
விதண்டாவாதம்
ஒரு கிருஸ்தவன் இந்துவாகிவிட்டால் உடனே அவனது பெற்றோர் களுக்குத் திதி – திவசம் சிரார்த்தம் செய்யவேண்டும் என்று இந்து புரோகிதர்கள் கூறுகிறார்கள். அப்படியானால் அந்த மதம் மாறியவனுடைய பெற்றோர்கள் உடனே இந்து பிதிர்லோகத்துக்கு வந்துவிடுவார்களா? அல்லது கிறிஸ்துவ பிதிர்லோகத்திலேயே இருப்பார்களா? இந்துக்கடவுள்கள் அவனை இந்து லிஸ்டில் தாக்கல் செய்து கொண்டு, அந்தப்படியான பாவ புண்ணியத்துக்கு ஏற்ற நரக மோக்ஷங்களில் இடம் ஒதுக்கிவிடுவார்களா?
* * *
ஒரு பெண் கொஞ்ச காலம் குடும்பத்தில் இருந்து விதவை ஆகிச் சாப்பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாமலும், பராமரிப்புக்கு ஆளில்லாமலும் போனதால் கடவுள் பக்தி அதிகமாகி கடவுளுக்கு ஆக பொட்டுக்கட்டிக் கொண்டு நல்ல தேவதாசியாக ஆகிவிட்டால், அவர்களுக்கு விபசார தோஷமுண்டா?
* * *
குடும்ப ஸ்திரீ விபசாரம் செய்தால் பாவம் ஏற்படலாம். தேவதாசி ஆஸ்திகர்களான தேவ பக்தர்களிடம் மாத்திரம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் பாவம் எப்படி வரும்.
* * *
ஒரு பிறவி முஸ்லீம் இந்துவாகி விக்கிரகங்களை வணங்கினால் அவனைக் கடவுள் தண்டிப்பாரா? அல்லது கடவுள் தன்னுடைய லிஸ்டி லிருந்து அவன் பெயரை அடித்துவிடுவாரா.
* * *
ஒரு பிறவி இந்து முஸ்லீம் ஆகி இந்து விக்கிரகங்களை உடைத்தெரிந்தால், இந்துக் கடவுள் அவனை தண்டிப்பாரா அல்லது இந்து லிஸ்டிலிருந்து அவன் பெயரை அடித்து விடுவாரா?
* * *
ஒரு நாஸ்திகன் வீட்டில் ஒரு பிள்ளை பிறந்து அதற்கு கடவுள் என்கின்ற பெயரே தெரிவிக்கப்படாமல் இருந்து வளர்த்துவந்தால் அப் பிள்ளை பெரியவனாகி தொழுகாததற்காவும், பிரார்த்தனை செய்யாத தற்காவும் எந்தமதக் கடவுளாவது தண்டிக்குமா அல்லது "அவன் நம்ம லிஸ்டில் சேர்ந்தவனல்ல" வென்று கவனிக்காமல் விட்டுவிடுமா?
* * *
அதுபோலவே ஒரு ஆஸ்திகன் சுயமரியாதைக்காரர் சாவகாசத்தால் நாஸ்திகனாகி உண்மையிலேயே அவன் மனதில் கடவுள் என்பதாக ஒன்று இல்லையென்றும், பாவ புண்ணிய மென்பதெல்லாம் பணக்காரர்கள், புரோகிதர்கள் சுயநலத்திற்கு ஏற்படுத்திக்கொண்ட பித்தலாட்டம் என்றும் உணர்ந்து கடவுளைப் பற்றிக் கவலையில்லாமல் நடந்துகொண்டால் எந்தக் கடவுளாவது அவனைத் தண்டிக்குமா? அல்லது "அவன்தான் சுயமரியாதையில் சேர்ந்துவிட்டானே தொலைந்துபோகட்டும்" என்று அசார்சமாய் விட்டுவிடுமா?
------------------------- தந்தைபெரியார் -"பகுத்தறிவு" அக்டோபர் 1935
0 comments:
Post a Comment