Search This Blog

26.12.12

பெரியார் சிலை திறக்கப்படுவது ஏன்?எதனால்?

செங்கற்பட்டு தரும் ஒளி! 

 
தந்தை பெரியார் அவர்களால் 1929 பிப்ரவரி 17,18 நாட்களில் செங்கற்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்டது.

அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க செங்கற்பட்டில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விழாவும் பெரியார் படிப்பகத் திறப்பு விழாவும் வெகு நேர்த்தி யாக நடைபெற்றன.
விழா ஏற்பாடுகள் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டன. அதற்காக பாடுபட்ட தி.க., தி.மு.க. பொறுப்பாளர்கள், தோழர்கள் பெரிதும் பாராட்டப் படத்தக்கவர்கள் - ஏன் நன்றி கூறிடவும் கடமைப்பட்டுள்ளோம்.

தந்தை பெரியார் சிலை திறக்கப்படுவது என்பது அவரின் கொள்கையை மக்கள் மத்தியில் பரப்பும் பணிக்கான ஒரு வகையான நிரந்தர ஏற்பாடாகும்.

தமிழ் நாடெங்கும் திறக்கப்படும் தந்தை பெரியார் சிலை அமைந்துள்ள பீடங்களில் பொறிக்கப்பட்டுள்ள - வாசகங்கள் காலா காலத்திற்கும் மக்களுக்கு வெளிச்சத்தைத் தரக் கூடிய கருவூலக் கருத்துகளாகும்.

இந்த வாசகங்களை எதிர்த்து நீதிமன்றங்கள்  வரை சென்றவர்களும் உண்டு.
பெரியார் கருத்தை, பெரியார் சிலையின் பீடத்தில் பொறிக்காமல் வேறு யாருடைய கருத்துக்களை செதுக்க முடியும் என்று கூறி நீதிமன்றமே - அத்தகைய வழக்குகளை எளிதிற் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியார் ஏதோ ஒரு கட்சிக்கு மட்டும்  சொந்தமானவர் அல்லர்! இன்னும் சொல்லப் போனால் ஒரு நாட்டுக்கு மட்டுமே சொந்தமான தலைவரு மல்லர்.

மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று உண்மை யான புரட்சித் தலைவராம் தந்தை பெரியார்பற்றி புரட்சிக் கவிஞர் பாடியது வெற்றுச் சொற்கள் அல்ல. யதார்த்த உண்மையாகும்.

உலகம் முழுவதும் தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் பேசப்படுகின்றன.
சர்ச்சைக்கு உட்படுத்தப்படுகின்றன - விவாதிக்கப்படுகின்றன - வரவேற்கவும்படுகின்றன.

குறிப்பாக இன்றைய கால கட்டத்தில் மத அச்சறுத்தல்கள் மதவாதங்கள், அடிப்படை வாதங்கள் கொம்பு முளைத்துக் கிளம்பியுள்ளன.

மதக் கலவரங்களால் மக்கள் ரத்தம் மண்ணில் வழிந்தோடுகிறது இந்த நிலையில் மதமற்ற உலகம் ஒன்றே ஒப்புரவு சமுதாயத்தை - மனிதனை மனிதன் நேசிக்கும் அமைதியுலகைத் தரக் கூடியது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது.

அந்த மதமற்ற உலகுக்கான திறவுகோல் தந்தை பெரியார் அவர்களே! எனவே தந்தை பெரியார் சிலை தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவின் பிற பாகத்தில் மட்டுமல்ல; உலகின் பல நாடுகளிலும் திறக்கப்படக் கூடிய நிலை உருவாகிக் கொண்டு இருக்கிறது.

சில மாதங்களுக்குமுன் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில்கூட தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தன்மான இயக்க வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை வகிக்கும் செங்கற்பட்டில் தந்தை பெரியார் சிலை திறக்கப்பட்டதானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
விழாவில் பங்கு கொண்டு பேசிய திராவிடர் கழகத் தலைவரானாலும்  சரி, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆனாலும் சரி மற்ற மற்ற முன்னணியினர் எடுத்து வைத்த கருத்துக்கள் அனைத்தும் ஓர் அடிப்படையான மய்யப் புள்ளியை வைத்துச் சுழன்றிருக்கின்றன என்று சொல்ல வேண்டும்.

தந்தை பெரியார் 1929 செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தின் வாயிலாகவே ஜாதி ஒழிப்புக்கான குரல் கொடுத்துள்ளார். இன்று ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்த விரும்புவோர் அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும். காரணம் மனித சமூகத்தில் பிளவுகளை உண்டாக்கக் கூடியது - பகைமை உணர்வைத் தூண்டக் கூடியது ஜாதி என்று பொறுப்பான வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்துவோர் பற்றியது.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்பது உண்மைக்கு மாறானது என்பது மட்டுமல்ல, திராவிடர் இயக்கம் இந்த நாட்டில் ஏற்படுத்தியுள்ள பார்ப்பனீய ஆதிக்க எதிர்ப்புணர்வை மழுங்கடித்து, மீண்டும் ஆரிய ஆதிக் கத்திற்கு அடிகோலக் கூடியது - இந்தத் துரோகத்தை சம்பந்தப்பட்டவர்கள் கைவிட வேண்டும்.

மூன்றாவதாக அறிவியல் வளர்ந்துவரும் ஒரு கால கட்டத்தில் மக்கள் மத்தியில் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் பிற்போக்குத்தனத்தை கைவிட வேண்டும் - குறிப்பாக ஊடகங்கள் பொறுப்பாகச் செயல்பட வேண்டும்.
இந்த மூன்று  முத்தான செய்திகளையும் செங்கற்பட்டு பெரியார் சிலை திறப்பு விழா நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளது! பெரியார்  வெல்வார் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

               ----------------------” விடுதலை” தலையங்கம் 25-12-2012

13 comments:

தமிழ் ஓவியா said...

பெரியாருக்கு நிகர் உலகில் எந்தத் தலைவரும் இல்லை
தளபதி மு.க.ஸ்டாலின் முழக்கம்

சிலையை நன்கொடையாக வழங்கிய மாவட்ட தி.க. தலைவர் அ.கோ.கோபால் சாமி - கவுசல்யா இணையர்களைப் பாராட்டி தளபதி மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு வழங்கினார்.

செங்கற்பட்டு, டிச. 25- உலகளவிலும் கூட தந்தை பெரியார் அவர்களுக்கு நிகரான தலைவர் வேறுயாருமில்லை என்றார் தி.மு.க. பொரு ளாளர் தளபதி மு.க. ஸ்டாலின்.

செங்கற்பட்டில் நேற்று மாலை தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து உரை யாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

என் வாழ்நாளில் எனக்கு மகிழ்ச்சி அளிக் கக்கூடிய - எனக்குப் பெருமை சேர்க்கக் கூடிய நிகழ்ச்சி - தந்தை பெரியாரால் சுயமரி யாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு நடத்தப்பட்ட இந்த செங்கற்பட்டில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலை யைத் திறக்கக் கூடிய பேறு எனக்குக் கிட்டிய தாகும்.

எனக்குக் கிடைத்த பேறு!

இதற்கு முன்பு தாரா புரத்தில் இந்தப் பெரு மையை ஆசிரியர் அவர் கள் எனக்குத் தந்தார்கள். பிற்காலத்தில் எனக் கென்று ஒரு வாழ்க்கை வரலாறு எழுதப்படுமானால், இந்த நிகழ்ச்சி தான் மிக முக்கியமான தாக, பெருமைக்குரிய தாக இடம் பெறும் (கைதட்டல்).


திராவிடர் கழக கொடியைப் போல அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட மேடை (செங்கற்பட்டு, 24.12.2012)

வேறு எத்தனையோ எத்தனையோ நிகழ்ச்சி களில் நான் கலந்து கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு ஈடா காது.

34 தீர்மானங்கள்

1929இல் இங்கு நடைபெற்ற மாநாட் டில் 34 தீர்மானங்கள் முத்து முத்தானவை. தி.மு.க. ஆட்சிக் காலத் தில் தலைவர் கலைஞர் ஆட்சியில் ... சட்டங்களாக ஆக்கப் பட்டுள்ளன.

அண்ணா அவர்கள் குறுகிய காலமே ஆட் சியில் இருக்க முடிந்தது. அந்தக் குறுகிய காலத் தில்கூட அய்யாவின் மூன்று முக்கிய கொள் கைகளை சட்டமாக வடித்துத் தந்தார்கள்.

அண்ணாவின் மூன்று முத்தான சாதனைகள்

1. தந்தை பெரியார் உருவாக்கிய மக்கள் மத்தியில் வேரூன்றச் செய்யப்பட்ட சுயமரி யாதைத் திருமணத்தை அங்கீகரிக்கும் சட்டம்.

2. சென்னை மாநி லத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் சட்டம்.

3. தமிழ்நாட்டில் என் றைக்கும் இந்திக்கு இடம் இல்லை - இரு மொழித் திட்டம் மட் டுமே என்ற சட்டமா கும்.

பெரியார் நினைவு சமத்துவபுரம்

அதுபோலவே பெரியார் அவர்களின் ஜாதி ஒழிப்புக் கொள் கையை உள்வாங்கி, தலைவர் கலைஞர் அவர் களால் உருவாக்கப் பட்ட பெரியார் நினைவு சமத்தவபுரமாகும்.

அய்ரோப்பில் பெரியார், மேல்நாட்டுச் சிந்தனையாளர்களும் பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு, மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் ஆகிய நூல்களை தளபதி மு.க.ஸ்டாலின் வெளியிட, தி.இரா.இரத்தினசாமி, பு.எல்லப்பன், டி.ஏ.ஜி.அசோகன், அ.இராமச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர் (செங்கற்பட்டு, 24.12.2012)

ஜாதி, மதங்களைக் கடந்து மனித சமத்து வம், மேலோங்கச் செய்ய ஏற்பாடு செய்யப் பட்ட தாகும். பிறகு ஒவ்வொரு பெரியார் நினைவு சமத் துவபுரத்திலும் தந்தை பெரியார் சிலை நிறுவிட ஏற்பாடு செய்தார். அந்த நிகழ்ச்சி களிலெல்லாம் நான் கலந்து கொண்டது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பேறு ஆகும்.

தமிழ் ஓவியா said...

ஆட்சி மாற்றம் ஏற் பட்டவுடன் அந்தத் திட் டத்தைக் கைவிட்டுவிட் டார்கள் என்ற வேதனை யையும் தளபதி மு.க. ஸ்டாலின் வெளிப்படுத் தினார்.
தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தம் உரை யில் மிக முக்கியமான வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவூட்டினார்.

ஆச்சாரியாரின் குலக்கல்வி திட்டம்

ஆச்சாரியர் (ராஜாஜி) அவர்கள் முதல் அமைச் சராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம். அப்பன் தொழிலை பிள்ளை செய்யவேண் டும் என்ற பாரம்பரியமான குலத்தொழிலைப் புதுப்பிக்கும் திட்டமா கும்.

அந்தக்கால கட்டத் தில் தந்தை பெரியார் பொங்கி எழுந்து அந்தத் திட்டத்தை முறியடித் தார்கள். அந்தத் திட்டம் மட்டும் செயல்பட்டு இருக்குமானால் நம் தாழ்த்தப்பட்ட, பிற் படுத்தப்பட்ட மக்கள் கல்வி, வேலை வாய்ப்பு களைப் பெற்றிருக்க முடியுமா என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.

அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆனார். அவருக்கு உடனடியாகத் தோன்றியது என்ன தெரியுமா?

திருச்சிக்கு சென்று தந்தை பெரியார் அவர் களைச் சந்திக்க வேண் டும் என்று நினைத்தார்.
சக அமைச்சர்களுக் குக் கூட அதனைத் தெரிவிக்கவில்லை. காரில் போகும்போது தான் அதனைக் குறிப் பிட்டார்.

தேர்தலில் திமுகவை பெரியார் எதிர்த்தாரே என்று அண்ணா நினைக்க வில்லை. அய்யா மீது அண்ணாவுக்கு இருந்த மதிப்பும், நன்றி உணர் ச்சியும் தான் முக்கியமா னவை. அதனால்தான் இந்த ஆட்சியே பெரி யாருக்குக் காணிக்கை என்று சட்டப்பேரவை யிலேயே முதல் அமைச் சர் அண்ணா அறிவித் தார்.

தந்தை பெரியார் 94 ஆண்டு 3 மாதம் 7 நாட்கள் உயிர் வாழ்ந் தார். அவர் ஆற்றிய உரையை டேப்ரிக்கார் டில் பதிவு செய்து ஒலி பரப்புச் செய்யப்பட் டால் அது 21 லட்சத்து 400 மணி நேரம் ஓடிக் கொண்டே இருக்கும்.

பெரியாருக்கு நிகர் பெரியாரே!

உலக அளவில் ஒப் பிட்டாலும் தந்தை பெரியாருக்கு இணை வேறு யாரும் இருக்க முடியாது.

தந்தை பெரியார் மறைந்தார். அவர் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்று முதல் அமைச்சராக இருந்த தலைவர் கலை ஞர் விரும்பினார். அதி காரிகளை அழைத்து உத்தரவிட்டார். அதி காரிகள் தயங்கினார்கள்.

எந்த அரசு பொறுப் பிலும் பெரியார் இல் லையே - அப்படி இருந் தால்தான் அரசு மரி யாதை கொடுக்க முடி யும் - சட்டம் அப்படி தான் கூறுகிறது என்றனர்.

அப்பொழுது தலைவர் கலைஞர் ஒரு கேள்வியைக் கேட்டார். காந்தியார் எந்த அரசுப் பதவியில் இருந்தார் - அவருக்கு அரசு மரி யாதை கொடுக்கப்பட வில்லையா?

தமிழ் ஓவியா said...

எங்களையெல்லாம் ஆளாக்கிய தந்தை பெரி யார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்தால் என் ஆட்சி பறிபோகும் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே என்று சொன்னவர் தலைவர் கலைஞர் என்று வர லாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்தார்.

மற்றும் இன்றைய அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கம் அளித் தார் (முழு உரை பின்னர்).

வெற்றிகரமாக விழா முடிந்தது

செங்கற்பட்டு நகர கழகத் தலைவர் பூ.சுந் தரம் நன்றி கூறிட இரவு 9.30 மணிக்கு விழா வெற் றிகரமாக முடிந்தது.

நூல்கள் வெளியீடு

விழாவின் சிறப்பு அம்சங்களுள் ஒன்று இயக்கத்தின் சார்பில் வெளியிடப்பட்ட மூன்று நூல்களின் வெளியீடாகும்.

1. அய்ரோப்பாவில் பெரியார் (தொகுப்பாசிரியர் கி. வீரமணி) பக்கங்கள் 384, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.

2. உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் - தந்தை பெரியாரும் - ஓர் ஒப்பியல் ஆய்வு (பேராசிரி யர் ஆர். பெருமாள் - தமிழில் மொழிபெயர்ப்பு முனைவர் ப. காளிமுத்து, வெளியீடு: பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பக்கம் 152.

3. மனித உரிமைப் போரில் பெரியார் பேணிய அடையாளம் (பெரியார் பேருரையாளர் பேராசிரியர் கு.வெ.கி. ஆசான்) பக்கங்கள் 192 - வெளியீடு: பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்.

நூல்களை - சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா. இரத்தினசாமி, காஞ்சி மண்டல திராவிடர் கழகத் தலைவர் பு. எல்லப்பன், காஞ்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் டி.ஏ.ஜி. அசோகன், செங்கற்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அ. இராமச்சந்திரன் மற்றும் மதிவாணன் ஆகியோர் பணம் கொடுத்து நூல்களை தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்!

திருச்சி (திருவெறும்பூர்) பெரியார் மருத்துவ முகாமில் அதிர்ச்சி!

தந்தை பெரியார் நினைவு நாளில் திருவெறும்பூரில் பெரியார் பெருந்தொண்டர் சேகர், மற்றவர்கள் முயற்சியில் புற்று நோய் அறிதல் குறித்து மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

பெரியார் மருந்தியல் கல்லூரி, வளாகக் கல்வி நிறுவனங்கள் திருச்சியில் உள்ள ஹர்சமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மருத்துவர்கள் கோவிந்தராஜன், மருத்துவர்கள் சீத்தாலட்சுமி, சோம.இளங்கோவன், சரோஜா இளங்கோவன் பங்கேற்றனர்.

இதில் 82 பெண்கள் சோதனைக்கு வந்தனர்! அதிலே 20 பேருக்கு மார்பகப் புற்று நோய் அறிகுறி கண்டுபிடிக்கப்பட்டு மேல் சோதனைகள் செய்யப்பட உள்ளனர்.

10 பேருக்குக் கருப்பை வாயில் புற்று நோய் கண்டறியப்பட்டது! இதில் 5 பேருக்கு இது முற்றிய நிலையில் உள்ளது என்று அதிர்ச்சி அறியப்பட்டது.

திருமதி.கோவிந்தராஜன் வேண்டிய உதவிகள் செய்வதாக உறுதியளித்தார். மிகவும் வெளிப்படை யாக, அனைவர்க்கும் புரியும் படியாக புற்று நோய் அறிகுறிகள், ரகசியமாக் வைத்துக் கொள்ளாமல் ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டிய அவசியம், தடுப்பதற்கான வழிகள், புதிதாக வந்துள்ள தடுப்பு ஊசி இவை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார்.

புற்றுநோய் பற்றிய புரிந்துரைத்தல் இன்றி மிகவும் அவசியம். பெண்கள் ரகசியம் காக்காமல் நோய்த் தடுப்பதற்கும் ஆரம்ப அறிகுறிக்கும் அவசியம் மருத்துவம் வேண்டும்.

தமிழ் ஓவியா said...

கலி. பூங்குன்றன்

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தன் உரையில் 1929 இல் இதே செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க முதல் மாநில மாநாட்டின் சிறப்பினை எடுத்துரைத்தார். அன்றைக்கு ஜாதியை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு ஜாதியை முதலீடாகக் கொண்டு அரசியல் நடத்தத் துடிக்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டினார்.

தனிப்பட்ட ஸ்திரீகளும், தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர் களும் அவசியம் மாநாட்டிற்கு வரவேண்டும் என்று தந்தை பெரியார் அறிக்கை வெளியிட்ட அந்தப் புரட்சிகரமான அழைப்பு அதுவும் அந்தக் காலகட்டத்தில் சாதாரணமானதா? என்றார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்.

தா.மோ. அன்பரசன்

தி.மு.க. மாவட்டச் செயலாளரும், மேனாள் தமிழ்நாடு அமைச்சருமான தா.மோ. அன்பரசன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டதாவது:

1929 இல் செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை மாகாண மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தியது தி.மு.க. ஆட்சி - அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் என்று பெருமிதமாகக் குறிப் பிட்டார். இன்றைய ஆட்சியின் செயல்பாட்டைப்பற்றிக் குறிப் பிடு கையில், மூன்று மாதங்களில் மின்வெட்டைப் போக்குவேன் என்றவர்கள், 21 மாதங்கள் ஆன பிறகும்கூட அதைச் செய்ய வில்லையே-ஏன்? என்ற அர்த்தமுள்ள வினாவையும் எழுப்பினார்.

பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செய லாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

1940 ஆம் ஆண்டுவாக்கில் தளபதி என்றால், அறிஞர் அண்ணா. அதனை அடுத்துத் தளபதி என்றால் நமது ஆசிரியர். இன்றைய காலகட்டத்தில் தளபதி என்றால், நமது தளபதி மு.க. ஸ்டாலின். தளபதிகள் நமக்குத் தலைவர்கள் ஆனதுபோல, இன்றைய தளபதி நமது தலைவராக ஒளிர்வார். திராவிடர் கழகத்திற்கு இன்னும் என்ன வேலை இருக்கிறது என்று சிலர் கேட்கிறார்கள்.

இந்த 2012 ஆம் ஆண்டிலும் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில், மாயன் காலண்டர்பற்றிப் பேசப்படுகிறதே, நம்பப்படுகிறதே! இந்த மூட நம்பிக்கையை எதிர்த்து திராவிடர் கழகம்தானே திரும்பத் திரும்ப எடுத்துச் சொல்லி அறிவு கொளுத்துகிறது.

21.12.2012 இரவோடு இந்த உலகத்தின் கதை முடிந்துவிடும் என்று செய்தி வெளியிடும் ஏடுகள்தான், 2013 ஆம் ஆண்டுக்கான நாள்காட்டிகளையும் வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் (பலத்த சிரிப்பு). கலி யுகத்தின் காலம் 4 லட்சத்து 32 ஆயிரம் என்று சொல்லு கிறவர்கள், அய்யாயிரம் ஆண்டுக்கணக்கை சொல்லும் மாயன் காலண்டரை எப்படி நம்புகிறார்கள் என்ற அர்த்த முள்ள வினாவை எழுப்பினார் சுப.வீ.

தந்தை பெரியார் சிலை என்பது வழிபடுவதற்காக அல்ல; வழிகாட்டும் தலைவரை நமது தலைமுறையையும் தாண்டி வரும் மக்களுக்கு நினைவுபடுத்த - அவர் கருத்துக்களை சமுதாயத்திற்கு எடுத்துரைக்கவே - மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியவே என்று குறிப்பிட்ட சுப.வீ. அவர்கள், ஜாதியைச் சொல்லி அரசியல் நடத்தலாம், தேர்தலில் வெற்றி பெறலாம் என்பது பெரியார் மண்ணில் பகற்கனவே என்றும் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

ஜாதியை எதிர்க்கக் கூடிய நீங்கள் இந்து மதத்தை எதற்காக எதிர்க்கிறீர்கள் என்று தந்தை பெரியாரைப் பார்த்து கேட்ட கேள்விக்கு - ஜாதியையும், இந்து மதத்தையும் பிரிக்க முடி யாதே- என்ன செய்வது என்று பதில் கூறிய தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்குப் பதில் சொல்ல யார் இருக்கிறார்கள் என்று வினா எழுப்பினார் திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள்.

தமிழ் ஓவியா said...

திருவெறும்பூர் கூத்தப்பார் பெரியார் சிலை, மருத்துவமனை வளாகம்


கட்டுமானங்களை அகற்றக்கோரும் அரசின் ஆணைக்கு நீதிமன்றத் தடை


திருச்சி மாவட்டம் திருவெறும் பூர் - கூத்தப்பார் கிராமத்தில் 99 ஆண்டுகள் குத்தகை அடிப் படையில் பெறப்பட்டு தந்தை பெரியார் சிலை, பெரியார் படிப்பகம், இலவச மருத்துவமனை ஆகியவை இயங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை செய லாளர் கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்ற ஆணையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் அரசு ஆணைக்கு நீதியரசர் ஆர். சுப்பையா தடை ஆணை பிறப்பித் தார் விவரம் வருமாறு:

07.01.2007 அன்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அவர்கள் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை மற்றும் பெரியார் படிப்பகம் அமைத்திட நீண்ட கால குத்தகை அடிப்படையில் திருவெறும்பூர் கூத் தைப்பார் கிராமம் உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகில் 2000.சதுர அடியை நீண்ட காலக் குத்தகைக்கு ஒதுக்கீடு செய்யும்படி பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரங்கள் அமைப்பு தலைமை பொறியாளர் திருச்சி மண்டலத்திற்கு கடிதம் அனுப்பினார். அதைத் தொடர்ந்து திருச்சி வட் டாட்சியாளர் திருவெறும்பூர் கூத்தைப் பார் கிராமம் உய்யக்கொண்டான் வாய்க்கால் அருகில் மேற்படி சிலை மற்றும் படிப்பகம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். கூத்தப்பார் பேரூராட்சியில் 09.06.2009 அன்று தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை அமைப்பதற்க்கு மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. காவல்துறை கண்காணிப் பாளர் அவர்கள் மேற்படி இடத்தை திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் அவர்கள் மேற்படி புல எண்: 350ல் 2000சதுரஅடி பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான காலி இடத்தில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச்சிலை அமைப்பதால் போக்குவரத்திற்க்கு எவ் வித இடையூறும் இல்லையென்று திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கு 12.03.2010 அன்று பரிந்துரைக் கடிதம் அனுப்பினார்.

திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அவர்கள் மேற்படி தந்தை பெரியார் முழு உருவச் சிலை அமைய இருக்கின்ற இடத்தை ஆய்வு செய்து, முழு உருவச் சிலை வைப்பதில் நெடுஞ்சாலைத்துறைக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று திருச்சி மாவட்ட ஆட்சி தலைவருக்கு 15.03.2010 அன்று பரிந்துரை செய்துள்ளார்கள்.

தமிழ் ஓவியா said...

திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் 30.03.2010 அன்று தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலாளாரும் மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு தந்தை பெரியார் முழு உருவச்சிலை அமைப்பதற்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பினார். மேலும் திருச்சி மண்டல நீர் ஆதார அமைப்பு தலைமைப் பொறியாளர் மேற்படி பெரியார் சிலை நிறுவவுள்ள இடம் மற்றும் படிப்பகம் அமைய உள்ள இடம் (வாய்க்காலில் நீர் வழிப்போக்கிற்கும் எவ்வித இடையூறும் இல்லை என்பதால் ) 16.07.2010 அன்று இசைவு தந்து கடிதம் அனுப்பியுள்ளார். எல்லா துறைகளிட மிருந்தும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் 23.07.2010 அன்று தந்தை பெரியார் முழு உருவச் சிலை அமைப்ப தற்குரிய உத்தரவுகள் வழங்கும்படி கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு 22.12.2010 அன்று திருவெறும்பூர் உய்யக் கொண்டான் வாய்க்கால் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவதற்கும் மேற்படி சிலை பராமரிப்புப் பணிகளை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்று அரசாணை பிறப்பிக்கப் பட்டது.

அரசாணை பிறப்பிக்கப்பட்ட பிறகு 17.09.2011 அன்று தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை திராவிடர் கழகம் சார்பில் அதன் தலைவர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், திருச்சி மாவட்ட தலைவர் மற்றும் முக்கிய பொறுப் பாளர்களால் திறக்கப்பட்டது. மேலும் 12.10.2011 அன்று மேற்படி இடத்தில் பெரியார் படிப்பகம் மற்றும் இலவச மருத் துவமணை ஆகியவற்றிற்கு கூத்தைப்பார் பேரூராட்சி கட்டிடம் கட்டுவதற்க்கு வரைபட அனுமதி வழங்கியுள்ளது அதனைத் தொடர்ந்து மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டு இலவச மருத்துவ மனையும், பெரியார் படிப்பகமும் இயங்கி வரும் இடத்தில் திடீரென்று தமிழக அரசுச் செயலாளர் பொதுப்பணித் துறை 28.10.2011 கடிதத்தை மேற்கோள் காட்டி திருச்சி உதவு செயற்பொறியாளர் அவர்கள் 2012 நவம்பர் மாதம் தங்கள் கடிதத்தில் மேற்படி நிரந்தர கட்டுமானப் பணி களை அகற்ற வேண்டும் என்று கடிதம் மூலம் பெரியார் சுய மரியாதைப் பிரச்சார ஸ்தாபனத்திற்கு கடிதம் அனுப்பினார்கள்.

மேற்படி தமிழ்நாடு அரசு பொதுப்பணித் துறைச் செயலாளர் மற்றும் திருச்சி உதவி செயற்பொறி யாளர் அவர்களின் ஆணையை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டு, அந்த வழக்கு 12.12.2012 அன்று மாண்புமிகு நீதிபதி ஆர். சுப்பையா அவர்களின் முன்பு விசாரணைக்கு ஏற்று, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறை செயலாளர் மற்றும் திருச்சி உதவி செயற்பொறியாளர் ஆகியோர்களின் உத்தரவிற்கு தடை உத்தரவு பிறப்பித்து வழக்கினை விசாரணைக்கு ஏற்றுள்ளார்கள்.
வழக்குரைஞர்கள் சென்னை தியாக ராஜன், த. வீரசேகரன், இளங்கோ ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.
(விடுதலை, 30.12.1972)

தமிழ் ஓவியா said...

மக்கள் கடலில் தத்தளித்தது செங்கற்பட்டு!


1929 இல் முதல் சுயமரியாதை மாநாடு நடத்தப்பட்ட செங்கற்பட்டில்
சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா

பகுத்தறிவுப் பகலவன் பெரியார் படிப்பகத் திறப்பு விழா!

மக்கள் கடலில் தத்தளித்தது செங்கற்பட்டு!

சிலை பீடத்தை பொறுப்பேற்று செய்து கொடுத்த செங்கை நகர தி.மு.க. செயலாளர் அன்பு செல்வத்திற்கு தமிழர் தலைவர் பாராட்டு.

விழாவில் திமுக தோழரின் குழந்தைக்கு அன்பழகன் என தளபதி மு.க. ஸ்டாலின் பெயர் சூட்டினார்.


செங்கற்பட்டு மாநகரம் - என்றென் றும் நினைக்கப்பட்டு மக்கள் மத்தியில் நிலைபட்டு இருப்பதற்கு மிகவும் முக்கிய காரணம் - 1929 பிப்ரவரி 17,18 ஆகிய நாட்களில் அங்கு சுயமரியாதை இயக் கத்தின் மாகாண முதல் மாநாடு நடத்த ப்பட்டதாகும்.

அந்த மாநாட்டின் ஏற்பாடுகளை இன்று நினைத்தால்கூட அந்த அளவுக்கு விரிவான ஏற்பாடுகளைச் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக எழும்.

சென்னை தியாகராயர் நகரிலிருந்து செங்கற்பட்டு வரை ஊர்வலமாம் - வழி நெடுக தலைவர்களுக்கு வரவேற்பு

தனி அஞ்சலகம், ரயில் நிலையம் என்றெல்லாம் தடபுடல் ஏற்பாடு. மாநாட் டுத் தலைவர் ஊ.பு.அ. சவுந்தரபாண் டியன் மதுரையிலிருந்து 12 பெட்டிகள் இணைக்கப்பட்ட தனி ரயில் மூலம் ஆயிரம் சுயமரியாதை இயக்கத் தொண் டர்கள் புடைசூழ செங்கற்பட்டுக்கு வருகை தந்தார். முக்கால் வராகன் எடையில் அரிசியில் மாநாட்டுத் தலைவரின் உருவம் வடிவமைப்புச் செய் யப்பட்டதாம்.

ஏற்பாடுகள் தடபுடல் என்பது மட்டு மல்ல, அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 34 தீர்மானங்கள் - அந்தக் கால கட்டத்திலும், சரி இன்றளவும்கூட, ஈடு காட்டிப் பேச முடியாத அளவுக்கு அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை - புரட்சி மணம் வெடிக்கும் - சமுதாயத்தைப் புரட்டித் தள்ளும் புகழ் பெற்றவை.

ஒவ்வொரு தீர்மானத்தின் மீதும் முக்கியத் தலைவர்கள் கருத்துரைகள் - அப்பப்பா சொல்லுந்தரமன்று.

இன்றைக்கு ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்திட சிலர் முயலுகிறார்கள்.

ஆனால் அன்றைக்கு அதற்கான அடிப்படை தகர்க்கப்பட்டாயிற்றே.

மக்கள் தங்கள் பெயர்களோடு ஜாதி அல்லது வகுப்பைக் காட்டுவதற்காகச் சேர்க்கப்படும் பட்டங்களை விட்டு விட வேண்டுமென்று இம்மாநாடு பொது ஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது. (தீர்மானம் எண் 9) என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், மாநாட்டில் சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தங்கள் பெயர்களுக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருந்த ஜாதிப்பட்டங் களைத் துறப்பதாகப் பிரகடனப்படுத் தினர்.

மாநாட்டுத் தலைவர் பட்டிவீரன்பட்டி ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன், தம் பெயருக்குப் பின்னால் இடம் பெற்ற நாடார் என்ற ஜாதிப் பட்டத்தைத் தூக்கி எறிவதாகவும் சிவகங்கை வழக்குரைஞர் எஸ். இராமச்சந்திரனார் தம் ஜாதிப்பட்டமான சேர்வையை வீசி எறிவதாகவும் அறிவித்தனர்.

தமிழ்நாட்டில் பெயர்களுக்குப் பின் ஜாதிப் பட்டம் போட்டுக் கொண்டிருந்த கெட்ட பழக்கம் தூக்கி எறியப்பட்டதற்கு அந்தச் செங்கற்பட்டு மாநாடுதான் அடிக் கல் போட்டது என்றால் மிகையாகாது.

தமிழ் ஓவியா said...

பெண்களுக்குச் சொத்துரிமை உட்பட அந்த மாநாட்டில்தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இத்தகு தீர்மானங்கள் பிற்காலத்தில் அரசு சட்டங்களாக மாறியிருக்கின்றன என்றால் அது சாதாரண நிலையல்ல. மாநாடு சமூகத் தில் பல்வேறு பெருந்தாக்கங்களை உருவாக்கியது என்பதுதான் சுருக்கமான அறிமுகமாகும்.

அம்மாநாட்டின் 80ஆம் ஆண்டு தொடக்க விழா - 2008 பிப்ரவரி 18இல் இதே செங்கற்பட்டில் - அன்று மாநாடு நடைபெற்ற அதே இடத்திலேயே திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.

அப்பெரு விழாவில் அன்றைய முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் பங்கு கொண்டு சங்கநாதம் செய்தார். சுயமரியாதை இயக்கத்தின் - அதன்வழி வந்த திரா விடர் இயக்கத்தின் சிறப்புகளையும், சாதனைகளையும் எடுத்துக் கூறினார்.
அதன் நினைவாக பெரியார் படிப்பகம் திறக்கப்படும், பெரியார் சிலையும் திறக்கப்படும் என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவித்தார். முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும் அதற்கான அடிக்கல்லையும் நாட்டினார். அதன்படியே நேற்று செங்கற்பட்டில் நடைபெற்ற விழாவில் பெரியார் பெயரில் அமைந்த படிப்பகத்தை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். பெரியார் சிலையை தளபதி மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நேற்று நடைபெற்ற விழா மக்கள் மத்தியில் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கத்தை உண்டாக்கும் வகையில் அமைந்திருந்தது.

சென்னையிலிருந்து செங்கற்பட்டு வரை இரு கழகங்களின் கொடிகளும் காற்றில் அசைந்தாடி அனைவரையும் மாநாட்டுக்கு வருக வருக என்று வரவேற்றன.
இடையிடையே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் பல வண்ண விளக்குகள் மினுமினுக்க கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டு இருந்தன.

செங்கற்பட்டு மாநகரமோ - திருமண மேடையை நோக்கி அடி எடுத்து வைக் கும் மணப்பெண் போல தோரணங்களின் தொங்கட்டானாக, வண்ண விளக்கு களின் பூந்தோட்டமாக, பதாகைகளின் அணி வகுப்பாகக் காட்சிக்கு விருந் தளித்தன.
கழகக் கொடி வடிவத்தில் பிரமாண்ட மான மேடை ஆயிரக்கணக்கான இருக் கைகள் பார்வையாளர்களுக்காக.

பிற்பகல் முதற் கொண்டே செங்கற் பட்டு நோக்கி மக்கள் குவிந்து கொண்டே இருந்தனர். பேருந்துகள் மின் தொடர் வண்டிகள் மூலம் வந்து இறங்கினவர்கள் எல்லாம் இந்த விழாவுக்காகவே வந்தவர்களாக இருந்தனர். தி.க., தி.மு.க., தோழர்கள் மட்டுமல்லர்; கட்சிகளுக்கு அப்பாற்பட்டும். பொது மக்கள் பெருந் திரளாகத் திரண்டு வந்தனர். தாய்மார்கள் எண்ணிக்கை குறிப்பிடும்படியாக இருந்தது. இளைஞர் கள் எழுச்சியுடன் கூடியிருந்தனர்.

தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலை

தந்தை பெரியார் சிலை அமைக்கப் பட்டுள்ள இடம் செங்கற்பட்டு நகரில் அனைவரின் பார்வைக்கும் உகந்த இட மாகும். அதே நேரத்தில் போக்குவரத் துக்கு எந்தவித இடையூறுமின்றி அமைந்திருந்தது - தொலைநோக்குக் கண்ணோட்டத்தில் பாராட்டத்தக்க தாகும்.

ரயில் நிலையத்திற்குள் நுழையும் பகுதி மட்டுமல்ல புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரேயும் சிலை அமைந் துள்ளது. எப்பொழுது பார்த்தாலும் மக்கள் கூடக் கூடிய சிறப்பான பகுதியில் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் கம்பீரமாக நிற்கிறார்.

சிலையின் பீடமும் கம்பீரமாக அமைந்தது. திறப்பு விழா பற்றிய குறிப்பு ஒரு பக்கத்தில் - மற்ற மூன்று பக்கங் களிலும் கடவுள் மறுப்பு, ஆத்மா மறுப்பு, பெண் கல்வி, தந்தை பெரியாருக்கு அய்.நா.வின் யுனஸ்கோ அளித்த விருது வாசகம் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆகி யவை கல்வெட்டுகளாகப் பொறிக்கப்பட் டுள்ளன.

சென்னையிலிருந்து தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களும் திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் இரவு ஏழு மணிக்கு வருகை தந்தனர். சிலை திறக்கப்படும் பகுதியில் ஆயிரக்கணக்கானவர்கள் மாலை முதலே திரண்டு விட்டனர்.

மின் பொத்தானை அழுத்திப் பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முழு உருவ வெண்கலச் சிலையை ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்த்து முழக்கங் களுக்கிடையே தளபதி மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தந்தை பெரியார் வாழ்க! பகுத்தறிவுப் பகலவன் வாழ்க! வாழ்க!! என்ற முழக் கங்கள் விண்ணை முட்டின.

தொடர்ந்து திராவிடர் கழகக் கொடியை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஏற்றி வைத்தார். தி.மு.க. கொடியை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

பெரியார் படிப்பகத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

தமிழ் ஓவியா said...


நாடே பெரியார் சமத்துவபுரமாக வேண்டும்! செங்கற்பட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு


தமிழர் தலைவர் முன்னிலையில் தளபதி மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செங்கற்பட்டு மய்யப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையினை தமிழர் தலைவர் முன்னிலையில் தளபதி மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். உடன் முன்னாள் அமைச்சர் அன்பரசன், கலி. பூங்குன்றன், சு. அறிவுக்கரசு, வீ. அன்புராஜ், அ.கோ. கோபால்சாமி ஆகியோர் உள்ளனர். (24.12.2012)


நாடே பெரியார் சமத்துவபுரமாக வேண்டும்!
செங்கற்பட்டில் தமிழர் தலைவர் உரை வீச்சு

செங்கற்பட்டு, டிச.25- கலைஞர் உருவாக்கிய பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் - வரவேற்கத்தக்க செயல்பாடு - சில ஊர்கள் மட்டுமல்ல, நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக மலர வேண்டும் என்றார் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

செங்கற்பட்டில் நேற்று மாலை நடைபெற்ற தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:

தமிழ் ஓவியா said...

செங்கற்பட்டு மாநகரம் புதிய வரலாற்றை இன்று படைத்திருக்கிறது - இந்த நாள் வரலாற்றுச் சிறப்பு நாள்.

1929இல் இவ்வூரில் முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்றபோது நம்மைப் போன்றவர்கள் பிறக்கவில்லை. ஆனாலும் அந்த மாநாட்டில் கூறப்பட்ட தத்துவங்கள் என்றும் நிலைக்கக் கூடியவை நம் நெஞ்சில் நிறையக் கூடியவை. அய்யாவின் தத்துவங்களுக்குப் பிறப்பு உண்டு- மரணம் கிடையாது. அந்தத் தத்து வங்கள்தான் மானுடத்திற்கு என்றென்றும் தேவைப்படக் கூடியவை.

நாடே பெரியார் நினைவு சமத்துவபுரமாக அமைய வேண்டும்

அவற்றைப் பரப்புவதில் பல வழிமுறைகள் உண்டு. எனக்குமுன் பேசிய தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டார். மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞர் அவர்கள் மூளையில் உதித்த ஒரு திட்டம்தான் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள். சிறந்த முன் மாதிரி திட்டம் அது. நம் எண்ணம் எல் லாம், விருப்பம் எல்லாம் நாடே சமத்துவபுரம் ஆக வேண்டும் என்பதுதான் (பலத்த கரஒலி).

ஆச்சாரியாரின் குலக் கல்வியும் - நவீன குலதரும சிந்தனையும்

ஆச்சாரியாரின் குலக் கல்வித் திட்டத்தைப் பற்றி நமது தளபதி அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டார். அன்றைக்கு அந்தத் திட்டத்தை தந்தை பெரியார் கிளர்ந்தெழுந்து ஒழிக்கா விட்டால் நம் மக்களின் நிலை என்னவாகியி ருக்கும் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

அன்று கல்வியிலே குலதரும திட்டத்தைக் கொண்டு வந்தார் ஆச்சாரியார் என்றால், இன்று திருமணத்திலே சிலர் குலதர்மத்தைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள். திருமணத்தில் ஜாதி பார்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் விபத்து நடந்தால் குருதி கொடுப்பதில் ஜாதியை பார்ப்பார்களா?

வன்னியர் ரத்தம், நாடார் ரத்தம் உண்டா?

வன்னியர் ரத்தம், நாடார் ரத்தம், செட்டி யார் ரத்தம், அய்யங்கார் ரத்தம் என்று ஏதாவது உண்டா?

உடல் உறுப்புத் தானங்களில் ஜாதியைப் பார்ப்பார்களா என்ற அர்த்தமுள்ள வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

பெரியார் சிலையைப் பற்றி கூறும்பொழுது, இது வெறும் சிலையல்ல - சீலமாகும். ஜாதி வெறி, மத வெறி, மூடநம்பிக்கை வெறிகளை விரட்டியடிக்கும் தத்துவ வெளிச்சம் தரும் சூரியன் ஆகும்.

உதயசூரியன் உதிக்க வேண்டும்

எல்லாவற்றிற்கும் சூரியன் தேவைப்படு கிறது. நாட்டைப் பீடித்திருக்கும் எல்லாவித மான இருளைப் போக்க சூரியன் மீண்டும் உதயமாக வேண்டும் என்று குறிப்பிட்ட தமிழர் தலைவர் இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெற முழு ஒத்துழைப்பு கொடுத்த கழகத் தோழர்களுக்கும், பொறுப்பாளர்களுக்கும் குறிப்பாக மேனாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கற்பட்டு நகர மன்றத் தலைவர் க. அன்புச்செல்வன் ஆகியோருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார் திராவிடர் கழகத் தலைவர்.


சுயமரியாதைச் சுடரொளிகள்!

செங்கற்பட்டு என்று நினைக்கும்பொழுது பழம் பெரும் இயக்கத் தோழர்கள் என் நினைவிற்கு வருகிறார்கள். தமிழர் உணவு விடுதியை நடத்தி வந்த சின்னையா, போலீஸ் கண்ணன் (போலீஸ் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரை அழைத்துக் கூட்டங்களை நடத்தியவர்) தோழர் கோவிந்தராசு, டாக்டர் ராஜரத்தினம், (அவர் வீட்டில்தான் நாங்கள் எல்லாம் தங்குவோம்) கங்காதரன் போன்ற எண்ணற்ற தோழர்களை நினைவு கூர்கிறேன்.

தமிழ் ஓவியா said...


டில்லி நிகழ்ச்சி இனி தொடர அனுமதிக்கக் கூடாது


ஆட்சிக்கு எதிராகப் பிரச்சினையைத் திசை திருப்பி

வன்முறையில் ஈடுபடுவோரை சட்டப்படி அடக்குக!

தமிழர் தலைவர் அறிக்கை


டில்லியில் பாலியல் வன் முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண் ணுக்கு வக்காலத்து வாங்கு வதாகக் கூறிக் கொண்டு, பிரச்சினையை அரசியலுக்குக் கைமுதலாகக் கொண்டு வன் முறையில் ஈடுபடுவோரை அடக்கி ஒடுக்க வேண்டும் என் றும், டில்லியில் ஒரு பெண்ணுக்கு எதிராகச் செய்யப்பட்ட கொடுமை இனி தொடர அனுமதிக்கக் கூடாது என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

டில்லியில் மருத்துவக் கல்லூரி மாணவியை சில மனித மிருகங்கள் வன்புணர்ச்சி, வல்லுறவு கொண்டதனால் அவரது மானம் பறிபோய், உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.

தலைநகர் டில்லியிலா இப்படி என்ற நியாயமான கேள்வியை, அனைத்துத் தரப்பினரும் ஆத்திரம் பொங்க எழுப்பினர். மாணவர்கள் கொதித்து எழுந்தனர்; மகளிர் திரண்டனர் - அதெல்லாம் துவக்கத்தில். நியாயமானவையும்கூட.

மத்திய ஆட்சியாளரும் இதில் மெத்தனம் காட்டாமல், விரைந்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதோடு எவரையும் காப்பாற்ற எந்த முயற்சியும் செய்யாமல் விரைந்து நியாயம் கிடைக்கவும், அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்படவும் ஆன அத்துணையும் செய்து கொண் டுள்ளனர்.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் திருமதி சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ஷிண்டே, டில்லி முதல்வர் திருமதி ஷீலாதீட்சத் ஆகிய எல்லோரும் உரிய சட்டப் பாதுகாப்பு நடவடிக்கை, குற்ற வழக்கில் துரித நீதி, இனி இப்படி நடக்காத அளவிற்கு அரிய ஆலோசனைகள், செயல் திட்டங்கள்பற்றிய சிந்தனை எல்லாம் செய்யும்போது,

சமூக விரோதிகள்!

இப்போது டில்லியை சமூக விரோதி கள் பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்; அங்கு கலந்து கொண்ட மகளிரே கூறு கின்றனர். குடித்துக் கும்மாளம்போட்டு, மகளிரை ஆபாச வார்த்தைகளால் அர்ச் சித்து, அருவருப்பாக பலரும் நடந்து கொள் ளும் நிலை என்றால், அப்பெண் பிரச்சினை வேறு எதற்கோ மூலதனமாகி விட்டுள்ளது.

பா.ஜ.க.வினர் நாடாளுமன்றத்தில் செய்த ரகளையை, மீண்டும் அடுத்த கட்டமாக ஆளும் அய்க்கிய முற்போக்கு அரசுக்கு எதிரான ஆயுதமாக இதை கையில் எடுத்து, பல்வேறு காட்சிகளை அரங்கேற்றி வருகின்றனர்!

வெறும் வாயை மென்ற எதிர்க்கட்சி களுக்கு இந்த அவல் கிடைத்துள்ளது!

ஊடகங்கள் உடனே அவர் ராஜினாமா செய்வாரா? உள்துறை அமைச்சர் ராஜி னாமா செய்வரா? என்று ஒரு வகையான தேவையற்றவைகளை திட்டமிட்டே கிளப்பி அரசியல் நடத்துகின்றன. U.P.A. அரசுக்கு புது நெருக்கடியை உருவாக்கவே சர்வ கட்சிக் கூட்டம் கூட்டுக, நாடாளுமன் றத்தைக் கூட்டுக என்று அடாவடித்தனத் தில் ஈடுபட்டு குடிஅரசுத் தலைவரிடம் காவடி எடுக்கின்றனர்.

டில்லியில் ஒரு காவல்துறை ஊழியர் உயிர் துறந்துள்ளார். அதுவும் வேதனை யானது.

இது ஒரு நிருவாகப் பிரச்சினை; உடனே பிரதமர், உள்துறை அமைச்சர் உட்பட அனைவரும் நடவடிக்கை எடுத்து, இந்திய மாநில அதிகாரிகளின் மாநாடு, சந்திப்பு உட்பட ஏற்பாடு செய்து இனி இப்படி எங்கும் நடக்காமலும் செய்துவிட்ட பிற்பாடு கூட ஏன் இதை ஊதி ஊதி பெரிதுபடுத்துகின்றனர்?

முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணி யில் முன்னாள் (பா.ஜ.க.வின்) பிரதமராக வாஜ்பேயி அவர்கள் இருந்தபோது கிறித் துவ கன்னியாஸ்திரீகள் கற்பழிக்கப் பட்ட பிரச்சினை எழுப்பப்பட்டபோது, அதற்கென்று அவர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கலாம் என்று கூறி அவர் கண்டனத்துக்கு ஆளான பழைய கதையை வசதியாக பா.ஜ.க. மறந்து விட்டதா? மறைத்துவிட விரும்புகிறதா?

சமூக விரோதிகளை அடக்குக!

உரிய நடவடிக்கை தேவை; அதே நேரத்தில் சமூக விரோதிகளை அடக்கி, சந்தர்ப்பவாத அரசியலையும் தடுக்க வேண்டியது அவசியம்! அவசியம்!!

அதற்காக துள்ளிக் குதிக்கும் ஊடகங் கள், தலைவர்கள் தமிழ்நாட்டில் நடை பெறும் வன்கொடுமைகளையும் கண்டிக்க வேண்டாமா?

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை
25.12.2012

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது எதற்கு?

தந்தை பெரியாருக்கு சிலை வைப்பது அவருக்கு ஆராதனை செய்து, வழிபடுவதற்காக அல்ல; சடங்கு, சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு ஆதிக்க ஆன்மீகச் சுரண்டலுக்கு வழி வகுத்திடவும் அல்ல; தந்தை பெரியாருக்கு சிலை வைத்திடுவது அவருக்கு அடையாள மரியாதை செய்திடவே; அவருடைய பகுத்தறிவுக் கொள்கையினை _ சிலையைப் பார்வையிடுபவர்களுக்கு உணர்த்திடவே. தனக்கு சிலை வைத்திட தந்தை பெரியார் அனுமதித்தபோது அவர் விதித்த நிபந்தனை இதுதான்; என் உருவம் சிலை வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்; சிலை வடிவத்தினை விட நான் பிரச்சாரம் செய்த பகுத்தறிவுக் கருத்துகள் சிலை பீடத்தில் பொறிக்கப்பட வேண்டும். எந்த கருத்துகளை நான் எடுத்துச் சொன்னேனோ அந்தக் கருத்துகள் சிலையை பார்ப்பவரிடம் சென்றடைய வேண்டும் என்று கூறி சிலை வைத்திட அனுமதி அளித்தார்.

பொது வாழ்வில் பங்கேற்ற பலருக்கும் சிலை வைத்திடும் பொழுது அவரது பெயர் மற்றும் வாழ்ந்த நாள் பற்றிய குறிப்புகளுடன் சிலை நிறுவிடுவர். ஆனால் தந்தை பெரியாருக்கு எத்தனை சிலைகள் வைக்கப்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவரது பகுத்தறிவுக் கருத்துகளும் அவைகளில் பொறிக்கப்படுகின்றன. பரந்துபட்ட, நிலைத்திடும் கருத்துப் பரவலுக்கு உரிய அணுகுமுறையின் முழுமையான அடையாளமே தந்தை பெரியாருக்கு சிலை நிறுவிடுவது. இதில் வழிபாடு கிடையாது. பகுத்தறிவுக் கருத்துப்பரவல்தான் சிலை வைத்திடுவதன் முழுப் பரிமாணமாகும்.

எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாத இயக்கம் பெரியார் இயக்கம். சோதனைகளையே சாதனையாக்கிக் கொள்ளும் வல்லமை பெற்றது பெரியார் இயக்கம். தந்தை பெரியார் வாழ்ந்த பொழுது, ஒரு சமயம் சுற்றுப் பயணத்தில் அவரது எதிரிகள் அவரை அவமானப்படுத்தும் எண்ணத்தில் அவரை நோக்கி செருப்பு வீசினர். வீசப்பட்ட ஜோடி செருப்புகளில் ஒன்று மட்டும் பெரியாரது வாகனத்தில் வந்து விழுந்தது. பயணப்போக்கில் சற்று தூரம் வந்துவிட்ட பெரியார், வாகனத்தை திருப்பச்சொல்லி, செருப்பு வீசப்பட்ட இடத்திற்கு வந்தார். வீசப்பட்ட செருப்பு ஜோடிகளில் மற்றொன்றையும் எடுத்துக் கொண்டு, வீசப்பட்ட செருப்புகளின் பயன்பாட்டையும் ( ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இருப்பதால் யாருக்கும் பயனில்லை; வீசப்பட்ட மற்றொரு செருப்பும் இருந்தால் நன்றாகப் பயன்படுமே!) வெளிப்படுத்தி எதிரிகளை நாணம் அடையச் செய்து, அவர்தம் செயலினை முறியடித்தார். பின்னர், எந்த இடத்தில் செருப்பு வீசி பெரியாரை அவமானப்படுத்திட நினைத்தார்களோ அந்த இடத்திலேயே அவருக்கு சிலை வைத்து வந்த எதிர்ப்பினையும், பெரியார் தொண்டர்கள் கருத்துப் பிரச்சார வாய்ப்பாக மாற்றினர். செருப்பொன்று விழுந்தால் சிலையொன்று முளைக்கும் எனும் அந்த நிகழ்வின் கவித்துவ வரிகள் - பெரியார் இயக்க கருத்துப் பரப்பல் அணுகுமுறையின் கட்சிதமான கட்டமைப்புகள்!

- வீ.குமரேசன்

( உண்மை - மார்ச் 16-31 )