Search This Blog

3.6.11

கடவுளை நம்புகிறீர்களா? -கலைஞர் பதில்


சுயமரியாதைக்காரரின் மானமிகு முத்திரைகள்!

பெரியாருக்கு இணை வேறு யார்?

என்னை இங்கே பாராட்டுவதாகக் கூறி அவர்கள் தலைமை யேற்றிருக் கின்ற திராவிடர் கழகத்தின் சார்பாக பாராட்டு என்று கூறி, இந்த விழாவிற்கு அமெரிக்காவில் இருந்து கூட நண்பர்களெல்லாம் வருகை தந்து, ஆன் றோரும், சான்றோரும், கவிஞர் பெருமக்களும் திரண்டிருக்கின்ற இந்தப் புகழ் பெற்ற மைதானத்தில் மேலும் எனக்குப் புகழ் சேர்க்கின்ற வகையில் பல கருத்துகளை வாரி இறைத்திருக்கிறார்கள்.

நான் இதற்கு உரியவன்தானா? இதை ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவுக்கு எனக்குத் தகுதி உண்டா? என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால் தகுதி உண்டு, உரியவன் எப்படி என்றால், இவையெல்லாம் தந்தை பெரியார் அவர்களைச் சேரக் கூடியவை - பெரியார் அவர்களுக்கே உரியவை என்பது ஒத்துக் கொள்ளப்படுமேயானால் இவை எனக்கும் உரியவை என்று கூறுவதிலே எந்த வித அய்யப்பாடும் எனக்கில்லை.

இடமருகு என்ற எழுத்தாளரால் வரையப்பட்ட அருமையான நூல். நூலுக்குத் தலைப்பு இவர்தான் நாராயணகுரு. நாராயண குரு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர் கேரளத்தில் பெரியாருக்குச் சமமாக என்று சொல்லமாட்டேன். பெரியார் அளவுக்கு என்று நான் கூறமாட்டேன். ஏனென்றால், பெரியார் எனக்குத் தலைவர் என்ற காரணத் தால் அல்ல. பெரியார் செய்த புரட்சி உலகத்திலேயே எங்கும், யாரும் இது வரையிலே செய்யவில்லை என்ற காரணத்தினால் யாரையும் நான் பெரியாருக்கு ஒப்பிட்டுக் கூறமாட்டேன்.

(தஞ்சையில் 12-6-2006 அன்று நடை பெற்ற பாராட்டு விழாவில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர்.)

திராவிட இயக்கங்களுக்கு பெரியார் என்னவாக இருக்கிறார்?


கலைஞர் பதில்

கேள்வி: திராவிட இயக்கங் களுக்கு இன்று பெரியார் என்னவாக இருக்கிறார்?

கலைஞர்: திராவிட இயக்கங் களுக்கு தந்தை பெரியார் ஆதர்ச சக்தியாக விளங்கி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை தந்தை பெரியார் எல்லாமாக விளங்குகிறார். திராவிட இயக்கம் என்று பெயர் அளவில் சொல்லிக் கொண்டிருக்கின்ற இயக்கங்களுக்குப் பெரியார் பெயர் அளவில் இருக்கிறார். அதாவது ஊறுகாய் போல உபயோகப்படுத்தப்படுகிறார்.

கேள்வி: திராவிட இயக்கங்களில் பெரியார் கொள்கைகள் மீது பெண்களின் பெருமளவு கவனத்தைக் கவர முடியாதது ஏன்?

கலைஞர்: பெரியாரின் கொள்கைகளில் தொடக்கக் காலத்தில் தாலி மறுப்பு, விதவைத் திருமணம், கடவுள் மறுப்பு, கலப்புத் திருமணம் போன்றவற்றை ஏற்றுக் கொள் வதில் பெண்களுக்கு சற்று தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனால், இப்போதெல்லாம் இந்தக் கொள்கைகளில் ஆண்களை விட பெண்கள்தான் மிகத் தீவிரமாக ஆதரித்து வருகிறார்கள் என்பதை நாங்கள் கண்டு வருகிறோம்.

(புத்தகம் பேசுகிறது இதழ் பேட்டியில் கலைஞர். முரசொலி 22-1-2008)

நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்!


சேகர் குப்தா: நீங்கள் உங்களது அறிக்கை ஒன்றில், ராமர் எந்தப் பொறியியல் கல்லூரி யில் படித்தார்? என்று கேட்டிருக் கிறீர்களே?

கலைஞர்: அது என்ன ஒரு பெரிய கேள்வியா?

சேகர் குப்தா: இவ்விஷயத்தில் காங்கிரசில் உள்ளவர்கள் மகிழ்ச்சியாக இல்லை. நீங்கள் தேவையற்ற அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள் என்று கருதுகிறார்கள். வால்மீகி ராமாயணத்தை மேற்கோள் காட்டி ராமர் குடித்தார் என்று கூறினீர்கள்.

கலைஞர்: ஆமாம். நான் வால்மீகி ராமாயணத்தைத் தருகிறேன். நீங்கள் தயவு செய்து அதைப் படித்துப் பாருங்கள். எங்களுக்கு அந்தத் திட்டம் (சேது சமுத்திரம்) வேண்டும்! நான் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறேன். ஆனாலும், நான் ஒரு சுயமரியாதைக்காரன்! நாங்கள் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்தவர்கள்! பெரியாரின் மாணவர்கள்!

சேகர் குப்தா: நீங்கள் கடவுளை நம்புகிறீர்களா?

கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.
சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?
கலைஞர்: எனது மனச்சாட்சியை.

(என்.டி.டி.வி. தொலைக்காட்சிக்கு முதலமைச்சராக கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து, 130ஆம் ஆண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் மலரிலிருந்து)

தாய் வீட்டைப் பார்த்து கற்றுக் கொண்டேன்!


நாங்கள் பெரியார் கட்சிக்குக் காரண கர்த்தாக்கள் என்றால், பெரியாருடைய மாட்சிக்குக் காரணகர்த்தாவாக இன்றைக்கு விளங்குபவர் என்னுடைய ஆருயில் இளவல் வீரமணி என்று சொன்னால் அதை யாரும் மறுக்க முடியாது.

நானும் தொடர்ந்து பார்த்துக் கொண்டு வருகிறேன். திராவிடர் கழகத்திற்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் இடையிலே ஊடல் ஏற்பட்டு, ஏன் பேச்சு வார்த்தை இல்லாத சூழ்நிலை ஏற்பட்ட போதெல்லாம் கூட அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தவன். ஏனென்றால், அப்படி எட்டிப் பார்த்தது, சதிக் குணத்தால் அல்ல. துர்குணம் என்பார்களே அந்தக் குணத்தால் அல்ல எட்டிப் பார்த்தது. நாம் அந்த வீட்டைத் தாய் வீடாகக் கொண்டவர்களாயிற்றே. அந்தத் தாய் வீட்டில் நடக்கின்ற காரியங்களை யொட்டித்தானே நம்முடைய வீட்டி லும் செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்பதற்காக. சுருக்கமாகச் சொன்னால், புரியும்படி சொன்னால், அதைப் பார்த்து நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்வதற்காக எட்டிப் பார்ப்பதுண்டு. அது ஒன்றும் குற்றமல்ல.

(29-9-2007 பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் தொடக்க விழா உரையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்)

கருவூலம் வீரமணி நம்முடைய தமிழர் தலைவர் வீரமணி அவர்களுடைய அரும் முயற்சி இன்னும் நூறாண்டுகளுக்குப் பிறகு திராவிட இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள, தந்தை பெரியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள, அண்ணாவைப் பற்றித் தெரிந்து கொள்ள எங்கெங்கு இருந்து ஆதாரங்கள் திரட்டப்பட்டன. எப்படியெல்லாம் நம்முடைய வரலாறு முன்னாள் இருந்தது. பின்னாள் அமைந்தது என்பதையெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தெரிந்து கொள்ள வேண்டுமென்றாலும், அதற்கான கருவூலமாக நம்முடைய வீரமணி அவர்கள் விளங்குகிறார்கள் என்று சொன்னால் அதை யாராலும் மறுக்க முடியாது.

இதே என் கையில் உள்ள இந்தப் புத்தகம் செங்கற்பட்டு முதல் மாகாண சுயமரியாதை மாநாடு 1929 ஒரு வரலாற் றுத் தொகுப்பு. நான் நிச்சயமாகச் சொல் கிறேன். அவர் மாத்திரம் இன்றைக்கு திராவிடர் கழகத்திலே தந்தை பெரியா ருடைய வழித் தோன்றலாக அமையாமல் இருந்திருப்பாரேயானால் இந்தப் புத்தகம் எனக்குக் கிடைத்திருக்காது.

இதிலே உண்மைகள், வரலாற்றுச் சான்றுகள், இங்கே நடைபெற்ற மாநாடு, அந்த மாநாட்டிலே கலந்து கொண்டவர்கள், அவர்களைப் பற்றிய விவரங்கள் எதுவும் எனக்குக் கிடைத்திருக்காது. இதிலே சவுந்தரபாண்டியனா ருடைய உருவத்தைப் பார்க் கிறேன். வி.வி. ராமசாமி நாடார் உருவப் படத்தைப் பார்க்கிறேன். அவ்வளவு ஏன்? இதே செங்கற்பட்டிலே இருந்த வேதாசலம் முதலியார் படத் தையும் அதிலே பார்க்கிறேன். வேதாசல முதலியார் உங் களுக்குத் தெரியும். வேலைக் காரி படத்திலே அறிஞர் அண்ணா அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கதாபாத் திரம். அந்த வேதாசல முதலி யார் அந்த மாநாட்டிலே கலந்துகொண்டார்.

ஒரு முக்கிய பொறுப்பேற்றார் என்கின்ற இந்தச் செய்தியெல்லாம் எங்கள் சிந்தனையைச் செதுக்கச் செய்கின்ற செய்திகளாகும். இந்தச் செய்திகள் எல்லாம் காணாமல் போயிருக்கும். இப்படிப்பட்ட புத்தகத் தொகுப்பு மாத்திரம் இல்லாவிட்டால். நான் உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி களையும் ஒப்பிட்டு இப்படிச் சொல்ல வேண்டுமேயானால், அவர் என்னைப் பாராட்டியதற்காக, நான் அவரைப் பாராட்டுவதாக அர்த்தமல்ல.

உலகத்தில் உள்ள எல்லாக் கட்சி அமைப்புகளைப் பற்றியும் சொல்ல வேண்டு மேயானால் எந்த ஓர் அமைப்பிலும் இவ்வளவு விஷயங்களைச் சேகரித்து வைத்து, அதை எதிர் காலத்திற்குத் தரக் கூடிய இந்த ஆற்றல், நம்முடைய வீரமணியாருக்க இருப்பதைப் போல வேறு யாருக்கம் இருப்பதாக நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். அவரி டத்திலே எங்களைப் போன்ற கட்சி களெல்லாம் பாடம் படிக்க வேண்டும் என்று எங்களுடைய முன்னோடிகள் கூட இங்கே வந்திருக்கிறார்கள்.

மூத்த தம்பிமார்கள் எல்லாம் வந்திருக் கிறார்கள். அவர்கள் எல்லாம் கூட இன்று முதல் பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அடக்கத் தோடு அவர்களை எல்லாம் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக் கிறேன்.

(செங்கற்பட்டு சுயமரியாதை மாகாண மாநாட்டின் 80-ஆம் ஆண்டு தொடக்க விழாவில் அன்றை தமிழக முதல்வர் கலைஞர் 18-2-2008)

எதில் அதிக விருப்பம்?


கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழறிஞர் கலைஞர். இதில் எதை அதிகம் விரும்புகிறீர்கள்?

கலைஞர்: இந்த இரண்டையும் விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண்ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும்புகின்றவன் நான்.

(தினகரன் பேட்டி 6-5-2006)

------------------ நன்றி: - “விடுதலை” 3-6-2011

0 comments: