Search This Blog

2.3.11

2 ஜி அலைக்கற்றையின் பின்னணி என்ன? உறைய வைக்கும் தகவல்கள் - 3

அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவைத்தான் ஆ.இராசா அமல்படுத்தினார்:

தமிழர் தலைவர் விளக்கம்

அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவைத்தான் மத்திய தகவல் தொடர்புத்துறை முன்னாள் அமைச்சர் ஆ.இராசா செயல்படுத்தினாரே தவிர, அவர் சொந்த முடிவு எதையும் எடுக்கவில்லை என்று பிரதமர்கூறிய கருத்தை விளக்கி தமிழர் தலைவர் உரை யாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

3 ஜி என்பது என்ன?


3 ஜி என்பது வேகமான தொழில்நுட்பம். உருவத்தைப் பார்த்து பேசக்கூடியது. இதே டிராய் என்ன சொன்னார்கள்? இதே அமைச் சர்கள் என்ன சொன்னார்கள்?

இந்த 2 ஜியில் மாறுதல் பண்ண வேண்டாம். 3 ஜி கொண்டுவருகிறோம் பாருங்கள், அதை வேண்டுமானால் ஏலம் விடலாம் என்று சொன்ன வுடனே இராசா சொன்னார், சரி தாராளமாக செய்யுங்கள் என்று சொல்லிவிட்டார். அவர் ஒன்றும் ஆட்சேபணை செய்யவில்லை. அவர் இதில் ஒன்றும் குறுக்கே வரவில்லை.

ரூ.75 ஆயிரம் கோடி லாபம்


அதே இராசா 75 ஆயிரம் கோடி லாபத்தை உண்டாக்கிக் கொடுத்திருக்கின்றார். அந்த 75ஆயிரம்கோடி லாபம் என்பது யூகக் கணக்கல்ல. ஊழல் என்று சொல்லுகிறார்களே, குற்றம் சுமத்துகிறார்களே இப்படி நடந்திருக்கலாம் என்று சொல்லுகிறார்கள். ஆனால் 3 ஜி மூலம் 75ஆயிரம் கோடி என்பது மத்திய அரசின் கருவூலத்திற்குக் கிடைத்த பணம். இவை இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

கனவு கண்டு ஒருவன் காதலியைக் கட்டிப் பிடித்துக்கொள்கிறான் என்பதற்கும், நேரடியாக ஒரு பெண்ணை கலியாணம் பண்ணிக் கொண்டான் என்பதற்கும் என்ன வித்தியாசமோ அவ்வளவு வித்தியாசம் இருக்கிறது.

பலருக்கு இப்பொழுது ஓர் ஆசை


அது கனவில்கண்ட காதல். பலபேருக்கு இப்பொழுது ஓர் ஆசை. அடுத்து எப்படியாவது நாம் ஆட்சிக்கு வந்துவிடமாட்டோமா? எங்கே யாவது மந்திரத்தில் மாங்காய் விழாதா? என்று நினைக்கிறார்கள். நிச்சயமாக அது நடக்காது.

இங்கே கூட நாளைய முதல்வர் என்று ரொம்ப பேருக்கு எழுதி வைத்திருக்கின்றார்கள். இப்படி நிரந்தரமாக எழுதி வைக்க வேண்டும். ஏனென்றால். தேர்தலுக்குப் பிறகும் அந்த போர்டு தேவை. அப்பொழுதும் அவர்களுடைய நம்பிக் கையை குறைக்கக் கூடாது.

நாளைய முதல்வர் ....


நாளைய முதல்வர். நம்பிக்கைதானே வாழ்க்கை. இந்தத் தேர்தலில் இல்லை என்றாலும், நாளைக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். யாரும் அசைக்க முடியாது. எழுதி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நாட்டினுடைய குடிமகன், சாதாரண ஏழை, எளிய மகன், பசி தீர்த்த மகன் முடிவு செய்துவிட்டான்.

பொற்கால ஆட்சியின் தொடர்ச்சி


மீண்டும் ஆறாவது முறை ஆட்சிக்கு வருவது பொற்கால ஆட்சியின் தொடர்ச்சியாக முதல்வர் கலைஞர்தான் ஆட்சிக்கு வருவார். இதை யாராலும் அசைக்க முடியாது. அது மட்டுமல்ல. போதுமான பலத்தோடு வருவார். சும்மா அவர் மிரட்டலாம், இவர் மிரட்டலாம் என்பதற்கு இங்கே இடம் கிடையாது. (பலத்த கைதட்டல்).

பொதுமக்கள் பார்க்கிறார்கள். பொதுமக்கள் முடிவு பண்ணியிருக்கிறார்கள். பொதுமக்களை நன்றாகத் தெரிந்தவர் ஒருவர் உண்டென்றால் அது கறுப்புச்சட்டைக்காரரைத் தவிர வேறு யாரும் கிடையாது (கைதட்டல்). ஏனென்றால் மக்க ளோடவே நான் பழகிக்கொண்டிருப்பவன்.

சில ஆசைகள் ஏற்பட்டிருக்கிறது


எனவே இதனுடைய அடிப்படை என்ன? நேற்று இதைப் பற்றித்தான் கேள்வி. பிரதமர் மன்மோகன் சிங் ரொம்ப அழகாக பதில் சொல்லியிருக்கின்றார். நம்முடைய மகேந்திரன் அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னார். பார்ப்பனர்களுக்கு இப்பொழுது ஒரு ஆசை. கலைஞர் ஆட்சியை இல்லாமல் செய்து மீண்டும் பார்ப்பன ஆட்சியை தமிழகத்தில் உண் டாக்க நினைக்கிறார்களோ அதுபோல மத்திய அரசிலே மீண்டும் பார்ப்பன ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதற்கு சில ஆசைகள் வந்திருக்கிறது.

அதுவும் கனவு காண்கிற ஆசைதான். வேறு ஒன்றும் அதில் சந்தேகமே இல்லை. அவரையே கேள்வி கேட்கிறான், நீங்கள் எப்பொழுது போகப் போகிறீர்கள் என்று.

நான் எப்பொழுதும் போகிற மாதிரி இல்லை. மக்கள் கொடுத்திருக்கிற காலப்படி கடைசி வரைக்கும் எனது பணியை செய்வேன் என்று பதில் சொல்லியிருக்கிறார், உறுதியாக. காரணம் என்ன? நாட்டில் பார்ப்பனரல்லாத ஒரு பிரதமர், நாட்டில் பார்ப்பனரல்லாத காங்கிரஸ் தலைமை இந்த இரண்டையும் அவனால் சகிக்க முடியவில்லை.

கலைஞரால்தான்-காங்கிரஸ்


என்னதான் சிண்டு முடித்தனம் பண்ணினாலும் கலைஞரால்தான் காங்கிரஸ் நிலையாக இருக்க முடியும் என்று உணர்ந்திருக்கக் கூடிய ஒரு நிலை. எதார்த்த நிலையைத் தெரிந்து கொண்டிருக் கின்றார்கள். ஆகவே எத்தனை சங்கதி? மீனவர் பிரச்சினை, மற்றவர்கள் பிரச்சினை, ஈழத்துப் பிரச்சினை இவைகளில் திமுக உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. அந்த உரிமைகளுக்காகப் போராடத் தயாராக இருக்கிறோம்.

கொள்ளிக்கட்டையால் சொறிந்துகொள்ளாதீர்கள்!


ஆனால் அடித்தளத்தில் இதற்கு நேர் விரோத மானவர்கள் இருப்பார்கள், பாருங்கள். அவர்களைக் கொண்டு வந்துவைத்துவிட்டு, நீங்கள் கொள்ளிக்கட்டையை எடுத்து வைத்துக்கொண்டு தலையைச் சொறிந்துகொண்டிருக்க முடியாது. ஆகவே இதைப்பற்றியே நிறைய சொல்லாம். ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கின்றார்.

இராஜா பிரச்சினைப் பற்றி சொல்லுகிறார். என்ன இப்படி சொல்லுகிறார்களே என்று ராசாவைக் கேட்டேன். அன்றைக்கே இராசா கடிதம் எழுதினார். நான் நடப்பதில் திறந்த புத்தகமாகத்தான் நடந்து கொள்வேன். வெளிப்படையாகத்தான் எல்லாவற்றையும் செய்யலாம். இப்பொழுது மட்டுமல்ல, எதிர்காலத்திலும் அப்படித்தான் செய்வேன் என்று பதில் எழுதியிருக்கிறார்.

பிரதமர் பேட்டி


பிரதமர் அளித்த பேட்டியை நீங்கள் தொலைக் காட்சியில் பார்த்திருக்கலாம். அந்தத் தொலைக் காட்சிப் பேட்டியை அப்படியே எடுத்து பத்திரிகையில் போட்டிருக்கின்றார்கள். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதியிருக்கின்ற கேள்வி-பதிலில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஒரு பகுதியைச் சொல்லுகின்றேன். மக்கள் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களுக்கு உண்மைகள் போய்ச்சேருவதில்லை.

போர்க்களத்தில் முதல் களபலியாவது உண்மை தான் என்று ஒரு பழமொழி உண்டு. அது வெளிநாட்டில். நம்மூரிலும் போர்க்களம் நடை பெறுகிறது. அது ஆரிய-திராவிடர் போர்க்களம்.

ஏலம் விடவில்லை


இதை ஏலம் விடவில்லை. அதனால்தான் நட்டம் வந்திருக்கிறது. ஏலம் விடுவதற்கு டிராய் என்கிற அமைப்புதான் முடிவு செய்யக்கூடிய அமைப்பு. இந்த டிராய் அமைப்பில் நிதித்துறையைச் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள்.

அரசு வகுத்த கொள்கைப்படிதான் அமைச்சர் நடக்கமுடியுமே தவிர, அமைச்சர் அதைத் தாண்டி நடக்கக்கூடிய வாய்ப்பு கிடையாது. நடுநிலையிலே பொது நிலையிலே இருப்பவர்கள் சிந்திக்க வேண்டிய செய்தி இது. டிராய் என்கிற அமைப்பு ஏலம் கூடாது என்று சொல்லியிருக்கிறது. அதற்கு மேல் இருக்கின்ற டெலிகாம் கமிசனும் கூடாது என்று சொல்லியிருக்கிறது.

அமைச்சரவையின் கொள்கை முடிவு


குறைந்தபட்சம் 2 ஜி ஸ்பெக்ட்ரத்திற்காவது நிச்சயமாக இந்த ஏலமுறையைப் பின்பற்ற முடியாது என்று டிராய் சொல்லியிருக்கிறது. டெலிகாம் கமிசன் சொல்லியிருக்கிறது. அடுத்தது 3 ஜி வரட்டும். 3 ஜியில் ஏலம் விடலாம் என்று சொல்லியிருக்கின்றார். அதை விட ஒரு மனிதன் எவ்வளவு நியாயமாக நடந்துகொள்ள முடியும்?

நினைத்துப் பாருங்கள். 2003இல் அமைச்ச ரவை முடிவு. அந்த அமைச்சரவை முடிவுதான் கொள்கை முடிவு. இது ஒரு கொள்கை முடிவு. இதில் எனக்கென்ன தலையிட வேண்டியிருக் கிறது என்று ரொம்ப தெளிவாக சொல்லியிருக் கின்றார்.

உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி மாதிரி இருந்திருக்கிறார்களே தவிர, வேறு அல்ல. இப்பொழுது இருக்கிற பாப்பாத்தி பகிரங்கமாகவே உப்புகண்டம் சாப்பிடுவார் (சிரிப்பு-கைதட்டல்). 2 ஜியைப் பொறுத்த வரையிலே இந்த முறைதான் பொருத்தமானது.

3 ஜிக்கு வேண்டுமானால் ஏலம் விடலாம் எந்த நிதி அமைச்சகம் முதலில் மாறுபட்ட கருத்தைச் சொல்லிற்றோ அதே நிதியமைச்சகம் பின்னாலே ஒப்புக்கொண்டது. இவ்வளவு ஆதாரம் இருக் கிறது. ஆ.இராசா தனியாக எந்த முடிவையும் எடுக்கவில்லை

ஆ.இராசா தனியாக ஒரு கொள்கை முடிவை உருவாக்கவில்லை. இராசா ஏற்கெனவே அரசு எடுத்த கொள்கை முடிவைத்தான் தொடர்ந்தார். இன்றைக்குப் பல விசயங்கள் வருகிறது. ஒருவன் கேட்கிறான், 2ஜியில் ஒரு நட்டமும் வரவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் சொல்லி யிருக்கிறாரே என்று-கேட்டவுடனே அதற்கு நல்ல பதில் சொல்லியிருக்கின்றார்.

நட்டம் என்று சொல்வது முறையல்ல


இழப்பு, இழப்பு என்று சொல்லுகிறார்களே அதைப்பற்றி பிரதமர் சொல்லுகின்றார். அரசாங்கத்தினுடைய கொள்கை முடிவு என்னவென்றால் ஏலம்விடக் கூடாது என்று வந்ததினாலேதான் அங்கு ஏலம் விடப்படவில்லை. அதைப் போய் நீங்கள் நட்டம் என்று சொல்லுவது முறையல்ல என்று சொல்லிவிட்டு நல்ல உதாரணம் சொல்லுகின்றார்.

-----------------(தொடரும்) -----------"விடுதலை”1-3-2011

ஆறாவது முறையாக தமிழ்நாட்டின் முதல்வராக மீண்டும் கலைஞரே வருவார் திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

மீண்டும் கலைஞரே முதல்வராக வருவார் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

திண்டுக்கல்லில் 17.2.2011 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பிரதமர் சொல்லுகிறார்

பிரதமர் சொல்லுகிறார்-உணவுக்காக மானியம் தருவதில் ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படு கிறது. அதை பொதுமக்களுக்கு இழப்பு என்று சொல்லலாமா?

அது மாதிரி டெலிஃபோன் எல்லா மக்களாலும் பேசப்படவேண்டும். எல்லா இடங்களுக்கும் பரவவேண்டும் என்பதற்காக கை கொள்ளப்பட்ட கொள்கையே தவிர, இதற்குப் போய் இழப்பு என்று எப்படி நீங்கள் சொல்லாம்.

உணவுக்காக ரூ.80,000 கோடி மானியம்

உணவு மானியத்தில் 80 ஆயிரம் கோடி இழப்பீடுதான். நீங்கள் சந்தைக்கடையில் விற்க வேண்டும் என்று சில பேர் சொல்லலாம். இப்படி விற்றால் லாபம் என்று சொல்லலாம். ஆனால் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டுமே?

1 கிலோ அரிசியை 8 ரூபாய்க்கு வாங்குகிறது

ஒரு கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு கலைஞர் கொடுக்கிறார். இதை இவர்கள் உணவு கார்ப்பரே சனிலிருந்து எட்டு ரூபாய்க்கு வாங்குகிறார்கள். ஏழு ரூபாய் அரசாங்கத்திலிருந்து பணம் போடுகிறார்கள்.

எட்டு ரூபாய்க்கு இந்த அரிசியை விற்றால் எவ்வளவு லாபம் வரும்? அந்த லாபத்தை எல்லாம் கலைஞர் நட்டப்படுத்தினார். இவரைக் கொண்டு போய் சிறையில் வையுங்கள் என்று கேட்க முடியுமா? தயவு செய்து நினைத்துப் பார்க்க வேண்டும். மக்களுக்கு இதை புரியாமல் செய்யவேண்டும் என்பதற்காகத்தான் எதிர்க் கட்சியினர் இந்த முயற்சியை எடுக்கிறார்கள்.

உரமானியம் ரூ.60,000 கோடி

அதே போல உரத்திற்கு மானியம் கொடுக்கிறோம். ஒவ்வொரு வருடமும் 60,000 கோடி மானியம் கொடுக்கிறார்கள். உரம் மக்களுக்குப் பயன்பட வேண்டுமே என்பதற்காக அதைப் போய் இழப்பு என்று சொல்ல முடியுமா?

ஏழை கிராம மக்களுக்குப் போய்ச் சேர வேண்டும். ஏழை விவசாய மக்களுக்குப் போய்ச் சேரவேண்டும். அதற்காகத்தான் மானியம் வழங்கப்படுகிறது.

மண்ணெண்ணெய்

அதேபோல மண்ணெண்ணெய்யை கூடுதல் விலைக்கு வாங்கி, விலையைக் குறைத்துக் கொடுக்கின்றோம். அதை இழப்பு என்று சொல்ல முடியுமா? இப்படி எல்லாம் பிரதமர் தெளிவாகக் கேட்டிருக்கிறார்.

அப்படி இருந்தும் துங்குகிறவனை எழுப்பலாம். தூங்குகிறமாதிரி பாசாங்கு செய்கிறவனை எங்காவது எழுப்ப முடியுமா? நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்களை ஏமாற்ற நினைக்காதீர்

ஆகவே மக்களை ஏமாற்றலாம் என்று நீங்கள் நினைத்தால், இந்த உண்மைதான் எல்லா இடங்களுக்கும் போய்ச்சேரும். வழக்கு என்றால் எல்லா இடங்களிலும் வழக்கு இருக்கும். வழக்கை சந்திப்பார்கள். வழக்கைப் பற்றி கவலை இல்லை. கலைஞருக்கு இருக்கிற பெருந்தன்மை இது!

இடையூரப்பா என்று ஒரு முதல்வர்

பக்கத்திலே கருநாடகத்திலே ஒரு முதலமைச்சர் இருக்கிறார். பா.ஜ.க முதலமைச்சர். இடையூரப்பா என்று பெயர். அவருக்கு ஆட்சியில், கட்சியில் ரொம்ப இடையூறப்பா அவருக்கு.

கட்சிக்காரர்களே இடையூறு அவர்களுக்கு. எடியூரப்பா என்று முதலில் தமிழ்ப் பத்திரிகையில் போட்டார்கள். பிறகு இடையூரப்பா என்று போட்டார்கள்.

அவர்மீது புகார்மீது புகார். அதற்கு மேல் கோயில் கோயிலாகச் சுற்றி பில்லி சூனியம் வைத்துவிட்டார்கள் என்று ஒருவரிடம் இடையூரப்பா திடீரென்று போய் கேட்டார்.

நிர்வாணமாக...

நான் இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னங்க வழி என்று கேட்டார். நிர்வாணமாக படுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னார். அவர் அதையும் செய்துவிட்டார்.

நமது நாடு எவ்வளவு வளர்ந்திருக்கிறது பார்த்தீர்களா? அறிவியல் துறையில் பார்த்தால் ஒரு பக்கம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் இன்னொரு பக்கம் நிர்வாணமாகப் படுத்து பதவியைக் காப்பாற்று கின்ற முதலமைச்சர். இவர்கள்இந்த நிலையில் ஊழலைப் பற்றி பேசுகிறார்கள். ஊழலை வண்டி, வண்டியாக வைத்துக்கொண்டு பேசுகிறார்கள்.

பைபிளில் ஒரு கதை

பைபிளில் ஒரு கதை சொல்லுவார்கள். ஒரு பெண்ணைப் பார்த்து விபச்சாரி என்று சொல்லுகின்ற நேரத்திலே கல்லெடுத்து அடிக்க வேண்டும் என்று சொல்லுகின்ற பொழுது நீங்கள் யார் யோக்கியமானவர்களோ அவர்கள் கல் லெடுத்துப் போடுங்கள் என ஏசுநாதர் சொன்னார் என்று சொல்லுவார்கள்.

இது நடந்ததா? இல்லையா? என்பது வேறு. இந்தத் தத்துவம் சரியான தத்துவம். முதலில் நீ யோக்கியமாக இருந்தால் முதல் கல்லை எடுத்துப் போடு. அதுமாதிரி இருக்கக் கூடிய தத்துவத்தை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

சூழ்ச்சிப் போராட்டம்

எனவேதான் நண்பர்களே! தி.மு.க ஆட்சிமீது குறை சொல்ல எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே மத்தியிலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மாநிலத்திலும் பார்ப்பனர் ஆட்சி வரவேண்டும். மிகப்பெரிய ஒரு சூழ்ச்சிப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு இந்த 2 ஜியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப் பார்க்கிறார்கள்.

அதற்கு ஆ.இராசா ஒரு பலிகடா என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. ஆனால் நீங்கள் நினைக்கிற மாதிரி அவர் பலிகடா ஆகிவிட மாட்டார். மீண்டு வருவார். மீண்டும் வருவார்.

தி.மு.க ஆட்சி மீண்டும் வரும்

தி.மு.க ஆட்சியே மீண்டும் வரும். ஆறாவது முறையாக கலைஞரே மீண்டும் முதல்வராக வருவார் என்று கூறி உரையாற்றினார்.

------------------- "விடுதலை” 2-3-2011

0 comments: