
நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு கடவுள் சம்பந்தமான சர்ச்சை (விவகாரம்) அரசியலில் கிளம்பி விட்டது. இதுபொது நன்மைக்கு நலம் தரும் காரியம் என்றே நான் கருதுகிறேன். இதன்மீது சத்தியாக்கிரகம் - பட்டினி - மறியல் - போராட்டம் - கிளர்ச்சி - வாக்குவாதம் முதலியவை தீவிரத்தன்மையில் நடைபெற வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். அப்போது தான் மக்கள் தெருக்களில் கடவுள் பொம்மை (உருவத்தையும், படங்களையும், கடவுள் பிரச்சார (சம்பந்தமான) புராண இதிகாசக் கதை முதலியவற்றையும் தெருவில் போட்டு உடைக்கவும் கிழித்தெறியவும் தீயிட்டுக் கொளுத்துவுமான காரியங்களை குஷாலாக உற்சாகமாகச் செய்ய முன்வரக் கூடும்
ஏன் என்றால் நம் நாட்டில் யாருக்குமே கடவுள் என்றால் என்ன என்பது தெரியவே தெரியாது. பார்ப்பானுக்கு மாத்திரம் தான் நன்றாகத் தெரியும். அதாவது தங்கள் ஜாதியார் அல்லாத மக்களை மடையர்களாக்கவும் (அவர்களது) ``இழிவின்'' பயனாகவும் உழைப்பின் பயனாகவும் தாங்கள் (பார்ப்பனர்கள்) மேல்ஜாதிக்காரராகவும் பாடுபடாமல் உயர்பதவிகள் பெற்று ``மேன்மக்களாக'' வாழ்வு நடத்தவுமான ஒரு சாதனம் கடவுளை உண்டாக்கி பரப்பி மக்களை வணங்கச் செய்யத் தக்கதுதான் என்பது பார்ப்பனக் குஞ்சு குருத்து முதல் எல்லோருக்கும் தெரியும். அதனால், ஏமாந்துபோய் முட்டாள்களாக - ``இழிபிறவி'' மக்களாக ஆக்கப்பட்டிருப்பவர்கள் வெட்கப் பட்டு விஷயம் உணர்ந்து சிறிதாவது திருத்தமடைய மேற்கண்ட கிளர்ச்சிகள் பயன்படும் என்றே கருதி வரவேற்கிறோம்.
தமிழன் - திராவிடன் என்றாலே மானம் ஈனம் அற்ற பிண்டம் என்பது இன்று உலகம் எங்கும் கருதப்பட்டு வருகிறது. இந்த நிலை இப்படிப்பட்ட கிளர்ச்சிகளாலாவது ``தமிழர்களுக்கு இப்போதுதான் மான உணர்ச்சி ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது'' என்று தோன்றக்கூடும். அதிலும் இம்மாதிரிக் கிளர்ச்சிகளால் மக்கள் ஜெயிலுக்குப் போகும்படியான நிலை ஏற்படுமானால் பொதுமக்களுக்கு எளிதில் அவர்களுடைய மான உணர்ச்சியைத் தூண்டக் கூடிய வாய்ப்பு ஏற்படலாம் என்றும் கருதுகிறேன். மக்களுக்குப் போதிய அறிவும் பிரச்சாரமும் இல்லாத காரணம் கூட இன்று இவ்வளவு சர்ச்சைக்கு இடமான காரியமாக ஆக்கப்படுகிறது. தக்க பிரச்சாரம் நடந்தால் அரசாங்க பொதுக் காரியாலயங்களில் உள்ள படங்கள் மாத்திரமல்லாமல் தனிப்பட்ட மக்கள் தங்கள் வீடுகளில் மாட்டியிருக்கும் படங்களையும் தங்கள் முட்டாள்தனத்தையும் உணர்ந்து அவற்றையும் தூக்கி வீசி குப்பைத் தொட்டியில் போடுவார்கள். அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இப்படிப்பட்ட கிளர்ச்சிகளால்தான் முடியும். இதை நாமே தொடங்கி இருக்க வேண்டியது அறிவுடைமையாகும். அதில்லாததனால் பார்ப்பனர்கள் தொடங்கி இருக்கிறார்கள். இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பே ஆகும்.
இனி இந்தப் பிரச்சினை தமிழர் சமுதாய இயல் பிரச்சார பிரச்சினையில் ஒரு முக்கிய பிரச்சினையாக உருவம், உருவப்படம், பிரச்சார நூல்கள் ஆகியவற்றை அழிப்பதும் எரிப்பதும் அப்புறப்படுத்துவதுமான காரியத்தை வலியுறுத்தும் பிரச்சாரத்தையும் சேர்ந்து பிரச்சாரம் செய்ய வேண்டியது அவசியமாகும். கடவுள் படத்தை சுவரில் தொங்கவிடுவது பக்திக்கு ஆகவா, பிரச்சாரத்திற்கு ஆகவா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
----------------------------தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் -"விடுதலை", 31.7.1968).
0 comments:
Post a Comment