Search This Blog

4.7.12

சடங்குகள் மோசக்காரர் புகுத்தியது - பெரியார்




தந்தை பெரியார் அவர்கள் புதுமனை புகுவிழாவில் புதுமனையினை திறந்து வைத்து பேசுகையில் குறிப்பிட்டதாவது:-

நண்பர் பெருமாள் அவர்களின் புதுமனை புகுவிழாவின் பொருட்டு நாம் கூடியுள்ளோம். சாதாரணமாக திறப்பு விழாக்களின் உள்தத்துவம் ஒரு விளம்பரத்துக்காகவேயாகும். என்ன விளம்பரம் என்றால் நண்பர் பெருமாள் முன்பு ஒரு வீட்டில் வசித்தார். இன்று இந்த வீட்டுக்கு குடி வந்துள்ளார் என்பது சுற்றத்தாருக்கும், நண்பருக்கும் தெரிய வேண்டும். எப்படி குடிமாறிப் போனால் முகவரி மாற்றம் குறித்து விளம்பரப்படுத்துவது போலவாகும். இதுபோலத்தான் திருமணம், புதிய கடைத் திறப்பு எல்லாம் மக்களுக்கு இச்சங்கதியை தெரியப்படுத்தச் செய்யும் ஒருவகை விளம்பர சாதனமாகும். இது எந்த நாட்டிலும் உண்டு.

இத்தகைய இந்த ஜாதி இனத்தின் சுயநலக்காரர்கள், தந்திரக்காரர்கள். இதனை பணம் பறிக்கவும், மதத்தையும், மடத்தனத்தையும் புகுத்தவும் உபயோகப்படுத்திக் கொண்டனர். மக்களும் இதுபற்றி சிந்திக்காமல் ஏற்றுக் கொண்டு நடக்கின்றனர்.

சுயமரியாதைக்காரர்கள் இப்படி முட்டாள்தனமாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் இத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்து கொள்ளுகின்றார்களே. இதனை மாற்றி பரிகாரம் காண வேண்டாமா? என்று எண்ணியே இப்படிப்பட்ட பகுத்தறிவுக்கு ஒத்த முறைகளை கையாளுகின்றோம். பார்ப்பனரைக் கூப்பிட்டு அர்த்தமற்ற சடங்குகளை செய்கிறார்களே ஒழிய, அது ஏன் செய்ய வேண்டும்? அதன் பலன் என்ன? என்று சிந்திப்பதே இல்லை.

மனிதன் எந்தக் காரியத்தை செய்தாலும் அதன் பலன் நல்லதா? கெட்டதா? என்று ஆராய்ந்து பார்த்து செய்ய முற்படுவதோ, செய்ய தூண்டுவதோ நம்மவர்களுக்கு இல்லை. எதுவும் சுலபத்தில் அடைய வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள்.

இம்மாதிரியான காரியத்தில் கை வைக்க எவனுமே தோன்றவே இல்லையே. தோன்றியவன் எல்லாம் இம்மாதிரியான முட்டாள்தனத்தை பாதுகாக்கவேதான் நினைக்கிறான்.

கிராமப் பஞ்சாயத்துக்களை அமைப்பதில் முன்னெச்சரிக்கை வேண்டும். இங்கு மேல்நாட்டு பாணி ஜனநாயக முறை புகுத்த இங்கு மக்கள் இன்னும் தகுதி பெறவில்லை. அரசியல் கட்சிகள் புகுந்தால் பெரும்பாலான மக்களின் சமூக வாழ்வில் சிதைவு ஏற்படும். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனக் கூறி அடிக்கடி ஒத்தி வைப்பும், வெளிநடப்பு நாடகங்களுமே நடக்கும். எங்கள் இயக்கத்தைத் தவிர இருக்கின்ற அத்தனை இயக்கங்களும், அமைப்புகளும் எங்களால் ஏற்படும் மாறுதல்களை ஏற்பட ஒட்டாமல் தடுக்கவே பாடுபட்டு வருகின்றன.

எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவர்கள் கடவுள் விரோதி, மத விரோதி பார்ப்பனரை எதிர்க்கின்றார்கள். இப்படித்தான் கூறுவார்களே ஒழிய, எங்களால் என்ன கேடு என்று எவனும் கூற முடியாது. எங்களை எதிர்ப்பவர்கள் எல்லாம் இவற்றைக் காப்பாற்றவே பாடுபட்டு வருகின்றனர்.

நாங்கள் கூறுகிறோம் என்றால், அப்படியே உங்களை நாங்கள் நம்பச் சொல்லவும் இல்லையே? உன் அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து உனது புத்திக்கு சரி என்று பட்டால்தானே எடுத்துக் கொள்ளச் சொல்கின்றோம்.

மக்கள் காரண காரியங்களைக் கேட்டு நடக்க ஆரம்பித்து இருந்தால் வெகு நாளைக்கு முன்பே நாடு முன்னேறி இருக்கும். இல்லாதவன் காரணமாகத்தான் நாம் இப்படி இருக்கின்றோம். மதம், சாஸ்திரம் என்பதெல்லாம் மனிதன் அறிவு கொண்டு சிந்திக்கக் கூடியது என்று ஆக்கி வைத்தாதாகும் என்று எடுத்துக் கூறினார். அவர்கள் மேலும் கடவுள், மதம், சாஸ்திரம் இவற்றின் மடமை பற்றியும், ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் தெளிவுபடுத்திப் பேசினார்.

---------------19.5.1962 அன்று ஆத்தூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை - விடுதலை 12.5.1962

3.7.12

ஒருபெண்தலைகீழாகநடந்துசெல்வதுஎப்படி?நாகரிகக்காட்சியா?

63 சிவனடியார்கள் என்று சைவ மதத்தில் கூறப்படுவதுண்டு, அதில் ஒருவர் காரைக்கால் அம்மையார், காரைக்காலில் பிறந்த புனிதவதி, பரமதத்தன் என்பவனுக்கு மணம் முடிக்கப் பெற்றாள் - புனிதவதி சிறு வயதிலிருந்தே தெய்வ பக்தி நிறைந் தவளாம்.

தன் கணவன் இரு மாங்கனிகளை வீட்டுக்குக் கொடுத்தனுப் பினார். சிறிது நேரத்தில் சிவனடியார் ஒருவர் பிச்சைக்கு வந்தார். தன் கணவன் அனுப்பி வைத்த இரு மாங்கனிகளுள் ஒன்றினைச் சிவனடியாருக்கு அளித்து உபசரித்தாள்.

உணவுக்கு வந்த கணவருக்கு உணவோடு ஒரு மாம்பழத்தையும் அளித்தார். மாம்பழத்தின் ருசியில் சொக்கி, தான் ஏற்கெனவே அனுப்பியிருந்த இன்னொரு மாம்பழத்தையும் கேட்டான். (அதுதான் சிவனடியார்க்குக் கொடுக்கப்பட்டு விட்டதே!)

என்ன செய்வதென்று திகைத்தாள். கடவுளை வேண்டினாள்; என்ன ஆச்சரியம்! விட்டலாச்சாரியா சினிமாவில் வருவதுபோல ஒரு மாங்கனி வந்தது. அதனைத் தம் கணவருக்குப் படைத்தாள். இக்கனி பழைய மாம்பழத்தைவிட மேலும் சுவையாக இருந்ததை அறிந்தான். இதுபற்றி நடந்தவற்றை புனிதவதி, தம் கணவரிடம் சொன்னாள். அவன் நம்பவில்லை; அப்படியானால் இன்னொரு மாம்பழத்தை வரவழை, பார்க்கலாம் என்றான். சிவனை வணங்கினாள்; இன் னொரு மாம்பழமும் வந்தது.

அதிர்ந்து போன கணவன்! இவள் தெய்வப் பெண்! இவளிடம் குடித்தனம் நடத்துவது கூடாது! என்று கருதி வீட்டை விட்டு அகன்றான்.

சிவனடியாராக வந்தது சாட்சாத் சிவபெருமான்தானாம்!

அடுத்த காட்சி! தன் கணவன் விலகிச் சென்றதால் சிவனிடம் புனிதவதி மனு போட்டாளாம். தன் அழகிய உருவம் பேய் உருவமாக மாற வேண்டும் என்றாளாம். அவ்வாறே சிவன் அருளினானாம். (பெண்ணென்றால் பேயும் இரங்கும் என்பார்கள்; இந்தச் சிவனோ பெண்ணையே பேயாக்கி விட் டானே - இவன் நெஞ்சில் இரக்கம் இல்லையோ!).

பேயுரு பெற்று திருவந்தாதி பாடல்களைப் பாடினாளாம். பின் சிவன் வாழும் கைலயங்கிரிக்குப் புறப்பட்டாளாம். காலால் நடப்பது குற்றம் என்று கருதி, தலையால் நடந்து சென்றாளாம்.

(இதுகுறித்து புதுவைப் பல்கலைக் கழகப் பேராசிரியரும் - மறைந்த கவிஞர் வாணிதாசன் அவர்களின் மகனுமான பேராசிரியர் நலங்கிள்ளி அவர்கள் ஆய்வு செய்கையில், ஒரு பெண் தலை கீழாக நடந்து செல்வது எப்படி? அது ஒரு நாகரிகக் காட்சியா? என்ற ஒரு அர்த்தமுள்ள வினாவை எழுப்பியிருந்தார். அவர்மீது நிருவாகம் நடவடிக்கை எடுக்கப் பாய்ந்தது - உண்மையைச் சொன் னால் எரிச்சலோ! அப்பொழுது பேராசிரியர் சொல்வதில் என்ன குற்றம்? என்று விடுதலை எழுதிற்று)

கடைசியாக கைலாயமும் அடைந்தாளாம். உனக்கு என்ன வேண்டும் பக்தாய்? என்று சிவன் கேட்க! என்றும் உன் திருவடி மறக்காமல் இருக்க வேண்டும்! என்றாளாம். அவ்வாறே வரம் அளிக்கப்பட்டதாம்; திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம் என்றானாம் சிவன்.

எப்படி இருக்கிறது இந்தக் கதை? கடவுளாக இருக்கிறவன் ஒரு பக்தையை ஏன் சோதிக்க வேண்டும்? சர்வசக்தி வாய்ந்த கடவுளுக்குத் தன் பக்தை எப்படிப்பட்டவர் என்பது கூடத் தெரியாதா?

புனிதவதிதான் ஆகட்டும் - தன் கணவனிடம் தொடக்கத்திலேயே உண்மையைச் சொல்லியிருந்தால் இந்தச் சிக்கல்கள் எல்லாம் ஏற்பட வாய்ப்பு இருந்திருக்காதே!

ஒரு பெண்ணானவள் தலை கீழாக நடப்பது என்பது ஆபாசம் அல்லவா! அந்தக் காலத்திலேயே பைஜாமா அறிமுகமாகி விட்டதா?

கண்ட கசமாலத்தையும் கொட்டும் குப்பைத்தொட்டியா புராணம் என்பது? அந்தக் குப்பைத் தொட்டியை அந்தக் காலத்தோடு நிறுத்தாமல், ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோயிலில் அந்த மாங்கனி வைபவத்தை நினைவூட்டும் வகையில் மாங்கனித் திருவிழாவை நடத்துகிறார்களாம். இன்றைக்குத்தான் அந்த விழாவாம்.

முட்டாள்தனத்தையும், ஆபாசத்தையும் புதுப்பிப்பதற்காக இப்படி ஒரு விழாவா?
வெட்கக்கேடு! மகா மகா வெட்கக்கேடு!!

-------------------”விடுதலை” 3-7-2012

ஆண்டாள் என்பாள் இருந்தாளா?

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பாடப் புத்தகத்தில் ஆழ்வார்களுள் ஒருவராகிய ஆண்டாள் அம்மையாரைப் பற்றித் தவறான செய்திகள் இடம் பெற்றுவிட்டதாம், ஆகாயத்துக்கும் பூமிக்குமாக சிலர் குதிக்க ஆரம்பித்துள்ளனர். பார்ப்பன ஊடகங்களும் உசுப்பி விடும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளன.
என்ன அப்படி ஆண்டாளைப் பற்றி அசிங்கமாக எழுதப்பட் டுள்ளது!

ஆண்டாள் - பெரியாழ்வாருக்குத் திருட்டுத்தனமாகப் பிறந்தவள் என்றும், வல்லபதேவன் என்னும் மன்னன் ஆண்டாள்மீது மோகம் கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதுதான் பிரச்சினைக்குக் காரணமாம்.

முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும், புராணம் என்பது வேறு, வரலாறு என்பது வேறு; இரண்டும் ஒன்றல்ல! ஏதோ வரலாற்றைத் திரித்து எழுதி விட்டதாக தையத்தக்கா என்று குதிக்கிறார்களே - ஆண்டாள் கதை என்ன வரலாறா?


ஆண்டாளைப் பற்றி அவதூறாக ஆபாசமாக குறிப்பிட்டதாக ஆர்ப் பாட்டம் செய்கிறார்களே! இந்த ஆண்டாள் எழுதாத ஆபாசமா?

பக்தையாக இருப்பவர்களுக்குக் கடவுள் தந்தையாகக் கருதப்படுவது தான் உலக வழக்கு - ஒரு வகையில் ஒழுக்கமும்கூட!


ஆனால் ஆண்டாள் என்ன பாடுகிறாள்? அந்தக் கடவுளையே புருஷனாக ஆக்கிக் கொள்ள அடங்கா ஆசைப்படுகிறாளே! கடவு ளோடு புணர வேண்டும் என்று வெறி பிடித்துத் துடியாய்த் துடிக் கிறாளே!


ஆண்டாளைப் பற்றி அவதூறா? பொறுக்க மாட்டோம் என்று பொங்கி எழுகிறார்களே, ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்களே! இந்த அசிங்கத் துக்குத்தான் வக்காலத்தா?


இந்த ஆண்டாளைப் பற்றி சாட்சாத் வைணவ மெய்யன்பரான சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி யார் (ராஜாஜி) என்ன கூறுகிறார்?


ஆண்டாள் என்னும் ஸ்திரி இருந்ததே இல்லை. நாலாயிர திவ்விய பிரபந்தம் ஆண்டாள் பாடிய தாகச் சொல்லப்படும் பாசுரங்கள் அவர் பாடியவை அல்ல. பெரியாழ்வார் என்னும் ஆழ்வார் சில பாசுரங் களைப் பாடி அப்பாசுரங்களை ஆண்டாள் என்னும் ஒரு பெயரால் வெளிப்படுத்தினார் என்று திரிவேதி என்னும் ஆங்கில மாத இதழில் (1946) செப்டம்பர் இதழில்) ராஜாஜி எழுதியுள்ளாரே - இதற்கு என்ன பதில்?

இல்லாத ஒரு கற்பனைப் பாத்திரத்தைப் பற்றி.. ஏன் அலறல் - கூக்குரல்!

ஆண்டாளின் திருப்பாவையில் ஆயர் குலப் பெண்களை அடிமுட் டாள்கள் என்று சொல்லியிருக்கிறாரே - ஆயர் குலப் பெண்கள் கிளர்ந்தெழுந்து திருப்பாவையைக் கொளுத்தும் போராட்டத்தில் இறங்கினால் என்ன செய்வார்களாம்?


கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங் கொழிக்க ஒழியாது!
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை
சிறுபேர் அழைத்தளவும் சீறீ அருளாதே,
இறைவா, நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


இப்பாடலில் இரண்டாவது வரியில் காணப்படுவது என்ன? அறிவொன்றும் இல்லாத ஆய்க் குலம் என்று கூறப்படுகிறதே.


இதற்கு என்ன பதில்?

-------------------------"விடுதலை”1-7-2012

2.7.12

இரு பார்ப்பன ஏடுகளின் கார்ட்டூன்கள்!




தினமலர் இந்தக் கார்ட்டூன் மூலம் என்ன சொல்ல வருகிறது? ஈழத் தமிழர்களின் மீதான நல்லெண்ணத்தில் சொல்லப்படுகிறதா?

ஈழத் தமிழர்கள்மீது இந்தத் தினமலரின் கருத்து என்ன? விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை எத்தனை முறை சாகடித்து இருக்கிறது - இந்தத் தினமலர்? அதனால் தானே நமது தமிழர் தலைவர் தினமலர் ஏட்டுக்குக் கருமாதிப் பத்திரிகை என்று நாம கரணம் சூட்டினார்.

டெசோ செடி, மரமாகிப் பூப்பூத்து, காய் காய்ச்சு பழமாகி விடக் கூடாது என்பதுதான் இவர்களின் நச்சு எண்ணம். அதன் வெளிப்பாடே இந்தக் கார்ட்டூன். டெசோவை அறிவித்தாலும் அறிவித்தார்கள். பார்ப்பனர்களும், தொங்கு சதைகளும் முடியைப் பிய்த்துக் கொள்கிறார்கள்.

துக்ளக் என்ன சொல்லுகிறது?



இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தியதைக் கண்டித்தால் நீங்கள் மட்டும் இந்தி அரக்கி என்று எழுதவில்லையா? என்று கேட்கிறது துக்ளக்.

இந்தியைப் பற்றிச் சொன்னால் இந்தப் பார்ப்பனர்களுக்கு ரத்தம் கொதிக்கிறது. ஆத்திரத்தால் பூணூல் குதிக்கிறது.

தான் ஆடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்களே அது இதுதானோ!

1938இல் முதல் அமைச்சராக இருந்த ஆச்சாரியார் இந்தியைத் திணித்தபோது லயோலா கல்லூரியில் என்ன பேசினார்?

சமஸ்கிருதத்தைப் படிப்படியாகப் புகுத்தத்தான் இந்தியைக் கொண்டு வருகிறேன் என்று சொல்லவில்லையா?

இந்தியைப்பற்றி சொன்னவுடன் அவாளுக்கு ஆத்திரம் வருவதற்குக் காரணம் - அது சமஸ்கிருதக் குடும்பத்தில் போடப்பட்ட குட்டி என்பதால் தான் என்பது புரிகிறதா?

சும்மா ஆடுமா சோ கூட்டத்தின் குடுமி?

அண்ணா சொன்னாரே நினைவிருக்கிறதா?

தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும், தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும் தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்தில் அன்புக் கொள்வதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.

(திராவிட நாடு 2.11.1947)

பார்ப்பனர்களின் நச்சுப்பையைத் தெரிந்து கொள்வீர்
-------------------"விடுதலை” 29-6-2012

1.7.12

மருத்துவர் இராமதாசு - பழ. நெடுமாறன் போன்றவர்கள் பார்வைக்கு


வெட்டிப்பேச்சு வீரர்கள்!



திராவிடர் இயக்கத்தைக் கொச்சைப்படுத்த விரல் விட்டு எண்ணக் கூடிய சிலர் புறப்பட்டுள்ளனர்.

சிலர் வெளிப்படையாகப் பேசுகின்றனர். ஒரு சில தலைவர்கள் குட்டிக் குரங்குகளை விட்டு ஆழம் பார்க்கின்றனர்.

வன்னியர் கட்சி நிறுவனர் மருத்துவர் திரு.ச.இராமதாசு என்ன செய்கிறார்? அவர் மேடையில் வீற்றிருப்பார். தமது எடுபிடிகளை விட்டு தந்தை பெரியார் அவாகளைப் பற்றித் தாறுமாறாகப் பேசவிட்டு, ரசித்துக் கொண்டு இருப்பார். கடைசியாக அவர் பேசுவார். அவர் பேச்சில் பெரியார் பற்றி ஒரு வார்த்தையும் இருக்காது.

இது ஒரு வகையான பார்ப்பனத்தனம் இன்னும் சொல்லப் போனால் கடைந் தெடுத்த கோழைத்தனமே!

பெரியாரைக் கழித்துவிட்டு, திராவிடர் இயக்கம் என்று ஒன்று இல்லை. திராவிடர் இயக்கத்தைப் பற்றிக் கொச்சைப்படுத்திப் பேசினாலும் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்துவதாகத்தான் பொருள்.

ஒரு சிலர் இந்த வேலையில் இறங்குகின்றனர். பெரியாரை ஒதுக்கி வைத்துவிட்டு, திராவிடர் இயக்கத்தைப் பற்றிப் பொய்யும் புனை சுருட்டும் நிறைந்த மொழிகளில் அர்ச்சிக்கின்றனர்.

நமது மதிப்பிற்குரிய மதுரை பழ.நெடுமாறன் அவர்கள் அமர்ந்திருக்கும் மேடையில் கூட தந்தை பெரியாரைப் பற்றிக் கொச்சைப் படுத்திப் பேசப்படுகிறது. ஆனால் அவர் அதனைக் கண்டு கொள்வதில்லை. மருத்துவர் திரு. ச.இராமதாசு கையாளும் அதே முறையை அவரும் கையாள்வது ஆச்சரியமானதுதான்.

மருத்துவர் இராமதாசு தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசாத பேச்சா? சூட்டாத புகழாரமா?

பெரியாரைப் பேசித்தான் தான் ஒரு சமூக நீதிப் போராளி என்று மார் தட்டிக்கொள்ள முடிந்தது.

தந்தை பெரியார் அவர்களின் கருத்துக்களை எடுத்துச் சொல்லித்தான் நான் ஒரு பார்ப்பன எதிர்ப்பாளன் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டியிருந்தது.

தந்தை பெரியார் அவர்களை முன்னி றுத்தித்தான் மருத்துவர் ச.இராமதாசு அரசியல்வாதிகளைச் சாடவும் முடிந்தது.

தேர்தல் அரசியல் களத்தில் அவர் கட்சி காலடி எடுத்து வைத்த நேரத்திலும் கூட பெரியார் கொள்கையை நெஞ்சில் தாங்கிய ஒரு வீரர் இதோ புறப்பட்டுவிட்டார்! என மக்கள் நம்பும் அளவுக்குப் பெரியாரைப் பற்றி மூச்சுக்கு முந்நூறு தடவை பேசியவரும் அவரே!

இன்னும் ஒரு கட்டத்தில் தம் கட்சிக்காரர்களைக் கறுப்புச் சட்டை கூடப் போட வைத்தார்!

மக்களிடம் அடையாளம் காட் டப்பட, விளம்பர வெளிச்சத்தில் குளிக்க, தொடக்கத்தில் பெரியார் தேவைப்படுவார். அடுத்த கட்டத்தில் விளம்பரமும், செல்வாக்கும், செல்வமும் சேர்ந்து விட்டால் எதிரியின் கால் எங்கிருக்கிறது என்று தேடிப்போய் விடுவான் தமிழன் என்று தந்தை பெரியார் சொன்னது அனுபவ மொழியாயிற்றே! அது பொய்த்துப் போய்விடலாமா?

அதனைத்தான் இவர்கள் நிரூபித்துக் கொண்டு இருக்கிறார்களோ!

ஒவ்வொரு தேர்தலிலும் திரா விடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதான் அந்தச் சில்லறை இடங்களைக் கூடப் பிடிக்க முடிந்தது என்பதை மறுக்க முடியுமா?

விழுப்புரத்திலே மாநாடு கூட்டி சிறப்பு நாற்காலி ஒன்றைத் தயார் செய்து அதில் மானமிகு கலைஞர் அவர்களை அமர வைத்து, அடுத்த முதல் அமைச்சர் நீங்கள்தான் என்று சொன்னபொழுது கலைஞர் திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியாமல் போயிற்றா? பெரியாரும், கலைஞரும் தெலுங்கர் என்று ஏழுகடல் மூழ்கி, அய்யிரண்டு திசை முகத்தும் தடம் பதித்து புதிய கண்டுபிடிப்பைச் செய்திருக்கிறார்கள் இந்த நவீன வாஸ்கோடகாமாக்கள்.

ஆரியர் - திராவிடர் என்பதே புதிதாக பெரியார் கண்டுபிடித்ததா? கைபர்,போலன் கணவாய் வழியாக ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து இந்தியாவுக்குள் புகுந்தனர் என்ற பால பாடம் புரியாதவர்கள் எல்லாம் மைக் பிடிக்கலாமா?

சிந்து சமவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று கண்டுபிடித்துச் சொன்னவர்கள் திராவிடர் இயக் கத்தைச் சேர்ந்தவர்களா?
குப்பத்தில் திராவிடர் பல்கலைக் கழகத்தை உருவாக்கினாரே பேராசிரியர் வி.அய் சுப்பிரமணியம், அவர் என்ன திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவரா?

திரவிடியன் என்சைக்ளோ பிடியாவை பி.ஜே.பி.யைச் சேர்ந்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளி மனோகர் ஜோஷி யிடம் பேராசிரியர் வி.அய்.சுப்பிர மணியம் அவர்கள் கொடுத்த போது திராவிட என்ற சொல்லை நீக்கக் கூடாதா என்று முரளி பார்ப்பனர் கேட்ட கேள்விக்குள் புதைந்திருக்கும் உணர்வுக்குப் பொருள் புரியுமா? அந்தப் பூணூல் கூட்டத்தினரின் திராவிடர் எதிர்ப்பு உணர்வை யாசகமாக எந்தத் தேதியிலிருந்து பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள் இந்தத் தமிழ்த் தேசிய வாதிகள்?

அப்படிக்கேட்ட அந்த முரளி மனோகர் ஜோஷியின் முகத்தில் பளார் என்று அறை கொடுத்தது போல தேசிய கீதத்தில் இடம் பெற்றிருக்கும் திராவிட என்ற சொல்லை எடுத்துவிட்டால் நானும் திராவிடன் என்சைக்ளோ பிடியா என்பதில் உள்ள திராவிடன் என்ற சொல்லை எடுத்து விடுகிறேன் என்று சொன்னாரே! (ஆதாரம்: DLANews 2003 பிப்ரவரி) அப்படிச் சொன்னவர் முதுபெரும் தமிழ் அறிஞர் அல்லவா!

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராக இருந்தவர் அல்லவா அவர்?

பார்ப்பனர்கள் தங்கள் நச்சுப் பையில் தேக்கி வைத்திருந்த திராவிட எதிர்ப்பு வெறியை மடிப்பிச்சை பெற்று ஒப்புவிக்கும் இந்த அடிமைப் புத்தியை ஒழிக்கத்தானே திராவிடர் இயக்கமும், தந்தை பெரியாரும் பாடுபட்டனர்!

தமிழனைப் பயந்தாங்கொள்ளியாக ஆக்கியது பெரியார்தானாம் - ஒரு சினிமா இயக்குநர் வீரமாகப் பேசி இருக்கிறார். பெரியார் திடலுக்கு வந்து பெரியார் விருது பெற்றபோது - பரிதாபம் அவர் புத்தி எங்கே மேயப் போனது என்று தெரியவில்லை.

இப்படிப் பேசிய அந்த இயக்குநரை, தமிழ் உணர்வு படைத்தவர் என்று பாராட்டுகிறார் மருத்துவர் இராமதாசு என்றால், இவரை அடையாளங் காண்பது எளிதாகிவிட்டது.

நீங்கள் கொடுக்கும் பெயரில் சூத்திரர் அல்லாத ஒரு தூசி கூடப் புகுந்து கொள்ள வசதி இருக்கக்கூடாது. அயலார் புகுந்து கொள்ளாமல் ஏதாவது ஒரு தடை இருக்க வேண்டும். திராவிடர் என்று கூறினால் திராவிடர் அல்லாத பார்ப்பனர் அதில் வந்து புகுந்து கொள்ள முடியாது. நாம் ஒழிக்கப் பாடுபடும் பிறவி காரணமான இழிதன்மையும் அவர்களுக்கு இல்லை. ஆகவே, அவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கும் காரணம் இல்லை. (நூல்: மொழி ஆராய்ச்சி) என்றாரே தந்தை பெரியார். இந்த வரலாற்று ரீதியான உண்மையை யதார்த்தக் கண்ணோட் டத்தோடு அணுகினால் இதன் அருமை பெருமை விளைவு - விளங்காமல் போகாது.

நான் அரசியலில் பல மாறுதலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றாலும் சமுதாயத் துறையில் பார்ப்பனீய வெறுப்புள்ளவன் நான். அதுதான் என்னைப் பகுத்தறிவு வாதியாக (நாத்திகனாக) ஆக்கியது.

சமுதாயச் சீர்திருத்தம் என்பதற்கு முதற்படி பார்ப்பன ஆதிக்கத்திலிருக்கும் பதவி, உத்தியோகங்களை விகிதாச்சாரம் கைப்பற்ற வேண்டியது என்பதைத்தான் A,B,C,D யாகக் கொண்டேன்- கொள்கிறோம். ஆன தினாலேயேதான் நான் வகுப்புவாதி என்று சொல்லப் பட்டேன் என்பதல்லாமல் நானும் வகுப்புவாத உருவாகவே இருந்து வருகிறேன் என்கிறார் தந்தை பெரியார்.

---------------------(விடுதலை 5-3-1969)

(1) இந்தத் திராவிடர் இயக்கப் பார்ப் பன எதிர்ப்பு உணர்வில் விளைந்தது தான் இட ஒதுக்கீடு. அதற்கான முதல் ஆணையைக் கொண்டு வந்ததும் திராவிடர் இயக்க நீதிக்கட்சி ஆட்சியே! (1928).

(2) அந்தச் சட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொன்ன தருணத்தில் கொந் தளிக்கும் கடலாய்ப் பொங்கியெழுந்து போர் முரசினை தந்தை பெரியார் தலைமையேற்றுக் கொட்டியதால் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது -_ இதன் காரணமாகத்தானே?

கல்வியிலும் இட ஒதுக்கீடு கிடைக் கப்பெற்றது. கல்வியில் இட ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதால்தான் இன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களில் 89 சதவிகிதம் பேர் பார்ப்பனர் அல்லாதவர்.

(சென்னை பெரியார் திடலில் நீதிக்கட்சி 95 ஆம் ஆண்டு விழாவில் (20.-10.-2010) சென்னைப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் டாக்டர் க.திருவாசகம் கூறிய தகவல்.)

(3) இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் கல்வி, வேலை வாய்ப்பினை அனுபவிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா?

(4) மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற தடையை நீதிக் கட்சி ஆட்சியில் பனகல் அரசர் ஒழிக்காதிருந்தால், இன்றைக்குக் குப்பன் மகனும், தொப்புளான் மகனும் டாக்டர் ஆகி இருக்க முடியுமா? (ஏன்? ராமதாசும் அவர்தம் குடும்பத்தாரும்தான் மருத்துவர்கள் ஆகியிருப்பார்களா?)

இவ்வாண்டு மருத்துவக் கல்லூரியில் தமிழ்நாட்டில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 742 இல் 678 பேர் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோர் என்றால் சாதாரணமா? இந்தச் சாதனைக்கு அஸ்திவாரம் போட்ட வர்கள் யார்?

அதே நேரத்தில் ஆச்சாரியார் (ராஜாஜி) ஆட்சிக் காலத்தில் 1952-_53 இல் சென்னை மாநிலத்தில் மருத்துவப் படிப்பின் நிலவரம் என்ன? பார்ப்பனர் 160, ஜாதி இந்துக்கள் -_ 56, மற்றவர்கள் _ 158, 374 இடங்களில் பார்ப்பனருக்கு 160 இடங்கள் இன்றைக்கு ஏற்பட்டுள்ள தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் திராவிடர் இயக்கம் அல்லவா? தந்தை பெரியார் அல்லவா?

200 க்கு 200 கட் ஆஃப் மதிப் பெண்கள் பெற்றவர்கள் 16 என்றால் இரண்டே இரண்டு இடங்கள் மட்டும் உயர்ஜாதியினருக்கு, மற்ற இடங்கள் எல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளதே - இந்த நிலை இந் தியாவில் தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த மாநிலத்தில் உண்டு? இதற்காகப் பாடுபட்டவர்கள் யார் யார்?

(5) பிற்படுத்தப்பட்டவர்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களும் என்று பிரித்து அதற்காகத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வந்ததற்காக பாடுபட்டதாக மார் தட்டுகிறாரே மருத்துவர் இராமதாசு அதற்கான ஆணையைப் _ பிறப்பித்தது எந்த ஆட்சி? மானமிகு கலைஞர் அவர்கள் தலைமையிலான திராவிடர் ஆட்சி யல்லவா?

இந்த ஒதுக்கீட்டின் காரணமாக கடந்த ஆண்டைவிட வன்னியர் களுக்கு தொழிற் கல்லூரிகளில் அதிக இடங்கள் கிடைக்கவில்லையா? அதனை வரவேற்று அதற்காகக் கருணாநிதி பெருமைப்பட வேண்டும் என்று மருத்துவர் ச. இராமதாசு கூற வில்லையா (தினப்புரட்சி 17.7.1989).

1967_1974 இடைப்பட்ட கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் குரூப் ஒன்று பதவிகள் 122இல் 112 இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்படுத்தப் பட்டவர்களுக்கும் கிடைத்ததே _ அந்தக் கலைஞரையா நாம் வசைபாடுவது -_ இது திராவிட இயக்க சாதனை இல்லையா?

(6) இன்றைக்கு மத்திய அரசுத் துறைகளில் இட ஒதுக்கீடு பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு கிடைத்தது என்றால் அதற்காக 42 மாநாடுகளையும் 16 போராட் டங்களையும் நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா?

(7) தமிழ்நாட்டில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தபோது (50 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு) அதனைப் பாதுகாக்க சட்ட வடிவம் தயாரித்துக் கொடுத்து, நிலை நாட்டியது திராவிடர் கழகத் தலைவர் அல்லவா? ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு இன்று பாதுகாப்புடன் நிலை பெற்றுள்ளதே.

இந்தியாவிலேயே நுழைவுத் தேர்வு ஒழிக்கப்பட்டது திராவிடர் இயக்க (கலைஞர்) ஆட்சியில்தானே!

(8) இந்தியாவிலேயே பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை அளித்தது நீதிக்கட்சியல்லவா?

(9) தேவதாசி முறையை ஒழித்துப் பெண்களின் மானத்தைக் காப்பாற்றியது எந்த ஆட்சி?

(10) பார்ப்பனர்களின் சுரண்டல் கேந்திரமாக இருந்த கோயில்களை இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வந்தது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் அல்லவா?

(11) பொதுச் சாலைகளை தாழ்த்தப் பட்டவர்கள் பயன்படுத்தலாம், கிணறு களிலும், குளங்களிலும் தாழ்த்தப்பட் டவர்கள் தண்ணீர் எடுக்கலாம் என்று ஆணை பிறப்பித்தது யார்?

(12) தாழ்த்தப்பட்டவர்களை பேருந்துகளில் அனுமதிக்காவிட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தாழ்த் தப்பட்டவர்களை சேர்க்காத பள்ளி களுக்கு மானியம் நிறுத்தப்படும் என்றும் ஆணை பிறப்பித்தது எந்த ஆட்சி?

(13) இந்தியை எதிர்த்து விரட்டி யடித்தது யார்? தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் தவிர இந்திக்கு இடம் இல்லை என்று சட்டம் செய்தவர் திராவிடர் இயக்கத் தீரராகிய அறிஞர் அண்ணா அல்லவா?

நாராயண சாமி நெடுஞ்செழியன் ஆனதும், ராமையன் அன்பழகனாக மாறியதும், சோமசுந்தரம் மதியழகன் என்று மாற்றிக் கொண்டதும் எந்த இயக்கம் ஊட்டிய உணர்வின் அடிப் படையில்!

(14) நமஸ்காரம் வணக்கம் ஆனது எப்போது? அக்ராசனர் தலைவராக மாற்றப்பட்டது எப்படி? பிரசங்கம் சொற்பொழிவானது எங்ஙனம்? வந்தனோபசாரம் நன்றியாக மலர்ந்தது எந்தச் சூழ்நிலையில்?

1938_இல் தந்தை பெரியார் தலைமையில் கிளர்ந்து எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் ஊட்டிய உணர்ச்சியின் விளைச்சல் அல்லவா இது?

(15) சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது தி.மு.க. ஆட்சியல்லவா?

(16) தமிழன் வீட்டு நிகழ்ச்சி தமிழன் தலைமையில் நடக்க முடியாது; தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் அவன் தாய் மொழிக்கு இடமில்லை என்றிருந்த நிலையை ஒழித்து, தமிழன் வீட்டு நிகழ்ச்சியில் தமிழன் தலைமை தாங்கவும், அவன் தாய்மொழி இடம் பெறவுமான புரட்சியை நிகழ்த்தியவர் யார்? சுயமரியாதைத் திருமணம் வந்தது எப்படி?

கிரகப்பிரவேசம் புதுமனைபுகு விழாவாக மாறவில்லையா? உத்திர கிரியை - நீத்தார் நினைவு நாளாகப் புது உருவெடுக்கவில்லையா?

(17) தமிழ்நாட்டுக் கோயில்களில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லையே ஏன் என்று கேட்டு, தமிழ் வழிபாட்டு உரிமை மாநாடு நடத்தியது யார்? (சென்னையில் திராவிடர் கழகத்தால் 25.-12.-1980 அன்று நடத்தப்பட்டது.)
தமிழிலும் வழிபாடு என்று கோயில் களில் விளம்பரப் பலகை தொங்கியதை அகற்றியது தி.மு.க.ஆட்சியல்லவா?

(18) தமிழன் கட்டிய கோயில்களில் தமிழன் அர்ச்சகனாக முடியாதே - அதனை மாற்றி தாழ்த்தப்பட்டவர் உட்பட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை எனும் சட்டம் கொண்டுவரப்பாடுபட்டது யார்? தந்தைபெரியாரும் திராவிடர் கழகமும் தானே!

அதனை ஏற்று சட்டம் இயற்றியவர் திராவிடர் இயக்க ஆட்சியாளரான கலைஞர் அவர்கள்தானே?

(19) ஈழத் தமிழர் பிரச்சினையில் யாரும் கனவு காணாத காலத்திலேயே 1939 ஆம் ஆண்டிலேயே அக்கறை காட்டியது நீதிக் கட்சியல்லவா?

ஈரோடு பெரியார் மாளிகையில் 10.-8.-1939 அன்று நடைபெற்ற தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தின் நிரு வாகக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானம் நிறைவேற்றப்பட்டதே!

இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தி யதையும் அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வதையும் கமிட்டி கண்டிப்ப தாகவும், அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ்பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், ஊ,பு.அ. சவுந்தர பாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று அவர்களின் நிலை மையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது என்பதாக முதல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதே!

----------------------------(விடுதலை 11.-8.-1939 - பக்கம் 3)

1983 ஆம் ஆண்டில் ஈழத்தில் தமிழர்கள் மிகக் கொடூரமாய்த் தாக்கப்பட்ட நிலையில் கட்டிய துணிகளோடு தமிழ்நாடு வந்த மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கை யாருடையது?

உடனடியாக 14.-8.-1983 அன்று மாலை 5 மணிக்கு சென்னை பெரியார் திடலில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டியது திராவிடர் கழகம் அல்லவா? சென்னை அண்ணாநகரில் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத் துக் கட்சி முதல் எழுச்சிக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகமாயிற்றே. அலை அலையான நடவடிக்கைகள் - _ சொல்லிக்கொண்டே போக முடியுமே!

உச்சக் கட்டமாக மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டையே இரண்டு நாட்கள் நடத்தி குமரி நாடன் என்ற ஈழத் தமிழர் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றிடவில்லையா? ஒட்டு மொத்த உலகத் தமிழின மக்களின் உணர்ச்சி எரிமலையின் உக்கிரம் எத்தனை டிகிரி என்று அன்று காட்டப்படவில்லையா? ---------------------(மதுரை 17,18.-12.-1983).

இன்னும் எவ்வளவோ சொல்லலாம். டெசோ எவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. காலத்தின் அவசியம் கருதி மீண்டும் டெசோ அமைப்பு புதுப்பிக்கப் படுகிறது என்றால், பிரச்சினையின் மீது அக் கறையும், கவலையும் கொண்டவர்கள் வரவேற்பார்கள். கை முதல் பறி போகிறது என்பதால் கதறுவார்கள். அதற்கு நாம் என்ன செய்வது!

இதே ஈழப் பிரச்சினையில் இதே மருத்துவர் இராமதாசு எப்படி எல்லாம் கருத்து தெரிவித்தார்? அதை எல்லாம் அவிழ்த்துக் கொட்ட வேண்டுமா?

(20) கச்சத்தீவு மீட்பு மாநாட்டை இராமேசுவரத்தில் (25-.7-.1997) நடத்தியது திராவிடர் கழகம் அல்லவா? (ஜார்ஜ் பெர்னான்டஸ் போன்றவர்களும் கலந்து கொண்டனரே! பழ.நெடுமாறன் அறி வாரே!) அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் அவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளதே!

(21) வஞ்சிக்கப்படும் தமிழ் நாட்டுக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - இராமேசுவரம் முதல் திருத்தணி வரை என்று தொடர் கூட்டங்கள் நடத்தப்பட்டதை திரு.பழ.நெடுமாறன் அவர்கள் அறியமாட்டாரா?

(22) முக்கியமாக மக்கள் மத்தியில் மண்டிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெரும் பணியை ஒப்பரிய மானுடத் தொண்டினை ஓர் இயக்கமாக நடத்துவது உலகத்திலேயே திராவிடர் கழகம் மட்டுமே அல்லவா!

(23) ஜாதி ஒழிப்புக்காக எத்தனை எத்தனை மாநாடுகள் - போராட்டங்கள்! இந்திய அரசமைப்புச் சட்டம் வரை எரித்து ஆயிரக்கணக்கான கருஞ் சட்டைத் தோழர்கள் குடும்பம் குடும்பமாக வெஞ்சிறை ஏகினார்களே, -பலர் இன்னுயிரை ஈந்தனரே! இதன் பக்கத்தில் எந்த ஓர் அமைப்பாவது நிற்கமுடியுமா?

திராவிடர் இயக்கம் என்பதால் தமிழர்களின் உரிமையை விட்டுக் கொடுத்தோமா? தெட்சிணப் பிரதேசம் என்று நான்கு மாநிலங்கள் அடங்கிய ஆட்சி அமைப்பை உருவாக்க நினைத்த போது அதனை எதிர்த்து முறியடித் தவர் தந்தை பெரியார் ஆயிற்றே! சென்னையை ஆந்திராவுக்கு விட்டுக் கொடுத்தோமா?

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளாவிற்கும் காவிரி நீர்ப்பிரச் சினையில் கருநாடகாவுக்கும், திராவிடர் கழகமோ, தி.மு.க.வோ, ம.தி.மு.க.வோ விட்டுக் கொடுத்து விட்டது என்று கூறப் போகிறார்களா?

திராவிடர் என்பது இனப்பெயர்; - தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பவையெல்லாம் தமிழின் திரிபுகள் - சமஸ்கிருத ஊடுருவலால் தனித்தனி வடிவையும் ஒலியையும் பெற்றன என்பதை பரிதிமாற் கலைஞர் போன்ற பார்ப்பன ஆய்வாளர்களே ஏற்றுக் கொள்ளவில்லையா?

தனித்தனியாகப் பிரிந்திருந்தாலும் இனப்பெயர், குடும்பப் பெயர், மாறப் போவதில்லை. இதில் காணப்பட வேண்டிய உண்மை இதுதானே தவிர, இதில் திராவிடர் இயக்கத்தால் வீழ்ந்தோம் என்று சொல்லுவதற்கு என்ன இருக்கிறது? இது என்ன சொல் விளையாட்டு?

திராவிடர் இயக்கத்தின் சாதனை என்று சுருக்கமாக சொல்லப்பட்டுள்ள இந்தப் பட்டியலின் அருகே எந்தத் தமிழ் தேசியவாதியாவது, அமைப்பாவது நெருங்கி வந்து தங்களின் பங்களிப்பு என்று மார் தட்டிக் கொள்ள முடியுமா?

செயல்பாட்டில் ஒன்றுமே இல்லாமல் காற்றோடு சிலம்பம் விளையாடும் வெத்து வேட்டுப் பேச்சுக்களால் என்ன பயன்? வெறும் விமர்சனம் மட்டுமேதான் பிழைப்பா?

எந்த வேலையும் செய்யாமல், ஊரின் மரத்தடியில் காலையில் உட்கார ஆரம்பித்தவர்கள் பொழுது போகிற வரை வெட்டிப் பேச்சுப் பேசி, வீண் அக்கப்போர்களை அட்டகாசமாகப் பேசிக் கலையும் சோம்பேறிகளுக்கும் - திராவிடர் இயக்கம் பற்றி விமர்சனம் என்ற வெட்டிப் பேச்சுக் கச்சேரி நடத்தும் செயலற்ற பேர்வழிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது -_ கிடையவே கிடையாது.

தமிழ்ச் செம்மொழி


தமிழைச் செம்மொழியாக்க வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றியது யார்?

1918 மார்ச் 30, 31 நாட்களில் தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லா தார் மாநாட்டில் இத்தீர்மானத்தை முன்மொழிந்தவர் ஜே.பி.நல்லுசாமி பிள்ளை. வழி மொழிந்தவர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் பி.ஏ.,பி.எல்., அவர்கள். எஸ்.பி.ஜி.கல்லூரி, திருச் சிராப்பள்ளி. ஆதரித்தவர் திருமதி அலர்மேலு மங்கைத் தாயாரவர்கள், சென்னை. இதனைத் தம் ஆட்சிக் காலத்தில் சட்டப்படி நிறைவேற்றியவர் திராவிடர் ஆட்சிக்காரர் கலைஞர் அவர்கள்தானே!

தமிழ் ஈழம்: மருத்துவரின் நிலைப்பாடு என்ன?

இன்றைக்குத் தமிழ் ஈழம் விடுதலை புலிகள் பிரபாகரன் பற்றியெல்லாம் வான்முட்டப் பேசும் மருத்துவர் ச. இராமதாசு ஒரு கட்டத்தில் கொண்டிருந்த கருத்து என்ன?

பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சி (15.7.1989) தலையங்கம் என்ன கூறியது?

ஈழ விடுதலையை அடகு வைத்துள்ள விடுதலைப் புலிகள் என்று எழுதியதே! உங்கள் தலைமையைத் (மாவீரன் பிரபாகரனே) தகர்த்தெறிந்து புதிய போரட்டப் பாதைக்கு முன் வாருங்கள் என்று தலையங்கமே தீட்டவில்லையா?

பா.ம.க.வின் அதிகாரப்பூர்வ ஏடான தினப்புரட்சியின் (29.6.1989) நாளிட்ட தலையங்கம் என்ன தெரியுமா?

தமிழகத்தில் மத்திய போலீஸ் மற்றும் புலனாய்வுத் துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு இருப்பதால் விடுதலைப் புலி தலைவர்களான கிட்டு, யோகி, ஆகியோர் கருணாநிதியின் பாராளுமன்ற செயலாளர் எல். கணேசன் வீட்டில் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது

இது விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்தது ஆகாதா? அதே நேரத்தில் விடுதலைப்புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தது தி.மு.க. என்பதும் விளங்கவில்லையா?

ஈழத் தமிழர் பிரச்சினைக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்த ஒரு கட்சியை, அதன் தலைவர் கலைஞர் அவர்களை விடுதலைப்புலிகளைக் காட்டிக் கொடுத்த கட்சியின் தலைவர் ஏளனம் செய்யலாமா? ஈழத் தமிழர் பிரச்சினையில் மருத்துவருக்கு ஓரளவு தெளிவு வந்ததே திராவிடர் இயக்கத்தால் தானே!
திரும்பிப் பாருங்கள் மருத்துவர் அவர்களே!

தந்தை பெரியார் அவர்களுடைய எண்ணங்களை துணிந்து நாங்கள் பட்டி தொட்டி எங்கும் பறைசாற்றி வருகின்றோம். பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை வன்னியர் சங்கத்தைப் பொறுத்தவரை தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை முழுதும் ஏற்றுக் கொள்கிறோம்.

அந்த வகையில்தான் எந்த நிகழ்ச்சி, எந்தப் போராட்டமாக இருந்தாலும் தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் 17 அன்று வைத்து கொண்டு வருகின்றோம். அந்த வகையிலே தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கையை இன்னும் சிறப்பாக மக்கள் மத்தியிலே சொல்ல வேண்டிய காலம் இது

_-இப்படிப் பேசியவர் வேறு யாருமல்லர் _ பா.ம.க. _ மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் சாட்சாத் திரு. ச. இராமதாசு அவர்கள்தான் வடலூரில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவில் (21.9.1991) தான் இவ்வாறு பேசினார். (விடுதலை 26.9.1991)

பெரியாரின் கொள்கைகளின் ஒன்று இரண்டு அல்ல; முழுவதையும் ஏற்றுக் கொள்கிறார்களாம்.

அப்படி சொன்ன மருத்துவர் - மேடையில்தான் உட்கார்ந்து கொண்டு அரைவேக்காடுகளையும் கத்துக் குட்டிகளையும் விட்டுத் தந்தை பெரியார் அவர்களைக் கொச்சைப்படுத்திப் பேச வைத்து ரசிக்கிறார் என்றால் இதன் நிலை என்ன? தந்தை பெரியார் அவர்களின் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களின் யோக்கியதை இதுதானா?

தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை இன்னும் சிறப்பாக மக்கள் மத்தியில் சொல்ல வேண்டிய காலம் இது என்று அடித்துச் சொன்னவர் _ தந்தை பெரியார் அவர்களின் கொள்கையை மக்கள் மத்தியில் வேகமாகப் பரப்புவதற்குப் பதிலாக தந்தை பெரியார் அவர்களையும், அவர்களின் திராவிடர் இயக்கக் கொள்கைகளையும் திசை திருப்பி, தவறான அணுகு முறையோடு, தலைகீழாகப் புரட்டி சொல்ல ஆசைப்படலாமா?

பெரியாரைத் தவறாக விமர்சிப்பதால் பலனடையப் போகிறவர்கள் யார்? இதனால் எதைச் சாதிக்கத் துடிக்கிறீர்கள்?

வரலாற்றுக் கண்ணோட்டத்தில் புத்தர் முதல் தம்மை எதிர்த்த தலைவர்களையும் அமைப்புகளையும் ஏதோ ஒரு வகையால் அழித்து முடித்ததே ஆரியம் -_ தந்தை பெரியார் அவர்களின் சகாப்தத்தில்தானே அதன் மூல வேர் அசைக்கப்பட்டது.

கிடைத்தற்கரிய தலைவரைப் பெற்ற நாம் _ அவர்தம் கொள்கைகளைக் கைவரப் பெற்ற நாம் அதனைக் கெட்டியாகப் பற்றி கொண்டு மேலேறுவதற்குப் பதிலாக பெரியாரை விமர்சிக்கிறேன் என்று கிளம்புவது நுனிக் கொம்பேறினார் கதைதானே!

பார்ப்பனர்கள் எதைச் சொல்லி விமர்சிக்கிறார்களோ; அதையே மருத்துவர் இராமதாசு போன்றவர்கள் பழ. நெடுமாறன் போன்றவர்கள் விமர்சிப்பது எதிரிகளின் கோட்டைக்குக் காவல் காப்பது அல்லவா!

படையே இல்லாது சென்ற ராமன் இராவணனை வென்றது எப்படி? அவனுக்குக் கிடைத்த படைகள் அனுமார், சுக்ரீவன், படைகள்தானே பெரியார் சகாப்தத்திலும் இந்த நிலையா?

தம்மைத் தேடிவந்த பதவிகளை செருப்புக் காலால் உதைத்து எறிந்து தமிழினத்தின் மான மீட்பராக, அறிவுச் செல்வத்தைத் தாயினும் பரிந்து ஊட்டி வளர்ப்பவராக, மானமும், அறிவும் மனிதர்க்கு அழகு என்ற பால படத்தைப் பயிற்றுவித்தவராக 95 வயதிலும் மூத்திரப் பாட்டிலும் கையுமாக அலைந்து திரிந்த ஒரு தலைவரையே நாம் அடையாளம் காணத் தவறினால் சூத்திரர்களாக பஞ்சமர்களாக ஏதோ வாழ்ந்து மடிய வேண்டியதுதான்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

-------------கவிஞர் கலி. பூங்குன்றன் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம் அவர்கள் 30-6-2012 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை