Search This Blog

11.7.15

புருஷன் இல்லாமல் வாழப் பெண்களால் முடியாதா?- பெரியார்

திருமண அமைப்பைச் சட்டப்படி குற்றமாக்க வேண்டும்


நான் மனித சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று ஆசைப்படுபவன்; நம் சமுதாயத்தைத் திருத்த வேண்டுமென்று பாடுபடுபவன்.

உலகிலுள்ள மற்ற ஜீவராசிகளின் அறிவை விட மனிதனின் அறிவிற்குப் பேதம், உயர்வு இருக்கிறது. மற்ற ஜீவனை விட உயர்ந்த அறிவுப் பெற்ற மற்ற மனிதன், மற்ற ஜீவராசிகளை விட எதில் உயர்ந்தவனாக, கவலையற்றவனாக இருக்கிறான் என்று நான் சிந்திக்கும் போது - மனிதன் மற்ற ஜீவராசிகளை விடக் கீழானவனாகவே இருக்கின்றான்.

மற்ற ஜீவராசிகளிடமில்லாத கவலைகள், தன்மைகள் பல மனித ஜீவனிடத்தில் குடி கொண்டிருக்கின்றன. 

மனித ஜீவனில் தான் இல்வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை என்பது வேறு எந்த ஜீவனிடத்திலும் இதுபோன்ற வாழ்வு கிடையாது. இல்வாழ்விற்காக மனிதன் தன் வாழ்நாள் பூராவும் கவலை உடையவனாக இருக்க வேண்டி இருக்கிறது.

திருமண முறை என்பது மனித ஜீவனுக்குக் கேடானது. அறிவோடு சிந்தித்தால் தேவையற்றதேயாகும். மனிதன் மற்ற ஜீவன்களை விட அறிவுடைய ஜீவன். ஆனால் அதற்கேற்ப நம்மிடம் எந்த அறிகுறியும் இல்லை.

மனிதனுக்கு இல்வாழ்க்கைத் தன்மை என்பது எதற்காக? என்ன அவசியம்? மனிதனுக்குப் புத்தி இருப்பதற்கு இதுதானா பலன்? பெண்களுக்கு எதற்காக எஜமான் வேண்டும்? எஜமான் (புருஷன்) இல்லாமல் வாழப் பெண்களால் முடியாதா?

சாதாரணமாகக் கரடி, புலி, சிங்கம் இவையெல்லாம் மனிதனை விடப் பலம் பொருந்தியவை; அவற்றுக்கு இல்லாத இல்வாழ்க்கை முறை மனிதனுக்கு மட்டும் ஏன்? அதிக புத்தி இல்லாததனாலே என்று சொல்லலாம்.

அதிக புத்தி இல்லாத அவை கவலையற்று இருக்கும் போது, அதிக புத்தியுடைய மனிதன் அறிவு, மானம் இவையெல்லாம் விட்டுக் குடும்ப வாழ்வு வாழ வேண்டிய அவசியம் என்ன என்பதைச் சிந்திக்க வேண்டுகிறேன்.

இது இன்று பலருக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால் இன்னும் 30- அல்லது 50- ஆண்டுகள் போனால் இந்த நிலை ஏற்படத்தான் போகிறது. இதை யாரும் தடுக்க முடியாது.

கணவனும், மனைவியுமாக வாழ்கின்ற வாழ்க்கை தான் ஆணுக்கும், பெண்ணுக்கும். வாழ்வு என்பது எதற்காக? ஆணுக்கு மனைவியும், பெண்ணுக்குப் புருஷனும் எதற்காகத் தேவை? இவை இரண்டுமில்லாததால் என்ன கெட்டுவிடும்?

சாதாரணமாக ஆட்டை எடுத்துக் கொண்டால் ஆண் ஆடு எல்லாம் மனிதனுக்கு உணவாக வேண்டியது. பெண் ஆடெல்லாம் குட்டிப் போட்டாக வேண்டியது என்பது தானே! அதுபோலத் தானே, ஆண் உழைக்கவும், பெண் குட்டிப் போடவும், சோறு சமைக்கவு மென்றிருக்கிறது.

ஒரு பெண் எதற்காக ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டியது? உலக ஜனத் தொகையில் சரி பகுதியாக இருக்கும் பெண்கள் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியது தான் அவர்கள் பகுத்தறிவு பெற்றிருப்பதற்குப் பயனா?

ஒருத்தனை ஒருத்தன் அடிமை கொண்டால் சட்டப்படிக் குற்றம் என்கின்றோம். ஒருவனை ஒருவன் தொட்டால் தீண்டாமை என்று சொல்லுவது சட்டப்படிக் குற்றமென்றிருக்கும் போது, ஒரு பெண்ணை நிரந்தர அடிமையாக்கக் கூடிய திருமணம் சட்டப்படிக் குற்றமாக்கப்பட வேண்டியதுதானே நியாயமாகும்.

இல்வாழ்க்கை குடும்பம் என்பதெல்லாம் மனிதன் காட்டு மிராண்டியாக இருந்த காலத்தில் இருந்திருக்கலாம். இன்றைக்கு ஏன் இந்தத் தொல்லை? இதை அறிவுள்ள மனிதன் சிந்திக்க வேண்டாமா?

மனிதன் ஒவ்வொரு காரியத்திலும் மேலே போக வேண்டுமென்று விரும்புகின்றான். போய்க் கொண்டிருக்கின்றான். 3,000- வருஷம் மனிதன் இருந்தும் இதுதான் வாழ்விற்கு என்றால், சோம்பேறிகள் சொல்லுகின்ற மோட்சத்திற்குப் போகலாம். சொர்க்கத்திற்குப் போகலாம் என்று மனிதன் சிந்தனையும், அறிவும் அற்று அதனை நம்பிக் கொண்டிருப்பது போலத் தானே இல்வாழ்க்கை, குடும்பம் என்பவைகளால் மனிதன் சுய சிந்தனையும், சுதந்திரமுமற்றவனாக இருக்கின்றான்.

வள்ளுவன் மேலே எனக்குக் கோபம் வந்ததற்குக் காரணமே அவன் இல்வாழ்வு வாழ வேண்டுமென்று கூறியதில் தான்! எதற்காக அறிவுடைய மனிதனுக்கு இல்வாழ்வு? அதனால் மனிதன் அடைந்த பலன் என்ன?

இல்வாழ்வு குடும்பம் என்று இப்படியே 1,000- வருஷத்திற்கு இருந்து பலன் என்ன? உன்னால் ஆனது என்ன? உன்னுடைய அறிவிற்கு என்ன பயன்? மனித ஜீவனுடைய நிலை இதுதானா?

இதற்கு மேலே போகிற அறிவு நமக்கு இல்லாதனாலே மோட்சம் தான், நரகம் தான் என்றிருப்பதாலே கோயிலைக் கட்டிக் கொண்டு போகிறான்.

மனிதன் என்றால் ஞானம், மோட்சம் வேண்டும் என்கின்றான். அவை என்னடா என்றால், அது உனக்கல்ல, ஞானிகளுக்கு என்கின்றான். உனக்குப் புரிந்து கொள்ள முடியாது என்கின்றான்.

குறைந்த அளவு ஒழுக்கத்தோடு, நாணயத்தோடு வாழ வேண்டுமென்றில்லையே! பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக் கூடாது. ஆணாகப் பிறந்தால் மனைவியை - பிள்ளைக் குட்டியைக் காப்பாற்ற வேண்டும். இதுதான் அவனுக்கு வாழ்க்கைச் சிந்தனையாக இருக்கிறது.

மதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டியது; சுதந்திரத்தோடு வாழ வேண்டியது; புதுவாழ்வு மலர வேண்டியது என்கின்ற எண்ணம் எவனுக்குமே தோன்றுவது கிடையாது.

மனித சக்திக்கு மேல் ஒரு சக்தி இருப்பது என்பது பித்தலாட்டம்.

இனி இந்தக் குடும்ப வாழ்வு - இல்லற வாழ்வு என்பதைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்.

தமிழனில் வள்ளுவனுக்கு மேலே அறிஞன் இல்லை, புலவன் இல்லையே! 2,000- வருஷங்களாக வேறு எந்த அறிவாளியும் தோன்றவே இல்லையே! ஒரு தாயுமானவர், பட்டினத்தார் இராமலிங்கம் என்பரெல்லாம் பழைய குப்பையைப் பாடி விட்டு சென்றவர்களே தவிர, பகுத்தறிவுவாதிகள் அல்லவே.

நான் பகுத்தறிவுவாதி என்று யாரைச் சொல்கிறேனென்றால், நாம் சொல்வதைத் துலுக்கரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். கிறிஸ்தவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்றவனும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட கருத்தைச் சொல்பவன் தான் பகுத்தறிவுவாதி யாவான். நான் திருமணம் கூடாது என்று சொல்கின்றேன். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க நியாயமில்லையே!

எனவே, நாம் புதிய உலகத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். நாம் 3,000- ஆண்டு காலமாக ஒரே நிலையில் - காட்டுமிராண்டித் தன்மையிலிருந்து கொண்டிருக்கின்றோம்.

ஒரு துறையில் மட்டுமல்ல, அரசியலில் அப்படித்தான், சமுதாயத் துறையில் அப்படித்தான், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், பழைமையைத் தள்ளி விட வேண்டும். புதுமையை ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும்.

நம் மனிதர்கள் மற்ற ஜீவன்களை விட உயர்ந்த அறிவு இருக்கிறது. அதைப் பயன்படுத்திச் சூழ்நிலைக்கேற்ப நம்மை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். அதுதான் அறிவு பெற்றதற்குப் பயனாகும்.

                                      -------------------------------------------------- 23.04.1969 அன்று தஞ்சையில் நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. "விடுதலை", 02.05.1969

0 comments: