Search This Blog

5.9.22

நமது முதல் கொள்கை ஜாதி ஒழிப்பே!

 

நமது முதல் கொள்கை சாதி ஒழிப்பே!

 


நாங்கள் அரசியல்காரர்கள் அல்லர். எங்கள் தொண்டு மக்கள் சமூதாயத்தில் இருந்து வரும் குறைகளையும், மடமைகளையும் - எடுத்துக் கூறி இவற்றைப் போக்க பாடுபடுவது தான் ஆகும்.

 இது பெரும்பான்மையான மக்களுடைய எண்ணத்துக்கு, நம்பிக்கைக்கு மாறானதாகவும், சங்கடத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கலாம்.

 நமது சமூதாயத்தைப் பிடித்துள்ள நீண்ட நாள் நோயானது மிகவும் கஷ்டமான, கொடுமையான நோயானது. ஆகையால் நாங்கள் புண்ணைக் கத்தி கொண்டு அறுத்து ரண சிகிச்சை செய்யக் கூடிய வைத்தியர்கள் போல் ஆவோம். நோய் வாய்ப்பட்டு உள்ள மக்களுக்கு ஆபரேஷன் முறையானது கஷ்டமாகத் தோன்றினாலும் சிகிச்சைப் செய்பவர் கத்தி கொண்டு அறுப்பது தான் கடமையாகும். அதுபோலத் தான் நாங்கள் மக்கள் மனம் புண்பட்டாலும் எங்கள் தொண்டைத் தொடர்ந்து செய்கின்றோம்.

 

திராவிடர் கழகம் என்பது ஓட்டு வாங்குவதற்கோ, பதவி பெறுவதற்கோ, பொறுக்கித் தின்பதற்கோ - கட்சி வைத்திருப்பவர்கள் அல்லர்! அவர் அவர் வீட்டுச் சோற்றைத் தின்று கொண்டு கைக் காசு செலவு செய்துக் கொண்டு பாடுபடுபவர்கள்.

 

எங்கள் முதலாவது கொள்கை சாதி ஒழிப்பாகும். இந்தச் சாதி ஒழிப்புக்கு காங்கிரசில் இடம் இல்லாத காரணத்தினால் தான் நான் காங்கிரசில் இருந்து வெளிவந்தேன். காங்கிரசிலே இராஜாஜிக்குத் தலைவனாக இருந்தவன்- "நம் தலைவர் நாயக்கர்" என்று இராஜாஜி போன்ற பார்ப்பனர்களாளேயே தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டவன் தான். காங்கிரசின் போக்கைக் கண்டு காங்கிரசில் இருந்து விலகி 37- ஆண்டுகளாகக் காங்கிரஸ் ஒழிக! பார்ப்பான் ஒழிக!கடவுள் ஒழிக! மதம் ஒழிக! என்று கூறிப் பாடுபட்டு வந்துக் கொண்டு இருக்கின்றேன்.

 

எங்களுடைய பிரச்சாரம் வீண் போய்விடவும் இல்லையே! காங்கிரசை ஒழிக்க ழுடியாவிட்டாலும் காங்கிரசில் உள்ள பார்ப்பனர்களை வெளியேற்றும்படியாகவும் காங்கிரசே! தமிழர்களுடைய கைக்கு வரும்படியானதுமான நிலைமை இன்று ஏற்பட்டு உள்ளதே!

 

இந்த நாட்டில் கடவுள், மதம், சாஸ்திரம், பார்ப்பான் இவற்றிற்கு இருந்து வந்த மரியாதை எல்லாம் பெரும் பகுதி இன்று குறைந்து இருக்கின்றதைக் காண்கின்றோமே.

 

ஆரம்பக் காலத்தில் எங்கள் கூட்டமே நடக்க ஒட்டாமல் கல் எறிந்து கலாட்டா செய்த இந்தக் காரைக்கால் பகுதியில் அன்றைக்குப் பேசியதை விட மிகமிகத் தீவிரமான கருத்துக்களை எடுத்துச் சொல்லுப்படியான இன்றைக்கு இப்படி பதினாயிரக்கணக்கான மக்கள் கூடி மாலை போட்டும் ஏராளமாகப் பணம் கொடுத்து வரவேற்கவும், மணிக்கணக்காக அமர்ந்து பேச்சைக் கேட்கும்படியான நிலைமையும்- இன்று ஏற்பட்டு இருக்கின்றது.

 

நமது பிரச்சாரத்தின் காரணமாக, தொண்டின் காரணமாக இன்றைக்குப் பார்ப்பான் கையில் இருந்த காங்கிரஸ் தமிழர்கள் கைக்கு வந்துவிட்டது. ஆட்சியில் ஒரு தமிழர் முதல் அமைச்சராகவும் அமருப்படியானவுமான நிலைமை ஏற்பட்டு இருக்கின்றது.

 

இந்த ஆட்சியானது தமிழர்களின் நீண்ட காலக் குறைப்பாடான கல்வி, உத்தியோகம், பதவி இவற்றின் இல்லாமையைப் போக்க முன்வந்து இருக்கின்றது. இதுவரை ஏகபோகமாக ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் இதைக் கண்டு தங்கள் ஆதிக்கம் குறைகின்றதே என்று ஆத்திரப்படுகின்றனர்.

 

இப்படிப்பட்ட ஆத்திரத்தின் எதிரொலிதான் சுதந்திராக் கட்சி என்பது!

 

            ----------------------------- 09.04.1963- அன்று காரைக்கால் அருகில் உள்ள நிரவியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய பேருரை."விடுதலை", 17.04.1963

0 comments: