தற்காப்புக்குக் கத்தி வைத்துக்கொள்ள தீர்மானம் போட்ட ஆத்தூருக்கு வாரீர்!
திராவிடர் கழகம் நம்பர் 1 எதிரி!
துவேஷத்தில் ஊறிய மூட்டைப் பூச்சிகள் -
எறும்புகள் - நசுக்கவேண்டும் இப்படியெல்லாம் கூடப் பேசி இருப்பார்களா?
என்று இன்றைய இளைய தலைமுறையினர் கேட்கக்கூடும்.
ஆம்! பேசி இருக்கிறார் - பேசி இருப்பவரும்
சாதாரணமானவர் அல்லர். அன்றைய சென்னை மாநிலத்தின் முதலமைச்சர்,
உடம்பெல்லாம் மூளை உடையவர் என்று அக்கிரகார உலகத்தால் தூக்கிப் பேசப்படும்
ஆச்சாரியார்தான் (ராஜாஜி) இப்படிப் பேசினார். அவர் பேச்சைக் கேளுங்கள்!
கேளுங்கள்!!
சில காலத்திற்கு முன் எனது முதல் நம்பர்
எதிரி கம்யூனிஸ்ட்கள் என்று கூறினேன். இப்போது அதை மாற்றிக் கொள்கிறேன்.
கம்யூனிஸ்ட்கள் முதல் நம்பர் எதிரியல்ல. திராவிடர் கழகத்தினர் தான் முதல்
நம்பர் எதிரி.
இந்நாட்டில் ஜாதிப் பிரச்சினைதான் மிகத்
தொல்லை கொடுக்கக் கூடியதாக இருந்து வருகிறது. ஜாதிப் பிரச்சினையை வைத்துக்
கொண்டு திராவிடர் கழகம் நாட்டில் துவேஷப் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது.
ஜாதி வித்தியாசங்கள் இப்போது மறைந்து
போய்விட்டன. மறைந்து போன ஒன்றை அதாவது பிரேதத்தை வைத்துக்கொண்டு திராவிடர்
கழகம் ஜாதி வித்தியாசமிருந்து வருகிறதாக பிரச்சாரம் செய்து வருகிறது.
திராவிடர் கழகத்தின் இத்தகைய விஷப்
பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தவேண்டு மென்று உங்களை (காங்கிரஸ் ஊழியர்களை)
மண்டியிட்டு, தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
அவர்களது நடவடிக்கைகள்மீது நீங்கள்
பார்வையைச் செலுத்துங்கள் என்றால், அவர்களை ஒரு கை பாருங்கள் என்பதாக
கிராமாந்தர மக்கள் கருதுவதுபோல் கருதி விடாதீர்கள்.
நீங்கள் பார்த்துக் கொள்ளவேண்டிய தெல்லாம் இவர்களது பிரச்சாரம் அரசியலிலே கலக்காமல் பார்த்துக் கொள்வதுதான்.
இதனால் நீங்கள் ஒற்றுமையாயிருக்க வேண்டியது அவசியமாகும்.
இனி கம்யூனிஸ்ட்களைக் குறித்து நீங்கள்
பயப்பட வேண்டியதில்லை. கம்யூனிஸ்ட்களைவிட கழகத்தார்தான் அபாயகரமானவர்கள்.
இவர்கள் பிரச்சாரம்தான் சாதாரண மக்கள் மனதைப் பற்றிக் கொள்கிறது. நம்
சிறுவர்கள், சிறுமிகள் மனம் இதில் பெருமளவுக்கு கவ்வியிருக்கிறது.
இப்போது ஆந்திரர்கள் போய்விட்டார்கள். இனி
தமிழ்நாட்டில் தங்கள் பிரச்சாரத்திற்கு நல்ல வாய்ப்பிருக்கிறதாக அவர்கள்
நினைக்கலாம். இதற்கு இடம் தரலாகாது.
ஒவ்வொரு இலாகாவிலும் எத்தனை பிராமணர்?
எத்தனை வடகலை? எத்தனை தென் கலை? ஸ்மார்த்தர்கள் எத்தனை பேர்? என்ற
பட்டியலைப் போட்டுக் காட்டலாம். அவர்களின் முக்கிய நோக்கமே,
காங்கிரஸ்காரர்களின் மனதைக் கெடுக்கவேண்டுமென்பதுதான்.
இதெல்லாம் பார்க்கும்போதுதான், மந்திரி சபையை விரிவுபடுத்தவேண்டுமென்று கருதுகிறேன்.
சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட
உத்யோகத்தைக் கொடுத் தால்கூட, அவர் எந்த வகுப்பு? எந்த ஜாதி? என்பனபோன்ற
ஆராய்ச்சியில் இறங்கிவிடுகிறார்கள். உடனே கிளர்ச்சி செய்ய
ஆரம்பித்துவிடுகிறார்கள்.
திராவிடர் கழகப் பத்திரிகைகள் தினம்
துவேஷப் பிரச்சாரம் செய்து வருகின்றன. இவைகளைத் தண்டிப்ப தென்றால், தினம்
தண்டனை கொடுத்து வரலாம். தண்டனை கிடைத்தால் உடனே பெரும் கூச்சல் போட ஆரம்
பித்துவிடுவார்கள்.
திராவிடர் கழகத்தினர் இனிமேல் அதிக கோபப்படுவார்கள். அதைச் சமாளிக்க உங்களுக்கு மனோ தைரியம் வேண்டும்.
இனி தமிழ்நாடு சந்தோஷமாக
இருக்கவேண்டுமானால், எப்படியாவது திராவிடர் கழகக் கணக்கை கட்டி வைத்துவிட
வேண்டும். அவர்களது கணக்குப் புத்தகத்தை மூட்டை கட்டி வைத்துவிட வேண்டும்.
அவர்கள் செய்கை இனி வரலாற்றில்தான் இடம்பெற வேண்டுமேயல்லாது, நாட்டில்
காணுமாறு விடக் கூடாது. இதற்கான நடவடிக்கையை காங்கிரஸ்காரர்களாகிய நீங்கள்
எடுக்க வேண்டும்.
--------------------(சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற
காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் சென்னை மாநில முதலமைச்சர்
சி.இராசகோபாலாச்சாரியார் - விடுதலை, 4.10.1953)
மூட்டைப் பூச்சிகள் - எறும்புகள்!
துவேஷத்தில் ஊறிப் போய் வகுப்புத்
துவேஷத்தைப் பரப்பும் திராவிடர் கழகம் போன்றவை எறும்புகளுக்கும், மூட்டைப்
பூச்சிகளுக்கும் சமம். ஆனால், எறும்புகளும், மூட்டைப் பூச்சிகளும்
மறைந்திருந்து நம்மைக் கடிக்காதபடி வெளிப்படையாக வந்து கடிக்கின்றன. கடி
பலமாக இருக்கும்போது இவைகளை நசுக்கவேண்டியது இயற்கையே.
வகுப்பு வித்தியாசங்கள்தான் அந்த எறும்பு
களுக்கு வெல்லம்போல் இருக்கிறது. அந்த வெல்லத்தை அகற்றி விரட்டினால்
எறும்புகள் நம்மை விட்டுச் சென்றுவிடும். இவ்வேலையை காங்கிரஸ் ஊழியர்கள்
மேற்கொள்ளவேண் டும். கம்யூனிஸ்ட்களை நாம் அடக்கிவிட்டோம். இந்த எறும்பு,
மூட்டைப் பூச்சிகளையும் ஒழித்துக் கட்டவேண்டும்.
--------------------(திருப்பூர் காங்கிரஸ் ஊழியர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஆச்சாரியார் - விடுதலை, 6.10.1953)
கருஞ்சட்டைகள் பேசினால் துவேஷம் - காழ்ப்
புணர்ச்சி. பேசியிருப்பவர் ஆச்சாரியாயிற்றே - அதுவும் மாண்புமிகு
முதலமைச்சர் ஆயிற்றே - அதுவும் அக்கிரகாரவாசியாராயிற்றே - அக்னியைக் கையில்
வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஆயிற்றே- அவர்கள் ஆயிரம் பேசலாம் நாம்
கேட்டுக் கொண்டுதானிருக்க வேண்டும் - அப்படித் தப்பித் தவறிப் பேசிவிட்டால்
நாயக்கர் கட்சிக்காரர்கள் அல்லவா - அப்படித்தான் பேசுவார்கள்;
நாக்கில் நரம்பின்றிப் பேசுவார்கள் என்று அவர்கள் கைகளில் உள்ள பத்திரிகை ஜடாயுதத்தைக் கொண்டு தாக்குவார்கள்.
அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் சேலம் ஆத்தூரில் சுயமரியாதை - திராவிடர் கழக மாநாடு நடத்தப்பட்டது (10, 11.10.1953).
அந்த மாநாட்டின் சிறப்பு என்ன தெரியுமா? அதிக தீர்மானங்கள் கிடையாது. ஒரே ஒரு தீர்மானம் முத்தாய்ப்பான தீர்மானம்.
பார்ப்பனர்கள் திராவிடர் கழகத்தை ஒழிப்பதற்காக திராவிட மக்களுக்குள்ளாகவே கலக மூட்டவும், தூண்டிவிடவும்
முயல்வதால், கழகத் தோழர்கள் நிராயுதபாணிகளாக இருக்கிறார்கள் என்று கருதி
காலித்தனம் - பலாத்காரம் செய்யத் தூண்டுமாதலால், திராவிடர் கழகத்தினர்
சட்டத் துக்குக் கட்டுப்பட்ட அளவுக்கு ஒவ்வொருவரும் ஆணும் - பெண்ணும் ஒரு
கத்தியைத் தற்காப்புக்காக அவசியம் எப்போதும் மடியில் வைத்திருக்க
வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. 10, 11.10.1953 ஆத்தூர் (சேலம்)
சுயமரியாதை - திராவிடர் கழக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
(முதலமைச்சரே திராவிடர் கழகத்தினரை
எறும்பு, மூட்டைப் பூச்சி போல் நசுக்கவேண்டும் என்றும், அவர்களின் கணக்கை
முடிக்கவேண்டும் என்றும், போலீசார் தலையிடமாட்டார்கள் என்றும்
வெளிப்படையாகச் சொன்ன நிலையில்தான் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
என்பது கவனத்தில் கொள்ளப்படவேண்டிய முக்கியமாகும்).
அதே சேலம் ஆத்தூரில்தான் வரும் ஞாயிறன்று (27.1.2013) திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் எழுச்சி மண்டல மாநாடு.
காலம் மாறிவிட்டதே- அன்று ஆச்சாரியார் கக்கிய விஷத்தை இன்றைக்குப் பார்ப்பனர்கள் மறுபதிப்புச் செய்கிறார்களா என்று கேட்கலாம்.
அதிலென்ன சந்தேகம்? முன்பைவிட சாமர்த்தியமாகச் செய்கிறார்கள் - நுட்பமாகச் செய்கிறார்கள் - திட்டமிட்ட வகையில் செய்கிறார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை
என்ற சட்டம் ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்திலே ஒருமுறையல்ல - இருமுறை
நிறைவேற்றப்பட்டும் இருமுறையும் உச்சநீதிமன்றம் சென்று முடக்கியவர்கள்
யார்?
பார்ப்பனர்கள்தானே!
கோவிலில் வழிபாட்டு மொழி தமிழில் என்றால், அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றவர்கள் யார்?
பார்ப்பனர்கள்தானே!
தமிழ் செம்மொழி என்றால் வீட்டுக்கு வீடு பிரியாணி பொட்டலம் வருமா என்று எழுதும் ஏடு எது?
பார்ப்பன தினமலர்தானே!
தமிழ்நாட்டு வணிக நிறுவனங்களின் பெயர்
தமிழில் இருக்கவேண்டும் என்று ஏற்பாடு செய்தால், இது ஒரு மொழி நக்சலிசம்
என்று எழுதும் சோ யார்?
பச்சைப் பார்ப்பனர்தானே!
ஜாதித் தீயை விசிறி விடுகிறார் பா.ம.க. நிறுவனர் என்றவுடன், அவருக்கு வக்கீலாக வந்து வாதாடுபவரும் சோ பார்ப்பனர்தானே!
இட ஒதுக்கீட்டை எதிர்ப்பது ஏன்? என்று இன்றைக்கும் புத்தகம் வெளியிடுகிறதே விஜயபாரதம் கம்பெனி? அவர்கள் யார்?
சாட்சாத் பார்ப்பனர்கள்தானே!
சென்னை அண்ணாநகரில் பச்சையாக பிராமணர்
மாநாடு போட்டு, அரிவாளைத் தூக்கிக் காட்டி ஆணவ ஆரியக் கொள்ளிகளாக தங்களை
அடையாளப்படுத்த வில்லையா?
எழுத்தாளர் சுஜாதா, இயக்குநர் பாலச்சந்தர்
போன்றவர்கள் எல்லாம் அந்த மாநாட்டில் பங்கேற்று, ஆம், நாங்கள்
பிராமணர்கள்தான் - பூணூல்காரர்கள் தான்! என்று அடையாளம் காட்டிக்
கொள்ளவில்லையா?
நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டதே (1976) நினைவிருக்கிறதா?
சட்டைப் பனியனுக்குள் ஒளித்து வைத்திருந்த
பூணூலை அந்தக் காலகட்டத்தில் சட்டைக்கு வெளியே தெரியும்படி காட்டி நம்மைப்
பார்த்து பழிப்புக் காட்டினார்களே, மறந்துவிட முடியுமா?
விடுதலையில் தந்தை பெரியார் என்று போடக் கூடாது என்று தணிக்கை செய்தவர்கள் யார்?
சங்கராச்சாரியாரின் சீடர்களான பார்ப்பனர்கள் தானே?
மானமிகு கலைஞர் அவர்களைப் பார்த்து ஜென்மப் பகைவர் என்று சொன்னவர்தானே இன்றைய முதலமைச்சர் -
அவரும் பார்ப்பனத்திதானே!
இன்றுவரை ஆவணி அவிட்டத்தன்று பூணூலைப் புது முறுக்குடன் புதுப்பித்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
வடக்கே - வி.பி. சிங், லாலுபிரசாத்
தெற்கே - கலைஞர், வீரமணி
என்றால், இன்றுவரை பார்ப்பன ஏடுகளைப் புரட்டிப் பாருங்கள் - எரிச்சலைக் கொட்டிக் கொண்டுதானே இருக்கிறார்கள்.
காலம் மாறுகிறது - ஆனாலும்
பார்ப்பனர்களின் முறைகளில் மாற்றம் இருக்கிறதே தவிர, அடிப்படையில் அணு
அளவும் மாற்றமில்லை. பா.ஜ.க. எனும் பசப்பு அரசியல் வேடம்தாங்கி
பார்ப்பனீயம் பாசிச வாயை அகலமாகத் திறந்துகொண்டுதானே திரிகிறது!
நம் பணி வேறு எந்தக் காலகட்டத்தைக் காட்டிலும் இப்பொழுது மிக அதிகமாகவே தேவை! தேவை!!
அந்தத் தேவையின் வீச்சை வெளிப்படுத்துவோம் வாருங்கள், சேலம் ஆத்தூருக்கு.
வரும் ஞாயிறன்று எழுச்சிமிகு ஊர்வலம் - ஏற்றமிகு மாநாடு.
தமிழர் தலைவர் கருத்துரை தருகிறார் - 1953-க்குப் பிறகு மீண்டும் ஓர் எழுச்சியைத் தரட்டும் ஆத்தூர்.
மாநாட்டுப் பணிகளைத் தடபுடலாகச் செய்துகொண்டு இருக்கிறது கருஞ்சட்டைச் சேனை!
ஆத்தூரில் சந்திப்போம், அரிமாக்களே!
அவசியம் வாருங்கள் - குடும்ப உறுப்பினர்களோடு வாருங்கள்! வாருங்கள்!!
-----------------------------"விடுதலை” 23-1-2013 இல் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை