Search This Blog

16.4.13

டெசோ கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்



  • மீன் பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்கு - வரலாற்று ரீதியில் உருவான கடல் நீர்ப்பரப்பில் கடல் எல்லை எதுவும் கிடையாது!
  • கச்சத் தீவு குறித்த  ஒப்பந்தம் நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் பெறவில்லை
1974 ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் கச்சத்தீவு இந்தியாவுக்கே சொந்தம் என்று பிரகடனப்படுத்தவும் கோரி டெசோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு டெசோ கூட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம்

சென்னை, ஏப்.16- கச்சத்தீவு இந்தியா வுக்கே சொந்தம் என்று பிரகடனப் படுத்தவும், வரலாற்று ரீதியில் இருந்து வரும் மீன்பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்குச் சட்டத்தில் இடமில்லை என்ற நிலையிலும், இவற்றை முன்னிறுத்தி டெசோ சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர டெசோ கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் டெசோ அமைப்பின் கலந் துரையாடல் கூட்டம்  நேற்று (15.4.2013) அண்ணா அறிவாலயத்தில் நடை பெற்றது.

அந்தக் கூட்டத்தில் வடித்தெடுக்கப்பட்ட தீர்மானத்தில் ``1974 ஆம் ஆண்டு  ஒப்பந்தத்தின் மூலம் கச்சத் தீவை விட்டுக்கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லு படியாகாது என்றும் அந்த ஒப்பந் தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என்பதை  பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தை அணுகுவது என முடிவு செய்யப் பட்டுள்ளது என்றும், எக்காரணம் கொண்டும் இலங்கை அரசு இந்திய மீன வர்களை மீன் பிடிக்க விடாமல் தடுக்க முடி யாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

டெசோ  அமைப்பின்  சார்பில் கலந் துரையாடல் கூட்டம் டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலை மையில், அண்ணா அறிவாலயத்தில் 15-4-2013  அன்று மாலை 5.30 மணியளவில்  நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர், தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி,  விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்  தொல். திருமாவளவன், திராவிடர் இயக்க தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,  திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர். பாலு,  அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், மூத்த வழக்கறிஞர் சண் முகசுந்தரம்,  முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார்,  கவிஞர் கலி.  பூங்குன்றன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் முக்கிய இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.   அவை வருமாறு :-

தீர்மானம்1: மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை தடை செய்ய முடியாது இராமேஸ்வரத்தை ஒட்டிய ``ஆதாம்  பாலம் மற்றும்  நாகை மாவட்டம்,  கோடியக்கரை ஆகிய பகுதிகளின்  இடையில்  இந்தியா வுக்கும், இலங்கைக்கும்  இடையிலுள்ள கடற்பகுதி  ``பாக் ஜலசந்தி என்று அழைக் கப்படுகிறது. இப்பகுதி வரலாற்று அடிப் படையில்  உருவான நீர்ப் பரப்பாகும்.
``பாக் விரிகுடா கடல் பகுதி  பல நூற்றாண்டு காலமாக பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின்  கட்டுப்பாட் டில் இருந்த பகுதியாகும்.

பாரம்பரியமாக  இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் முழு உரிமையோடு  இக்கடற்பரப்பு முழுமை யிலும்   மீன் பிடித்து வந்தனர்.   இருநாடு களின்  விடுதலைக்குப் பின்னரும்  இவ் வுரிமை  இரு நாட்டு மீனவர் களிடையே  நீடித்து வந்தது.

1974 ஒப்பந்தம்

1974ஆம் ஆண்டு ஜூன் மாதம்  26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இந்தியப் பிரதமர்  இந்திரா காந்திக்கும்,  இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டார நாயகாவுக்கும்  இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில்  பிரிவு  6இன்படி இரு நாட்டு மீனவர் களுக்கும், மீன் பிடிக்கும் உரிமை தொடர்ந்து வழங்கப்பட்டது.
அதாவது ``பாக் விரிகுடா  கட லில் இரு நாட்டு மீனவர்களுக்கும் காலங்காலமாக  இருந்து வந்த  மீன் பிடிக்கும் உரிமை எந்த மாறு தலுக்கும் உட்படுத்தப்படாமல்  தொடர்ந்து நீடிக்கும் என்ற வகையிலேயே  மேற்படி ஒப்பந்தம் அமைந்தது.  இந்திய அரசும், இலங்கை அரசும்  இந்த ஒப்பந்தத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும், கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
இலங் கையோ அல்லது இந்தியாவோ  மீனவர்கள் அனுபவித்து வரும் பாரம்பரிய உரிமை களைத் தடை செய்ய இயலாது.   மேலும் இந்திய அரசாக இருந்தாலும், இலங்கை அரசாக இருந்தாலும் மீனவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.   சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது இலங்கை அரசு எக்காரணம் கொண்டும்  இந்திய மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுக்க முடியாது.   ஆனால் இதற்கு மாறாக இலங்கை அரசு  நாள்தோறும் இந்திய மீனவர்கள் பாரம்பரிய  உரிமையின் அடிப் படையில் மீன் பிடிப்பதை ஏதாவது ஒரு வகையில் தடை செய்து வருகிறது.

தி.மு.க. அரசின் எதிர்ப்பைமீறி ஒப்பந்தம்

இந்திய  மீனவர்களின் படகு களைப் பறிமுதல் செய்தல்,  அவர் களுடைய மீன் வலைகளை அறுத்துச் சேதப்படுத்துதல்,  மீனவர்களைக் கைது செய்தல்,  மற்றும் அவர்கள் பிடித்த மீன்களைக் கைப்பற்றிக் கொள்ளுதல்  போன்ற சர்வதேசச் சட்டத்திற்குப் புறம்பான செயல் களில் இலங்கை அரசின் கடற் படையினர்   ஈடுபட்டு வருகிறார்கள்.    இந்திய மீனவர்களைக் காப்பாற்ற இந்திய அரசு நிரந்தர தீர்வைத் காணவில்லை 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது.  அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத் தான போது, குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், அங்கே நடைபெறும் கோவில் விழாவில் தமிழக மீனவர்கள் கலந்து கொள் ளும் உரிமையும்,  மீனவர்களின் வலையை அங்கே உலர்த்திக் கொள் வதற்கான உரிமையும் அந்த ஒப் பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு  வலி யுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப் பட்டன.  ஆனால் 1976ஆம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கப்பட்டு,  அவசர நிலை பிரகடனம் செய்யப் பட்டு, ஆளுநர் ஆட்சி தமிழகத்திலே நடை பெற்ற போது, அந்த ஒப்பந்தத்தில் இருந்த இந்த ஷரத்துகள் நீக்கப்பட்டு விட்டன.   எனவே 1974ஆம் ஆண்டு ஒப்பந்தம்   மீனவர் களுக்கு வழங்கி யுள்ள மீன் பிடிப்பதற்கான பாரம் பரிய  உரிமையையும்  மீனவர்களின் உயிரையும் பாதுகாக்க வேண்டிய  கடமையும், பொறுப்பும்  இந்திய அரசுக்குள்ளது.  ஆனால் இதுவரை இந்திய மீனவர்கள் ஏறத்தாழ அறுநூறுக்கும் மேற்பட்டோர் இலங்கைக் கடற்படையினரால்  கொல்லப்பட்டுள்ளனர். இத்தகைய கொடுஞ்செயலைத் தடுக்கவும் இந்திய  மீனவர்களைக் காப்பாற்றவும் இந்திய அரசு ஒரு நிரந்தரமானத் தீர்வு எதையும் இதுவரைக் காணவில்லை.
வரலாற்று ரீதியான நீர்ப்பரப்பில் ``நாடு சார்ந்த கடல் என்று எந்தப் பரப்பையும் அறுதியிட்டுக் கூற முடியாது.   ஒரு நாட்டின் இறை யாண்மை என்பது குறிப்பிட்ட பூகோள வரை யறையைக் கொண் டது. ஆனால் மீன் பிடிக்கும் உரிமையைத் தடுப்பதற்கு  ஏற்ற ``கடல் எல்லை எதுவும்  வரலாற்று ரீதியில் உருவான கடல் நீர்ப் பரப்பில் கிடையாது என்பது உலகம் முழுவ திலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர்  நியதியாகும்.     எனவே இலங்கை  அரசு;  1974ஆம் ஆண்டு ஒப்பந்தத் தில் அங்கீகரிக்கப்பட்ட பாரம் பரியமான மீன் பிடிக்கும் உரிமை யையும்  தொடர்ந்து மீறிச்  செயல் பட்டு வரும்   நிலையிலும்,    இலங்கை கடற்படையினர்  தமிழக  மீனவர் களைத் தொடர்ந்து தாக்கி வருகின்ற  கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டுமென்ற நோக் கிலும்,    வரலாற்று அடிப்படையில்  உருவான ``பாக்-விரிகுடா பகுதியில்  மீன் பிடிக்கும் தமிழக  மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு  வழங்கப் பட வேண்டும் என்ற அவசியத்திலும்,  1974ஆம் ஆண்டு  இந்தியாவுக் கும் இலங்கைக்கும்  இடையே  செய் யப்பட்ட ஒப்பந்தத்தை அறவே ரத்து செய்திட  இந்திய அரசு முன் வரவேண்டும் என்று  ``டெசோ வின் இந்தக்  கூட்டத்தில் தீர்மானிக்கப் படுகிறது. மேலும் கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதியாகும். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும்

அது  1974ஆம் ஆண்டு ஒப்பந்தத் தின் படி   இலங்கை அரசுக்கு இந்திய அரசால், சட்டமன் றத்திலும், நாடா ளுமன்றத்திலும்  நாம் தெரிவித்த எதிர்ப்புகளையெல்லாம்  மீறி விட்டுக் கொடுக்கப் பட்டது.   இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் வேறு ஒரு நாட்டிற்கு விட்டுக் கொடுப்ப தென்றால்,  இந்திய அரசியல் அமைப் புச் சட்டம் 368வது பிரிவின்படி நாடாளு மன்றத்தின் பரிசீலனைக்கு வைத்து சட்டம்  இயற்றப்பட வேண் டும்.   கச்சத் தீவைப் பொறுத்தவரை அப்படி எந்தவொரு சட்டமும் இதுவரை நிறைவேற்றப்படாததால், கச்சத் தீவை இலங்கைக்கு  ஒப்பந்தத் தின் மூலம் விட்டுக் கொடுத்தது  அரசியல் சட்ட ரீதியாகச் செல்லுபடி ஆகாது என்பது தான் உண்மை.   எனவே  1974ஆம் ஆண்டு ஒப்பந் தத்தை ரத்து செய்யவும்,  கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிதான் என் பதைப் பிரகடனப் படுத்தவும், ``டெசோ அமைப்பின் மூலம்   உச்ச நீதி மன்றத்தை அணுகுவதென  இந்தக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

காரைக்கால் பகுதி மீனவர்கள் சிறைப்பிடிப்புக்கு கண்டனம்

தீர்மானம் 2: காரைக்கால் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த  26  மீனவர்கள்  இலங்கைக் கடற் படையினரால்  ஏப்ரல் 5ஆம் தேதி  கைது செய்யப்பட்டு கடந்த பதினைந்து நாட் களுக்கு மேலாக இலங்கைச் சிறைச்சாலையிலே வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.  இலங்கை நீதி மன்றத்தில் அவர்களின் ``ரிமாண்ட் காலம் ஏப்ரல்  19ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.   இலங்கைக் கடற்படையின் இத்தகைய கைது நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு,  அவர்களை உடன டியாக விடுதலை செய்வதற்கான  ஏற்பாடு களில்  மத்திய அரசு  ஈடுபட வேண்டுமென்று  இந்தக் கூட்டம் வலியுறுத்துகிறது.  இவ்வாறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
                    -------------------------------”விடுதலை” 16-04-2013

15 comments:

தமிழ் ஓவியா said...


குடியைக் கெடுக்கும்!


குடி குடியைக் கெடுக்கும் என்று ஒரு பக்கத்தில் விளம்பரம் - வெகு தூரம் போவா னேன்? டாஸ்மாக் கடை களில்கூட இந்த விளம் பரப் பலகை தொங்கும். அந்த விளம்பரப் பல கையைப் பிடித்துத் தொங்கிக் கொண்டே ஒரு பிடி பிடிப்பார்கள்.

டாஸ்மாக் கடைகளில் மேற்பார்வையாளர்கள் எனும் பணியாளர்கள் உண்டு. அவர்களின் பணி என்ன தெரியுமா? மது விற்பனையை அதி கப்படுத்துவது! புரியும் படிச் சொல்ல வேண்டு மானால் குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப் படுத்துவதுதான்; ஒரு மாதத்துக்கு இவ்வளவு இலக்கு என்று நிர்ணயிக் கப்பட்டு அதற்கான பணம் அரசின் கல்லாப் பெட்டியில் நிரம்பியாக வேண்டும்.

இன்று ஏடுகளில் ஒரு சுவையான செய்தி வெளி வந்துள்ளது.

2012-2013ஆம் ஆண்டுக்கான மது விற்பனை ரூ.25 ஆயிரம் கோடி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்ததாம். ஆனால் இந்த இலக்கை எட்ட முடியவில்லையாம்.

தீபாவளி, பொங்கல் நாட்களில்கூட இலக்கை எட்டிப் பிடிக்க முடிய வில்லையாம். (குடிமக்கள் திருந்தி விட்டார்களோ!)
மேலிடத்திலிருந்து குடைய மாட்டார்களா? மேலதிகாரிகள் அந்தக் குடைச்சலை, தன் கீழ் இருக்கும் அதிகாரிகளுக் குத் தானே மாற்று வார்கள்?

இப்படி குடைச்சல் மேலிருந்து கீழ் மட்டம் வரை அதிரடியாக நடந் துள்ளது. அதன் விளைவு 242 மேற்பார்வையாளர் கள் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பென்சன்) செய்யப்பட்டுள்ளனராம்.

ஒரு பக்கத்தில் குடிகுடியைக் கெடுக்கும் என்று அரசு விளம்பரம்! இன்னொரு பக்கத்தில் குடியை ஏன் பெருக்க வில்லை என்று கூறி ஊழியர்கள் பணி நீக்கம்.

நிதானமாகத்(?) தான் இத்தகைய ஆணை கள் பிறப்பிக்கப் படுகின்றனவா? பண வருவாய் அதிகம் தேவை என்ற போதை தலைக் கேறியதால்தான் இத் தகைய நடவடிக்கை களுக்குக் காரணமாக இருக்கலாமோ!

அரசன் வருவாயைப் பெருக்கிக் கொள்ள கோயில் கட்ட வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத் தில் கவுடில்யன் எழுதி னான் என்றால் இந்தக் குடியரசு காலத்தில், அரசின் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள குடிகளைப் பெருங் குடி மக்களாக்கி குடியைப் பெருக்கி வருமானத்தை வளர்த்து குடி வோம்ப வேண்டுமோ! பேஷ், பேஷ்!! மது ரமான திட்டம்தான்! - மயிலாடன்

தமிழ் ஓவியா said...


டெசோ தலைவர் கலைஞர் தலைமையில் டெசோ தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்


ஏப்.24-இல் திருவான்மியூரில் நடைபெறும்

15.4.2013 அன்று அண்ணா அறிவாலயத்தில், டெசோ தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற டெசோ கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்குகின்ற வகையில், சென்னை - திருவான்மியூரில் வரும் 24.4.2013 புதன்கிழமை அன்று மாலை 6 மணிக்கு டெசோ தலைவர் கலைஞர் அவர்களும், மற்றும் டெசோ இயக்கத்தின் உறுப்பினர்களான திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் தளபதி மு.க. ஸ்டாலின், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொள்ளும் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெறும்.

தமிழ் ஓவியா said...


உலக நீதிமன்றத்திற்கு சென்ற கோயில் சர்ச்சை


தி ஹாக், ஏப்.16-கம்போடியா, தாய்லாந்து நாடுகளின் எல்லையில் பிரியா விகார் கோயில் அமைந்துள்ளன. இது யுனெஸ்கோவால் உலக புராதனப் பகுதியாக அறிவிக்கப்பட்ட நினைவுச் சின்ன மாகும். இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு நாடுகளும் உரிமைக் கோரி வருகின்றன. இந்நிலையில், தங்களிடையே உள்ள பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்காக இரு நாடுகளும் தற்போது நெதர்லாந்தின் தி ஹாக் நகரில் உள்ள அய்.நா.வின் சர்வதேச நீதிமன்றத் தில் வழக்குப் பதிவு செய்துள்ளன.

தமிழ் ஓவியா said...


ஒப்பற்ற தொண்டறச் செம்மல்கள் இதோ!


நமது பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கல்வித் துறையின் பன் மாடிக் கட்டடத்திற்கு பிரசாந்த், ஜோதி, இராஜி என்ற பெயர்கள் சூட்டிய நிகழ்ச்சியும், ஜமுனா- ராஜரத்தினம் பன் மாடிக் கட்டடத்தின் பெயர் சூட்டு நிகழ்ச்சியும் கோலாகலத்துடன் நடைபெற்றன!

வடலூரில் உள்ள பிரபல நிலக்கிழார் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வடலூர் வள்ளலாரின் வாய்மை மிகுந்த சீடர் - வள்ள லாரின் பெயரில் ஏராளமான மனிதநேயப் திருப்பணிகளை, தாராள மனதுடன் எப்போதும் செய்து வருபவர்கள்.

அவருடைய தாயார் நினைவு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெரும் அறிவு விருந்தும், வள்ளலார் கருத்திற்கொப்ப, பசி போக்கும் வகையில், வாழும் மனிதற்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடுவதை வாடிக்கையாக நடத்தி வரும் வள்ளல் ஆவார்கள்.

அடக்கமும், தன் முனைப்பற்ற, தயாள சிந்தனையும் தன்னகத்தே கொண்ட தொண்டறச் செம்மல் அவர்!

உழைப்பால் உயர்ந்தவரான அவர், திராவிடர் இயக்கப் பற்றாளர் ஆவார்.

பெருந்தகையான அவர் நமது அறக்கட்டளை யிலுள்ள டிரஸ்டியாகவும் இருக்கும் வாய்ப்பையும் நமக்கு மனமுவந்து ஏற்படுத் தித் தரத் தவறாதவர்!

அத்தகைய நேர் வழி நின் றொழுகும் செம்மல்கள் எல்லாம் நமது இயக்க உறுதுணையாளர்கள் ஆவார்கள்!

அவர்களுடன் நமக்கு ஏற்பட்ட நட்பு சுமார் 10 ஆண்டு காலத்திற்குள் தான் என்றாலும் அது பயில்தொறும் பண்பு டையாளர் தொடர்பான நட்பாகவே அது அமைந்து விட்டது!

நமது பல்கலைக் கழகம் போன்ற சிறுகக் கட்டி பெருகி வளரும் நிறுவனங்களுக்கு இவர் தந்த இடத்தின் மூலம் நிதி கிடைத்தது. புதிய கட்டடங்கள் எழுப்பிட அதற்குப் பெரு உதவியாய் அமைந்தது!

அதற்கான நன்றியைத் தெரிவிக் கும் வகையில்தான் கடந்த 10.4.2013 அன்று ஒரு மாபெரும் அறப்பணித் திருவிழா - பெருவிழா தஞ்சை வல்லத்தில் நடைபெற்றது!

இதை விளம்பரப்படுத்துவதைக் கூட இத் தொண்டறச் செம்மல்கள் விரும்புவதில்லை!

பின் நாம் ஏன் செய்கிறோம் என்றால், அது ஒரு மக்கள் பல் கலைக் கழகம்.

மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் மக்களின் பல்கலைக் கழகம்; தனிப்பட்ட வியாபார நிறுவனம் அல்ல என்று நாம் காட்டிட இந்நிகழ்ச்சிகள் பயன்படுவது விரும்பத்தக்க தல்லவா?

இதைப் பார்த்து நாமும் நமது குடும்பத்து மூத்த முன்னோடிகளை, நன்றிக்குரியவர்களைப் பெருமைப்படுத்திடலாமே என்ற எண்ணம் தோன்றி, தொண்டறப் பணிகளில் அவர்களும் ஈடுபட்டால் அது சமுதாயத்திற்கு நலம்தானே!

அறிவும் செல்வமும் எப்போது பெருமை பெறுகிறது தெரியுமா?

அது பிறருக்குப் பயன்பட்டு, அதன்மூலம் அறியாமை, இல்லாமை, கல்லாமை, இவைகள் விரட்டப்பட்டு, சமூகத்தின் சமத்துவமும் பாயும் போதுதானே!

மதவாதிகள் பலரும் மேலை நாடுகளிலும் ஏன் இன்றும் ஒவ்வொருவரும் தத்தம் மதங்களுக்கு மதப் பணிகளுக்கு - ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளங்களில் 10 விழுக்காடு பிடித்தம் செய்து நேரே மத நிறுவனங்களுக்கு அனுப்பும்படிக் கூறுகிறார்கள்.

சமுதாயத்தால் வாழும் நாம், அதை ஓரளவுக்கேனும் அந்த சமுதாயத்திற்குத் திருப்பித் தர வேண்டாமா? (Payback to the society which nurtured you)

இதை ஒவ்வொருவரும் உணர்ந்து நடந்து கொள்ள மனமில்லா விட்டாலும், நல்லவர்கள் நடந்து காட்டி, பிறர் செய்யத் தவறியவை களையும்கூட இப்படி - நிறைவு செய்து தொண்டில் புகழ் வாழ்வு சாகா சரித்திர வாழ்வைப் பெறுகின்றார்கள்.

தன் பெயர் வேண்டாம்; தங்கள் குடும்பத் தலைவர் மறைந்தும் மறையாமல் நெஞ்சங்களில் நிறைந்து வாழுபவர்களின் பெயர்களை வைத்துப் பெருமைபடுத்துங்கள் என்றார், அருளாளர் நல்ல. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்!

என்னே பெரு உள்ளம்!

எத்தகைய அடக்க உணர்வு!! அதனால்தான் வெறும் நல்ல கிருஷ்ணமூர்த்தி மட்டுமல்ல.

உண்மையிலேயே நல்ல, நல்ல கிருஷ்ணமூர்த்தியும் கூட, வாழ்க பல்லாண்டு - வளர்க அவர்தம் தொண்டறம்!

- கி.வீரமணி

தமிழ் ஓவியா said...


பார்ப்பானே வெளியேறு


பார்ப்பனரின் நடத்தையும், கொடுமையும், அக்கிரமும்தான் நம்மைப் பார்ப்பானே வெளியேறு என்று கூறும் முடிவுக்கு வரச் செய்தது.
(விடுதலை, 22.7.1965)

தமிழ் ஓவியா said...


நமது தீர்மானங்கள் - 2


கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் தனித் தன்மை வாய்ந்தவை. வேறு எந்த அமைப்பாலும் சிந்திக்கப்பட முடியாதவை. பொதுவுடைமைக் கட்சிகள் கூட இதுவரை இந்தத் திசையில் தீர்மானிக்காதவை.

குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னாள் முன்னெழுத்தைக் (Initial) குறிப்பிடும் பொழுது கண்டிப்பாக தாயின் பெயரை முன்னிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்து கிறது. இதனைச் சட்டப்படியாகவும் ஆக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது என்பது எட்டாவது தீர்மானமாகும்.

இதில் உள்ள நியாயத்தையும், விஞ்ஞான பூர்வமான உண்மையும் முதலில் உணர வேண்டும் குழந்தை பிறப்பதற்குக் காரணம் தாய், தந்தை இருவரும்தான் என்றாலும் இதில் கூடுதல் உரிமையும், நியாயமும் தாயின் பக்கம்தான் இருக்கின்றன. கருவுற்று, கருவை வளர்த்து பிரசவித்தல், வளர்த்தல் என்ப தெல்லாம் தாயின் பாரமாகவே இருக்கும் போது, குழந்தையின் முன்னெழுத்து என்றால் அது தந்தையின் பெயரை முன்னிறுத்துவது என்பது ஆண் ஆதிக்கத் தன்மையான முரட்டுத்தனம் அல்லாமல் வேறு என்ன?

தந்தை யார்? என்பது தாய் சொல்லித் தான் தெரியும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

அப்படியிருக்கும்போது குழந்தைக்குத் தந்தை பெயரை மட்டுமே முன்னிறுத்தி முன்னெழுத்தாகக் கொண்டு இருப்பது தவறாகும். அப்படியே அவசியமானால் தாய் பெயரோடு தந்தையின் பெயரையும் இணைத்து, பெற்றோர்களின் பெயர்களைக் கொண்டு முன்னெழுத்து என்ற முறையை ஏற்படுத்தலாம்; இதனை சட்டரீதியாக ஆக்கும் பொழுதுதான் அதற்கு அவசியமும், வலிமையும் கூடுதலாக அமையும்!

பத்தாவது தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தகவல் மிக முக்கியமானது.

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு தந்தையின் ஜாதியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றி, தாய் அல்லது தந்தையின் ஜாதியை விருப்பப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்ற வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமாய் நடுவண் அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானமாகும்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த அற்புதராஜ் - இளவரசி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்குலி மற்றும் ஜோதிமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களின் குழந்தைகள் தந்தையின் ஜாதியைச் சேர்ந்தவர்களாகவே கருதப்படுவர் என்று 2008 டிசம்பரில் தீர்ப்பு ஒன்றை அளித்துள்ளது.

இது எந்த வகையில் நியாயமானது - சரியானது என்று தெரியவில்லை. உண்மை நிலை என்னவென்றால் தமிழ்நாடு அரசு ஆணை எண் 477/ சமூக நலத்துறை நாள்: 27.6.1975 என்ன கூறுகிறது?

பெற்றோர்களில் தாய் அல்லது தந்தை ஜாதி குறித்து அவர்கள் எந்த ஜாதியைத் தேர்வு செய்கிறார்களோ அதன்படி செய்து கொள்ளலாம் என்று தெளிவாக அரசு ஆணை இருக்கும் நிலையில் தாயைப் பின்னுக்குத் தள்ளி தந்தையின் ஜாதியை உயர்த்திப் பிடிப்பது, பெண்ணுரிமைக்கு எதிரான ஒன்றே! உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் சட்ட வலிமை உடையன ஆகையால் ஏற்கெனவே உள்ள தமிழ்நாடு அரசின் ஆணையை செல்லத்தக்க வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசிய மாகும். கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள 11ஆவது தீர்மானம் இந்த வகையில் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்ததாகும்.

தமிழ் ஓவியா said...


மே-4 இராஜபாளையத்தில் கழக இளைஞரணி மாநில மாநாட்டு பேரணி


கழக பொறுப்பாளர்களே, தோழர்களே!

மே-4 இராஜபாளையத்தில் கழக இளைஞரணி மாநில மாநாட்டு பேரணியில் இளைஞரணி சீருடை அணி வகுப்பிற்கான ஆயத்தப்பணியை தொடங்கிவிட்டீர்களா..

மே-4 இராஜபாளையத்தில் நடைபெறும் திராவிடர் கழகம் மாநில மாநாட்டின் முத்தாய்ப்பாக இளைஞரணியின் சீருடை அணிவகுப்பு நடைபெற உள்ளது. அணிவகுப்பில் சிறப்பாக பங்கு பெறும் மூன்று மாவட்டங்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இளைஞரணியின் அணிவகுப்பை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தனிமேடையில் பார்வையிட உள்ளார்கள். கழக பொறுப்பாளர்கள் தங்கள் மாவட்டத் தோழர்களின் கலந்துரையாடல் நடத்தி அணிவகுப்பிற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டுகிறோம். இளைஞரணியின் சீருடை

1. வெள்ளைபேண்ட்

2. கருப்புச் சட்டை

3. வெள்ளை குல்லா (தொப்பி)

4. வெள்ளை கேன்வாஸ் (ஷூ)

5. வெள்ளை கையுறை (கிளவுஸ்)

6. கழகக் கொடி 2 1/2 அடி நீளம் 1 3/4 அடி அகலம் 7. கொடி கம்பு 7 அடி உயரம் வெள்ளை பெயின்ட் அடிக்க வேண்டும்

8. திராவிடர் கழக இளைஞரணி தங் களின் மாவட்டப் பெயர் தாங்கிய பிளக்ஸ்

சிறப்பாக பங்குபெறும் மாவட்டங்களுக்கான பரிசுகள்

1.முதல் பரிசு ரூ.15,000

2.இரண்டாம் பரிசு ரூ.10,000

3. மூன்றாம் பரிசு ரூ.5000

தஞ்சை இரா.ஜெயக்குமார்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம், செல் 98425 98743

இல.திருப்பதி மாநில இளைஞரணி செயலாளர்
செல்: 97109 44832

த.சீ.இளந்திரையன் (மாநில மாணவரணி செயலாளர்)
செல்: 9750134599

இவண்: திராவிடர் கழக இளைஞரணி, தலைமை நிலையம், பெரியார் திடல், சென்னை -7.

தமிழ் ஓவியா said...


சிறகடித்து வருக வாசிப்புத் தேனீக்களே!


குழந்தைகளுக்கான அறிவு சார் போட்டிகள்,
கதை எழுதுதல்,
ஓவியம் தீட்டுதல்,
பேச்சுப் போட்டி,
கவிதைப் போட்டி,
நடிப்புப் போட்டி

பதிப்பாளர்களுக்குப் பயிலரங்கு

கலை நிகழ்ச்சிகள்

சொற்பொழிவுகள்

விருது வழங்குதல்
இவையெல்லாம் ஒரே வளாகத்தில்!
புரியவில்லையா?

இவ்வாண்டு முதன்முதலாக சென்னை புத் தகச் சங்கமம் - சென்னை - பெரியார் திடலில்!

உலகப் புத்தக நாளாம் ஏப்ரல் 23 அய் மய்யப்படுத்தி ஏப்ரல் 18 முதல் ஏப்ரல் 27 ஆம்தேதி முடிய பத்து நாட்கள் அரியதோர் புத்தகக் கண்காட்சி!

ஏப்ரல் 18 ஆம் தேதி மாலை 6 மணிக்குத் தொடங்கப்படுகிறது.

19 ஆம் தேதி முதல் 27 முடிய நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 8.30 மணிவரை

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன மும், நேஷனல் புக் டிரஸ்டும் இணைந்து இந்த அறிவுப் பூங்காவை உருவாக்கியுள்ளன.

பகுத்தறிவு, இலக்கியம், அறிவியல், குழந்தை களுக்கான நூல்கள், விளையாட்டு, பொருளா தாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்பொருள் கொள்கலனாக காட்சி அளிக்கப் போகிறது.

ஒரு லட்சத்துக்கும் மேலான அறிவுப் பூக்களாம் புத்தகங்கள் பூத்துக் குலுங்கிப் புதுமணம் வீச இருக்கின்றன.

இந்தப் புத்தகக் கண்காட்சியின் கூடுதல் சிறப்பு அம்சம் முற்றிலும் பதிப்பகங்களே பங்கேற்கும் பாங்காகும்.

10 விழுக்காடு கழிவு உண்டு; ஷேக்ஸ்பியர் பிறந்த நாளான ஏப்ரல் 23 உலகப் புத்தக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாளில் மட்டும் 15 விழுக்காடு உண்டு.

அறிவுக் கதிர்களை அகிலத்திற்கே உலவ விட்ட பகுத்தறிவுப் பகலவன் இடத்தில் (பெரியார் திடலில்) அறிவுப் பசியாளர்களுக்கெல்லாம் தடபுடல் அறிவு விருந்து ஒவ்வொரு மாலையும்!

தமிழர் தலைவர் கி.வீரமணி, டாக்டர் மா.நன் னன், ஈரோடு தமிழன்பன், வெ.இறையன்பு அய்.ஏ.எஸ்., ஜெகத்கஸ்பர், முன்னாள் மத்திய அமைச்சர் க.வேங்கடபதி, பேரா.சுப.வீரபாண் டியன், வழக்குரைஞர் அருள்மொழி, கவிஞர் வாலி போன்றோர் அந்த அறிவு விருந்து படைப்பாளிகள்.

பொம்மலாட்டம்,
வீதி நாடகம்
புதுகைப் பூபாளம் கலைக்குழுவினரின்
நாகரிகக் கோமாளி
திண்டுக்கல் சரவணன் குழுவினரின் பல் குரல் நிகழ்ச்சி
காக்கன் குழுவினரின்
நாட்டுப்புறப் பாடல்கள்,
அடேயப்பா எத்தனை எத்தனை திகட்டா விருந்துகள்!

விழிப்புணர்வு நடைப் பயணம் ஏப்ரல் 21 ஆம் நாள் (காலை 7 மணிமுதல் காலை 8.30 மணி வரை) சென்னை கடற்கரையில் உழைப்பாளர் சிலைமுதல் காந்தியார் சிலைவரை; கொடி யசைத்துத் தொடங்கி வைப்பவர் திரைப்பட நடிகர் விவேக்! சிறப்புகள் கூடிக்கொண்டே போகின்றனவா?

மற்றவை வெள்ளித் திரையில் காண்க!

செல்வத்துள் செல்வம் அறிவுச்செல்வம் தானே? அது பெரியார் திடலில் கிடைக்கிறது என்கிறபோது அதன் கீர்த்திக்குச் சிறப்புப் பாயிரமா தேவை?

வாசகர்கள் படித்து முடித்த நூல்களை நன்கொடையாக தரலாம். அவை சிற்றூர்களில் செயல்படும் பள்ளிக்கூடங்களுக்குக் கொண்டு போய் சேர்க்கப்படும்.

இது எங்கும் காணா அறிவுக் கருணைத் தொண்டாகும்.

சொல்லப்போனால், சென்னை புத்தகச் சங்கமம் வணிகச் சந்தையல்ல; வாழ்வில் உயர்வு செய்யும் வற்றாத அறிவுத் தண்ணீர்ப் பந்தல்!

சிறகடித்துப் பறந்துவருக - அறிவுத் தேன் உண்ண வாசிப்புத் தேனீக்களே!

வாரீர்! வாரீர்!

- மின்சாரம் -

தமிழ் ஓவியா said...


கோபத்தை விட்டுவிடு வோருக்கே கொள்ளை இன்பம்!


மனிதர்களாகிய நமது எதிரிகள் வெளியில் இருப்போர் என்றுதான் நம்மில் பலர் தவறாகக் கருதிக் கொண்டுள்ளோம். ஆனால், உண் மையான எதிரிகள் பலரும் நமக் குள்ளேயே இருக்கிறார்கள்; அவர் களது ஆளுமை பற்பல நேரங்களில் சிகரங்களைத் தொடவேண்டியவை ஆகும். அம்மனிதர்களைக்கூடச் சீர ழித்து சின்னாபின்னமாக்கி விடுகிறது!

ஆம்! அந்தப் பெரிய எதிரி எது தெரியுமா? சினம் என்னும் சேர்ந் தாரைக் கொல்லி! ஆம், கோபம்தான்!

அதனை அடக்கி ஆளுபவர் களுக்கு உள்ளம் மட்டுமல்ல; உடலும், உடல்நலனும்கூட உயர்ந்த முறையில் ஒத்துழைக்கும்.

இதுபற்றிப் பேசுவது, எழுதுவது எளிது; ஆனால், நடைமுறையில் இதனைக் கொண்டு ஒழுகுவது - கடைப்பிடித்து வாழுவது அவ்வளவு எளிதல்ல; வாழ்ந்து விடுபவர்கள் வெற்றியை அடைந்தவர்கள் மட்டு மல்ல; உண்மையான வீரர்கள் அவர்களேயாவார்கள்!

அண்மையில் சிங்கப்பூரில் கிடைத்த ஒரு ஜப்பானியப் பேராசிரியர் கெண்டட்சூ தக்கமோரி (Kentetsu Takamori) என்பவர் (பவுத்த அறிஞர்) எழுதிய நல்ல படிப்பினைகளைக் கூறும் கதைத் தொகுப்பு நூல் ஒன் றைப் படித்தேன்; அதை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.

சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்த ஒரு தத்துவ ஞானிக்குக் கோபமே வருவதில்லை. எப்போதும் சிரித்த முகத்துடன் எதையும் உள்வாங்கி, எவரிடமும் பேசிப் பழகும் இயல் பானவர்.

அவரது நண்பர்கள் சிலருக்கு ஒரு விசித்திர ஆசை! இவரை எப்படி யாவது ஆத்திரமூட்டச் செய்து இவர் கோபத்தில் கொதிப்பதைக் கண்டு சுவைக்கவேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அவர் தனியாகக் குடியிருந்த அந்த வீட்டில் அவருக்கு உதவிடும் உதவியாளரான ஒரு அம்மையாரிடம் அவரைக் கோபம் கொள்ளும்படிச் செய்தால் ஏராள பரிசுகள், பணம் தருகிறோம் என்று கூறினார்கள்.

மிக நீண்ட யோசனைக்குப் பின், அந்த உதவியாளரான பெண்மணி, வழக்கமாக தத்துவஞானி உறங்கப் போகுமுன், அவரது படுக்கையை நன்றாக அமைத்திருப்பார்; உதறி தட்டிப் போட்டு அழகுற அமைப்பது அன்றாட வழக்கம்!

அன்று வேண்டுமென்றே இந்த உதவியாளர் அதைப் போடாமல் அலங்கோலமாக வைத்துவிட்டுப் போனார். விடிந்ததும் அவர் கடிந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்புடன்!

பொழுது விடிந்து, இந்த அம்மையார் உதவியாளர், அவரைச் சந்தித்தபோது, அவர் வழக்கம்போல் புன்சிரிப்புடன் நேற்றிரவு படுக்கைப் போடவில்லை என்பதை அங்கு போன பிறகுதான் பார்த்தேன் என்று கூறிவிட்டுச் சென்றார்! ஏமாற்றமே மிஞ்சியது!!
மறுநாளும் இப்படியே செய்தார் உதவியாளர்; அதற்கடுத்த நாளும், இந்த ஞானி, நேற்றிரவுகூட படுக்கை சரியாகப் போடப்படவில்லை. நீங்கள் வேறு முக்கிய அலுவல்களில் ஈடு பட்டிருக்கவேண்டும்; இன்றைக்குச் செய்து விடுங்கள் என்று பொறுமை யாகக் கூறினார்!

மூன்றாம் நாள் காலை, நேற்றும் உங்களால் படுக்கை யைச் சரியாகப் போட இயலவில்லை; அதற்குக் காரணம் ஏதாவது இருக் கக்கூடும். கடந்த மூன்று நாள்களாக நானே போட்டுப் பழகிவிட்டேன். இனிமேல் நீங்கள் சிரமம் எடுத்துக் கொள்ளவேண்டாம். நானே போட்டுப் பழகிவிட்டேன் என்றார்.

இது இந்த உதவியாளரை வெட்க முறச் செய்தது. அந்த உதவியாளர் தத்துவ ஞானியின்முன் மண்டியிட்டு அழுதுவிட்டார்! நடந்ததைக் கூறித் தன்னை மன்னிக்கும்படி வேண்டி னார்!

அப்போதும் அந்த ஞானி தனது வழக்கமான புன்சிரிப்பை விடாமல், காட்டியபடியே இருந்தார். ஏதும் சொல்லவில்லை.

####

மற்றொரு கதை. விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பணக்கார பிரபு வீட்டில், ஒரு ஆட்டுக்குட்டி நுழைந்து விருந்தைப் பாழாக்கி விட்டதாம். இதைக் கண்டு மிகுந்த ஆத்திரம்கொண்டு, அந்த ஆட்டுக் குட்டிமீது எரிகின்ற நிலக்கரியை எடுத்துக் கொட்டி விட்டாராம்.

அதன்மீதுள்ள ஆட்டுத் தோலில் தீப்பிடித்துக் கொண்டது. அது பங்களாவுக்குள் அங்கும் இங்கும் வலி தாங்காமல் எரியும் நெருப்புடன் ஓடத் தொடங்கியது! அது ஆட்டு மந்தை யில் ஓடியது, அங்கும் தீ, எங்கும் தீ! குதிர் அருகில் புரண்டது, குதிரும் தீப்பிடித்து எல்லாமே நாசமாகியது!

இந்தத் தீ எல்லாவிடங்களிலும் பரவி, எல்லாவற்றையும் எரித்து நாசமாக்கியது!

பொறுமை முன்னவரை உயர்த் தியது; பின்னவரின் ஆத்திரமோ பெரும் அழிவையே உருவாக்கியது!

எனவே, கோபத்தைக் கொல்க! மனதை வெல்க!!

பொறுத்தவர்க்கு எப்போதும் இன்பம்; ஒறுத்தவருக்கு அந்தக் கணம் மட்டுமே இன்பம்; பிறகு மாறாத்துன்பம் என்ற வள்ளுவரின் குறளில்தான் எவ்வளவு நேர்த்தி!


- கி.வீரமணி

வாழ்வியல் சிந்தனைகள்

தமிழ் ஓவியா said...


முற்போக்குச் சிந்தனை தேவை!



கோவை சுந்தராபுரத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களுள் 24 ஆவது தீர்மானம் பெண்களுக்கு முற்போக்குச் சிந்தனை தேவை என்பதாகும்.

தீர்மானம் வருமாறு:

கோயில் வழிபாடு, பண்டிகைகளைக் கொண் டாடுதல், சடங்குகளைச் செய்தல், மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல், சாமியாரிணிகள், ஜோதிடர்கள், மந்திரவாதிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்லுதல், மோசம் போதல் முதலியவை பெண்களை மேலும் இழிவுபடுத்தவும், முற் போக்குத் திசைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத் திற்கும் பயணிப்பதைத் தடுக்கவும்தான் பயன்படும் என்பதை உணர்ந்து, இந்தத் தளைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து, தன்னம்பிக்கையோடு செயல்படவேண்டும் என்று பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள் கிறது. வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - சாஸ்திரங்கள் என்பவை அனைத்தும் பெண்களை இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாலும், ஆபாச உணர்வுகளை ஊட்டுவதாலும் பகுத்தறிவுக்கு விரோதமாக உள்ளதாலும் இவற்றை அறவே புறக்கணிக்கும்படி பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

இது மிகவும் முக்கியமான அடிப்படையான தீர்மானமாகும்.

நம்முடைய பெண்களின் நிலைமையைப்பற்றி பெண்ணுரிமைக் காவலரான தந்தை பெரியார் என்ன கூறுகிறார்?

இன்றைய பெண் எவ்வளவோ கல்வியும், செல்வமும், நாகரிக அறிவும், கவுரவமும் உள்ள சுற்றத்தாருக்குள்ளும், சகவாசத்துக்குள்ளும் இருந்து வந்தும், மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்களைவிட இளப்பமாய் நடந்துகொள்வதைப் பார்த்தால், நமக்கு எவ்வளவு சங்கடமாய் இருக்கிறது? இப்படிப்பட்ட பெண்கள் வயிற்றில் பிள்ளைகள் பிறந்து இவர் களால் வளர்க்கப்பட்டால், அவற்றிற்கு மனிதத் தன்மை எப்படி ஏற்படும்?

என்ற வினாவை எழுப்புகிறார் தந்தை பெரியார்.

மிகப் பழங்காலப் பட்டிக்காட்டு கிராமவாசிப் பெண்கள் என்று தந்தை பெரியார் அவர்கள் குறியீடாகச் சொல்லுவது அவர்களிடம் மண்டிக் கிடக்கும் மூட நம்பிக்கைகளும், பழைமைப் பிடிப்பு களும், சடங்குகளில் மூழ்கிக் கிடக்கும் பிற்போக்குத் தன்மையையும்தானே?

தாங்கள் செய்யும் சடங்குகள் கொண்டாடும் பண்டிகைகளுக்கான காரணா காரியம் அவர்களுக்குத் தெரியுமா? தெரிந்திருந்தால் அவற்றை ஏற்றுக்கொள்வார்களா?

கோவில் கோவிலாகச் சுற்றித் திரிவதும், அங்கப் பிரதட்சணம் செய்வதும் நாகரிகமானதுதானா?

குழந்தைப் பேற்றுக்காக கோவிலுக்குமுன் குப்புறப்படுத்துக் கொள்வதும், ஆணி செருப்புக் காலால் அவர்களை மிதித்துப் பூசாரி செல்லுவதும் நாகரிகம்தானா - ஏற்புடையதுதானா?

ஒரு பெண் கருவுறாமல் இருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஆணிடம் குறைபாடு இருக்க லாம்; அல்லது பெண்ணிடம் குறைபாடு இருக்கலாம். அதனைக் குணப்படுத்தவேண்டிய இடம் மருத்துவ மனையே தவிர கோவில்கள் அல்ல - பூசாரிகளின் செருப்புக் காலும் அல்ல.

பெரியபாளையத்தம்மன் கோவிலுக்குப் பெண்கள் வேப்பிலை ஆடையை அணிந்து செல்லுவது எல்லாம் எந்த அடிப்படையில்? பக்தி என்று வந்துவிட்டால் மான உணர்வுகூட பலி கொடுக்கப்படுகிறதே!

கடவுள், மத, சாஸ்திர, வேத, புராண, இதிகாசங் களின் தன்மைதான் என்ன? இந்துக்களின் அய்ந் தாவது வேதம் என்று கூறுகிறார்களே கீதை - அந்தக் கீதை பெண்களை பாவ யோனியில் பிறந்தவர்கள் என்று சொல்லவில்லையா?

பெண்களைக் கொல்லுதல் பாவமாகாது என்று சொல்லுவதுதானே மனுதர்ம சாஸ்திரம். அய்ந்து பேருக்கும் தேவி என்பதும், பெண்ணை வைத்து சூதாடியது என்பதும் மகாபாரதம் கூறும் இழிவு அல்லவா!

இராமாயணத்தில் இராமன் சீதையைத் தீக் குளிக்கச் செய்ததும், நிறை மாதக் கர்ப்பிணியான சீதையை காட்டில் கொண்டு விட்டதும் எந்த வகையில் நியாயப்படுத்தப்படக் கூடியவை?

கோவை தீர்மானம் இவற்றைத்தான் சுட்டிக்காட்டு கிறது; கல்வி வந்தாலும் இந்தக் காட்டுவிலங் காண்டித்தன கடும் குரங்குப் பிடியிலிருந்து பெண் கள் விடுதலை பெறாவிட்டால் பெண்களுக்கு மீட்சி இல்லை என்று சுட்டிக்காட்டுவதுதான் அந்த 24 ஆம் தீர்மானம்.

பெண்களே பெரியாரைத் துணை கொள்வீர்!

தமிழ் ஓவியா said...


சிந்தனா சக்தியற்றவன்



தெரியாததை, இல்லாததை நம்ப வேண்டும்; ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதால், மனிதன் அறிவு பெற முடியாமல் சிந்தனா சக்தியற்றவனாக ஆகிவிடு கின்றான்.
(விடுதலை, 2.6.1970)

தமிழ் ஓவியா said...

பதில் சொல்லுமா அதிமுக ஏடு?

மறுபடியும், மறுபடியும் அ.இ.அ.தி. மு.க.வின் அதிகார பூர்வ அக்கிரகார ஏடாகவே மாறிவிட்ட நமது எம்.ஜி.ஆர். வீண் வம்புக்கு வந்து வாங்கிக் கட்டிக் கொள்வதையே வாடிக்கையாக்கிக் கொண்டு விட்டது.

அதுவும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி எல்லாம்கூட எழுதுகிறது என்றால், அதற்கொரு அசட்டுத் துணிச்சல் தேவைதான் என்பதை வேண்டுமானால் ஒத்துக் கொள்ள லாம்.

ஈழத் தமிழர் பிரச்சினையை மய்யப்படுத்திக் கருத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

நட்பு நாடு நட்பு நாடு என்று இலங்கையைச் சொல்லிக் கொண்டு வருகிறதே - இந்தியா - நட்பு நாடு என்றால் என்ன பொருள்?

இந்தி யாவின் வெளிநாட்டின்கொள்கை மாற வேண் டும் என்று திராவிடர் கழகத் தலைவர் சொல்லி விட்டாராம். அத்திரிபாட்சா கொழுக்கட்டை என்று ஒருதாவு தாவுகிறது (அக்ரகார) அதிமுக ஏடு.

திமுக காங்கிரசோடு கூட்டு சேர்ந்தது - இல்லை என்று மறுக்க வில்லை. அதிமுக காங்கிரசோடு கூட்டுச் சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா?

பா.ஜ.க. வோடு கூட்டு சேர்ந்து மத்திய ஆட்சியில் பங்கு ஏற்கவில்லையா? அப்பொழுதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்சினை என்பது இல்லவே இல்லையா?

அப்பொழுது எந்த நேரத்திலாவது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள் கையை அதிமுக விமர்சித்ததுண்டா?

திராவிடர் கழகம் திமுக ஆதரிக் கிறது; அதிமுக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்ததும் உண்டு.

அதற்காக அதிமுக ஆட்சியின் அத்தனை செயல் பாடுகளையும் ஆதரித்ததா என்ன?

மத மாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்தபோது திராவிடர் கழகத் தலைவர் கண்டிக்கவில்லையா?

வேதாகமக் கல்லூரி திறக்கப்பட இருப்பதாகச் சொன்னபோது எதிர்க்க வில்லையா?

மதமாற்றத் தடுப்புச் சட்டம் கொண்டு வந்ததினால் (அதிமுக ஆட்சியை ஆதரித்த காரணத்தால்) அதற்கு திராவிடர் கழகத்தைப் பொறுப்பாக்க முடியுமா?

ஈழத் தமிழர்கள் மீது போர் தொடுக் கப்பட்ட போது அதனைப் பச்சையாக ஆதரித்தாரா இல்லையா அதிமுக பொதுச் செயலாளர்?

போர் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லுவது விடுதலைப்புலிகளைக் காப்பாற்றத் தான் என்று கூறினாரா இல்லையா?

மரியாதையாக, நாணயமாக இவற் றிற்குப் பதில் சொல்லி விட்டு, மறுபடியும் பேனா பிடிக்கட்டும் பார்க்கலாம்.

கடைசியாக ஒரு கேள்வி இந்தி யாவின் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வேண்டுமா? கூடாதா? பதில் சொல்லட்டும்.

@@@@@@

தமிழ் ஓவியா said...

மழை பொழிய....

பொள்ளாச்சி அருகே மழை வேண்டி மனிதப் பொம்மையைப் பாடையில் வைத்து, ஊர்வலமாக இழுத்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தினர் - கிராமப் பெண்கள் கடந்த சனியன்று, விளக்கில் எண்ணெய் ஊற்றி, பாடையைச் சுற்றி வந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.
மழை பொழிவதற்கும், இந்தச் சடங்குக்கும் என்ன சம்பந்தம்?

கழுதைக்கும், கழுதைக்கும் திருமணம் செய்து வைத்தார்களே மழை கொட்டி தீர்த்ததா?

மழை பொழிய இவ்வளவு எளிதான வழி இருந்தாலும் நாட்டில் பஞ்சம் ஏன்? ஏன்? பெண்கள் முதலில் திருந்த வேண்டும்.

திருச்செந்தூர் முருகனுக்கு சிங் கப்பூர் தொழிலதிபர் ஒரு கிலோ 400 கிராம் கொண்ட 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கக் கிரீடத்தை காணிக்கையாக அளித்தார். தமிழ்ப் புத்தாண்டு முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயர் சாமி தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் என்பவை இன்றைய செய்திகள்.
இந்தியாவில் 70 விழுக்காடு மக் களின் நாள் வருமானம் ரூ.20-க்குள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு, அந்தக் கடவு ளுக்கே நகைகளை செய்து அணி விப்பது அசல் முரண்பாடு அல்லவா?

வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி எடுத்து வைத்து அந்த வெல்லப்பிள்ளை யாருக்கே படைப்பதா என்று கிராமத் தில் பழமொழி ஒன்றைச் சொல்லு வார்கள்.
மனிதனால் படைக்கப்பட்ட கடவுள் அந்த மனிதனைப் போலவே ஏமாளி போலும்!

@@@@@@

தமிழ் ஓவியா said...

பெண்ணென்றால்...

பெண் என்றாலே கேலி தானா? மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதி நிதிகள் அதையும் தாண்டி அமைச் சர்கள் எனும் நிலையில் உள்ளவர் கள்கூட இதற்கு விதி விலக்கு இல்லை.

அண்மையில் மகாராட்டிர மாநில அமைச்சர் ஒருவர் மின் வெட்டையும், குழந்தைப் பேற்றையும் ஒப்பிட்டுக் கிண்டலடித்தார்.

இப்பொழுது மத்திய பிரதே சத்தைச் சேர்ந்த பிஜேபி அமைச்சர் விஜய்ஷா என்பவர் பழங்குடி மாணவர்களுக்கான பயிற்சி முகாம் ஒன்றின் பெண்களைப் பற்றி ஆபாச மான நகைச்சுவைத் துணுக்கை சொல்லப் போய் வீண் வம்பில் சிக்கிக் கொண்டார். அந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சரின் மனைவியும் இருந் திருக்கிறார். அதன் காரணமாக பிரச் சினையின் பலூன் உப்பி, கடைசியில் அமைச்சர் பதவி விலக நேரிட்டது.

சட்டப் பேரவையில் உட்கார்ந்து கொண்டு கைப்பேசியில் ஆபாசப் படங்களைப் பார்ப்பது போன்ற வேலை களிலும் சிக்குகின்றனர் அமைச்சர் களும், சட்டப் பேரவை உறுப்பினர் களும். 2002இல் கோத்ரா பிரச்சினை யையொட்டி மோடி அரசால் திட்ட மிட்டு மேற்கொள்ளப்பட்ட சிறு பான்மையினருக்கான வன்முறையில் முசுலிம்கள் முகாம்களில் தங்கும்படி நேரிட்டது.

அப்பொழுது முதல் அமைச்சரான நரேந்திரமோடி முகாம்கள் இனப் பெருக்கத்துக்கும் பயன்படுகின்றன என்று சொன்னாரே - அதே நேரத் தில் அவரை யாரும் பதவி விலகச் சொல்லவில்லை என்பது கவனிக்கத் தக்கது.

தமிழ் ஓவியா said...


பயன்படவேண்டும்


சுக போகத்தினால் இன்பம் காணுவதில் பெருமை இல்லை. தொண்டு காரணமாக இன்பம் காணுவதே சிறந்த இன்பமாகும். வாழ்வு என்பது தங்களுக்கு மட்டும் என்று கருதக் கூடாது. மக்களுக்கு ஆகவும், தொண்டுக்கு ஆகவும் நம் வாழ்வு இருக்கவேண்டும் என்று கருதவேண்டும்.
(விடுதலை, 2.7.1962)