Search This Blog

13.1.13

தமிழனின் பண்பாட்டு பொங்கல் விழாவிலும் பார்ப்பனீயம்!


பொங்கல் விழா என்பது தமிழர்களைப் பொறுத்த வரை ஏதோ ஒரு விழா அல்ல; தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தில் அடிப்படையானது.

இதில் மதம் கிடையாது - மதச்சார்பற்ற தன்மை என்னும் குணநலன்கள் கொண்டது. உலகின் பல்வேறு நாடுகளிலும் அறுவடைத் திருவிழா நடைபெறுவதுண்டு. தமிழர்களைப் பொறுத்தவரை பொங்கல்தான் அறுவடை விழாவாகும்.

இயற்கைப் பாதுகாப்பு வேளாண்மைக்கு இன்றியமையாத கால்நடைகளைப் பாதுகாப்பது, உழைப்புக்கு மதிப்புக் கொடுப்பது, உற்றார், உறவினர் நண்பர்களைச் சந்தித்து வாழ்த்துகள் கூறி மகிழ்வது - தமிழர்களுக்கென்று உள்ள புத்தாண்டுப் பிறப்பு என்கிற அனைத்துத் தமிழினப் பண்பாட்டுக் கூறுகளையும் உள்ளடக்கமாகக் கொண்ட ஒப்பரும் திருவிழாவாகும்.

உழைப்பை எப்பொழுதும் வெறுக்கக் கூடிய பார்ப்பனர்களோ இந்த விழாவை ஏற்றுக் கொள்வது கிடையாது.

மத ரீதியாக தமிழர்களான நம்மை சூத்திரர்கள் என்றனர். தொழிலாளர்கள் ஏழு வகைப்படுவர் - அவர்கள்தான் சூத்திரர்கள் என்று மனுதர்மத்தில் குறிப்பிட்டுள்ளனர் (மனுதர்மம் அத்தியாயம் 8 சுலோகம் 415).


இன்னும் ஒருபடி மேலே சென்று மனுதர்மம் என்ன சொல்லுகிறது?

பயிரிடுதலை மேலான தொழில் என்று சிலர் கருதுகின்றனர். ஆயினும் பெரியோர் அதைப் பாராட்டவில்லை. ஏனெனில் இரும்புக் கொழு நுதியுடைய கலப்பை  மண் வெட்டி இவற்றைக் கொண்டு பூமியையும், பூமியில் வாழும் உயிரினங்களையும் வெட்ட நேரிடு கிறதன்றோ? (மனுதர்மம் அத்தியாயம் 10 சுலோகம் 84).


விவசாயத்தைப் பாவத் தொழில் என்று சொன்ன கொடுமதி படைத்த கூட்டம் உலகத்தில் பார்ப்பனர்களாகத்தான் இருக்க முடியும்.


பார்ப்பனர்கள் பாடுபடக் கூடாது என்பதை சாத்திரப் பாதுகாப்போடு ஏற்பாடு செய்து கொண்ட தந்திரத்தை, சூழ்ச்சியைத் தமிழர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.


ஏர் உழுவதால் உயிர்கள், பூச்சிகளை வெட்ட நேரிடுகிறதாம். இப்படி சொல்லுகின்ற பார்ப்பனர் தாம் யாகம் என்ற பெயராலே உயிருடன் ஆடு களையும், மாடுகளையும் ஏன் மனிதர்களையும்கூட (புருஷ யக்ஞ) நெருப்பில் போட்டு துடிதுடிக்கக் கொல்லுகின்ற இந்த ஆரியப் பார்ப்பனர்கள் தான் ஏர் உழுவதால் உயிர்களும், பூச்சிகளும் வெட்டப் படுவதால் விவசாயம் பாவத் தொழில் என்று பம்மாத்து செய்கிறது.


ஒரு கேள்விக்கு அந்தக் கூட்டம் பதில் சொல்லட்டும் பார்க்கலாம் அப்படி பாவத் தொழிலான விவசாயத்தால் பயிர் செய்யப்படுகின்ற அரிசியைப் பார்ப்பனர்கள் உயிர் வாழ உண்ணலாமா?

உண்மையிலேயே விவசாயத்தைப் பாவத் தொழில் என்று உறுதியாக நம்பினால் பட்டினிக் கிடந்து சாக வேண்டியதுதான்.


எதிலும் இரட்டை வேடம் என்பதுதான் பார்ப்பனர்களுக்கே உரித்தான பிறவிக் குணமாகி விட்டது.

விவசாயம் உழவர்களின் உழைப்பிற்கு முக்கியத் துவம் கொடுப்பதால் பார்ப்பனர்கள் என்ன செய்தார்கள் என்றால் தமிழர்தம் பண்பாட்டு விழாவாகிய பொங்கல் மீதும் புராணப் புழுதியைப் புகுத்தியுள்ளார்கள்.

பார்ப்பனர்கள் தங்கள் வாயால் சங்கராந்தி என்று சொல்வார்களே தவிர பொங்கல் என்று தப்பித் தவறியும் சொல்லவே மாட்டார்கள்.


இந்திரன் மழைக் கடவுளாம். அதற்காக அவன் கொடுத்த மழைக்காக இந்திரனை ஆராதித்தார்களாம். கிருஷ்ணமூர்த்தி அவதரித்தபிறகு நாராயணனுக்குப் படைக்கக் கட்டளையிட்டார் எனவும், அதனால் இந்திரன் கோபங் கொண்டு பெரு மழை பெய்விக்க, குடிகள் நிலை குலைந்து மாடுகள், கன்றுகளை இழந்து தடுமாற  கிருஷ்ணன் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து குடிமக்களைக் காத்தானாம்.


அதனால் இந்திரன் வெட்கித் தலைகுனிந்து வேண்ட சங்கராந்திக்கு முன்நாள் (மார்கழி கடைசி நாள்) இந்திரன் பெயரால் போகியும் மறுநாள் சங்கராந்தி பண்டிகை எனவும், அதற்கு மறுநாள் மாட்டுப் பண்டிகை என்றும் கதைகட்டி விட்டனர்.

தமிழனின் பண்பாட்டு விழாவிலும் பார்ப்பனீயம் தனது கலாச்சாரத்தைத் திணித்துள்ளது.

தமிழர்களில் தமிழ்ப் புத்தாண்டுப் பொங்கல் பொன்னாளில் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்க உறுதிகொள்வோம்! பொங்கலோ, பொங்கல்!
                                         ‘ விடுதலை” தலையங்கம் 13-1-2013

9 comments:

தமிழ் ஓவியா said...


தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களின் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள் வாழ்த்து


தைத்திங்கள் முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாள்! இந் நன்னாளை உற்றார், உறவினர், நண்பர்களின் வாழ்த்தொலி முழங்கக் குடும்பத்தோடு கொண்டாடி மகிழும் எனது உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட அருமைத் தமிழ் மக்களுக்கு உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன்.

2006இல் ஆட்சிப் பொறுப்பேற்ற விழா மேடையிலேயே, 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன் களை ரத்து செய்து; விவசாய பம்ப் செட்டுகளுக்கான இலவச மின் சாரத்தை உறுதி செய்து, சிறப்புக் கட்டணம் செலுத்தி வந்த 2 லட்சத்து 40 ஆயிரம் விவசாயப் பம்ப் செட்டுகளுக்கும் புதிதாக இலவச மின்சாரம் தந்து; வட்டியில்லா விவசாயக் கடன் வழங்கி, ஏறத்தாழ ஒரு லட்சத்து 80 ஆயிரம் விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2 லட்சத்து 13 ஆயிரம் ஏக்கர் இலவச நிலம் வழங்கி, பயிர்க்காப் பீட்டுத் திட்டத்தில் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை கழக அரசே செலுத்தி, காப்பீட்டுத் திட்டத்தில் அதிக அள வில் விவசாயிகளை இணைத்து, 9 இலட் சத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடு கிடைக்கச் செய்து, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 1,100 ரூபாய், கரும்பு டன் ஒன்றுக்கு 2,000 ரூபாய் என விலைகளை உயர்த்தித் தந்து - ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ நல்ல அரிசி, மாதம்தோறும் குறைந்த விலையில் பாமாயில் எண்ணெய், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, மைதா, செறிவூட் டப்பட்ட கோதுமை மாவு, மானிய விலையில் 50 ரூபாய்க்கு 10 சமையல் பொருட்கள் என வழங்கி - 2006-2011 ஆகிய 5 ஆண்டுகளிலும் தமிழக மக்களின், குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வை வளப்படுத்திய அந்த வசந்த காலத்தை நினைக்கின்றேன்.

ஆனால், இன்றைய அ.தி.மு.க. அரசின் தவறான அணுகுமுறைகளால் தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக் காமல்; கழக அரசு தொடங்கிய வல்லூர், வடசென்னை, மேட்டூர் அனல் மின்நிலையப் பணிகளை விரைவுபடுத்திச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளாமையால் பம்புசெட்டு களுக்கு மின்சாரம் கிடைக்காமல் விவசாயம் முற்றிலும் முடங்கி தமிழக விவசாயிகள் வேதனையில் மூழ்கிக் கிடக்கின்றனர். மேலும், அனைத்துப் பொருள்களின் விலைவாசிகளும் வெகுவாக உயர்ந்து எல்லா வகையி லும் தமிழக மக்கள் அல்லல்படு கின்றனர். இந்த நிலையை எண்ணும் போது இதயம் விம்முகிறது. இரு விழிகளிலும் நீர் அருவியாகிறது.

எனினும், புலரும் புத்தாண்டு கைகொடுக்கும்! இளம்தளிர்கள் எழுச்சிபெறும்! புதிய வாழ்வு உதயமாகும்! எனும் நம்பிக்கையுடன் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்திட உளமார வாழ்த்துகிறேன்.

தமிழ் ஓவியா said...


பெண்கள் தற்காப்புடையவர்களாகப் பயிற்சி பெற வேண்டும்


பெண்கள் தற்காப்புடையவர்களாகப் பயிற்சி பெற வேண்டும்
விரைவில் பெண்கள் புரட்சி மாநாடு நடைபெறும்
சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை, சன.13- பெண்களின் உரிமைகளை முன்னெடுத்துச் செல்லவும் தற்காப்புப் பயிற்சி பெறவும் விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண்கள் புரட்சி மாநாட்டை திராவிடர் கழகம் நடத்தும் என்று அறிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கருத்தினை எதிர்த்து திராவிடர் கழக மகளிரணி பாசறையின் சார்பில் சென்னை ஒயிட் மெமோரியல் ஹால் முன்பு நேற்று (12.1.2013) மாலை 5 மணிக்கு எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் பாசறை மாநில செயலாளர் டெய்சி மணியம்மை தலைமை வகித்தார்.

தமிழ் ஓவியா said...

தலைமைச் செயற்குழு உறுப்பினர் திருமகள், பொதுக் குழு உறுப்பினர் ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம் வழக்குரைஞர் வீரமர்த்தினி வடசென்னை மகளிரணி அமைப்பாளர் கு. தங்கமணி, தென் சென்னை கனகா, ஆவடி ராணி ரகுபதி, மோகனப் பிரியா, பண்பொளி, செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் கழகத் தலைவர் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

21ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் நாட்டை மனுதர்ம உலகத்துக்கு இழுத்துச் செல்ல பிற்போக்கு சக்திகள் துடிக்கின்றன. சமதர்மத்தை, சமத்துவத்தைக் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கின்றன.

தந்தை பெரியார் அவர்கள் பாடுபட்டு, திராவிடர் இயக்கம் பிரச்சாரம் செய்து பெண்கள் படிக்கிறார்கள் - பெரும் உத்தியோகங்களைப் பார்க்கிறார்கள்!

பி.ஜே.பி. ஆட்சியில் என்ன நடந்தது?

பெண் குழந்தைகள் பிறந்தால் கழுத்தை முறித்து வயலில் எறியும் ஒரு காலம் இருந்தது. கணவன் இறந்தால் மனைவியையும் அவனோடு சேர்த்து வைத்து எரித்து வந்த சமூகம் தானே இந்து

சமூகம் - மறுக்க முடியுமா?

வெகு தூரம் போக வேண்டாம். பிஜேபி ஆண்ட ராஜஸ்தானில் நம் காலத்திலேயே நடக்கவில்லையா ரூப்கன்வாருக்கு என்ன நேர்ந்தது? சதிமாதா கோயில் கட்டினார்களே
பெரியார் பிறந்ததால் தமிழ்நாட்டில் அதற்கு இடம் இல்லை.

இந்தியாவின் தலைநகரான டில்லியிலே ஒரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடுமையை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கிளம்பியுள்ள கால கட்டத்தில் பெண்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால் - இவர்கள் எத்தகையவர்கள் - இவர்கள் சார்ந்திருக்கும் இந்துத்துவா எவ்வளவுக் கொடியது என்பதை அம்பலப்படுத்த வேண்டும்.

காந்தியாரைக் கொன்ற கும்பல் எச்சரிக்கை!

காந்தியாரைப் படுகொலை செய்த கூட்டம் அது. பச்சைத் தமிழர் காமராசரை பட்டப் பகலில் படுகொலை செய்ய முயற்சி செய்த கும்பல் அது.

அந்தக் கும்பல்தான் இப்பொழுது பெண்களை சமையல் அறைக் கருவியாக சம்பளம் இல்லாத வேலைக் காரியாக்கத் துடிக்கிறது.

இன்றைக்குப் பெண்கள் காவல்துறையிலும், இராணு வத்திலும் பெரிய பெரிய அதிகாரிகளாக வந்துவிட்டனர். விமானங்களை ஒட்டுகின்றனர். என்றாலும் பெண்கள் என்றால் பலகீனமானவர்கள் என்ற மனப்பான்மை ஆண்களிடம் இருக்கிறது.

பெண்களும் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தயாராக வேண்டும். துப்பாக்கிச் சுடும் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசுகள் அனுமதியளிக்க வேண்டும்.

தேவை காரத்தே பயிற்சி

தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி வரை பல்கலைக் கழகங்களிலும் கராத்தே பயிற்சி அளிக்க வேண்டும்.

நாங்கள் நடத்தும் பெரியார் கல்வி நிறுவனங்களில் மழலையர் பள்ளியிலிருந்து பல்கலைக் கழகம் வரை கராத்தே பயிற்சி இருபாலருக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பாதுகாப்பு என்றால் அதில் நியாயமாக அதில் ஆண்களுக்கும் கடமை; பொறுப் புணர்ச்சி இருக்கிறது.

உங்கள் மகளை சகோதரியை நினைத்துப் பாரீர்!

நமது தாய், நமது மகள் சகோதரின் பெண்கள் என்ற எண்ணம் வர வேண்டும். அப்படி நினைத்தால் தான் பெண்களை மதிக்கும் எண்ணம், உணர்வு ஏற்படும்.

சமூகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால் ஆண்களுக்கும் அது தொடர்பான பாதிப்புகள் வரத்தானே செய்யும்?

பெண்கள் புரட்சி மாநாடு

விரைவில் திராவிடர் கழகம் இதற்கான மாநாட்டை நடத்தும் - அது பெண்களின் புரட்சி மாநாடாக இருக்கும் என்று குறிப்பிட்டார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.

தமிழ் ஓவியா said...


தமிழர் தலைவரின் திராவிடர் திருநாள் வாழ்த்து


துயரமும், துன்பமும், துரத்திய நேற்றைய வலிகள் நீங்கி, மக்களிடையே பகுத்தறிவும், மகிழ்ச்சியும் பொங்கும் வண்ணம் திராவிடர் திருநாளாம் இன்றைய பொங்கல் புத்தாண்டு புதிய நம்பிக்கை ஒளியை ஊட்டட்டும்; புத்தாக்கத்தை மலரச் செய்யட்டுமாக

அனைவருக்கும் நமது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

13.1.2013

கி. வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

தமிழ் ஓவியா said...


பொங்குக புதிய சிந்தனைகள்!

தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க மான இத் தை துவக்கம் திராவிடர் களின் அறுவடைத் திருநாளாம் பொங்கல் விழாக் கொண்டாட்டத்தை அளித்துள்ளது.

மார்கழி முடிந்து தை பிறக்கிறது. இதில் வரும் பொங்கல் பற்றி புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் தனது கவிதையில்...

மார்கழி உச்சியில் மலர்ந்தது பொங்கல் என்று கூறி வியக்க வைத்தார்கள்.

உணவின்றி மனிதர்கள் வாழ முடியாது; அந்த உணவை வேட்டை யாடித் தின்ற மனிதன், காடு வனாந் தரங்களில் காய் கனிகளைப் புசித்து, ருசித்த பிறகு, வேளாண்மையை அறிந்து தனது நாடோடி வாழ்வைத் துறந்து, நாகரிகத் தொட்டிலில் தாலாட்டப்பட்டான்! பூமித் தாயின் புதல்வனுக்கு அது அமுதூட்டியது; அவனுக்கு உழைக்கச் சொல்லிக் கொடுத்து, ஊரையும் உலகத்தையும் வாழ வைக்க உன் உழைப்பும் பயன் படட்டும் என்ற பாடத்தையும் கற்பித்தது!

வேட்டைக்காரன் விவசாயியாக மாறி வேளாண் பெருமகனாக மாறினான்!

அந்த கால கட்டத்தில் மரக் கலப்பையும் ஏறுமே ஓர் அமைதிப் புரட்சிக்கான ஆயுதங்கள் தானே!

தேவைக்கு மேல் விளைச்சல் கண்டான். என்ன செய்வது உபரியை என்று யோசித்த போது அவனுக்கு பண்டமாற்று கருத்து உதித்தது.

இதுவே படிப்படியாக தொழிற் புரட்சிக்கு அழைத்துச் சென்று, இன்றைய தகவல் புரட்சி யுகத்தில் மின்னணுவியல் புரட்சி வரை சென்று, மனிதர்களின் ஆயுளைப் பெருக்கும் அற்புத விளக்காக அவனுடைய மூளையால் - அதன் சிந்தனை ஆற்றல் செய்து காட்டியது!

எனவேதான் பார் முழுவதற்கும் ஏர் முனையே ஏற்றத்தின் திறவுகோல்.

இந்தப் பொங்கலில் புத்துருக்கு நெய்யும், புதிய அறுவடை மூலம் பெற்ற அரிசியும் கலந்து புதுப்பானையில் பொங்கலிட்டு, மகிழ்ந்த மனிதர்கள் பொங்கலோ பொங்கல் என்று கூவிக் கூவி தங்கள் உள்ளத்திற்குள் புத்தொளி பாய்ச்சி புதிய ஆண்டினை வரவேற்றனர்!

இயற்கையை எண்ணி வியப்புற்றனர்! எந்தத் தீ பொங்கலிடுவதற்குப் பயன் பட்டதோ அதே தீ, பயனற்ற பழையவை களையும் பொசுக்கி பழையன கழித்து, புதியன போற்றி வரவேற்கும் முன்னேற் றப் பாதையைக் கண்டு, மகிழ்ந்தனர்!

நம் மக்கள் எல்லா உயிரினத்திற்கும் நன்றி காட்டக் கடமைப்பட்டுள்ளதை உணர்ந்தவர்கள் என்றாலும், தங்களுக்கு உழவில் உதவிடும் மாடுகளுக்கும் மகிழ்ச்சியையூட்டி, அது அய்ந்தறிவு பிராணியானாலும், ஆறாம் அறிவு மனி தனைவிட அதிகம் உழைக்கபடுபவை என்பதால் அதற்கும்கூட பொங்கலுக்கு அடுத்த நாளை மாட்டுப் பொங்கல் என்று வைத்து அவைகளுக்கும் நன்றி காட்டி உயர்ந்தான் இந்த உழவர் பெருமகன்!

நீரோடை நிலங்கிழிக்க, நெடுமரங்கள்

நிறைந்துபெருங்காடாக்க, பெருவிலங்கு

நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்

நெடுங்குன்றில் பிலஞ்சேரப், பாம்புக்கூட்டம்

போராடும் பாழ் நிலத்தை அந்த நாளில்

புதுக்கியவர் யார்? அழகு நகருண்டாக்கி!

என்று அழகான கவிதையிலே கேட்பார் புரட்சிக் கவிஞர்!

உலகம் முழுவதும் அறுவடைத் திருநாள் ‘Harvest Festival’ என்று கொண்டாடினாலும், அதையே தமது நன்றித் திருநாளாக அமைத்தனர் நம் மக்கள்!

நிலத்தை அதன் இயல்புக்கு ஏற்ப, மருதம், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை என்று பிரித்த பண்பட்ட அறிவு, ஒரு பண்பாட்டுப் புரட்சி அல்லவா?
அப்படிப்பட்ட மக்கள் ஏன் வீழ்ந் தார்கள்? தாழ்ந்தார்கள்? சிந்திப்போம்; சிறகடிப்போம். ---வீரமணி

தமிழ் ஓவியா said...


தளபதி ஸ்டாலின்பற்றி தமிழர் தலைவர்


தந்தை பெரியாரின் கொள்கைகளை, பெண்களின் முன்னேற்றத்தை நிறைவேற்றும் கொள்கை பிடிப்புள்ள தலைவர் எதிர்காலத்திற்கு மானமிகு ஸ்டாலின் மட்டுமே என உறுதியாகக் கூறலாம்.

ஆக, தந்தை பெரியாரின் கொள்கையை, அறிஞர் அண்ணாவின் சாதி சமயமற்ற சமுதாயத்தை நிலைநாட்டிட, தமிழினம் முன்னேற, ஆரிய மாயைகள் ஒழிந்திட, கலைஞரின் எதிர்கால முடிவே சிறந்தது என நாம் எண்ணுகிறோம்.

எந்த கோணத்தில் பார்த்தாலும் கடும் உழைப்பாளியான தளபதி ஸ்டாலின் தான் இந்த தலைமைப் பதவிக்கு உகந்தவர் என்று ஆசிரியர் திட்டவட்டமாக அறிவித்தது குறித்து எல்லோரும் மிகவும் மகிழ்வடைகின்றோம். தமிழ்நாடு முன்னேற்றப் பாதைக்குச் செல்ல வேண்டும். தளபதி ஸ்டாலின்தான் நமது நாட்டிற்கு மிகவும் தேவையாக உள்ளார்.

வாழ்க அவரின் தொண்டு! தகுதியான தலைமையை அறிவித்துள்ள மானமிகு கலைஞரின் ஆயுள் காலம் நீடித்து மகனுக்கு வழிகாட்டிடு வார் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு உள்ளது.

- சித்ரா சுந்தரம்

தமிழ் ஓவியா said...


பொங்கலோ பொங்கல்!

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கட்டும்
தமிழர் வாழ்வில் புத்துணர்வு பொங்கட்டும்
தரணிவாழ் தமிழர் உள்ளம் உணர்ச்சி பெற்றே
தரங்கெட்டே வாழாமல் தமிழ் உணர்வு பொங்கட்டும்!
தமிழர்க்கு முதல் எதிரி தன்மானம் இழந்த தமிழர் தான்
இனமானம் பொங்கட்டும்,இனவுணர்வு பெருகட்டும்!
புரியாத மந்திரத்தால் வந்து உதவாத கடவுள்களால்
திசை தெரியாமல் அலைந்து வரும் தமிழரெல்லாம்
பெரியாரைக் கடைப் பிடித்து ஆசிரியர் வழி கண்டு
எதிர் காலம் நமதென்றே இணைந்திட்டால் வழி பிறக்கும்!
"விடுதலை' "உண்மை" "பெரியார் பிஞ்சு " தமிழர்
இல்லங்களில், கணினிகளில் வலம் வரட்டும்
இல்லாத கடவுள்களும் பொல்லாத ஜாதிகளும் ஒழியட்டும் ! ஒளி பிறக்கும் தமிழர் நெஞ்சில்!
இந்த ஆண்டு நமது ஆண்டு ஈழத்தைப் பெற்றெடுப்போம்
இனி வரும் ஆண்டுகளில் தமிழரென ஒன்று பட்டு
"புதியதோர் உலகம் செய்வோம்" மகிழ்வுடனே
பொங்கிடுவோம் பொங்கல் பொங்கலோ பொங்கலென்று !

- சோம.இளங்கோவன்

தமிழ் ஓவியா said...


தமிழ் மொழியின் நிலை -குறள்மொழி-


உயர்நீதிமன்றத்தில் 2.1.2013 புதன்கிழமை அன்று நடைபெற்ற ஒரு வழக்கு உசாவலின் போது வழக் குரைஞர் தமிழில் வாதாடியதால், அந்த வழக்கினை வேறொரு நடுவருக்கு மாற்றப் பரிந்துரைக்கப்பட்டது.

இதுபற்றிய மேலும் விவரங்களை தினமலர் நாளிதழில் வந்ததைப் பார்க்கலாம்.

திண்டிவனத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சிவில் மேல்முறையீடு வழக்கை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கு நடுவர் பி.ஆர்.சிவகுமார் முன்னிலையில் 2.1.2013 அன்று உசாவலுக்கு வந்தது. விண்ணப்பித்தவரின் வழக்குரைஞர் ம.பாரி எழுந்து தமிழில் வாதிட்டார். அப்போது நடந்த வாதம்:

நடுவர்: நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? உயர்நீதிமன்றத்தில் ஆங்கிலம்தான் வழக்காடு மொழி என்பது தெரியாதா?

பாரி: முன்னரே பல நடுவர்கள் முன்னிலையில் தமிழில் வாதிட்டு ஆணைகள் பெற்றுள்ளேன். தமிழில் வாதாடலாம் என்று உயர்நீதிமன்ற நடுவர் கொண்ட முதல் அமர்வு ஆணை பிறப்பித்துள்ளது. அதனால் தமிழில் வாதிட இசைவு தர வேண்டும்.

நடுவர்: உயர்நீதிமன்ற வழக்காடு மொழி தமிழ் அல்ல; ஆங்கிலம்தான். தமிழில் வாதிட இசைவு தர முடியாது.

பாரி: உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற பல மாநில உயர்நீதி மன்றங்களில் அந்தந்த மாநில மொழியில் வாதிட இசைவளிக்கப்படுகிறது.

நடுவர்: தமிழில் வாதிட அரசியல் சட்டத்தில் இடம் இல்லை. எனவே தமிழில் வாதிட இசைவு மறுக்கப் படுகிறது.

இவ்வாறு வாதம் நடந்தது. பின்னர் நடுவர் பிறப்பித்த ஆணை: வழக்குமன்ற அலுவல் மொழி தொடர்பாக மாறுபட்ட கருத்தை விண்ணப்பத்தவரின் வழக்குரைஞர் குறிப்பிடுகிறார். தமிழும் வழக்குமன்ற அலுவல் மொழிதான் என்று அவர் வாதிடுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானதாக உள்ளது. இதனால் வழக்கு உசாவல் தொடரும் போது மகிழ்ச்சியற்ற சூழ்நிலை ஏற்படலாம் என்பதால் அதைத் தடுக்கும் வகையில் இந்த வழக்கை வேறு நடுவரின் உசாவலுக்கு ஆணையிடும்படி தலைமை நடுவருக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

மேற்கண்ட செய்தி நமக்குத் தெரிவிப்பதென்ன?

தமிழ் என்னும் செம்மொழி இன்றுவரை செயல்பாட்டு மொழியாகத் தமிழராலேயே ஏற்கப்படவில்லை. தமிழ் என்னும் ஆட்சியாளரால் அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநில அரசுகள் தங்கள் மொழிகளுக்கு உரிய ஏற்பிசைவை (அங்கீகாரத்தை)ப் பெற்றிருக்கின்றன. அந்த மாநில மக்களும் ஆட்சியாளரும் தங்கள் மொழிக்குரிய ஏற்பிசைவைப் பெறுதலில் முனைப்பாக இருந்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் நடப்பதைப் போல பிற மாநிலங்களில் தங்கள் மொழிக்காக உயிர் துறப்பவர்களைக் காணுதல் அரிது. ஆனால் நம் தமிழ்நாட்டில் தமிழுக்காக உயிரைக் கொடுப்பவரின் பட்டியல் நீண்டுக்கொண்டே வரு கின்றது. மற்ற மாநிலத்தார் ஒன்றாகத் திரண்டு சாதிக்கிறார்கள். நாமோ ஒற்றுமையின்றி சிதறுண்டு கிடக்கிறோம்.

இனியாவது அடுத்தவரைக் குற்றம் சாட்டுவதைத் தவிர்ப்போம். இந்த மொழி தொடர்பாகவாது தமிழர் எனத் தங்களைக் கருதிக் கொள்வோர், தமிழர் என தங்களைக் சொல்லிக் கொள்வோர் ஆட்சியில் இருப்பவர்களும் சரி - அரசியல் கட்சிகளை நடத்து பவர்களும் சரி - அரங்கத்தில் மேடைகளில் மட்டுமே தமிழை முழங்குகிறவர்களும் சரி ஒன்று திரள வேண்டிய கட்டாயம் இன்று நடுவர் சிவகுமார் அவர்களால் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்திய நடுவர் சிவகுமார் அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். தமிழுக்காகப் போராடிய வழக்குரைஞர் ம.பாரி அவர்களுக்கு நம் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றோம்.

தமிழ் ஓவியா said...

தமிழில் வாதிடத் தொடங்கிய வழக்குரைஞர் பாரியிடம் நடுவர் தொடுத்த முதல் வினா: நீங்கள் எந்த உலகத்தில் இருக்கிறீர்கள் - என்பதுதான்.

நடுவரும் சரி பாரியும் சரி இருவருமே தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பது நடுவருக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் இந்த வினாவை - தேவையற்ற வினாக்களை வழக்காடு மன்றத்தில் எழுப்பக் கூடாது என்று அறிவுறுத்தும் இடத்தில் இருக்கும் ஒரு நடுவரே எழுப்பியிருக்கிறார்? நடுவர் சிவகுமார் அவர்களது பேச்சு நம்முடைய சினத்திற்கு உரியது அல்ல. சிந்தனைக்கு உரியதாகும்.

உன்னைப் போன்ற பிற மாநிலத்தான் தன்னுடைய மொழிக்காக உயிரைக் கொடுக்கவில்லை. ஆனால் தன் மொழியை ஆட்சிமொழியாக்கியிருக்கிறான்; பயிற்று மொழியாக்கியிருக்கிறான்; வழக்குமன்ற அலுவல் மொழியாக்கியிருக்கிறான்.

ஏ, தமிழா! மொழிக்காக நீ உயிரைக் கொடுக்கத் துடிக்கிறாயே தவிர, ஒன்றாய்ச் சேர்ந்து வெற்றி பெறும் வரை போராடாதிருக்கிறாயே! - என்னும் இந்த வினாதான் நடுவர் சிவகுமார் அவர்கள் எழுப்பிய வினாவின் உட்பொருள்.

மொழி ஒரு கருவிதான். அந்தக் கருவி பயன்படுத்தப் படப் பயன்படுத்தப்படத்தான் கருவியும் கூர்மை பெற்றிருக்கும். மாறாக, கருவியை கையாளவில்லை யென்றால் நாளாக நாளாகத் துருப்பிடித்துப் பயன்படுத்த முடியாத நிலைமை வந்துவிடும். தமிழுக்கு அந்த நிலை பாரதி காலம் தொடங்கி வந்து கொண்டிருக்கிறது.

தமிழரின் வாழ்வுக்குத் தமிழ்மொழி தேவையா? தேவையில்லையா என்னும் முடிவுக்கு நாம் வந்தாக வேண்டும். தேவையில்லை என்று சொல்பவன் தமிழனாக இருக்க மாட்டான். தமிழனாகத் தன்னை அறிவித்துக் கொள்பவன் தன்னை அடையாளப் படுத்தும் மொழிக்கு செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்யாதவன் அரைகுறைத் தமிழனாவான்.

வழக்குமன்றம் ஆயினும் வழிபாட்டிடங்கள் ஆயினும் அரசு அலுவலகங்கள் ஆயினும் தமிழரின் வாழ்வில் அனைத்து நிலைகளிலும் தமிழே முதன்மையிடம் பெற வேண்டும் என்னும் நிலைமையைச் சட்ட இசைவாக்க வேண்டும். அதற்காக அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும். இந்தத் திருத்தம் தமிழ்நாட்டிற்கு மட்டு மின்றி, எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான திருத்தமாக இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் குறிப்பாக வழக்குமன்றங்களைப் பொறுத்த வரையில் அலுவல் மொழியாக - தீர்ப்பளிக்கும் மொழியாக - வாதிடும் மொழியாகத் தமிழே இருக்க வேண்டும். இவ்வாறான சட்ட இசைவு தமிழுக்குக் கிடைத்து விட்டால்...

நாளைக்கு இதே பாரி இதே நடுவர் முன்னால் ஆங்கிலத்தில் வாதாடினால் இதே நடுவர் பாரி ஆங்கில மொழியில் வாதாடுவதை ஏற்கமாட்டார். தமிழில் வாதாட வலியுறுத்துவார். அந்த நிலை வரவேண்டும் என்பதைத் தான் நடுவர் சிவகுமார் அவர்களின் ஆணை உணர்த் துகிறது.

தமிழ்நாட்டில் வழக்குமன்ற நடைமுறைகளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்குப் பகவத்கீதை இடம்பெறுகிறது. எந்த பகவத்கீதை?

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கம் நூல் கட்டாயம் பொதுமக்கள் மட்டுமின்றி வழக்குரைஞர்களும் படித்தால் அந்தக் கீதையைத் தொடவும் கூசுவார்கள்.

பிறவிகளில் நால்வகை வேற்றுமைகளை உண்டாக் கியவன் நானே! என்று கண்ணன் ஒப்புக்கொண்டிருக் கின்ற பகவத்கீதை! அவனுடைய அந்தச் செயலால் தமிழர்கள் சூத்திரர்களாய் - தாழ்த்தப்பட்டவர்களாய் இன்றுவரையிலும் இழிவை சுமக்கின்றவர்களாய் இருப்பதற்குக் காரணமான பகவத்கீதை மேல் கையை வைத்து உறுதிமொழி எடுக்கின்ற தமிழன் முதலில் தன்னை ஒரு சூத்திரன் என்று ஒத்துக்கொள்கிறான் என்பதை உணர வேண்டும்.

அதனால்தான் - இந்த இழிவைப் போக்கத்தான் தமிழர் தலைவரும் சட்ட வல்லுநருமாகிய கி.வீரமணி அவர்கள் வழக்குமன்றங்களில் திருக்குறளை உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் நூலாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். உலகப் பொதுமறையாம் திருக்குறளில் இல்லாத சிறப்பு, பகவத்கீதையில் என்ன இருக்கிறது?

இதுகாறும் கூறியவற்றிலிருந்து நாம் குறிக்கோள் களாகக் கொண்டு இயங்க வேண்டியது என்ன வென்றால்:

1. தமிழ்நாட்டில் வழக்காடு மன்றங்களில் அலுவல் மொழியாக - வாதாடும் மொழியாக - தீர்ப்பளிக்கும் மொழியாகத் தமிழ்மொழி அரசியல் சட்ட ஏற்பிசைவைப் பெற வேண்டும்.

2. வழக்குமன்றங்களில் உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்குத் திருக்குறள் நூல் இடம் பெற வேண்டும்.

குறிக்கோள்கள் நிறைவேற உறுதியேற்போம்; ஒன்றுபடுவோம்; வெற்றி பெறுவோம்.