Search This Blog

13.12.12

ஆன்மீகச் சிறப்பிதழ்களை வெளியிடும் நாளேடுகள் பகுத்தறிவுச் சிந்தனை சிறப்பிதழை வெளியிடக் கூடாதா?

  • ஊழல் குற்றம் சுமத்தப்பட்ட அய்.ஏ.எஸ். அதிகாரியைக் கைது செய்ய நடவடிக்கை - தனி நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்.
  • சங்கராபுரம் அருகே துப்பாக்கியால் சுடப்பட்ட பெண் சாவு! விவசாயி காவல் நிலையத்தில் சரண்!
  • கரூர் அருகே நகைக்கடை அதிபரிடம் ரூ.ஒரு கோடி நகை, பணம் கொள்ளை.
  • பேருந்து படிக்கட்டில் தொங்கியதைத் தட்டிக் கேட்ட நடத்துநருக்கு அடி - உதை! கல்லூரி மாணவர்கள்  7 பேருக்கு வலை வீச்சு!
  • திருடியதாக மூன்று சிறுமிகளைக் கட்டி வைத்துத் தாக்கிய இரு பெண்கள் உட்பட மூவர் சேலத்தில் கைது!
  • வங்கி மோசடி செய்த தொழில் அதிபர் மனைவிக்கு ரூ.26 லட்சம் அபராதம் - சி.பி.அய். நீதிமன்றம் தீர்ப்பு.
  • அனுமதியில்லாமல் கட்டிய தேவாலயத்துக்குச் சீல் வைப்பு
  • என்ஜினீயராக நடித்து மருத்துவ மாணவியை மயக்கிய ஆட்டோ ஓட்டுநர் கைது.
  • கொடை ரோடு - ரூ.4000 லஞ்சம் வாங்கிய காவல்துறைத்  துணை ஆய்வாளர் கைது.
  • ஈமு கோழிப் பண்ணை அதிபர் கடத்தல்
  • காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய வாலிபர்.
  •  
இவையெல்லாம் ஒரே நாளில் ஏடுகளில் வெளிவந்த தகவல்கள் - நாடு எங்கே போய்க் கொண்டு இருக்கிறது? இளைஞர்களின் திக்கு எதை நோக்கி?
இந்தத் தீய வட்டத்திலிருந்து விடுபட வைப்பது எப்படி என்பது குறித்து சமூக ஆர்வலர்கள், நன்னெறியாளர்கள், சமூக அமைப்புகள் சிந்திக்க வேண்டிய தருணம் இது.

பள்ளிக்கூட மாணவனே ஆசிரியையைக் கத்தியால் குத்திக் கொல்லுகிறான்.
லாரியை மடக்கி ஓட்டுநரைக் கொன்று பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் மாணவர்கள். அய்ந்து நட்சத்திர ஓட்டலில் உல்லாசமாக இருப்பதற்காக இதைச் செய்ததாக வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

நமது கல்வியோ நல்ல அறிவையும் புகட்டவில்லை; நல்லொழுக்கத்தையும் பயிற்றுவிக்கவில்லை.

நமது ஊடகங்கள் பற்றியோ கேட்கவே வேண்டாம். சினமா அட்டைப் படம் இல்லாத வார இதழ்களைக் காட்டுங்கள் பார்க்கலாம். (பாரம்பரியம் வாய்ந்த தாகக் கூறப்படும் ஆனந்தவிகடன் உட்பட)

அட்டைப் படம் மட்டுமல்ல, வார இதழ்களின் உள்ளடக்கம் முழுவதும் நீக்கமற நிறைந்திருப்பது சினிமா சமாச்சாரங்கள் தான். நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி அலசல்கள்தான்.

சின்னத் திரையும், பெரிய திரையும் போட்டி போட்டுக் கொண்டு, மக்களைக் கெடுப்பதில் யாருக்கு முதல் பரிசு என்ற போட்டிதான். நுகர்வோர் கலாச்சாரம் என்ற கழுத்தறுப்பு ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து விளையாட ஆரம்பித்து விட்டது.

திரிசூலப் பொருளாதாரக் கொள்கை பெற்றுக் கொடுத்த சீதனம் இது.
இதைப்பற்றி எல்லாம் எத்தனை அரசியல்வாதிகள் கவலைப்படுகிறார்கள்? தடுக்கி விழுந்தவன் அரிவாள் மனையில் வீழ்ந்ததுபோல போதும் போதா தற்கு அறிவையும், காலத்தையும், பொருளாதாரத் தையும் நாசப்படுத்தும் கோயில் திருவிழாக்கள்.

நல்லது சொல்ல தலைவர்கள் இல்லையா? ஒழுக்கத்தைப் போதிக்க ஊடகங்கள் இல்லையா?

அறிவையும், நல்லொழுக்கத்தையும் புகட்டக் கல்வித் திட்டங்கள் இல்லையா?
இன்னும் சொல்லப் போனால் நாட்டின் இந்த நிலையை நினைத்துப் பார்க்கத் தக்க மனிதர்கள் இல்லையா என்ற கேள்விகள் செங்குத்தாக எழுந்து நிற்கின்றன.

என்ன செய்வது! தந்தை பெரியார் சிந்தனைகளை உள் வாங்கிக் கொண்டதால் நாம் மட்டும் இதுபற்றி எல்லாம் சிந்திக்கிறோம்; கவலைப்படு கிறோம்;
எழுதுகிறோம். பிரச்சாரம்  செய்கிறோம். ஆனால் இதைப்பற்றி  எந்த ஊடகங்கள் உரிய வகையில் வெளியிடுகின்றன என்பதுதான் கேள்வி.
வாரந் தவறாமல் ஆன்மீகச் சிறப்பிதழ்களை வெளியிடும் நாளேடுகள், அறிவார்ந்த பகுத்தறிவுச் சிந்தனை சிறப்பிதழை வெளியிடக் கூடாதா?


      -------------------------"விடுதலை” தலையங்கம் 13-12-2012

4 comments:

தமிழ் ஓவியா said...


தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கான சந்தா சேகரிப்பு இயக்கம்


பகுத்தறிவாளர் கழக மாநில, மாவட்டப்
பொறுப்பாளர்களுக்கான அறிவிப்பு!

பகுத்தறிவாளர் கழகப் புரவலர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 80ஆவது பிறந்தநாளை, சுயமரியாதை நாளாக, பகுத்தறிவுக் கொள்கை பிரச்சார விழாவாக, இயக்கத்தின் சார்பில் டிசம்பர் 2ஆம் நாளன்று சிறப்பாக நடத்தி முடித்தோம். அந்த விழாவில் அளிக்கும் விதமாக இயக்கத்தின் ஒவ்வொரு அணியினரும், இயக்க இதழ்களுக்கு சந்தா சேகரிக்கும் பணியினை மேற் கொண்டோம். பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக இயக்கத்தின் ஆங்கில மாத இதழான தி மாடர்ன் ரேசனலிஸ்ட்க்கு சந்தா சேகரித்து அளித்திடும் பணியினை மனமுவந்து ஏற்றுக் கொண்டோம்.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கு சந்தா சேகரிக்கும் பணிபற்றி சென்னையில் அக்டோபர் மாதம் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்தோம். பின்னர் சுற்றறிக்கை வாயிலாகவும் நினைவூட்டினோம். இருப்பினும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக டிசம்பர் 2ஆம் நாளில் அளிக்கப்பட்ட சந்தாவின் அளவு மிகவும் குறைவே. பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் எடுத்த முயற்சிகளின் பலன் கிட்டுவதில் சற்று தாமதம் ஏற்படுவதாக அறிகிறோம். சில பொறுப்பாளர்கள் நேரில் வந்து சந்தா தொகையினை அளிக்க இயலாமையையும் தெரிவித்து உள்ளனர்.

தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழுக்கான சந்தா அளவினை குறைவாக வழங்கிய மாவட்டங்களும், இதுவரை சந்தா அளித்திடாத மாவட்டங்களும் முனைப்பாக சந்தா சேகரிப்புப் பணியில் ஈடுபட்டு ஏற்றுக் கொண்ட பொறுப்பினை நிறை செய்திட கேட்டுக் கொள்கிறோம்.

ஏற்றுக் கொண்ட பணியில் அக்கறை, முழுமையான ஈடுபாடு கொண்டுள்ள அமைப்பு பகுத்தறிவாளர் கழகம் என்பதை பொறுப்பாளர்கள் அனைவரும் உணர்வீர்கள். எனவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அளிக்கப்பட்ட சந்தா அளவான 100, ஆண்டு சந்தாவினை முழுமுயற்சி எடுத்து வெற்றிகரமாக முடித்திட கேட்டுக் கொள்கிறோம்.

மாநிலப் பொறுப்பாளர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட சந்தா அளவான 100 எண்ணிக்கையினை நிறைவு செய்வதோடு, தங்களது பகுதிக்கு உட்பட்ட மாவட்டங்களின் பணியினையும், ஒருங்கிணைத்து முடித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கால நீட்டிப்பினை தவிர்த்து தி மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிப்பினை நிறைவு செய்திட வேண்டுகிறோம். இந்தப் பணியில் மேலும் தேவைப்படும் விவரங்களுக்கு மாநிலப் பொறுப்பாளர்களிடம் தொடர்பு கொள்ளவும்.

தந்தை பெரியார் நினைவு நாளில் (டிசம்பர்-24) தி மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தாவினை தமிழர் தலைவரிடம் வழங்கிடுவோம்.

வா.நேரு (தலைவர்), வீ.குமரேசன் (பொதுச் செயலாளர்), வடசேரி வ.இளங்கோவன் (பொதுச் செயலாளர்)

தமிழ் ஓவியா said...


ஆசிரியருக்குக் கடிதம்

நீடாமங்கலம் மொட்டையடிப்புப்பற்றி
சி.பி.எம். தோழரின் கடிதம்

வணக்கம். நான் ஒருநாள் 20.10.2012 அன்று தங்கள் கல்வி நிறுவனத்தில் படித்து வரும் திவ்யா D/o வீரபாண்டியன் என்பவருக்கு வரும் விடுதலை நாளேட்டை படித்தேன். அதில் நீடா மங்கலத்தில் மொட்டையடித்த கதையை படித்தேன். அதை 1938இல் எழுதிய பரியாரி கே. ஆறுமுகம் என்பவர் மேற்படி கதையை என்னிடம் கூறினார். காரணம் அவருக்கு சொந்த ஊர் அனுமந்தபுரம் தான் மொட்டை அடிக்கப்பட்ட விவரம் குறித்து அய்யா, ஈ.வெ.ரா. அவர்கள் அதை வழக்காக்கி பார்ப்பனர் கொடுமைகளை அம்பலப்படுத்தினாராம். அந்த வகையில் பரியாரி ஆறுமுகம் S/o கதிர்வேல் அய்யாவின் பராமரிப்பில் பல வருடம் வளர்ந்தாராம். பிறகு காவல் துறையில் சேர்ந்து போலீஸாகி இறுதியில் ஓய்வு பெறும் போது போலீஸ் ரைட்டராக எனது ஊர் அருகாமையில் சுமார் 200 மீட்டர் தூரம் உள்ள ஆதனூரில்தான் வந்து தன் தங்கை தேனம்மாள் என்பவர் உதவியுடன் நிலம் புலம் வாங்கி உழைத் தார். அது சமயம் ஒரு நாள் எதிர்பாராத விதமாக அவர் வீட்டிற்கு சென்றபோது அய்யா, அம்மையார் வளர்த்த இரண்டாவதாக நாய் படம் ஆறுமுகம் வீட்டில் இருந்தபோது நான் சந்தேகப்பட்டு எப்படி காவல்துறையில் வேலை பார்த்த நீங்கள் அய்யா படத்தை இவ்வளவு பக்தியுடன் வீட்டில் மாட்டி உள்ளீர்கள் என்ற போதுதான் என்னிடம் மேலே கண்ட அனுமந்தபுரம் நிகழ்ச்சி, அதையொட்டி அய்யாவிடம் அவர் வளர்ந்தது. அது சமயம் நீங்கள் சிறு பையனாக இருந்ததாகவும் உங்களை ஆறுமுகம் குளிப்பாட்டி விடுவதாகவும் சொன்னார் அவருக்கு தற்சமயம் ஆதனூரில் நஞ்சை, புஞ்சை நிலம் உள்ளது. ஆதனூர் மணல் மேட்டு தெருவில் வீடும் உள்ளது. மகன்கள் 4 பேர். மூவர் சென்னையில் உள்ளார்கள். அவரின் மனைவி நெல்புலம் கிராமத்தில் பிறந்து ஆதனூரில் மறைந்து விட்டார்கள் பெயர் சாமியம்மாள், ஏன் இதை எழுதுகிறேன் என்றால் விடுதலை செய்தி எவ்வளவு உண்மையானது வரலாற்று சுவடுகள் முக்கால் நூற்றாண்டு ஆகியும் உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது என்பதுதான்.

என்னைப்பற்றி.....

நான் சிறுவனாக இருந்தபோது 1956-57களில் விடுதலை படித் துள்ளேன். குத்தூசி குருசாமி, அகப்பையார் கட்டுரைகள் படித்துள்ளேன். அதே போல் அம்மனூர் முன்னாள் ஊ.ம. தலைவர் ஆர். பாலையா வைத்திருந்த குடிஅரசு புத்தகம் முழுவதும் படித்துள்ளேன். தமிழ்நாடு நீங்கிய தேசபட எரிப்பு நாள் போராட்டத்தில் கலந்து கொள்ள விரும்பியபோது தலைவர் கீழக்களூர் சு.சாந்தன், நீ சின்ன பையன், உன்னை கைது செய்ய மாட்டார்கள் என்றும் கூறி உள்ளார். அய்யாவிற்கு திருத்துறைப் பூண்டியில் மான்குட்டி பரிசு அளித்த போது (நான் உயர்நிலைப்பள்ளி மாணவன்) அய்யாவை T.T.P. நாராயணப் பையர் லாட்சில் கை குலுக்கி உள்ளேன். இன்னமும் சுயமரியாதைக்காரனாக வாழ்ந்து வருகிறேன். CPIM தலைவர் தோழர் பி. ராமமூர்த்தி, பாப்பா ஊமாநாத் ஆகியோர் அய்யாவைப் பற்றி எழுதியவை, பேசியவைகளைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தவன் என்பதைப் பணிவாக தெரி வித்துக் கொள்கிறேன்.

- ஆர். நாராயணன் (சி.பி.எம்.)
பொன்னிரை

தமிழ் ஓவியா said...


கருநாடகம் இந்தியாவுக்குள் இருக்கிறதா?


அல்லது பாகிஸ்தானில் இருக்கிறதா?
செய்தியாளர்கள் கூட்டத்தில் தமிழர் தலைவர் கேள்வி!

தஞ்சாவூர், டிச.13- உச்சநீதிமன்ற ஆணைக்கும்கூட கட்டுப்படாத கருநாடகம் இந்தியாவிற்குள் இருக் கிறதா அல்லது பாகிஸ்தானில் இருக் கிறதா என்ற வினாவை எழுப்பினர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தஞ்சை வல்லத்தில் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித் தார். (12.12.2012)

அப்போது காவிரி நீர் பிரச்சினை தொடர் பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் அளித்த பதில் வருமாறு:

இந்திய நாடு ஒரே நாடு; ஒருமைப்பாடு என்று பேசிக்கொண்டு வால் பிடிக்கிறோம். வெளிநாட்டிலே ஒப்பந்தங்கள் சில மணி நேரங்களில் முடிந்துவிடுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம், காவிரி நதிநீர் ஆணையம் ஆகிய எதையும் மதிக்காமல் கருநாடக அரசு செயல்படுகிறது என்று சொன்னால், இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு மத்திய அரசு ஏன் இருக்கிறது என்பது புரியவில்லை. ஒருமைப்பாடு படும்பாடு நமக்குப் புரிகிறது.

அதேநேரத்தில், அவசரமாக செய்யவேண்டி யது உடனடியாக 365 அய் பயன்படுத்தி, உச்சநீதிமன்றத்தினுடைய ஆணைக்குக் கட்டுப்படாமல் ஒரு அரசாங்கம் இருக்கிறது என்றால், அது டிஸ்மிஸ் செய்யப்படவேண்டிய ஒரு அரசாங்கம் மட்டுமல்ல, அதோடு அடுத்த படியாக, மத்திய அரசினுடைய பாதுகாப்புப் படைகள், அவர்கள் பொறுப்பிலே இதுபோன்ற அணைகளை எடுத்துக்கொண்டு, உச்சநீதி மன்றம் என்ன சொல்லியிருக்கிறதோ, அதன்படி தண்ணீரைக் கொடுக்கவேண்டும்.

ஏனென்றால், அவர்கள் அப்படி செய்வதற்கு அரசியல் சட்டத்தில் சட்ட ரீதியாகவே இடம் இருக்கிறது. மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு, இரு மாநிலங்கள் மோதிக்கொண்டி ருப்பதையோ, அல்லது இரண்டு மாநிலங்களில் உணர்ச்சிபூர்வமாக விவசாயிகள் கஷ்டப் படுவதையோ, அல்லது மேலும் மேலும் தமிழ் நாட்டில் தற்கொலைகள் நிகழ்வதையோ ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மத்திய அரசு இதனை வலியுறுத்தவேண்டும். மாநில அரசின் கோரிக்கைகள் மிகத் தெளிவாக இருக்கின்றன. நீண்ட காலமாக நாங்களும் வற்புறுத்தி வந்திருக்கிறோம். காவிரி நதிநீர் ஆணையத்தின் இறுதித் தீர்ப்பை அரசு கெசட்டில் வெளியிடவேண்டும் என்று. அத னையும் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. இன்னும் தாமதிக்காமல், இதனை உடனடி யாகச் செய்யவேண்டும்.

ஒரு ஆணையை வெளியிடக்கூட, கருநாடக அரசு எதிர்க்கிறது என்றால், அதனுடைய நோக்கம் என்ன? கருநாடகம் இந்தியாவிற்குள் இருக்கிறதா? அல்லது பாகிஸ்தானில் இருக் கிறதா?
- இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.

தமிழ் ஓவியா said...


பகுத்தறிவின் பலம்


நாம் உண்மையான பகுத்தறிவு வாதிகளாகஆகிவிடுவோமேயானால், நம் மனிதத் தன்மை வளர்ச்சி மட்டுமல்ல, சமுதாய வளர்ச்சியும் ஏற்பட்டு விடும். மனித சமுதாயத்தில் ஒழுக்கமும், நாணயமும் ஏற்படும். (விடுதலை, 16.11.1971)