Search This Blog

24.12.12

பெரியார் நினைவு நாள் சூளுரை!





ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்
  • ஒடுக்கப்பட்டோரே, உங்கள் உரிமைகளை மறவாதீர்!
  • தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்  திசை மாறிய கப்பலாகி விடக் கூடாது!!
தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு - இதுவே தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை!
தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

சமூக நீதித்துறையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும், தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு என்பதே நமது அடுத்த கட்ட செயல்பாடு - தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடும் நோய்க்கான கிருமிகளைக் கொல்லும் சக்தி வாய்ந்த மருந்துகளில்கூட அளவான அளவே பயன்படுத் தப்பட வேண்டிய ஜாதி என்ற விஷத்தை, மருந்தை மறந்து விட்டு விஷத்தை மட்டுமே குடித்தால் நீங்கள் என்னாவீர்கள்?

வீடு எரிவதைப் பார்த்துக் கூத்தாடும் சிறு பிள்ளைகளா நீங்கள்?
தந்தை பெரியாரும், அம்பேத்கரும் கூறியபடி, பிற்படுத் தப்பட்ட  ஜாதி சூத்திரர்களும், அடுக்கின் வெளியே தள்ளப்பட்டு அவதிக்குள்ளாகும் பஞ்சமர்கள் என்ற இரு சகோதரர்களும் கைகோர்த்துப் போராட வேண்டிய சகோதரர்கள் அல்லவா? அதைவிட்டு உட்ஜாதி - அரசியல் லாபத்திற்காக - தேர்தல் அரசியலில் வாக்கு வங்கிகளைத் தேடி சந்தர்ப்பவாத சதிக்குப் பலியானால் இதுவரை நீங்கள் பெற்றுள்ள - இனி பெற வேண்டிய சமூக நீதி உரிமைகள் - இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப் புகள் திடீரென்று காணாமற்போகும் என்பதை நினைத்து, வீடு எரிவதைப் பார்த்து, புரியாத சிறுபிள்ளைகள் கூத்தும் கும்மாளமும் கொள்வதுபோல ஆடாதீர்!
பார்ப்பனர்கள் - ஊடகங்கள் - உங்களில் சிலரை கொம்பு சீவி விட்டு மோத விட்டு, ரத்தம் குடிக்கக் கா த்திருக்கும் நரிகளாகி உசுப்பேற்றுகின்றனர்! ஏமாறலாமா?

மண்டல் கமிஷனின் பரிந்துரைகள் முழுவதும் அமுலாகி விட்டவனவா? யோசித்துப் பார்த்தீர்களா?

இளைய பெருமாள் கமிட்டி (மத்திய அரசு கமிட்டி) செயல் வடிவம் கண்டு விட்டதா?

சமூக நீதிக்குச் சமாதி - புரிந்து கொண்டீர்களா?

உச்சநீதிமன்றத்திலும், பல மாநில உயர்நீதிமன்றங் களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட நீதியரசர்கள் போதிய அளவுக்கு Adequate Representation அடைந்து விட்டார்களா?

பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தால் இவர்கள் இடஒதுக்கீடு கேட்பார்கள்; பார் பார் இதோ இவற்றை தனியார் மயமாக்கி இடஒதுக்கீட்டிற்கு - சமூக நீதிக்குச் சமாதி கட்டுகிறோம் என்று ஓசைபடாமல் திட்டமிட்டு வெற்றி பெறுகிறதே ஆரியமும் அதில் நுழைந்த அதிகார வர்க்க ஆட்சியும்! புரிந்து கொண்டீர்களா?

மத்திய அரசு துறைகளைப் பாரீர்!

மத்திய அரசுப் பதவிகளில் செயலாளர்கள் என்ற சக்தி வாய்ந்த பதவிகளில் 132இல் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பூஜ்யம்தான் ராஜ்யம் என்பது போல ஒருவர்கூட இல்லை என்று துறை சார்ந்த அமைச்சரே 6.12.2012இல் நாடாளுமன்றத்தில் கூறியது கேட்டு, உங்களைத் தவறான வழிக்கு அழைத்துச் செல்ல  முயலும் சிலர்  அவர்கள் திருவாசகங்களில் கூறுவதானால் ஓட்டுப் பொறுக்கிகள் அந்தத் தலைவர் விரிக்கும் வலையில் வீழ்ந்து வாழ்வுரிமையை  -வளர்ச்சியை - முன்னேற்றத்தை இழக்கத் துடிக்கலாமா?

வீணைக் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தீர்களா?

மண்டல் குழுப் பரிந்துரைகளுக்காகவும், இளைய பெருமாள் கமிட்டி பரிந்துரைக்காகவும் திராவிடர் இயக்கம் போராடியபோது இவர்கள் எங்கே போய் இருந்தனர்? வீட்டின் கதவைச் சாத்திக் கொண்டு வீணைக் கச்சேரி அல்லவா கேட்டுக் கொண்டிருந்தனர்; இப்போது இப்படி வீண் கச்சேரி நடத்தி, மாயையை உருவாக்கி, உங்களுக்கு ஜாதிப் போதையை ஏற்றும் மயக்கப் பானங்களை அல்லவா தரத் துடிக்கிறார்கள்?

18வயது வாக்குரிமையைப் பறிப்பீர்களா?

நியாயந்தானா? சிந்தியுங்கள்! 18 வயது வந்த பெண்ணுக்குத் தனது வாழ்விணையரைத் தேர்வு செய்யத் தகுதி இல்லை என்பது உங்கள் வாதமானால், 18 வயதில் வாக்குரிமையை - ஓட்டுப் போடும் வாய்ப்பை - மாற்றிட நாடு தழுவிய அளவில் பிரச்சாரம், போராட்டம் செய்ய முன் வருவீர்களா? சட்டத்தை மாற்றிடப் போராடுவீர்களா?

21 வயது பெண் மாற்று ஜாதியில் காதல் செய்தால் அதை ஏற்பீர்களா?
பெற்றோர்களைக் கேட்டுத்தான் காதல் திருமணம் வயது வந்தபெண் முடிவு செய்ய வேண்டும் என்றால், இது மகளிரை மறுபடியும் அடிமையாக்கும் சமூக அநீதி அல்லவா?

பெற்றோர்கள் கூறுகிறபடி 18 வயது வந்த ஆண் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் பெற்றோர்கள் ஆணைப்படி- சம்மதம் பெற்ற பிறகே அவர்கள் கூறும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கூறுவீர்களா?

அப்படிக் கூறுவது எப்படி நியாய விரோதம், சட்ட விரோதம், மனித உரிமைப் பறிப்புக் குற்றமோ, அது போன்றது தானே மகளிர் உரிமையைப் பறிப்பதும்?
காதல் இல்லாத இலக்கியம் உண்டா?

தமிழ்ப் பாங்கு, தமிழன், தமிழினம்  என்று கூறும் இவர்களால் காதல் இல்லாமல், குறுந் தொகைப் பாடல்கள் இல்லாத தமிழ் இலக்கியங்கள் உண்டா? குறளின் காமத்துப் பாடல் கண்ணொடு கண் நோக்கொக்கின் குறளும் குற்றமானதா?

வாக்குவங்கி அரசிய லில் நடத்தும் ஒட்டுப் பசி யாளர்களை  ஓரங் கட்டுவீர்!
உண்மையான உரிமைகளை வென்றெடுக்க, திராவிடர் கழகத்தின் - திராவிடர் இயக்கத்தின் பெரியார் தத்துவங்களின் கொள்கையை ஏற்பீர்! வலங்கை, இடங்கைகளைப் பிரிக்காதீர்!

பல்வேறு ஒடுக்கப்பட்ட மக்களையும் மோதவிட்டு அரசியல் பதவிப் பசியைத் தீர்க்க எண்ணாதீர்!

இணைப்பீர்!
இணைப்பீர்!
இன்றேல் வீழுவது நாமே!
வாழ்வது ஆரியமே, அவாளே! புரிந்து கொள்வீர்.
தனியார்த் துறைகளிலும் இடஒதுக்கீடு
சிந்திப்பீர், செயல்படுவீர் தனியார் துறை இட ஒதுக்கீட்டுப் போர்க் குரல் கொடுக்க ஆயத்தமாவீர்!
பெரியார் நினைவு நாள் சூளுரை இதுவே!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
23.12.2012  சென்னை

10 comments:

தமிழ் ஓவியா said...


ஜாதிக்கலவரத்தை தூண்டினாரா ராமதாஸ்?

மதுரை மாவட்ட ஆட்சியர் தாக்கீது

மதுரை, டிச.23-மதுரையில் நடந்த கூட் டத்தில், ஜாதிக் கல வரத்தைத் தூண்டிய தாக, பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கு, மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, தாக்கீது அனுப் பியுள்ளார்.

கடந்த, 20ஆம் தேதி, மதுரையில், வன்கொடுமைதடுப்பு சட்டம் முறைகேடாக பயன்படுத்துவது, காதல் நாடக திரும ணங்களால் பாதிக்கும் பெண்களை, பெற் றோரை, பாதுகாக்கும் அனைத்து சமுதாயப் பேரவை என்ற புதிய அமைப்பை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறி வித்தார்.

பின் சமுதாயத் தலை வர்கள் கூட்டத்தில் அவர் பேசும்போது, சோறு, வீடு இல்லாமல் கூட வாழலாம். அதைவிட முக்கியம் பெண்களின் மானப்பிரச்சினை. காதல், கத்தரிக்காய் என, நம் சமுதாயபெண்களை, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைசேர்ந்த சிலர், நாடக திரும ணங்களை நடத்தி, பெண்களின் வாழ்க் கையை நாசப்படுத்து கின்றனர்.இதைத் தடுத்து நிறுத்தத் தான் இந்த அமைப்பு எனக் குறிப்பிட்டார். இவரது பேச்சு எதிரொலியாக, ஜாதிக் கலவரத்தை தூண்டியதாக ராம தாசுக்கு, மாவட்ட ஆட் சியர் அன்சுல் மிஸ்ரா தாக்கீது அனுப்பியுள் ளார்.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை:

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், டிச.20இல் மதுரையில் அனைத்து சமுதாய பேரவை பாது காப்புக் கூட்டம் நடத்தி, ஜாதிக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேட்டி அளித்துள்ளார்.

இதன்படி, மதுரை மாவட்டத்திற்குள் நுழைய ஏன் தடை உத்தரவு விதிக்கக் கூடாது? என, ராமதா சுக்கு தாக்கீது அனுப்பப் பட்டுள்ளது. அவர், நேரில் ஆஜராகி விளக் கம் அளிக்க, உத்தர விடப்பட்டுள்ளது. -இவ்வாறு அறிக் கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

தமிழ் ஓவியா said...

எக்ஸ்னோரா நிர்மல் உருவாக்கியுள்ள மனிதனை மனிதநேயமாக்கும் மா என்ற அமைப்பை தமிழர் தலைவர் துவக்கி வைத்து வழிகாட்டுதல் உரை

எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் உலகம் அழியும் என்ற மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் இது மறையும் பூமியல்ல மலரும் பூமி என்ற நிகழ்ச்சியும், மா என்ற புதிய மனிதனை மனிதநேயமாக்கும் அமைப்பு தொடக்கவிழாவில் தமிழர் தலைவர் உரையாற்றினார். (21.12.2012 சென்னை)

சென்னை, டிச.23-சென்னை எல்.அய்.சி. எதிரில் உள்ள செங்கல்வராயன் கட்டடத்தில் உள்ள ஆறாவது மாடியில் டென்த் பிளானட் அரங்கில் 21.12.2012 அன்று காலை 10 மணிக்கு எக்ஸ்னோரா அமைப்பின் சார்பில் உலகம் அழியும் என்ற மூடநம்பிக்கையை ஒழிக்கும் வகையில் இது மறையும் பூமியல்ல மலரும் பூமி என்ற நிகழ்ச்சியும், மா என்ற புதிய மனிதனை மனிதநேயமாக்கும் அமைப்பு தொடக்கவிழாவும் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முதலாவதாக உலகம் வாழும்! வாழ வைப்போம்! என்ற கருத்து பலகையில் உலகம் அழியாது என்ற புரட்சிகரமான கருத்துகளை சிறப்பு விருந்தினர்கள் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி. எக்ஸ்னோரா நிர்மல், கலைமாமணி வி.ஜி.சந்தோசம், பெரியார் பன்னாட்டமைப்பின் இயக்குநர் சிகாகோ டாக்டர் சோம.இளங்கோவன், எமரால்ட் ஒளிவண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், ஏ.அய்.பி.இ.ஏ. இன் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம், வி.ஜி.நரேந்திரபாபு, தூறல்நம்பி ஆகியோர் கையொப்பமிட்டு பதிவு செய்தனர்.
மா அறிமுகம்
மா என்ற அமைப்பினை துவக்கி வைத்தும் மா நூல் மற்றும் குறுந்தகட்டினையும், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட ஜி.ராம கிருட்டிணன், வி.ஜி.சந்தோஷம் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களுக்கு சுற்றுச்சூழலை பாது காக்கும் நோக்கில் சால்வைக்கு பதிலாக பூஞ்செடி கள் வழங்கப்பட்டன.

விழா அரங்கிற்கு வருகை தந்த அனைவரையும் டென்த் பிளானட்டின் தலைமை அதிகாரி குமரன் மணி வரவேற்றார். விழாவிற்கு தலைமையேற்ற எக்ஸ்னோரா நிர்மல் அவர்கள் மா அமைப்பின் அவசியத்தையும் பூமியை நாம் காப்பாற்ற வேண்டும். அதே நேரத்தில் மதத்தின் பேராலும், போதையின் பேராலும், கிருமிகளாலும் மனிதன் வதைபடுவதை கண்காட்சி மூலம் படங்கள் போட்டு காண்பித்து விளக்கிக் கூறினார்.

சிறப்பு விருந்தினர்கள் லயன்ஸ் சங்கத்தின் முன்னாள் கவர்னர்கள் வி.ஜி.நரேந்திரபாபு, எமரால்ட் ஒளிவண்ணன், அகில இந்திய வங்கி பணியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம், பசுமை போராளி தூறல் நம்பி, மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ஜி.ராமகிருட்டிணன், கலைமாமணி வி.ஜ.சந்தோசம் ஆகியோரின் உரைக்குப் பின்னர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார். தமது உரையில்:

தமிழ் ஓவியா said...

நிர்மல் அவர்கள் தொடக்க காலத்தில் தெருவில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இன்று எக்ஸ்னோரா என்ற மிகப்பெரிய அளவில் பணிகளை வளர்த் திருக்கிறார். சிலர், வீட்டின் மூலையில் இருக்கும் குப்பைகளை கவனமாக வெளியேற்றி விடுவார்கள். ஆனால், மூளைக்குள் இருக்கும் குப்பையை வெளி யேற்றாமல் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். அதனால்தான் இந்த மாதிரி உலகம் அழிந்துவிடும் என்று மூட நம்பிக்கைகளைப் பரப்பிக் கொண்டி ருக்கின்றனர்.

அழிக்க வேண்டியவை ஏராளம் இருக்கின்றன

இந்த பூமியில் ஜாதிவெறி ஒழிக்கப்படவேண்டும். மதவெறி ஒழிக்கப்பட வேண்டும். குடிவெறி ஒழிக்கப்பட வேண்டும். அவ்வளவுதானே தவிர வேறொன்றுமில்லை. இப்படிப்பட்ட விழிப்புணர் வும், மா என்ற இயக்கம் தொடங்கப் பட்டிருப்ப தற்கு முதலில் மயனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அடிப்படை உரிமைகள்

பொதுவாக மக்கள் தமக்குள்ள உரிமையை பற்றி பேசுகிறார்களே தவிர, கடமைகளைப் பற்றி பேசுவதில்லை. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில், 51 ஏ (எச்) பிரிவு, அறிவியல் மனப் பான்மை, கேள்வி கேட்டல், மனிதநேயம், சமூக மாற்றம் ஆகியவற்றை ஒவ்வொரு குடிமகனுக்கு மான அடிப்படைக் கடமைகளாகக் கூறுகிறது. அப்படி கேள்வி கேட்டதால்தான், உலகம் அழியாது என்று அழிந்துவிடும் என்று சொன்ன நாளிலே நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்

ஆகவே, நல்ல உலகம், அறிவு உலகம், அன்பு உலகம், வளர்ச்சி பெறும் உலகமாக இனிவரும் உலகம் மாற்றப்படவேண்டும். அதற்கு, இந்த மா அமைப்பு எந்த வித எதிர்பார்ப்பும். இன்றி விமர்சனங்களைக் கண்டு கவலைப்படாமல் எதிர்நீச்சல் போட்டால், அரசாங்கங்களே இதன் பின்னால் வரும் என்று வாழ்த்துகிறேன் என்று மேலும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார்.

விழாவில் எக்ஸ்னோரா நிர்மல் அவர்களின் மகனும் சமூகத்தில் உள்ள இளைஞர்களுக்கு உதவுபவருமான மனோஜ், நிகழ்ச்சிக்கு இடம் வழங்கியும், தமிழர்களுக்கு உதவ வேண்டும் என பல்வேறு முயற்சி செய்து வருபவருமான குமரன் மணிக்கும் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டினார்.

நிறைவாக ஆர்.கோவிந்தராஜ் நன்றி கூறினார். இவர் நிகழ்ச்சியில் இரா.வில்வநாதன், செங்குட்டு வன், உடுமலை வடிவேல், எமரால்ட் ஒளிவண்ணன் இணையர் நல்லினி மற்றும் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழ் ஓவியா said...


யார்? ஆரியரா? அவர் அடிமைகளா?


- தந்தை பெரியார்

1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தவர் யார்?

2. திராவிட இராவணப் பெரியாரை இராமாவ தாரங்கொண்டு கொன்றது யார்?

3. திராவிட சூரபத்மனை முருகனாக வந்து கொன் றது யார்?

4. திராவிட இரணியனை நரசிம்ம ரூபம் கொண்டு கொன்றது யார்?

5. கம்சனைக் கிருட்டிணனாக வந்து கொன்றது யார்?

6. திராவிட நரகாசுரனை மகாவிஷ்ணு ரூபத்தில் கொன்றது யார்?

7. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?

8. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?

9. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?

10. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி இவை களைச் சுட்டுத் தின்று சுராபானம் அருந்தியது யார்?

11. வருணாசிரம தருமத்தைப் பிறப்பித்தவன் யார்?

தமிழ் ஓவியா said...

12. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?

13. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?

14. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?

15. உயர்ந்த உத்தியோகத்தில் இருப்பவர்கள் யார்?

16. மோட்சலோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட்டு கொடுப்பவன் யார்?

17. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?

18. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்துபவன் யார்?

19. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?

20. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியவர் யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?

21. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில் சாய்ந்து சாப்பிடுவது யார்?

22. பல ஜாதிகளையும், மதங்களையும் உண்டு பண்ணி யது யார்?

23. உடன் கட்டை ஏறும்படி செய்து பெண்களை வஞ்சித்தது யார்?

24. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?

25. திராவிடன் ஆரியப்பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?

26. திராவிடன் ஆரியப் பாஷையைக் காதால் கேட்டிருந்ததற்காகக் காதில் ஈயத்தைக் காய்ச்சி விட்டது யார்?

27. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதி வைத்தவன் யார்?

28. திராவிட சோதரி சூர்ப்பநகையை மானபங்கம் செய்தவன் யார்?

29. வாலியைக் கொன்று மனைவியை சுக்ரீவனுக்குக் கூட்டி வைத்தது யார்?

30. இராவணனைக் கொன்று விபீடணனுக்குப் பட்டம் கட்டியது யார்?

31. சூரனைக் கொன்று சிங்கமுகனுக்குப் பட்ட மளித்தது யார்?

32. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?

33. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?

34. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டு களிப்பவன் யார்?

35. கடவுளைத் தரிசிக்க தரகனாக இருப்பவன் யார்?

36. ஆரிய சமாஜம், ராஷ்டீரிய சேவாசங்கம், இந்து மகாசபை, கம்யூனிஸ்ட் கட்சி, சோஷியலிஸ்ட் கட்சி இவைகளுக்குத் தலைவன், காரியதரிசி யார்?

37. வெள்ளையனை வெளியேற்றி, தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?

38. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?

39. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?

40. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடது கையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?

41. பெண்ணை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?

42. தமிழ்நாடு வெறுத்த இராஜாஜியை வங்காளக் கவர்னராக்கியது யார்? இன்று கவர்னர் ஜெனரலாக்கியது யார்?

43. கதர்வேட்டி கட்டிக் காங்கிரசில் தலைமைப் பதவியிலிருப்பவர் யார்?

44. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சம் கேட்கும் பஞ்சாங்கம் யார்?

45. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?

46. நான்கு ஜாதிகளை உண்டு பண்ணியவன் யார்?

47. மதவெறி பிடித்தலையும், மடையனும் முட்டாளும் யார்?

48. முதல் ஜாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?

49. ஜமீன் ஒழிப்பு மசோதாவைத் தடை செய்தது யார்?

50. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?

தமிழ் ஓவியா said...


51. வில்வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?

52. காப்பி ஓட்டல் முதல் கலெக்டராபீஸ் வரை உயர்ந்த பதவியிலிருப்பவன் யார்?

53. உலகில் கோடீஸ்வரனாயும், ஜமீன்தாரியாயும் இருப்பவன் யார்?

54. தாசில் வந்தால் கொம்பு ராஜினாமாக் கொடுத்து விட்டால் சொம்பு என்று சொன்னது யார்?

55. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?

56. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?

57. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?

58. ஜாதி வித்தியாசமேயில்லை எல்லோரும் ஒன்று எனக் கூறுபவன் யார்?

59. ஜாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?

60. ஜாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்தும் கை வாளேந்தும் என்றவன் யார்?

61. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?

62. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?

63. காந்தியார் சாம்பலை நதிகளில் கரைத்து விட்டது யார்?

64. காந்தியாருக்கு ராம்தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?

65. காந்தியார் மகனுக்குப் பெண் கொடுத்தது யார்?

66. காந்தியாரை மகானாக்கி, மகாத்மாவாக்கியது யார்?

67. காந்தியாருக்கு நிதி திரட்டி ஏப்பமிடுவது யார்?

68. காந்தியாருக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்வது யார்?

69. காந்தியார் கோயிலுக்கு அர்ச்சகனாக வரப் போகிறவர் யார்?

70. காந்தியார் கொலை வழக்குகளைப் பிரசுரிக்கக் கூடாதென்பவர் யார்?

71. பெரியார் சொன்ன காந்தி சகாப்தம், காந்தி மதம், காந்தி தேசம் வேண்டாமென்றது யார்?

72. திராவிடர் இழிவு நீங்க அணிந்திருந்த கருப்புச் சட்டைகளுக்குத் தடை விதித்தது யார்?

73. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்து விட்டது யார்?

74. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்திரவு போட்டுச் சோதனையிட்டவர் யார்?

75. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?

தமிழ் ஓவியா said...

76. திராவிடனைத் தலையெடுக்காமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?

77. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?

78. சுதேசமித்திரன், தினமணி, பாரததேவி, தினசரிப் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் யார்?

79. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?

80. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?

81. உலகம் போற்றும் உத்தமர் காந்தியார் உயிருக்கு உலை வைத்த கூட்டம் எது?

82. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?

83. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?

84. சமணர்களைக் கழுவேற்றியது யார்?

85. சந்திர குப்தனுக்கு சாம்ராஜ்யம் கிடைக்கும்படி செய்தது யார்?

86. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?

87. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?

88. வல்லாள மகாராசாவின் மனைவியை பெண்டாளக் கேட்டது யார்?

89. அசோக வம்சத்தாரை அழித்தவன் யார்?

90. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராமபுராணமும் கட்டியது யார்?

91. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?

92. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக்கொடுப்பவன் யார்?

93. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியவன் யார்?

94. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?

95. பல காமாந்தகாரக் கடவுளர்களை உண்டு பண்ணியது யார்?

96. நம்மைப் பல ஜாதிகளாக்கி மொழி, கலை, நாகரிகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?

97. எண்ணத் தொலையாத இறைவனை உண்டாக்கி எழுதியது யார்?

98. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளைகுட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?

99. எவ்விதத் தொடர்புமின்றி சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?

100. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

- குடிஅரசு - துணுக்குகள் - 22.01.1949

தமிழ் ஓவியா said...


வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?

ஆசிரியருக்குக் கடிதம்

வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?

ஒரு பிராமணச் சிறுவன், பிராமணரல்லாத சிறுவ னுடன் உட்கார்ந்து சாப்பிட்டதாகக் கேள்வியுற்றால் நான் இதற்காக 10 தினங்கள் பட்டினி கிடப்பேன்... என்று திருச்சியில் 1925ஆம் ஆண்டு மே மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் எம்.கே. ஆச்சாரியார் என்பவர் முழங்கியிருக்கிறார். ஜாதி வெறி, எந்த அளவுக்கு தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு!

இந்த ஜாதியக் கொடுமை, 1925-ல் மட்டுமல்ல! 2012ஆம் ஆண்டிலும் - தர்மபுரியை அதர்மபுரியாக ஆக்கியிருக்கிறது. நாம் கணினி காலத்தில் வாழ்கிறோமா? அல்லது காட்டுமிராண்டிக் காலத்தில் வாழ்கிறோமா? என்றே புரியவில்லை!

ஜாதி முறை மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கிறது. மனிதநேயத்தையே கொன்று, பண்பைக் குறைக்கிறது. அன்பைக் கெடுக்கிறது. மனிதனுக்கு மனிதனே பகைவன் ஆகிவிடுகிறான்! ஊரில் ஜாதிக் கலவரங்களை மோதல்களை உருவாக்கி பற்பல உயிர்களை பலி வாங்கி விடுகிறது சமுதாய முன்னேற்றத்திற்கே தடை போட்டு விடுகிறது. பகுத்தறிவைப் பாழ்படுத்தி அறியாமைக்கு மகுடம் சூட்டுகிறது. கருவிலிருந்து கல்லறை வரை மனிதர் களைப் பிளவுபடுத்தி அவர்களது மனிதநேய உறவு முறையை அழிக்கிறது. மொத்தத்தில் மனிதனை, மிருகமாக்கி அவனைக் காட்டுமிராண்டிக் காலத் துக்கே அழைத்துச் சென்று விடுகிறது! இத்தகைய கேடு கெட்ட ஜாதியை அறவே ஒழித் துக் கட்டத்தான் தந்தை பெரியார் காலமெல்லாம் பாடுபட்டார்! அதற்காக எவ்வளவோ கொடுமை களையும் அனுபவித்தார்! விளைவு?

ஜாதியின் கட்டுக்கோப்பு குலைந்தது! ஜாதியை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்வதே இழிவு என்ற நிலை பிறந்தது? தெருக்களுக்கு இருந்த ஜாதிப் பெயர்கள் தொலைந்தன. கலப்பு மணங்களும், காதல் திருமணங்களும் நாடெங்கும் பெருகின. மனிதன் மனிதனாக வாழ முற்பட்டான்!
ஆனால், ஜாதியைக் கொண்டே, பிழைக்க நினைப்போரின் சதிச் செயல்களால்... மீண்டும் ஜாதி வெறி தலைதூக்கி கோரத் தாண்டவமாடத் தொடங்கி இருக்கிறது. இதை முறையிலேயே கிள்ளியெறிய வேண்டும். பெரியார் பூமியிலே ஜாதி அறவே தொலைந்து விட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்! இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்!!

இந்த சீரிய நோக்கத்திற்காகவே இன்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களின் பெரு முயற்சியால் பெரியார் பெருந்தொண்டர்களின் ஆதரவோடு - தர்மபுரியில் நடைபெற்ற மாபெரும் ஜாதி ஒழிப்பு - தீண்டாமை ஒழிப்பு மாநாடு பயனுள்ள தீர்மானங்களோடு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

தீர்மானங்களை செயல்படுத்த, தமிழக மக்களும், அரசும் ஆர்வத்தோடு முன்வர வேண்டும்!.. குழந்தை களுக்கு பெயர் வைப்பதில் கூட ஜாதிக்கான அடையாளங்களே இல்லாமல் செய்திட வேண்டும். அரசமைப்புச் சட்டத்திலேயே, ஜாதியைத் தடை செய்து சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும். மீறுவோர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

ஜாதிகள் இல்லா சமுதாயமாக உலகுக்கே நம் நாடு வழி காட்ட வேண்டும்!.. முடியுமா? முயன்றால் முடியும்! முடியாதது எதுவுமில்லை!! இதற்கு.. என்றைக்கும் வழிகாட்டத் தந்தை பெரியார் இருக் கிறார்! ஆசிரியர் இருக்கிறார்!! வெற்றிக்கு வேறென்ன வேண்டும்?
- நெய்வேலி க. தியாகராசன்,
கொரநாட்டுக் கருப்பூர்

தமிழ் ஓவியா said...


இலங்கை மண்ணில் இனப்படுகொலை தொடர்கிறது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், நியூரெம்பெர்க்கிலும், டோக்கி யோவிலும் போர்க் குற்றங்களுக்காக விசாரணை நடைபெற்றது. போர்க் குற்றங்கள் புரிந்த நபர்கள், சர்வதேசச் சட்டத்தின் கீழ், தனிநபர்களின் நேரடிப் பொறுப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தண்டிக்கப்பட்டனர். அய்க்கிய நாடு களின் பொதுமன்றமும் 1946 ஆம் ஆண்டு டிசம்பர் 11அன்று தீர்மானம் 95(1)-ன்படி தீர்ப்பாயங் களால் நடத்தப்பட்ட நீதி விசாரணை யையும், வழங்கிய தண்டனையையும் உறுதிசெய்தது.

அதே நாளன்று நிறைவேற்றப்பட்ட 96 (1) தீர்மானத் தின்படி சர்வதேசச் சட்டத்தின் கீழ் இனப்படுகொலை ஒரு குற்றம் என்றும், அதற்கான குற்றம் இழைத்த வர்கள், அவர்கள் ராஜிய வாதிகள், (அரசு) பொது அதிகாரிகள் அல்லது தனி நபர்கள் என்று யாராக இருப்பினும், தண்டனைக்கு உரியவர் கள் என்று அய்.நா. பொதுமன்றம் பிரகடனம் செய்தது.

அதன்பிறகு அய்.நா. அமைப்பு எடுத்த முயற்சிகளின் காரணமாக இனப்படு கொலை உடன்படிக்கை என்று அறியப்படும் இனப்படுகொலை குற்றத்தடுப்பு மற்றும் கண்டனம் பற்றிய உடன்படிக்கை 1948-ஆம் ஆண்டு அய்.நா. பொதுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு 1951-ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது.

அந்த உடன்படிக்கையின்படி, எந்த விதமான இனப் படுகொலைச் செயலும், போர்க்காலத்திலோ அல்லது அமைதிக் காலத்திலோ இழைக்கப்பட்டிருந்தாலும், சர்வதேசச் சட்டத்தின் கீழ் குற்றமாகும். இந்த உடன்படிக்கை இனப்படுகொலையை இவ்வாறு விளக்குகிறது:

ஒரு குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தும், குழுவின் உறுப்பினர்களுக்கு படுமோசமாக உடல் ரீதியிலோ அல்லது மனரீதியிலோ தீங்கு விளை வித்தும், ஒருகுழு அழிந்து போவதற்காகவே வாழ் நிலைமைகளை வேண்டுமென்றே அழித்தும், அக் குழுவுக்குள் பிறப்புகளைத் தடுக்கும் நோக்குடன் நடவடிக்கைகளைத் திணித்தும் அல்லது அக்குழுவின் குழந்தைகளை மற்றொரு குழுவிற்கு நிர்ப்பந்தமாக மாற்றியும் ஒரு தேசிய, இன அல்லது மதக் குழுவை அழிக்கும் நோக்குடன் இழைக்கப்படும் செயல் கள், போர்க்குற்றம் சுமத்தப்பட்ட நபர்களை - குற்றம் இழைக்கப்பட்ட நாட்டின் தகுதி வாய்ந்த தீர்ப்பாயமோ அல்லது சம்மந்தப்பட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அதிகார எல்லை கொண்ட எந்த சர்வதேச தண்டனைத் தீர்ப்பாயமோ விசாரணை செய்யலாம்.

இவ்வாறு 1948-க்குப் பிறகு இனப்படு கொலை என்பது தனி நபர்களால் இழைக்கப்படும் குற்றம் என்றும் அது சர்வதேசச் சட்டத்தின் கீழ் தண்டனைக் குரியது என்றும் கருதப்படுகிறது.

இனப்படுகொலை என்பதற்கான மேற்கூறிய விளக்கத்தின்படி பார்த்தால் ஒரு குழுவின் பெண்ணை மற்றொரு குழுவின் ஆண் மணப்பதற்குக் கட்டாயப்படுத்தும் சூழ்நிலைகளை உருவாக்கும் எந்தச் செயலும் இனப்படு கொலை ஆகும். அத்தகைய செயல், படுமோசமான உடல் ரீதியாகத் துன்பம் இழைத்தல் மற்றும் அந்தக் குழு அழி வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப் படும் நிலைமை அல்லது அக்குழுவுக் குள் பிறப்புகளைத் தடுக்கும் நடவடிக் கைகளைத் திணித்தல் என்ற கோட் பாட்டுக்குள் வரும்.

இலங்கையில் தமிழ்ப் பெண்கள் இலங்கை இராணு வத்தினரைத் திரு மணம் செய்ய நிர்ப் பந்திக்கப்படுகின்ற னர் என்று முன்னாள் தமிழக முதல்வரும் டெசோ அமைப்பின் தலைவருமான கலைஞர் அவர்கள் இரண்டு நாட் களுக்கு முன் இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள் ளதைக் கவனிக்க வேண்டும்.

அத்தகைய எந்தவிதமான நிர்ப் பந்தமும் சர்வதேசச் சட்டத்தின் கீழ் சர்வதேச தீர்ப்பாயங்கள் உட்பட தகுதி வாய்ந்த தீர்ப்பாயங்களால் தண்டனைக் குரிய குற்றமான இனப்படுகொலை செயலே ஆகும். இப்பிரச்சினையை அய்.நா. மன்றத் திற்கும் கொண்டு செல்லலாம். டெசோ அமைப்பின் சார்பில் அய்.நா. மன்றத்திற்கு இப்பிரச் சினை கொண்டு செல்லப் பட்டுள்ளது.

இலங்கையில் வாழும் தமிழர் களுக்கு எதிராகத் தொடரும் இனப்படுகொலைச் செயல்களைத் தடுக்க இந்திய அரசு உட்பட சம்பந்தப்பட்ட அனைவரும் தீர்மான கரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

- நன்றி: முரசொலி, 23.12.2012

தமிழ் ஓவியா said...


எண்ணூர் அழைக்கிறது - வாரீர்!


சென்னை - திருவொற்றியூரையடுத்த எண்ணூர் முக்கிய துறைமுக நகரமாகும்.

வரும் 25ஆம் தேதி மாலை 6 மணிக்கு அங்கு ஓர் எழுச்சிமிகு தமிழர் விழா!

தமிழினத்தைத் தட்டி எழுப்பித் தன்மான முதுகெலும்பைத் தந்த தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழா.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோர் தம் மறைவிற்குப் பிறகு கழகத்தைக் கட்டிக்காத்து, மேலும் எழுச்சி பெறச் செய்தவர்; தந்தை பெரியாரை இழந்த மானுடம் பெரும் ஆறுதல் பெறுவது இவரிடம் என்று உண்மைத் தமிழர்கள் அனைவரும் மரியாதையுடன் மதிக்கப்படும் தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவுலக ஆசானின் சிலையைத் திறந்து வைக்க இருக்கிறார்.

நான் பெரியார் திடல் கொடியில் பூத்த மலர்! என்று எந்த இடத்திலும் சொல்லக்கூடிய எழுச்சித் தமிழர் மானமிகு தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கர்ச்சனை செய்யவிருக்கிறார்.

விழாவுக்கான ஏற்பாடுகளைத் தடபுடலாகச் செய்கிறார்கள் கழகப் பொறுப்பாளர்கள்.

கட்சி வண்ணங்களைக் கடந்து தந்தை பெரியார் சிலையை எண்ணூர் வணிக வளாகத்திலே வைப்போமென்று அன்புக் கரங்களை நீட்டும் திராவிட தமிழர்கள் அந்தப் பகுதியிலே அதிகம்.

எண்ணூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு - சுவரெழுத்து விளம்பரம்

நம்முடைய கழக பொறுப்பாளர்களின் இனிய அணுகுமுறை அனைவரையும் கவர்ந்து இழுத் துள்ளது என்றால் மிகையல்ல.

நீண்டகால கனவுத் திட்டத்தை நமது தோழர்கள் நிறைவேற்றி முடித்திருக்கிறார்கள்.

தந்தை பெரியார் வாழ்ந்த காலத்திலும், மறைந்த இந்தக் காலகட்டத்தில் மிக அதிகமாக நினைக்கப் படுகிறார் - பேசப்படுகிறார் - நேசிக்கப்படுகிறார் - சுவாசிக்கப்படுகிறார் - அதைவிட மிகவும் தேவைப் படுகிறார் என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது.

ஜாதிப் பிரச்சினையா? மதப் பிரச்சினையா?

சமூக நீதியா?

மகளிர் உரிமையா?

மூடநம்பிக்கை ஒழிப்பா?

தமிழின ஒற்றுமையா?

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடா?

எந்தப் பிரச்சினையிலும் தந்தை பெரியார் அவர்களின் கருத்து அலசப்படுகிறது - ஆரோக்கிய மாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது!

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

ஆம், உலகளாவிய அளவில் தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை வெளிச்சம் எதிர்பார்க்கப் படுகிறது.

கழன்றிடுவோம்

கணம்தோறும்

கணம்தோறும்

எதிர்பார்க்கப்படும்

தலைவராவார்!

- என்று சொன்னவரும் புரட்சிக்கவிஞர்தான்.

மதமென்னும் காரிருள் மானுடத்தின் கழுத்தைக் கவ்விப்பிடித்து இறுக்கும் காலகட்டம் இது. உலகை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் எரிமலையாக அது, தன் குழம்பினைக் கக்கி கொண்டு இருக் கிறது.

உலகில் அமைதித் தென்றலின் மணம் வீசப்படவேண்டுமானால், சமத்துவப் பொன்மழை கிடைக்க வேண்டுமானால், சமதர்ம சங்கநாதம் ஒலிக்கப்பட வேண்டுமானால் மதமற்ற ஓர் உலகு தேவை என்று உணரப்படும் காலகட்டம்.

அவற்றைத்தரக்கூடிய பொதிகை மலையாக, வான் தவழும் மேகமாக, ஒளிவீசும் ஞாயிறாக விளங்கக்கூடிய ஒப்பாரும், மிக்காரும் இல்லாத தலைவர் தந்தை பெரியார் அல்லவா! உயர் எண்ணங்கள் மலரும் சோலையல்லவா!

வீட்டுக்கு வீடு அவர் கருத்து பரவ வேண்டும், வீதிக்கு வீதி அந்த வெண்தாடி வேந்தரின் சிந்த னைகள் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அன்றைக்கே கவுதமப் புத்தனின் கருத்துகளை அசோக மன்னன் தன் மகள் சங்கமித்திரையை இலங்கைக்கு அனுப்பிப் பரப்பச் செய்யவில்லையா? நாடெங்கிலும் நல்முத்தாம் சித்தார்த்தனின் சிந்தனைகளைக் கல்வெட்டாகச் செதுக்கி வைக்கவில்லையா?

இன்றும் இந்திய அரசின் கவுதம புத்தனின் அசோகச் சக்கரம்தானே நினைவுச் சின்னம்.

இப்பொழுதும் மாநிலத்தின் தலைநகரமெங்கும் தந்தை பெரியார் அவர்களின் அறிவுச்சுடர் விளங்க வில்லையா?

ஒரு காலம் வரும் அரசின் சின்னமாக அய்யா வின் சுடர் ஒளிவீசும்.

ஊருக்கு ஊர், தந்தை பெரியார் அவர்களின் சிலை கம்பீரமாக நிற்க வேண்டும்; அதன் பீடத்தில் அவர் வடித்த புரட்சிச் சிந்தனைகள் செதுக்கப்பட வேண்டும்.

காஞ்சி மடத்திற்கு முன்பும், சிறீரங்கம் ரங்கநாதனுக்கு முன்பும்கூட தந்தை பெரியார் கம்பீரமாக காட்சி அளிக்கவில்லையா?

எண்ணூர் தோழர்கள் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமையையும் செய்து முடித்தனர். அவர்களை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்! தகும்!!

25ஆம் தேதி எண்ணூர் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மக்கள் கடலில் மிதக்கட்டும்! மிதக்கட்டும்!!

கழகத் தோழர்களே, குடும்பம் குடும்பமாக வாரீர்!

இனவுனர்வாளர்களே எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்று கூடுவீர்!

மகளிர் திரளட்டும்

தொழிலாளர் தோழர்கள்

தோள்தட்டிக் கிளம்பட்டும்

கட்சியில்லை ஜாதியில்லை - மதம்

இல்லை - நாம் ஒரே இனத்தவர் அந்த இனத்தின் தந்தை ஒப்பற்ற தலைவரின் சிலை திறப்பு விழாவாயிற்றே - நம் ஒவ்வொருவரின் குடும்ப விழாவாயிற்றே!

வாரீர்! வாரீர்!!

வங்கக்கடல் வந்ததோ என்று வியக்கும்

வண்ணம்

வாரீர்! வாரீர்!!