Search This Blog

4.7.15

பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்ட வரலாறு-முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன?


                                               முரளீஸ் கபே போராட்டத்தின் முகாந்திரம் என்ன?



பார்ப்பனர்களுக்கு இப்பொழுதெல்லாம் துளிர் விட்டுவிட்டதா? இடக்கு முடக்காக எல்லாம் பேச, எழுத ஆரம்பித்துவிட்டனர் - பொய் மூட்டைகளை அவிழ்த்துக் கொட்ட ஆரம்பித்துவிட்டனர்.


58 ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறிவிட ஆசைப்படுகிறார்கள்.

திருச்சியில் 18.4.1957 அன்று கூடிய திராவிடர் கழக மத்திய கமிட்டியில், ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் ஒரு கூறாக ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.


5.5.1957 முதல் பார்ப்பனர் உணவு விடுதிகளில் இடம்பெறும் பிராமணாள் என்ற எழுத்துகளை அழிப்பது என்பதுதான் அந்த அறிவிப்பு.

அதனைத் தொடர்ந்து மாநில ஆட்சியாளருக்கும், ஆளுநருக்கும் தந்தை பெரியார் கடிதம் ஒன்றை எழுதினார். அது விடுதலையிலும் வெளிவந்தது (27.4.1957).

"ஜாதிப் பிரிவு என்பது நம்நாட்டில் அனு பவப்பூர்வமாக பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்ற இரண்டு பிரிவுகளுக்குள் அடங்கிவிடு வதாக உதாரணத்துடன் குறிப்பிடப்பட்டு இருந்தது. சிலர் தங்களை க்ஷத்திரியர் என்றும், சிலர் வைசியர் என்றும் அழைத்துக் கொண் டாலும், பிராமணாள் இவர்களையும் சூத்திராள் என்றுதான் கருதுகிறார்கள்.

தெரிந்தோ தெரி யாமலோ பிராமணாள் விடுதி என்ற உணவுக் கடைகளை நடத்திட அரசு அனுமதி தந்து விடுகிறது. பார்ப்பனர் வீடு என்று அவர்கள் சொந்த வீட்டில் போட்டுக்கொள்ளட்டும்; அரசு அனுமதியோடு மற்றவர்களை இழிவுபடுத்தும் அடையாளமாகவும், பணம் சம்பாதிக்கவும் ஏன் பிராமணாள் என்ற வார்த்தை பயன்பட வேண்டும்? 25 ஆண்டுகளுக்கு முன்பே நான் சில நகர சபைத் தலைவர்களையும் சேர்த்துக் கொண்டு நகர சபை லைசென்ஸ் தர மறுத்தேன்.

(1917 இல் ஈரோடு நகர மன்றத் தலைவராக தந்தை பெரியார் இருந்தபோது, ஈரோட்டில் கொங்கப்பறைத் தெரு என்று இருந்ததை வள்ளுவர் தெரு என்று மாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது).

அரசு நகர சபை இதில் தலையிடக்கூடாது என்றது. பிறகு ரயில்வேயுடன் போராடி அங்கே யிருந்த பிராமணாள் ஓட்டல், பிராமணாள் சாப்பிடுமிடம் ஆகியவற்றை எடுக்கச் செய்தேன். எனவே, அருள்கூர்ந்து 5.5.1957-க்குள் அமலுக்கு வருமாறு ஓர் அவசர உத்தரவு பிறப்பித்துப் பிராமணாளை அகற்றிவிட்டால், நேரடி நட வடிக்கையாக ஒரு கிளர்ச்சி செய்ய அவசிய மிருக்காது என்பதைப் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று முறைப்படி அந்தக் கடிதத்தில் குறிப்பிட் டிருந்தார் தந்தை பெரியார். இதற்கான உரிய நியாயமான பதில் அரசு தரப்பிலிருந்தோ, ஆளுநர் தரப்பிலிருந்தோ பதில் வராத நிலையில், நாடெங்கும் பிராமணாள் போர்டு அழிப்புப் போராட்டத்திற்கு ஆணை பிறப்பித்தார் அறிவுலக ஆசான் அய்யா பெரியார்!

அனேகமாக, எல்லா இடங்களிலும் பிராமணாள் ஒழிந்தபோது, சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், முரளி பிராமணாள் கபே என்ற உணவு விடுதிக்கார பார்ப்பனர் மட்டும் பிராமணாள் பெயரை எடுக்கமாட்டேன் என்று அடம்பிடித்தார்.

தந்தை பெரியார் நினைத்திருந்தால், கழகத் தோழர்கள் நினைத்திருந்தால், அந்தப் போர்டை எடுக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்?

எந்தப் போராட்டத்தையும் வன்முறையில் நிறைவேற்றிக் கொள்ள விரும்பாதவர்தான் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார்.

அந்த உணவு விடுதியின் முன் நாள்தோறும் மாலை நேரத்தில் அமைதியான முறையில் மறியல் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்து, அறிவிக்கவும் செய்தார்.

அந்த உணவு விடுதிமுன் அறப்போராட்டத்தை தந்தை பெரியாரே தொடங்கியும் வைத்தார். நாள் தோறும் கழகத் தோழர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

தொடக்கத்தில் சிட்டி போலீஸ் ஆக்ட் 41 ஆவது பிரிவின்படி ரூ.50 அபராதம் என்றும், கட்டத் தவறினால் இரண்டு வாரம் சிறை  தண்டனையும் விதிக்கப்பட்டது. சில நாள்கள் கழித்து 71(11) என்ற இன்னொரு விதியைச் சுட்டிக்காட்டி, மூன்று வாரம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது - பிறகு 5 வாரம் என்றும் நீண்டது.

கருஞ்சட்டைத் தோழர்களா அபராதம் கட்டுவார்கள்? சிரித்த முகத்துடன் சிறைச் சாலை நோக்கிச் சென்றனர். அன்னை மணியம்மை யார், குத்தூசி குருசாமி, ஏ.பி.ஜனார்த்தனம் என்று தோழர்கள் சிறைச்சாலைக்குச் சென்ற வண்ணம் இருந்தனர்.

வெளியூர்களிலிருந்தெல்லாம் கழகத் தோழர்கள் திரள ஆரம்பித்தனர். 5.5.1957 இல் தொடங்கப்பட்ட மறியல் போராட்டம் 2.12.1957 அன்றோடு முடிவுற்றது - 1010 கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.


முரளி பிராமணாள் கபே உரிமையாளரான பி.கே.வெங்கடேசன் முதல் நாள் இரவு ஒரு கூடை மாம்பழத்துடன் சென்னை மீரான் சாகிபு தெருவில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் சரணடைந் தார். தன் தவறுக்கு மன்னிப்புக் கோரினார். பின்னர் முரளி பிராமணாள் கபே என்ற பெயர் முரளி  அய்டியல்  ஓட்டல் என்று பெயர் மாற்றம் செய்யப் பட்டது (22.3.1958).

தந்தை பெரியார் அவர்களின் பெருந்தன்மை - முரளீஸ் கபே ஓட்டல் முதலாளி நேரில் வந்து மன்னிப்புக் கோரிய செய்தியை விடுதலையில் வெளியிடவேண்டாம் என்று தடுத்துவிட்டார்.

ஒருவர் தன்னைத் தனிமையில் சந்தித்து, மன்னிப்புக் கோரிய நிலையில், அதனை வெளியில் பரப்புவது சம்பந்தப்பட்டவரை அவமதிப்பதாகும் என்று தந்தை பெரியார் கூறிவிட்டார்கள்!

உண்மை இவ்வாறு இருக்க, அந்த முரளீஸ் கபே உரிமையாளரின் மகன் என்று சொல்லிக்கொண்டு, வினாயகர் முரளி என்பவர் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஏட்டில் (26.6.2015) ஒரு கரடியை அவிழ்த்து விட்டுள்ளார்.

பிராமணர்களுக்கு எதிராக ஈவெராவின் பலவழிகளிலும் நடைபெற்ற போராட்டங்கள் ஒரு சார்பாகவே இருந்தன. 1950களின் இறுதியில் ஏராளமான பார்ப்பனர்கள் குறிவைக்கப்பட்டனர்.

தன்னுடைய தனிப்பட்ட அனுபவம்குறித்து கூறுகையில் உடல் ரீதியிலும், மனதளவிலும் பெரியாரின் தொண்டர்களால் பார்ப்பனர்கள் குடும்பத்தைக் குறிவைத்து தாக்கப்பட்டதற்கு சாட்சியாக இருக்கிறேன். 1950களின் இறுதியில்திருவல்லிக்கேணி பாரதி சாலையில் ஹோட்டல் முரளி கபே உரிமை யாளர்  என்னுடைய தந்தை  பி.கே.வெங்கடேசு வரன் திராவிடர் கழகத்துக்காரர்களால் அச் சுறுத்தப்பட்டார்.  உணவகத்தின் பெயர்ப்பலகை யில் பிராமணாள் என அமைக்கப்பட்டிருந்தது.

பிராமணாள் என்பதை நீக்க வேண்டும் என்று கூறியதற்கு அவர் மறுத்துவிட்டதுதான் காரணம். தொடர்ச்சியாக அவர் அதில் உறுதியாக இருந்ததால், ஈவெரா ஓராண்டுக்கும் மேலாக நாள்தோறும் தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தார்.

அப்போது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். ஹோட்டலுக்கு வருவோர்மீது தாக்கு தலை நடத்தினார்கள். அந்த ஹோட்டலுக்கு வருபவர்கள் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருந்தாலும், பணியாற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் பார்ப்பனர் அல்லாதவர்களாக இருந்தபோதிலும் தாக்கப்பட்டனர்.

அதேநேரத்தில் என்னுடைய தந்தையின் பார்ப்பனர் அல்லாத நண்பர்கள் அந்த இக் கட்டான நிலையில் உதவிவந்தனர். என்னுடைய தந்தை சட்டப்போராட்டத்தை நடத்திவந்தார். இந்தப் பிரச்சினைகுறித்த  தகவல் பிரபலமாக செய்தித்தாள்களில் இடம் பிடித்தது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

கடைசியாக காஞ்சி சங்கராச்சாரியின் தலையீட்டின்பேரில் கபே மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வந்தன. பெயர்ப்பலகையிலிருந்து பிராமின் என்கிற சொல்லும் அகற்றப்பட்டது. சுத்த சைவம் என்பதைக்குறிக்கவே அது பயன்படுத்தப்பட்டது. ஜாதியைக் குறிப்பிட்டு எதுவும் செய்வதற்காக இல்லை.
- வினாயகர் முரளி, திருவல்லிக்கேணி, சென்னை.


பரிதாபம்! அந்தப் போராட்டம் நடந்த ஆண்டுகூட இவருக்குத் தெரியவில்லை; 1950 ஆம் ஆண்டில் நடந்ததாக எழுதுகிறார். அது உண்மையிலேயே நடந்தது 1957 ஆம் ஆண்டில்தான். யாரோ தூண்டி விட்டு, அவசரத்திலும், ஆத்திரத்திலும் எழுதினால் இப்படித்தான்; 5.5.1957 இல் தொடங்கப்பட்டு 2.12.1957 இல் நிறைவுற்றது; அந்தப் போராட்டம் என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் வன்முறையால் சாதித்து இருக்க முடியும். அதற்கு அதிக நேரமும் தேவைப்படாது; தந்தை பெரியார் அவர்களை அறிந்தவர்களுக்கு ஓருண்மை உறுதியாகவே - தெளிவாகவே தெரியும்; அவர் வன்முறையை வெறுக்கக்கூடியவர். போலீஸ் காரர் அடித்தாலும் அய்யா! முகத்தைப் பார்க்காதே - நன்கு அடிபடும் வண்ணம் முதுகைக் குனிந்து காட்டு என்று சொன்ன சொக்கத் தங்கமாயிற்றே அவர் - அவரைப் பார்த்தா இப்படி அபாண்டமாக 58 ஆண்டு களுக்குப் பிறகு அழி பழி சுமத்த ஆசைப்படுவது?
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் என்றால்,  பார்ப்பனர்களுக்கு இப்பொழுதெல்லாம் நெரிகட்ட ஆரம்பித்துவிட்டது. இந்த நிலையில் எந்த அபாண் டத்தையாவது அவர்கள்மீது கொளுத்திப் போட வேண்டும் என்ற நெருக்கடி அவாள் வட்டாரத்துக்குள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இத்தகையவர்களைத் தேடிப்பிடித்து பின்னாலி ருந்து இயக்கக்கூடிய இந்துத்துவா அமைப்புகள் நாட்டில் இருப்பது தமிழ்நாட்டின் வெகுமக்களுக்கு மிக நன்றாகத் தெரியுமே!

முரளீஸ் கபே போராட்டத்தின்போது, ஆகஸ்ட் கிளர்ச்சி என்ற தலைப்பில் தந்தை பெரியார் வெளியிட்ட அறிக்கையைப் படித்துப் பார்த்தால், அந்த அறப்போராட்டத்தைத் தந்தை பெரியார் நடத்திக் காட்டிய பாங்கின் சிறப்பு விளங்கும்.

அய்யா இந்த ஓட்டல் பார்ப்பனரு டையது. இந்த ஜாதி நம் குடியை, வாழ்வைக் கெடுத்த ஜாதி, நம்மை ஏமாற்றி பாடுபடாமல், நமது உழைப்பைச் சுரண்டிக் கொழுத்திருப்பதோடு, நம்மைச் சூத்திரன், தாசி மகன், பறையன், சக்கிலி, சண்டாளன், கீழ்ஜாதி, இழிமகன் என்றெல்லாம், சட்டம், சாஸ்திரம், வேத, புராண இதிகாசங்களில் எழுதி வைத்துக் கொண்டு அந்தப் படியே நடத்தி வரு கின்றனர்.

இந்தப் பார்ப்பனர் ஓட்டலில் நாம் சென்று உணவருந்துவது இழிவு! இழிவு! மகா இழிவு! மானங்கெட்ட கீழ்த்தர இழிவு! அய்யா, அருள்கூர்ந்து அங்கு செல்லாதீர்கள் என்று கைகூப்பி, குனிந்து, கெஞ்சிக் கேட்டு திரும்பிப் போகச் செய்யவேண்டும்.
- ஈ.வெ.ரா.
விடுதலை, 23.7.1957


பொதுமக்கள் மத்தியில் எப்படி வேண்டுகோள் வைக்கவேண்டும் என்று இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கைகூப்பி, குனிந்து, கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டும் என்று அல்லவா வேண்டுகோள் விடுத் துள்ளார். இத்தகைய தலைவரைப்பற்றியா பழி போடுவது?

பழி போடுவதும், அபவாதம் பேசுவதும்தான் பார்ப்பனர்களுக்கே உரித்தான வயிற்றுப் பிழைப்புக் கலையாயிற்றே!

இந்தக் காலகட்டத்தில் மாநிலக் காவல்துறை அமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களிடம் செய்தி யாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் என்ன பதில் சொன்னார் தெரியுமா? பத்திரிகைகளில் வெளிவந்ததைப் போன்று யாரும் அவருடைய இயக்கத்தால் பாதிக்கப்படவில்லை என்றார்.

(9.12.1957 திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியது)


இந்த இடத்தில் முக்கியமாக குறிப்பிடவேண்டிய ஒரு தகவலும் உண்டு.
மறியலில் ஈடுபட்ட திராவிடர் கழகத் தோழர்கள் மீது ஒரு நாள் ஓட்டலின் மாடியிலிருந்து முரளீஸ் கபே பார்ப்பனர்கள் சுடுநீரை ஊற்றினார்கள் என்பது சாதாரணமா? அப்பொழுதுகூட கழகத் தோழர்கள் தந்தை பெரியார் அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள் என்ற முறையில் அமைதி காத்தனர்.

இயல்பாக அந்த நேரத்தில் எத்தகைய வன்முறைகள் வெடிக்க வாய்ப்புண்டு என்பதை ஒரே ஒரு நொடி எண்ணிப் பார்த்தால், கழகத் தோழர்களின் பண்பாட்டின் - கட்டுப்பாட்டின் மேன்மை எத்தகை யது என்பது விளங்காமற் போகாது.

மீண்டும் 1978 இல் சில இடங்களில் பிராமணாள் ஓட்டல் தலைதூக்கியபோது, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் போராட்ட அறிவிப் பினை வெளியிட்டார். அந்தநேரத்தில், ஓட்டல் சங்கத் தலைவராக இருந்த திரு.எம்.பி.புருசோத்தமன் அவர்கள் கழகத் தலைவருக்குக் கடிதமே எழுதினார். பிராமணாள் என்ற பெயர் நீக்கப்படும் - எல்லா உணவு விடுதிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட் டுள்ளது என்று எழுதினாரே, அந்த வரலாறு எல்லாம் வினாயகர் முரளிகளுக்குத் தெரியுமா?

கடைசியாக சிறீரங்கத்து கிருஷ்ணய்யர் என்பவர் நடத்தி வந்த ஓட்டலில் பிராமணாள் தலைகாட்டியது. கழகம் களத்தில் குதித்தது. அடம் பிடித்த கிருஷ் ணய்யர், சிறீரங்கத்தில் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் எழுச்சி - கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் மூண்டெழுந்த கிளர்ச்சி காரணமாக இரவோடு இரவாக மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்பட்டு விட்டாரே! (4.11.2012).

வன்முறையை அக்கிரகாரத்தின் பக்கம் ஏவ வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பியிருந்தால், காந்தியார், நாதுராம் கோட்சே என்ற பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்டபோது, அந்தச் சந்தர்ப்பத்தைத் தந்தை பெரியார் பயன்படுத்தியிருந்தால், ஒரு புல், பூண்டு மிஞ்சியிருக்குமா? அதேநேரத்தில், அன்றைய பம்பாயில் என்ன நடந்தது? பார்ப்பனர்கள் தாக்கப்படவில்லையா? பல வீடுகள் தாக்கப்பட வில்லையா?

நியாயமாக பார்ப்பனர்கள் தந்தை பெரியாருக்கும், திராவிடர் கழகத்துக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளவர்கள். கழகத்தின் பண்பாட்டைப் பலகீனமாக எடை போடவேண்டாம்!


                      -----------------கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் ------ ”விடுதலை”1-7-2015

3 comments:

தமிழ் ஓவியா said...

சிங்கப்பூர் புதிய அருங்காட்சியகத்தில் தந்தை பெரியார்



சிங்கப்பூர் டென்லப் சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட இந்திய மரபுடமை அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்டது. சிங்கப்பூர் பொன்விழா ஆண்டையொட்டி திறக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள், இந்தியர்கள் வருகை, வேலை, போராட்டங் களில் பங்கெடுப்பு, அழகாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. பத்து நிமிடங்கள் ஆவணங் களுடன் திரைப்படம் தமிழ் ஆங்கிலம் மொழிப்பெயர்ப்புடன் பார்த்து மகிழலாம்.

நிழற்படம் எடுத்துக் கொள்ளலாம். சிங்கப்பூரர், நிரந்தர குடியுரிமை பெற்றோர்க்கு அனுமதி இலவசம்!! தந்தை பெரியார் சிங்கப்பூரில் பேசியது ,அனைத்தும் ஆவணமாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. சுபாஸ் சந்திரபோஸ், நேரு, காந்தி உருவச் சிலைகள் இடம் பெற்றுள்ளன.

அனைவரும் குடுப்பத்துடன் சென்று கட்டாயம் பார்க்க வேண்டிய அருமை யான வரலாற்று ஆவண மய்யம்!! சிங்கப்பூரின் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்களிப்பு, தமிழர்களின் பங்களிப்பு முழுமையாய் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் சென்று வருக!!

நம்மை உலக அளவில் பெருமைப்படுத்திய சிங்கப்பூர் மாண்பமை பிரதமர் லீ குவான் யூ அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் நாளும் தெரிவிப்போம்!!

Periyar's Singapore visit in Indian Heritage
Centre in Campbell Lane முகநூலில்

தமிழ் ஓவியா said...

இதோ ஒரு காட்டுமிராண்டித்தனம் மீன்களைக் கொல்லுவதற்காக ஒரு பண்டிகையாம்!



கிராமத்தினரிடம் துண்டறிக்கைகள் வழங்கி சமூக ஆர்வலர்கள், வனத் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத் திட வருகிறார்கள்.

டேராடூன் அருகில் ஜாவுன்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கிராமத் தவர்கள் ஒன்று கூடி கெடுதலை ஏற் படுத்தும் சம்பவங்களைத் தவிர்ப் பதற்காக ஆற்றில் இறங்கி மீன் களைக்கொல்கின்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்களாம். பழைமையான வழமை என்று கூறிக்கொண்டு அக்கிராமத்து மக்கள் மீன்களைக் கொல்லும் மீன் மேளா பண்டிகையை நடத்தி வருகிறார்களாம்.

அக்லார் ஆற்றில் உள்ள மீன்களைக் கொல்லுவதற்காக பிளீச்சிங் பவுடரை தூவிவிடுகிறார்கள். அதன்பிறகு அம்மீன்களைப் பிடித்துக்கொண்டு செல்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆற்றில் இறங்கி மேளங்களை அடித்தபடி, திம்ரு மரத்தூளை ஆற்றில் தூவி விடுகிறார்கள். கைகளாலும், வலை களின்மூலமாகவும் மீன்களைப் பிடித்து எடுத்துக்கொள்கிறார்கள். கிராமத்து பெண்கள் அந்த மீன்களை பழைமையைக் கொண்டாடும் படியாக சமைக்கிறார்களாம்.

வனத்துறை அலுவலர்கள், சுற்று சூழலியல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் களத்தில் இறங்கி அந்த மக்களிடம் பண்டிகையின் பேரால் இதுபோல் செய்வது எவ்வளவு கேடு களை விளைவிக்கிறது என விளக்கிக் கூறி வருகிறார்கள். பழைமை என்பதன் பெயரால் எவ்வளவு காலத்துக்கு இதைச் செய்வார்கள் என்று கேட்டு, மீன்களை அழிப்பதுதான் இதன்மூலம் நடைபெற்றுவருகிறது என விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

வனத்துறையைச் சேர்ந்த கோட்ட வனத்துறை அலுவலர் தீரஜ் பாண்டே மற்றும் வனத்துறை அலுவலர் நீலம் பர்த்வால் வனத்துறைப் பணியாளர் களுடன் இணைந்து ஆற்றில் பிளீச்சிங் தூளைக் கலக்க வேண்டாம் என்றும், தண்ணீரை மாசு படுத்த வேண்டாம் என்றும் கோரி துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர்.

மீன் மேளா பண்டிகைக்கு பதிலாக மீன்களை வளர்த்திடவேண்டும் என்று மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம் என பாண்டே கூறினார்.
தெஹ்ரி நாட்டு அரசன் இந்தப் பண்டிகையை நிறுத்த உத்தரவிட்ட போது, தீங்கான சம்பவங்கள் நிறைய நடந்தன என்றும், அதனாலேயே தொடர்ச்சியாக அந்தப் பண்டிகையை மக்கள் நடத்திவருகிறார்கள் என்றும் அக்கிராமத்தினர்  பழங்கதையைக் கூறி வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தில் தடை விதித்து உத்தரவிட்டபோதிலும், 2000ஆண்டு கால பழைமையான, காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்க, வழக்கம், பண்டிகைகளின் பெயரால் உள்ள ஜல்லிக்கட்டு அல்லது எருது விரட்டு நிகழ்வினை மாநில அரசு தொடர்ந்து அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகிறது.

கணவனை இழந்த பெண்ணை கட்டாயப்படுத்தி உயிரோடு எரிக்கும் பழக்கமான சதி முறையை பெருமைப் படுத்தும் பழக்கமும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. சட்டத்தின் வாயி லாக இதுபோன்ற காட்டுமிராண்டிக் காலத்துப் பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கடும் நடவடிக் கைகள் எடுத்து வந்த போதிலும்  அவை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அதுபோலவே, தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இளம் பெண் களை பருவம் அடைவதற்கு முன்பாகவே உள்ளூர் கோயிலுக்கு விட்டு ஏலம் விடப்படும் முறையாக  தேவதாசி முறை உள்ளது. 1982ஆம் ஆண்டில் இந்த பழைமையான பழக்கவழக்கம் சட்ட விரோதமானது என்று அறிவிக்கப்பட்டு சட்டப்படி தேவதாசி முறை ஒழிக்கப் பட்டு விட்ட நிலையிலும், அந்த மாநி லத்தில் இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

மரங்களுக்கும், விலங்குகளுக்கும் திருமணங்களைச் செய்வது, காற்றுக் கடவுளின் (வாயு) வாழ்த்துக்களுக்காக பச்சிளம் குழந்தைகளை  வெட்ட வெளியில் தூக்கி எறிவது, விலங்குகளை பலியிடுவது, மனிதர்களைக்கூட பலியிடுவது உள்ளிட்ட பல்வேறு மோச மான நிகழ்வுகள் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் தலைதூக்கியவண்ணம் உள்ளன.

(_தி டைம்ஸ் ஆப் இந்தியா, 29.6.2015)

தமிழ் ஓவியா said...

வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியை பெறுவது ஆர்எஸ்எஸ்தான்!

இந்தியாவில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களில், ஆர்.எஸ்.எஸ்.-தான், வெளிநாடுகளிலிருந்து அதிகமான நிதியைப் பெறுகிறது என்றதகவல், அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து திரட்டும் நிதியைக் கொண்டு, இந்தியாவில் மதவாதத்தையும், வெறுப்பு அரசியலையும் வளர்க்கும் வேலையை ஆர்.எஸ்.எஸ். செய்து வருவதாகவும் கூறியுள்ள அந்த பிரச்சார அமைப்பு, அமெரிக்காவில் ஆர்.எஸ்.எஸ்.-க்கு நிதி அளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி யுள்ளது.

நரேந்திர மோடி பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவில் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள், அரசு சாரா அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப் பட்டது. இவ்வமைப்புகள் வெளிநாடுகளின் நிதியைப் பெற்றுக் கொண்டு, இந்தியாவில் பல்வேறு சீர்குலைவு வேலைகளில் ஈடு படுவதாக உளவுத்துறை மூலம் குற்றம் சாட் டப்பட்டு, அவற்றின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதுடன், பணப் பரிவர்த் தனைகளும் முடக்கப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிகமானநிதியைப் பெறுவது ஆர்.எஸ்.எஸ். தான் என்ற உண் மையை, அமெரிக்காவில் ஆர்எஸ்எஸ்க்கு நிதி அளிப்பதை நிறுத்துங்கள் என்ற பிரச்சார அமைப்பின் அறிக்கை வெளிச் சத்தைக் கொண்டு வந்துள்ளது. மேலும், இந்த உண்மையை இந்திய உளவுத்துறை திட்டமிட்டு மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

பல கார்ப்பரேட்டுகள் சுரங்கங்கள் தோண்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப் படைவது குறித்தும் மரபணுமாற்றுப் பயிர்களினால் விவசாயம் அழிந்து விடும் ஆபத்து குறித்தும் அரசு சாரா அமைப்புகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவை கார்ப்பரேட்டுகளுக்கு எரிச் சலை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக இந்திய உளவுத்துறை அமைப்பினால் தயாரிக்கப் பட்ட 21 பக்க அறிக்கையானது, சுற்றுச் சூழல், கட்டுமானத் தொழிலாளர்கள் துறை மற்றும் மனித உரிமை தளங்களில் செயல்படும் அரசு சாரா அமைப்புகள் நாட் டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக கூறியது.

உளவுத்துறையின் இந்த அறிக்கையை சாக்காக வைத்துக் கொண்டு, சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அரசு சாரா அமைப்புகளின் வெளிநாட்டு நிதி ஆதாரங்கள் முடக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் செயல்படும் அரசு சாரா அமைப்புகளிலேயே அதிகமாக அந்நிய பணம் பெறுவது ஆர்.எஸ்.எஸ்.தான் என் பதை உளவுத்துறை திட்டமிட்டு அறிக் கையில் விட்டு விட்டதாக, அமெரிக்க பிரச்சார அமைப்பு அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2002-ஆம் ஆண்டிலேயே வெறுப்பு அரசியலை வளர்ப்பதற்காக அந்நிய நிதி என்ற தலைப்பில், ஆர்.எஸ்.எஸ். தனது இந்துத்வா திட்டத்திற்காக பெறும் அந்நிய நிதி குறித்து வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, வெறுப்பு அரசியலுக்கு அளிக்கும் நிதியை நிறுத்து என்ற பெயரில் செயல்பட்ட அமைப்பு மூலம் வெளியிடப் பட்டது.

இந்தியாவின் வளர்ச்சிக்கும் தொண்டு பணிகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும் அளிக்கப்படும் அமெரிக்கா வின் நிதி, எப்படி ஆர்.எஸ்.எஸ்.ஸின் சங் பரிவார அமைப்புகளின் வெறுப்பு அரசி யலைப் பரப்ப பயன்படுகிறது என்பதை ஆதாரப் பூர்வமாக அந்த அறிக்கை முன் வைத்தது.

பல லட்சம் கோடி டாலர்கள் ஆர். எஸ்.எஸ். அமைப்புகளுக்கு சென்றுள்ளதை யும் அந்த அறிக்கை அம்பலப்படுத்தியது. இந்த அறிக்கையின் அடிப்படை யில்தான், மோடிக்கு அமெரிக்காவில் நுழையவே விசா மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இன்றுவரை இவ்வாறான நிதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு களுக்கு செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது, என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரச்சார அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.

நாட்டில் அரசு சாரா அமைப்புகள்மீது நடவடிக்கை எடுக்கப் பட்டு வரும் இந்த சூழலில், ஆர்.எஸ்.எஸ்.-ஸின் அந்நிய நிதி பின்னணி குறித்தும்- அதன் சீர்குலைவு நடவடிக்கைகள் குறித்தும், சி.பி.அய்.-யின் உயர்மட்ட உள வுத்துறை அமைப்பை வைத்து, நரேந்திர மோடி அரசு விசாரிக்குமா? அந்த விசா ரணை விவரங்களின் அடிப்படையில், ஆர்.எஸ்.எஸ். மீது நடவடிக்கை எடுக்குமா? என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.

பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் ஸின் உறுப்பினர் மட்டுமின்றி அதன் முழுநேர ஊழியராக கடந்த1971-லிருந்து செயல்பட்டு வருகிறார். அவருக்கு இந்த வெளிநாட்டு நிதியி லிருந்துதான், இவ்வளவு காலமாகவும் முழுநேர ஊழியருக்கான ஊதியம் வழங்கப்பட்டது. அதன்மூலம் அரசியலில் வளர்ந்து இன்று பிரதமராகவும் ஆகிவிட்டார். அப்படியிருக்கையில் வெளிநாட்டுப் பணத்தை அதிகமாகப் பெறும் ஆர்.எஸ்.எஸ். மீது, மோடி அரசு நடவடிக்கை எடுக்குமா?

தீக்கதிர் 29.6.2015