Search This Blog

29.3.11

பணக்காரத்தன்மை ஒரு மூடநம்பிக்கையே - பெரியார்




மனிதனைப் பிடித்து வாட்டும் மூடநம்பிக்கைகளில் பணக்காரத் தன்மையும் ஒரு மூடநம்பிக்கையேயாகும். இந்தப் பணக்காரத் தன்மை மூடநம்பிக்கையானது மத சம்பந்தமான மூடநம்பிக்கைகளைவிட மிக முக்கியமானதும் மோசமானதுமாகும்.

பணம் இல்லாவிட்டால் கடவுளுக்குக் கூட வேலை இல்லை என்று முடிவு கட்டிவிடலாம். பணமே கடவுளுணர்ச்சிக்கும் முக்கியமாய் மத உணர்ச்சிக்கும் மற்றும் பல மூடநம்பிக்கை உணர்ச்சிக்கும் மூல காரணமாய் இருக்கிறது. பணம் என்று சொல்லுவது செல்வம் என்பதின் கீழ் வரும் எல்லாவற்றையும் பொறுத்தது. அச்செல்வத்தன்மைக்கு அடிப்படையானது புகழ் ஆசை என்று தான் சொல்ல வேண்டும். அப்புகழ் ஆசை என்பதும் வெறும் சுயநலத்தையே அடிப்படையாகக் கொண்டதே தவிர மற்றப்படி செல்வ சம்பந்தமான புகழில் ஆசையில் வேறு எவ்வித பகுத்தறிவும் காண முடியவில்லை.

சமூகத்தில் தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சி எல்லா மக்களுக்கும் உள்ளது என்று ஒரு சாரார் வாதிக்கக் கூடுமானாலும் அப்புகழுக்கும், தான் பெரியவனாய் இருக்க வேண்டும் என்கின்ற தன்மைக்கும் பணம் சேர்ப்பது என்பதை சாதனமாகக் கொண்டதானது மூடநம்பிக்கையில் பட்டதேயாகும்.

மனிதனுக்கு சுயநலமும் புகழ் ஆசையும் இல்லாமல் இருக்காது என்பது ஒரு அளவுக்கு உண்மைதான். ஆனால் அதற்கு சாதனம் செல்வம் சேர்ப்பது என்பது இயற்கையாய் ஏற்பட்டதல்ல என்போம். ஒரு மனிதன் மேல் லோகத்தில் போய் சுகமாய் (மோட்சத்தில்) இருக்க இந்த லோகத்தில் கடவுள் தயவும் புண்ணியமும் சம்பாதிக்கலாம் என்று சில காரியங்கள் செய்ய எப்படி கற்பிக்கப்பட்டிருக்கிறானோ, அது போலவே தான் சுயநலத்துக்கும், புகழுக்கும் பணம் சம்பாதிப்பதை சாதனமாகக் கற்பிக்கப்பட்டிருக்கிறான். இவனுக்கு முன் பிறந்த மற்ற எல்லோரும் செய்வதைப் பார்த்து இவனும் செய்கிறான். அதனால் அச்செல்வம் தேடி செலவழிப்பதால் ஏதோ சில சௌகரியங்கள் ஏற்படுவதாக கருதிக் கொள்ளுகிறான். மற்றவனும் இவனை பெரியவனாக மதிக்கிறான் என்றாலும் இச்செல்வத்தால் உண்மையில் எவ்வித பலனும் அடைவதில்லை. தன்னைப் பார்த்து பிறர் செல்வவான் என்று சொல்லுவதை ஒரு புகழாகவும் தனக்கு இவ்வளவு செல்வம் இருக்கிறது என்று நினைத்துக் கொள்வதை தான் ஏதோ ஒரு பெரிய பலன் அனுபவிப்ப தாகவும் கருதிக்கொள்ளுகிறான்.

மேலும் ஒருவன் செல்வவானாய் இருப்பதற்காக அவனுக்கு சில கடமைகள் இருக்கிறது. அக்கடமைகளை நிறைவேற்றுவதையும், தான் ஏதோ ஒரு பெரும் பயன் அனுபவிப்பதாகக் கருதிக் கொள்கிறான். ஒருவன் போலீசு அதிகாரியாய் இருப்பதற்காக அவனுக்குள்ள கடமைகளைச் செய்யும் போது அவன் எப்படி தன்னை ஒரு பெரிய தலைவனாக நினைத்து எப்படி மகிழ்கிறானோ அவனைப் பார்த்து பிறர் அவனை அதிகாரி என்று எப்படி நினைக்கிறார்களோ அவ்வளவுதான் செல்வவான் தான் செலுத்த வேண்டிய கடமைகளைச் செலுத்தும் போது தன்னை நினைத்து மகிழ்வதும் இவனைப் பார்த்து மற்றவர்கள் நினைப்பதும் என்றுதான் சொல்ல வேண்டும்.

செல்வவான் என்று நினைத்துக் கொள்வதும் பிறர் இவனை செல்வவான் என்று சொல்லுவதும் தவிர செல்வவானுக்கு வேறு என்ன நலம் இருக்கிறது என்று பார்த்தால் அதிலுள்ள மூடநம்பிக்கை நன்றாய் விளங்கும். செல்வவான் அல்லாத சாதாரண மனிதன் அதாவது வரவுக்கும் செலவுக்கும் சரிக்கட்டும்படியான ஒரு சம நிலையுள்ள மனிதன் இன்னமும் தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால், தன்னுடைய தேவைகளுக்காக தன் வருமானமல்லாமல் மற்றொருவனைப் போய் கெஞ்ச வேண்டிய அவசிய மில்லாத மனிதனின் நிலைமையை விட செல்வவான் என்கின்றவன் நிலைமை எந்த விதத்தில் மேலானது நன்மையானது என்பதை யோசிப்போம்.

செல்வம் (பணம்) தேடவேண்டும் என்று கருதி அதில் இறங்கியவ னுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகின்றது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக் கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டிகள் இத்யாதி போட்டிகள் இவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகிறது.

இவ்வளவோடல்லாமல் சம்பாதித்த பணத்தை காப்பாற்றுவதில் உள்ள சிரமம், இவற்றால் ஏற்படும் எதிரிகள், பொறாமைக்காரர்கள் ஆகியவர்களின் தொல்லைக்கு ஈடுகொடுப்பது ஆகியவை பெருங்கவலைக்கு இடமாய் விடுகிறது. பிறகு செல்வவானாய் இருப்பதற்கு ஆக செய்ய வேண்டிய கடமைகள் இடையறாமல் அதாவது அறுபது நாழிகையும் ஓடும் யந்திரம்போல் செய்து கொண்டே இருக்க வேண்டியதாய் இருக்கிறது.

இவ்வளவோடு இந்தக் காரியம் முடிந்துவிட்டது என்று சொல்லுவதற்கு இல்லை. செல்வம் படைத்ததின் பலன் தனக்குப் பிறகு இந்தச் செல்வம் என்ன கதி ஆவது என்கின்ற கவலையானது மற்றொரு பெரும் பாகமான கவலைக்கு இடமானது. எதிர்பாராத வார்சுகள் ஆண் பிள்ளையோ பெண்பிள்ளையோ அல்லது இரண்டு மில்லாமல் எவனுக்கோ பிறந்த தத்துப்பிள்ளையோ என்பதொருபக்கமிருக்க ஆண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? பெண் பிள்ளையானால் எத்தனை பேர்கள்? அவர்களுக்கு வரும் பெண்ஜாதி புருஷன்மார் யார்? அவர்கள் இச் செல்வத்தை எப்படி அனுபவிப்பார்கள்? எத்தனை நாளைக்கு வைத்து இருப்பார்கள்? தான் எத்தனை நாள் எவ்வளவு கஷ்டப்பட்டு எந்தஎந்த வழியில் தேடிய செல்வத்தை எத்தனை நாளில் எந்த எந்த வழியில் பாழாக்கி விடுவார்கள்? என்கின்ற கவலை லேசானதல்ல என்பது மாத்திரமல்லாமல் அந்தச் செல்வங்கள் 100க்கு 75 விகிதம் ஒரு செல்வவான் முன்பாகவே மற்ற செல்வவான் செல்வம் அவன் பிள்ளைகளால் பாழாக்கப்படுவதையும் பார்க்கக்கூடியதாகவே இருக்கிறது.

அன்றியும் கஷ்டப்பட்டு தேடிய செல்வவான், தேடிவைப்பதிலேயே கவலையாய் இருந்து சாக அவன் பின் வார்சு ஒருபாடும் படாமல் அதை அல்லது அதன் அனுபவத்தை தான் ஒரு செல்வவான் என்கின்ற உணர்ச்சியிலேயே அனுபவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்து வருகிறான். தத்துக்கு வருகிறவன் புதையல் எடுத்தது போல் அனுபவிக்கிறான்.

ஆகவே செல்வமானது செல்வவானுக்குப் பின்னால் இந்தப்படி யெல்லாம் ஆவதில் செல்வவானுக்கு ஏற்படும் பயன் என்ன? எவ்வளவோ கஷ்டம் கவலை தொல்லை ஆகியவைகள் அனுபவித்துப் பொருள் தேடியதற்கு இதுதான் பயன் என்றால் சொத்து சேர்ப்பது என்பது ஒரு மூடநம்பிக்கை அல்லது குருட்டு பழக்க வழக்கத்தில் பட்டது என்பதில் என்ன ஆட்சேபணை இருக்கின்றது என்று கேட்கின்றோம்.

ஒரு தாசி ஓடி ஓடி ஒரு இரவுக்கு 10 புருஷர்கள் வீதம் கூடி 10 ஆயிர ரூபாய் நகையும், 2 வீடும், 5, 6 ஏக்கர் நஞ்சை பூமியும் எல்லாம் 30, 40 ஆயிரம் ரூபாய் சம்பதிக்கிறாள். கிழப்பருவம் வந்த உடன் மகளைத் தயார் செய்கிறாள். மகள் தயாரானதும் மகளிடம் செல்வத்தை ஒப்புவித்து விட்டு செத்துப் போகிறாள். தாய் செத்த பிறகு மகள் தனக்கு இச்சையான ஒரு நாயகனை ஆசை நாயகனாக வைத்துக் கொண்டு அவன் இஷ்டப்படி சல்லாபமாய் விளையாடி 2, 3 வருஷத்தில் சொத்துக்களை எல்லாம் தொலைத்துவிட்டு ஓட்டாண்டியாகி இருவரும் கஷ்டப்படுகிறார்கள். இப்படிப்பட்ட எத்தனையோ கேசுகள் நாம் பார்க்கின்றோம். இதுபோலவே வியாபாரியோ, வக்கீலோ, மிராசுதாரனோ, லேவாதேவிக்காரனோ, உத்தியோகஸ்தனோ எவனாய் இருந்தாலும் பணம் சம்பாதிப்பதில் அவனவன் படும் கஷ்டமும் அவன் பிள்ளை வந்து அதைத் தொலைப்பதில் நடந்து கொள்ளும் மாதிரியும் நாம் அறியாததல்ல.

ஏதோ ஜாதியானது பிறவியால் வருவதுபோல் செல்வமும் பிறவியினால் வரும்படியாக ஜமீன் அரசு முதலிய முறைகளில் சட்டத்தின் மூலம் காப்பாற்றப்பட்டு வருணாச்சிரமதர்மம் போல் சொத்துக்கள் அழிக்க வசதி இல்லாமல் இஷ்டப்படி அனுபவிக்க வசதி இருக்கிற பதினாயிரத்துக்கு ஒரு குடும்பம் அதுவும் மூத்த பிள்ளை மாத்திரம் என்பது தவிர மற்ற குடும்பங்கள் எவ்வளவு செல்வமுள்ளதானாலும் 2, 3 தலைமுறைகளில் ஏதாவது ஒரு மாற்றத்தை அடைந்து செல்வவான் என்கின்ற தன்மைபோய் மாஜி செல்வவான் குடும்பம் என்று சொல்லத்தக்க நிலையில் எத்தனை குடும்பங்களை நேரில் பார்க்கிறோம்.

புதிய செல்வவான்கள் என்கின்ற முறையில் கவர்ன்மெண்ட் ஷாப்புக்கள் போலவும், பாங்கி காஷியர்கள் போலவும் வரவு செலவு செய்து சம்பாதித்து சம்பாதித்து பின் வார்சுக்கு கணக்கு ஒப்புவித்து விட்டுப் போகிறவர் எத்தனை பேரைப் பார்க்கிறோம்.

ஆகவே செல்வவான் என்பதில் இருக்கும் புகழும் சுயநல அனுபவமும் எவ்வளவு இருக்கிறது என்று பார்த்தால் முன் குறிப்பிட்டதுபோல் பணக்காரத் தன்மை என்பது மூடநம்பிக்கையும், குருட்டு பழக்க வழக்கமுமாய் இருப்பதும் அதற்கு அனுகூலமாக அரசாங்கமும் சமூக கட்டுப்பாடும் இருப்பதும் நன்றாய் விளங்கும்.

நிற்க "சுயநலம் பேணுவதும் புகழ் விரும்புவதும் மனித இயற்கை என்பதை மேலே ஒப்புக்கொண்ட பிறகு அதற்கு சாதனமான காரியங்களை செய்வது என்பதில் மனிதன் பணம் சேர்க்காமலும் பணக்காரன் என்கின்ற புகழ் விரும்பாமலும் இருக்க எப்படி முடியும்? ஆகவே இது இயற்கையே ஒழிய மூடநம்பிக்கையோ குருட்டு பழக்க வழக்கமோ அல்ல" என்று சொல்ல வரலாம்.

இதற்கு மேலேயே சமாதானம் சொல்லப்பட்டது. அதாவது மோக்ஷத்தை விரும்புவது எப்படி மூடநம்பிக்கையோ அதுபோல் தான் செல்வத்தையும் அதனால் ஏற்படும் புகழையும் விரும்புவதாகும் என்று சொன்னோம். ஆனால் அது நடைபெறுவதற்கு காரணம் அரசாங்கமும் சமூகக் கட்டுபாடும் என்றும் காட்டினோம். அரசாங்கமும் சமூகக் கட்டுப்பாடும் தனி உடமை தத்துவமான முறையில் இருக்கிறபடியால் அவை நடக்க முடிகின்றது.

வேதாந்த முறை என்பது போன்ற பொதுஉடைமை தத்துவ முறையுள்ள அரசாங்க ஆட்சியும் சமூக கட்டுப்பாடும் உள்ள இடத்தில் சுயநலத்துக்கும் புகழுக்கும் செல்வம் சேர்த்து பணக்காரன் ஆகிறது என்கின்ற தத்துவம் சாதனமாய் இருக்க முடியவே முடியாது. அங்கு எப்படி மதவாதிகள் நாஸ்திகர்களை வெறுத்து குற்றவாளியாக ஆக்குகிறார்களோ அதுபோல் பணக்காரத் தன்மையை வெறுத்து குற்றவாளியாக்கி தண்டிக்கச் செய்கிறார்கள்.

அப்படி இருப்பதாலேயே அங்குள்ள மக்களுக்கு சுயநலம் இல்லை என்றாவது புகழில் விருப்பமில்லை யென்றாவது சொல்விட முடியுமா? என்று பார்த்தால் ஒரு நாளும் முடியாது.

இங்குள்ள பணக்காரனுக்கு இருக்கும் சுயநலம் என்பது அவன் பணந்தேடி மீதி வைத்து, தான் எதிர்பாராத பின் வார்சுக்கு தன்னால் அடக்கி ஆள முடியாதபடி அனுபவிக்க விட்டுவிட்டுப் போவதும் தன்னை மாத்திரமோ தன் குடும்பத்தை மாத்திரமோ பணக்கார பிரபுக் குடும்பம் என்று சொல்லும் படியானதையும் சாதனமாய் கருதுகிறான்.

அங்குள்ளவன் சுயநலமும் புகழாசையும் தானும் தனது தோழனும் கூடுமான அளவு பாடுபட்டு தேடி தேவையான அளவு விகிதாச்சாரம் வரும்படி அனுபவித்து மீதி உள்ளதை தானும் தன் தோழர்களும் இன்னமும் கொஞ்சம் முற்போக்கான முறையில் பெருக்கி தேவையான அளவு சரிசமமாய் அனுபவித்து பொதுவில் பொறுப்பு ஏற்றுக்கொள்வதை சாதனமாய் கருதுகிறார்கள்.

இதிலிருந்து அடிப்படையான இயற்கை என்னும் சுயநலமும் புகழாசையும் மாறாமலேயே சாதனங்கள் மாத்திரம் மாறி இருக்கிறதை உணரலாம்.

ஆகவே பணக்காரத் தன்மை மூட நம்பிக்கையிலும் குருட்டுப் பழக்க வழக்கத்திலும் பட்டது என்பதும், பணக்காரன் என்று இல்லாமல் எல்லோரும் சரிசமம் என்னும் தன்மை பகுத்தறிவில் பட்டது என்பதும் விளங்கும்.

---------------- தந்தைபெரியார் - “குடி அரசு” தலையங்கம் 08.03.1936

0 comments: