Search This Blog

29.6.11

அரசியல் மாற்றங்களுக்கும் பெரியார் தேவைப்படுகிறார்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை பெரியார் திடலில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

பெரியார் ஒளி விருதுபெற்ற தி.மு.க. பொதுச் செயலாளர் இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்கள் ஆற்றிய உரை குறிப்பிடத்தகுந்ததாகும்.

தந்தை பெரியார் விருது பெறுவது எனக்குப் பெருமை அளிக்கக் கூடியதாக இருந்தாலும், தந்தை பெரியார் அவர்களின் பணிகளுக்கு முன், நான் ஒரு தூசு என்று மிக அடக்கமாகக் கூறிய பேராசிரியர் அவர்கள், இந்த மேடையிலே நாம் தலைவர்களாக அமர்ந்திருக்கிறோம் என்றால், இந்த மன்றத்திலே இவ்வளவு திரளாகக் கூடி நமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க முடிகிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் - அவர் இல்லாவிட்டால் நாம் எவரும் இலர் என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைப் பதிவு செய்தார்.

தந்தை பெரியாரை எந்தக் காலத்திலும் தமிழர்கள் மறக்கக் கூடாது - அவர் கருத்தினைப் பின்பற்றத் தயங்கக் கூடாது என்று குறிப்பிட்டார்கள்.

அரசியலில், தேர்தலில் நேற்று நாம் தோல்வி அடைந்தோம் என்றால், அது நாம் அணிந்திருந்த சட்டை கிழிந்துபோனது போன்றது - அது ஒரு கட்சியின் தோல்வியாகும்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள் ஏற்படுத்திய உணர்வு- சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது வேறு - அது தோல்வி அடைந்ததாகப் பொருளாகாது என்றார் பேராசிரியர். இதே கருத்தைத்தான் திருவாரூர் நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டத்திலும் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களும் குறிப்பிட்டார் என்பது கருத்தூன்றத்தக்கதாகும்.
இதனைத்தான் துக்ளக் போன்ற பார்ப்பன ஏடுகள் - அவர்களின் வட்டாரங்கள் கேலி செய்கின்றன.

மக்களைப் பிறப்பின் அடிப்படையில் பிரிக்கும் வருணாசிரமம் கொடியது. நான்கு வருணங்களையும், பிரம்மாவின் முகத்தில் பிராமணன், தோளில் சத்திரியன், தொடையில் வைசியன், பாதங்களில் சூத்திரன் பிறந்தான் என்று எந்த மதத்தில் கூறப்பட்டுள்ளது?

மிகப்பெரிய வன்னெஞ்சம் படைத்தது பார்ப்பனர்களின் வேதங்களும், அவர்களின் சாத்திரங்களும். அவற்றை ஆணிவேர் வரை சென்று மூல பலத்தைத் தாக்கியவர் தந்தை பெரியார் என்பதால், நமக்குப் பெரியார் மிகவும் தேவைப்படுகிறார்.

தமிழன் என்ற ஓரினக் கோட்பாடு, இனச் சிந்தனை - ஒற்றுமை உணர்வு வருவதற்கு, வளர்வதற்குத் தடையாக இருப்பது ஜாதி உணர்வுதான் - ஜாதி நிலவும்வரை இனவுணர்வு வளராது.

தொடக்க காலத்தில் தாழ்த்தப்பட்டோர் பகுதியிலும், துணி துவைக்கும் சலவைத் தொழிலாளர்கள் பகுதியிலும்தான் திராவிடர் கழக - சுயமரியாதைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடக்கும். தாழ்த்தப்பட்டவர்கள் பகுதிகளில் நடக்கும் திருமணங்களில் கலந்துகொண்டு அவர்கள் வீட்டில் சாப்பிட்டு வருவதைக் கட்டாயக் கடமை என்று கருதப்பட்டதை பேராசிரியர் எடுத்துக் காட்டியது அடிக்கோடிட்டுக் காட்டத் தகுந்ததாகும்.

ஜாதியின் கொடுமை தலைவிரித்தாடும் ஒரு சமூக அமைப்பில், இத்தகைய நடவடிக்கைகள்தான் - ரத்த ஓட்டத்தில் ஆண்டாண்டு காலமாகக் கலந்துவிட்ட அந்த ஜாதியின் பிடியைத் தளர்த்தும் - மன மாற்றத்தையும் கொண்டுவரும்.

அந்தக் காலகட்டத்தில் அதனைச் செய்வதற்கு ஒரு மனப் பக்குவம், துணிவு தேவை. அந்தப் பக்குவத்தை உண்டாக்கியவர் தந்தை பெரியார் அவர்களும், அவர்கள் கண்ட தன்மான இயக்கமான திராவிடர் கழகமுமாகும்.

இன்றைக்கும்கூட சில கிராமங்களில் தேநீர்க் கடைகளில் இரு டம்ளர்கள் உண்டு என்றால், அந்தக் காலகட்டத்தில் சேரிப் பகுதிகளில் சென்று அவர்கள் வீட்டில் உணவருந்தியது எவ்வளவுப் பெரிய சாதனையாக இருந்திருக்க முடியும்!

அந்த உணர்வு மேலும் தூண்டப்படவேண்டும் - இளைஞர்கள் மத்தியில் ஜாதி ஒழிப்புச் சிந்தனை விதைகள் விதைக்கப்படவேண்டும்.

ஜாதிக்கு மூல ஆதாரமானவைகள்பற்றிக் கடுமையான விமர்சனங்களை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்திட வேண்டும். அதன்மூலம் இனவுணர்வை ஏற்படுத்திவிட்டால் அரசியலிலும்கூட இனமானப் பார்வை ஏற்பட முடியும்.

அந்த உணர்வு குன்றியதால்தான் இனமல்லாதார் ஆட்சி அதிகாரத்தில் அமரும் நிலை ஏற்படுகிறது.

மிகப் பொருத்தமாக இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் புரட்சிக்கவிஞர் பாடல் வரிகளை எடுத்துக் கூறினார்.

தமிழாய்ந்த தமிழ் மகன்தான்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகவேண்டும்

என்ற தமிழியக்கப் பகுதியில் அமைந்த அந்தப் பாடல் வரிகளை எடுத்துக்காட்டினார்.

அரசியல் உள்பட எல்லா வகையிலும் தமிழன் தலை எடுக்க தந்தை பெரியார் தேவைப்படுகிறார் - அவர்தம் கொள்கைகள் தேவைப்படுகின்றன என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் விருது வழங்கும் விழாவின் சாரமாகும். வெறும் ஆர்ப்பாட்டமாக விழாக்கள் அமையக் கூடாது என்பதில் கருத்து செலுத்திய தோழர் தொல். திருமாவளவன் அவர்களையும் பாராட்டுகிறோம்.

----------------"விடுதலை” தலையங்கம் 29-6-2011

0 comments: