Search This Blog

17.9.14

எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் கிடையாது - பெரியார்

(தந்தைபெரியார் 136 ஆவது பிறந்தநாள் சிந்தனையாக இக்கட்டுரை  பதிவு செய்யப்படுகிறது. அனைவருக்கும் பெரியார் பிறந்தநாள் வாழ்த்துக்கள். 

பெரியாரை(சு)வாசிப்போம்!.மானத்துடன் வாழ்வோம்!!. 

வாழ்க பெரியார்!வளர்க பகுத்தறிவு!!----தமிழ் ஓவியா)


என்றென்றும் சூத்திரனாக இருப்பதைவிட மானக்கேடு வேறு என்ன?

எங்களைப் பார்ப்பனத் துவேஷிகள் (வெறுப்பாளர்கள்) என்று சொல்கிறார்கள், "எவனோ பண்ணினான்; பார்ப்பானை ஏன் திட்ட வேண்டும்?" என்று சிலர் கேட்கிறார்கள். எவனோ பண்ணினால் இவன் ஏன் பூணூல் போட்டுக் கொள்கிறான்? ஏன் தன்னைப் பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறான்? ஏன் உச்சிக்குடுமி வைத்துக் கொள்கிறான்? ஏன் அக்கிரகாரத்தில் தனியாக வாழ்கிறான்? அவனுடைய பெண்டாட்டி மட்டும் ஏன் தனியான வகையில் புடைவை கட்டிக் கொள்ள வேண்டும்? இந்த மாதிரியெல்லாம் ஏன் அவன் தன்னைத் தனியாகப் பிரித்து வேறுபடுத்திக் காட்டிக் கொள்ள வேண்டும்? 'யாரோ பண்ணியதற்குப் பார்ப்பானை ஏன் குறை சொல்ல வேண்டும்?' என்று சட்டசபையில் சிலர் பேசுகிறார்கள். எவனோ பண்ணியிருந்தால் இந்தப் பார்ப்பான் ஏன் அவனைப் பின்பற்ற வேண்டும்? அவன் சொன்னபடி ஏன் நடக்க வேண்டும்? இவன் தானே நம்மைச் சூத்திரன் என்று சொல்கிறான்?

எவனோ உழைக்க இவன் அள்ளிக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான் சமுதாய அமைப்பு, சாஸ்திரம், புராணம், சட்டம் என்றால், நாம் எப்படிச் சும்மா இருக்க முடியும்? இந்த நிலைமையை மாற்றத்தானே நாம் பாடுபடுகிறோம். மற்றப்படி எனக்கு எந்தத் தனிப்பட்ட பார்ப்பனர் மீதும் விரோதம் (பகைமை) கிடையாது.


சாதிக்கு ஆதாரமாக என்னென்ன இருக்கின்றனவோ அவையெல்லாம் ஒழிந்தால்தான் சாதி ஒழியும். அவற்றிலெல்லாம் கைவைக்கக்கூடாது என்றால் எப்படி ஒழியும்? கெட்ட துஷ்ட ஜந்துக்கள் ஒரு இடத்தில் இருந்தால் அவைகளை ஒவ்வொன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தால் ஆகுமா? துஷ்ட ஜந்துக்கள் இருக்க எவை காரணமாக இருக்கின்றனவோ அந்தக் கல், மண், முள், காடு எல்லாவற்றையும் நெருப்பு வைத்து ஒழித்து சமமாக்கினால்தானே அங்கிருக்கும் தேள், பாம்பு, கரடி, புலி எல்லாம் ஒழியும்? அந்த மாதிரிதானே சாதிக்கு ஆதாரமாக யார் யார் இருக்கிறார்களோ, என்னென்ன இருக்கின்றனவோ அவைகள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.

'மதத்தில் பிரவேசிக்கமாட்டோம்; சாதி முறையைப் பழக்க வழக்கங்களைக் காப்பாற்றுவோம்; இவை தனிப்பட்ட உரிமைகள்; இந்த உரிமைகள் பாதுகாக்கப்படும்' என்று அழுத்தமாகச் சட்டம் செய்து வைத்துக் கொண்டார்கள்.

கடவுள் சாதியை உண்டாக்கினார் என்றால் கடவுளை உடை, கொளுத்து என்று சொல்லிப் பிள்ளையாரை உடைத்தோம்! இராமனைக் கொளுத்தினோம்.

சட்டத்தில் சாதிக்குப் பாதுகாப்பு இருக்கிறது. அந்தப் பாதுகாப்பு நீக்கப்பட வேண்டும்.

இல்லையென்றால் அதற்கான விளக்கமோ சாதிக்குப் பாதுகாப்பான பகுதிகளை நீக்குவதற்கு உறுதிமொழியோ அரசாங்கத்திடமிருந்து வரவேண்டும். இல்லையென்றால் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவோம் என்று 3-ஆம் தேதி (1957-நவம்பர்) கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் தீர்மானம் போட்டு 15-நாள் வாய்தா (காலக்கெடு) கொடுத்தோம்.

இன்றோடு அந்த வாய்தா தீர்ந்து போய்விட்டது. நாம் கொடுத்த 15- நாள்களில் என்ன செய்தார்கள் தெரியுமா? சாதியைக் காப்பாற்ற பாதுகாப்பு செய்து கொண்டார்கள்!

இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது; ஆகவே இதை நெருப்பு வைத்துக் கொளுத்தப் போகிறோம் என்று சொல்கிறோம்; இல்லை நெருப்பு வைக்கக்கூடாது என்றால் அந்த மாதிரி சாதிக்குப் பாதுகாப்பு சட்டத்தில் இல்லை என்பதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும்; அல்லது இருந்தால் சட்டத்தைத் திருத்துகிறேன் என்று சொல்ல வேண்டும்.

நீ சாதியைக் காப்பாற்றித்தான் தீருவேன் என்கிறாய். சாதியைக் காப்பாற்றும் சட்டத்தைக் கொளுத்துபவர்களும் 3-ஆண்டு சிறை என்று சட்டம் கொண்டு வந்து விட்டாய்; இந்தச் சட்டத்திற்குப் பயந்து கொண்டு கொளுத்தாவிட்டால் நாளைக்கு நம்மைச் சூத்திரன் என்றே கூப்பிடுவான்!

சட்டத்தில் ஏதாவது குறையிருந்தால் அதனை முறைப்படி திருத்தலாம் என்று மந்திரி சொல்கிறார். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த பார்ப்பனர்கள், நம்முடைய மக்கள் என்றென்றைக்கும் அடிமையாய் இருப்பதற்காக சட்டம் வகுத்துக் கொண்டார்கள். அதை எளிதில் மாற்ற முடியாதபடி பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே தான் கொளுத்துகிறோம். கொளுத்துவது அவசியமில்லை என்று சொன்னால் சட்டம் இந்த வகையில் செய்ய முடியுமென்று சொல்லட்டுமே?

இப்போது சாதியைக் காப்பாற்ற சட்டம் எழுதி வைத்துக் கொண்டுள்ளான். இன்னும் கொஞ்ச நாள் போனால் - நாங்கள் ஒழிந்தால் அவனவன் சாதி முறைப்படி வாழவேண்டுமென்று கொண்டு வந்துவிடுவான்!


நம் கண் முன்னாலேயே ஆச்சாரியார் குலக்கல்வித் திட்டம் கொண்டுவந்தாரே? பாதி நேரம் குலத்தொழில் படிக்காத பிள்ளைகளைப் பள்ளியில் சேர்க்காதே என்று உத்தரவு போட்டாரே? இது ஒரு வருடம் நடந்ததே! இத்தனைக்கும் அன்று எதிர்க்கட்சி மெஜாரிட்டி (பெரும்பான்மை) ஒன்றும் அசைக்க முடியவில்லையே! கத்தியை எடு என்று சொன்னவுடன் ஓடினார். பிறகு காமராசர் வந்தார் குலக்கல்வித் திட்டத்தை எடுத்தார்.

நாளையதினம் காமராசர் ஒழிந்து இந்த நிலைமை திரும்பாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அந்த மாதிரியான சட்டமும், அமைப்பும், வாய்ப்பும் அவர்களுக்கு இருக்கின்றன. ஒவ்வொரு நிமிடமம் நாம் உயிருக்குப் பயந்து கொண்டுதானே வாழவேண்டியிருக்கிறது? இன்னமும் புதிது புதிதாக அதிகாரங்களையெல்லாம் அவன் (பார்ப்பான்) அதிகமாக்கிக் கொண்டு இருக்கிறான். இந்த நிலைமையில் நாம் சும்மா இருந்தால் எல்லாவற்றையும் நாம் ஒப்புக் கொண்டுள்ளோம் என்று அவன் மேலும் மேலும் நம்மை அழுத்துகிறான்!

சட்டத்தைக் கொளுத்துகிறோம் என்று சொன்னால் மேலே இருப்பவர்கள் கவனிக்க வேண்டும். ஏன் இவ்வாறு இவன் சொல்கிறான்? ஏன் இப்படிச் செய்கிறான் என்பதைக் கவனிக்க வேண்டும்; சும்மா பிடித்து அடை என்றால் அடைத்து விடுகிறார்கள். அதனால் எரிந்து கரியாகிய சட்டம் எரியாததாக ஆகிவிடுமா?

1957-நவம்பர் 3-ஆம் தேதி தஞ்சாவூரிலே மாநாடு நடைபெற்றது உங்களுக்கெல்லாம் தெரியும். 6-ஆம் தேதி என்னைப் பிடித்து திருச்சி, குளித்தலை, பசுபதி பாளையம் ஆகிய மூன்று ஊர்களில் பேசிய பேச்சுக்களை வைத்து என் மீது (வழக்கு) போட்டிருக்கிறார்கள்.

சட்டசபையில் மந்திரியே சொல்லியிருக்கிறார் "ராமசாமி சொல்வது எல்லாம் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன" என்று; "இல்லை இல்லை, கொல்லு குத்து என்று பேசியிருக்கிறார்" என்று பத்திரிகைக்காரர்கள் எல்லாம் கூப்பாடு போட்டார்கள்; "அப்படியானால் அவர் பேசிய பேச்சுக்களை எழுதிய ரிப்போர்ட்களைக் கொண்டு வாருங்கள்" என்று பத்திரிகைக்காரர்களை மந்திரி கேட்டார்; இந்தப் பத்திரிகைக்காரர்கள் ஒருவரும் போகவில்லை.

சட்டசபையில் மந்திரி சொல்கிறார் நம்முடைய நடவடிக்கைகள் சட்டத்துக்கு உட்பட்டே இருக்கின்றன என்று; இதை இந்தியா முழுவதிலும் உள்ள பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன.

பிறகு இந்தப் பார்ப்பனர்கள் மேலிடத்தில் போய் ரகளை (கலகம்) செய்திருக்கின்றனர்; அதன் பின்னர் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருக்கிறது! மேலிடத்தாருக்கு நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதற்காக இப்போது கேசு (வழக்கு) எடுத்து இருக்கிறார்கள்; மேலிடத்து உத்தரவுக்காக நம்மீது நடவடிக்கை எடுப்பதனால் நமக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?

முன்பு கொடி கொளுத்துகிறேன் என்ற சமயத்தில் சட்டம் செய்ய முடியாது என்று சொன்னவர்கள் இப்போது சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்குத் தமிழ்நாடு சட்டசபையிலே சட்டம் செய்திருக்கிறார்கள். அவனுக்கு நாடாளுமன்றத்திலேயே சட்டம் செய்ய வெட்கம்; உலகமெல்லாம் தெரிந்துபோகுமே. தமிழ்நாட்டில் காந்தி சிலையை உடைக்கிறார்கள் அரசமைப்புச் சட்டத்தைக் கொடியைக் கொளுத்துகிறார்கள். அரசமைப்புச் சட்டத்தை எரிக்கிறார்கள் என்பது.

சட்டசபையிலே, என் மீது நடவடிக்கை எடுக்க சட்டமில்லை என்று சொன்ன விஷயத்திற்கே இப்போது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்; எது எப்படியிருப்பினும் கோர்ட்டில் ( நீதிமன்றத்தில்) இருக்கும் வழக்கைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை. அதற்காக வேறு நடவடிக்கை வந்துவிடுமே என்பதற்காக அல்ல; மனப்பூர்த்தியாகவே சொல்கிறேன்.

இந்த அரசமைப்புச் சட்டத்தில் சாதிக்கும், மதத்திற்கும் அவனவனுக்குண்டான பழக்க வழக்கங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும், அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மத சுதந்திரம் கொடுத்திருக்கின்றான். மாகாண அரசாங்கமே இதில் பிரவேசிக்க முடியாது. இந்து மதம் உள்ள வரையில் நாங்கள் சூத்திரர்கள்தான் - அடிமைகள்தான்; ஆகவே இந்த உரிமை கொடுத்துள்ள அரசமைப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும்.


இந்த நிலைமைக்கு வந்ததற்கே காரணம் ஒரு ஓட்டலில் "பிராமணாள்" என்று போட்டுள்ள போர்டை (பெயர்ப் பலகையை) எடுக்க மறுத்தான். அந்த ஓட்டலில் (உணவகம்) முன்மறியல் செய்து 800-பேர்வரை சிறைக்குச் சென்றிருக்கின்றனர். நம்முடைய சர்க்கார் (அரசு) ஏதும் செய்ய முடியாமல் விழிக்கிறார்கள். மேலே சொல்லிச் செய்யக் கூடாதா என்றால் அவனுக்கு மத சுதந்திரம் கொடுத்துள்ளோமே என்கிறான். ஏதோ ஓர் அளவுக்குச் செய்ய வேண்டும் என்றால் செய்யலாம். நாம் இங்கே மறியல் செய்கிறோம்; அங்கே கேரள ஆட்சியில் சாதிச் சொல் போடக்கூடாது என்று மிரட்டியிருக்கிறான்.

நாங்கள் தொடர்ந்து மறியல் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் மேலும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் அதனால் ஏதாவது பயன் ஏற்படும் என்றால் செய்து கொண்டிருக்கலாம். நிலைமை மாறவில்லை. ஆகவே அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். இதில் வெற்றி பெறாவிட்டால் காந்தி சிலையை உடைக்கப்போகிறோம்.

நேற்று சட்டசபையிலேயே கேட்டிருக்கிறார்கள் ஜவகர்லால் நேரு ராஜேந்திரபிரசாத் இவர்களுக்குக் கொடும்பாவி கட்டி இழுத்து, இவர்களுடைய சிலையை உடைத்தால் நீ என்ன செய்வாய்?" என்று; வேண்டுமானால் அதற்குச் சட்டம் செய்; சட்டத்தினாலேயே உயிர்வாழ்! மக்களுடைய அன்பினால், திருப்தியினால் நீ (அரசாங்கம்) உயிர்வாழப் போவதில்லை.

சுதந்திரம் (விடுதலை) வந்துவிட்டது என்று நீ சொல்கிறாய்; இன்னமும் நாங்கள் சூத்திர்கள் தான்; வடநாட்டானால் கொள்ளையடிக்கப்படத்தான் இந்தச் சுதந்திரம் என்றால், நாங்கள் சட்டத்தைக் கொளுத்திவிட்டு அதன் விளைவை அனுபவிக்கிறோம்; எத்தனை பேரைத் தண்டிக்க முடியும்? எவ்வளவு நாளைக்குத் தண்டிக்க முடியும்?

போலீஸ்காரனுக்கு அடங்கி நட, சட்டத்திற்கு அடங்கி நட என்று நான் சொல்கிறேன். இப்படிச் சொல்கிற என்னுடைய பேச்சைக் கூட மதிக்கவில்லையானால் என்ன பொருள்? இல்லை நான் சொல்வது பொது மக்கள் கருத்தா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். நேற்று நடந்தது தஞ்சாவூரில் மாநாடு அதில் 2-லட்ச மக்கள் திரண்டனர். அவர்களுடைய உணர்ச்சியை நீ பார்த்திருக்க வேண்டும். இல்லை பொது ஜன வோட்டு எடு; சாதி ஒழிய வேண்டுமா வேண்டாமா என்று. ஒன்று மில்லை வெறும் அடக்கு முறை தான் என்றால் என்ன அர்த்தம்?

அடக்கு முறைச் சட்டம் செய்த பிறகு நாம் சும்மா இருந்தால் வெளியில் தலை காட்ட முடியுமா? இந்த நிலையில் குடும்பத்துக்கு ஒருவர் சிறைக்குப் போக நாம் துணிந்துவிட வேண்டியதுதானே! மூன்று வருடமா அது மூன்று நிமிடம் என்றால் தானே நாம் மனிதர்!

ஆகவே சாதிக்குப் பாதுகாப்பான அரசமைப்புச் சட்டத்தை வருகிற 26-ஆம் தேதியன்று நாம் ஆயிரக்கணக்கில் கொளுத்த வேண்டும். இரகசியமாயல்ல, பகிரங்கமாகக் கொளுத்தி விட்டுப் பெயர் கேட்டால் சந்தோஷமாகக் கொடுங்கள்! கோர்ட்டுக்கு (நீதிமன்றத்துக்கு) அழைத்துக் கொண்டு போனால் செல்லுங்கள்!

"இந்தச் சட்டம் சாதியைக் காப்பாற்றும் சட்டம்; இந்தப் பார்ப்பனச் சதிச்சட்டத்தை லேசில் மாற்ற முடியாது. இதற்கு எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் அறிகுறியாக இதைக் கொளுத்தினோம்" என்று சொல்லுங்கள்.

முக்கியமாக உள்ள கழகத் தோழர்கள் நூற்றுக்கணக்கில் சட்டப் புத்தகம் வாங்கி  ஊரில் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்; மக்கள் எல்லோரும் இதைக் கொளுத்த வேண்டும். கொளுத்த அந்தத் துண்டு காகிதங்களையும் சாம்பலையும் ஒரு கவரில் போட்டு புக்போஸ்டில் (நூல் அஞ்சலில்) மந்திரிக்கு அனுப்ப வேண்டும்.

தைரியமுள்ளவர்கள் உங்களுடைய பெயர், விலாசம் (முகவரி) எல்லாம் அதில் போட்டு அனுப்புங்கள்.

"எங்களுடைய பிள்ளை குட்டிகளாவது சூத்திரத் தன்மையிலிருந்து விடுபட்டே ஆக வேண்டும்; அதற்காக எந்த விலை கொடுக்கவும், நாங்கள் யார் என்பதை 26-ஆம் தேதியன்று நிரூபித்துக் காட்டுங்கள்!


-------------------------------- 17.11.1957 கடலூர் மஞ்சை மைதானத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு: ”விடுதலை”, 22.11.1957

0 comments: