Search This Blog

6.9.22

பார்ப்பனீயமும், முதலாளித்துவமும்!

 

பார்ப்பனீயமும், முதலாளித்துவமும்!


 

நாம் நம் எதிரிகள் கொண்ட அளவுக்கு கல்வி அற்றவர்களாக இருக்கிறோம். நம் இழிஜாதி, கீழானஜாதி என்று நம் எதிரிகளால் கட்டுப்பாடான ஏற்பாடு செய்து இழிவாய் நடத்தப்படுகிறவர்களாய் இருக்கிறோம்.

 

கல்வி அறிவில்லாமல், சமுதாய சுயமரியாதை இல்லாமல் அடக்கி அழுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஒரு சமுதாயம் கீழான நிலையில் இருப்பது இயற்கையேயாகும். நம்மில் பலர் தனித்தனியே ஏதேதோ மனக்கோட்டைக் கட்டவும், செல்வம் தேடவும், மேன்மை அடையவும் முயற்சிக்கிறோமே தவிர, நாம் யாவரும் நாம் எந்த நிலையில் இருந்தாலும் இழி மக்களாய்க் கருதப்படுவது பற்றியும், நடத்தப்படுவது பற்றியும் கவலைப்படுவது இல்லை. இதில் உள்ள கவனத்தையும் முயற்சியையும் திருப்பவும் நமக்குண்டான பங்கும், உரிமையும், வாழ்வும் பெறவுமே பெரிதும் திராவிடர் கழகம் தொண்டாற்றுகிறது. இதை நீங்கள் நன்றாய் அறியவேண்டும்.

 

இனியும் நாம் பிரிந்து இருப்பது நமக்குக் கேட்டையே உண்டாக்கும். நம்மில் அரசியல், மதம் என்பதன் காரணமாக நாம் பிரிந்தும், வேற்றுமை உணர்ச்சி கொண்டும், ஒருவரோடொருவர் போராடிக் கொண்டும், அடித்துக் கொண்டும் இருப்பது நம் இனத்திற்கே மிக மிக இழிவாகும். எதிரிகளின் சூழ்ச்சியாலல்லாமல் மானங்கெட்ட சுயநல சின்னபுத்தியாலல்லாமல் நமக்குள் பிளவுக்கும், போராட்டத்திற்கும் காரணமென்ன?

 

பார்ப்பனரைப் பாருங்கள்; அவர்களுக்குள் இப்படிப்பட்ட போராட்டம் இருக்கின்றதா? ஒரு பார்ப்பனனை மற்றொரு பார்ப்பனன் அடிக்கிறானா? தொல்லை கொடுக்கிறானா? பார்ப்பனன் தனக்கென்று தனித் தனியாக என்று எவ்வளவு சுயநலமாக இருந்தாலும் அந்தச் சுயநலம் அவனது வகுப்பு நலனுக்கே பயன்படுத்தப்படுகின்றது. நம்மவர்கள் பொதுநல வேஷம் போட்டு அடைந்த பலனைத் தம் சுயநலனுக்கே பயன்படுகின்றது. நம்மவர்கள் பொதுநலனுக்குக் கேடு செய்து, நம் பொதுநல ஸ்தாபனத்துக்குத் துரோகம் செய்து வாழ நினைக்கிறார்கள். இதுவே காரணம் நம் நிலை கெட்டதற்கு என்பேன்.

 

சுயமரியாதை இருப்பதற்கில்லாத சமுதாயமாக நம் எதிரிகள் நம்மை ஆக்கிவிட்டதால், நமக்கு இன உணர்ச்சி வருவதற்கில்லாமல் சமுதாய இழிவைப்பற்றி நினைப்பதற்கில்லாமலும் இருந்து வருகிறோம். இனி இந்தப்படி இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்கிறேன். இது மிகவும் நெருக்கடியான சமயமாகும். இந்தச் சமயத்தில் நாம் ஒன்று சேரவில்லையானால், நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளவில்லையானால் நாம் இனியும் கீழான நிலைமைக்கு ஆளாக்கப்பட்டு விடுவோம்.

 

முஸ்லீம்களை எல்லாம் கொன்று ஒரு பூண்டு கூட திராவிட நாட்டில் இல்லாமல் செய்து விடுவதாகவே வைத்துக் கொள், செய்துவிட்டதாகவே முடிவு செய்து கொள்! பிறகு என்ன? பிறகு என்னவாகும்? சிந்தித்து பார்!

 

நீயும், நானும், காமராசரும், முத்துரங்கமும், பக்தவத்சலமும், பண்டார சன்னதிகளும், ராஜா சர்ரும், மகாராஜா சர்ரும், சர். ராமசாமி முதலியாரும், சர். சண்முகமும், கல்யாண சுந்தரமும் சூத்திரர்கள் தானே? இந்துலா சூத்திரர்கள் தானே? ஆகம சூத்திரர்கள் தானே?

 

தோழர்கள் அம்பேத்கர், சிவஷண்முகம், முனிசாமிபிள்ளை, கூர்மையா, சிவராஜ் முதலியோர் யாவரும் பறையர், சக்கிலிகள், பஞ்சமர்கள், கடை சாதி மக்கள்தானே என்று கேட்கிறேன். இவை மாற்றப்படாத எந்த சுயராஜ்யமோ, எந்த கலவரமோ, குழப்பமோ, கொலையோ ஏன்? எதற்காக? பார்ப்பனர்களைப் பிராமணனாக்கவா? பிராமணனை பூதேவராக்கவா? நமக்குப் புத்தி வேண்டாமா? மானம் வேண்டாமா? நாம் நிஜமாகவே இழிவு மக்களா? பார்ப்பனர் சொல்கிறபடி கேட்டுக் கொண்டு ஆடுவதற்கும் நம்மவர்களையே கண்ணைக் குத்தி, காலைவெட்டி, நெருப்புக்கொளுத்தி நாசமாக்குவதற்குமா கலவரம், தேசீயம், சுயராஜ்யம் என்று கேட்கிறேன்?

 

தோழர்களே! நமக்குச் சுயராஜ்யம் வந்த பிறகு தான் தோழர் அவினாசிலிங்கம் செட்டியார் நமக்கு (திராவிடனுக்கு - சூத்திரனுக்கு) தகுதியும் திறமையும் இல்லை என்று சொல்லி விட்டால், இனி முழு சுயராஜ்யத்தில் பார்ப்பனன் என்னதான் சொல்ல மாட்டான்? இன்று முஸ்லிம்கள் கசாப்பாகுவதை மகிழ்ச்சியோடு தேசியமாக நடத்துகிறான். நாளைத் திராவிடர்களைத் திராவிடர்கள் கசாப்பு ஆக்குவதை "அக்டோபர் தியாகம்" என்று சொல்லப் போகிறான்! இது உறுதியேயாகும் என்பேன்.

 

          ------------------------- 17.11.1946-ல் பீபிள்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெரியார் .வெ.ரா. சொற்பொழிவு. 'விடுதலை', 23.11.1946

0 comments: