Search This Blog

19.4.12

கட்டாய திருமணப் பதிவுச் சட்டமும் பெரியாரும்


கட்டாய திருமணப் பதிவுச் சட்டம்


அனைத்துத் திருமணங்களையும் கட்டாயம் பதிவு செய்யும் சட்டம் ஒன்றினைக் கொண்டு வர மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இது மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

திருமண முறைகள் பல வகைகளில் நடை பெற்றாலும் கூட, அதையும் தாண்டி கட்டாயப் பதிவு என்பது மிகவும் அவசியமே!


ஒவ்வொரு மதத்திலும் வெவ்வேறு ஏற்பாடுகள் இருப்பதைப் பற்றிக் குழப்பிக் கொள்ளாமல் பிறப்பு - இறப்புப் பதிவைப் போல திருமணத்தையும் பதிவு செய்து கொள்வதால் பல்வேறு சிக்கல்களிலிருந்து சமூகம் விடுபட முடியும்.

வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் திருமணம் செய்து கொண்டால் - சுயமரியாதை திருமணச் சட்டம் கூட செல்லுபடியாகாது. சுயமரியாதைத் திருமணம் என்பது இந்தியத் திருமணச் சட்டத் திருத்தமே. இந்த நிலையில் மத மாற்றம் செய்து கொள்ளாமல் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் சிறப்புச் சட்டத்தின் கீழ் (ளுயீநஉயைட ஆயசசயைபந ஹஉவ) பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இவை எல்லாவற்றையும் புறந்தள்ளிய திருமணம் என்றால் கட்டாயப் பதிவு என்பது ஒரு ஒழுங்கு முறையின் கீழ் கொண்டு வருவதற்குப் பெரிதும் உதவும். மற்ற மற்ற நாடுகளிலும் இது நடைமுறையில் உள்ளதுதான்.

இப்பொழுது பெரும்பாலும் பதிவுத் திருமணம் எதற்குப் பயன்படுகிறது? பெற்றோர்கள் ஒப்புதல் இல்லாத காரணத்தால் காதல் இணையர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள பதிவுத் திருமண முறை பயன்பட்டு வருகிறது.

மிக எளிய முறையில் திருமணம் நடைபெற வேண்டும்; திருமணத்திற்கு வீண் செலவு செய்யக் கூடாது. அதிக பட்சமாக 10 அல்லது 15 நாட்கள் வருமானம் என்னவோ அந்த அளவுக்குத்தான் திருமணத்திற்குச் செலவு செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் கூறுகிறார். நான் ஒரு நிமிடம் அரசனாக இருந்தால், திருமணத்திற்காக அதிகம் செலவு செய்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிப்பேன் என்கிற அளவுக்குக் கூட தந்தை பெரியார் சென்றிருக்கிறார்.

போலி கவுரவத்திற்காகவும், அடுத்தவர்கள் மெச்ச வேண்டும் என்பதற்காகவும் கடன் வாங்கியும் கல்யாணம் செய்து கொள்ளும் போக்கு நாட்டில் இருந்து வருகிறது.

கல்யாணத்துக்காகக் கடன் வாங்குவது, அந்தக் கடனை அடைப்பதற்காகவே சம்பாதிப்பது என்கிற தீய வட்டத்துக்குள் தங்கள் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளும் தன்மையிலிருந்து நம் மக்களை மீட்க வேண்டும் என்று தந்தை பெரியார் விரும்பினார். அதனால்தான் சுயமரியாதைத் திருமணத்திற்குத் தலைமை தாங்கி நடத்தி வைக்கும் தந்தை பெரியார் அவர்கள் இது போன்ற அவசியமான - மேலான கருத்துகளைக் கூறி வந்துள்ளார்.

திருமண மேடையை சமுதாய மாற்றத்திற்கான இடமாக மாற்றி அதில் மாபெரும் வெற்றி கண்டவர் தந்தை பெரியாரே!


செய்யாறை அடுத்த வாழ்குடை என்கிற ஊரில் ஒரு திருமணத்தில் மூன்றரை மணி நேரம் உரை ஆற்றி யுள்ளார் பெரியார் என்றால் அது என்ன சாதாரணமா?

கட்டாய பதிவுத் திருமண முறை வந்துவிட்டால், தனியாக திருமண விழா என்ற ஒன்று தேவை யில்லாமல் போய்விடுகிறது. இன்னும் சொல்லப் போனால் வரவேற்பு விழா என்பது கூட அவசிய மில்லாத ஒன்றுதான்.

தந்தை பெரியார் மிகச் சரியாக வழிகாட்டியுள்ளது போல, திருமணம் செய்து கொண்ட இணையர்கள், இந்தத் தேதியில் பதிவு முறையில் தங்களுக்குத் திருமணம் நடந்தேறியது என்று உற்றார் உறவினர் களுக்கும், நண்பர்களுக்கும் ஓர் அஞ்சல் அட்டையில் அறிவித்துவிடலாமே.

கட்டாய திருமணப் பதிவுச் சட்டம் நிறைவேற்றப் பட்டால் படிப்படியாக - தந்தை பெரியார் அறிவுறுத்திய - வழிகாட்டிய அந்தத் திசையில் சமூகம் நடை போடத் தொடங்குவதற்கு அதிகமாகவே வாய்ப்புண்டு.

ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள் அவதிப் படாமல் கிராம நிருவாக அதிகாரி மட்டத்தில் (VAO) பதிவு செய்வது குறித்தும் யோசிக்கலாமே!

--------------------"விடுதலை” தலையங்கம் 19-4-2012

4 comments:

தமிழ் ஓவியா said...

ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க திட்டமில்லை



உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

புதுடில்லி, ஏப். 19- ராமன் பாலத்தை தேசிய சின்னமாக மத்திய அரசு அறிவிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுப்பிரமணிய சாமியின் கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் தாக்கல் செய்தது.

மத்திய அரசின் பதிலையடுத்து ராமன் பால வழக்கு ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. 19-4-2012

தமிழ் ஓவியா said...

நான் ஒரு வீடு கட்டினால் ஆயிரம் வீடு கட்டினா போல!


- மஞ்சை வசந்தன்

நான் ஒருமுறைச் சொன்னால் நூறு முறைச் சொன்னதுபோல! திரைப் படத்தில் ரஜினிகாந்த் பேசிய புகழ் பெற்ற வசனம். பொதுவாக நாயகர்களை உச்சிக்கு உயர்த்தி மிகைப்படச் சொல்வது வழக்கம். ஆனால், நடைமுறை வாழ்க்கை யில் இப்படியொரு அகாசுகா பேர்வழி நாட்டின் நாயகராக வந்ததுதான் கொடு மையிலும் கொடுமை; கேவலத்திலும் கேவலம்.

காலையில் வீட்டிற்கு அடிக்கல் நாட்டி, மாலையில் திறப்பு விழா நடத்தி முப்பது ஆண்டுகளுக்கு முன்னமே சாதித்துக் காட்டினார் அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு. ஒரு சில வாரங்களில் பல்லடுக்குக் கட்டடங்களைக் கட்டி சமீபத்தில் சாதனை படைத்துள்ளது சீனா. அப்படியிருக்க, இன்றைய அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சியிலே 40,000 வீடுகள் கட்டுவது என்பது எளிய செயல். அதுவும் ஓர் அரசுக்கு இது மிக மிக எளிய செயல். அப்படியிருந்தும் ஓராண்டுகளாகியும் 40,000 வீடுகள் கட்டி முடிப்பதற்கு மாறாக வெறும் 40 வீடுகள் மட்டுமே இராஜபக்சே அரசால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்றால், அவரது இறுமாப்பையும், இரக்க மற்ற தன்மையையும், இனவெறியையும் காட்டுவதோடு, மேற்கண்ட வசனத் தையே நினைவு படுத்துகிறது.

தமிழ் ஓவியா said...

திரைப்பட வசனம் கூட ஒன்றுக்கு நூறு என்றது. ஆனால், இராஜபக்சே ஒன்றுக்கு ஆயிரம் என்று அகந்தையும் ஆணவமும் கொண்டு நிற்கிறார். அந்த பஞ்ச் டயலாக்கிற்கு, பராக் பாட நம் நாட்டு வெளியுறவு அமைச்சர் பறந்து போய் நிற்கிறார். இந்திய நாட்டிற்கு, இவ்வளவு பெரிய நாட்டிற்கு இத்தனை இழிவா? தவிக்கும் தமிழனுக்கு இவ்வளவு அவலமா? இந்தியன் ஒவ்வொருவனும் வெட்கப்பட வேண்டும், தமிழன் ஒவ் வொருவனும் தலை குனிய வேண்டும். சுருங்கச் சொன்னால், நாமெல்லாம் மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை அறவே இழந்துவிட்டோம் என்பதே பொருள்!

இரண்டு இத்தாலியர்களை, இந்தியா கூண்டில் நிறுத்தியதற்கோ இத்தாலி நாட்டுப் பிரதமர் எகிறிக் குதிக்கிறார். இத்தாலிய அதிகாரிகள் இரவோடு இரவாகப் பறந்தோடி வருகிறார்கள்; இந்தியாவை மிரட்டுகிறார்கள். ஆனால், நித்தம் நித்தம் எத்தனைத் தமிழர்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் செத்து மடிகிறார்கள்! கடலுக்குப் போகும் மீனவன் படகில், மீன் வருவதற்குப் பதில் தினம் தினம் மீனவன் உடல் வருகிறது! கேட்டால் இந்தியா - இலங்கை நல்லுற வாம் !

கண்ணெதிரிலே தங்கை கற்பழிக்கப் படும்போது, நல்லுறவைப் பற்றிச் சிந்திப் பவன், சொரணை உள்ள மனிதனா? இது நல்லுறவு நோக்கா அல்லது தமிழினம் கொத்திக் குதறி, சின்னாபின்னமாகச் சிதைக்கப்படுவதால் இராஜபக்சேவுக்கு உள்ள மகிழ்வு இங்குள்ள இந்தியத் தலை வர்களுக்கும் இருப்பதன் அடையாளமா? அய்யம் எழுகிறதே!

மானத்தை இழந்து மண்டியிட்டு நின்றாலும், இலங்கை ஒரு போதும் இந்தி யாவின் விசுவாசியாகாது. சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் சேர்ந்து கொண்ட துணிவில், இந்தியாவை, இலங்கை ஏளனமாகப் பார்க்கவும், சீண்டவும் தொடங்கி இரு ஆண்டுகள் ஆகிவிட்டன. இல்லையென்றால் இனப்படுகொலை செய்த ஒருவர்; இந்திய மீனவர்களை தினம் தினம் சுடும் ஒருவர்; இந்தியா எவ்வளவு கேட்டுக் கொண்டும், கேளாச் செவியராய் செயல்படும் ஒருவர், எந்தத் தயக்கமும் இன்றி, இறுமாப்போடு இந்தியாவுக்கு வந்து போகமுடியுமா?

இந்தியா என்னதான் வலியச் சென்று இலங்கையிடம் வாஞ்சை காட்டினாலும், இந்தியாவின் எதிர்கால ஆபத்தே இலங்கை மூலம்தான் என்ற எதார்த் தத்தைப் புரிந்து கொள்ள முடியாத மண்ணுருண்டைகளா இந்தியாவின் ராஜதந்திரிகள்? என்ன வியூகத்தில் இவர்கள் இலங்கையிடம் இவ்வளவு இறங்கிப் போகிறார்கள்? இந்தியா விலுள்ள வெளியுறவுத் துறை விற்பன்னர்கள் உண்மையிலே வியூகம் தெரிந்தவர்கள் என்றால், கனிந்து நின்ற காலத்திலே தமிழ் ஈழத்தை அங்கீகரித்திருக்க வேண்டும். எத்தனை நாடுகள் இலங்கையில் தளம் அமைத்து இந்தியாவைத் தாங்க முற்பட்டா லும், ஈழத்தில் தளம் அமைத்து நாம் அதை எதிர் கொள்ள முடி யும். ஈழம் நமக்கு உணர்வுபூர்வ மான நட்பு நாடாய் ஆகி யிருக்கும்.

அதைவிடுத்து. இலங்கையுடன் அந்த நாடு கைகோர்த்துவிடும்; இந்த நாடு கைகோர்த்துவிடும் ; அதைத் தடுக்க நாம் இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வியூகம் இந்தியாவிற்கு ஆபத்தானது; ஆழ்ந்து சிந்திக்காததன் விளைவு.

நட்பு என்பது இருதரப்பு உணர்வின் பிடிப்பு. நாம் மட்டும் நட்பு காட்டி, இலங்கை நட்பாக நடித்துக் கொண்டிருந்தால், இடர் யாருக்கு? இதில் யார் புத்திசாலி?

தமிழ் ஓவியா said...

இந்தியா இலங்கை விசுவாசத்தை விட்டுவிட்டு, அய்.நா. மன்றத்தில் அமெரிக்கா வைக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அரைகுறையாக ஆதரித்து, மனித நேயத்தின் பக்கம் திரும்பியது போல, இலங்கையில் மூன்று ஆண்டுகளாய் முள்வேலிக்குள் முடங்கிய தமிழர்களுக்கு உடனடியாக வீடு, தமி ழர்க்கு சம உரிமை, பாதுகாப்பான வாழ்வு; இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பு; கச்சத்தீவு மீட்பு என இவற்றை துரித கதியில் இந்தியா செய்து முடிக்க வேண் டும் என்பதே இந்தியாவின் இறை யாண்மையை, பெருமையை, நேர்மையை, மனித நேயத்தை சமாதானத்தை விரும்பும் எவரும் விரும்பக்கூடியதாகும்! இந்தியா இனியாவது திருந்த வேண்டும்! இல்லையேல் வருந்தவேண்டி வரும்!

இலங்கை செய்த இனப்படு கொலைக் கும், கொடுமைகளுக்கும், அநீதிகளுக் கும், அடக்கு முறைகளுக்கும், வன் புணர்ச்சி வக்கிரங்களுக்கும், இடைவிடா இன்னல்களுக்கும், இழப்புக்கும் இந்தி யாவின் ஒத்துழைப்பே முதன்மைக் காரணம் என்பதை எவரும் மறுக்கவும் இயலாது; மறைக்கவும் இயலாது.

அய்.நா. தீர்மானத்தை ஆதரித்ததன் மூலம், இலங்கையின் உண்மை உரு வத்தை இந்தியா முழுமையாகப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர், தாள்பணிந்து எழுதிய கடிதத் திற்குக் கூட ராசபக்சே பதில் அளிக்க வில்லை என்பது மட்டுமல்ல; அலட்சியப் படுத்தி குப்பையில் வீசியுள்ளார்.

அமெரிக்கா கொண்டு வந்த வலுவற்ற தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்த இந்தியாவின் இரட்டை வேட நிலைக்கு இதைவிட வேறு என்ன அவமானம் வேண்டும்?

ஓடி ஓடி வலியச் சென்று இலங் கையுடன், இந்தியா கை கோர்த்தாலும், அது உதறிவிட்டு, சீனாவுடன் சேர்ந்து கொள்ளும் என்பதை இனியும் இந்தியா உணராது செயல்பட்டால், அதைவிட அவமானமும், ஆபத்தும் வேறு எதுவும் இருக்க முடியாது.

அமெரிக்கா கொண்டு வந்த ஒரே காரணத்திற்காகவே, அதன் பகை நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக் களித்தன. சரியானதொரு தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்திருந்தால், இன்னும் ஆதரவு கூடியிருக்கும் என்ப தோடு, இலங்கையையும் நடுங்கச் செய் திருக்கும். எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ முறை இதை வலியுறுத் தியும் இந்தியா அதைச் செய்யாது ஒதுங்கி நின்றதன் விளைவு இந்தியாவிற்கு இழிவையும், இலங்கைக்குத் தெம்பையும் தந்துள்ளது. எனவே, இனியாவது இந்தியா இலங்கைக்கு எதிரான உறுதி யான நடவடிக்கைகளை அமெரிக்கச் சார்பின்றி எடுத்தால், இந்தியா தலை நிமிரும், இலங்கை அடங்கும்.

அய்.நா. பேரவையில் இலங்கைக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்புக் கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வந்து அதன் கொழுப்பைக் குறைத்து கொட்டத்தை அடக்க வேண்டும்.

இனியும் காலம் தாழ்த்தாது தமி ழீழத்தை அமைக்க அனைத்து நடவடிக் கைகளையும் துணிந்து மேற்கொண்டு, இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதுதான் இந்தியா விற்கும் நல்லது; இலங்கை வாழ் தமிழர்களுக்கும் நல்லது.

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் அறுதியிட்டு உறுதிபடக் கூறியுள்ள இந்தத் தீர்வை தமிழகத் தலைவர்கள் ஒரு சேர வலியுறுத்தி, குரல் எழுப்பி, போராடி, தமிழ் ஈழம் அமைக்கும் முயற்சியில் இந்தியாவை அடியெடுத்து வைக்கச் செய்ய வேண்டும்.

இந்தியப் பாதுகாப்பிற்கும், இலங்கை தமிழரின் தன்மான வாழ்வுக்கும், ஒரே தீர்வான தமிழ் ஈழம் அமைக்கும் முயற்சிக்கு இதுவே இறுதி வாய்ப்பு! இதுவே கனிந்த நேரம்! தமிழர்களின் இடைவிடாத, ஒருங்கிணைந்த, தீவிரப் போராட்டமே இப்போதைய உடனடித் தேவை! தமிழர் தலைவர் தலைமையில் தமிழர்கள் அணி திரளுவோம்!19-4-2012