Search This Blog

4.1.08

அய்யம் போக்கும் பெரியார்

4.திராவிடர் கழகம் ஏன்?
-----------------------
நேற்று தோழர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த போது பெரியாரின் தொண்டறத்தை மிகவும் வியந்து போற்றினார். ஒரு சில அய்யப்படுகளையும் எடுத்து வைத்தார். அவற்றிற்கு தகுந்த விடையை கூறிய பிறகு மேலும் மேலும் பெரியாரின் பெருமையை புகழ்ந்தார். அந்தத் தோழர் கேட்ட முக்கியமான வினாவைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.


நாம் வசிப்பதோ தமிழ்நாடு,நாமோ தமிழர்கள் அப்படியிருக்குபோது பெரியார் நமது இயக்கத்துக்கு தமிழர்கழகம் என்று பெயர் வைக்காமல் திராவிடர்கழகம் என்று பெயர் வைத்தது ஏன்?
இக்கேள்வியானது இப்போது எழுப்பப்பட்ட புதிய கேள்வியல்ல. பெரியார் சுயமரியாதை இயக்கத்தையும், ஜஸ்டிஸ்கட்சியையையும் இணைத்து 1944 ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர்கழகம் என்று பெயர் வைத்தபோது ஒரு சில தோழர்களால் எழுப்பப்பட்டது.அப்போதே அதற்கு தெளிவான விளக்கத்தை பெரியார் அளித்தார். அவ்விளக்கத்தை ஏற்கமறுத்து அந்த ஒரு சில தோழர்கள் வெளியேறினார்கள்.(வெளியேறிய தோழர்கள் நிலையைப் பார்த்தால் தமிழ் சமுதாயாத்திற்கு பயனின்றி போனார்கள் என்பது ஒரு சோகமான வேதனைதான்).தமிழர்கழகம் என்று பெயர் வைக்காமல் திராவிடர் கழகம் என்று பெரியார் ஏன் பெயர் வைத்தார் என்பதை பார்ப்போம்.

"பார்ப்பனரல்லாதார் என்கிற பெயர் ஒரு பெரும்பான்மை மக்கள் ஒரு சிறுபான்மை மக்கள் அல்லாதார் என்கிற பெயரால் அழைப்பதாக இருப்பதாலும்,அது அவ்வளவு சரியில்லை ஆதலாலும், மேலும் இந்நாட்டு மக்கள் அல்லாத அந்நியர்களும், பார்ப்பனர் அல்லாதார் என்ற தலைப்பின் கீழ் வரக்கூடுமாதலாலும்,தென் இந்தியர் என்கிற தலைப்பில் தென் இந்தியாவில் வாழும் எல்லா மக்களும் வரக்கூடுமாதலாலும்,இது தவிர்த்துத் தமிழர்கள் என்று அழைப்பதாயிருந்தாலும், அந்தத் தலைப்பிலும் தமிழ்ப் பண்பு இல்லாத தமிழ் கலாச்சாரத்துக்கு வேறுபட்ட தமிழ் பேசும் பார்ப்பனர்கள் எல்லோரும் புகுந்து கொள்ளக்கூடுமாதலாலும், மக்களை இனத்தின் பேராலேயே ,கலாச்சாரத்தின் பெயராலேயே ஒற்றுமைப்படுத்த முடியும் என்பதாக அனுபவத்தால் கண்டதாலும் பார்ப்பனரல்லாதார் கழகத்தை ஜஸ்டிஸ்கட்சியை திராவிடர் கழகம் என்கிற பெயரால் அழைக்க வேண்டி ஏற்பட்டது".
----------தந்தைபெரியார்-"விடுதலை"-23-01-1950
தமிழர்கழகம் என்று பெயர் வைத்தால் பார்ப்பனர்களும் மற்ற அந்நியர்களும் வந்து இயக்கத்தில் சேர்ந்து தொல்லை கொடுப்பார்கள். அதோடு நம்மை (வைப்பாட்டிமகன் போன்ற)இழிவுபடுத்துபவனுடன் நாம் எப்படி ஒன்றாக இருக்கமுடியும்,அதுமட்டுமல்லாமல் நமக்கும்,நம்மை விட எல்லாவிதத்திலும் உயர்ந்தவன் என்று இன்றும் கூட சொல்லிக் கொண்டிருக்கும் பார்ப்பனர்களும் தமிழர்கள் என்ற போர்வையில் உள்ளே வரவிடாமல் தடுப்பதற்காகத்தான் ஒரு கேடயமாகத்தான் திராவிடர் கழகம் என்று பெரியார் பெயர் வைத்தார்.
இதற்கு கண்ணெதிரில் நடந்த சம்பவத்தை உதாரணமாக கூறவேண்டுமானால் "திராவிடர்" என்ற சொல்லிலுள்ள "ர்" என்ற எழுத்தை நீக்கி விட்டு இயக்கம் ஆரம்பித்ததின் விளைவு ஜெயலலிதா போன்ற பார்ப்பனர்கள் பொறுப்புக்கு வந்து திராவிட இயக்க கொள்கைக்கு எதிராக செயல் பட்டுக்கொண்டிருப்பதை நாளும் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆக நமக்கு திராவிடர் என்ற சொல் ஒரு பாதுகாப்பு கேடயமாக உள்ளதால் திராவிடர் கழகம் என்று பெயர் வைத்தார் பெரியார்.பார்ப்பனர்கள் பார்ப்பனத்தன்மையிலிருந்து ஒரு வேளை மாறி மனிதர்கள் ஆகும் போது திராவிடர் என்ற சொல்லும் மாறும். அதுவரை திராவிடர் என்ற சொல்லாக்கம் தொடரவேண்டும்.
------------------------தொடரும்...

0 comments: