Search This Blog

16.8.15

சிந்தனை செய்து ஈன நிலையைத் தவிர்த்துக்கொள்!-பெரியார்

சிந்தனை செய்து ஈன நிலையைத் தவிர்த்துக்கொள்!


ஒன்று சொல்லவிரும்புகிறேன். நாங்கள் இங்கே எந்தக் கட்சியையும் திட்டவோ, குறை கூறவோ வரவில்லை. அது எங்களுடைய வேலையும் இல்லை. எங்களுக்குக் கருத்துக்களை எடுத்துச் சொல்லுகின்ற போது ஒவ்வொரு கட்சியினுடைய யோக்கியதையையும் கூற வேண்டியிருக்கிறது. நாங்கள் கட்சியின் யோக்கியதையையும் கூறுகிறோம் கண்டிக்கிறோம். குறை கூறுகிறோம் என்றால் நம்முடைய மூடத்தனத்தை, காட்டுமிராண்டித்தனத்தை எடுத்துச் சொல்லி நமக்குக் சுரணை உண்டாக்க வந்துள்ளோமே தவிர, யாரையும் வைவதுக்காக அல்ல. நம்முடைய யோக்கியதைக்குப் பிறரை வைவது சரியாகாது. நாம் உலகத்தில் மிகவும் காட்டுமிராண்டிகளாக இருக்கிறோம். பணம் - காசு - பட்டம் - பதவி முதலியன கிடைத்தால் போதும் என்ற நினைப்புதான் 100-க்கு 97-பேராகிய நாம் ஏன் இந்த நிலையில் இருக்கிறோம் என்று சிந்திப்பதில்லை.


கூத்தாடிப் பணம் சம்பாதிப்பதும், ஓட்டுப் பெற்று பதவிக்குச் செல்வதும், தன் சுயநலத்திற்காக மக்களை மடையர்களாக ஆக்குவதே ஆகும். ஆபாச பத்திரிகை நடத்தி, அதன் மூலம் காசு சம்பாதிப்பதும் சுயநலத்துக்காகவேதான். தனக்கும் தன் பெண்டு பிள்ளைகட்கும் இருக்கும் இழிவைப் பற்றிச் சிந்திப்பதில்லை. இந்த 1959-லேயும் நாம் சூத்திரர்களாக, வைப்பாட்டி மக்களாக, பஞ்சமர்களாக, பார்ப்பானுக்கு ஏன் அடிமையான இருக்க வேண்டும்?


சாஸ்திரம் - சட்டம் - புராணம் - கடவுள் சொன்னார் - செய்தார் என்று எழுதி வைத்திருக்கிறான். நாமும் அதனை நம்பி அவனைச் (பார்ப்பானை) "சாமி" என்று கூப்பிடுவதா? நாம் கீழ்சாதியில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் மட்டும் தான் தாழ்ந்தவர்கள் என்ற நினைப்பு தவறு. தாழ்ந்தவன் என்றால் யார்? மந்திரி, ஜட்ஜூ, சட்டசபை மெம்பர், பார்லிமெண்ட் மெம்பர் அவன் யாராக இருந்தாலும் பார்ப்பானைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சூத்திரர்கள்தான். தாழ்ந்தவர்கள்தான். "அவனைச் (பார்ப்பானை) சாமி என்று கூப்பிடுவதால் நாம் ஒன்றும் கீழ் ஜாதி இல்லை. நம்மை விடக் கீழே பல ஜாதிகள் - சக்கிலி - பறையன் இப்படி இருக்கின்றார்கள். ஆகையால் நாம் பார்ப்பானைச் சாமி என்பதால் அவமானம் ஒன்றும் இல்லை" என்று சமாதானம் கூறுபவர்கள் மனத் திருப்திதான் அடையலாம்.

எந்தக் கட்சியானாலும் ஓட்டுப் பெற்றுப் பதவியை அடைந்து பணம் சம்பாதிப்பதில்தான் இருக்கிறார்கள். பொறுக்கித் தின்பதும் மோசடி செய்வதும் தான் இவர்களது வேலை. இதற்கு யாராவது இருக்கிறானா? அவனுடன் சேர்ந்துக் கொண்டு அவன் அடிக்கும் கொள்ளையில் தானும் பங்கு போடத்தான் இருக்கிறானே ஒழிய அவனை ஒழிக்க வேண்டும் என்று ஒருவரும் கிடையாது.

காங்கிரஸ், கண்ணீர்துளி, சோஷலிஸ்ட், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் நோக்கம் என்ன? இவர்களின் வேலை என்ன? இலட்சியம் என்ன? "நீ எனக்கு ஓட்டுப்போடு! நான் போய் அதை கிழித்துவிடுகிறேன், முறுக்கிவிடுகிறேன்" என்று வருஷம் முழுவதும் சொல்லிக் கொண்டு ஓட்டு (தேர்தல்) நடக்கும் போது அறுவடைக்கு வந்து விடுவான். ஏன் நீ கீழ் ஜாதி? மானமில்லாமல் சூத்திரனாக, பஞ்சமானாக 4-வது ஜாதியாக இருந்து கொண்டு மதத்தையும், புராணத்தையும் நம்பிக்கொண்டு ஏன் நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொண்டிருக்க வேண்டும்? என்று எவனாவது கேட்பானா? கேட்கமாட்டான். அவன் கொள்ளை அடிக்கிறான். எனக்கு ஒட்டு போடு என்றுதான் கூறுவான். நீ போய் என்ன பண்ணுவாய்? என்றால் நானும் அதில் கொள்ளை அடிக்கிறேன் என்று கூறமாட்டான். ஆனாலும் அர்த்தம் அதுதான். நாங்கள் ஏன் சூத்திரர்கள்? என்ன அபசாரத்தனம் செய்கிறோமா? உழைக்காது இருக்கிறோமா? பாடுபடும் நாங்கள் ஏன் தற்குறியாகயிருக்க வேண்டும்? கீழ்சாதியாக இருக்க வேண்டும்? உழைக்காத பார்ப்பான் ஏன் உயர்ந்தவன்? நமக்கு ஏன் இந்த இழிநிலை? என்று எவனாவது கேட்கிறானா எங்களைத் தவிர?

கருங்கல்லினால் நீங்கள் செதுக்கி வைத்தது, அதில் கடவுள் ஏது? குழவிக் கல்லைப் போய்க் கும்பிடுகிறாயே! 5, 6-வேளை சோறு போட்டு படைக்கின்றாயே! சாமியா தின்கிறது? யார் கேட்கிறார்கள்? உண்மையான இழிவுகளைக் குறைகளை எடுத்துக் கூறுகிறோம். நீங்கள் மட்டுமல்ல நாங்களும் சூத்திரர்கள்தான். கம்யூனிஸ்ட்டு, கண்ணீர்த்துளிகள் எல்லோருமே சூத்தரின் - வைப்பாட்டி மக்கள் தான். காங்கிரஸ் மந்திரிகளுங்கூட, வெங்கட்ராமனைத் தவிர மற்றவர்கள் எல்லோரும் சூத்திரர்கள் தான். காமராசர் நாடார் - சொல்லப் போனால் மரமேறுபவர் ஜாதி! சுப்பிரமணியம் கவுண்டர்; கக்கன் ஆதிதிராவிடர்; இவர்களும் சூத்திரர்கள்தானே? வேறு பொதுமக்களுக்காக அவர்களின் நன்மைக்காகப் பாடுபடுகிறேன் என்று நம்மைக் கூறிக்கொள்பவர்கள் எல்லோரும் மேடையில் வந்து மக்களுக்காக விழிப்புணர்ச்சி உண்டு பண்ணி, நன்மை பயக்கக்கூடிய விஷயங்கள் உண்மையிலேயே வேண்டிய சங்கதிகளை எதுவோ அதைப் பேசமாட்டார்கள். இங்கு கூடியிருப்பது யார்? எப்படி எவ்விதமாகப் பேசினால் அதிக ஓட்டு வரும் என்று கணக்குப் போட்டு அதற்கேற்றாற் போல் தான் பேசுவானே ஒழிய, உண்மையான - தேவையான சங்கதிகளைப் பேசமாட்டான்.

பைத்தியக்காரத்தனமாக நெற்றியில் சாம்பலை பூசிக் கொள்கிறாயே! - குழவிக்கல்லை கும்பிடுகிறாயே! அது சாமியா என்று நான் கேட்டேன். மற்றவன் கேட்க மாட்டான் ஏன்? ஒட்டு கேட்கும்போது, சாம்பல் ஏன் அடித்தாய் என்று கேட்டாயே; இப்போது ஏன் ஓட்டு கேட்கிறாய் என்று கேட்பானே! அதனால்தான் கேட்கமாட்டான். நாங்கள் என்ன ஆகாயத்திலேயிருந்தா வந்தோம்? அல்லது அவதாரமா? உங்களைப்போல் நாங்களும் மனிதர்கள் தான் உங்களுக்கு இருப்பதைப் போன்ற அறிவுதான் எங்களுக்கும். ஆனால் தைரியம் சிறிது அதிகமாக உண்டு அவ்வளவுதான். எங்களுக்கு ஓட்டுத் தேவையில்லை. இருக்கிற வண்டவாளங்களை எல்லாம், புரட்டுகளையெல்லாம் துணிவோடு எடுத்துக் கூறுவேன். பயப்படமாட்டேன்.

எங்கள் வீட்டு சோற்றைத் தின்று உழைக்கிறோம், ஏன் மறைத்துப் பேச வேண்டும்? மறைத்துப் பேசுவதால் பயன் என்ன? சாமி இல்லாதவன்,ஜாதி இல்லாதவன் நாத்திகள் ஆகிவிடு என்று உங்களை நாங்கள் கூறவில்லை புத்தியோடு சிந்தித்துப்பார்! "உன் புத்தி - அறிவு என்ன சொல்லுகிறதோ அதன்படி நட," என்கிறோம். ஏன் சாணியையும், மூத்திரத்தையும் கலந்து நாம் குடிக்க வேண்டும் பஞ்ச கவ்வியம் என்ற பெயரால்? கழுதையும், நாயும் நக்கும் குழவிக்கல்லை ஏன் சாமி என்று கும்பிட வேண்டும். மாட்டைக் - கழுதையைக் கடவுள் என்று ஏன் வணங்க வேண்டும்? என்று தான் கூறுகிறோம்.

இவன் வந்தான்; சாமி இல்லை என்று பேசுகிறான் என்று எண்ணக் கூடாது சாமி இல்லை என்று உங்களிடம் கூறும் அளவுக்கு விளங்கிக் கொள்ள உங்களுக்கு அறிவு இல்லை. தகுதியில்லை - புத்தியில்லை. அது பெரிய அறிவாளியிடம் கூற வேண்டிய விஷயங்கள் ஆகும். கல் தடுக்கி விழுவதற்கும், கடவுளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிந்திக்க வேண்டும். அதுபோலவே அரசாங்கம், மற்றக் கட்சிகள் சட்டசபை, பார்லிமெண்ட் உறுப்பினர்கள், இவர்களால் ஏதாவது செய்ய முடியுமா? உங்கள் அறிவைக் கொண்டு. அறிவு என்ன சொல்கிறதோ அதன்படியே நடக்க வேண்டும் என்கிறேன் நான். அதை விட்டுவிட்டு என் பாட்டனார் புராணம் - மதம் - கடவுள் என்ன சொல்வார்கள்? எப்படி நடந்தார்கள்? அவை என்ன கூறுகிறதோ அதன்படிதான் நடப்பேன் என்று பார்த்து நடந்தால் என்ன அர்த்தம்?

---------------------------- 31.08.1959- அன்று கண்ணன் குடியில் திராவிடர் கழகத் துவக்க விழாவில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. ”விடுதலை”, 09.09.1959

0 comments: