Search This Blog

13.9.08

நான் கண்டதும், கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான்



அந்த வசந்தம்

எனக்கென்று ஒரு வசந்தகாலம் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, ஆண்டு பல-வற்றுக்குப் பிறகு -- அந்த வசந்த காலத்தை நினைவிலே கொண்டு, இன்றைய கவலைமிக்க நாட்களிலே எழமுடியாத புன்னகையைத் தருவித்துக் கொள்கிறேன். பெரியாருக்கு அந்த வசந்த காலமும் தெரியும்; இன்று பொறுப்பேற்றுக் கொண்டிருப்பதால் எழுந்துள்ள கவலையும் நன்கு புரியும்.

வசந்த காலம் என்றேனே அந்த நாட்களில் நான் கல்லூரியிலிருந்து வெளியேறி, அவருடன் காடு மேடு பல சுற்றிவந்த நிலை. அந்த காடு-மேடுகளில் நான் அவருடன் தொண்டாற்றியபோது வண்ண வண்ணப் பூக்கள் குலுங்கி மகிழ்வளித்ததைக் கண்டேன்; நறுமணம் எங்கும் பரவிடக் கண்டேன்.

அப்போது கலவரம் எழாமல் ஒரு பொதுக் கூட்டத்தை ஒழுங்காக நடத்தி முடித்திட முடிந்தால் போதும் பெரிய வெற்றி என்றே பெருமிதம் தோன்றும். புறப்படு முன்னர், தலைபோகும் -- தாடிபோகும் -- தடிபோகும் -- உயிர்போகும் என்ற மிரட்டல் கடிதங்களைப் படித்திட வேண்டிய நிலை.

அண்ணாதுரை ! இதைப் பார்த்தாயா ! இதைப் பார்த்தாயா ! என்று ஒரு கடிதத்தை வீசுவார்--ஆமாமய்யா! என்று பொருளற்ற ஒரு பதில் தருவேன். வருகிறாயா? என்று என்னைக் கேட்க மாட்டார்--வருவேன் என்பது அவருக்கு நன்கு தெரியுமாதலால், செல்வோம், பெரியாரின் பேருரை நிகழ்த்தப்படும். வந்தவர்களில் உருட்டல், மிரட்டல் கடிதம் எழுதியவர் இருந்திருப்பின், அடுத்த கூட்டத்-திற்கு அவர் அய்யாவிற்காக மாலை வாங்கிக்கொண்டுதான் வருவார் ! அத்தகைய தெளிவும் வாதத்திறமையும் பேச்சில் கிடைக்கும். அத்தகைய தெளிவுரை பெற்றுப் பெற்று, தமிழரில் பலர், பலப்பலர் திருந்தினர் என்ப மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுவிட்டிருக்கிறது.

ஒருவர் புறப்பட்டு ஓயாது உழைத்து, உள்ளத்தைத் திறந்து பேசி, எதற்கும் அஞ்சாது பணியாற்றி ஒரு பெரிய சமூகத்தை விழிப்பும், எழுச்சியும் கொள்ளச் செய்வதில் வெற்றிபெற்ற வரலாறு இங்கன்றி வேறெங்கும் இருந்ததில்லை.

அந்த வரலாறு துவங்கப்பட்டபோது நான் சிறுவன். அந்த வரலாற்றிலே புகழேடுகள் புதிது புதிதாக இணைக்கப்பட்ட நாட்களிலே ஒரு பகுதியில் நான் அவருடன் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். அந்த நாட்களைத்-தான் என் வசந்தம் என்று குறிப்பிட்டிருக்-கிறேன். பெரியாருடன் இணைந்து பணியாற்றி-யவர் பற்பலர். அவருடன் மற்ற பலரைவிட இடைவிடாது இருந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தவன் நான், அந்த நாட்கள் எனக்கு மிகவும் இனிமையான நாட்கள்; இன்றும் நினைவிலே கொண்டு வரும்போது இனிமை பெறுகின்றேன்.

எத்தனை எத்தனையோ கருத்துகளை உரையாடலின் மூலம் தந்திருக்கிறார், எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்பதை நான் கற்றுணரும் வாய்ப்பும் தந்தார். பொதுத்-தொண்டாற்றுவதில் ஓர் ஆர்வமும் அகமகிழ்வும், மன நிறைவும் பெற்றிடச் செய்தார். கோபத்துடன் அவர் பலரிடம் பேசிடக் கண்டிருக்கிறேன்; கடிந்துரைக்கக் கேட்டிருக்கிறேன்; உன்னை எனக்குத் தெரியும் போ! என்று உரத்தக் குரலில் கூறியதைக் கேட்டிருக்கிறேன்; ஒருநாள்கூட அவர் என்னிடம் அவ்விதம் நடந்துகொண்டதில்லை, எப்போதும் ஒரு கனிவு, எனக்கென்று தனியாக வைத்திருப்பார். என்னைத் தனது கும்பத்தில் பிறவாப் பிள்ளை எனக்கொண்டிருந்தார்.

நான் கண்டதும், கொண்டதும் அந்த ஒரே தலைவரைத்தான். இப்போது நான் உள்ள வயதில் அவர் இருந்தார்-நான் அவருடன் இணைந்தபோது; முப்பது ஆண்டுகளுக்கு முன்பு.

அதற்குமுன் முப்பது ஆண்டுகள் அவர் பணியாற்றி வந்திருக்கிறார்.

இந்த ஆண்டுகள் தமிழரின் வரலாற்றிலே மிக முக்கியமான ஆண்டுகள். திடுக்கிட வைக்கிறாரே! திகைப்பாக இருக்கிறதே! எரிச்சலூட்டுகிறாரே! ஏதேதோ சொல்லு-கிறாரே! என்று கூறியும், விட்டுவைக்கக் கூடாது! ஒழித்துக்கட்டியாக வேண்டும்! நானே தீர்த்துக் கட்டுகிறேன்! என்று மிரட்டியும் தமிழகத்துள்ளாரில் பலர் பேசினர்; ஏசினர்; பகைத்தனர்; எதிர்த்தனர்; ஏளனம் செய்தனர்; மறுப்பு உரைத்தனர். ஆனால், அவர் பேச்சைக் கேட்டவண்ணம் இருந்தனர். மூலையில் நின்றாகிலும், மறைந்திருந்தாகிலும்! அந்தப் பேச்சு அய்ம்பது ஆண்டுகளுக்கு மேலாக நடந்தபடி இருந்தது. எதிர்த்தவர்கள் ஏளனம் புரிந்தவர்கள், ஏனோதானோ என்று இருந்தவர்-கள் தத்தமது நிலை தன்னாலே மாறிடக்-கண்டனர்; கொதித்தவர்கள் அடங்கினர்; மிரட்டினோர் பணிந்தனர்; அலட்சியம் செய்தோர் அக்கறை காட்டினர்; அவருடைய பேச்சோ! அது தங்குதடையின்றி வேகம் குறையாமல் பாய்ந்தோடி வந்தது. மலைகளைத் துளைத்துக்கொண்டு, கற்களை உருட்டிக்-கொண்டு, காடுகளை கழனிவளம் பெறச் செய்து கொண்டு, ஓசை நயத்துடன், ஒய்யார நடையுடன்! அங்கே பேசுகிறார், இங்கே பேசுகிறார், அதைக் குறித்துப் பேசுகிறார், இதுகுறித்துப் பேசுகிறார் என்று தமிழகம் இந்த அய்ம்பது ஆண்டுகளாகக் கூறிவருகிறது.

மனதிற்பட்டதை எடுத்துச் சொல்வேன்-எது நேரிடினும்-என்ற உரிமைப் போர் அவருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர்கண்ட வெற்றி மிகப்பெரியது.. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திடவி-ல்லை; இன்று அனைவரும் வென்றுள்ளனர். அந்த வெற்றியின் விளைவுகளை, இந்த தமிழகத்தில் தூய்மையுடன் மனத்திற்குச் சரியெனப் பட்டதை எவரும் எடுத்துரைக்-கலாம் என்ற நிலை உறுதிப்படுத்தப்-பட்டிக்கிறது. அறிவுப் புரட்சியின் முதல்கட்ட வெற்றி இது! இந்த வெற்றி கிடைத்திட அவர் ஆற்றிய தொண்டின் அளவு, மிகப் பெரியது.

தமிழகத்தில் இன்று அவரால் ஏற்பட்டுள்ள இந்த நிலை இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாது. பிற பகுதியினர் இது பற்றிக் கேள்விப்படும்போது, வியர்த்துப் போகின்றனர். அப்படியா!--முடிகிறதா!--நடக்கிறதா!--விட்டுவைத்திருக்கிறார்களா!--என்று கேட்கிறார்கள்--சுற்றும் முற்றும் பார்த்துக்-கொண்டு.

அரித்துவாரம், கல்கத்தா, பாட்னா, கான்பூர், காசி, லாகூர், அலகாபாத், அமிர்தசரஸ் மேலும் இதுபோன்ற பல நகர்களில் என்னையும் உடன் அழைத்துக்கொண்டு பெரியார் சுற்றுப்-பயணம் செய்தபோது, ஒவ்வொரு ஊரிலும் இதுபோலத்தான் கேட்டனர். யார்? அந்த ஊர்களிலே உள்ள பகுத்தறிவுவாதிகள்.

அந்த இடத்துப் பகுத்தறிவுவாதிகள் படிப்பார்கள்--பெரிய பெரிய ஏடுகளை; எழுதுவார்கள் அழகழகான கட்டுரைகளை! கூடிப் பேசுவார்கள் சிறிய மண்டபங்களில், போலீசு பாதுகாப்புப் பெற்றுக்கொண்டு! இங்கு? இங்கா! இவர் பேசாத நாள் உண்டா? குரல் கேட்காத ஊர் உண்டா? அவரிடம் சிக்கித்தி-ணறாத பழமை உண்டா? எதைக்கொண்டு அவர் திகைத்தார்! எதற்கு அவர் பணிந்தார்? எந்தப் புராணம் அவரிடம் தாக்குதலைப் பெறாதது? ஏ! அப்பா! ஒரே ஒருவர், அவர் நம்மை அச்சு வேறு, ஆணி வேறாக எடுத்தெடுத்து வீசுகிறாரே என்று, இந்நாட்டை என்றென்றும் விடப்போவ-தில்லை என்று எக்களமிட்டுக்கொண்டிருந்த பழமை அலறலாயிற்று! புதுப்புது பொருள் கொடுத்தும், பூச்சு மெருகு கொடுத்தும் இன்று பழமையின் சில பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என்றாலும், விழுந்த அடியால் அடித்தளம் நொறுங்கிப் போய்விட்டிருக்கிறது என்பதை அறியாதார் இல்லை!


எனவேதான், பெரியாருடைய பெரும் பணியை, நான் ஒரு தனி மனிதனின் வரலாறு என்றல்ல, ஒரு சகாப்தம்--ஒரு கால கட்டம்--ஒரு திருப்பம் என்று கூறுவது வாடிக்கை.

அக்கிரமம் தென்படும்போது, மிகப் பலருக்கு அது தன்னைத் தாக்காதபடி தடுத்துக்-கொள்ள வேண்டும் என்ற எண்ணமும், ஒதுங்கிக்கொள்வோம் என்ற பாதுகாப்பு உணர்ச்சியும்தான் தோன்றும்; எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் எளிதில் எழுவதில்லை!

பெரியார் அக்கிரமம் எங்கு இருந்திடக் கண்டாலும், எந்த வடிவிலே காணப்படினும், எத்துணை பக்கபலத்துடன் வந்திடினும் அதனை எதிர்த்துப் போரிடத் தயங்குவதில்லை.

அவர் கண்ட களம் பல; பெற்ற வெற்றிகள் பலப்பல! அவர் தொடுத்த போர் நடந்தபடி இருக்கிறது! அவர் வயது 89! ஆனால், போர்க்களத்திலேதான் நிற்கின்றார்!

அந்தப் போரிலே ஒரு கட்டத்திலே அவருடன் இருந்திடும் வாய்ப்பினைப் பெற்ற நாட்களைத்தான் வசந்தம் என்று குறிப்பிட்டேன்.

வாழ்க பெரியார்!

மேலும் பல ஆண்டுகள் அவர் நம்முடன், நமக்காக வாழ்ந்திருக்க வேண்டும். தமிழர் வாழ்வு நல்வாழ்வாக அமைவதற்கு, பன்னெடுங்காலமாக இருந்துவரும் கேடுகள் களையப்படுவதற்கு அவருடைய தொண்டு தொடர்ந்து அளிக்கப்பட்டுவரும் என்பதில் அய்யமில்லை.

வாழ்க பெரியார்!"

-------------- பேரறிஞர் அண்ணா - தந்தை பெரியாரின் 89-ஆம் ஆண்டு பிறந்தநாள் "விடுதலை" மலருக்கு எழுதிய கட்டுரை

0 comments: