- குழந்தை பெறும் முடிவு பெண்களைச் சார்ந்ததே!
- 50 சதவிகித இடஒதுக்கீடு தேவை! குழந்தையின் முன்னெழுத்து தாயினுடையதே! வாடி போடி என்று அழைக்கக் கூடாது!
- காதல் திருமணம் தேவை! ட திருநங்கையை 3ஆவது பாலாக அறிவிக்கப்பட வேண்டும்
பெண்களின் விடுதலைக்குப் பெரியார் தம் சிந்தனைகளை உலகெங்கும் பரப்புதல் மிக மிக அவசியம்!
கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் புரட்சிகர தீர்மானங்கள்!
கோவையில் நடந்த புரட்சிப் பெண்கள்
மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு பெண் விடுதலை போராளி என்ற
விருதினை மகளிர் அமைப்பின் சார்பில் பலத்த கரவொலிக்கிடையே வழங்கப்பட்டது.
(13.4.2013)
கோவை ஏப்.14- பெண்களுக்கும் அர்ச்சகர்
உரிமை உள்ளிட்ட தீர்மானமும், உலகம் முழுமையும் பெண்கள் விடுதலைக்குத் தந்தை
பெரியார் அவர்களின் சிந்தனைகள் பரப்பப்பட வேண்டும் என்பது உட்பட 26
புரட்சிகர தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று
திராவிடர் கழக மகளிரணி மற்றும் மகளிர் பாசறை சார்பில் நடைபெற்ற புரட்சிப்
பெண்கள் மாநாட்டில் 26 புரட்சிகர தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் எண்: 1
தந்தை பெரியார் அவர்களின் பெண்ணுரிமைச் சிந்தனைகளைப் பரப்புதல் அவசியம்.
பெண்கள் மத்தியில் போதிய விழிப்
புணர்வும், உரிமை உணர்வும், துணிவும் உருவாக்கப்பட பாடத்திட்டங் களில்
(உயர்நிலைக்கல்வி தொடங்கி பல்கலைக்கழகம் வரையில்) தந்தை பெரியார் அவர்களின்
பெண்ணுரிமைச் சிந்தனைக் கருத்துகள் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று
தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும் இம்மாநாடு வலியுறுத் துகிறது.
உலகளவிலும் பெண்களின் உரிமை வாழ்விற்கும், சமத்துவத்திற் கும்,
வளர்ச்சிக்கும் மிகவும் பயன் அளிக் கக்கூடிய தந்தை பெரியார் அவர்களின் பெண்
ஏன் அடிமையானாள் எனும் நூலை உலகெங்கும் பரப்பினால் மிகுந்த பலன்
விளைவிக்கும் என்று இம்மாநாடு கருதுகிறது - தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண்: 2
கானா நாட்டில் பெரியார் அமைப்பு - வரவேற்கத்தக்கது.
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கானா
நாட்டில் தொடங்கப்பட்டுள்ள அரசு அல்லாத தொண்டு நிறுவனமான பெரியார்
ஆப்பிரிக்க அமைப்பு (PERIYAR AFRICAN FOUNDATION) விவசாயப் பணிகளில்
ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் பெண்களுக்கு நிதி உதவி செய்வது, விவசாயத்தைப்
பெருக்குவதற்கான வழிமுறைகளைக் கற்பிப்பது என்பதில் தொடங்கி படிப் படியாக
பெண்களுக்கு எதிரான அனைத்து வகைப் பாகுபாடுகளையும் ஒழிப்பது இதன் நோக்கம்
என்று அறியும்போது, இம்மாநாடு பெருமகிழ்ச்சி அடைகிறது. பெரியார் உலக
மயமாகிறார் என்பதற்கான சான்றும் இது.
ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற பெண்கள்
அமைப்புகள் தொடங்கப்பட்டு, அது விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் தொகை யில்
சரிபகுதி எண்ணிக்கை கொண்ட பெண்கள் மத்தியில் புரட்சி விதைகளை விதைப்பது,
உலகச் சமுதாயத்தையே புரட்டிப் போட வழி செய்யும் என்று இம்மாநாடு உறுதியாக
நம்புகிறது.
தீர்மானம் எண்: 3
சட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைபாடுகள்
1. குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் -
1929, விபச்சார தடுப்புச் சட்டம் - 1956, வரதட்சணைத் தடுப்புச் சட்டம்
-1961, பெண்கள் இழிவு சித்தரிப்புத் தடுப்புச் சட்டம் - 1986, பாலியல்
தொந்தரவு தடுப்புச் சட்டம் - 2000, குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் -
2005, பாலியல் வன்முறைகளிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் - 2012
முதலிய ஏராளமான சட்டங்கள் இருந்தும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாளும்
பெருகி வருகின்றன.
இந்தச் சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு
மக்கள் மத்தியில் இல்லாமையாலும், சட்டத் தைச் செயல்படுத்தும் நிருவாகத்தின்
பொறுப் பற்ற தன்மையாலும் - வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புகள்
வழங்கப்படுவதில் கால தாமதம் ஆவதாலும் குற்றங்கள் பெருகுவது
தடுக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் கல்லூரிகள் அளவில்
பாடத்திட்டத்திலும், ஊடகங்கள் வாயிலாக மக்கள் மத்தியிலும் இச்சட்டங்கள்
பற்றிய விழிப் புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று மாநில, மத்திய அரசுகளை
இம்மாநாடு வலியுறுத்துகிறது. சட்டங்களைச் சரிவர செயல்படுத்தாத
அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
புரட்சிப் பெண்கள் மாநாட்டில், தீர்மானங்களை மகளிர் பாசறை மாநில செயலாளர் டெய்சி.மணியம்மை முன்மொழிந்தார் (கோவை, 13.4.2013)
தீர்மானம் எண்: 4 (அ)
பெண்களின் திருமண வயது உயர்த்தப்பட வேண்டும்
குறைந்தபட்சம் பட்டப் படிப்புப் பெற 22
வருடங்கள் தேவைப்படுவதால், பெண்களின் திருமண வயதை 22 ஆகவும், ஆண்களின்
திருமண வயதை அதற்கு மேலும் உயர்த்த வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய
மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.
இந்தியாவில் 22 விழுக்காடு பெண்கள் 18
வயது நிறைவுக்கு முன்பே குழந்தைகளைப் பெற்றுக் கொள் கிறார்கள். இது
பெண்களின் விடுதலைக்கும், ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல என்பதையும்
இம்மாநாடு சுட்டிக்காட்டுகிறது.
தீர்மானம் எண்: 4 (ஆ)
விவாகரத்து வழக்கில் விரைவில் தீர்ப்பு தேவை
விவாகரத்துத் தொடர்பான வழக்கில் அளவிறந்த
வகையில் காலதாமதம் செய்யப்படுவதை மாற்றி ஆறு மாதங்களுக்குள் தீர்ப்பு
வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்: 4 (இ)
பாலியல் கல்வி தேவை
ஆரோக்கியமான பாலியல் தொடர்பான கல்வியைக்
கல்லூரிகள் மட்டத்திலாவது போதிப்பது அவசியம் என்று இம்மாநாடு
தெரிவித்துக்கொள்கிறது. வெற்றிகரமாக மணவாழ்வு அமைவதற்குத் தக்க புரிதல்
உணர்வை இது உருவாக்க உதவும் என்பதால் மண வாழ்வின் தோல்வியைப் பெரும் அளவில்
தடுக்கவும், தவிர்க்கவும் இது உதவும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்
கொள்கிறது.
தீர்மானம் எண்: 5
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உள்ஒதுக்கீட்டுடன் கூடிய 33 விழுக்காடு இட ஒதுக்கீடு தேவை
சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில்
பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 1996 முதல்
நிலுவையில் உள்ளது. இதற்கு மேலும் காலதாமதம் செய்யாமல் உள்ஒதுக்கீட்டுடன்
கூடிய 33 சதவிகித இடஒதுக்கீடு சட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்
என்றும், விரைவில் - அதனை 50 சதவிகிதமாக உயர்த்திட ஆவன செய்ய வ்ணடும்
என்றும் மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம்
இருக்கும் பெண்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் ஆட்சி அமைக்க முடியும்
என்பதைக்கூட மறந்து, அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டாம் என்றும் இம்மாநாடு
எச்சரிக்கிறது. இந்த சட்டத்தை செயல்படுத்த முன்வரும் கட்சிகளுக்கே
வாக்களிப்பது என்ற முடிவு செய்ய நேரும் என்றும் இம்மாநாடு தெரிவித்துக்
கொள்கிறது.
தீர்மானம் எண்: 6
பெண் கல்வி
(அ) உயர்கல்வியில் ஆண்களுக்கு நிகராகப்
பெண்கள் படிக்கும் வகையில் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கித்
தரவேண்டுமென்று மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு வலி யுறுத்துகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் உயர்கல்வியில் பெண்கள் சதவிகிதம் 47
விழுக்காடு என்ற அளவில் தான் உள்ளது!
(ஆ) நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின்
எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. உயரதிகாரம் படைத்த உயர்நீதி
மன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்
அதிகம் கிடைத்திட ஆவன செய்ய வேண்டுமென மத்திய அரசையும்,
உச்சநீதிமன்றத்தையும் இம்மாநாடு வலி யுறுத்துகிறது.
(இ) தொழில்துறைகளில் பெண்கள் தலைமை
யிடம் என்பது வெகு அரிதாகவே உள்ளது. ஆண்கள் ஆதிக்கம்தான் இந்தத் துறையில்
மிகுந்து காணப்படுவதால், பெண்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் சலுகைகள்
அளித்து, ஊக்குவிக்குமாறு மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு கேட்டுக்
கொள்கிறது.
(ஈ) சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்
பாட்டினை எல்லாத் துறைகளிலும் ஆண் களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம
ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 7
காதல் திருமணம் அவசியம்
காதல் திருமணங்களுக்கு எதிராகப்
பிரச்சாரம் செய்வதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வது என்றும், காதலர் நாளை
எதிர்க்கும் பிற்போக்குச் சக்திகளை எதிர்ப் பிரச்சாரம் - எதிர்
நடவடிக்கைகள் மூலம் முறியடிப்பது என்றும், ஜாதி ஒழிப்புக் கண்ணோட்டத்திலும்
காதல் திருமணத்தை ஊக்குவிப்பது என்றும் தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம் எண்: 8
குழந்தையின் பெயருக்கு தாயின் முன்னெழுத்து (INITIAL) குழந்தைகளின் பெயர்களுக்கு முன்னால் முன் னெழுத்தைக் (INITIAL)
குறிப்பிடும்பொழுது கண்டிப்பாக தாயின் பெயரையும் முன்னிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதனை சட்டப்படியாகவும் ஆக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
குறிப்பிடும்பொழுது கண்டிப்பாக தாயின் பெயரையும் முன்னிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது. இதனை சட்டப்படியாகவும் ஆக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 9
பெண்களை இழிவுபடுத்தும் ஊடகங்கள், திரைப்படங்கள்
பெண்களை விளம்பரப் பொருளாக ஊடகங்களில்
பயன்படுத்துவது, திரைப்படங்கள் பெரும் வசூலைக் குவிக்க பெண்களை அரைகுறை
ஆடையுடன் சித்தரிப்பது, இரட்டைப் பொருள்தரும் கேவலமான வசனங்களை இடம்பெறச்
செய்வது, பெண்களை எப்பொழுதும் கண்ணீர் விடும் கோழைகளாகச் சித்தரிப்பது
அல்லது வில்லிகளாக உருவகப்படுத்துவது என்ற போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க
வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
சின்னத்திரையையும் தணிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்தக்
குழுவில் பெண்கள் முக்கிய இடம்பெற வேண்டும் என்றும இம்மாநாடு வற்
புறுத்துகிறது. கோயில்களிலும், தேர்களிலும் ஆபாசமான வகையில் நிர்வாணத்
தன்மையில் சிற்பங்களைச் செதுக்குவது தடை செய்யப்பட வேண்டும் என்று
இம்மாநாடு தெரிவித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 10
திருத்தப்பட வேண்டிய தீர்ப்பு
மருமகளை மாமியார் எட்டி உதைத்தால் அது
ஒன்றும் குற்றமல்ல; என் மகன் உன்னை விவாகரத்து செய்து விடுவான் என்று
மாமியார் மிரட்டுவதும் குற்றமல்ல; இந்தக் குற்றவியல் பிரிவு 498இன் கீழ்
தண்டனைக் குற்றமல்ல என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்கா,
சிரியாக் ஜோசப் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்புக் கூறியுள்ள
தானது (22-7-2008) அசல் பிற்போக்குத் தனமான தாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பு
என்பது சட்ட வலிமை உடையது என்பதால் இதனை மாற்றி அமைக்கும் வகையில்
சட்டத்திருத்தம் ஒன்றைக் கொண்டுவர மத்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 11
இடஒதுக்கீட்டுக்குத் தந்தையின் ஜாதிதான் செல்லும் என்ற தீர்ப்பு மாற்றப்படுதல் அவசியம்
ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட
வர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் இடஒதுக்கீடு பெறுவதற்கு - தந்தையின்
ஜாதியைத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தீர்ப்பை மாற்றி,
தாய் அல்லது தந்தையின் ஜாதியை விருப்பப்படி கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
என்கிற வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமாய் நடுவண் அரசை இம்மாநாடு
வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 12
பெண்களை மரியாதைக் குறைவாக விளிக்கக் கூடாது
பெண்களை நீ, போ என்றும், வாடி, போடி
என்றும் ஏய் என்றும் விளிக்கும் அநாகரிக முறைகளுக்கு இம்மாநாடு தனது
கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இரு தரப்பிலும் நாகரிகமான சமமான
மரியாதை பேணப்படுவதன் அவசியத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
இரு தரப்பிலும் வாங்க - போங்க எனும் சொல்லாடலைப் பயன்படுத்துதல் பண்பாட்டுக்கு உகந்தது என்றும் இம்மாநாடு பரிந்துரைக்கிறது.
தீர்மானம் எண்: 13
குழந்தை பெறும் முடிவு பெண்களைச் சார்ந்ததே!
கருவுறுதல், பிரசவித்தல், வளர்த்தல்
என்பவை பெண்களையே சார்ந்திருப்பதால் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை
எடுக்கும் உரிமை பெண்களையே சார்ந்தது என்று இம்மாநாடு
பிரகடனப்படுத்துகிறது.
தீர்மானம் எண்: 14
பெண்ணடிமைத்தனமும் இந்துத்துவாவும்
பெண்கள் வீட்டு வேலைக்குத்தான் லாயக்கு.
அதிலிருந்து பிறழ்வதால்தான் பெண்கள் மீதான வன்முறை நடக்கிறது என்று
ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பகவத் கூறி இருப்பதற்கு இம்மாநாடு தனது
கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.
இதற்கு முன்பும்கூட காஞ்சி
சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு
ஒப்பிட்டதையும், பணிக்குச் செல்லும் பெண்கள் ஒழுக்கக் குறைவானவர்கள் என்று
கருத்துக் கூறியதையும் கணக்கில் கொண்டு பெண்களைக் கீழ்மைப்படுத்தும்
இத்தகைய இந்துத்துவா சக்திகளை முறியடிக்க வேண்டும் என்று பெண்களை இம்மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 15
பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
தொடர்பாக தமிழ்நாடு அரசால் நீதிபதி மகராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம்
தனது அறிக்கையில் (பக்கம் 29-31) இந்துக் கோயில்களில் பெண்களும்
அர்ச்சகராகலாம் என்று கூறப்பட்டுள்ளதால், இந்திய அளவில் பெண்களுக்கு
அத்தகைய உரி மையை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் ஒன்றினை
நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 16
பெண்கள் உடல் வலிமையை வளர்த்திட பயிற்சிகள் கட்டாயம் தேவை
பெண்கள் கல்வி ஒரு வகையில் வளர்ந்து
வருவது மகிழ்ச்சிக்குரியது என்றாலும் உடல் வலிமையில் ஆண்களைவிடப்
பலகீனமானவர்கள் என்ற எண்ணமும், நாட்டில் இருப்பதால், ஆண்களின் வெறித்
தாக்குதலிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவும் (DEFENSIVE)
தேவைப்பட்டால் தாக்குதல் தொடுக்கும் (OFFENSIVE) அளவுக்கும் பள்ளிகள்
முதற்கொண்டு தேவையான உடற்பயிற்சியையும், கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம்
போன்ற சிறப்புப் பயிற்சி களையும் பெண்களுக்கு கட்டாயமாக்க வேண்டும் என்று
இம்மாநாடு மாநில, மத்திய அரசுகளை வலி யுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 17
திருநங்கையர்களுக்கான உரிமைகளும், வாய்ப்புகளும்
(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்
கைகளை மூன்றாவது பாலாக மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட
வேண்டும் என்றும், ளுநஒ என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம்
தரவேண்டியது அவசியம்.
(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக
உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி,
உடனே செயல்படவைக்க வேண்டும் என்றும்,
(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில்
சிறுபான் மையினர் நியமனம் செய்யப்படுவது போல திரு நங்கையருக்கும் அந்த
வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,
(4) கல்வி, வேலைவாய்ப்பில்
திருநங்கையர்க்குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்
என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து
வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில
அரசுகளை வற்புறுத்துகிறது.
தீர்மானம் எண்: 18
மன்றல் நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பும் - வேண்டுகோளும்
சென்னையில் உள்ள பெரியார் சுயமரியாதைத்
திருமண நிலையத்தின் முயற்சியால் நடத்தப்பட்டு வரும் - ஜாதி ஒழிப்பு - மத
மறுப்பு மற்றும் விதவை யர்களுக்கான திருமண ஏற்பாடான மன்றல் நிகழ்ச்சியை
இம்மாநாடு பாராட்டி வரவேற்கிறது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளிலும் இதனை
விரிவு படுத்தினால் சமூகத்தில் மிகப் பெரிய மாற்றம், புரட்சி ஏற்பட
வழிவகுக்கும் என்று இம்மாநாடு தெரி வித்துக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 19
பெற்றோர்களைப் பேணுதலும் பெண்களின் கடமையும்
மூப்படைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட
பெற்றோர் களைப் பாதுகாப்பது தலைசிறந்த கடமையும், மனிதநேயமும் ஆகும். கல்வி,
பொருளாதாரம் வளர்ந்த அளவுக்கு இப்பிரச்சினைகளில் பிள்ளைகளுக்கு நல்லுள்ள
வளர்ச்சி குறைந்து வருவதை சமூகத்தில் பரவலாகக் காணமுடிகிறது.
இதில் ஆண்களைவிட பெண்கள் சிறந்த மனிதத்
தன்மையுடனும், கடமையுணர்வுடனும், பொறுப் புணர்வுடனும் நடந்துகாட்ட
வேண்டுமென இம்மாநாடு பெண்களைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 20
பெண்கள் பெரும்பாலும் மார்பகப் புற்றுநோய், கருப்பைவாய்ப் புற்று நோயால் பெரிதும் அல்லல் படுகின்றனர்.
கருப்பை வாய்ப் புற்றுநோயினால் 7 நிமிடத்திற்கு ஒரு பெண் மரணமடைகின்றார் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதற்கான தடுப்பூசியை மூன்று முறை போட்டுக்
கொள்வதற்கு ரூ.6900 ஆகிறது. இதனை ஏழை எளிய மக்கள் பயன்படுத்திக் கொள்ள
குறைந்த நிலையில் அரசு மருத்துவமனைகள் மூலம் இலவசமாக போடுவதற்கு ஆவன செய்ய
வேண்டுமென மாநில, மத்திய அரசுகளை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
மார்பகப் புற்று நோயைப் பொறுத்தவரை அதனைக்
கண்டறியும் சோதனைக்கான வாய்ப்புகளை ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் (PHC)
உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஏற்படுத்தித் தர வேண்டுமாய் மாநில,
மத்திய அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார
நிறுவனத்தின் சார்பில் நடமாடும் நகர்வுப் புற்றுநோய்ப் பரிசோதனை -
விழிப்புணர்வு முகாம் நடைபெறுவதை நல்ல வண்ணம் பயன்படுத்திக் கொள்ளவும்
கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தங்கள் தங்கள் பகுதிக்கு அழைத்துப் பயன்
பெறலாம் என்றும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தீர்மானம் எண்: 21
ரயில்களில் பெண்களுக்குப் போதுமான பெட்டிகள் ஒதுக்கீடு செய்தல்.
மக்கள் தொகையில் கிட்டத்தட்ட
சரிபகுதியாகவுள்ள பெண்களுக்கு ரயில்களில் போதிய அளவுக்குத் தனிப் பெட்டிகள்
ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை; வெறும் அரைப்பெட்டி என்கிற அளவுக்குத்தான்
ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது மிகப்பெரிய அநீதியாகும்.
குறைந்தபட்சம் இரண்டு தனிப் பெட்டிகளாவது
பெண்களுக்கென்று ஒதுக்கீடு செய்ய ஆவன செய்ய வேண்டுமாய் மத்திய அரசை
இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் இதற்காகக்
குரல் கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 22
படித்த பெண்களின் கடமை
படிப்பறிவு இல்லாமலும், போதிய
விழிப்புணர்வு இல்லாமலும் உரிமையற்ற நிலையில் குடும்பச் சக்கரச்
சுழற்சியில் சிக்கிக்கொண்டு கண்ணீரும் கம்பலை யுமாகக் காலத்தைக் கழித்துக்
கொண்டிருக்கும் பெண்களுக்குத் தேவையான உதவிகளையும், வழிகாட்டுதலையும்
செய்து தருமாறு படித்த பெண்களை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 23
குழந்தைகளை வளர்க்கும் முறையில் மாற்றம் தேவை!
பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு இனிவரும்
கால கட்டங்களில் சடைபின்னுதல் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தாமல் ஆண்களைப்
போலவே கிராப் மற்றும் உடைமுறைகளைப் பழக்குவிக்குமாறு இம்மாநாடு பெண்களைக்
கேட்டுக்கொள்கிறது.
ஆண் பிள்ளைகளுக்கு நிகராக பெண் குழந் தைகளுக்கும் அனைத்து வசதிகளையும், ஊட்டச்சத்து உணவுகளையும் அளிக்க வேண்டும் என்றும் இம்மாநாடு வலியுறுத்துகிறது.
தீர்மானம் எண்: 24
முற்போக்குச் சிந்தனை தேவை
கோயில் வழிபாடு, பண்டிகைகளைக் கொண்
டாடுதல், சடங்குகளைச் செய்தல், மூடப்பழக்க வழக்கங்களைப் பின்பற்றுதல்,
சாமியாரிணிகள், ஜோதிடர்கள், மந்திரவாதிகளை நம்பி அவர்கள் பின்னால்
செல்லுதல், மோசம் போதல் முதலியவை பெண்களை மேலும் இழிவுபடுத்தவும்,
முற்போக்குத் திசைக்கும், வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பயணிப்பதைத்
தடுக்கவும்தான் பயன்படும் என்பதை உணர்ந்து, இந்தத் தளைகளிலிருந்து
முற்றிலும் விடுபட்டு, பகுத்தறிவோடு சிந்தித்து, தன்னம்பிக் கையோடு
செயல்படவேண்டும் என்று பெண்கள் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
வேதங்கள் - இதிகாசங்கள் - புராணங்கள் - சாஸ்திரங்கள் என்பவை அனைத்தும்
பெண்களை இழிவுபடுத்தும் தன்மை கொண்டதாலும், ஆபாச உணர்வுகளை ஊட்டுவதாலும்
பகுத்தறிவுக்கு விரோதமாக உள்ளதாலும் இவற்றை அறவே புறக்கணிக்கும்படி பெண்கள்
சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 25
ஈழத்தமிழினப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளும் - பரிகாரங்களும்
ஈழத்தில் தமிழர்கள் படுகொலை எனும் பொதுவான
பிரச்சினையில் தமிழ்ப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை அசாதாரணமானது.
சிங்கள ராணுவத்தி னராலும், சிங்கள வெறியர்களாலும் தமிழ்ப் பெண்கள் பாலியல்
வன்கொடுமைகளுக்கு பெரிதும் ஆளாக்கப் பட்டுள்ளனர். தமிழர்கள் மீது
தொடுக்கப்பட்ட போரின் காரணமாக தங்கள் துணைவரையும், பிள்ளை களையும்
குடும்பத் தலைவர்களையும் பறிகொடுத்தும், பெண்கள் பரிதவிக்கும் கொடுமை
சொல்லுந்தரமன்று.
ஈழத் தமிழ்ப் பெண்களின் மீள் வாழ்வுக்கென்று தனித்துவம் வாய்ந்த திட்டங்களைச் செயல்படுத்து வதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்றும் இந்தக் கண்ணோட்டத்திலும் அய்.நா.வும் உலக நாடுகளும் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டுமென்றும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண்: 26
திராவிடர் கழகத்தில் பெண்கள் சேரவேண்டும்
பெண்களின் முற்போக்குக்கும்,
உரிமைகளுக்கும், சமூக சமத்துவத்திற்கும் பாடுபடக்கூடியது திராவிடர் கழகம்
மட்டுமே என்பதால் திராவிடர் கழகமே தங்களுக்கான பாசறை என்பதை உணர்ந்து,
பெண்கள் திராவிடர் கழகத்தில் சேர முன்வரவேண்டும் என்று இம்மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
கழக மகளிர் அணியினர், மகளிர் பாசறையினர்
பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் அக்கறை கொள்ளவும், தேவைப்பட்டால்
போராடவும் அவர் களோடு சதா தொடர்பு கொள்ளவுமான நிலையை ஏற்படுத்திக் கொள்ள
வேண்டுமென கழக மகளிர ணியினர் மற்றும் மகளிர் பாசறையினரை இம்மாநாடு
கேட்டுக்கொள்கிறது.
------------------------------”விடுதலை” 14-4-2013
20 comments:
அந்த மாமனிதர் அம்பேத்கர்!
கிழக்குவானில் எழுந்தசுடர் விளக்காய்; தாழ்ந்து
கிடந்தமக்கள் தமைஎழுப்ப வந்த வன்நீ!
விழியிருந்தும் குருடர்களாய் வாழ்ந்தும்; பேச
வாயிருந்தும் ஊமைகளாய் இருந்தும்; வாழ
வழியின்றி ஆண்டாண்டாய் ஒடுக்கப்பட்டு
வறுமையிலும் கொடுமையிலும் தவித்த மக்கள்
எழுந்துதலை தூக்கவந்தாய், எனினும் அந்த
இருள்முழுதும் விலகியதோ? இன்னும் இல்லை!
பிறப்பினிலே தாழ்வுயர்வு இலைஎன் றாலும்
பன்றிகட்கும் நாய்களுக்கும் கீழாய் சொந்தத்
திருநாட்டில் இந்தமக்கள் மதிக்கப் பட்டார்;
தீண்டாமை எனும்கொடிய நெருப்பில் தீய்ந்தார்!
அரிசனங்கள் ஆண்டவனின் குழந்தை என்றும்
அழகாக ஏமாற்றப் பட்டார் நாட்டில்!
திரையிட்டு மூடிவைத்த ஓவி யம்போல்
துயர்சுமந்து கிடந்தார்கள் அந்த மக்கள்!
அறியாமை எனும்இருட்டில் கிடந்தும்; ஜாதி
ஆதிக்கத்தின்பிடியில் உழன்றும்; கூட்டில்
சிறைப்பட்டப் பறவைகளாய்த் தாழ்த்தப் பட்டோர்
கேரிஎனும் ஊர்ப்புறத்தில் ஒதுக்கப்பட்டும்
தரித்திரராய் வாழ்ந்துமடிந் தழிந்தார்! தங்கற்
தலைவிதியோ இதுவென்று நினைத்தார் அன்றி
உரிமையொடு எவர்க்கும்சரி நிகராய் வாழும்
உண்மையினை அந்தமக்கள் அறிந்தா ரில்லை!
ஊரிலுள்ள பொதுக்குளத்தில் நீர் எடுக்க
உயர் ஜாதி மக்களாலே மறுக்கப் பட்டார்!
சேரி மக்கள் தொட்டுவிட்டால் தீட்டாம் என்றே
தெருவினிலே நடப்பதற்கும் தடுக்கப்பட்டார்!
வேரைப்போல் மண்ணுக்குள் இருந்து கொண்டு
மற்றவர்கள் உயர்ந்தோங்க உழைத்த மக்கள்
சீர்கெட்டுக் கிடந்தார்கள், சிந்தை நொந்துத்
தவித்தார்கள்! அவர்களையார் நினைத்துப் பார்த்தார்?
பள்ளத்தில் கிடந்தமக்கள் எழுந்து வந்து
படியேற நினைக்கையிலும் உதவி டாமல்
தள்ளிவிடப் பட்டார்கள்! கல்வி என்னும்
தருநிழலில் ஒதுங்குதற்கும் மறுக்கப் பட்டார்!
எல்லார்க்கும் பொதுவென்னும் கோயிலுக்குள்
இம்மக்கள் செல்வதற்கும் உரிமை இல்லை!
கல்லாக இருக்கின்ற காரணத்தால்
கடவுள்களும் கண் திறந்து பார்த்ததில்லை!
ஜாதிமதத்தின் பேரால் கடவுள் பேரால்
தன்இனத்து மக்களெல்லாம் பல்லாற் றானும்
நீதிபெற முடியாமல் பட்ட துன்பம்
நிச்சயமாய் இனிதொடரக் கூடா தென்றே
நாதியற்றும் நலிவுற்றும் கிடந்தோர் வாழ்வில்
நிலையான முன்னேற்றம் பெற உழைத்தாய்!
ஆதிநாளின் கொடுமை இன்று இவையென்றாலும்
அடிமைநிலை முழுதும்இன்னும் மாற வில்லை!
செந்தாமரைசேற்றில் மலர்ந்த தைப்போல்
தோன்றாது தோன்றியமா மணியாய் நீதான்
வந்துபிறந் தாயேஇச் சமுதாயத்தில்!
விடிவெள்ளியாய் உன்னைக் காண்ப தற்கு
நொந்துதவம் செய்தாரோ அந்த மக்கள்!
நெடுவாழ்வின் துயர்போக்கும் மருந்தே நீதான்!
இந்தபிறப்பில் மட்டும் இன்றி என்றும்
இறவாத புகழுலகில் வாழ்வாய் நீயே!
- கா. முருகையன்
சென்னை -72
கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்!
கோவையில் புரட்சிப் பெண்கள் மாநாடு
26 தீர்மானங்களும் கால செப்பேடு - சிலாசாசனங்கள்!
ஆண்கள் மட்டுமல்ல - பெண்களுக்கும் அர்ச்சகர் உரிமை வேண்டும்!
கிடைக்காவிட்டால் கோவில்களைப் பெண்கள் பகிஷ்கரிப்பார்கள்!
கோவை புரட்சிப் பெண்கள் மாநாட்டில் தமிழர் தலைவர் முழக்கம்!
கோவை, ஏப்.14- அர்ச்சகர் உரிமை ஆண் களுக்கு மட்டுமல்ல; பெண்களுக்கும் வேண்டும். கிடைக்காவிட்டால், கோவில்களுக்குச் செல்வதைப் பெண்கள் புறக்கணிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
உரை வருமாறு:
இந்த இயக்கம் வரலாறு படைக்கக்கூடிய ஒரு இயக்கம். அறிவாசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு பெரியார் என்ற பட்டத்தை அன்றைக்கு மகளிர்தான் அளித்தார்கள்.
அவர்களுடைய உழைப்பிற்கு, அவர்களுடைய அடையாளத்திற்கு அன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் முன்னோடியாகத் திகழ்ந்த பெண்கள், எதையும் முன்கூட்டியே முடிவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் என்பதை எடுத்துக்காட்டக்கூடிய அற்புதமான முடிவாக அந்தப் பெரியார் என்ற பட்டம், அந்த சிறப்பு நின்றது.
அதுபோன்று என்னை ஒப்பிட்டு இங்கே சொன்னார்கள். நான் பெரியாரோடு ஒப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவிற்கு இருக்கக்கூடியவன் அல்ல; உங்களைப்போலவே, ஒரு போராளியாக இருக்கக் கூடியவனாக இருந்தாலும்கூட, காலை யில்கூட நான் எடுத்துச் சொன்னேன், அய்யா அவர்கள் தெளிவாகச் சொன்னார்கள், பெண் கள் விடுதலை என்று சொன்னால், அது பெண் களால் மட்டுமே முடியுமே தவிர, ஆண்கள் எவ் வளவு தீவிரமாகப் பேசினாலும், எவ்வளவு துணிந்து அவர்கள் நின்றாலும், அது சமுதாய விஞ்ஞானப் பார்வையிலே சரியாக இருக்குமே தவிர, முழுக்க முழுக்க நீங்கள் (பெண்கள்) அதற்குத் தயாராகுங்கள்.
அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்
இன்றைக்குக் காலையில் இருந்து வெற்றி கரமாக இந்தப் பகுதியிலே, இந்த மாநாட்டினை நம்முடைய தோழியர்கள் அற்புதமாக நடத்தி யிருக்கிறார்கள். பிஞ்சுகள் உள்பட ஒவ்வொரு வரும் சிறப்பாக முயற்சி எடுத்திருக்கிறீர்கள்; அதற்காக உங்களைப் பாராட்டுகிறேன். அதற்கு நம்முடைய இயக்கத் தோழர்கள், இந்தப் பகுதி தோழர்கள், நண்பர் சந்திரசேகர் அவர்களின் தலைமையிலே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார் கள். அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டு களை இயக்கத் தலைமையின் சார்பாக தெரி வித்துக்கொள்கிறேன்.
கொள்கைப் பயிர்கள் வளரக்கூடிய நிலம்
எப்பொழுதுமே கோவையிலே, குறிப்பாக இந்தப் பகுதிகளில் எல்லாம் கொள்கைப் பயிர் கள் தாராளமாக வளரக்கூடிய, அற்புதமான ஒரு நிலமாக இது திகழ்ந்துகொண்டிருக்கிறது. ஆனால், அதேநேரத்தில், தாய்மார்களுக்குத் தெரியாதது அல்ல; கொள்கைப் பயிர் வளர்கின்ற நேரத்தில், கட்டுப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய இந்த இயக்கத்திலே, களைகள் நுழைந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். களைகளுக் கும், பயிர்களுக்கும் பல நேரங்களிலேயே வேறு பாடு தெரியாது. அந்த நிலையிலும் மிக எச்சரிக் கையாக இருந்தால், நிச்சயம் வெற்றி நம்முடை யதே தவிர, நம்முடைய எதிரிகளிடம் கிடையாது என்பதை உறுதியாக நினைத்துப் பார்க்கவேண்டும்.
வரலாற்றில் நிலைக்கக் கூடிய தீர்மானங்கள்
26 தீர்மானங்கள்; வரலாற்றில் நிலைக்கக் கூடிய தீர்மானங்கள். பெண்ணுரிமை சிலாசாச னம், செப்பேடு, சரித்திரக் கல்வெட்டுகள் என்பது மட்டுமல்ல, எதிர்கால சட்டத்திட்டங்கள் அரசு களுக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்று சொல்லக்கூடிய அற்புதமான தீர்மானங்களை இங்கே நிறைவேற்றி இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு தீர்மானமும் தனித்தனியே விளக் கக் கூடிய வகையில் அமைந்துள்ளன. ஆனால், இங்கே அத்தனையையும் விளக்குவதற்கு நேர மில்லை. ஆனால், இத்தீர்மானங்கள் மிகச் சிறப்பான வகையில் விடுதலையில் வெளிவரும்.
விடுதலை சந்தாக்கள்!
அதுபோலவே, தமிழகமெங்கும் திரண்டு இருக்கக் கூடிய நம்முடைய கழக செயல்வீரர்கள், கழகப் பொறுப்பாளர்கள் விடுதலை நாளேடு என்று தந்தை பெரியார் தந்த, புரட்சி ஏடான, அந்த அறிவு ஏடு, அறிவாயுதத்தை நாடெல்லாம் பரப்பவேண்டும்; வீடெல்லாம் அது நுழைய வேண்டும் என்பதற்கு அடையாளமாகத்தான் ஏறத்தாழ 4,178 சந்தாக்களைத் திரட்டித் தந்திருக் கிறீர்கள், அதற்காகத் தலைதாழ்ந்த நன்றி. அனைத் துத் தோழர்களுக்கும், இதற்கு ஆதரவளித்தவர் களுக்கும் தெளிவாகச் சொல்லிக் கொள்கிறேன்.
விடுதலை ஏடு அது ஒரு அறிவாயுதம்; தலை வர் தந்தை பெரியார் தந்த அறிவாயுதம். அந்த அறிவாயுதம் இருக்கின்ற வரையிலே, இந்த இனத்தை யாராலும் அழித்துவிட முடியாது. இந்த இயக்கத்திற்கு வாளாகவும், கேடயமாகவும் பயன்படுவது மட்டுமல்ல, இந்த இனத்திற்குப் பயன்படுகிறது. அதுதான் மிக முக்கியமானது. சமூகநீதிக் கொடி எங்காவது தாழ்கிறதா? விடுதலை அதனைச் சுட்டிக்காட்டும். சரித்திரச் செய்திகளை உருவாக்கிக் கொண்டிருக்கும். ஆகவே, அதற்காக அரும்பாடு பட்டுக்கொண்டு சந்தாக்களைக் கொடுத்தவர்களுக்கு எங்களு டைய நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறோம். இதன்மூலமாக, இன்னும் இயக்கம் சிறப்பாக இருக்கிறது என்பதைப் பாராட்டத்தகுந்த வகை யிலே, மிக அற்புதமாக உருவாகியிருக்கிறது.
அதேபோல, இந்த மாநாட்டைப் பொறுத்த வரையில் நேரமின்மை காரணத்தால், என்னு டைய உரையை சுருக்கமாக நிகழ்த்தவிருக்கிறேன்.
இரண்டு தீர்மானங்களில் இருக்கின்ற மய்யக் கருத்து
காலையிலே விரிவாக ஏறத்தாழ ஒரு மணி நேரம் பெரியாருடைய பெண்ணியப் புரட்சிப் பார்வை எப்படிப்பட்டது; பெரியார் கண்ட தெல்லாம் புரட்சிப் பெண்கள்தான் என்பதை விளக்கி இருந்தாலும்கூட, இங்கு இரண்டு தீர் மானங்களில் இருக்கின்ற மய்யக் கருத்தை மட்டும் உங்கள் முன்னாலே சுருக்கமாக எடுத்து வைக்க இருக்கின்றேன்.
நெஞ்சில் தைத்த ஒரு முள்ளை...
ஒன்று, தெளிவாக நாம் அடுத்து களங்காணப் போகின்ற ஒரு போராட்டம். அந்தக் களங் காணக் கூடிய போராட்டம் என்னவென்று சொன்னால், தந்தை பெரியார் அவர்களுக்கு அரசு மரியாதை கொடுத்து கலைஞர் அவர்கள் திராவிட முன் னேற்றக் கழக ஆட்சி போனாலும் பரவாயில்லை; எனக்குப் பெரியாருக்குக் கொடுக்கவேண்டிய மரியாதைதான் மிக முக்கியம். அதுதான் அரசு மரியாதை என்று தெளிவுபடுத்தினார். அந்த நேரத்திலே அவர் சொன்னது, நெஞ்சில் தைத்த ஒரு முள்ளை அகற்ற முடியவில்லை என்று ஆதங்கப்பட்டார்கள்.
பிறகு அய்ந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அவர்கள் மீண்டும் அந்த முள்ளை எடுக்கக் கூடிய அந்த வாய்ப்பை அவர்கள் தெளிவாகப் பயன்படுத்தினார்கள். அப்படிப் பயன்படுத்தி சட்டம் வந்து அனைத்து ஜாதியினரும் ஏறத்தாழ பார்ப்பனர்கள் உள்பட 69 சதவிகித இட ஒதுக் கீட்டின்படி, 206 பேர்களுக்கு மேலாக பயிற்சி பெற்று பணிக்குத் தயாராக இருக்கிறார்கள்.
தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு ஆனால், வழக்கம்போல பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றத்திற்குப் படையெடுத்து, வழக்கு சில மாதங்களுக்கு முன்னாலே வந்தபோது, தமிழக அரசு, இன்றைய தமிழக அரசு பார்ப்பனீயத்தை தலைதூக்கிப் பிடிக்கலாம் என்று பல நேரங் களில் நினைத்து, நாளைக்குக்கூட தமிழ்ப்புத் தாண்டு என்பது, நித்திரையில் இருக்கும் தமிழா, தமிழ்ப்புத்தாண்டு சித்திரை அல்ல; தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை எடுத்துச் சொல்லி தந்தை பெரியார், மறைமலையடிகள், திரு.வி.க., தமிழ் அறிஞர்கள் சொன்னார்களே, அந்தக் கருத்தையெல்லாம் மய்யப்படுத்தி, தை முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்கள்; இல்லை இல்லை, அதையெல்லாம் மாற்றுவேன் என்று இன்றைய அரசினர் சொல்லியிருக்கிறார்கள்.
இவைகளையெல்லாம் மாற்றுவோம் என்று சொல்லியிருக்கின்றபோது, நம்முடைய, மக்களு டைய இன உணர்ச்சி என்பது சவாலாக இன்று நின்றுகொண்டிருக்கிறது.
மோட்சத்திலே முன்சீட் பெறுவதற்காக அல்ல...
அதேபோலத்தான், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகவேண்டும்; எதற்காக? மோட்சத் திலே முன்சீட் பெறுவதற்காக அல்ல. ஜாதியை ஒழிப்பதற்காக, தீண்டாமையை ஒழிப்பதற்காக என்ற அந்தச் சூழ்நிலையிலே, அந்த சட்டம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்த நிலையில், நாங்கள் சுமூகமான ஒரு தீர்வு காணு வோம் என்று தமிழக அரசின் சார்பாக வாய்தா வாங்கி இருக்கிறார்கள். அதைப்பற்றி நமக்குக் கவலையில்லை. ஆனால், அதேநேரத்தில், வாய்தா வாங்கியது நன்மையிலே முடியவேண்டாமா?
இதைத்தான் சிறீரங்கத்திலே சொன்னோம்; சில நாள்களுக்கு முன்பு குடந்தைப் பொதுக் கூட்டத்தில் சொன்னோம்; மீண்டும் கோவையில் சொல்கிறோம்.
ஏற்கெனவே இந்த அரசு, இந்த அம்மையாரே, முதலமைச்சரே 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி நாங்கள் செய்வோம் என்று சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆரே இதனை ஒப்புக்கொண்டிருக்கி றார்; மகராஜன் குழுவே அறிக்கையில் சொல்லி யிருக்கிறது என்பதையெல்லாம் சுட்டிக்காட்டி, இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி, அதிலே தெளிவு வரவேண்டும் என்பதற்காக, சுமுகத் தீர்வு காணவேண்டும்.
எந்த சமரசத்தையும் இந்த இனம் ஏற்காது!
சுமுகத் தீர்வு காணட்டும்; ஆனால், இந்தச் சுமுகத்தீர்வு என்பது இருக்கிறதே, கலைஞர் நிறைவேற்றிய அந்தச் சட்டத்தை எந்த வகையி லும் பாதிக்காது, அனைத்து ஜாதியினரும் அர்ச் சகராகித்தான் தீரவேண்டும் என்பதிலிருந்து, எந்த சமரசத்தையும் இந்த இனம் ஏற்காது; அப்படிப்பட்ட சூழலை இந்த அரசு உருவாக்கு மேயானால், மிகப்பெரிய பிரம்மாண்டமான போராட்டம் ஜூன் மாதத்தில் இருந்து தமிழ கத்தில் பல்லாயிரக்கணக்கிலே சிறைச்சாலைக்குச் செல்வார்கள்; அதில், முதலிலே சிறைச்சாலைக் குச் செல்பவர்கள்தான் நம்முடைய புரட்சிப் பெண்கள்; அவர்கள் இந்தப் பகுதியிலே இருந்து செல்லக்கூடியவர்கள் என்று சொல்லக்கூடிய உணர்வுக்குத்தான் இந்த மாநாடு, ஒரு ஒத்திகை மாநாடாக நடைபெற்றிருக்கிறது. எனவே, இது வெறும் பேச்சுக் கச்சேரி மாநாடல்ல; இது செயல் வீராங்கனைகளுக்கு முன்னாலே இருக்கக் கூடிய ஒரு செயல் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும், அதுதான் மிக முக்கியம்.
பெண்கள் அர்ச்சகர்கள் ஆகவேண்டும்!
அதுமட்டுமல்ல, ஒருபடி மேலே போய், ஆண்கள் மட்டுமல்ல; அதிலேயும் ஆணாதிக்கம் என்ன? பெண் கடவுள்களை ஆண்கள் குளிப் பாட்டுகிறார்கள்; அர்ச்சகர்கள் குளிப்பாட்டு கிறார்கள் என்பது அவமானமல்லவா? ஆகவே, பெண் அர்ச்சகர்கள் தேவையல்லவா? பெண் அர்ச்சர்கள் இருந்தால் என்ன கெட்டுப் போகும்?
இரண்டு பேருக்கும் படிப்பு சமமாக இருக் கிறது; பேராசிரியர்கள் சமமாக இருக்கிறார்கள். எல்லாத் துறையிலும் பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அர்ச் சகராக மட்டும் பெண்கள் ஏன் வரக்கூடாது? நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டாமா?
எல்லா மதச் சம்பிரதாயத்தையும் இன்றைக்குப் பெண்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும். சடங்கு கள், சம்பிரதாயங்கள் இருக்கின்றனவா? எனவே தான், இந்த அர்ச்சகர்கள் நியமனத்திலும் பெண் களுக்கு உரிய பங்கு இருக்கவேண்டும் என்ற தீர்மானம் இந்தப் புரட்சிப் பெண்கள் மாநாட் டிலே நிறைவேற்றி இருப்பதை சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறோம்.
கோவில்களை நாங்கள் பகிஷ்கரிப்போம்!
முதலில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி முடித்தவர்களுக்குப் பணி வழங்கப்பட வேண்டும்; அடுத்தபடியாக அதில் பெண்களுக் குரிய பங்கு இருக்கவேண்டும்.
பெண்கள் அர்ச்சகர் ஆகவில்லையானால், கோவில்களை நாங்கள் பகிஷ்கரிப்போம்; நாங்கள் கோவிலுக்குப் போகவேண்டிய அவசிய மில்லை; எங்களுக்கு இடந்தராத கோவில்கள் எதற்கு?
மீறிக் கோவிலுக்குப் போய் பெண்கள் அனு பவித்தது என்ன? அதுபற்றி எங்களுக்குத் தெரி யாதா? அதைப்பற்றி விளக்கமாகப் பேசவேண் டுமா? அதற்கு தேவநாதன்கள் சாட்சியமல்லவா, காஞ்சிபுரத்திலே! சங்கராச்சாரியைவிட ஒரு பெரிய சாட்சியம் தேவையா? தாய்மார்களை வைத்துக்கொண்டு இதைப்பற்றி இங்கே பேசுவது நாகரிகமல்ல; பண்பாடும் அல்ல.
பெண்களுக்கு சமூகநீதி வழங்கவேண்டும்
ஆகவேதான் நண்பர்களே, பெண்கள் அர்ச் சகர்கள் ஆகவேண்டும் என்று சொல்வது, எல்லாத் துறைகளிலும் பெண்களுக்கு சமூகநீதி வழங்கவேண்டும் என்ற அடிப்படையிலே! இதற்கு மதம் குறுக்கே வருவதற்கு வாய்ப்பே கிடையாது. ஒரு காலத்திலே வேதம் படிக்கக் கூடாது என்று சொன்னார்கள், இன்றைக்குப் படிக்கவில்லையா? ஆகவேதான், இந்த மாநாட் டிலே அந்தத் தீர்மானம் சிறப்பாக நிறைவேற் றப்பட்டிருக்கிறது.
அதுபோலவே, நண்பர்களே, இன்னொரு செய்தியை உங்களுக்குச் சுட்டிக்காட்ட கடமைப் பட்டிருக்கிறோம். பாலியல் கொடுமை, பாலியல் கொடுமை என்று சொல்லி டில்லியிலே நடை பெற்ற ஒரு சம்பவத்திற்கு அவ்வளவு பெரிய விளம்பரங்களை ஊடகங்கள் கொடுக்கிறார் களே, அதை நாங்கள் ஆதரிக்கிறோம்; அப்படிப் பட்ட கண்டனங்கள் வரவேண்டும். அதிலே எங்களுக்கு மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் அதேநேரத்தில், ஈழத்திலே எங்கள் தமிழ்ச் சகோதரிகள், பல்லாயிரக்கணக்கிலே கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். 9 ஆயிரமல்ல; 90 ஆயிரம் விதவைகள் அங்கு இருக்கிறார்கள் என்று அய்க்கிய நாட்டு அறிக்கையிலே வந்திருக்கிறதே, அந்தச் சகோதரி கள் யார்? அதனை எண்ணிப் பார்க்க வேண் டாமா? அதற்கு நீதி கிடைக்கவேண்டாமா? தனி ஈழம் மலரவேண்டாமா?
மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவது, கொல்லப்படுவது எப்படி நாள்தோறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறதோ, அதேபோலத்தான், ஈழத்து எங்கள் பெண்மணி கள் கேவலமாக நடத்தப்படுவது மட்டுமல்ல, மிகக் கேவலமாக பாலியல் கொடுமைக்கு உள் ளாக்கப்படுவதோடு, வாழ்வதற்கே லாயக்கற்றவர் களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள், இதற்காக வாவது ஒரு தனி ஈழம் மலரவேண்டாமா? எவ் வளவு காலமாகத்தான் அவர்கள் பொறுத்துக் கொண்டிருப்பார்கள்?
எனவேதான், தனி ஈழம் தவிர வேறு மார்க்கமே கிடையாது என்பதுதான். ஈழத்தை நீங்கள் ஆகா, ஒன்றுபட்ட இலங்கைதான் தேவை என்று இன்னமும் பேசிக் கொண்டிருப்பவர்கள், கனவுலகத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
ஈழம் தனியாகப் பிரிந்தால் ஒழிய, அங்கிருக் கின்ற தமிழர்களுக்கும் வாழ்வில்லை; தமிழச்சி யின் மானத்திற்கும் பாதுகாப்பில்லை. அதை விளக்கி இங்கே மற்றொரு தீர்மானம் நிறைவேற் றப்பட்டிருக்கிறது.
எனவே, இந்த காலகட்டத்திலே, தெளிவாக வலியுறுத்தக்கூடிய இயக்கமாக இந்த இயக்கம் இருக்கிறது. அந்த இயக்கத்தினுடைய இன் னொரு வெளிப்பாடாகத்தான் ஈழத் தமிழர்களை உலகளாவிய பல நாடுகளில் மத்தியிலே சொல்லக்கூடிய அந்தச் சூழல் இருக்கிறது.
நேற்றைய முன்தினம்கூட, ராஜபக்சே என்ன பேசுகிறார்? எங்களுக்கு யாரைப்பற்றியும் கவலை யில்லை. உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் எப்போது ஒப்புக்கொண்டோம்? இப்படித்தானே சொல்லியிருக்கிறார்.
நட்பு என்பதற்கு என்ன பொருள், உங்கள் அகராதியில்...?
இன்னமும் இந்திய அரசு சற்றும் வெட்கம் இல்லாமல், இலங்கை எங்களுடைய நட்பு நாடு, நட்பு நாடு என்று சொல்கிறீர்களே, உங்கள் நட்பு என்பதற்கு என்ன பொருள், உங்கள் அகராதியில். அதை நாங்கள் கேட்கமாட்டோமா?
எனவேதான் நண்பர்களே, இது புரட்சிப் பெண்கள் மாநாடு; எப்பொழுதுமே, புரட்சி பெண்களிடம் இருந்து தொடங்கினால், வெற்றி உறுதி என்பதுதான் அதற்கு அடையாளம்; வர லாற்றுக் கண்ணோட்டம் அது. அந்த வகையிலே, இன்றைக்கு எங்களுடைய புரட்சிப் பெண்கள் பூபாளம் பாடவில்லை; புரட்சி முழக்கத்தை எழுப்பி இருக்கிறார்கள். ஆகவே, புதிய விடியலை நோக்கி நாம் பயணம் செய்து கொண்டிருக் கிறோம்.
அந்தப் பயணத்திற்கு நீங்களும் உங்களை ஆளாக்குவதற்கு, ஒப்படைப்பதற்கு வாருங்கள், வாருங்கள் என்று சொல்லி சிறப்பாக இந்த மாநாட்டினை நடத்திய தோழர்களுக்கு நன்றி! நன்றி!! என்று சொல்லி, தோழியர்கள் முன்னாலே நின்று எங்களால் முடியும், எங்களால் தனித்து நடத்த முடியும், எல்லாம் ஆண்கள் சார்ந்ததாகத்தான் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை என்று அத் துணைத் தோழியர்களும் சொல்லியிருக்கிறார் கள். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் என்று சொல்லி, வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! ஓங்குகப் பெண் ணியப் புரட்சி! நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
பெண்கள் விடுதலைப் போராளி!
13.04.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் தி.க. மகளிரணி மற்றும் மகளிர் பாசறை தோழியர்கள், தமிழர் தலைவர், ஆசிரியர், கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பெண்ணுரிமை சிந்தனைகளுக்கும், அதற்கான போராட்டங்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் பெண்கள் விடுதலைப் போராளி என்ற பட்டமளித்து பாராட்டி பெருமைப்படுகின்றனர் என்று அந்த விருதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
நாங்கள் ஆணா பெண்ணா அது முக்கியமல்ல; எங்களை மனிதராக மதியுங்கள் - திருநங்கை ரேவதி
நாங்கள் ஆணா பெண்ணா அது முக்கியமல்ல; எங்களை மனிதராக மதியுங்கள் - திருநங்கை ரேவதி
மதவெறியை எதிர்கொண்டு வீழ்த்துவோம் - வழக்குரைஞர் அருள்மொழி
கோவை - புரட்சிப் பெண்கள் மாநாட்டில் கொள்கை முழக்கம்
கோவை, ஏப்.14- எந்த மதமும் வெறியைத்தான் வெளியிடுகிறது - அவற்றை நாம் எதிர்கொள்வோம் என்றார் திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி.
நாங்கள் ஆணா, பெண்ணா என்று ஆராய்வதை விட எங்களை குறைந்தபட்சம் மனிதர்களாக மதியுங்கள் என்றார் திருநங்கையான எழுத்தாளர் நாமக்கல் ரேவதி அவர்கள்.
புரட்சிப் பெண்கள் மாநாடு கோவை சுந்தராபுரத்தில் என்றென்றும் நினைத்துப் பெருமைப்படும் அளவிற்கு நேற்று (13.4.2013) காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை வெகு நேர்த்தியுடன் நடைபெற்றது.
மாநாட்டையொட்டி கோவை ரயில்வே சந்திப்பிலிருந்து கோவை சுந்தராபுரம் வரை சாலையின் இருபுறங்களிலும் கழகக் கொடிகள் கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தன.
எங்கு பார்த்தாலும் வண்ண வண்ண சுவரொட்டிகளும் பதாகைகளும் பொது மக்களின் கவனத்தைக் கவர்ந்தன.
காலை கருத்தரங்கம் நிகழ்ச்சி கோவை - சுந்தராபுரம் ஆனந்தாஸ் உணவகம் மகிழம் அரங்கத்தில் கழக வீராங்கனை வெள்ளக்கோயில் அரங்கநாயகி அம்மையார் நினைவரங்கில் நடைபெற்றது. அரங்கம் நிரம்பி வழிந்தது. முக்கிய அரங்கில் (Main Hall) பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். (பெண்கள் மாநாட்டில் அவர்களுக்குத்தானே முன்னுரிமை?) பக்கத்தில் இருந்த இன்னொரு அரங்கம் ஆடவர் அமர்ந்து சிறிய திரை மூலம் நிகழ்ச்சிகளைப் பார்த்தும் கேட்டும் மகிழ்ந்தனர்.
(கருத்தரங்க நிகழ்ச்சி விவரம் நேற்றைய விடுதலை 13.4.2013 காண்க)
கருத்தாழ மிக்க பட்டிமன்றம்
மகிழம் அரங்கில் கருத்தாழமிக்க பட்டிமன்றம் பிற்பகல் 3 மணிக்கு பேராசிரியர் தமிழ்மொழி தலைமையில் நடைபெற்றது.
ஆண் ஆதிக்கத்தைக் காத்து நிற்பது அரசியலே எனும் அணியில் சென்னை பா. மணியம்மை, தகடூர் சு. பிரதீபா, சி. இந்திராகாந்தி ஆகியோரும் குடும்பமே என்ற அணியில் சென்னை தெ.வீ. அருள்மொழி திருப்பத்தூர் கவிதா, மு.பவுசியா பானு ஆகியோர் திறம்பட வாதிட்டனர்.
அரங்கம் நிறைந்திருந்த மக்கள் இடை இடையே கை தட்டி பட்டிமன்றத்தைக் கலகலப்பாக்கினர்.
தீர்ப்பு
ஆண் ஆதிக்கத்தைக் காத்து நிற்பதில் குடும்பம் அரசியல் இரண்டுக்குமே முக்கியம் உண்டு. பெண் என்றால் கருவிலேயே சிதைப்பது குடும்பம்தான் என்றும் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு என்றால் கூடாது என்பது ஆண் ஆதிக்க அரசியல்தானே என்னும் இரு பக்கங்களிலும் உள்ள நியாயத்தை விளக்கிக் கூறி இரண்டுமேதான் காரணம் என்று எடுத்துக் கூறினார்.
மாவட்ட மகளிர் பாசறையைச் சேர்ந்த செ. பிரியா நன்றி கூறிட பிற்பகல் 4.30 மணி அளவில் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சுந்தராபுரம் பெரியார் திடலில்
மாலை 5 மணிக்கு கோவை - சுந்தராபுரம் பெரியார் திடலில் தந்தை பெரியார் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு, சோழமாதவி மாயவன் குழுவினரின் பெண்கள் சிலம்பாட்டம், சுருள் கத்தி, தீப்பந்தச் சுழற்சி, கத்தி வீச்சு என்று அடுக்கடுக்காக இருபால் சிறுமிகளும், மாணவர்களும் இளைஞர்களும் செய்து காட்டிய நிகழ்ச்சி மயிர்க்கூச் செறிவதாக இருந்தன. விழி கொட்டாமல் அந்த நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போது பார்வையாளர் பகுதியிலிருந்து பலத்த கரவொலி எழுந்தது.
தோழர் மாயவன் திருப்பூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ஆவார். மாநாட்டையொட்டி சுவர் எழுத்துப் பணியை மேற்கொண்டவரும் இவரே!
வீதி நாடகம்
வீதி நாடக வித்தகர்கள் ச. சித்தார்த்தன் - பி. பெரியார்நேசன் குழுவினர் வழங்கிய வீதி நாடகம் மாநாட்டின் முக்கிய அம்சங்களுள் ஒன்றாகும். புரட்சிப் பெண்கள் மாநாட்டுக்காகவே பெண்ணியம் எனும் பெரும் நெருப்பு எனும் தலைப்பில் நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு சிறப்பாக அரங்கேற்றம் செய்யப்பட்டது.
வீதி நாடகத்தில் பங்கேற்றோர் வருமாறு: கனகா, தேன்மொழி, மணியம்மை, பிரின்சு என்னாரெசு பெரியார், கலைச்செல்வி, அஞ்சுகம், செயமணி, பெரியார் செல்வி, சுபாஷினி, அன்புமதி, சித்தார்த்தன், பெரியார்நேசன், சுப்பிரமணியன், குமரவேலு, அழகிரி, தமிழ்ச்செல்வன்.
வீதி நாடகத்தில் பங்கேற்றுச் சிறப்பாக நடித்த மேற்கண்டவர்களுக்கு கழகத் தலைவர் நினைவுப் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
கோவை மண்டல கழக மகளிரணி செயலாளர் ப. கலைச்செல்வி அனைவரையும் வரவேற்று உரையாற்றி னார். மாநாட்டுக்குத் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல்செல்வி தலைமை வகித்தார். தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் க. பார்வதி, திருமகள் மற்றும் செ. தனலட்சுமி, செ. ஜோதி, சி. கவிதா (கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை திருமண நிலைய அமைப்பாளர் வ. இராசேசுவரி பி.ஏ., இணைப்புரை வழங்கினார்.
மாநில மகளிர் பாசறை பொருளாளர் திருப்பத்தூர் அகிலா எழிலரசன் கழகக் கொடியை ஏற்றினர். (புரட்சிப் பெண்கள் மாநாட்டின் நினைவாகக் கல்வெட்டுடன் கூடிய இரும்புக் குழாய்ப் பொருத்திக் கழகக் கொடியை ஏற்ற சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது).
ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம்
கழகக் பொதுக் குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் மாநாட்டைத் திறந்து வைத்து உரையாற்றினார். அவர்தம் உரையில் குறிப்பிட்டதாவது: அன்னை மணியம்மையார் காலத்தில் நாகையில் நடைபெற்ற முப்பெரும் மாநாட்டிலும், திருவாரூர் ராஜலட்சுமி மணியம் அவர்கள் முன்னின்று நாகையில் நடத்திய பெண்கள் விடுதலை மாநாட்டிலும் கலந்து கொண்டு மாநாட்டைத் திறப்பு விழா செய்தேன். அந்த மாநாட்டில் நமது தமிழர் தலைவர் அவர்களுக்கு இனமானப் பேரொளி எனும் பட்டம் கொடுக்கப்பட்டது.
இப்பொழுது எனக்கு வயது 80 தான் ஆகிறது. இன்னும் பல மாநாடுகளைத் திறந்து வைத்து நூற்றாண்டும் வாழ்வேன்.
அதற்கும் நீங்கள் எல்லாம் வந்து சிறப்பிக்க வேண்டும். இந்த மாநாட்டின் வாயிலாக நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தந்தை பெரியார் அவர்கள் கருத்துகள் அடங்கிய பாடங்களை 8ஆம் வகுப்பு முதல் பல்கலைக்கழகம் வரை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி
மாநாட்டுக்கு தலை மை வகித்த திராவிடர் கழகப் பொதுச் செய லாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி அவர்கள் தமதுரையில் முக்கியமாக குறிப்பிட்டதாவது:-
பெண்களுக்கும் சுயமரியாதை தேவை என்றார் பெரியார். கீதை முதலியவை பெண்களை அடிமைப் படுத்தக் கூடியவை. கோலம் போடுவது, கும்மியடிப்பது இவற்றை விட்டு விட்டு சிலம்பம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
பெண்கள் மீது பாலியல் வன்முறை கட்டவிழ்த்து நடத்தப்படுகிறது. பெண்கள் குட்டைப் பாவாடை அணிகிறார்கள் என்று பாலியல் வன்முறைக்கு நியாயம் கற்பிக்க முயற்சிக்கிறார்கள்.
5 வயது, 3 வயது சிறுமிகளிடத்தில் எல்லாம் தவறாக நடந்து கொள்ளுகிறார்களே. குட்டைப்பாவாடை அவர்கள் அணிவதுதான் காரணமா? என்ற வினாவை எழுப்பினர்.
நாமக்கல் ரேவதி
திருநங்கை என்று அழைக்கப்படுகிற எங்களுக்காக குரல் கொடுப்பதற்காக இப்படி ஒரு மாநாட்டு மேடை கிடைத்ததற்காக நன்றி யினை தெரிவித்துக் கொள்கிறேன்.
நூறு ஆண்டு களுக்கு முன்பாகவே பெண்களுக்காக குரல் கொடுத்த பெரும் போராளி தந்தை பெரியார்.
நாங்கள் யார்? எங்களின் பாலினம் எது? நாங்கள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறோம்?
எங்களை பெற்ற அம்மா ஏற்றுக் கொள்ளவில்லை - எங்களை பெற்ற அப்பா ஏற்றுக் கொள்ளவில்லை - ஊரார் ஏற்றுக் கொள்வில்லை - உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு சொத்துரிமை கிடையாது. எங்கள் மக்கள் பிச்சை எடுத்துதான் வாழ வேண்டுமா? பாலியல் தொழிலைத்தான் நடத்த வேண்டுமா?
எங்கள் மீது பரிதாபம் படக்கூட வேண்டாம். எங்கள் உரிமைகளை ஒத்துக் கொள்ளுங்கள் அதுபோதும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும், அங்கீகாரமற்றவர்களாக இருக்கிறோம்.
ஆண் பெண்ணாக மாறுவதும், பெண் ஆணாக மாறுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அது எங்கள் குற்றமா?
ஆண் பெண்ணாக மாறினால் அரவாணி, திருநங்கை என்கிறார்கள். ஒரு பெண் ஆணாக மாறுவதில்லையா? அவர்களை திருநம்பி என்று அழைப்பதில்லையே. ஆனால், எங்களை மாற்றுப் பாலினம் (TRANS GENDER) என்று அழைக்கலாமே. எங்கள் நலனுக்காக இந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்காகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பது, உதவி செய்வதெல்லாம் தேவைதான்.
எங்களுக்காக அரசால் உருவாக்கப்பட்ட ஆணையம்(WELFARE BOARD) செயலற்று கிடக்கிறது. அது உண்மையாக செயல்பட வேண்டும். நாங்கள் ஆணா, பெண்ணா என்று ஆராய வேண்டாம். நாங்கள் மனிதராக மதிக்கப்பட்டால் அதுவே போதும் (பலத்த கைதட்டல்) என்று குறிப்பிட்டார்.
திருநங்கை ஒருவர் மாநாட்டில் பங்கேற்று தங்களின் உரிமைகளை வெளிப்படுத்துவது சிறப்பானது. அந்த வகையில் கோவைப் புரட்சிப் பெண்கள் மாநாடு தனித்தன்மை பெறுகிறது. புரட்சி மாநாடு என்பது வெறும் சொல்லுக்காக மட்டும் அல்ல என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. பெயருக்கேற்ற பொருத்தமான மாநாடுதானே.
வழக்குரைஞர் அருள்மொழி
திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள் மொழி அவர்கள் தமதுரையில் குறிப் பிட்டதாவது:
இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் முத்திரை பதித்தவை. நாம் இன்று நிறைவேற்றும் தீர்மானங்கள் நாளை நாட்டின் சட்டங்கள். எந்த ஒரு பகுதியும் விடுபட்டு விடாமல் அவ்வளவு சிறப்பாக தீர்மானங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.
அதுவும் இந்த மாநாட்டுத் தீர்மானங்கள் சிகரம் தொட்டவை. ஒரு மாற்றுப் பாலினக்குரல் இங்கே ஒலித்திருக்கிறது. நமது மாநாட்டில் மட்டுமே இத்தகைய புரட்சிகள் ஒலிக்க முடியும்.
ஆறாவது தீர்மானம்: பெண்களின் உயர்கல்வி
பள்ளி இறுதி வரை பெண்கள் ஓரளவு படித்தாலும், அதற்கு மேல் உயர்கல்விக்கு பெண்கள் பெரும் அளவுக்கு செல்ல முடியாமல் தடுப்பது எது?
ஜாதியும், சமூகக் கட்டுப்பாடும் தான். சம்பந்தப்பட்ட ஜாதியினரில் ஆண்கள் எவ்வளவு படித்து இருக்கிறார் களோ அதனைத் தாண்டி பெண்கள் படிக்கக் கூடாது என்று நினைக்கிறார்கள். பெண்கள் ஆண்களை விஞ்சக் கூடாது என்ற மனோபாவம் இருக்கிறது. அதற்காகத் தான் ஆறாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜாதி - மதத்தடைகளைத் தகர்த்த திருமணம் - 7ஆவது தீர்மானம்
ஜாதியும் மதமும் எவ்வளவு பிற்போக்கானவை. 14 வயது சிறுமி படிக்க வேண்டும் என்று சொன்னதற்காக பாகிஸ்தானில் சுடப்பட்டுள்ளார். நாடு விட்டு நாடு செல்ல வேண்டிய கொடுமை. இஸ்லாமிய மதவெறி இது.
இரண்டாவது கிறித்துவ மதவெறி. அமெரிக்காவில் 12,14 வயதில்கூட படிக்கும் பெண்கள் கருவுறும் கொடுமை. கருக்கலைப்பு செய்யக் கூடாது என்கிறது கிறித்துவம் அதனை மீறிக் கருக் கலைப்பு செய்த டாக்டர் டிரில்லர் மதவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்து மதவெறி
2012 ஆகஸ்டில் உச்சநீதிமன்றத்தில் ஒரு தீர்ப்பு வெளி வந்தது.
உத்தரப்பிரதேசம் - பிருந்தாவன், கேள்விப்பட்ட பெயர்தான். பகவான் கிருஷ்ணன் பற்றி இந்த ஊரோடு தான் இணைத்துப் பாடுவார்கள்.
பிருந்தாவனமும்
நந்தகுமாரனும்
யாவருக்கும் சொந்த மன்றோ? என்றெல்லாம் கூடப் பாடுவார்கள். இங்கே உள்ள மடங்களில் புறக்கணிக்கப்பட்ட விதவைப் பெண்கள் விடப்படுவார்கள்.
அந்தப் பெண்கள் இறந்துவிட்டால் புதைக்கவோ எரிக்கவோ ஆள் இல்லை - யாரும் முன்வரமாட்டார்கள்.
அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி கோணிப் பைக்குள் வைத்துத் தைத்து கங்கையில் வீசி எறிந்து விடுவார்கள்.
இதுகுறித்து பொது நல வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அரசு சாரா பொதுக் கழிவறைகளை நடத்தும் சுலப் (Sulub) என்னும் நிறுவனத்திடம் அந்தப் பொறுப்பை உச்சநீதிமன்றம் ஒப்படைத்தது.
இதுதான் இந்து மதத்தின் கோட்பாடும், நிலைப்பாடும் இந்த மத வெறித் தனங்களையும், போக்குகளையும் நாம் எதிர் கொண்டாக வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்
கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்
சென்னை, ஏப்.14- தூக்குத் தண்டனையை மாற்ற விதிமுறைப்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க. தலைவர் கலைஞர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் 13.4.2013 அன்று வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தூக்குத் தண்டனை அறவே ரத்து செய்யப்பட்டு சட்டப் புத்தகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் என்பதே நமது உறுதியான நிலைப்பாடு. இதையே நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் இந்தக் கருத்தைப் பத்திரிகையாளர்கள் சிலர் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்து வந்தாலுங்கூட, இப்போது இந்தக் கருத்து புதிய வலிவோடு அர சியல் அரங்கமேறியிருப்பதை மனதில் கொண்டு, அதனை மேலும் வலியுறுத்தும் வண்ணம் மீண்டும் ஒரு முறை இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
மரண தண்டனை இருக்கலாமா அல்லது அதை நீக்க வேண்டுமா என்ற பிரச்சினை உலகமெங்கும் மிகப் பெரிதாக எழுப்பப்பட்டு விரிவாக விவாதிக் கப்பட்டு வரும் இந்த நேரத்தில் நேற்றைய தினம் (12-4-2013), இந்திய உச்ச நீதி மன்றம் கருணை மனு மீது முடிவெடுக்கக் குடியரசுத் தலைவர் தாமதம் செய்ததைக் காரணம் காட்டி மரண தண்ட னையைக் குறைக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று வழங்கியுள்ள தீர்ப்பு, தூக்கு தண்டனையை எதிர்பார்த்திருக்கும் பலருடைய மனதிலும், ஏன் நம்முடைய எண்ணவோட்டத் திலும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு பற்றி இன்று இந்து நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தில், கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நீண்ட கால தாமதம் ஏற்பட்டதையே மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றியமைப்பதற்கான அடிப் படையான காரணம் என்ற அளவில் உச்ச நீதி மன்றம் ஆழ்ந்து பரிசீலிப்பதற்கான வாய்ப்பினை இழந்து விட்டது. குடியரசுத் தலைவர் எட்டு ஆண்டுகளுக்கு மேலாக புல்லருடைய கருணை மனுவைப் பரிசீலிப்பதற்கு எடுத்துக் கொண்ட தாமதத்தையே; மரண தண்டனையை மாற்றி யமைப்பதற்கான தகுந்த வழக்கு என உச்ச நீதி மன்றம் தனது நீதிநெறியிலான விருப்புரிமையைப் பயன்படுத்தியிருக்கலாம் (The Supreme Court has lost an opportunity to invoke the sound legal principle that prolonged delay in disposal of mercy petitions could be a key ground for commuting the death penalty. Since the President took over eight years to dispose of Bhullar’s mercy plea, this was surely a fit case for the Supreme Court to exercise Judicial discretion in favour of commutation”) என்று சுட்டிக் காட்டி யுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த சாந்தன், பேரறிவாளன், முருகன், நளினி என்ற நால்வரில், நளினிக்கு தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுவதற்கான முறையான ஏற்பாடுகளைத் தி.மு. கழக அரசு செய்தது - இன்றைக்கும் நமக்கு மன ஆறுதலைத் தருகிறது. ஒரு பெண் என்பதால் - மேலும் ஒரு குழந்தையின் தாய் என்பதால் - நளினிக்குக் கிடைத்துள்ள அந்தச் சலுகை விரிவுபடுத்தப்பட்டு - இருபதாண்டு காலத்திற்கு மேலாக ஆயுள் தண்டனையை நிறைவு செய்து விட்ட கைதிகளாகச் சிறையிலே இருந்து வாடும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய இவர்களைத் தொடர்ந்து கைதிகளாகவே அடைத்து வைத்திருக்காமல் அவர்களை விடுவித் திடவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்; கருணை காட்டப்பட வேண்டும்; அவர்கள் மீது சாற்றப்பட்ட குற்றம் மிகப் பெரியது என்ற போதி லும், அவர்கள் அனுபவித்த மிக நீண்ட தண்டனைக் காலத்தைக் கருதிப் பார்த்து மனிதாபிமானத்தோடு மன்னிக்க முன் வர வேண்டும் என்று ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன்; இப்பொழுதும் அதையே கூறுகிறேன்.
தமிழகச் சட்டப் பேரவையில் 29-8-2011 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா 110ஆவது விதியின்கீழ் படித்த அறிக்கையில் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி யமைக்க ஒப்புதல் அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். அதே முறையைப் பின்பற்றி சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தான் நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும், ஏன் உலகத் தமிழர்களும் ஒரு மனதோடு கோரிக்கை விடுத்திருந்தோம்.
இது போன்ற நிகழ்வுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கிட ஒரு மாநில அரசு எந்த விதிமுறைப்படி அவர்களின் மரண தண்டனையை மாற்றியமைக்க முடியுமோ அவ்வாறு தமிழகத்தில் தி.மு. கழக அரசு பொறுப் பில் இருந்த போது மாற்றியமைத்து - அவர்களை வாழ விட்டிருக்கிறது என்பதற்கு கடந்த கால உதாரணங்களாக - தோழர்கள் தியாகு, கலியபெரு மாள் போன்றவர்கள் திகழ்கிறார்கள். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தியாகு - நல்ல எழுத்தாளராக, கட்டுரையாளராக, புத்தகங்கள் வெளியிடுபவராக இந்தச் சமுதாயத்தில் இப்போது மதிப்புடன் உலவுவதைப் பார்த்தாவது சாந்தனுக் கும், முருகனுக்கும், பேரறிவாளனுக்கும் வாழ் வளித்து - அவர்கள் அறிவாற்றலை சமுதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்றைய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு கடமை முடிந்து விட்டதாகக் கருதாமல் - மனித நேயத்தோடு பிரச்சினையை உண்மையிலேயே அணுக வேண்டு மானால் - அதற்குரிய சட்ட விதிமுறைப்படி ஏற்கனவே கழக அரசில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில் - உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, அதிலே இந்த மூவரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றி - அந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்து, அவர்களை விடுவிக்க ஆவன செய்ய வேண்டும் என்று ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டதையே மீண்டும் இப்போது வலியுறுத்துகிறேன்.
இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பது சந்தேகமே! நேரில் சென்று வந்த எம்.பி., பேட்டி
இலங்கைத் தமிழர் களுக்கு, அதிபர் ராஜ பக்சே அரசு, அரசியல் அதிகாரங்களை வழங் குவது சந்தேகமே. அங்கு ள்ள தமிழர்கள் எல்லாம் அச்ச உணர்வுடனே உள்ளனர். இந்த விஷயத் தில், இந்தியா தலை யிட்டு, ஏதாவது செய் யாதா என, எதிர்பார்க் கின்றனர்,'' என்று, இலங்கை சென்று வந்த, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய் கூறினார்.
அய்ந்து பேர் குழு: இந்திய எம்.பி.,க்கள் குழு, சமீபத்தில் இலங்கை சென்றிருந்தது. இந்தக் குழுவில், சந்தீப் தீட்சித் (காங்.,), பிரகாஷ் ஜாவடேகர், அனுராக் சிங் தாக்கூர் (பா.ஜ.,), தனஞ்ஜெய் சிங் (பகுஜன் சமாஜ்) மற்றும் மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்., - எம்.பி., சவுகதா ராய் ஆகிய, அய்ந்து பேர் இடம் பெற்றிருந்தனர்.
இலங்கை பயணம் முடித்து, நாடு திரும்பி யுள்ள இவர்களில், திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., சவுகதா ராய், நேற்று முன்தினம் கூறிய தாவது:இலங்கையில், தமிழர்கள் வசிக்கும் பகுதியில், கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பொருளாதார நடவடிக் கைகளில், சற்று சுறுசு றுப்பு காணப்படுகிறது. யாழ்ப்பாணத்திலிருந்து, சாவகச்சேரி வரை சென்றோம். மார்க்கெட் பகுதிகளில், மக்கள் கூட் டம் இருந்தது. இருப் பினும், அவர்கள் மத்தியில், ஒரு சகஜமான வாழ்க்கை சூழல் இல்லை என்பதை காண முடிந்தது.
இன்னமும், ஒருவித அச்ச உணர்வு, அவர்களிடம் உள்ளது.தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில், முன்பிருந்த நிலை தற்போது இல்லை; மாறிக் கொண்டே வரு கிறது. தமிழர் பகுதி களில், சிங்களர்கள் குடி யேற்றமும் அதிகமாக உள்ளது. தங்களின் விளை நிலங்களை எல் லாம், சிங்களர்கள் கைப் பற்றுவதாக, தமிழர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் நிதி உதவி யுடன் கட்டப்படும் வீடுகளை பார்த்தோம்; ஓரளவு கட்டித் தந்துள் ளனர். மற்றபடி, சொல் லக் கூடிய அளவுக்கு, சிறப்பாக பணிகள் எது வும் நடைபெறுவதாக தெரியவில்லை.
தயக்கம்: இலங்கை யில், போர் முடிந்து நான்காண்டுகள் ஆனா லும், தமிழர்கள் பிரச்சினை அப்படியே உள்ளது. அங்குள்ள நிலைமைகளை பார்க் கும் போது, தமிழர் களுக்கு அரசியல் அதி காரம் வழங்குவது, முற்றிலும் சந்தேகமே. அதிகாரங்களை அளிக்க, இலங்கை அர சாங்கம் மிகுந்த தயக்கம் காட்டுவதாகவே தெரி கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு, இந்த மாதம் தேர்தல் நடை பெறுவதாக இருந்தது. ஆனால், அதுவும் நடக்க வில்லை. செப்டம்பர் வரை, அந்தத் தேர்தல் கள் தள்ளிப் போடப் பட்டுள்ளன. காவல் துறை அதிகாரம், நில உரிமை அதிகாரம் போன்றவை, தமிழர் களின் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க உதவும். ஆனால், இந்த இரண் டையும், இலங்கை அரசு தரவே தராது என்பது, நிதர்சனமாக தெரிகிறது. தமிழர் பகுதிகளுக்கு, மாகாண அரசியல் அதி காரம் வழங்குவது குறித்து, பேச்சுவார்த்தை நடத்துவதாக, இலங்கை அரசாங்கம் சொல்கிறது. ஆனால், இந்த பேச்சு வார்த்தையில், தமிழ் தேசிய முன்னணியைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க மறுக்கின்ற னர். இலங்கை அரசு காலம் கடத்தும் வேலையை செய்வதாக வும் குறை சொல்கின்ற னர். அங்கு நடந்த போரின்போது நடந்த அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, இலங்கை அரசே குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழு வின் பரிந்துரைகளைக் கூட, நிறைவேற்ற இலங்கை அரசு ஆர்வம் காட்டவில்லை.
நேரமின்மை: இலங்கையில், தமிழர் தலைவர்கள் சம்பந்தம், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் இந்திய தூதரக அதிகாரி மகாலிங்கம் ஆகியோரை சந்தித் தோம். நேரமின்மை காரணமாக, கிழக்குப் பகுதிக்கு செல்ல முடிய வில்லை. பசில் ராஜபசே, கோத்தபய ராஜபக்ஷே மற்றும் வெளியுறவு அமைச்சர் பெரிஸ் ஆகி யோரையும் சந்தித் தோம். இவ்வாறு சவுக தா ராய் கூறினார்.
துணைவியரைப் பாராட்டி, தொண்டறத்தை உயர்ந்துங்கள்!
தஞ்சை பெரியார் - மணியம்மைப் பல்கலைக் கழகமாக பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி (உலகின் முதல் பெண் களுக்கான பொறியியல் கல்லூரி) வளர்ந்ததற்கு முக்கிய காரணமான வர்களில் ஒருவர் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஆணையரும், வரி இயல் மேல் முறையீட்டுத் தீர்ப் பாயத்தின் மேனாள் உறுப்பினரு மான திரு எஸ். ராஜரத்தினம் ஆவார்கள்.
அவரது பரந்த அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி நிறைந்த சட்ட ரீதியான அறிவுரைகள் இவைகளை நாடி இன்னும் அவரிடம் பல மூத்த தணிக் கையாளர்களான அறிஞர்கள்கூட, ஆலோசனைப் பெற்றே செயல்படும் நிலை உள்ளது!
பல பிரபல நிறுவனங்கள் இவரது ஆற்றலை, அறிவுத்திறனைப் பயன் படுத்த வேண்டி, தாங்கள் தங்களது நிறுவனங்களில் அவரை இயக்கு நராக (Director ஆக்கிப் பயன் பெறுகின்றன!!
நமது பெரியார் அறக்கட்டளைகள் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்த 84 வயது நிறைந்த மூத்த நிதித்துறை அறிஞர்தான் - நிதி நிர்வாகத்தின் தலைவராவர்.
நேர் வழி ஒன்றைத் தவிர, குறுக்கு வழி எதனையும் எவருக்கும், எக்காரணம் கொண்டும் சொல்லித் தராத நேர்மையாளர் அவர்.
அவர்கள் வருமான வரித்துறை அதிகாரியாக 30 ஆண்டுகளுக்கு முன்பே, மும்பை, டெல்லி, பாட்னா போன்ற பல வட மாநில பெரு நகரங்களில் பணியாற்றிய மேதை.
மனிதநேயத்தோடும் அதே நேரத்தில் தவறு செய்யாமலும், தவறிழைக்கத் தனது சக ஊழியர்களை அனுமதிக்காமலும் பணி செய்துகூட, தனக்கென ஒரு தகைமை சால் இடத்தை என்றுமே தக்க வைத்துக் கொண்டவர்.
இவரது தொண்டறத்தால் வளர்ந் தோங்கியுள்ள நமது பல்கலைக் கழக வளாகத்தில் பன் மாடிக் கட்டடம் ஒன்றுக்கு ஜமுனா ராஜரத்தினம் கட்டடம் என்று பெயர் சூட்டி மகிழும் விழா ஒன்று 10.4.2013 அன்று நடைபெற்றது.
அத்துடன் வடலூர் வள்ளல் நல்ல கிருஷ்ணமூர்த்தி அவர்களது குடும் பத்து அறப்பணிக்கும் நன்றி காட்டும் வண்ணம் மற்றொரு கல்வியியல் பன் மாடிக் கட்டடத்திற்கு பெயர்கள் சூட்டு விழாவும் சிறப்புடன் நடைபெற்றது. (இதுபற்றி நாளை எழுதுவோம்)
பிரபல மூத்த ஆடிட்டரான திரு. ஜி. நாராயணசாமி அவர்கள் வந்து கலந்து கொண்டு, ராஜரத்தினம் அவரது பணிக் காலத்தில் அவர் முன், பல வழக்கு களுக்கு ஆஜராகி, வாதாடிய நிலையில் அவரிடம் ஜொலித்த நேர்மையைப் பாராட்டி மனந்திறந்து பேசினார்கள்.
அதற்குப் பதிலுரை அளித்தார் ராஜரத்தினம் - மிகச் சுருக்கமாக!
எனது நேர்வழியை நண்பர்கள் பாராட்டினார்கள், ஆசிரியரிடம் வேறு யார் பெயரையாவது இக்கட்டடத்திற்கு வையுங்கள் என்றேன்; அவர் பிடிவாத மாக இல்லை முடிவு எடுத்தோம் - செய்கிறோம் என்றார்கள்! வேறு வழியில்லை; எனது துணைவியார் திருமதி ஜமுனா பெயரை முன்னால் வைத்து என்னைப் பின்னால் வைத்து பல்கலைக் கழகத்தில் போட்டியிருப்பது தான் எனக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது; அதற்காக நன்றி செலுத்துகிறேன்.
காரணம் என்னை நேர்மையாக இருந்து - உத்தியோகம் பார்த்தபோதும் சரி, இப்போதும் சரி தவறாது இருக்கும் படி பார்த்துக் கொண்டவர் எனது துணைவியார் ஜமுனா அவர்கள்தான்!
அவர் பட்டுப் புடவைக்கோ, வைரத் தோடுக்கோ ஆசைப்பட்டவர்கள் கிடை யாது இதுவரை.
அதனால்தான் என்னால், வந்த வருமானத்திற்குள் எனது குடும்பத்தை நேர்மையான வழியில் நடத்த அம்மாதிரி முடிவுதான் பாதை போட்டது!
பல அதிகாரிகள், பல பிரமுகர்கள் நெறி தவறி நடப்பதற்கு மூலகாரணம் அவர்களது வாழ்க்கைத் துணைவிகளின் தேவையற்ற ஆடம்பரம்தான் என்றார்.
அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது! பெரியார் கண்ட புரட்சிப் பெண்கள் அடக்கமாக, ஆரவாரம் விளம்பரம் இன்றி எவ்வளவு பேர் உள்ளனர்!
அவ்வளவு தூரம் போவானேன்? எனது வாழ்விணையர் திருமதி மோகனா பெரும் பண வசதி படைத்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.
ஆனால் அவரை, வாழ்விணை யராக ஏற்றுக் கொண்ட நானோ ஒரு ஏழை, எளியவன் - என் நிலைக்கு அவர் மாறியவராகவே இன்றுவரை பற்றற்ற துறவியாகவே, தன் குடும்பக் கடமைகளையாற்றி குடும்பச் சுமைகளைத்தானே சுமந்து, என்னை சிறந்த ஊர் சுற்றி, உலகம் சுற்றியாக்கி பெரியார் பணி முடிக்கப் பறந்து திரியும் தேனீயாக்கி, அவரும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் என்னுடன் இருந்து என்னையும் கவனித்து - எல்லா வகையிலும் மிகுதிக் கண் செல்ல விடாமல் தடுத்தும் ஆட்கொண்டு, பெரியார் வழியை அகலப்படுத்தி, விரைவு வேகத்துடன் பணிபுரிய வைப்பதுதான் எப்படிப்பட்ட அரும்பணி! நன்றிக்குரிய பணி அல்லவா!
எனவே புதுமொழி ஒன்று கூறலாமா? உங்கள் துணைவியரைப் பற்றிக் கூறுங்கள் உங்களைப்பற்றிக் கூற அதுவே உதவிடும் என்று.
இதுவரை நண்பரைத்தானே அப்படிச் சொல்லியுள்ளார்கள் என்று சிலர் கேட்கலாம்.
இது புதுநெறி - புத்தாக்கம்; உங்கள் துணைவியாரைப் பாராட் டுங்கள். உங்கள் தொண்டும்கூட அதன் மூலம் சிறக்கும்! பளபளக்கும். பல ருக்கு உதவவும் செய்யும்.
- கி.வீரமணி
முயற்சிக்கவேண்டும்
தமது வாழ்க்கையால் பிறர் துன்பம் அடையாவண்ணம் நடந்து கொள்ள வேண்டும். இதையே மனித வாழ்க்கையின் இலட்சிய மாகக் கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கை நடத்த முயற்சிக்க வேண்டும்.
(விடுதலை, 20.3.1950)
கோவை சுந்தராபுரம் மாநாடு
இயக்க வரலாற்றில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு கால கட்டத்திலும் கழகம் நடத்திய மாநாடு ஒவ்வொன்றும் முத்திரை பொறித்தவையாகவே இருக்கும். அத்தகு மாநாட்டுகளுக்குப் பல்வேறு சிறப்பான அம்சங்கள் உண்டு என்றாலும் அம்மாநாடுகளில் நிறைவேற்றப் படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் காலத்தை வென்று நிற்கக் கூடியவை - திருப்பங்களைத் தரக் கூடியவைகளாகவே இருந்து வந்துள்ளன.
1929 செங்கற்பட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு தொடங்கி, கடந்த சனியன்று (ஏப்ரல் 13) கோவை குறிச்சி சுந்தராபுரத்தில் திராவிடர் கழக மகளிரணி - மகளிர்ப் பாசறை சார்பாக நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாடு வரை நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் மய்யப்படுத்தியயே பல ஆய்வு முனைவர் (Ph.D) பட்டங்களைப் பெற முடியும்.
பெண்களுக்குக் கல்வி உரிமை, சொத்துரிமை, திருமண விடுதலை உரிமை, விதவைப் பெண்களுக் குத் திருமண உரிமை, வாரிசுரிமை என்று எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கம்பீரமாகக் கூற முடியும்.
கடந்த சனியன்று கோவையில் நடைபெற்ற மாநாட்டின் ஏற்பாடுகள் மிகவும் நேர்த்தியானவை. காலையில் நடைபெற்ற கருத்தரங்கமானாலும் சரி, பிற்பகலில் நடைபெற்ற பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, மாலையில் சுந்தராபுரம் பெரியார் திடலில் நடைபெற்ற திறந்தவெளி மாநாடாக இருந்தாலும் சரி கலை நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள் என்றாலும் சரி, அவை அனைத்தும் திட்டமிட்ட வகையில் நேர்த்தியாக ஏற்பாடு செய்யப்பட்டன. ஒரு மாநாட்டில் பெண்கள் இவ்வளவுப் பெரிய அளவில் கூடினர் என்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.
குறிப்பாக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்கள் - தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டபடி காலக் கல்வெட்டாகும் - சிலாசாசனமாகும்.
இந்த மாநாட்டில் குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டிய ஒன்று - சமூகத்தால் பல வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டுவரும் திருநங்கைகள் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது மட்டுமல்ல. திருநங்கைகள் சார்பாக, நாமக்கல் எழுத்தாளரும் திருநங்கையுமான ரேவதி அவர்கள் மாநாட்டுக்கு வருகை தந்து தங்களின் உரிமை முழக்கத்தை வெளியிட வாய்ப்பு அளித்ததாகும்.
அவரின் குரலில் இருந்த சோக இருள் - அதே நேரத்தில் தங்களுக்குரிய உரிமைக் கனல் இவற்றை வெளிப்படுத்தத் தவறிடவில்லை.
பெற்றோர்களாலும், உறவினர்களாலும், சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்படும் எங்களுடைய நிலை என்ன? நாங்கள் ஆணா? பெண்ணா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருக்கட்டும்! முதலில் எங்களை ஒரு மனிதராக அங்கீகரியுங்கள் என்று குரல் கொடுத்துள்ள ஆதங்கத்தையும், நியாயத்தையும், சமூகமும், அரசும் உணர வேண்டும்; உணர்ந்து உரியதை செய்ய வேண்டும்.
ஆண் பெண்ணாக மாறினால் திருநங்கை என்று கூறுவதுபோல, பெண் ஒருவர், ஆணாக மாறினால் திருநம்பி என்று ஏன் அழைப்பதில்லை என்று அவர் எழுப்பிய வினா அர்த்தமுள்ளது. தங்களை மூன்றாவது பாலாக? (Trans Gender) அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது நியாய பூர்வமானது. இந்தக் கோரிக்கையை திராவிடர் கழகப் புரட்சிப் பெண்கள் மாநாடு அங்கீகரிக்கிறது. ஒரு சமுதாயப் புரட்சி இயக்கத்தின் அங்கீகாரம் என்பது முக்கியமானதாக இருக்கும். கோவை மாநாட்டின் தீர்மானம் வருமாறு:
(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கை களை மூன்றாவது பாலாக மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், Sex என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.
(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்க வேண்டும் என்றும்,
(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,
(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க் குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் கோவைத் தீர்மானம்.
இன்று திருநங்கைகள் நாள் என்பதால் அவர் களைப் பற்றிய உரத்த சிந்தனை என்பதும் மிகவும் பொருத்தம்தானே!
தந்தை பெரியார் பணிக்குப் பிறகும் இந்த நிலையா?
தன்மான இயக்கப் பிரச்சாரம் நடத்தி வரும் நிலையிலும் மூடநோயா
நாகரிக யுகத்தில் நரபலிக் கொடுமையா?
கலைஞர் கடிதம்
உடன்பிறப்பே,
நரபலிக்காக குழந்தையைக் கொலை செய்த செய்தியை இன்று (14-4-2013) தமிழ் நாளேடு ஒன்றில் பார்த்தேன். சென்னை - வியாசர்பாடியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி செந்தில். அவருடைய மனைவி யின் பெயர் கீதா. அவர்களுக்கு இரண்டரை வயதில் விஷ்ணு என்ற மகன் இருந்தான். 9-4-2013 அன்று குழந்தை விஷ்ணு, பக்கத்து வீட்டு மாடியில் இருந்த தண்ணீர் பேரலுக்குள் மூழ்கிக் கிடந்தான். அதைக் கண்ட உறவினர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
ஆனால் குழந்தை வழியிலேயே இறந்துவிட்டான். குழந்தை விஷ்ணு தண்ணீருக்குள் தவறி விழுந்து இறந்து விட்டதாகப் பெற்றோர் நினைத்து, உடலை எரித்து விட்டனர். இதற் கிடையே அந்தப் பகுதியில் உள்ள ஜோசியா என்பவர், குழந்தையை அவருடைய சின்ன பாட்டியான மகேஸ்வரி என்பவர்தான் தண்ணீர்த் தொட்டியில் அமுக்கிக் கொலை செய்ததாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். காவல்துறை யினருக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறையினர் மகேஸ்வரியை அழைத்து விசாரித்தபோது, அவர் குழந்தையைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்திருக்கிறார். அந்த வாக்குமூலத்தில், செந்தில் குடும்பத்திற்கும், எனக்கும் இடையே மன வேறுபாடு இருந்து வந்தாலும், செந்திலின் மகன் விஷ்ணு எப்பொழுதும் என்னுடன்தான் விளையாடுவான். 7-4-2013 அன்று இரவு எங்கள் தெருவுக்கு வந்த ஒரு குடுகுடுப்பைக் காரனிடம் என் கையை நீட்டி ஜோசியம் பார்த் தேன்.
அப்போது எனக்கும், எனது குடும்பத்திற்கும் யாரோ செய்வினை வைத்ததாகத் தெரி வித்து, 2000 ரூபாய் கொடுத்தால் அந்தச் செய்வினையை அகற்றிவிடுவதாக அந்தக் குடுகுடுப்பைக்காரன் தெரிவித்தான். மறுநாள் அந்தக் குடுகுடுப்பைக்காரன் மந்திரித்த எலுமிச்சம் பழம், 2 தாயத்து, குங்குமம் போன்ற பொருள் களைக் கொடுத்து தாயத்தை என்னையும் என் குழந்தையையும் கட்டிக் கொள்ளுமாறு கூறினான். குடுகுடுப்பைக் காரன் என்னிடம் இருந்து 1000 ரூபாய் பெற்றுக் கொண்டான். தாயத்தைக் கட்டிய சிறிது நேரத்திலேயே நான் சுய நினைவை இழந்தேன்.
குழந்தை விஷ்ணுவைப் பார்க்கும் போது எனக்கு ஆத்திரமாக இருந்தது. குழந்தை யைக் கொலை செய்துவிடலாம் என்று தோன்றியது. 9-4-2013 அன்று நான், குழந்தையை அழைத்து வந்து, வீட்டில் இருந்த தண்ணீர்த் தொட்டிக்குள் அமுக்கிக் கொலை செய்ய முயற் சித்தேன். குழந்தை மூச்சுத் திணறி உயிருக்குப் போராடினான்.
உடனே குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து வீட்டு மாடிக்குச் சென்று, அங்கிருந்த தண்ணீர் பேரலில் குழந்தையைத் தலைகீழாகப் போட்டுவிட்டு, தவறி விழுந்து விட்டதாக நாடகமாடினேன். அனைவரும் அதை நம்பினர். குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால் குழந்தை விஷ்ணு இறந்துவிட்டான் என்று தெரிவித்திருக்கிறார்.
மகேஸ்வரி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தை விஷ்ணுவை மருத்துவமனைக்கு எடுத் துச் சென்ற போது அவன் முகம், கை, கால்களில் காயங்கள் இருந்ததாக, பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மகேஸ்வரி, தோஷம் கழிக்கும் நோக்கத்தில் குழந் தையை நரபலிக்காகக் கொலை செய்திருக்கலாம் என்று அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.
இந்தச் செய்தியைப் படித்தபோது, நாம் 21ஆம் நூற்றாண்டில்தான் வாழ்கிறோமா என்ற சந்தேகம், என் எண்ணத்தைத் துளைத்தெடுத்தது. அறிவியல் மிகவும் முன்னேறியிருக்கும் காலம் இது. மனித அறிவுக்கு எட்டாதது எதுவுமே இல்லை என்ற நிலை உறுதிப் படுத்தப் பட்டிருக்கிறது.
உயிர்களின் பரிணாம வளர்ச்சி, கோள்களைப் பற்றிய முழுமையான ஆய்வு, தகவல் தொழில்நுட்பம் எனும் அறிவியல், இவ்வுலகத்தையே ஒரு சிறு கிராம மாகச் சுருக்கியதோடு - உள்ளங்கையில் உலகம் என்ற நிலை; - இப்படி மனித அறிவு, ஆழமாகவும் அகல மாகவும், எல்லை இதுதான் என்று வரையறுத்திட முடியாத அளவுக்கு விரிவடைந்து கொண்டே இருக்கிறது.
இவற்றை எல்லாம் கண்டும் கேட்டும், மனித அறிவின் அருமை பெருமைகளை வியந்து போற்றுகின்ற அதே வேளையிலேதான்; செய்வினை - குடுகுடுப்பைக்காரன் - தாயத்து - தோஷம் - நரபலி என்றெல்லாம் செய்திகள் செவிகளில் விழும்போது; வியக்கத்தக்க உயரத்திற்கு விஞ்ஞானம் சென்றதற்குப் பிறகும், மூடநம்பிக்கை எனும் பள்ளத்தாக்கில் இருந்து இன்னும் மனித இனத்தின் ஒரு பகுதி விடுபடவில் லையோ என்று தோன்றுகிறது.
உலகம் தோன்றிய நாள் தொட்டு, தந்தை பெரி யாரும் அவரைப் பின்பற்றி தன்மான இயக்கத்தினரும் ஆற்றி வரும் எவ்வளவோ பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்குப் பிறகும், உடன்பிறந்தே கொல்லும் வியாதியாக மூட நம்பிக்கையும், நல்ல கழனியில் தோன்றும் களையைப் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சமு தாயத்தை அரிக்கத்தான் செய்கிறது. இந்த மூடநம்பிக் கைக் களையை முற்றிலுமாக அகற்றுவது என்பது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகும்.
அரசியலைக் கடந்து, கருத்து வேறுபாடுகளுக்கு அப்பால், அனைவரும் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசியப் பணியாகும் இது. நமது மக்கள் அனைவரும் மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து என்றைக்கு விடுபடு கின்றார்களோ, அன்றுதான் நம் நாட்டின் உண்மையான விடுதலையை நாம் அடைந்த தாக அர்த்தமாகும் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னதை, அனைவரும் நினைவு கூர்ந்து, அயராது செயலாற்றுவதே நமது சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்றதாகும்.
அன்புள்ள,
மு.க.
(முரசொலி, 15.4.2013)
தினமணியா? இனமணியா?: திமுக தலைவர் கலைஞர் கேள்வி
சென்னை, ஏப்.15- தினமணி எனும் ஏடு முதல்வர் அவர்களிடம் சபாஷ் பெற அசல் இனமணியாக நடந்து வருவதை திமுக தலைவர் கலைஞர் சுட்டிக் காட்டி யுள்ளார்.
இதுகுறித்து கலைஞர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
ஜனநாயகத்தில் நான்காவது தூண் என்று கூறப்படும் பத்திரிகைகளில் - அரசியல் கட்சிப் பத்திரிகைகளாக நடத்தப்படும் ஏடுகள் அந்தக் கட்சிச் சார்பில் ஆதரவாக கருத்துகளை வெளியிடுவது தவிர்க்க முடியாதது.
ஆனால் எந்தக்கட்சியையும் சாராத தேசியப் பத்திரிகைகள் என்றும், நடுநிலை ஏடுகள் என்றும் சொல்லிக் கொள்ளும் சில ஏடுகள், ஆளுங்கட்சி யினால் அளிக்கப்படும் கோடிக்கணக் கான ரூபாய் விளம்பரங்களுக்காகவும் தங்களுக்கே உரிய இன உணர்வு காரணமாகவும் தி.மு.கழகத்திற்கு எதிரான செய்திகளை வெளியிடு வதையே தொடர்ந்து வாடிக்கையாகக் கொண் டுள்ளன.
குறிப்பாக இனமணி என எல்லோ ராலும் அடையாளம் காட்டப் பட்டுள்ள தினமணி நாளேடு; அந்தப் பெயர்க் காரணத்தை நிரூபித்திடும் வண்ணம் மக்கள் கருத்து என்ற தலைப்பிலும், அடடே என்ற தலைப் பிலும் தொடர்ந்து தங்களுடைய விஷமத்தனமான எண்ணங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டி ருப்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே புரிந்திருக்க முடியும்.
உதாரணமாக இன்றைய தினம் மக்கள் கருத்து என்ற பகுதியில் தூக்குத் தண்டனையை மாற்ற அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கருணாநிதி வலியுறுத் துவது என்ற கேள்வியை எழுப்பி, இது அரசியல் பேச்சு என்று 79 சதவிகிதம் கருத்து தெரிவித்திருப்பதாக முதல் பக்கத்தில் முக்கிய இடத்தில் வெளியிட் டிருக்கிறார்கள்.
தூக்குத் தண்டனையை மாற்ற வேண்டுமென்றால், அதற்கு அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிட வேண்டு மென்பது சட்ட ரீதியான அடிப்படை என்ற முறையிலும், ஏற்கனவே அப்படித் தான் கழக ஆட்சியிலே பின்பற்றப் பட்டது என்பதாலும் நான் அதைத் தெரிவித்தேன். ஆனால் தினமணி அதனை அரசியல் பேச்சு என்று திசை திருப்ப முயலுகிறது.
முதல்வரிடமிருந்து சபாஷ் பெற..
தினமணியின் இந்தப் பகுதியில் அன்றாடம் வெளியிடப்படும் கருத்துக் களைக் கூர்ந்து கவனித்தால், தொடர்ந்து அந்த ஏடு தி.மு.கழகத்திற்கு எதிராகவே தங்கள் கருத்துக்களைக் கூறி, அதன் மூலமாக முதலமைச்சர் ஜெயலலிதா விடமிருந்து சபாஷ் வாங்குவதிலேயே கண்ணும்கருத்துமாகச் செயல் படுகிறார்கள். தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும், தூக்குத் தண்டனை என்ற ஒன்றே இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்பது தற்போது உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்படும், விவாதிக்கப் படும் பொருளாக உள்ளது.
தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை துக்குத் தண்டனை கூடாது என்பதை இன்று நேற்றல்ல பல ஆண்டுகாலமாக நான் வலியுறுத்திச் சொல்லி வருகிறேன். ஆனால் அந்தக் கருத்தினை அரசியல் பேச்சு என்று தினமணி மக்கள் கருத்து அது என்றும் அதற்கு 79 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்திருப்பதாகவும் கூறு வது என்பது போக்கிரித்தனம் அல்ல வா? இதிலே என்ன அரசியல் இருக்கிறது? மனிதாபிமானத்தோடு சொல்லப்பட்ட கருத்து அல்லவா?
இந்தியா முழுவதிலும் உள்ள எத்தனையோ மூத்த வழக்கறி ஞர்கள் எல்லாம் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லையா? அவர்கள் எல்லாம் கூறுவது அரசியல் பேச்சா? தினமணி இதற்கு மாத்திரமல்ல; ஒவ் வொரு நாளும் இவ்வாறு ஏதோ ஒரு செய்தியைத் தலைப்பாக ஆக்கிக் கொண்டு கேள்வி கேட்பதும், அதற்கு மக்கள் கருத்து என்று தி.மு. கழகத் திற்கு எதிரான, விரோதமான கருத்தினை மக்கள் கூறியதாக வெளியிடுவதும் என்பதைத் தொடர்ந்து செய்து வருகிறது.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தி.மு. கழகம் இதனை அலட்சியம் செய்து வந்த போதிலும், தினமணி இவ்வாறு தொடர்ச்சியாகச் செய்து வருவதின் மூலம், அ.தி.மு.க. ஆட்சியை, அதன் தலைவரைக் காப்பாற்ற நினைப்பது என்பது அவர்களின் இன உணர்வினை வெளிப்படுத்துவதற்குத் தான் உதவுமே தவிர, அவர்களின் இத்தகைய செயல் களைத் தமிழ்நாட்டு மக்கள் நன்றாகவே கவனித்து வருகிறார்கள் என்பதில் அய்யமில்லை
ஆரிய நுழைவால் பெண்ணடிமைத்தனம்! கோவை மாநாட்டில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கருத்துரை
கோவை, ஏப்.15- சங்க காலத்தில் தமிழ்ப் பெண்கள் உரிமையுடன் வாழ்ந் தனர்; கல்வியிலும் சிறந்து விளங்கினர். ஆரிய நுழைவால் மனுதர்மக் கலாச் சாரத்தால் பெண்ணடிமைத்தனம் இங்கே வேர்பிடித்தது என்றார் சுப்பு லட்சுமி ஜெகதசீன் அவர்கள்.
தி.மு.க. உயர்நிலைக் குழு உறுப்பி னர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் கோவை சுந்தராபுரத்தில் 13.4.2013 அன்று மாலை திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற புரட்சிப் பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரை யாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
வழிகாட்டும் தீர்மானங்கள்!
இந்த மாநாட்டில் நிறைவேற்றப் பட்டுள்ள 26 தீர்மானங்கள் மிகச் சிறந் தவை. நல்ல முறையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. மத்திய - மாநில அரசுகள் என்ன செய்யவேண்டும் என்று கூறும், வழிகாட்டும் தீர்மானங்கள் இவை - ஒவ்வொன்றும் முத்து முத்தானவை!
என்னதான் வளர்ச்சி அடைந்திருந் தாலும், இன்னும் பெண்கள் பல வகையிலும் துயரத்தை அனுபவித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்.
50 சதவிகித வாய்ப்புகள், அனைத் திலும் பெறவேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது - இதில் என்ன குற்றம்?
மனிதனுக்கு இரண்டு கண்கள் இருக்கின்றன. ஒரு கண் மட்டும் பார்வை உள்ளதாக இருந்தால் போதுமா? இரண்டு கைகளில் ஒரு கை மட்டும் செயல்பட்டால் போதுமா?
வடக்கே பெரியார் தேவைப்படுகிறார்
பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் அவர்கள் ஒரு நூற்றாண் டுக்கு முன்பாகவே குரல் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக் கப்பட்ட மக்கள் அனைவரையும் கைதூக்கி விட்டார். தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் நம்மிடையே தோன்றியிராவிட்டால் நம் நிலை என்ன? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது.
நான் சமூக நலத்துறை மத்திய அமைச்சராக இருந்தபோது, இந்தியா முழுமையும் பல மாநிலங்களுக்கும் செல்லக்கூடிய வாய்ப்புக் கிட்டியது.
வடமாநிலங்களில் பெண்கள் நிலை மட்டுமல்ல; ஆண்கள் நிலையும்கூட பரிதாபகரமாகத்தானிருக்கிறது.
ஆண்டான் அடிமை முறை இன்னும் வடமாநிலங்களில் உள்ளது. ஒரு தனி மனிதர் நிலச் சுவான்தாரராக இருந்து அந்தக் கிராமத்தையே தன்கீழ் கொண்டு வருவார். ஜாதீய கட்டமைப்பு அப்படியே இருக்கிறது.
வடநாட்டில் உள்ள தலைவர்கள் வெளிப்படையாக எங்களிடம் சொன்ன துண்டு. உங்களுக்கு ஒரு பெரியார் கிடைத்தார் - எங்களுக்கு அந்த வாய்ப் புக் கிடைக்கவில்லையே என்று ஆதங் கத்தோடு சொல்வதுண்டு. தந்தை பெரியாரின் தொண்டின் அருமை, திராவிட இயக்கத்தின் அருமை வடமாநி லங்களுக்குச் சென்று பார்த்தால்தான் தெரியும். நீதிக்கட்சி ஆட்சிதான் வகுப்பு வாரி உரிமையை நமக்கு அளித்தது; அதனாலேயே கல்வி கற்றோம்.
ஆரிய நுழைவால் பெண்ணடிமை!
சங்க இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் பெண்கள் உரிமையுடனும், கல்வி கற்றவர்களாகவும் வாழ்ந்தி ருக்கின்றனர். இடைக்காலத்தில் ஆரிய நுழைவினாலே பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன; அவர்களின் கலாச் சாரம் வேறு, நம்முடைய கலாச்சாரம் வேறு; அவர்களுடைய கலாச்சாரம் மனுமுறைக் கலாச்சாரம்.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஆண் ஆதிக்கம்
சட்டமன்றங்களிலும், நாடாளுமன் றத்திலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு சட்டம் 1996 முதல் கிடப்பில் கிடக்கிறது. அந்தச் சட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறை யிலே ஆண்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். ஆண்களால் பெண் களுக்கு விடுதலை இல்லை என்று தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு சரியானது என்பதை நேரில் காண் கிறோம்.
பெண் விடுதலைப் போராளி என்று இம்மாநாட்டில் நமது ஆசிரியர் அவர்களுக்கு ஒரு பட்டத்தைக் கொடுத் தனர். அதனைப் பெற்றுக்கொண்ட ஆசிரியர் அவர்கள் பெண்கள் விடு தலை பெண்கள் கையில்தான் இருக் கிறது என்று நயமாகக் குறிப்பிட் டார்கள்.
இந்த மாநாடு நல்லதோர் காலகட் டத்திலே சிறப்பாக நடைபெறுகிறது. மாநாட்டு வரவேற்புக் குழுவினருக்குப் பாராட்டுகளைத்
தெரிவித்துக் கொள் கிறேன் என்று குறிப்பிட்டார்.
பெரியார் திடலில் மக்கள் திரள்!
மாநாட்டில் பெரியார் பிஞ்சு திரு வாரூர் கவிதா உணர்ச்சிகரமாகப் பேசினார். அனைவரும் வியந்து பாராட்டினர்.
மாநாட்டுக்குக் கழகப் பொதுச் செயலாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி தலைமை வகித்தார். பேரா சிரியர் சாரதாமணி ஆசான் தலைவரை முன்மொழிந்தார். பழனி மாவட்ட மாண வரணி அமைப்பாளர் பழனி சே.மதி வதனி தலைவரை வழிமொழிந்தார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் ச.திலக மணி நன்றி கூறினார்.
பெரியார் திடலே நிரம்பி வழியும் வண்ணம் கழகக் குடும்பத்தினரும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.
Post a Comment