பேரும் தூக்கில் போடுங்கள் என்று மக்கள் மன்றத்தில் நாம் ஆதரிக்கத் தயாராக இருக்கின்றோம்.

ஆனால் சொல்வது யார்? அதுதான் மிக முக்கியம். இந்தக் கருத்தை சொல்லக்கூடியவர்களுக்கு சொல்லக்கூடிய தகுதியும், அவருடைய நாணயமும், யோக்கியதையும் இருக்கிறதா?


கழுதையை மகாத்மாவாக ஆக்கிக் காட்டுகிறேன்


வெறும் விளம்பரத்தினாலே பெரிய மனிதர்களாக ஆக விரும்புவதா? தந்தை பெரியார் அவர்கள் மனதிலே படுவதை பளிச்சென்று சொல்லக்கூடிய ஒரு தலைவர்.

அய்யா மாதிரி இன்னொரு தலைவரை நாம் பார்க்க முடியாது. ரொம்ப நாட்களுக்கு முன்னாலே அய்யா சொன்னார். ஒரு கோடி ரூபாயை என் கையில் கொடு. கழுதையைகூட மகாத்மாவாக்கி காட்டுகிறேன் விளம்பரத்தினாலே என்று சொன்னார். அப்பொழுது ஒரு கோடி ரூபாய் என்பது 100 கோடிக்கு சமம். இன்றைக்கு ஒரு கோடி என்பது சாதாரணம்.

அது மாதிரி விளம்பரம், விளம்பரம், விளம்பரம் அறிவியல் கருவிகள், மின்னணு கருவிகள் வந்த பிற்பாடு இந்த விளம்பரத்திற்குப் பஞ்சமே இல்லை. ஊடகங்கள், தொலைக்காட்சிகள் எல்லாம் பாபா, பாபா அன்னா ஹசாரேக்களை விளம்பரப்படுத்தினார்கள்.


ஊடகங்கள்தான் விளம்பரப்படுத்தின


ஊடகங்கள்தான் நாடு பூராவும் இவர்களை விளம்பரப்படுத்தின. இவர்களை மக்களுக்கு எப்படித் தெரியும்? சாதாரணமாக எத்தனையோ சாமியார்கள் இருக்கிறார்கள்?

எத்தனையோ யோகா குருக்கள் இருக்கிறார்கள். யோகா சொல்லிக்கொடுப்பவர்கள் எங்கே பார்த்தாலும் இருக்கிறார்கள். யோகாவை விட நல்ல பிசினஸ் வேறு எதுவுமே இப்பொழுது கிடையாது. (கைதட்டல்). மற்றதற்கெல்லாம் முதல் போட வேண்டும். இது முதல் போடாத பிசினஸ். இதற்கு ஒரு மூலதனமும் கிடையாது. மூச்சுப் பயிற்சிதான் மூலதனம்.


யோகா ஒரு மதத்திற்குச் சொந்தமா?


இன்னும் கேட்டால் இந்த யோகாவைப் பற்றி பேசினால் அதை தனியே ஒரு தரம் பேச வேண்டும். திராவிடர்களுடைய புராதன மூச்சுப் பயிற்சிக் கலை அது. மறுபடியும் ஆரியர்கள் அதை பிற்காலத்தில் எடுத்துக்கொண்டு பதஞ்சலி யோகா, என்றெல்லாம் மாற்றித்திருப்பிக் கொடுத்து வழக்கம்போலவே பண்பாட்டுப் படைஎடுப்பு நடந்திருக்கிறது இதைப் பற்றி கூட அண்மையில் ஆகஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் மிகப்பெரிய ஆய்வு நடத்தியிருக்கின்றார்கள்.

யோகாவைப் பயன்படுத்தி காவியைப் போட்டுக்கொள்வது. ஓம்! என்று போடுவது மூச்சுப் பயிற்சிக்கு எந்த மதமாக இருந்தால் என்ன? ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் இந்து மதம், ஆரிய மதம். இந்துத்துவ மதம்திற்கு தொடர்புடையது என்று சொல்லி அதற்கு ஒரு மதத்தொடர்பு பூச்சை பூசிவிட்டார்கள். மதச் சாயத்தைப் பூசிவிட்டார்கள். இதை ஒரு தொழிலாக மாற்றிவிட்டார்கள்.

இன்னும் பல இடங்களில் யோகாவில் செக்ஸ் உணர்ச்சியும் கம்பைன்ட் பண்ணிவிட்டவுடனே மிகப்பெரிய வசதியாகப் போய்விட்டது. சரி அது. அவர்களுடைய சொந்த விருப்பம் அவர்களைப் பொறுத்தது. பாபாராம் தேவ் யோகா குருவாக வந்தவர். வேறு எங்கேயும் போக வேண்டாம். இப்பொழுது லேட்டஸ்ட்டாக வந்த இந்தியா டுடே இதில் ஏகப்பட்ட தகவல்கள் வந்திருக்கிறது. உண்மை இதழில் கூட ராம்தேவின் ரகசியங்கள் என்று எழுதியிருக்கின்றோம்.


பொது ஜன கருத்தை உருவாக்குங்களேன்


பத்திரிகைகள் இதை ஊதி, ஊதிப் பெரிதாக்கின. அதேமாதிரி அன்னா ஹசாரே ஊழலை ஒழிப்பதற்காக லோக் பால் மசோதா கொண்டு வரவேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்தார். சரி கூட்டம் போடுங்கள், சொல்லுங்கள். நாம் வலியுறுத்துகிற மாதிரி நீங்களும் சொல்லுங்கள். பொது ஜனக் கருத்தை உருவாக்குங்கள். அவர் அதை செய்யட்டும்.

ஆனால் எங்களைக் கொண்டு வந்து அந்த கமிட்டியில் போடுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? நான் இங்கு பேசுகிறேன். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் நான் இருந்தால்தான் வசதியாக இருக்கும்.


என்னை கமிட்டியில் போடு!


அதனால் என்னைக்கொண்டு வந்து அந்த கமிட்டியில் போடுங்கள். இல்லை என்றால் நான் சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று சொல்லி மிரட்டினால் என்ன அர்த்தம்? இதற்குப் பெயர்- பார்லிமென்ட்டரி டெமாக்ரசியா? இதற்கு நாடாளுமன்ற ஜனநாயகத்திலே, அரசியல் சட்டத்திலே இடம் உண்டா? காங்கிரஸ் ஆட்சியின் மன்னிக்க முடியாத தவறு
காங்கிரஸ் ஆட்சியிலே யு.பி.ஏ ஆட்சியின் அண்மைக்கால தவறுகளிலே மன்னிக்க முடியாத தவறு ஒன்று உண்டென்றால் ரோட்டிலே போகிற வரைக் கொண்டு வந்து கமிட்டியில் போட்டார் பாருங்கள். இதைவிட வெட்கப் படக்கூடிய, கண்டிக்கக் கூடிய செயல் வேறு ஒன்றுமே கிடையாது (கைதட்டல்).

அரசியல் சட்டம் இயற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்ய வேண்டிய கடமை. கறுப்பு பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும் என்று நினைத்தால் என்ன செய்ய வேண்டும்? அண்மையில் காலமானார் ராஜா செல்லையா. இவர் மிகப்பெரிய பொருளாதாரத்துறை நிபுணர்.


ராஜா செல்லையா கமிட்டி


இதுமாதிரி நாட்டில் ஏராளமான பொருளா தாரத்துறை நிபுணர்கள் இருக்கிறார்கள். அவர்களை கேட்டீர்களேயானால் சொல்வார்களே! கறுப்புப் பணத்தை எப்படி வெளியே கொண்டு வருவது என்று கறுப்புப் பணம் எவ்வளவு இருக்கிறது? அதை எப்படி எல்லாம் வெளியில் கொண்டு வரலாம். இதை எப்படி மக்களுக்குப் பயன்படும்படியாக செய்ய வேண்டும்?

ராஜா செல்லையா கமிட்டியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி செய்யலாம். அதே மாதிரி பெரிய பொருளாதார நிபுணர்களுக்கு நமது நாட்டில் பஞ்சமில்லை. திட்டக்கமிஷன் உறுப் பினர்கள் பெரிய பொருளாதார மேதைகள் இருக்கிறார்கள். பெரிய பொருளாதார வல்லுநர்கள் இருக்கிறார்கள்.

அந்த மேதைகளிடம் நீங்கள் அறிவுரை கேட்கலாம். கருத்துரை கேட்கலாம். அவர்களை மதி உரைஞர்களாக ஏற்கலாம். அதிலே ஒன்றும் சந்தேகம் இல்லை.


நிபந்தனை விதிப்பதா?


ஆனால் ஒரு சட்டத்தை இயற்றுகின்ற நேரத்தில் அந்த சட்டத்தை எப்படிப்போடுவது என்கிற குழுவில் ஆளுங்கட்சியில் அய்ந்து பேர் இருப்போம் ஒரு அய்ந்து பேர் இருங்கள் என்று சொன்னவுடனே அவர் ஒவ்வொரு நிபந்தனையாகப் போடுகின்றார்.

இந்த நிபந்தனைகள் இருக்கவேண்டும். அந்த நிபந்தனைகள் இருக்க வேண்டும் என்று சொல்வதா? இந்த வம்பை விலைக்கு வாங்கியது யார்? இவர்கள்தானே! நாடாளுமன்றத்திற்கு மட்டும்தான் அந்த அதிகாரம் இருக்கிறது. மற்றவர்களுக்கு அந்த அதிகாரம் கிடையாது. நாம் போன முறை கூட்டம் போட்டுச் சொன்னோம், பாருங்கள். அதை காலஞ்சென்ற ஞானோதயமாக இருப்பொழுது சொல்கிறார்கள் என்றால் பரவாயில்லை இப்பொழுதாவது உணர்ந்திருக்கிறார்கள்.


காங்கிரசுக்குப் பன்முகங்களா?


காங்கிரசுக்குப் பன்முகங்கள் இருக்கக்கூடிய சூழல் மாதிரி இருக்கிறது. ஒரு பக்கம் பார்த்தீர்களே யானால், திக் விஜய்சிங் சரியாக கண்டிக்கின்றார். சரியாக அறிக்கை கொடுக்கின்றார். ராம்தேவ் மோசடி பேர்வழி. பெரிய வியாபாரி என்று தெளிவாகச் சொல்லுகின்றார்.

அதே நேரத்தில் மத்திய அமைச்சர்கள் நான்கு பேர் போய், ராம்தேவை விமான நிலையத்தில் வரவேற்கிறார்கள். பாபா ராம் தேவ் என்ன வெளிநாட்டு அதிபரா? பிரணாப் முகர்ஜி மாதிரி முக்கியமான அமைச்சர், கபில்சிபல் இவர்கள் எல்லாம் போய் உட்கார்ந்து கொண்டு பாபா ராம் தேவை வரவேற்கிறார்கள் என்றால் அதற்கு யார் காரணம்?

காங்கிரஸ் இது மாதிரி தவறுகளுக்கு மேல் தவறு செய்து கொண்டிருந்தால் மக்கள் என்ன செய் வார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

ஒரு பக்கம் நாயக்கர் குதிரை. இன்னொரு பக்கம் ராவுத்தர் குதிரையாகக் காட்சி அளிப்பதா? ஆதரிப்பவருக்கு ஒருவர்-கண்டிப்பவருக்கு இன் னொருத்தர் என்றால் என்ன இது?

---"விடுதலை”(தொடரும்) 18-6-2011


காங்கிரஸ் ஆட்சியை இறக்க ஹசாரே, ராம்தேவ்களை இறக்கிவிடுகிறது பா.ஜ.க. மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் எச்சரிக்கை!

அன்னா ஹசாரே, பாபா ராம் தேவ்களை இயக்குவது ஆர்.எஸ்.எஸ். காவிகள் இவர்கள் காவி முகமூடி அணிந்துகொண்டு வருகின்றார்கள். காங்கிரஸ் ஆட்சியை அகற்ற பா.ஜ.க.வினர் திரைமறைவில் முயற்சிக்கின்றனர் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் குற்றம் சாற்றினார். ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா-அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன? என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 12.6.2011 அன்று சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

தவறான போக்கு இது. அன்னா ஹசாரே வருவார் உண்ணாவிரம் இருப்பார். போய்விடுவார். அவர் மீது ஏகப்பட்ட புகார். அவருடைய அமைப்பு கோளாறான அமைப்பு என்ற புகார் இருக்கிறது. மகாராஷ்டிரத்திலே வழக்கு. அவருடைய அறக்கட்டளையைப் பற்றி வழக்கு.

ஹசாரேவுக்கு மத்திய அமைச்சர்கள் வரவேற்பு

இதெல்லாம் இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த குழுவில் கட்டாயமாக இருக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர்கள் சொல்வது. இதை எல்லாம் யார் முடிவு பண்ண வேண்டும்? நாடாளுமன்றத்தில் இருக்கிறவர்கள்தான் மக்கள் பிரதிநிதிகள். எல்லோரையும் கூப்பிட்டு கேட்க முடியாது என்பதற்குத்தானே நாடாளுமன்ற ஜனநாயகம் இருக்கிறது.

சராசரியாக ஒரு உறுப்பினருக்கு 6 லட்சம் மக்கள் என்று வைத்திருப்பதன் நோக்கமே எல்லோரையும் கேட்க முடியாது என்பதுதானே நமது நாட்டிலே. ஆகவே அந்த முறைதான்சரியான முறை.

ஹசாரேவாக இருக்கட்டும்!

அது ஹசாரேவாக இருக்கட்டும் அல்லது ஹெக்டேவாக இருக்கட்டும் அல்லது பல்கி வாலாவினுடைய சொந்தக்காரராக இருக்கட்டும், சாந்தி பூஷன்களாக இருக்கட்டும், கருத்துக்களை சொல்லலாம். அரசாங்கத்திற்கு இந்த மாதிரி சொல்ல வேண்டும் என்கிற கருத்துரிமை உண்டு.

சட்டத்தை இவர்கள் இயற்றலாமா?

ஆனால் சட்டத்தை இயற்றக் கூடிய கமிட்டிக்கு வெளியில் இருப்பவர்களை நியமனம் செய்தார் என்பதிருக்கின்றதே இந்திய அரசியல் சட்டத்தின் எந்த விதியின் கீழ் இப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியுமா? சொல்லவே முடியாது. அங்கேதான் தவறு ஆரம்பித்தது.
ஹசாரேவுக்கு முக்கித்துவம் வந்தவுடனே இன்னொரு பாபா பார்த்தார். ஓகோ ஹசாரே போய்விட்டார். நாமும் அடுத்தபடியாக குடியரசுத் தலைவர் ஆகிவிடலாம் என்று நினைத்தார்.

பி.ஜே.பி. பொறுத்திருக்கத் தயாராக இல்லை

ஆர்.எஸ்.எஸ். அதனுடைய அரசியல் வடிவமான பா.ஜ.க. இன்னும் மூன்று வருடத்திற்குப் பொறுத்திருக்கத் தயாராக இல்லை. காங்கிரஸ் அரசு யு.பி.ஏ. அரசு வந்து இரண்டு வருடம்தான் ஆகிவிட்டது.

2014 வரையிலே பி.ஜே.பி. காத்திருக்க வேண்டும். 2014 வரையில் காத்திருப்பதற்குத் தயாராக இல்லை. அதற்கு குறுக்கு வழியில் பார்த்தார்கள். அதற்கு என்னவென்றால் இந்த ஆட்சியை அனுப்பிவிட வேண்டும். மதவாத ஆட்சியை மறுபடியும் கொண்டு வரவேண்டும்.

இந்துத்துவா காவி முகமூடி

அதற்கு என்ன வழி என்றால், அதற்கு சரியான முகமூடி யார்? என்று கண்டுபிடித்த நேரத்திலே அன்னா ஹசாரேக்களும், இந்த ராம்தேவுக்களும் தான் சரியான முகமூடி என்று, இந்துத்துவ முகமூடி, காவி முகமூடியாகத் தான் இவர்களை கையாண் டிருக்கிறார்கள்.

பாபா ராம்தேவ் எதற்கு வந்தார். அவர் எதற்கு அனுமதி வாங்கியிருக்கிறார். ராம் லீலா மைதானத்திலே, யோகா பயிற்சி நடத்துகிறோம் என்று சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார். யோகா பயிற்சிக்கு அனுமதி வாங்கியவர் நான்கு நாள், எழுநாள் அவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டினார்.

அவர் பஜனை பண்ணினார். பாடினார். எல்லாம் செய்தார். அப்பொழுதுதான் காவல்துறையினர் நினைக்கிறார்கள். ஓகோ இன்னும் கூட்டம் பெரிதாகும் போலியிருக்கிறது என்று அப்புறம் அதுவும் காலம் கடந்து முடிவெடுக்கிறார்கள்.

கூட்டத்திலே காவல்துறை போனால் என்ன நடக்கும்?

இரவோடு இரவாக காவல்துறையினர் போகி றார்கள். அங்கு இருந்தவர்களிடம் இந்த நிகழ்ச்சியை தடை செய்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

சாதாரணமாக அணுகுமுறையிலேயே தெளிவு இருக்க வேண்டும். ஒரு பெரிய கூட்டத்தில் காவல் துறை போனால் அங்கு என்ன நடக்கும்? ஆத்திரமான ஒரு உணர்ச்சி. அங்கு பெண்கள் புரியாத மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

ராம்தேவுக்கு பெண்கள் உடைதான் கை கொடுத்ததாம்!

கூட்டம் கலைய மறுத்தது. காவல்துறையினர் மீது ஆத்திரம் கொண்டு கற்களை கண்டதை வீசினார்கள். காவல்துறையினர் உடனே தடியடி நடத்தினார்கள். பாபா எவ்வளவு பெரிய வீரர் பாருங்கள்.

எல்லாவற்றுக்கும் துணிந்து வந்த அவருக்கு பாவம் பெண்கள் உடைதான் கை கொடுத் திருக்கிறது. கடைசி நேரத்தில் அதில் ஒன்றும் தப்பு இல்லை என்று சொல்லுகின்றான். என்ன இது? ஒரு பெரிய போராட்டம் நடத்துகிறவன். இதுவரையில் பெண்கள் ஆடையைப் போட்டுக்கொண்டு தப் பித்து ஓடினான் என்று எங்காவது காணமுடியுமா? இவர்தான் நாட்டைக் காப்பாற்றப் போகிறவரா? சாகும் வரையில் உண்ணாவிரதம். உயிருக்குத் துணிந்தவன் எதற்குப் பயந்து தப்பி ஓட வேண்டும்?

சொம்பை எடுத்து உள்ளே போடு!

பெரியார் சொன்னதுதான் ஞாபகம் வருகிறது. பெரியார் வேடிக்கையாக ஒன்றைச் சொன்னார். நான் சாமியாராகப் போகிறேன் என்று வேகமாக வெளியே போனவன் அந்த சொம்பு ஏன் வெளியே கிடக்கிறது, அதை எடுத்து உள்ளே போடு என்று சொன்னானாம். (சிரிப்பு).

சாமியாராகப் போகிற ஒருவனுக்கு சொம்பு. வெளியில் கிடந்தால் என்ன? வீட்டிற்குள் கிடந்தால் என்ன? (சிரிப்பு-கைதட்டல்).

அப்படியானால் இவனுக்கு எவ்வளவு கவலை? இவன் பற்றற்ற உலகையே துறந்துவிட்டு போகிறவன் சொம்பு உள்ளே கிடந்தால் என்ன? வெளியில் கிடந்தால் என்ன? இன்றைக்கு உண்ணாவிரதத்தை நிறுத்திவிட்டார் ராம்தேவ். நாம் கூட்டம் போடுவதற்கும் அவர் இன்றைக்கு உண்ணாவிரதம் இருப்பதற்கும் சம்பந்தமில்லை. அதற்கு மேல் ஒன்றும் பண்ண முடியாது.

பழரசத்தையும், தேனையும் சாப்பிட்டவர்

அவர் உண்ணாவிரதத்தை நிறுத்த மூன்று நாள்கள் ஆகியது (சிரிப்பு-கைதட்டல்). பாபா ராம் தேவ் உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டார் என்று அறிவித்திருப்பதுதான் உண்மை. என்றைக்கு அவர் பழ சரத்தையும், தேனையும் அவர் சாப்பிட ஆரம்பித்தாரோ அன்றைக்கே அவர் உண்ணா விரதத்தை முடித்துக்கொண்டார் என்றுதானே அர்த்தம்.

ஆகவே எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள். இதற்கு பத்திரிக்கைக்காரர்கள் பாபாராம்தேவ் உண்ணாவிரதம் இருக்கிறார். உண்ணாவிரதம் இருக்கிறார் என்று பிரச்சாரம்.

காந்தியாரின் உண்ணாவிரதம்

தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தொலை நோக்காளர் காந்தியார் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த காலத்திலேயே அவர் உண்ணாவிரத்தை ஆரம்பித்ததில்லை. (கைதட்டல்). ஆனால் காந்தியா ருக்கே தெரியாத அளவுக்கு உண்ணாவிரதத்தை டெவலப் பண்ணிவிட்டான். (சிரிப்பு-கைதட்டல்).

காந்திக்கே தெரியாது. அய்யோ நாமா இதைக் கண்டுபிடித்தோம் என்று வெட்கப்படக்கூடிய அளவுக்குப் பண்ணிவிட்டான்.

அதுவும் காந்தி ஆரம்பித்த உண்ணாவிரதம் ஒருவகையானது. காந்திக்குப் பிறகு உண்ணாவிரதம் ஆரம்பித்தான் பாருங்கள். அதை ரொம்ப வசதியாக ஆக்கி வைத்துவிட்டான். தொடர் உண்ணாவிரதம்


அதென்ன தொடர் உண்ணாவிரதம்?

தொடர் உண்விரதம் என்றால் என்ன? என்னய்யா இது? ரிலே ரேசா? தொடர் உண்ணா விரதம் என்றால் வேறு ஒன்றும் இல்லை. ஒருவர் உண்ணாவிரதம் இருப்பார். அவர் எழுந்திருந்து போய்விடுவார். அடுத்தவர் வந்து உட்காருவார். அந்த உண்ணாவிரதம் தொடர் உண்ணாவிரதமாம்.

நான் அடிக்கடி கூட்டங்களில் அதற்கு விளக்கமாக சொல்லுவேன். தொடர் உண்ணா விரதம் என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றால்-சாப்பிட்டு வந்தவர் சாப்பிட வேண்டியவரை அனுப்புவதற்குப் பெயர் தொடர் உண்ணாவிரதம் வேறு ஒன்றும் இல்லை.

அவர் ஏற்கெனவே சாப்பிட்டு வந்துவிட்டார். இவர் சாப்பிட வேண்டியவர். இந்த மாதிரி எல்லாம் கொச்சைப்படுத்துகின்றனர். இது எவ்வளவு பெரிய நாடு. எவ்வளவு மக்கள் தொகை கொண்ட நாடு. ஒரு பக்கம் கணினி துறையில் வளர்ச்சி இன்னொரு பக்கம் அலைக் கற்றைத் துறையிலே வளர்ச்சி.

இன்னொரு பக்கம் பிரம்மோஸ் ஏவுகணையில் வளர்ச்சி. இன்னொரு பக்கம் சாமியார்கள் நமது நாட்டு அரசியலை நிர்ணயிக்கிறார்கள்.

சாமியார்கள்தான் அரசியலை நிர்ணயிப்பவர்களா?

சாமியார்கள்தான் அரசியலை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்றார். இந்த ஜனநாயகம் எங்கே போய் கொண்டிருக்கிறது. நம்முடைய பொது ஒழுக்கம் எப்படி சிதைவுக்கு ஆளாகிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதே மாதிரி அன்னா ஹசாரேக்கள். அதே மாதிரி இந்த ராம்தேவ்கள். இவர்களுடைய நோக்கம் என்ன?

பாபா ராம் தேவ், ராம் லீலா மைதானத்தில் எதற்காக உண்ணாவிரதம் என்று ஒன்றை சொல்லியிருக்கின்றார். அதில் சில திட்டங்கள் என்று கொடுத்திருக்கின்றார்.

ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு இந்தியாம்!

அந்த திட்டங்களில் ஒவ்வொன்றாகப் பார்த் தீர்களேயானால், இங்கிலீசை ஒழித்துவிட்டு இந்தியையே நாடு பூராவும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு கோரிக்கை. இதற்கும்,ஊழலுக்கும் என்ன சம்பந்தமுங்க? இங்கிலீஷை ஒழித்துவிட்டு, இந்தி வந்து விட்டால் ஊழல் இல்லாமல் இருக்குமா?

எடுத்துக்கொண்ட விஷயம் ஊழலை தடுக்க வேண்டும். கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வரவேண்டும். அதற்காகத்தானே உண்ணாவிரதம் இதற்கு பின்னால் இருந்து முழுக்க முழுக்க இயக்கக் கூடிய சக்திகள் மதவாத சக்திகள். ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள். பா.ஜ.க போன்ற அமைப் புகள். ஹசாரேவுக்கு, பாபா ராம் தேவுக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்று பா.ஜ.க . எங்கு பார்த்தாலும் பகிரங்கமாக அறிவிக்கிறது.

ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார்

ஹசாரே உண்ணாவிரதம் இருக்கிறார். பலர் அறவழிப்பட்ட ஆதரவைத் தருகிறார்கள். சுஷ்மா சுவராஜ் என்பவர் அவர் பார்ப்பன அம்மையார், உயர் ஜாதிக்காரர். அவர்தான் எதிர்க்கட்சித் தலைவர். எதிர்க்கட்சி தலைவர் என்றால் என்னங்க?

இப்பொழுது இருக்கின்ற பிரதமர், ஆட்சியை விட்டுப் போனார் என்றால் அடுத்தபடியாக இவர் பிரதமராக வரவேண்டிய அளவுக்கு தகுதி இருப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான பொறுப்பாளர். அந்த அம்மா ஒரு வழக்குரைஞர் சாதாரணமாக படிக்காதவர் கூட அல்ல. நன்றாகப் படித்தவர்.

வெள்ளைச் சேலை கட்டிக்கொள்வேன்!

ஏற்கெனவே என்ன சொன்னார் இவர். சோனியா காந்தி பிரதமராக வந்தால் நான் வெள்ளைச் சேலை கட்டிக்கொள்வேன் என்று சொன்னவர்தான் இந்த சுஷ்மா சுவராஜ். இதை யாரும் சுலபமாக மறந்துவிட முடியாது. அவ்வளவு பண்பாடு உள்ளவர். அதே நேரத்திலே ஊடகங்கள் உண்ணாவிரதத்திற்கு ஆதரவு காட்டுகின்றன.

உண்ணாவிரதம் என்றால் ஒரு டோக்கன் ஃபாஸ்ட் பண்ணலாம். அது ஒரு அடையாள உண்ணாவிரதம் இருப்பார்கள். அடையாள வேலை நிறுத்தம் என்றால் என்ன செய்கிறார்கள்? ஒருநாள் அவங்க வேலைக்குப் போக மாட்டார்கள். அவ் வளவு தானே தவிர வேறு என்ன? உண்ணா விரதத்திற்கு ஆதரவு காட்டுகிறவர்கள் என்ன செய்ய வேண்டும்?

அதுவும் காந்தியினுடைய நினைவிடத்தை உண்ணாவிரதம் இருக்க நீங்கள் தேர்ந்தெடுத்தி ருக்கின்றீர்கள். அங்கே போய் உட்கார்ந்திருக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்?

காந்தி நினைவிடத்தில் சுஷ்மா சுவராஜ் டான்ஸ்

ரொம்ப வருத்தத்தோடு, மவுனத்தோடு, நாடு இப்படி ஆகிவிட்டது. நமக்கு ஆட்சி இன்னும் வரவில்லையே என்று தலையை குனிந்து கொண்டு வருத்தத்தோடு உண்ணாவிரதம் இருந்தால் அதில் அர்த்தம் இருக்கிறது.

அதைவிட்டுவிட்டு இப்படி, இப்படி டான்ஸ் ஆடினால் என்ன அர்த்தம்? தயவு செய்து நினைத்துப்பாருங்கள். (சிரிப்பு-கைதட்டல்). எவ்வளவு அசிங்கமாக இருக்கிறது? இப்படி டான்ஸ் ஆடலாமா என்று கேட்டால் அதற்கு இந்தம்மா, அவர் டான்ஸ் ஆடினார். இவர் டான்ஸ் ஆடினார் என்று கோட் பண்ணுகிறார்.

எல்லோரும் டான்ஸ் ஆடினார்கள். என்ன காந்தி சமாதியிலேயே வந்து டான்ஸ் ஆடினார்கள்? அப்படியே அவர்கள். ஆடியிருந்தாலும், அவர்கள் செய்த தப்பை இவர்கள் செய்ய வேண்டும் என்று என்ன வேண்டியிருக்கிறது? எண்ணிப் பார்க்க வேண்டாமா? இந்த நாட்டில் எவ்வளவு பெரிய கூத்து நடந்து கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

----------------"விடுதலை” - தொடரும் 19-6-11

சாதாரணமாக நடந்து போய் சைக்கிளில் மருந்து வியாபாரம் செய்த ராம்தேவ் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்க்கு அதிபதி-எப்படி?

சென்னை பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி

ஒரு சாதாரணமாக நடந்து போய் சைக்கிளில் மருந்து வியாபாரம் செய்த வருக்கு பல்லயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் எப்படி வந்தது என்பதை விளக்குகிறார் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா-அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன? என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 12.6.2011 அன்று சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

அடுத்தபடியாகத் தோழர்களே! இதோ பாருங்கள் நிறைய செய்திருக்கிறது.


ராம்தேவ் ஒரு சாதாரண ஆள்


பாபா ராம்தேவ் என்பவர் யார்? ஒரு சாதாரண ஆள். அரியானாவைச் சார்ந்தவர். இவர் முதலில் நடந்து போனார். அப்புறம் சைக்கிளில் போனார். அப்புறம் ஒரு செகனண்ட் காரில் போனார். அதன் பிறகு பல கோடிகளுக்கு அதிபதியாகிவிட்டார்.

இந்தியா டுடேவில் வந்திருக்கின்ற செய்தி. ஜூன் 4ஆம் தேதி ராம் லீலா மைதானத்தில் குழுமியிருந்த உணர்ச்சிகரமான ஆதரவாளர்களிடம் இடி முழக்கம் செய்தார். ஆனால் அடிகளார் இங்கு வந்து இறங்கியவுடன் டில்லி கலங்கித்தான் போனது.


புஷ்பக விமானம்


அவர் வந்து இறங்கிய சென்னை சைட்டேசன் ஜெட் என்கிற புஷ்பக விமானம் அதில் ஒரு மணிநேரம் பறக்க இரண்டு கோடியே இருபது லட்சம் ரூபாய் தண்டம் அளிக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல அந்த அரங்கத்தினுடைய பரப்பு. அதாவது ராம் லீலா மைதானம். அது இரண்டரை லட்சம் சதுரடி கொண்டது. அவ்வளவு ஏரியாவையும் ஏர் கண்டிஷன் பண்ணிவிட்டார்கள்.


ஆயிரம் ஏக்கரில் டிரஸ்ட்


18 இலிருந்து 25 கோடி ரூபாய்க்குமேல் இதற்கு மட்டும் செலவு. பாபா ராம் தேவ் பெயரில் வங்கிக்கணக்கு இருக்கிறதோ, இல்லையோ அவருக்கு ஏராளமான மதிப்பு இருக்கிறது. பல ஆயிரக் கணக்கில் ஏக்கர் இருக்கிறது.

ஹரித்துவாரில் அவரது ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள பதஞ்சலி டிரஸ்ட் மற்றும் திவ்யா யோக் ஆகியவற்றின் கூட்டு மதிப்பு ரூ.ஆயிரத்து நூற்றி பதினைந்து கோடி.

ரூ.1115 கோடி சொத்து அப்பல்லலோ மருத்துவமனை குழுமத்தைவிட பெரியது என்று எழுதி வைத்திருக்கின்றார்கள். நான் சொல்லவந்த விசயங்கள் இந்தியா டுடேவில் விளக்கமாக சுலபமாக இருக்கிறது. அவ்வளவு தகவல்கள் இதிலே இருக்கிறது.

ராஜதேவன் என்கிற தலைப்பில் வெளி வந்திருக்கின்ற செய்தியை இந்த அணியினருக்குத் தெரிவிக்கின்றேன்.

பாபா ராம்தேவன் பதஞ்சலி யோக பீட டிரஸ்ட் மற்றும் யோக் மந்திர் கூட்டு மதிப்பு ஹரித்துவாரில் ஆயிரம் ஏக்கர் பரப்பில் இவை பரவியுள்ளன. ரூ.1115 கோடி இதுமட்டும். ஹரித்துவாரில் மட்டும் ராம்தேவ் சுமார் 200 நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்.

(நமது நாட்டில் ரிலையன்ஸ், டாட்டா, என்று சொல்லுகிறோம் பாருங்கள் அது மாதிரி இவர்.) ஆயுள் வேதம் முதல் ஒளி பரப்பு (தொலைக்காட்சி) வரை வைத்திருக்கின்றார். எல்லாவற்றையும் வைத் திருக்கின்றார்.


மடங்களில் டி.வி.க்கள்


எல்லா பாபாக்கள், மடங்கள் பூராவும் டி.விதான் வைத்திருக்கின்றார்கள். சங்கர மடத்திலிருந்து எல்லா மடங்களிலும் டி.விக்கள் இல்லாமல் இல்லை. கடவுளே (GOD) ஒரு டி.வி. நடத்திக் கொண்டிருக்கின்றார். இல்லையானால் அவரை மறந்துவிடுவார்கள் பொதுமக்கள்.

திவ்யா பார்மசி தொழிலகம் ஹரித்துவாரில் 100 ஏக்கல் பரப்பளவில் அமைந்திருக்கிறது. ஆண்டு வருமானம் ரூ.300 கோடி ஒரு நிறுவனத்தில் மட்டும் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆடம்பர மாளிகையின் மதிப்பு ரூ.30 கோடி.


உணவுப் பூங்கா ரூ.500 கோடி


ஹரித்துவாரில் 95 ஏக்கராவில் உருவாக்கப் பட்டுள்ள உணவுப் பூங்காவின் மதிப்பு ரூ.500 கோடி. உலகம் முழுவதும் 40 மய்யங்கள் இருக்கின்றன. ஸ்காட்லண்டு அருகே வாங்கியுள்ள இடத்தின் மதிப்பு 2 மில்லியன் பவுண்ட். 1 பவுண்ட் என்பது 75 ரூபாய்க்கு மேல் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு பெரிய தீவையே இந்த சாமியார் வாங்குகிறார். சாதாரணமாக நடந்து வந்தவர். பிறகு சைக்கிளில் வந்தவர் ஒன்றுமே இல்லாத ஆள்.


வண்டியில் வைத்து வியாபாரம் செய்தவர்


1990-களில் இறுதிவரை கூட ஓட்டை சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தவர் பாபா. தானே தயாரித்த ஆயுர்வேத சக்தி மருந்தை பிளாஸ்டிக் டப்பிகளில் அடைத்து வைத்து தனது வண்டியில் வைத்து எடுத்துக்கொண்டு செல்வார்.

வாடகைக்கு எடுத்த அலுமினிய பாத்திரத்தில் அதை தயார் செய்து, வீடு வீடாகச் சென்று விற்பார். கிராக்கியை உருவாக்க சில சமயங்களில் இலவச மாகடக் கூட கொடுப்பார் என்கிறார் ஸ்வான் மகந்திரு.


பாபாவுக்கு மண்ணாசை உண்டு


இவர் கூடவே யோகவையும் கற்றுத்தரத் தொடங்கினார். 1999இல் ஒரு செகனண்ட் மாருதிவேனை வாங்கினார். இரண்டு வருடம் கழித்து மாருதி சிப்சி வாங்கினார். அந்த ஹரித்துவாரில் ஒண்ட குடிசையில் இருந்தவருக்கு இன்றைக்கு ஹிங்குடி என்ற இடத்தில் வசந்த மாளிகை இருக்கிறது. 6 ஏக்கர் நிலத்தில் ரூ.30 கோடியில் இருக்கிறது.

பாபாவுக்கு மண்ணாசையும் உண்டு. டில்லியில் ஆரோக்கியம் என்ற பெயரில் ஆடம்பரமான வர்த்தக மற்றும் குடியிருப்பு வளாகத்தை கட்டியிருக்கின்றார்.

இப்படி ஒவ்வொரு துறையிலும் அவருக்கு எவ்வளவு என்னென்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


ராம்தேவ் மருந்தில் மாட்டுக்கொழுப்பு


அது மட்டுமல்ல. உலக அளவில் சில மருந்துகளை எல்லாம் தடை செய்திருக்கிறார்கள். ஆயுர்வேத மருந்து போன்றவைகளை சிபிஅய் கட்சியைச் சார்ந்த பிருந்தா கரத் அவர்கள் ராம்தேவ் ஆயுர்வேத மருந்தை எடுத்து வந்து அய்தராபாத்தில் உள்ள ஒரு சோதனைக் கூடத்தில் கொடுத்து சோதனை பண்ணச் சொல்லியிருக்கின்றார்கள்.

அதிலே மாட்டுக் கொழுப்பு, அனிமல்ஃபேட் எல்லாவற்றையும் பயன்படுத்திருக்கின்றார்கள் என்று சொன்னதற்கு ராம்தேவ் பதிலே சொல்ல வில்லை.


204 வியாதிகளுக்கும் ஒரே மருந்து


இவருடைய வியாபாரம் இவ்வளவு சிறப்பாக இருப்பதற்கு என்ன காரணம்? அவருடைய மருந்துகள் ஆயிரம் கோடிக் கணக்கானது. எல்லோரும் ஏமாந்து போகிறார்கள். நமது ஊரில் பார்த்தால் திடீரென்று 204 வியாதிக்கும் ஒரே மருந்து என்று சொல்லுவார்கள் (சிரிப்பு-கைதட்டல்).

பதினைந்து ரூபாய்தான் என்று சொன்னவுடன் நம்மாள் எல்லோருமே வாங்கிக்கொள்வார்கள். எனக்குத் தெரிந்தவர் ஒருத்தர் வந்தாரு. ரொம்ப நாளைக்கு முன்னால் நடந்த செய்தி. என்னய்யா நீ கூட போய் ஏமாந்து வாங்கலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் பதில் சொன்னார். 204 வியாதி என்று சொல்லுகிறார்களே மொத்தம் உள்ள வியாதி என்னென்ன என்று தெரிந்து கொள்வதற்காக வாங்கினேன் என்று சொன்னார் (சிரிப்பு-கைதட்டல்).

வியாதி பட்டியல் என்ன என்று பார்த்தாராம். இது மாதிரி சம்பந்தப்பட்ட வியாதிகள் 194. இது மாதிரி ஒரு மூன்று கேட்டகரியிலேயே 234 வியாதிகளையும் முடித்துவிட்டார்கள் (சிரிப்பு-கைதட்டல்). அதிலேயும் அவன் எவ்வளவு பெரிய ஃபிராடு பாருங்கள். எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள்.


யோகா-மூச்சுப் பயிற்சி

மூச்சுப் பயிற்சி என்றால் அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நமது யோகராஜ மாணிக்கம், யோகராஜா நமது பயிற்சி முகாம் களிலேயே இந்த மூச்சுப் பயிற்சிக் கலையை சொல்லிக்கொடுத்திருக்கிறாரே.

மூச்சுப் பயிற்சி நல்லது. அதற்கு பயிற்சி கொடுக்கலாம். அதற்கும், மதத்திற்கும் சம்பந்த மில்லை.அதற்கும் கற்றுதலுக்கும் சம்பந்தமில்லை. அதற்கு மூலதனம் ஒன்றும் தேவையில்லை.

சாமியார் ராம்தேவ்னுடைய ஆயுர் வேத மருந்து கேன்சர், எய்ட்ஸ், எச்.அய்.வி நோயை நீக்குமாம்.


நோய்களைக் குணப்படுத்துமா?


இது எவ்வளவு பெரிய மோசடி பாருங்கள். இவருடைய மருந்தை சாப்பிட்டால் கேன்சர் போகும். நம்மாளும் எதை சாப்பிட்டால் என்ன? போனால் போகிறது என்று நினைத்து வாங்கி சாப்பிடுவான்.

அதே மாதிரி எய்ட்ஸ் நோயை குணப்படுத்துமாம். இந்த இரண்டு நோய்களுக்கு எவ்வளவு பெரிய ஆராய்ச்சி. உலகத்தில் எத்துணை கோடி ரூபாய் களை வைத்து ஆராய்ச்சிப் பண்ணிக் கொண்டிருக் கின்றான்.

இன்னமும் இந்த நோய்களை தீர்க்கக் கூடிய மருந்துகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கொஞ்சம், கொஞ்சம்தான் வெற்றி அடைந்தி ருக்கிறார்கள். அது மட்டுமல்ல. மருந்துகள் எப்படி விற்கிறது என்று இந்தியா டுடே பத்திரிகையிலேயே போட்டி ருக்கிறார்கள்.

---------"விடுதலை” --(தொடரும்)20-6-2011

ஊழலை ஒழிப்பேன் என்கிற பாபா ராம்தேவின் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வாருங்கள்

மத்திய அரசுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!

முதலில் ஊழலை ஒழிப்போம் என்று சொல்லுகின்ற அன்னா ஹசாரே பாபா ராம்தேவ்களின் ஊழல்களையும், கறுப்பு பணத்தையும் மத்திய அரசு வெளியே கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

ஊழலை ஒழிக்கும் உத்தமர்களா-அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ்கள்? இதன் பின்னணி என்ன? என்ற தலைப்பில் சென்னை பெரியார் திடலில் 12.6.2011 அன்று சிறப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


சுகாதார அமைச்சகம்தான்


சட்ட விரோதமான முறையில் மருந்துகளை சேர்ப்பதாக குற்றச்சாற்று எழுந்தது. எய்ட்ஸ் போன்ற நோய்களை குணமாக்குவதற்கு எதிராக அவரது மருந்துகளுக்கு சுகாதார, அமைச்சகம் தடைபோட்டிருக்கிறது. அப்படி இருந்தும் அவர் ஒன்றும் கவலைப்படவில்லை.

மருந்துகள் சட்டத்தின் கீழ் சட்டம் பாயவில்லை. அரசாங்கம் இன்னும் சரியானபடி நடவடிக்கை எடுக்கவில்லை. புத்திரவதி ஒரு மருந்து

இங்கே ஒரு செய்தியை நன்றாக கவனியுங்கள். பெண்கள் ஆண் குழந்தைகளை மட்டுமே பெற்றுக் கொள்ள உத்தரவாதம் என்று சொல்லி புத்திரவதி என்ற மருந்தை ராம்தேவ் அறிமுகப்படுத்தினார். (சிரிப்பு-கைதட்டல்).

எவ்வளவு பெரிய மோசடி இது. அதாவது இதுவரையில் எந்த சயின்டிஸ்ட்டும் உலகத்தில் இந்த மாதிரி ஒரு மருந்தை கண்டுபிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய மெடிக்கல் எகஸ்பர்ட்டும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

ஜீன்ஸ், குரோமோசோம்ஸ் இவைகளைப் பொறுத்து நிர்ணயம் பண்ண வேண்டிய செய்திகள். மரபணுக்கள், தாய்-தந்தை தாத்தா-பாட்டி பெற்றோருடைய பாரம்பரிய மரபணுக்களை குரோமோசோம்களை பொறுத்து பிறக்கின்ற குழந்தை ஆணாக, பெண்ணாக வருவதற்குரிய காரணங்களாகும். இத்தனை விசயங்களை உள்ளடக்கியது. ஒரு குழந்தை பெண்ணாக பிறப்பதற்கும் ஆணாக பிறப்பதற்கும் உரிய காரணங்களாகும்.


ஆண் குழந்தைகளாகப் பிறக்க மருந்து


மருந்தின் பெயர் புத்திரவதி என்று சொல்லி விட்டான். இதை சாப்பிட்டால் வெறும் ஆண் குழந்தை மட்டும்தான் பிறக்கும். அதனால் இங்கே வாருங்கள். இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டான்.

இதை நம்மூர் மடையன் நம்பி சாப்பிடுகின்றான். ஏமாறுகிறவர் இருக்கிற வரையிலே ஏமாற்றுகிறவன் இருக்கத்தான் செய்வான். மேலும் சொல்லுகிறார். யோகா மூலம் புற்றுநோயைக் குணப்படுத்த முடியும் என்று அறிவித்து மக்களை ஏமாற்றிய தற்காக இந்திய மருத்துவக் கழகம் அதை கண்டித்தது.


சஞ்சீவி மருந்தாம்!


புராணக் மருந்தான சஞ்சீவி மூலிகைகளை கண்டுபிடித்ததாக அவரே கூறுகிறார் என்று கிண்டலடித்தார்கள். அதோடு தோழர்கள் மன்னிக்க வேண்டும். மேற்கொண்டு இந்த இந்தியா டுடே இதழில் வந்திருப்பதை கேளுங்கள்.

ஓரினப் புணர்ச்சியை குணப்படுத்தக்கூடிய நோய் என்று கூறி நன்றாக வாங்கிக் காட்டிக் கொண்டார். எது எதற்கு மருந்து விற்கிறான் பாருங்கள்?

இதெல்லாம் எந்தெந்த துறைக்குப் போனால் ஏமாறுவார்கள் என்று தெரிந்து இதை மனோ தத்துவ ரீதியாக இதை சரி பண்ணி இது போன்ற காரியங்களை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் பாபா தப்பித்துக்கொண்டே வந்தார்.


பிருந்தா காரத் புகார்


2006இல் சி.பி.எம். தலைவர் பிருந்தா காரத் மருந்துகளில் மூலிகை இல்லாத பொருள் இருக்கிறது என்று கூறி தொடர்ந்து ரகளை செய்தார்கள் என்று இருக்கிறது. நிறைய இந்த மாதிரி செய்திகள் தாராளமாக இருக்கிறது.

இவர் ஒரு பெரிய அமைப்பை உருவாக்கி இந்த அமைப்பினுடைய வித்தியாசம் என்ன? இதைப் பாருங்கள். கப்பலில் போகும் பொழுதே யோகா, பெரிய, பெரிய நிருவாகத்தில் இருப்பவர்கள் லீவு எடுக்கிறார்கள். கடலில் கப்பலில் சென்றால் நல்ல காற்றோட்டம். கடல் பயணம் பண்ணுகிறவர்களைப் பார்த்தால் நன்றாகப் பசி எடுக்கும் இயல்பாகவே பசி எடுக்கும். நல்ல காற்று கிடைக்கும்.


கப்பலில் யோகா


உடல்நிலை நன்றாகவே இருக்கும். கப்பல் பயணம் பண்ணுகிறவர்களுக்கு இது தெரியும். கப்பலில் பயணம் செய்கிற சில பேருக்குத்தான் வாந்தி, குமட்டல் இது மாதிரி வரும். கொஞ்சநாள் இருக்கும் பிறகு அது சரியாகிவிடும்.

கப்பலில் பயணம் செய்கிறவர்களுக்கு யோகா. ஒரு டிக்கெட் ஆயிரம் பவுண்டு கொடுத்து பயணம் செல்லுகிறார்கள். ஆயிரம் பவுண்ட் என்றால் என்னங்க? குறைந்த பட்சம் 75,000 ரூபாய். ஒரு நாள், இரண்டு நாள் இருக்கலாம்.

கப்பலில் ராம்தேவ் வியாபாரம் செய்கிற பொருளுக்கு ஒரு சதவிகித கட்டண சார்ஜ் விதிக்கின்றார். பணக்காரருக்குத்தான் அவர் அபராதம் போடுகின்றார். ஏழைகளிடம் நான் பணம் வசூலிப்பதில்லை என்று ஒரு வேஷம் போட்டுக் கொள்கிறார்.

இந்தியாவில் 500 மருத்துவமனைகளை வைத் திருக்கின்றார். அதுமட்டுமல்ல. பாபா, சங்கம் வைத்திருக்கின்றார். அதில் சேருவதற்கு எவ்வளவு கட்டணம் என்பதைப் பார்க்க வேண்டும். இன்ட்டர் நெட்டில் வந்திருக்கிறது. சேனல் இடமருகுகூட என்.டி.டி.வி.யில் இதைப் பற்றிச் சொல்லியி ருக்கின்றார்.


ஏழைகளுக்காக சங்கமா?


ஒரே ஒரு செய்தியை சொன்னால் உங்களுக்கு சுவையாக இருக்கும். ஏழைகளுக்காகவே பாபாராம் தேவ் சங்கம் வைத்திருப்பதாக சொல்கிறார் அல்லவா?

ராம்தேவ் ஆசிரமத்தில் சேர கட்டணம் எவ்வளவு தெரியுமா? ராம் தேவ் ஆசிரமத்தில் சாதாரண மெம்பராக சேருவதற்கு கட்டணம் ரூ.11 ஆயிரம் (சிரிப்பு), மதிப்பிற்குரிய உறுப்பினராக வேண்டும் என்றால் ரூ.21 ஆயிரம், ஸ்பெஷல் மெம்பர்ஷிப் சேர வேண்டும் என்றால் அய்ம்பத்தி ஓராயிரம் ரூபாய்.

வாழ்நாள் உறுப்பினராக வேண்டும் என்றால் ஒரு லட்ச ரூபாய் ரிசர்வ் மெம்பர்ஷிப் என்றால் இரண்டு லட்சத்து அய்ம்பத்தி ஓராயிரம் ரூபாய். ஃபவுண்டர் மெம்பர் ஷிப் என்றால் ஒரு லட்ச ரூபாய்.

இந்த மாதிரி ஒரு வியாபாரத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கவே முடியாது. இப்பொழுது என்கையில் வந்திருக்கின்ற இந்த பத்திரிகை. இதுவும் விடுதலை அல்ல. உண்மை அல்ல. முந்தாநாள் வந்த மாலை மலர் பத்திரிகை. இதிலே வந்த ஒரு செய்தி. இதை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியாது.


பூஜை நடத்த ஒரு கோடி ரூபாய்


பூஜை நடத்த ராம் தேவ் ரூ.ஒரு கோடி கேட்பார். அவருடைய சீடர் சொல்லுகிறார். பாபா ராம்தே வின் சீடர் ராம்தேவுக்காக பல லட்சம் செலவு செய்தார். ராம்தேவ் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டுமே செயல்படுவதாக கூறி தொழில் அதிபர் ஃபியூஸ் பாண்டே, பதஞ்சலி பீட யோகா அமைப்பிலிருந்து விலகினார்.

அவர் ராம் தேவ் நடத்தும் உண்ணவிரதம் குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இது முந்தாநாள் வந்த செய்தி. மக்கள் எல் லோரும் நினைத்துக்கொண்டிருப்பது போல பாபா ராம் தேவ் நல்லவரல்ல. அவர் நாடெங்கும் பணம் வசூலித்துதான் ஆசிரமம் கட்டியுள்ளார்.


ஏராளமான பணம்


பல வழிகளில் அவர் ஏராளமான பணம் சம்பாதித்துள்ளார். கோடி கோடியாக பணம் சம்பாதித்துள்ள அவர் தனது சொந்த தேவைக் காகவே பணத்தை வைத்துள்ளார்.

ஏழை, எளிய மக்களுக்கு அவர் எதுவுமே செய்ததில்லை. அப்படிப்பட்டவர். ஊழல், கறுப்புப்பணம் என்று பேசுவது விந்தையாக உள்ளது. ராம் தேவ் விசயத்தில் பணம் கொடுத் தால்தான் எதுவும் நடக்கும்.

தொட்டதற்கெல்லாம் பணம் தொட்டதற்கெல்லாம் அவர் பணம் கேட்பார். அவரைப் பார்க்கக் கூட காசு கொடுக்க வேண்டும். நீங்கள் அவரை வீட்டுக்கு அழைத்தால் சாமியார் ராம்தேவை கவுரவிக்க விரும்பினால் அவரிடம் முதலிலேயே 5 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை கொடுக்க வேண்டும். அவரிடம் ஆசிபெற விரும்பினால் ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும்.

அவர் கையால் பிரசாதம் பெற ரூ.50 ஆயிரம் செலவு செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி அதில் ராம் தேவ் கலந்துகொள்ள வேண்டுமானால் அதற்கு ஒரு கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.


பணம் கொடுத்தால்தான் பேச்சே!


நீங்கள் பணம் கொடுத்தால்தான் ராம்தேவ் உங்களிடம் பேசுவார். லட்சக் கணக்கில் பணத்தை அள்ளிக்கொடுத்தால்தான் சிரித்துப் பேசுவார். (சிரிப்பு-கைதட்டல்).

உடுமலை நாராயண கவி எழுதிய பாட்டுதான் ஞாபகத்திற்கு வருகிறது. காசு இல்லாதவன் கடவுளே ஆனாலும் கதவை சாத்தடி யாரோ எந்த சந்தர்பத்திலேயோ பாடினார்கள்.


அமைச்சர்கள் போய் இந்த நபரிடம் பேசுவது


ஆனால் இங்கே அதைவிட மிக மோசமாக ராம்தேவின் செய்தியிருக்கிறதென்றால் இவ்வளவு அசிங்கமான ஒரு ஆளிடம் நமது அமைச்சர்கள் போய் பேசுவது-அவருக்கு சிவப்பு கம்பளத்தை விரிப்பது-அப்புறம் வேலை முடிந்தவுடன் அவரைத் தூக்கி அந்தப் பக்கம்போடுவது என்று சொன்னால் என்ன அர்த்தம்? இவர் ஊழலை ஒழிப்பேன். கட்சியையே மாற்றுவேன் என்று சொன்னால் என்ன அர்த்தம்? வருமான வரி கட்டியிருக்கிறாரா?


இவ்வளவு கோடி நிறுவனங்கள் எல்லாம் இருக்கிறது. இவர் கட்டுகின்ற வருமான வரி எவ்வளவு? அறக்கட்டளைகள் நடத்துகிறவர் களுக்குத் தெரியும். அறக்கட்டளைகளுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்களுடைய அறக்கட்ட ளைகளின் ஒவ்வொரு பணிகளையும் ஆழ்ந்து பார்த்துதான் வருமானவரி விதி விலக்கு கொடுக் கிறார்கள்.


ஆனால் எந்த அறக்கட்டளையாவது தொழில் நடத்தினால் அந்த வரிவிலக்கு அவர்களுக்குக் கிடைக்க வாய்ப்பு கிடையாது. தொழில் நடத்தி வருமானம் வந்தால் அந்த வருமானத்திலிருந்து அவர்கள் வரி கட்ட வேண்டும். வரி கட்டினால்தான் அவர்களுக்கு 80-ஜி என்ற விதிவிலக்கு கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது. ஆனால் அதை அவர் செய்திருக்கிறாரா? இல்லை. இதுவரையில் செய்யட்டும் அல்லது நாளைக்கு விளக்கம் சொல்லட்டும்.


ராம்தேவ் கறுப்புப்பணம் வெளியே வரட்டும்


முதலில் இங்கே நடக்கின்ற ஊழலை ஒழிக்க வேண்டாமா? அங்கேயிருக்கின்ற கறுப்புப் பணம் வெளியே வரவேண்டாமா? முதலிலே நாட்டிலே இருக்கின்ற கறுப்புப் பணம் வெளியே வருகிறதோ இல்லையோ பாபா ராம்தேவ் இடம் இருக்கின்ற கறுப்புப் பணத்தை வருமான வரித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்துக்கொண்டு வரவேண்டும். (கைதட்டல்).

இவர்கள் இந்த நாட்டிலே மறுபடியும் காவி ஆட்சியை உருவாக்க வேண்டும். ஆங்கிலத்தை ஒழித்துவிட்டு இந்தியை கொண்டுவரவேண்டும் என்றால் என்ன அர்த்தம்? நாடு பொது ஒழுக்கம் என்ற பெயராலே ஒழுக்கக் கேட்டை வளர்ப்பவர்கள் ஒழுக்கத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊழலை ஒழிப்பேன் என்று பேசுகிறவர்களிடமே முதலில் ஊழல் இருக்கிறது. மருத்துவரே முதலில் உம்மை....!

ரொம்ப நாளைக்கு முன்னாலே, ஆதிகாலத்திலே கிரேக்க அறிஞர்கள் சொன்னார்கள். அதுவும் நீண்ட காலத்திற்கு முன்னாலே- மருத்துவரே முதலில் உம்மை குணப்படுத்திக்கொள்ளுங்கள். அப்புறம் தான் அவர் மற்றவர்களுக்கு மருத்துவம் பார்க்க வேண்டும். அது மாதிரி பாபாக்களும், அன்னா ஹசாரேக்களும் ஊழலை ஒழிப்பேன் என்று சொல்லுகிறார்கள். இதில் வேறு அண்ணா பெயரை சேர்த்துக்கொண் டிருக்கிறார்கள்


அண்ணா பெயர் வேறு அடிக்கடி.....!


ஹசாரே என்றாவது போட்டுத் தொலைக்கட்டும். அண்ணா பெயரை அடிக்கடி போடுகிறார்கள். இங்கேயே அண்ணாபெயர் படாதபாடுபடுகிறது. (சிரிப்பு-கைதட்டல்). ஆகவே ஊழலை ஒழிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தால் அதற்கு மறுப்பு இல்லை. லஞ்சத்தை ஒழிக்கிறோம் என்றால் அதற்கு மறுப்பு இல்லை. ஆனால் அதற்கு பதிலாக காங்கிரஸ் ஆட்சியை ஒழிப்போம் என்பது வழி அல்ல. காவி ஆட்சி கொண்டுவர வழி

அதற்கு மாற்று என்ன? காவி ஆட்சி அதற்கு பதில் என்று சொன்னால் அது சரியாக வந்துவிடுமா? ஆகவேதான் நண்பர்களே! ஜனநாயகம் என்றால் அய்ந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதைவிட குறுக்கு வழியில் வரவேண்டும் என்று நினைத்தால் அதற்கு வேறு வகையான முறை இருக்கும். அவ்வளவு தானே தவிர, வேறு ஒன்றும் கிடையாது.


இந்துத்துவாவின் முகமூடிகள்


எனவே இவர்களுடைய உண்மையான உருவம் என்ன தெரியும்களா? இந்துத்துவாவின் முகமூடிகள் இவர்கள் காவிகளின் முகமூடிகள். ஜனநாயகத்தை வேரறுத்து பாசிசத்தை இந்த நாட்டில் குறுக்கு வழியில் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கின்ற முகவர்கள் இவர்கள்.

அதற்காக தூண்டிவிடப்பட்டவர்கள். அதற்காக ஊடகங்கள் இவர்களைத் தூக்கி நிறுத்துகின்றன. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்லுவதுதான் எங்களுடைய கடமை என்று சொல்லி ஞாயிற்றுக்கிழமைகளில் ஓய்வு எடுக்கக் கூடிய நிலையில் இருந்தும் கூட இவ்வளவு பேர் திரளாக வந்ததற்காக நன்றியைத் தெரிவித்து எனதுரையை முடித்துக்கொள்கின்றேன்.

-இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

------------------------"விடுதலை”
21-6-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

விளக்கம் கேட்டு தாக்கீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

கறுப்பு பணத்தை மீட்கநடவடிக்கை எடுக்கக் கோரி யோகா குரு ராம்தேவ், கடந்த 4ஆம் தேதி டில்லி ராம் லீலா மைதானத்தில் பட்டினிப் போராட்டம் இருந்தார். ஆயிரக் கணக்கான ஆதரவாளர் களும் பட்டினிப் போராட்டம் நடத் தினர்.

ஆனால், அவர் யோகா நடத்த அனுமதி வாங்கிவிட்டு, உண்ணா விரத போராட்டம் நடத்தியதாக கூறி, அன்று நள்ளிரவில் காவல்துறையினர் அனைவரையும் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் விரட்டியடித்தனர். ராம்தேவை டில்லியை விட்டு வெளி யேற்றினர்.

தானாகவே உச்சநீதிமன்றம்

இதுதொடர்பாக, பத்திரிகை செய் திகளின் அடிப்படையில் தானாக முன் வந்து வழக்கு ஒன்றை பதிவு செய்த உச்சநீதிமன்றம், ராம்லீலா மய்தானத் தில் தூங்கிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டிய அவசியம் என்ன?

மனித உரிமைகளை மீறிய இச்செயல் குறித்து மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை, டில்லி தலைமைச் செயலாளர் திரிபாதி, காவல்துறை ஆணையர் குப்தா ஆகி யோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

காவல்துறை பதில் மனு!

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்தன. அதில் கூறப்பட்டிருந்த தாவது:

ராம்தேவ் சார்பில், யோகா வகுப் புகள் நடத்தப் போவதாக கூறி ராம்லீலா மய்தானத் தில் அனுமதி வாங் கப்பட்டிருந்தது. அதை மீறி அவர்கள் பட்டினி போராட்டம் நடத்தினர். ராம் லீலா மய்தானத்தில் 5,000 பேருக்கு வரை தான் அனுமதி அளிக் கப் பட்டிருந்தது.

ஆனால், 20,000 பேர் கூடிவிட்டனர். இதை யடுத்து அங்கிருந்து ராம்தேவை பாதுகாப் பாக வெளியே அழைத்து செல்ல முயன்றபோது, தொண்டர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கற்களை எறிய ஆரம் பித்தனர்.

இதனால் காவல்துறையினர் வேறுவழியின்றி 8 கண்ணீர் புகை குண்டை மட்டும் வீசினர். ராம்தேவ் ஆதரவாளர்கள்மீது தடியடி நடத்தப் பட்டதாக கூறப்படு வதும் தவறு. இவ்வாறு காவல்துறை யினரின் பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, கோடைக்கால நீதிபதி கள் பெஞ்சான பி.சதாசிவம், ஏ.பி. பட்நாயக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

இந்த விவகாரத்தில், ராம்தேவ் தரப்பு விளக்கம் என்ன என்பது குறித்து அறிய விரும்புகிறோம்.

அதனால் அவர் நடத்தும் பாரத் சுவாபிமான் டிரஸ்ட் தனது தரப்பு விளக்கத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும். வழக்கின் அடுத்தக் கட்ட விசாரணை ஜூலை 11ஆம் தேதி நடைபெறும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

----"விடுதலை” 21-6-2011