Search This Blog

12.8.15

அறிவு பெற்றால் அடிமை விலங்கு முறியும்! - பெரியார்

அறிவு பெற்றால் அடிமை விலங்கு முறியும்!

இப்போது மணமக்கள் இந்த தீச்சட்டியினை 7-முறை சுற்றி வந்தார்கள். இப்படித் தீச்சட்டியைச் சுற்றுவது சட்டப்படித் திருமணம் செல்லுபடியாக வேண்டும் என்பதற்காகத் தான் ஆகும்.

சுயமரியாதைத் திருமணத்தில் சப்தபதி இல்லை. தீ வலம் வரவில்லை. ஆகவே, செல்லுபடியாகாது என்று கூறி கோர்ட்டில் தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள்.

அவர்களுடன் எதற்காக ரகளை என்று எண்ணித் தான் தீயைத் தானே சுற்ற வேண்டும். தீவலம் வருவது எந்த சாஸ்திர - புராணப்படியோ, இராமாயணப்படியோ அவற்றை எல்லாம் இந்த தீயில் போட்டுக் கொளுத்திக் கொண்டு சுற்றுவது என்று தான் இம்மாதிரி ஏற்பாடு செய்து உள்ளார்கள்.

சுயமரியாதைக்காரர்களாகிய எங்கள் கொள்கை, வருங்காலத்தில் கல்யாணமே கூடாது. கணவன் - மனைவி என்ற அடிமை வாழ்வு ஒழிய வேண்டும் என்பது தான்!

இன்றைக்குச் சொன்னால் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும்.

இப்படியே தாசி முறை, சட்டப்படிக் குற்றமாக ஆக்கப்படுவதற்கு முன்னதாக, தேவதாசி முறை என்பது ஈடுபட்டவர்களுக்கும் இழிவாகத் தோன்றவில்லை.

பிறகு தேவதாசி முறையானது ஒழிந்து விட்ட பிறகு, அந்த சமூகத்தினர்களே இன்றைக்குத் தேவதாசி என்று கூறினால் கோபப்படும்படியான சூழ்நிலை உருவாகிவிட்டது.

அதுபோலத்தான் பெண்கள் அறிவு உணர்ச்சி, மான உணர்ச்சி பெற்று விடுவார்களேயானால், புருஷன் - மனைவி என்ற அடிமை விலங்கைப் பூட்டிக் கொள்ள மாட்டார்கள்.

மனித சமுதாயத்தில் சரி பகுதியாக உள்ள பெண்களுக்கு இன்றைக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டு உள்ளது? எண்ணிக்கைக்குத் தக்கபடி, சரி பகுதி சட்டசபை, பார்லிமெண்ட்களில் ஸ்தானம் கொடுக்க வேண்டாமா? மந்திரிகள் என்றால் 4-பெண்களுக்குக் கொடுக்க வேண்டாமா?

எப்படித் தாழ்த்தப்பட்டவர்கள் 100-க்கு 16-என்றால் 16-ஸ்தானம் கொடுக்கப்படுகின்றதோ, அதுபோல பெண்கள் 100-க்கு 50-என்றால், 50- ஸ்தானம் கொடுக்க வேண்டாமா?

நண்பர் சாமி அவர்கள் சிக்கனமான முறையில் தமது மூத்த பெண்ணுக்கும் இப்படித்தான் பொது மேடையில் திருமணம் நடத்தி வைத்தார். அதன்படித்தான் இப்போதும் செய்கின்றார். மற்ற தோழர்களும் இம்முறையினையே பின்பற்றி நடத்த வேண்டும்.

-------------------------------- 19.12.1966- அன்று காரைக்குடியில் தமிழரசி - ஜெயராமன் திருமணத்தை நடத்தி வைத்து தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. 'விடுதலை', 28.12.1966

0 comments: