Search This Blog

24.4.12

உலகப் புத்தகநாள் சிந்தனை -இவர்தாம் புரட்சிக்கவிஞர் பார்!

இன்று உலகப் புத்தக நாள் (ஏப்ரல் 23)

அது மட்டுமா? சுவைத்தேன், படித்தேன் என்று பருகிப் பரவசம் அடையும் வண்ணம் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் புதுமை இலக்கியங்களைப் படைத்து, புதியதோர் உலகு செய்த பெரியார் லட்சிய இலக்கியச் சிற்பி! புரட்சிக்கவிஞர் பிறந்தது, மறைந்தது எல்லாமே இந்த ஏப்ரலில்தான்! (பிறந்தது ஏப்ரல் 29 - 1891) மறைந்தது ஏப்ரல் 21 (1964).

நவில்தொறும் நூல் நயம் என்று வள்ளுவர் கூறுவதை நான் சுவைப்பது தந்தை பெரியார்தம் பொருள் பொதிந்த - கருத்துச் சுரங்கமான எழுத்துக் கொண்ட புத்தகங்களையும், புரட்சிக்கவிஞரின் புத்திலக்கியங்களையும்தான்!

எத்தனை முறை அக்கவிதைகளைக் கேட்டாலும் சலிப்பு வராது; மாறாக புத்துணர்வே தோன்றும். திரும்பத் திரும்ப அவர்தம் சுயமரியாதை ஊற்றுகள் பொங்கும் கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம், பயில்தொறும் பண்புடையார் தொடர்பைப் புதுப்பித்துக் கொண்ட பேருவகை பொங்கவே செய்யும்.

அகத்திலும் புறத்தைப்பற்றிச் சிந்திக்கும் புரட்சிப் பாவலர் அவர்!

காதல் நினைவுகள் - அகம் பற்றியவைதானே! அங்கேயும் படுக்கை அறைக்கு குடும்ப விளக்கான தலைவியையும், தலைவனையும் எப்படி அழைத்துச் சென்று, அங்கேயும் பொதுத் தொண்டுக்கான பாடத்தைச் சொல்லிக் கொடுக்கும் வகுப்பாக அல்லவா ஆக்கிவிட்டார்!

ஆம், குடிசெய்வார்க்கு பருவம் மட்டுமா இல்லை; இடமும், சூழலும் கூடத் தனியே தேவை இல்லையே!

மற்ற கவிஞர்கள் காதல் ரசத்தைப் பிழிந்து தரும் இடமாக மட்டுமே காட்டுவர் அவ்விடத்தை - ஆனால், புரட்சிக்கவிஞரோ...!

உங்கள் வியப்பை, ஆர்வத்தை வளர்த்திட விரும்பவில்லை நான், குடும்ப விளக்கு இலக்கியத்தில் இதோ ஒரு ஒளிக்கீற்று!

கட்டிலண்டை மங்கை

தொண்டையினில் ஒன்றுமே அடைக்க வில்லை;

துணைவனவன் சிறுகனைப்புக் கனைக்க லுற்றான்;

அண்டையிலே மங்கைபோய் அத்தான் என்றாள்.

அத்தானா தூங்கிடுவான்? உட்கார் என்றான். திண்தோளில் சந்தனத்தைப் பூசு கின்றாள்; சேயிழைக்கு முல்லைமலர் சூட்டு கின்றான்;

கண்டான்! கண் டாள்! உவப்பின் நடுவிலே,

ஓர் கசப்பான சேதியுண்டு கேட்பீர் என்றாள்!

பொதுத்தொண்டு செய்தோமா?

மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;

அதுபோலத் தானேடி! அதனாலென்ன?

அறிவிப்பாய் இளமானே என்றான் அன்பன்;

அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்

அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,

இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்? என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

வீட்டுத் தொண்டா நாட்டுத் தொண்டு?

இன்றைக்குக் கறிஎன்ன? செலவு யாது?

ஏகாலி வந்தானா? வேலைக் காரி

சென்றாளா? கொழுக்கட்டை செய்யலாமா?

செந்தாழை வாங்குவமா? கடைச் சரக்கை

ஒன்றுக்கு மூன்றாக விற்ப தெந்நாள்?

உன்மீதில் எனக்காசை பொய்யா? மாடு

குன்றுநிகர் குடம் நிறையக் கறப்ப துண்டா? கொடுக்கலென்ன? வாங்கலென்ன? இவைதாம்

கண்டோம்.

தன்னலத்தால் என்ன நடக்கும்?

தமிழரென்று சொல்லிக்கொள்கின்றோம் நாமும்; தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்புகின்றோம்; எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்; எப்போது தமிழினுக்குக் கையாலான நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்? நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில், அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை; அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக் கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்; வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும் கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள் கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார் பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப் பேசிவிட்டாய் கண்டபடி என்று சொல்ல.
தமிழ் படிக்க வேண்டும் எல்லாரும்

அப்படியா! அறியாத படியால் சொன்னேன், அந்தமிழர் படிப்படியாய் முன்னேற் றத்தை எப்படியா யினும்பெற்று விட்டால் மக்கள் இப்படியே கீழ்ப்படியில் இரார்க ளன்றோ? மெய்ப்படிநம் மறிஞரின் சொற்படிந டந்தால், மேற்படியார் செப்படி வித்தை பறக்கும். முற்படில் ஆகாததுண்டா? எப்ப டிக்கும் முதற்படியாய்த் தமிழ்படிக்க வேண்டும் என்றாள்.


படிக்க படிக்க எவ்வளவு சுவை பார்த்தீர்களா?

புரட்சிக்கவிஞரின் கருத்தாழம், எதுகை, மோனைகள் நிறைந்த இலக்கியம் இவை போன்று ஏராளம்! ஏராளம்!!
நூலைப் படி, நூலைப்படி என்றவரும் அவரே!

உலகப் புத்தக நாளில் புரட்சிக்கவிஞரை உங்கள் இல்லத்துள்ளும், உள்ளத்துள்ளும் அழையுங்கள்!
விருந்து அவர் தருவார்!

உண்ணுங்கள்; பிறகு எண்ணுங்கள்!

--------------------வாழ்வியல் சிந்தனைகள் பகுதியில் கி.வீரமணி அவர்கள் 23-4-2012 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை