Search This Blog

11.9.14

சமஸ்கிருத சனியன்- பெரியார்

சமஸ்கிருத சனியன்
- தேசீயத் துரோகி

தேசீயத் துரோகியாகிய நாம் கூறும் விஷயங்கள் முழுவதும், எழுதும் சங்கதிகள் எல்லாம், மக்களுக்கு பயன்படாத பழய காரியங்களில் ஆசை யுடையவர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதைப் பற்றி, அதாவது எவருடைய வெறுப்பைப் பற்றியும் எதிர்ப்பைப் பற்றியும் நாம் கவலைப் படுவது கிடையாது. ஆகவே இப்பொழுது ஒரு தேசீயத்தைக் கண்டிக்கவே இந்த முகவுரையைக் கூறிக் கொண்டு முன்வந்தோம்.


சென்னை மாகாணத்தில் கல்வியிலாக்காவில் சிக்கனம் செய்வதைப் பற்றி ஆலோசனைக் கூறிய சிக்கனக் கமிட்டியார் கூறியிருக்கும் யோசனை களில் “சென்னைப் பிரசிடென்சிக் கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுத்து விட வேண்டும்” என்பதும் ஒரு யோசனை யாகும்.


உண்மையிலேயே “தேச மக்கள் கல்வியினால் அறிவு பெற வேண்டும்; கல்வியினால் பகுத்தறிவு பெற வேண்டும்” என்று விரும்பு கின்ற வர்கள் சமஸ்கிருதக் கல்வியை எடுத்து விடுவது பற்றிக் கொஞ்சமும் கவலையோ வருத்தமோ அடையமாட்டார்கள். ஏனென்றால் இன்று இந்து மதம் என்று சொல்லும் ஒரு கொடுமையான மதம் இருப்பதற்கும் இந்த இந்து மதத்திலிருந்து பிறந்த ஜாதிக் கொடுமை, சடங்குக் கொள்ளை, கடவுள் முட்டாள் தனம் ஆகியவைகள் கற்றவர்கள் கூட்டத்திலும், கல்லாதவர்கள் கூட்டத்திலும் தலைவிரித்தாடி அவர்கள் உழைப்பையும், அறிவையும், சுதந்தரத்தையும் கொள்ளை கொண்டிருப்பதற்கும் காரணம் சமஸ்கிருதமே யாகும். இன்று வருணாச்சிரமதருமக்காரர்கள் சனாதன தருமம் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லுவதற்கும் சுயராஜ்யத்தைவிட சனாதன தருமமும், வருணாச்சிரம தருமமும் காப்பாற்றப்படுவதே முக்கியமானதென்று சொல்லுவதற்கும் சமஸ்கிருதப் பாஷைப் படிப்பும் அதில் உள்ள நூல்களுமே காரணமாகும். தீண்டத்தகாதவர்களைத் தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக் குள் செல்லக்கூடாது; குளத்தில் குளிக்கக் கூடாது; பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிக்கக்கூடாது என்று சொல்லுவதற்கும் காரணம் சமஸ்கிருத நூல்களே யாகும். சாரதா சட்டம் போன்ற சீர்திருத்த சட்டங்களைச் செய்யக்கூடாது என்று சொல்லுவதற்கும், பொட்டுக் கட்டுவதைத் தடுக்கும் சட்டம், பிரஜா உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியளிக்கும் சட்டம், பெண்களின் சொத்துரிமைச் சட்டம், விவாக விடுதலைச் சட்டம் முதலியவைகளை மத விரோதமானவைகள் என்று கூறித் தடுப்பதற்கும் திரு. சிவராஜ், பி.ஏ., பி.எல்., எம்.எல்.சி. அவர்களை எங்கும் எதையும் தின்னும் பார்ப்பனர், பார்ப்பன ரல்லாதார் கூடிய சென்னை காஸ்மாபாலிட்டன் கிளப்பில் அங்கத்தினராகச் சேர்த்துக் கொள்ள மறுத்ததற்கும் காரணமாயிருப்பவை சமஸ்கிருத நூல்களேயாகும். சீர்திருத்தத்திற்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து குறைத்துக் கொண்டு தொண்டை வீங்குகின்ற வருணாச்சிரமக் கூட்டத்தார்கள் எல் லோரும் தங்கள் கொள்கைகளுக்குச் சமஸ்கிருத, வேத, புராண, இதிகாச, ஸ்மிருதிகளையே பிரமாணங்களாகக் காட்டுகின்றனர். அவை என்ன சொல்லு கின்றனவென்று கவனிக்கின்றார்களே ஒழிய தங்கள் அறிவு என்ன சொல்லு கின்றது? உலகப் போக்கு என்ன சொல்லுகின்றது? என்று கொஞ்சங்கூடக் கவனிக்கின்றார்களில்லை. இவ்வாறு கவனிக்கக் கூடிய அறிவு அவர்களிடம் இல்லாதபடி அவர்கள் மூளையை அந்த சமஸ்கிருதப் பழங்குப்பைகளாகிய சாஸ்திரங்கள் என்பன உறிஞ்சி விட்டன. ஆகையால் இனி வருங்கால இளைஞர்களின் நல்ல தூய்மையான மூளைகளிலாவது கோளாறு ஏற்படாம லிருக்க வேண்டுமானால் - அவர்களிடம் மூட நம்பிக்கைகளும், சுயநலமும் உண்டாகாமல் பகுத்தறிவும், சமதர்ம நோக்கமும் உண்டாக வேண்டுமானால் சமஸ்கிருதக் கல்வியை அடியோடு ஒழிக்க வேண்டியதே முறையாகும்.


ஆனால் நமது நாட்டில் உள்ள சமஸ்கிருதப் புராணக் குப்பைகளாலும் அவைகளைப் பார்த்துச்செய்த தமிழ்ப்புராணக் கூளங்களாலும் குடி கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகள் போதாதென தேசீய ஆடைகளைப் புனைந்து “ஹிந்தி” என்னும் பாஷையையும் கொண்டு வந்து நுழைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் நம் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஹிந்தியைப் பரப்புவதற்காகப் பார்ப்பனர் பிரயாசைப் படுவதற்குக் காரணம் அதன் மூலம் மீண்டும் வருணாச்சிரம தருமத்தையும், புராண நம்பிக்கை, மத நம்பிக்கை, பிராமண பக்தி, சடங்கு பக்தி முதலியவைகளை விருத்தி செய்து தங்கள் பழய கௌரவத்தையும், ஏமாற்று வயிற்றுப் பிழைப்பையும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்பதற்காகவே என்பது சுயமரியாதைகாரர்களுக்குத் தெரியாத விஷயமல்ல. ஆகையால் இத்தகைய பார்ப்பனர்கள் இந்த ஹிந்தி பாஷை முதலானவை களுக்கெல்லாம் அடிப்படையாக இருக்கும் சமஸ்கிருதத்தைக் கைவிடச் சம்மதிப்பார்களா? ஒருக்காலும் சம்மதிக்கமாட்டார்கள்.


ஆகையால்தான் பார்ப்பனர்கள் ஊருக்கு ஊர் கூட்டங்கூடி சென்னை அரசாங்கச் சிக்கனக் கமிட்டியார் பிரசிடென்சி கல்லூரியில் உள்ள சமஸ்கிருத ஆனர்ஸ் வகுப்பை எடுக்கும்படி சிபார்சு செய்ததைக் கண்டிக்கிறார்கள். பொருளாதார நிலையைப் பற்றிய கவலையும் அவர்களுக்கில்லை. எந்தப் பொருளாதாரம் எக்கேடு கெட்டாலும் தங்கள் சுயநலத்திற்குத் துணை செய்கின்ற மதமும் அதற்குச் சாதகமா யிருப்பவைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதே அவர்களின் கொள்கையாக இருந்து வருகின்றது. காப்பிக்கிளப்புப் பார்ப்பான், உத்தியோகப் பார்ப்பான், அரசியல் பார்ப்பான், சட்ட மறுப்புச் செய்து ஜெயிலுக்குப் போகும் பார்ப்பான் உள்பட எல்லோரும் இக்கொள்கையைக் கைவிடாமலே வைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆகையால் இச்சமயத்தில் நாமும் கிளர்ச்சி செய்ய வேண்டும். பார்ப்பனர்களின் வெறுங்கூச்சல்களுக்குப் பயந்து கொண்டு அரசாங்கத்தார் சிக்கனக்கமிட்டியின் சிபார்சைக் கைவிட்டுவிடக் கூடாதென எச்சரிக்கை செய்ய வேண்டும். சில பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கங்களிலும் சுயமரியாதைச் சங்கங்களிலும், சிக்கனக் கமிட்டியின் யோசனையைப் பாராட்டியும் இன்னும் சமஸ்கிருத கல்விக்காகக் கொடுக்கும் உபகாரத் தொகையை நிறுத்தும்படியும் தீர்மானங்கள் செய்து அரசாங்கத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள். இவ்வாறே நாடெங்கும் பல தீர்மானங்கள் செய்து அரசாங்கத்தாரை எச்சரிக்கை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் சமஸ் கிருதச் சனியன் ஒழியும்.


              ------------------------------ தேசீயத் துரோகி என்ற பெயரில் பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை  குடி அரசு - கட்டுரை - 17.01.1932

10 comments:

தமிழ் ஓவியா said...

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளதை வரவேற்கிறோம்!


ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

ஆனால் வெறும் தேர்தல் கால கருத்தாக அது இருக்கக் கூடாது!

தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அவசியம் தேவை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கருத்தை வரவேற்கிறோம். அதே நேரத்தில் இது வெறும் தேர்தல் வாக்குறுதியாக இருந்து விடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கடந்த 7.9.2014 அன்று டெல்லியில், தாழ்த்தப்பட்டோர் நிலை, உரிமைபற்றிய பா.ஜ.க.வின் விஜய் சங்கர் சாஸ்திரி என்பவர் எழுதியுள்ள மூன்று நூல்கள் இவற்றை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் அவர்கள் வெளி யிட்டுள்ளார். அந்நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய சமூகநீதி இடஒதுக்கீடு பற்றிய உரை - ஒரு புது திருப்பமாக உள்ளது!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் தேவை!

ஒடுக்கப்பட்ட மக்கள் காலங் காலமாக அழுத்தி வைக்கப்பட்டுள்ளார்கள்; அவர்களுக்கு அவசியம் கல்வி, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்.

மற்ற முன்னேறிய சமூகத்தவர்களுக்கு சரிசமான நிலையை அவர்கள் எட்டும் வரையில் இந்த ஒடுக்கப்பட் டோருக்கான இடஒதுக்கீடு தாழ்த்தப்பட்டோர், மலை வாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு தொடர்ந்து தரப்படல் வேண்டும். அதை அவர்கள் பெற்றே ஆக வேண்டும்.

இந்த இடஒதுக்கீடு கொள்கையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு முழுமையாக ஆதரிக்கிறது

“Sangh” favoured the policy of reservation for the Scheduled Castes, the Scheduled Tribes and Other Backward Classes.
Dalits have been oppressed through ages and now society must be prepared to give reservation [in education and jobs] to them. Those who should get must get reservation till they are brought forward for harmonious blending,” Mr. Bhagwat said.
- The Hindu - 8.9.2014

இதன் தமிழாக்கக் கருத்துக்கள் மேலே நம்மால் தரப்பட்டுள்ளது.

“...Spoken categorically for the first time, Mr. Bhagwat’s observations seem to be aimed at wooing the Bahujan Samaj Party’s traditional vote bank — Dalits — in Uttar Pradesh....”


உ..பி. இடைத் தேர்தலுக்காகவா?

உத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் (மாயாவதி கட்சி) வழமையான வாக்கு வங்கியைக் குறி வைத்தே ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத்தின் இந்த புதிய அறிவிப்பு அமைத்துள்ளது. அங்கே 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறவிருக்கின்றது என்றும் இதே செய்தியில் ஒரு குறிப்பும்கூட காட்டப்பட்டுள்ளது.

தமிழ் ஓவியா said...

அரசியல் தேர்தல்களில் வெற்றியைப் பறிக்க எண்ணும் எந்த அரசியல் கட்சியும் வாக்காளர்களிடம் எதைச் சொன்னால் அதிக வாக்குகள் கிடைக்குமோ எந்தக் கருத்துக்கு அவர்களிடம் அதிகம் செல்வாக்கு இருக்குமோ அதை தங்கள் வெற்றிக்குரிய ஆயுதமாக பயன்படுத்த எண்ணுவது சகஜம். இப்போது ஆர்.எஸ்.எஸ். நேரிடை அரசியலேயே கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலிருந்து களத்தில் நிற்கின்றது என்பதும் உண்மை.

இந்த நிலையில் திராவிடர் கழகம் இதனை எப்படி வரவேற்கத் தயாராக உள்ளது? (ஆர்.எஸ்.எஸ். தலைவரின் புதிய அறிவிப்பை) என்ற நியாயமான சந்தேகம் பலருக்கு ஏற்படலாம்.

முதல் சட்டத் திருத்தம் எப்படி வந்தது?

தந்தை பெரியார் அவர்கள் 1925இல் காங்கிரஸை விட்டு வெளியேறியது - இதே சமூக நீதிப் பிரச்சினை இட ஒதுக்கீட்டுக் கொள்கை காரணமாகத்தான்.

தமிழ் ஓவியா said...

1950-இல் இந்திய அரசியல் சட்டத்தின் சில பிரிவுகளைக் காட்டி, 1928 முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து, கல்வி - உத்தியோகங்களில் ஒடுக்கப்பட்டோருக்கு கிடைத்து வந்த வாய்ப்புகளை சட்டரீதியாக செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அதனை எதிர்த்துக் குரல் கொடுத்து பெருங் கிளர்ச்சி நடத்தி, பண்டித ஜவகர்லால் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் 1951இல் இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, இடஒதுக்கீடு செல்லும் என்றுஆக்கியதற்கு முக்கிய காரணம் தந்தை பெரியார் அல்லவா?

வி.பி.சிங்கின் சாதனை

மத்திய அரசில் இடஒதுக்கீடு, பெரும் பகுதியான பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசில் இல்லை என்பதை எதிர்த்து, தந்தை பெரியாருக்குப்பின் இந்த இயக்கம் தொடர்ந்து போராடியதால் மண்டல் கமிஷன் அறிக்கை தந்து அதனைக் கிடப்பிலிருந்து வெளியே கொண்டு வந்து 1990இல் சமூக நீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமரான நிலையில் செயல்படுத்திடும் நிலையை உருவாக்கிட பெரிதும் காரணமாகி, இந்தியா முழுவதும் இதனை பரப்பிட முன்னெடுத்துச் சென்ற இயக்கம் பெரியார் இயக்கமான திராவிடர் கழகமே!

தமிழ் ஓவியா said...

மூன்று பார்ப்பனர்கள்

அந்த மண்டல் கமிஷன் பரிந்துரைக்காக ஏற்கெனவே தமிழ்நாட்டில் பெரியாருக்குப்பிறகு நமது இயக்கமான திராவிடர் கழகம் தொடர்ந்து போராடியதினால் கிடைத்த இடஒதுக்கீடு 69 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்பதை எப்படியாவது குறைத்துவிட சமூக நீதிக்கு எதிரான சக்திகள் தீவிரமாக முயற்சி செய்ததை எதிர்த்து, 31சி என்ற பிரிவைக் காட்டி, ஒரு சட்டத்தையே தனியாக 69 சதவிகித பாதுகாப்பிற்கு - தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்ற வைத்து, அதனை அரசியல் சட்ட திருத்தமாக (76வது அரசியல் சட்ட திருத்தம் - 1994) - முதல் அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரசிம்ம ராவ், குடிஅரசுத் தலைவர் சங்கர்தயாள் சர்மா ஆகிய மூன்று பார்ப்பனர்களை வைத்துக் கொண்டே கொண்டு வந்து சாதித்து வரலாறு படைத்தது திராவிடர் கழகம்.

வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்

இந்தக் கால கட்டத்தில் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமுலாக்கியதற்காகவே, ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி என்றும் இயங்கும் பா.ஜ.க. வெளியிலிருந்து வி.பி.சிங் ஆட்சிக்குத் தந்த ஆதரவை விலக்கிக் கொண்டு அவரது ஆட்சி 10 மாதங்களில் கவிழக் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மையே!

சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பெருமையாகவே கூறினார்: சமூக நீதிக்காக எத்தனை முறையும் பிரதமர் பதவிகளை இழக்கத் தயார்! மண்டல் காற்றை எந்தக் கமண்டல்களாலும் இனி தடுத்து விட முடியாது என்று முழங்கினார்.

சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் அவர்களை சிணீமீவீ ஜாதி வெறியர் என்றெல்லாம்கூட வர்ணித்தனர்.
பெரியார் மேளாவை உ.பி.யில் சமூக நீதி நாயகர் கான்ஷிராம், முதல்வர் மாயாவதி உ.பி.யில் (நம்மை அழைத்து) நடத்தினார்கள் என்பதற்காக சில மாதங்களில் பா.ஜ.க. மாயாவதி தலைமையிலான ஆட்சியையும் கவிழ்த்த வரலாறும் மறுக்க முடியாதது அல்லவா?

தமிழ் ஓவியா said...

தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும்

இன்று தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் தொண்டால் சமூகநீதிக் கொள்கை ஆழமாக வேர் ஊன்றி - ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி விட்டதனால், தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால்கூட இதைச் சொல்லித்தான் ஆக வேண் டும் என்றால், அது சமூக நீதிக்கும் அதனை நிலைக்கப் போராடிய தந்தை பெரியார் இயக்கத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி அல்லவா?
மண்டல் காற்று இன்று வடக்கே எப்படி வேகமாக அடிக்கிறது பார்த்தீர்களா?

ஒடுக்கப்பட்டோர் அழுத்தி வைக்கப்பட்டிருப்பதும் அவர்கள் மற்றவர்களோடு சமமாக வந்துநிற்கும் வரை (எதுவரை இடஒதுக்கீடு என்று கேட்போருக்கு இதுவே சரியான பதில்) தேவை என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைவரால் இப்போது பேசப்படும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது.

எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று பிராமணர் சங்கத்தவர் கேட்கும் நிலை வந்ததே, அது பெரியாருக்கு கிடைத்த மற்றொரு வெற்றி அல்லவா? அதுபோலவே இதுவும்!

1938இல் ஹிந்தியைக் கட்டாயமாக தமிழ்நாட்டில் திணித்து எதிர்ப்புக்கு ஆளான சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்களே.
1967இல் ஹிந்தி எப்போதும் வேண்டாம்; இங்கிலீஷ் எப்போதும் தேவை என்று கூறியது பெரியாரின் திராவிடர் இயக்க வெற்றி அல்லவா?
வரவேற்கிறோம் ஆனால்...

அதுபோலத்தான் இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் இந்தப் புதிய திருப்பமான அறிவிப்பும் - பிரகடனமும் ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது என்ப தற்காக நாம் கண்ணை மூடிக் கொண்டு எதிர்ப்பவர்கள் அல்ல. எதற்காகக் கூறுகிறார்கள் என்பதைவிட இதைக் கூறியாக வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகி விட்டதால் அவர்கள் கூறுகிறார்கள் என்றாலும் நாம் வரவேற்கிறோம். அதே நேரத்தில் இதில் என்றும் உறுதியாக இருக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு! வெறும் தேர்தல் பேச்சாக மட்டும் இருந்து விடக் கூடாது.

இது தேர்தலோடு போகும் பிரச்சினை அல்ல; அடுத்த தலைமுறைகளின் மான, உரிமை வாழ்வை வளப்படுத்தும் பிரச்சினை.
தனியார்த்துறையிலும் இடஒதுக்கீடு

இத்திருத்தம் தனியார் துறை இடஒதுக்கீடு வரை தொடரட்டும்! 136ஆவது ஆண்டு பெரியார் பிறந்த நாள் விழாவில் அவரது தொலைநோக்கிற்கு கிடைத்த வெற்றி என்றே கூற வேண்டும்.

சென்னை

9.9.2014 கீ.வீரமணி திராவிடர் கழகம் தலைவர்

தமிழ் ஓவியா said...


பார்ப்பனர்கள்


பார்ப்பனர்கள் இந்நாடு எவ்விதச் சமுதாய மாறுதலும் அடையக் கூடாது என்ற தன்மையினையே தங்கள் மூலாதாரக் கொள்கையாகக் கொண்டுள்ளனர்.

(விடுதலை, 30.12.1972)

Read more: http://www.viduthalai.in/page1/87375.html#ixzz3Cy7t8073

தமிழ் ஓவியா said...


சுப்ரபாதம் நிறுத்தப்பட்டது


தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் சா.தாமோதரன் அவர்கள் செங்குன்றம் - தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் எண்114 குளுமை பேருந்தில் (கிழிமி 2681) 4.9.2014 விடியற்காலை 5.10மணி அளவில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து ஏறி பயணமானார்,

அப்பொழுது அந்த பேருந்தினுள் சுப்ரபாதம் என்கிற இல்லாத கடவுளை எழுப்புகிற வடமொழிப் பாடல் (நின்று கொண்டு இருக்கிற ஏழு மலையானை எழுப்புவதாக பாவனை) ஒலித்துக்கொண்டிருந்த்து, 'சுப்ரபாதம்' போடுகிறீர்களே! முஸ்லீம் பாட்டு, கிருத்தவ பாட்டு என்று போடுவீர்களா? எல்லோரும் பயணம் செய்கிற பேருந்தில் இப்படி செய்வது சரியா? என்று நடத்துனரை பார்த்து கேட்டார்.

நடத்துனர் நிறுத்தவா? போடவா? என்று மிரண்டு போய் கூறினார். உங்கள் விருப்பம் என்று சொன்னவுடன், பாடலை நிறுத்திவிட்டார். தகராறு செய்யாமல் பாடலை நிறுத்திய நடத்துனரை பாராட்டித் தான் தீரவேண்டும்! அனைத்து பேருந்து களிலும் மத பாடல்களை நீக்கி பொதுவான பாடல்களை ஒலிபரப்ப பேருந்து கழகம் ஏற்பாடு செய்யவேண்டும்.

- செ.ர.பார்த்தசாரதி, தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்

Read more: http://www.viduthalai.in/page1/87381.html#ixzz3Cy8EBdqv

தமிழ் ஓவியா said...


பி.ஜே.பி.யின் அரசியல் தார்மீகம்?


பி.ஜே.பி. என்றால் தார்மீகப் பண்புகளுக்குப் பெயர் போனது என்று திட்டமிட்ட வகையில் பிரச்சாரம் செய்து வைத்துள்ளனர் - உண்மையில் அது ஒழுக்கக்கேட்டின் புகலிடம் (இந்து மதம்போல்) என்பதுதான் உண்மை.

பக்திதான் முக்கியமே தவிர - ஒழுக்கமல்ல என்பது தானே இந்து மதம்? எந்த ஒழுக்கக்கேட்டையும் செய்து விட்டு, அதற்கென்றுள்ள பிராயச்சித்தங்களைச் செய்து விட்டால் தீர்ந்தது கதை என்பதுதான் இந்து மதத்தின் கோட்பாடு.

அந்த இந்துத்துவாவை தோளில் தூக்கிக்கொண்டு ஆளும் பி.ஜே.பி. எப்படி நடந்துகொள்ளும்?
டில்லி சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆதரவு அளித்த அடிப்படையில், ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது. அனுபவம் இல்லாத காரணமாக பதவி விலகியது ஆம் ஆத்மி.

இது நடந்தது கடந்த பிப்ர வரியில்; ஏழு மாதங்கள் ஓடிவிட்டன; சட்டசபையும் கலைக்கப்படவில்லை; மறுதேர்தலுக்கான அறிவிப்பும் வராத நிலையில், தண்டத்துக்கு மக்கள் வரிப் பணத்தை மாதந்தோறும் சம்பளமாக வாங்கிக் கொண்டு இருக் கிறார்கள் சட்டப்பேரவை உறுப்பினர்கள்.

சட்டசபையைக் கலைத்துவிட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. இதற்கிடையில் பி.ஜேபி.,க்கு ஒரு நப்பாசை!
தனக்கு அறுதிப்பெரும்பான்மை இல்லாத நிலையில், ஆம் ஆத்மி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் களை விலைக்கு வாங்கலாம் என்று திட்டமிட்டுக் குதிரைப் பேரத்தில் இறங்கியது.

ஆம் ஆத்மி கட்சியின் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் ரூபாய் நான்கு கோடி அளிப்பதாகப் பேரம் பேசப்பட்டுள்ளதாம் - இதனைக் கண்ணி வைத்துப் பிடித்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி.யின் இத்தகைய நடவடிக்கைகள் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கினைத் தொடுத்துவிட்டது ஆம் ஆத்மி. பி.ஜே.பி. குதிரை பேரத்தில் ஈடுபட்டதற் கான வீடியோ ஆதாரங்களும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விட்டன.

இதற்கிடையே எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பே கொடுக்கவில்லை என்று அந்தர்பல்டி அடித்தது பி.ஜே.பி. ஆளுநர் எழுதிய கடிதம் அம் பலத்துக்கு வந்துவிட்ட நிலையில், பி.ஜே.பி.யின் தார்மீகம் நார் நாராகக் கிழிந்து எங்கு பார்த்தாலும் தொங்கிக்கொண்டு இருக்கிறது.

உச்சநீதிமன்ற நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான அமர்வு பி.ஜே.பி. அரசுக்கு நல்ல சூடு கொடுத் திருக்கிறது.
நானும் ஒரு குடிமகன்தான். சட்டமன்ற உறுப்பினர் கள் சேவை செய்யவேண்டும் என்றுதான் வாக்களித்த மக்கள் விரும்புகிறார்கள்.

டில்லி சட்டப்பேரவையை இன்னும் எவ்வளவு காலத்திற்குத்தான் முடக்கி வைக்கப் போகிறீர்கள்? உறுப்பினர்களுக்கு வெட்டியாக மாதா மாதம் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? விரைவாக முடிவெடுங்கள் என்று நீதியரசர் எச்.எல்.தத்து கடுமையாக விளாசி இருக்கிறார்.

இப்பொழுது எல்லாம் நீதிமன்றங்கள் சொல்லுகின்ற, தீர்ப்புகளை மதிக்கும் போக்குக் குறைந்து வருகிறது - இது எதில் போய் முடியும் என்று தெரியவில்லை.

குதிரைப் பேரம் என்பது பி.ஜே.பி.க்கு ஒன்றும் புதி தல்ல; ஏற்கெனவே பலமுறை பழக்கப்பட்ட ஒன்றுதான்.
உத்தரப்பிரதேசத்தில் கல்யாண்சிங் முதல்வராக வருவதற்கு எத்தகைய தில்லுமுல்லுகள் செய்யப்பட்டன! வாஜ்பேயி தலைமையில் 13 நாள்கள் ஆட்சியில் இருந்த போது, உத்தரப்பிரதேச வழிமுறையைப் பின்பற்றத் தயார் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயி கூற வில்லையா?

இந்தக் கூட்டத்தின் பிரச்சாரப் பீரங்கியாக இருக்கும் சோ ராமசாமியால்கூட அதனைப் பொறுக்க முடியாமல், தலையில் அடித்துக்கொண்டு கண்டித்து எழுத வில்லையா?

பி.ஜே.பி. ஒன்றும் கலப்படமற்ற புனித நெய்யில் பொரிக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பது தெரிந்த ஒன்றுதான்.
அடுத்தவன் மனைவியை தன் மனைவி என்று கூறி வெளிநாட்டுக்குப் பயணம் செய்த பேர்வழிகள் எல்லாம் பி.ஜே.பி.யில் பஞ்சம் இல்லை.

முதலாளிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு நாடாளுமன்றத்தில் முதலாளி களுக்காக கேள்வி கேட்டவர்களின் பட்டியலில் பி.ஜே.பி.க்குத்தான் முதலிடம்!
டில்லியில் பி.ஜே.பி. மேற்கொண்ட குதிரைப் பேரத்துக்குச் சாட்சியங்களாக வீடியோ பதிவுகள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தீர்ப்புச் சொல்லும்பொழுதுதான் பி.ஜே.பி.யின் முகமூடி கிழியும், பொறுத்திருந்து பார்ப்போம்!

Read more: http://www.viduthalai.in/e-paper/87453.html#ixzz3Cy9a8iLf

தமிழ் ஓவியா said...


ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண்ணோட்டமே!


தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள், அறிக்கைகள் எவ்வளவு தொலைநோக்கு சிந்தனையாக, தந்தை பெரியார் தந்த புத்தியின் வெளிப் பாடாக இருக்கின்றன என்பதற்கு சில எடுத்துக்காட்டுகள்

1) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கைகளிலும், திருமண விழாக்கள், ஊடகங்களிலும் அடிக்கடி குறிப்பிடக்கூடிய - மணமக்கள் ஜாதகப்பலன்களை பார்ப் பதற்குப் பதிலாக தங்களின் உடல்நல மருத்துவப் பரிசோதனைச் சான்றிதழ்களை ஒப்பிட்டு காண முடிந்தால் மண மக்களின் வாழ்வு சிறப்பாக அமையும் - வழக்கு விவா கரத்து என்று பிரச்சினைக்கு இடமில்லாமல் எதிர்காலம் மகிழ்ச்சிகரமாய் இருக்கும் எனறு தெரிவித்த கருத்துகளை 3.9.2014 அன்று உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்கள் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்கும் போது மேற்கூறிய கருத்துகளை ஆலோ சனைகளாக வழங்கியுள்ளார்.

இதன் எதி ரொலியாக கலைஞர், புதிய தலைமுறை, இமயம் போன்ற தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தப்பட்டு அறிஞர் பெருமக் கள், மருத்துவர்கள் ஆராய்ந்து அறிவுப்பூர் வமான விவாதங்களை நடத்தி உள்ளனர். ஆனால், இந்துத்துவா கூட்டங்கள் மட்டுமே எதிர்த்து பழைய பஞ்சாங்கங்களையே பாடி வருகின்றன. இதற்கு அடிப்படையே ஆசிரி யரின் அறிக்கைகள், பேச்சுகள் என்பது நிதர்சனமான உண்மை.

2) நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் னரே தமிழர் தலைவர் ஆசிரியர் எல்லா பொதுக்கூட்டங்களிலும், விரிவான அறிக் கைகளிலும் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மதச்சார்பற்ற தன்மைக்கு கேடு வரும் என்றும், ஆர்.எஸ்.எஸ்.சின் அரசியல் வடிவம்தான் பாரதீய ஜனதா - அதன் சித்தாந்தத்தை நிலைநாட்டுவதற்காக பல தந்திரங்களை கையாளும் என்று தொலைநோக்கோடு முழங்கினார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கிற ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., போன்ற கட்சிகள் மோடி ஆட்சி வந்தால் நாட்டில் பெரிய மாற்றம் வரும் என்று கிஞ்சிற்றும் கொள்கைப் பார்வை இல்லாது வெறும் அரசியல் பார்வையோடு கூட்டணி அமைத்துக் கொண்டவர்கள் இன்று இருக்கும் இடம் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பதுதான் உண்மை. பாரதீய ஜனதாவின் 100 நாள் ஆட்சியல் எவ்வித வளர்ச்சிக்கான புதுமைத் திட்டங்களோ, புரட்சித் திட்டங்களோ எதுவுமில்லை - மாறாக இந்துத்வாவின் கொள்கைகளை இந்தியா முழுவதும் பரப்ப நரித்தனமான வேலைகளைச் செய்து வருகின்றன.

அதற்கு எடுத்துக்காட்டு சமஸ்கிருத வாரம் - செத்த மொழி சமஸ்கிருதத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு - இந்தித் திணிப்பு - இந்தியாவில் உள்ள அனைவரும் இந்துக்களே என்ற பேச்சு இப்படி - அடுக்கிக் கொண்டே போகலாம்.

இப்படியெல்லாம் நடக்கும் என்று அன்றே - கொள்கைப் பார்வையுடனும், சமுதாயக் கண்ணோட்டத்துடன் ஆசிரியர் அவர்கள் கூறியது எவ்வளவு சரியாக இருந்தது என்பதை எண்ணிப்பார்க்கும் போது அய்யாவின் அடிச்சுவட்டில் ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வை எந்நாளும் இனநலக் கண் ணோட்டமே. திராவிட தமிழ்மக்களே! ஆரிய சூழ்ச்சியை புரிந்துகொள்ளுங்கள்; பதவிக்காக அடிமையாகாதீர்! என்றும் பெரியார் கொள்கையே வெல்லும்.
- தி.க.பாலு
(மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திண்டுக்கல்)

Read more: http://www.viduthalai.in/e-paper/87457.html#ixzz3CyA3TL4I

தமிழ் ஓவியா said...


பேராசிரியர் அருணனின் காலந்தோறும் பிராமணீயம் நூலுக்கு விருதும் - ஒரு லட்சம் ரூபாய் பணமுடிப்பும்


சென்னை, செப்.10_ காலந்தோறும் பிராம ணீயம் என்ற பேராசிரியர் அருணன் அவர்கள் ஆய்வு நூலுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும், பணமுடிப்பும் வழங்கப்பட உள்ளன.

கு.சின்னப்பபாரதி இலக் கிய விருது அறக்கட்டளை யின் சார்பில், அதன் நிர் வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- ந் வியாழக் கிழமை காந்தி ஜெயந்தி தினத்தன்று நாமக்கல் கவின் கிஷோர் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு வழங்கப்படும் இனங்களான வாழ்நாள் சாதனையாளர் விருது, நாவல், சிறுகதை, கட்டுரை. மொழிபெயர்ப்பு மற்றும் சமூக சேவை ஆகியவற் றிற்கு பரிசு பெறுவோர் விபரங்களை கூட்ட முடி வின்படி அறக்கட்டளை யின் தலைவர் கு.சின்னப்ப பாரதி வெளியிட்டார்.

அறக்கட்டளையின் விருதுக்கு உலக அளவில் வரப்பெற்ற ஒவ்வொரு இனத்திற்கும், கு.சின்னப் பபாரதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, இறுதியில் சிறந்த படைப்புக்கள் தேர்வு செய்யப்பட்டு ரூபாய் ஒரு இலட்சத்து தொண்ணூ றாயிரத் துக்கான பண முடிப்பு வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், வாழ்நாள் சாதனையாளர் என்ற தலைப்பிற்கு, முதன்மைப் பரிசாக,காலம் தோறும் பிராமணியம் மற்றும் கலை இலக்கிய ஆய்வுக்காக தமிழ்நாட் டைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர் களுக்கு விருதும், ரூபாய் ஒரு இலட் சத்திற்கான பணமுடிப்பும் வழங்கப்படுகிறது.

நாவல் வரிசையில், குடைநிழல் என்ற நாவ லுக்கு, இலங்கையைச் சார்ந்த தெளிவத்தை ஜோசப் என்ற எழுத்தா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது


நான்கு சிறுகதைத் தொ குப்பின் ஆசிரியர்களான, தவிக்கும் இடை வெளிகள் _ எழுத்தாளர் உஷா தீபன், தமிழ்நாடு இப்படி யுமா? _ எழுத்தாளர் வி.ரி இளங்கோவன், பாரீஸ் ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் - _ எழுத் தாளர் ஜெயந்தி சங்கர், சிங்கப்பூர் வெந்து தணிந்தது காலம் - எழுத்தாளர் மு.சிவ லிங்கம், இலங்கை ஆகிய நான்கு சிறு கதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்களுக்கும் விருதும், தலா ரூபாய் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது.

நூல் தேட்டம் என்ற கட்டுரைத் தொகுப்பிற்கு லண்டனைச் சார்ந்த என். செல்வராஜா நூலகவியலா ளருக்கு விருதும், ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப் படுகிறது.

மொழி பெயர்ப்புக்காக சல்மான் ருஷ்டியின் நள்ளிரவின் குழந்தைகள் என்ற நூலின் மொழி பெயர்ப்பாளர் கா.பூரண சந்திரன் மற்றும் கு.சின் னப்ப பாரதியின் பாலைநில ரோஜா என்ற நூலின், சிங்கள மொழிபெயர்ப் பாளர் உபாலி நீலாரத்தி னாவிற்கு விருதும் தலா ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது,

சமூக சேவைக்காக இலங்கை மலையக மக்களின் கலை இலக்கிய சமூகப் பணிக் கான வாழ்நாள் சாதனை யாளர் விருதாக ஆண்டனி ஜீவாவிற்கு விருதும் ரூபாய் பத்தாயிரம் பரிசும் வழங் கப்படுகிறது.

மற்றும் பெங்களுரு தமிழ் சங்கம் ஆற்றிவரும் தமிழ்பணிக்காக விருதும் ரூபாய் அய்யாயிரம் பரிசும் வழங்கப்படுகிறது என அறக் கட்டளையின் தலைவர் கு.சின்னப்ப பாரதி அறி வித்தார்.

இக்கூட்டத்திற்கு,செயலாளர் கே.பழனிசாமி, உறுப் பினர்கள் சி.ரங்கசாமி மற்றும் கு.பாரதிமோகன் ஆகியோர் கலந்து கொண் டனர்.

Read more: http://www.viduthalai.in/e-paper/87465.html#ixzz3CyAKpXpu