Search This Blog

2.8.10

பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்!

பக்தி - பணம்!

பிணையில் வெளிவந்துள்ள இரண்டு சாமியார்கள் வெளியில் ஜாம் ஜாம் என்று ராஜநடை போட்டுத் திரிகிறார்கள்.

ஒருவர் கொலைக் குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் கம்பி எண்ணி பிணையில் வெளிவந்து பவள விழா நடத்திக் கொண்டிருக்கும் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி.

இன்னொருவர் நித்யானந்தா. இவர் மறுபடியும் தன் சித்து வேலையைத் தொடங்கி விட்டார். சில விளம்பர யுக்திகளைக் கையாள்கிறார். அவர்மீது சேற்றை வாரியி றைத்த சில ஏடுகள்கூட இப்பொழுது அவரை வேறு வகையில் சித்திரிக்கத் தொடங்கி விட்டன. பல வெளியீடுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.

பெ.நா. இறையடியான் எம்.ஏ.,எல்.எல்.பி., பொதுச்செயலாளர் தனித்தமிழர் சேனை பெங்களூர் என்ற முகவரியிலிருந்து பருவ இதழ்போல ஒன்றை வெளியிட்டு தமிழ் நாடெங்கும் பரப்பிக் கொண்டுள்ளனர்.

யோகானந்தாவின் காமலீலைகளை மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு வெளிச்சத் துக்குக் கொண்டு வந்தவர்கள்மீது இந்த இதழ் குற்றப் பத்திரிகை படிக்கிறது.

ஆசிரமத்திற்கு வரும் பெண்களோடு உடலுறவு கொள்ள ஒப்பந்தம் போடப்பட்ட விவகாரங்கள் சந்தி சிரித்தன அல்லவா அதற்கெல்லாம் புதிய விளக்கங்களைக் கூற ஆரம்பித்துவிட்டன.

நித்யானந்தா லீலைகளை ஒளிபரப்பிய காரணத்தால் சன் தொலைக்காட்சி நிறு வனத்துக்கு வியாபாரத்தில் 200 கோடி ரூபாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த வெளியீடு கதைவிட்டுள்ளது.

பெங்களூருவில் ஒரு கலாச்சார அடியாள் படையை சிறீராம் சேனா என்ற பெயரில் பிரமோத் முத்தலிக் என்பவர் நடத்திக் கொண்டுள்ளார். அவரிடம் ஒரு பேட்டியை வாங்கிப் போட்டுள்ளனர்.

நித்யானந்தா தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தபோது பிடதி ஆசிரமத்தை தாக்கியவர்கள் நாங்கள். ஆனால், இவர்மீது எவரும் புகாரும், நேரடி சாட்சியமும் அளிக்க வில்லை. எனவே, அவர் எந்தத் தவறும் செய்யாதவர் என்றே தெரிகிறது. மத்திய அரசாங்கம் தொடக்கம் முதலே இந்துக்களின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டவே இதுபோல் அவதூறு கிளப்புகிறது. இனிமேல் இந்துக்களின்மீது கை வைத்தால் சிறீராம் சேனா பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்று கூறியுள்ளார்.

இந்த பிரமோத் முத்தலிக் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துகொள்ள வேண்டுமா? 50 லட்சம் ரூபாய் கொடுத்தால், நாட்டில் எங்கு வேண்டுமானாலும் சிறீராம் சேனா வகுப்புக் கலவரத்தை அரங்கேற்றத் தயார் என்று சொன்னவர்.

நித்யானந்தாவின் லீலா வினோதங்களை ரகசிய கேமராமூலம் வெளியில் கொண்டு வந்ததுபோலவே, தெகல்கா மாத இதழும், ஹெட்லைன்ஸ் டுடே செய்தித் தொலைக்காட்சியும் நடத்திய ரகசிய கேமரா நடவடிக்கைமூலம் இந்தத் தகவலை வெளியில் கொண்டு வந்துள்ளன.

ஆக, பெரும் பணத்தைச் செலவிட்டு, மீண்டும் தன் நிலையைத் தக்க வைக்கும் வேலையில், நித்யானந்தாக்கள் இறங்கியுள்ளனர். பாமர மக்களின் பக்தியும், கறுப்புப் பணபலமும் சேர்ந்தால் நாட்டில் எதையும் சாதித்துவிடலாம், எதையும் தலைகீழாகப் புரட்டியடித்துவிடலாம் என்ற மமதையில் திரியும் இவர்களைத் தோலுரிப்போம்!

பக்தி வந்தால் புத்தி போகும் புத்தி வந்தால் பக்தி போகும்!

------------------மயிலாடன் அவர்கள் 2-8-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

1.8.10

மதம் ஏன் ஒழிய வேண்டும்?




மதம் என்பதைப் பற்றி இதற்கு முன் "குடி அரசு" , "புரட்சி" முதலிய பத்திரிகைகளில் அநேக வியாசங்கள் பல தலைப்புகளின் கீழ் எழுதப்பட்டிருப்பது யாவருக்கும் தெரியும்.

மதமானது இன்று உலகில் மனித சமூகத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்று உள்ள பகுத்தறிவை அடிமைப்படுத்தி, ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது என்பதற்கு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றோம்.

"தேசிய சிங்கங்"களான அலி சகோதரர்கள் ஒரு காலத்தில் "நாங்கள் முதலில் மகம்மதியர்கள், பிறகுதான் இந்தியர்கள்" அதாவது முதலாவது மதம், பிறகு தான் தேசம் என்றும், "உலகம் போற்றும் உத்தமர் மகாத்மா" காந்தி "நானே இந்து மதத்தின் உருவம்! நான் மூச்சுவிடுவதும், வாங்குவதும் இந்து மதத்திற்காகவே!! நான் உண்பதும் உயிர் வாழ்வதும் இந்து மதத்திற்காகவே!!! மதத்தைக் காக்கவே நான் சுயராஜ்யம் கேட்கின்றேன்!!!! அதாவது இந்து மதம் தான் எனக்கு முதலும் கடைசியும்" என்றும், "பழைய காங்கிரஸ்வாதி, மாசற்ற தேசாபிமானி, ஒப்பற்ற தியாகி" என்று சொல்லப்பட்ட பண்டித மதன் மோகன மாளவியா "எனது மதத்தையும், எனது ஜாதியையும் காப்பதே எனது முதல் வேலை" என்றும், அதாவது வருணாச்சிரமத்தைக் காக்கத்தான் நான் தேசியவாதி என்றும் சொல்லும்படி செய்துவிட்டது என்றால் மதத்தின் ஆதிக்கத்திற்கு வேறு என்ன உதாரணம் வேண்டும் என்று கேட்கின்றோம்.

பெருத்த தேசாபிமானிகள், தேசத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்தவர்கள் என்று சொல்லும்படியான இவர்களே அவரவர்களின் மதத் தத்துவத்தை உள் எண்ணமாக வைத்து, அவற்றின் கொள்கைகளைக் காப்பதற்காகவே அவர்களது தேசாபிமானமும், உயிர் வாழ்வும் இருந்து வருகின்றது என்றால் மற்ற சாதாரணமான அதாவது மதத்தைத் தவிர மற்றொன்றும் அறியாத பாமர மக்களின் யோக்கியதையைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

வட்ட மேஜை மகாநாடு உடைந்துபோனதும் அரசியல் சீர்திருத்தத்தில் இந்திய மக்கள் ஒன்றுபடாமல் போனதும், இந்து முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் நம்பாமல் அரசியலில் தனித் தொகுதி வேண்டுவதற்கும், காங்கிரசும் முஸ்லீம் லீக்கும் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் தனித்தொகுதி கேள்ப்பதற்கும், கூட்டுத் தொகுதியில் தனிப் பிரதிநிதித்துவம் ஒதுக்கப்படவேண்டும் என்று கேள்ப்பதற்கும், மக்களை மக்கள் தீண்டப்படாதாராய் கீழ் மேல் ஜாதியாராய் கருதப்பட்டு வருவதற்கும் மதமே காரணமாய் இருந்து வருகின்றது என்பதையும் எவராவது மறுக்க முடியுமா என்று கேழ்க்கின்றோம்.

மற்றும் மனித சமூக வாழ்வுக்கு ஏற்ற சீர்திருத்தங்கள், முன்னேற்றங்கள் என்பவைகளில் பெரும்பான்மையான மக்களால் அவசியம் என்றும், அறிவுக்கு ஏற்றது என்றும் கருதப்படும் அனேக விஷயங்களைப் பற்றி சட்டங்கள் செய்யவோ, சட்டங்கள் செய்தாலும் அமுலுக்குக் கொண்டுவரவோ தடையாய் இருந்து வருவதற்கு மதங்களே காரணமாக சொல்லப்படுகின்றதா இல்லையா என்று கேட்க்கின்றோம். ஆகவே மனித வாழ்க்கைக்கு மதங்கள் இதைவிட வேறு என்ன கொடுமைகள் செய்ய வேண்டும் என்பது நமக்கு விளங்கவில்லை.

இப்படிப்பட்ட இந்த மதம் ஒன்று இரண்டு என்று இல்லாமல் நூற்றுக்கணக்காய் இருந்துகொண்டு பலவித கடவுள்களை சிருஷ்டித்து, பலவித மேல் உலகங்களையும் மோக்ஷ நரகங்களையும் கற்பித்து அவரவர்கள் கடவுள்களுக்குத் தனிப்பட்ட குணங்களும், அவரவர்கள் மேல் உலகங்களுக்கு தனிப்பட்ட பூகோளங்களும், அவரவர்கள் மோக்ஷ நரகங்களுக்குத் தனிப்பட்ட வருணனைகளும் கற்பித்து மக்களை மயக்கி வருவதோடு வாழ்க்கை, ஒழுக்கம், நடத்தை என்பவைகளும் அவரவர் மதத்துக்கு ஒவ்வொரு விதமாய் கற்பிக்கப்பட்டு நடந்து வருவதும் அறிஞர்கள் அறியாததா?

இப்படிப்பட்ட மதத்தை மக்களுக்குள் பிரசாரம் செய்வதற்காக ஒரு சில நபர்கள் பாதிரி என்றும், முல்லா என்றும், தம்பிரான் என்றும், சங்கராச்சாரி என்றும், ஜீயர் என்றும், சாமியார் என்றும் பெயர்கள் வைத்துக்கொண்டு, உலக செல்வத்தில் தனிப்பெரும் பாகத்தை வீணாக்கி மக்களுக்கு போதை ஊட்டிவருவதானது எவ்வளவு அவிவிவேகமான காரியம் என்பது சுய அறிவோடு பரிசுத்த தன்மையில் இருந்து யோசிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது.

இவைகளைப் பற்றி இன்னமும் விவரிக்குமுன் மதம் என்றால் என்ன என்று நாம் கருதிக் கொண்டு அதைப்பற்றி இவ்வளவு எழுதுகின்றோம் என்பதை வாசகர்களுக்கு விளக்க ஆசைப்படுகின்றோம்.

1. மதம் என்பது இவ்வுலக மானிட வாழ்வுக்கு ஏற்ற சட்ட திட்டங்கள் என்று சொல்லப்படுமானாலும், 2. அல்லது மதம் என்பது இவ்வுலகில் மக்கள் கூடி வாழ்வதற்கு ஏற்ற "ஒழுங்கு முறைகளை"க் கொண்டது என்று சொல்லப்படுமானாலும், 3. அல்லது (ஒருவர் கூறியபடி) மதம் என்பது மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங்களைக் காட்டுவது என்று சொல்லப்படுமானாலும் அவைகளைப் பற்றியெல்லாம் நாம் அதிகக் கவலை கொண்டு மதங்களை எதிர்க்க ஆசைப்படுவதில்லை. அப்படிக்கெல்லாம் அல்லாமல், 1. மதமானது மனிதனுடைய ஜட சம்பந்தத்தை விட்டு விட்டு ஜடம் நீங்கின "ஆத்மா"வைப் பொறுத்ததென்றும், 2. மதமானது இவ்வுலக வாழ்வை இன்ப துன்பத்தை துச்சமாக மதித்துவிட்டு மேலுலக வாழ்வை முக்கியமாகப் பொருத்ததென்றும், 3. மதமானது "கடவுளு"க்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தை விளக்குவதைப் பொருத்ததென்றும், 4. மதமானது பஞ்சேந்திரியங்களுக்கு விளங்கக்கூடிய வஸ்து என்ற தத்துவத்தைவிட்டு பஞ்சேந்திரியங்களாலும் உணர முடியாத "ஆத்மார்த்தம்" ஆவித் தத்துவத்தை, அசரீரியை அடிப்படையாகக் கொண்டது என்றும், 5. மதமானது உலக போக போக்கியம் இன்ப துன்பம் ஆகியவைகளை அலக்ஷியம் செய்து "கடவுளின்" பாதார விந்தத்தை அடையவும், "மோக்ஷ" சாம்ராஜ்யத்தைப் பெறவும் ஏற்ற மார்க்கம் என்றும் சொல்லப்படும் மதங்களையும், மத தத்துவங்களையும் பற்றியே நாம் பேசுகின்றோம் என்றாலும் முதலில் கூறப்பட்ட அதாவது, மதம் மானிட வாழ்க்கைக்கு ஏற்ற சட்டதிட்டங்களுக்கோ மக்களின் கூட்டுறவு வாழ்க்கைக்கு ஏற்ற ஒழுங்குமுறைக்கோ ஏற்பட்டது என்கின்ற விஷயங்களிலும் கூட நமது ஆட்சேபனையை சொல்லாமல் இருக்க முடியவில்லை. அதாவது இன்று நாம் மதங்கள் என்று சொல்லிக் கொள்ளப்படுபவைகளில் மேற்கண்ட குணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது ஒருபுறமிருந்தாலும், இந்தக் காரியங்களுக்காக மக்கள் செலவில் நடைபெறும் அரசாங்க நிருவாகமும், சிவில் கிரிமினல் சட்டதிட்டங்களும், அவைகளை நிறைவேற்ற நியாயஸ்தலம், தண்டனை, சன்மானம் ஆகிய முறைகளும் இருந்து வரும்போது இவைகள் அல்லாத ஒரு சாதனம் அதாவது மதம் என்கின்ற விஷயம் எதற்காக இருக்க வேண்டும்?

அரசாங்கம், சட்டதிட்டம், நீதி நிர்வாகம், தண்டனை கண்டனை இல்லாமல் மனித சமூகம் எப்படிப்பட்ட மதத்தினாலாவது கூடி ஒழுங்கு முறையுடன் வாழ முடியுமா? என்பதை யோசித்தால் மதம் மேல்கண்ட காரியங்களுக்கு உண்மையாய் பயன்படுகிறதா என்பது விளங்கும். இன்று எந்த தேசத்திலும், எந்த மதத்திலும், எந்த சமூகத்திலும் உள்ள மக்களின் சொத்தும், சரீரமும் காப்பாற்றப்படுவது மதத்தினாலா, அரசாங்க சட்டதிட்டங்களினாலா என்பதை யோசித்துப் பார்த்தாலே மதத்தின் காப்பும், நடப்பும் எப்படிப்பட்டது என்பது சுலபத்தில் விளங்கிவிடும்.

மதம் "எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாய் காருண்யத்துடன் இருக்க வேண்டும் என்று கற்பிக்கின்றது" என்று மதக்காரர்கள் சொல்லக் கூடும். ஆனால் மனிதனைத் தவிர மற்ற எல்லா ஜீவராசிகளையும் பற்றிக் கவலைப்படாமல் மற்ற ஜீவராசிகளைக் கொல்லவும், தின்னவும், இம்சிக்கவும் தனக்கு இடையூறு என்று கருதினால் அழிக்கவும் செய்கிறான். ஆனால் மனிதனை மாத்திரம் அந்தப்படி செய்வதில்லை. இதற்குக் காரணம் மதமா? அல்லது அரசாங்க சட்டதிட்டமா? என்று கேட்கின்றோம். மனிதனை அந்தப்படி எங்கோ ஒன்று இரண்டு சமயம் செய்வதாக வைத்துக்கொண்டாலும் அதற்காகத் தண்டனையை அடைகின்றான்.

ஆதலால் மதம் எங்கே பொதுவான ஒழுங்கு முறையை, ஒழுக்கத்தைக் காப்பாற்றுகின்றது என்று கேட்கின்றோம்.

மதம் மனிதனுக்கும், மற்ற ஜீவராசிகளுக்கும் உள்ள வித்தியாசங் களைக் காட்டுவது என்று சொல்லப்படுவதும் மிகுதியும் பொருத்தமற்றது என்றே கருதுகின்றோம்.

மனிதனுக்கும், மற்ற ஜீவ வர்க்கத்துக்கும் உள்ள வித்தியாசம் எந்தத் துறையிலானாலும் அறிய வேண்டுமானால் பிராணிவர்க்கத் தத்துவம் கொண்ட நூல்களைப் பார்த்தால் தாராளமாக மத சம்மந்தம் இல்லாமலே அவைகளைத் தெரிந்து கொள்ளலாம். அப்படிக்கில்லாமல் மதத்தின் மூலம் அறிந்த ஜீவத் தத்துவங்கள் இன்று சிரிப்புக்கிடமாகத்தான் இருந்து வருகின்றன.

மதம் மனிதனுக்கு மனிதன் வித்தியாசம் கற்பிக்கின்றது. மிருகங்களை, பக்ஷிகளை, பூச்சிகளை, புல் பூண்டுகளை மனிதனை விட உயர்வாய் மதிக்கின்றது. ஒரு மிருகத்தை உயர்வாய், ஒரு மிருகத்தைத் தாழ்வாய் கற்பிக்கின்றது. இந்த விஷயங்களுக்குப் பிராணி சாஸ்திரமே முக்கியமானதும் சரியானதுமே தவிர, மதத்தின் மூலம் அறியக்கூடியதாய் இருக்கும் தன்மை மிகவும் மோசமானதும், மூர்க்கத் தனமானதும், முட்டாள் தனமானதுமென்றே சொல்லுவோம்.

மேற்கண்ட 1,2,3 விஷயங்களைப் பற்றிய வரையிலாவது மதத்தை ஒப்புக் கொள்ள செய்யலாமென்று பார்த்தாலும் கூட அதுவும் அறிவுக்குப் பொருத்தமற்றதும், மூர்க்கத்தனம் கொண்டதுமான கருத்துக்களால் பாதகமடைகின்றது. அதாவது எந்த மதக்காரனும் தன் தன் மதத்தைப் பற்றிய ஆதாரங்களும், கொள்கைகளுமே எந்த தேசத்துக்கும் எந்தக் காலத்திற்கும் பொருத்தமானது என்றும், அவைகளில் ஒரு முற்றுப்புள்ளிக் குறிப்புக்கோடு கூட மாறக்கூடாது என்றும், தன் தன் மதத்துக்கு தலைவன் என்பவன் எவனோ அவனே உலக மதத்தலைவனாக இருக்க வேண்டும் என்றும் செய்யப்படும் பிடிவாதங்களும், முரட்டுத் தனங்களும் எந்த மதத்தையும் மனித சமூக வாழ்வுக்கு வழிகாட்டி என்று ஒப்புக் கொள்ள முடியாமல் செய்கின்றது.

ஆகவே மனித சமூக கூட்டு வாழ்வுக்கும், ஒழுக்க முறைக்கும் மதங்களை விட அரசாங்க சட்டதிட்டங்களையே ஆதாரமாகக் கொள்வதுதான் அறிவுடமை என்று கூறுவோம். அதுதான் இன்று உலகமெங்கும் அனுபவத்தில் இருக்கின்றது என்றும் சொல்லுவோம். ஏனெனில் அவைகளில் காலத்துக்கும், தேசத்துக்கும் ஒத்தபடி, அனுபவத்துக்கும் அறிவுக்கும் ஏற்றபடி மாற்றிக் கொள்ளவும், திருத்திக் கொள்ளவும் உரிமை இருக்கின்றது. மதங்களில் அவை காணவே முடியாது. அப்படி ஏதாவது முயற்சித்தாலும் கலகம், கொள்ளை, கொலை முதலியவைகளை உண்டாக்கிவிடுகின்றது.

எனவே இந்த விஷயங்களே அதாவது இந்த உலக பிரத்தியக்ஷ மனித வாழ்வு சம்மந்தப்பட்ட இந்த விஷயங்களே மதத்தின் பயனாக இப்படி இருந்தால் இனி "மேலுலக" மனிதனுடைய கண்ணுக்கும், மனதுக்கும், பஞ்சேந்திரியங்களுக்கும் எட்டாத விஷயங்களைப் பற்றிய மத போதனைகள் என்ன பயனைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்? எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதைப் பற்றி நாம் விளக்க வேண்டுமா என்று கேள்க்கின்றோம்.

மற்றபடி "மதம் சட்ட சம்மந்தத்தை விட்டு விட்டு ஆத்மாவைப் பொருத்தது" என்று சொல்லப்படுவதைப் பற்றியோதென்றால் இந்தக் காரணத்துக்காகவே மதங்களை எல்லாம் அடியோடு ஒழிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.

ஆத்மா என்பதை இதுவரை ஒரு மனிதனும் அருத்தத்தோடு உருதிப்படுத்தவேயில்லை.

"4 + 3 = 10" என்று சொல்லிவிட்டு அந்த பத்தைப் பற்றியே விவகரித்துக்கொண்டிருக்கிறது போலவே, அதாவது 10ஐ யார் யாருக்கு எப்படி எப்படி பங்கிடுவது, எங்கு எங்கு வைப்பது என்று வேண்டுமானால் பேசு, அதற்குமேல் 4+3 எப்படி 10 என்று மாத்திரம் கேட்கக் கூடாது என்கின்ற நிலையில்தான் இன்று ஆத்ம தத்துவம் இருந்து வருகின்றது.

அதாவது ஆத்மா என்றால் என்ன? அது எப்படி சரீரம் பெற்றது? அதற்கு எப்படி கருமம் ஒட்டிற்று? அதன் நடத்தைக்குக் காரணம் என்ன? அது எப்படி, "மோக்ஷம்" போகின்றது? அது எப்படி மறுபடியும் சரீரம் பெற்று எழுகின்றது? மனித ஆத்மா, மிருக ஆத்மா, பக்ஷி ஆத்மா, புழு பூச்சி ஆத்மா ஆகியவைகளில் உள்ள வித்தியாசம் என்ன? என்பன ஆகியவைகளைப் பற்றி எல்லாம் பேசலாம், விவரிக்கலாம், வால்யம் வால்யமாக புஸ்தகம் எழுதலாம். ஆனால் ஆத்மா என்றால் என்ன? அது எப்படிப் பட்டது? அப்படி ஒன்று இருக்க விஞ்ஞான சாஸ்திரம் (சையன்ஸ்) அல்லது ஜீவ தத்துவ சாஸ்திரம் இடம் கொடுக்கின்றதா? என்பதைப் பற்றி யாரும் எவ்விதக் கேள்வியும் கேட்கக்கூடாது. ஆத்மா இருப்பதாக அவர் சொன்னார், இவர் சொன்னார், மகமது சொன்னார், கிறிஸ்து சொன்னார், கிருஷ்ணன் சொன்னார், புத்தர் சொன்னார்... என்று சொல்லி விடுவதும், "ஆத்மாவை நம்பாதவன் கடவுளை நம்பாத நாஸ்திகனை விட, கேடானவன், மடையன், மட்டி" என்றும் "கடவுளை நம்பாவிட்டாலும் ஆத்மாவை நம்பித்தான் ஆக வேண்டும்" என்று சொல்லிவிடுகிறார்களே ஒழிய காரண காரியங்களுடன் அறிவு அனுபவங்களுடன் பேசுகின்றவர்களே காணக் கிடைப்பதில்லை.

இது ஒரு புறமிருந்தாலும், ரூபம் இல்லாத, வஸ்து தத்துவமில்லாத மனதுக்கு புரியாத விஷயத்துக்காக இவ்வுலக பிரத்தியக்ஷ வாழ்க்கையையும், அடையும் இன்ப துன்பங்களையும் பற்றிய கவலை கூடாது என்றோ அல்லது இக் கவலையை விட "ஆத்மா" கவலையே பிரதானமென்றோ, பெரிதென்றோ சொல்லப்படுமானால் அப்படிப்பட்ட மதத்துக்கு உலகில் மனித ஜீவன்கள் இடம் கொடுக்கலாமா என்றுதான் கேட்கின்றோம்.

நிற்க "மதமானது மேல் உலக வாழ்வுக்கு ஆதாரமானது" என்று சொல்லப்படுமானால் முதலாவதாக மேல் உலகம் என்பது என்ன என்பதைப் பற்றி இதுவரை யாராவது, எங்காவது விளக்கி இருக்கிறார்களா என்று கேட்கின்றோம்.

பூகோள சாஸ்திர நிபுணர்கள், பூமியின் கீழ் மனதிற்கு எட்டக்கூடிய அளவு வரையும், பூமியின் மேல் ஆகாய மார்க்கமாக மனதிற்கு எட்டக் கூடிய அளவு வரையிலும் ஆராய்ந்து பார்த்து லக்ஷக் கணக்கான மைல் (ஏன்)? கோடிக்கணக்கான மைல் தூரம் வரையில் ஆராய்ச்சி செய்து மேல் கீழ் நிலைமையை விளக்கி இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு நிபுணத்துவர்கள் என்கின்ற நிலைமையிலும் அனேக வருஷ காலம் அதற்காகப் பாடுபட்டு உழைத்து அனேக கருவிகளின் உதவியைக் கொண்டு கண்டுபிடித்துச் சொன்ன பிரத்தியக்ஷ அனுபவ ருஜுப்பிக்கக் கூடிய உண்மைகளே ஒழிய "ஞான திருஷ்டி" அதாவது ஒரு மனிதனுடைய புத்திக்குத் திடீரென்று தோன்றிய விஷயம் என்று சொல்லப்படுவது போல் சொல்லப்பட்டதல்ல. அன்றியும் பள்ளிக்கூடங்களில் அல்லது பூகோள புஸ்தகங்களில் முறையே கற்பிக்கப்படாததும், காணப்படாததுமான விஷயங்களுமல்ல.

அப்படியிருக்கும் போது இந்த பிரத்தியக்ஷ உலக விஷயத்தை விட்டு விட்டு மேல் உலக விஷயத்தைப் பற்றி பேசுவது என்றால் அதில் அடங்கியிருக்கும் மௌடீகத் தன்மைக்கு எதை ஒப்பிடுவது என்பது நமக்கு விளங்கவில்லை.

இதுவரையில் மனிதன் மேல் உலகத்தை எப்படிக் கண்டு பிடித்தான்? அதன் விஸ்தீரணம், தன்மை என்ன? என்பவைகளைப் பற்றிய உண்மை எதுவும் சொல்லப்படாமல் "முதலில் மேல் உலகத்தை நம்பு, பிறகு எப்படி வேண்டுமானாலும், அதாவது மோக்ஷம் எப்படிப்பட்டது? நரகம் எப்படிப்பட்டது? தண்டனை எப்படிப்பட்டது? அது யாருக்குச் சொந்தம்? பரம பிதாவா, அல்லாவா, வைகுண்டநாதரா? கைலாச வாசரா? யார் அதற்கு எஜமான்? என்பதைப் பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வாதம் செய்" என்று கற்பிப்பதாய் இருப்பதைத் தவிர வேறு என்ன உண்மை அல்லது அறிவுடைமை மேல் உலக விஷயத்தில் இருக்கிறது என்று கேட்கின்றோம்.

அதுபோலவே மதம் "கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது" என்று சொல்லப்படும் வார்த்தையும் அர்த்தமற்றதாகவே இருக்கிறது.

கடவுளைப் பற்றி அதாவது, கடவுள் என்றால் என்ன என்பதைப் பற்றி இதுவரை ஒரு ஆஸ்தீகனாவது, அல்லது கடவுள் தன்மைகள் பெற்ற பெரியார்களாவது விளக்கினவர்களே அல்ல.

கடவுள் என்றால் "கண்ணுக்கும் மனதுக்கும் எட்டாதது, ரூபமும் குணமும் இல்லாதது, சர்வ சக்தி, சர்வ வல்லமை, சர்வ வியாபகம் உள்ளது" என்று சொல்லிவிடுவதும், அதைச் சொல்லுகின்றவர்களே அந்தக் கருத்தை நம்பாமல் இருப்பதும் பிறகு அதற்கு முரணாகப் பேசுவதுமான காரியங்களுக்கே இதுவரை கடவுளைப் பற்றிய வாதங்களின் முடிவாய் இருந்து வந்திருக்கின்றன.

மனதுக்குட்படாத கடவுளைப் பற்றி மனிதன் எப்படி எந்த இந்திரியத்தினால் உணர்ந்தான் என்று கேட்டால் அதற்குப் பதிலே இல்லை. குணமும் ரூபமும் இல்லாத வஸ்துக்கு செய்கை எது என்று கேட்டால் அதற்கும் பதிலே இல்லை. சர்வசக்தி, சர்வ வியாபகம் உள்ள கடவுள் செயலில் நன்மை தீமை, துன்பம் இன்பம், மேல் கீழ், சுகம் துக்கம், மோக்ஷம் நரகம் எப்படி உண்டாயிற்று? ஏன் உண்டாயிற்று என்று கேட்டால் அதற்கும் பதில் இல்லை. "அதைப்பற்றியெல்லாம் யாரும் கேட்கக் கூடாது கடவுளை நம்பித்தான் ஆகவேண்டும். நம்பாதவன் நாஸ்திகன், நம்பாவிட்டால் நரகம், அரச தண்டனை ஆஸ்தீகர்கள் கண்டனை கிடைக்கும்" என்று மிறட்டுவதும், உருட்டுவதும் தவிர கடவுளைப் பற்றி வேறு விளக்கமே இல்லை.

சர்வ சக்தியுள்ள சர்வ வியாபகமுள்ள கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட நான் ஏன் கடவுளை அறியமுடியவில்லை? ஏன் கடவுளை இல்லை? என்று சொல்லுகிறேன் என்று ஒருவன் கேட்டால், அது உன்னுடைய அகம்பாவம்; உன்னுடைய மடமை; உன்னுடைய பாவச் செய்கை என்று சொல்லி கடவுளை விட அவனைப் பெரியவனாக மதித்து இகழ்வதா யிருக்கின்றதே தவிர வேறு சமாதானமில்லை.

இப்படிப்பட்ட தத்துவங்கள் கொண்ட மதங்களைப் பற்றி, மக்கள் வேற்றுமை உணர்ச்சி கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்து பலாத்காரச் செய்கைகள் செய்து மக்களைத் துன்புறுத்துவதென்றால் மதத்தை ஒழிக்காமல் இருக்க யாருக்குத்தான் மனம் வரும் என்று கேள்கின்றோம்.

மதத்தின் பயனாக நமது வாழ்வில் எவ்வளவு துன்பங்கள், தொல்லைகள் அடைய நேரிடுகிறது என்பதை உணர்ந்தால், மேலும் மேலும் மதங்களிடம் வெறுப்புத் தோன்ற இடமேற்படுகின்றதே ஒழிய சிறிதாவது அதைச் சகிக்க இடமே இல்லாமல் இருக்கின்றது.

கிறிஸ்துவ மதத்தைப் பற்றி எழுதினோம் என்பதற்கு குடி அரசு பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று. மகம்மதிய மதத்தைப் பற்றி எழுதினதற்காக புரட்சிப் பத்திரிகை நிறுத்தப்பட்டுப் போயிற்று.

இந்து மதத்தைப் பற்றி எழுதுகிறோம் என்பதற்காக தினம்தோறும், நிமிஷம் தோறும் அடைந்துவரும் தொல்லையும், நசுங்குச் சேஷ்டை உபத்திரவங்களும் கணக்கு வழக்கில் அடங்காது. பார்ப்பனர்களை உத்தியோகஸ்தர்களாக கொண்ட போலீஸ் இலாக்கா, போஸ்டல் இலாக்கா, ரயில்வே இலாக்கா, நீதி இலாக்கா, நிர்வாகம் மற்றும் அநேக துறைகளில் கீழே இருந்து ஹைகோர்ட்டு நிர்வாக சபை வரையில் ஆங்காங்குள்ள மதக் காப்பாளர்களான பார்ப்பனர்களால் நாம் அடைந்து வரும் கஷ்டம் சித்திரவதைக்கொப்பாக இருந்து வருகின்றது.

நாம் மாத்திரமல்லாமல் நம்மைப் போல் கஷ்டப்படும் மக்கள் கோடிக்கணக்காக எல்லா மதங்களிலும் இருந்து வருகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரியும்.

மதமானது பணக்காரத் தன்மையை பிரதிபலித்துக் கொண்டும், அதை ஆதரித்துக்கொண்டும் இருந்து வருகின்ற சாதனமாய் இருப்பதால் அதற்கு இவ்வளவு ஆதிக்கம் இருந்து வருவதில் அதிசயமில்லை.

ஆதலாலேயேதான் மதங்கள் ஒழிக்கப்படுவதாலேயே மனித சமூகத்துக்கு ஒற்றுமையும், சாந்தியும் ஏற்படும் என்று கருதுவதோடு, பணக்காரத் தன்மையின் கொடுமையும் ஒழியுமென்று கருதுகின்றோம்.

சென்ற வாரத்தில் சென்னை கடற்கரையில் நடந்த மத சம்பந்தமான ஒரு முஸ்லீம் கூட்டத்தில் கலகம் ஏற்பட்டு ஒரு முஸ்லீமை ஒரு இந்து குத்திவிட்டானாம். முஸ்லீமும் அதனால் செத்துவிட்டான். நாளைய தினம் "ஒரு கிறிஸ்தவன் அதை விசாரித்து உண்மைக் கண்டு இந்துவை தண்டிக்கப் போகிறான்" என்றாலோ அதில் அதிசயமில்லை. ஒரு கிறிஸ்தவன் முகமது நபியைப் பற்றி ஏதோ எழுதிவிட்டால் முகமதியர்களுக்கு ஆத்திரம் வருகின்றதும், ஒரு முகமதியன் கிறிஸ்துவைப் பற்றி எழுதி விட்டால் கிறிஸ்தவனுக்கு ஆத்திரம் வருவதும், இது போலவே இந்துக்களுக்கும், கிறிஸ்து முகமதியர்களுக்கும் நேருவதும் அதற்காக கொலை, கொள்ளை, கொடுமைகள் நடப்பதுமான காரியங்கள், அதுவும் இன்று நேற்று அல்லாமல் ஆயிரக்கணக்கான வருஷங்களாக, அதுவும் இந்தியாவில் மாத்திரம் அல்லாமல் ஐரோப்பா, அரேபியா, ஆப்பிரிக்கா முதலிய எல்லா தேசங்களிலும் நடந்து வருகின்றது என்றால் மதம் மக்களுக்கு கூட்டு வாழ்க்கையையும், ஒற்றுமையையும் சகிப்புத் தன்மையையும், வாழ்க்கை ஒழுங்குகளையும், ஒழுக்கங்களையும் போதித்து வருகின்றதா? என்று கேட்க்கின்றோம்.

மதங்களில் உள்ள ஒழுக்கங்கள்

இந்து மதமும், இஸ்லாம் மதமும் ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பதில் ஒன்றுக்கொன்று தானே சிறந்த ஒழுக்கத்தை யுடையது என்று போட்டி போடுகின்றன. ஒழுக்கயீனங்களில் எல்லாம் மிகக் கேடானதாக, குற்றங்களில் எல்லாம் மிக இழிவான குற்றமாகவும் கருதப்படும் குற்றமாகிய பெண்களைப் பலாத்காரம் செய்து கற்பழித்தல், மானபங்கம் செய்தல் என்னும் குற்ற விஷயத்தில் இரு மதஸ்தர்களும் வங்காள மாகாணத்தில் எப்படி நடந்து இருக்கின்றார்கள் என்பதைக் காட்ட "மாடர்ன் ரிவியூ" பத்திரிகையில் வெளியாகி உள்ள ஒரு புள்ளி விபரத்தை இங்கு குறிப்பிட்டு விட்டு இதை முடிக்கின்றோம்.

இஸ்லாம் மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்

வருஷம் இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் மொத்தம்

1926 113 481 594

1927 122 576 698

1928 104 460 564

1929 114 676 790

1930 104 531 635

1931 125 573 698

இந்து மூற்கர்களால் செய்யப்பட்ட பலாத்கார விபரம்

வருஷம் இந்து பெண்கள் முஸ்லீம் பெண்கள் மொத்தம்

1926 194 9 203

1927 201 3 204

1928 198 10 208

1929 236 8 244

1930 234 6 240

1931 197 3 200

மதம் ஒழுக்கத்தை, கூட்டு வாழ்க்கை ஒழுங்கு முறையை, மனிதர்களிடத்தில் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய தன்மையை எங்கே எப்படி கற்பித்து இருக்கின்றது என்று மத பக்தர்களைக் கேட்கிறோம்.

------------------ தந்தைபெரியார் - “பகுத்தறிவு” தலையங்கம் 09.09.1934

பார்ப்பனரின் மறுபிறப்பு மாயங்கள்

மனித வாழ்வின் பெருமை எது?
பார்ப்பனரின் மறுபிறப்பு மாயங்கள்

தாய்மார்களே! தோழர்களே! இது போன்ற சந்தர்ப்பங்களில் நான் அழைக்கப்படுவதன் மூலம் பலர் இதுவரை நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியைச் செய்து வந்த முறைகளில் உள்ளவைகளை விளக்கி அவைகள் நமது அறிவுக்குப் பொருத்தமானவைகளா, இல்லையா என்பதைச் சிந்திக்கும்படி செய்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கிறது.

நான் பேசுகிறவைகள் இதுவரை இருந்து வந்த பழக்க வழக்கங்களுக்கு மாறான முறைகளில் இருக்கும். இப்படிக் கூறுவது நான் வேறுயாரையும் ஆதாரங்காட்டியோ, முனிவர்கள் - பெரியார்கள் சொன்னார்கள் என்பதைக் காட்டியோ, அல்லது பழைய புராணங்கள் கூறுகின்றன என்பதைக் காட்டியோ இல்லை. என்னுடைய மனதிற்குத் தென்பட்டவை களைக் கூறுகிறேன். நீ உன்னுடைய மூளைக்குச் சரியென்று பட்டால் ஏற்றுக்கொள்; இல்லையேல் சும்மா இரு, என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். அன்றி நீ நம்பத்தான் வேண்டும். நான் கூறுவதுதான் முடிந்த முடிவு. ஆகவே நம்பு! நம்பினால் மோட்சம்! நம்பாவிடில் நரகம் என்று கூறுவதில்லை.

நான் சொல்வதைச் சொல்லிக் கொண்டே இருப்பது தான் என் வேலை. எத்தனை நாளைக்குத்தான் மக்கள் மடையர்களாக இருக்கப் போகிறார்கள்? என்றைக் காவது ஒருநாள் மனதில்பட்டு தங்கள் கருத்துக்குச் சரியென்று தோன்றாதா? அதன் மூலம் என்றைக்காவது நம் மக்கள் நாகரிகத்துடன் பகுத்தறிவு பெற்றவர்களாக வாழ மாட்டார்களா என்ற விருப்பத் தைக் கொண்டே எங்கிலும் என் கருத்துகளைச் சொல்லி வருகின்றேன்.

பொதுவாக மனித ஜீவனுக்கு எதையும் ஆராய்ந்து ஏற்றுக் கொள்ளும் பகுத்தறிவுத்தன்மை இயற்கை யிலேயே கொடுக்கப்பட்டு இருக்கிறது. மனிதனைத் தவிர மற்ற ஜீவன்களெல்லாம் அப்படி இல்லை. அவை என்றென்றும் ஒரேவிதமான வாழ்க்கையிலேயே இருக்கின்றன. ஆனால் மனிதனோ ஆண்டுக்கு ஆண்டு மாற்றமடைகிறான். 50 வருடத்திற்கு முன் மனிதன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இன்றைய வாழ்க்கைக்கும் வேறுபாடுகள் உள்ளன. வருடத்திற்கு வருடம் புதுப் புதுவிதமாக வாழுகிறான். மணிக்கு மணி எவ்வளவோ மாற்றத்தை அடைகிறான். இப்படி மிக வேகமாக மனித சமுதாயத்தில் புதிய மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

கட்டை வண்டியில் இருந்த வாழ்க்கை இன்று இரயில், மோட்டார், ஆகாய விமானத்தில் பறக்கும் அளவுக்கு வந்துவிட்டது. நாய்கூட ஆகாய விமானத்தில் மணிக்கு 500 - 600 மைல் வேகத்தில் பறக்கிறது. சக்கிமுக்கி கல் இருந்த காலம்போய் இன்றைக்குப் பெட்ரோமாக்ஸ் லைட், மின்சார விளக்கு முதலியவை வந்துவிட்டன. இரவு பன்னிரண்டு மணி நேரத்தில் ஒரு மயிர்க்கால் நுனியில் வெளிச்சத்தைக் காட்டி அந்நேரத்தை பகல் 12 மணி நேரத்தின் வெளிச்சத்திற்கு ஒப்பிடும்படியான மின்சார விளக்குச் சாதனங்களைக் காண்கிறோம். சுருட்டு, பீடி, சிகரட் ஊதும் மைனர்கள் பாக்கட்டிலிருந்து சிறிய தகரடப்பாவைப் போன்றுள்ள கருவியை எடுத்து ஒரு தட்டுத் தட்டினால் குப்பென்று எரியும் கருவியைக் கையாளுகின்றனர். இங்கிருந்து இரவில் அயல் ஊருக்குச் செல்லுகையில் வெளிச்சத்திற்காக முன்னெல்லாம் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு செல்வார்கள். இப்போதோ இரண்டு ரூபாயில் பேட்டரி லைட் கையில் நாசுக்காக வைத்துக் கொண்டு பொத்தானை அழுத்தினால் பளிச்சென்று வெளிச்சம் வருகிறது.

இது மட்டுமா? இங்கிருந்து கொண்டே பட்டினத்துக்கு டெலி ஃபோன் (தொலைபேசி) மூலம் பேசலாம். இந்தியாவின் தென்கோடி கன்னியாகுமரியி லிருந்து, வடகோடி இமயமலை அடிவாரத்தில் உள்ள வரிடம் பேசலாம். ஆங்கில நாட்டுடன் பேசலாம்.

இவைகள் என்ன? மாயமா! மந்திரமா! மாயாஜாலமா! அல்லது யாராவது நடுவில் இருந்துகொண்டு தவம் செய்கிறார்களா? மந்திரம் ஜெபிக்கிறார்களா? ஒன்றுமே இல்லை! அவைகள் (மந்திரம், தவம்) அத்தனையும் பித்தலாட்டம் என்பதை நிரூபிக்கவே இவ்வித அற்புதங்கள் தோன்றி இருக்கின்றன. எல்லாம் பகுத்தறிவு சக்திதான். இவைகள் அத்தனையும் பகுத்தறிவால் உண்டானவை. இப்படி மனிதன் பகுத்தறிவின் தன்மையால் மிக முன்னேற்றமடைந்து கொண்டு போகிறான். இந்தநிலைமை இன்னும் எவ்வளவு தூரத்தில் போய் முடியுமோ தெரியவில்லை. அவ்வளவு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது.

இவற்றிற்கெல்லாம் காரணம் மனித வாழ்க்கையே! மற்ற ஜீவன்களின் வாழ்க்கையைவிட மாறானது; எதையும், தன் அறிவுகொண்டு ஆராயும் தன்மையுடன் இருப்பதால் இப்படி அதன் பலனால் மாறிக்கொண்டே போகிறான்.

மற்ற ஜீவன்கள் ஆயிரம் ஆண்டுக்கு முன் இருந்ததைப் போன்றே இன்றும் இருக்கின்றன; ஏதாவது ஓரிரு மிருகம் தன் வாழ்க்கையில் சிறிது மாற்றமடைந்திருக்குமானால் அது மனிதனால் புகுத்தப்பட்டிருக்கும். அதை அன்றி அதற்குத் தன் சொந்தமான புத்தியை உபயோகித்து நல்லது கெட்டது உணர்ந்து அதன்படி நடப்பது கிடையாது.

ஆனால் இப்படிப்பட்ட உயர்ந்த குணத்தையடைந்த மனிதனின் வாழ்க்கை உள்ளநிலை இன்றைக்கு நம் நாட்டில் மிக மோசமாக இருக்கிறது.

இதுவரை கூறிய அதிசய அற்புதங்களில் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடித்த அறிவாளி நம் நாட்டு மனிதனாக இருக்கவில்லை. எல்லாம் மேனாடுகளில்தான் பகுத்தறிவு வாதி தோன்றுகிறான். அயல் நாட்டில்தான் விஞ்ஞானி தோன்றுகிறான்; பெரிய ஆராய்ச்சியாளர்கள் புதிய சாதனங்களைக் காணும் அறிவு பெற்ற நிபுணர்கள் தோன்றுகிறார்கள்.

ஆனால் இந்நாட்டில் இதுவரை தோன்றியவர்கள் எல்லாரும் பக்தர்கள், பரமாத்மாக்கள், கடவுள் அவ தாரங்கள், ரிஷிகள், முனிவர்கள், இப்படிப்பட்ட அயோக்கியர்கள்தான் தோன்றியதாகப் பார்ப்பனப் புராணங்கள் கூறுகின்றன. அதுவும் இன்றி இப்போது நம் கண் முன்பாகவே தோன்றிய மகாத்மா இராமராஜ்யத்தை உண்டாக்கத் தோன்றினார். இன்னும் இப்போதுள்ள மந்திரிகள் அரசியல் தலைவர்கூட காந்தி ஏற்படுத்திய இராமராஜ்யத்திற்குதான் தலைவர்களே அன்றி ஜனநாயக நாட்டிற்குத் தலைவர்கள் அல்லர். இராம ராஜ்யத்தில் எந்த முறையில் ஆட்சி செய்யப்பட்டதோ அதே முறையைத்தான் இன்றைய ஆட்சியிலும் கையாளுகின்றனர். இப்படி நம் நாட்டில் ஒன்றுக்கும் உபயோகமற்ற அயோக்கியர்கள்தான் இதுவரைக்கும் தோன்றி நம் நாட்டைப் பாழாக்கிவிட்டனர்.

இதனால் யாரைக்கேட்டாலும் சாஸ்திரம் சொல்லுகிறது; புராணம் சொல்லுகிறது; ரிஷிகள் சொன்னார்கள்; கடவுள் அவதாரங்கள் சொன்னார்கள் என்றுதான் கூறுகிறார்களே அன்றி ஏன் அப்படி சொன்னார்கள்? அதனால் நன்மை என்ன? தீமை என்ன? என்பவைகளை ஆராய்ந்து சொல்வது கிடையாது. இப்படியே நம் மக்கள் முன்னோர்கள் சொன்னதையும், பார்ப்பனர்கள் சொன்னதையும் ஆராய்ந்து பார்க்காமல் இன்றைக்கும் மடையர்களாக இருக்கிறார்கள். மேனாட்டில் காணப்படும் புதிய முறைகள் இங்கேயும் ஏன் தோன்றக் கூடாது? அந்நாட்டில் உள்ள மனிதன் அநேக அதிசய அற்புதத்தைக் காணுகிற போது உன்னாலும் ஏன் காண முடியாது? காரணம் அறிவைப் பயன்படுத்தாததே.

அதற்கேற்ற வண்ணம் பாழாய்ப் போன சாஸ்திர புராணங்களும், கடவுள்களும் இந்நாட்டில் மலிந்து விட்டன. கடவுள் என்று சொல்லப்படாத பொருளே இல்லை. மரம், கல், சாணி முதற்கொண்டு எல்லாம் கடவுள்; காக்காய், கழுகு, மாடு முதற்கொண்டு எல்லா மிருகங்களும், எல்லா பட்சிகளும், மரம், கொடி, செடி, புல்பூண்டு முதல் உயிருள்ள பொருள் அத்தனையும், மற்றும் உயிரற்ற பொருள் சாணி, மூத்திரம் வரை எல்லாம் கடவுள்கள் மயமாகவே இருக்கின்றன. இப்படி எண்ணிக்கையற்ற கடவுள்கள், பேர் சொல்லத் தெரியாத கடவுள்கள் எங்கும் கடவுள்கள் மயமாகவே இருந்தும், இதுவரை ஒருவிதப் பலனும் ஏற்படவில்லை என்பதுமட்டுமல்ல; நம் மக்களைப் புத்தியற்றவர் களாகவே ஆக்கிவிட்டன. சுலபத்தில் திருத்தமுடியாத அளவுக்கு இத்தனையும் சேர்ந்து நம் மக்களின் அறிவைப் பாழாக்கிவிட்டன.

இத்தனையும் இந்நாட்டில் நிலைபெற்றிருந்தால்தான் ஒரு சிலர் சுகமாக வாழமுடியும். அவர்களின் வாழ்க் கைக்கு என்னென்ன சவுகரியங்கள் வேண்டுமோ. அவைகளை அடிப்படையாகக் கொண்டுதான் புராணங் கள் எழுதப்பட்டன. எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் எண்ணற்ற கடவுள்கள் இருப்பதற்குக் காரணம் வேண்டும்? எந்த நாட்டிலும் இல்லாத முறையில் இந்த நாட்டில் பார்ப்பனர்கள் இருப்பதே அதற்குக் காரணம். கடவுள்களும், சாஸ்திர புராணங்களும் அவர்களின் நல்வாழ்க்கைக்கும், சுக வாழ்க்கைக்கும்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட வைதீகத் தன்மைகளை நிலைநாட்டவே மோட்சம், நரகம் உண்டாக்கப்பட்டன. சாஸ்திர புராணங் களை ஆராய்ந்து பார்க்கக் கூடாது. காதால் கேட்கவும் கூடாது; படித்துப் பார்க்கவும் கூடாது என்ற நிபந்தனையும் ஏற்படுத்தி அவைகளுக்கு இன்னின்ன தண்டனைகள் என்பதையும் எழுதி வைத்துள்ளார்கள்.

மனிதன் கடவுளை நம்ப வேண்டும். கடவுள் கூறியபடி கேட்க வேண்டும்; கடவுள் கூறியதற்கு மாறாக நடக்கக்கூடாது. அப்படி நடந்தவன் நரகம் சேருவான்; பார்ப்பனப் புரட்டுகளை ஒப்புக்கொள் கிறவன் மோட்சம் சேருவான் என்பதையும் கூறினர்.

மேலும் மதம், மக்களை மடமையிலேயே என்றென்றும் ஆழ்த்தி யிருக்க வேண்டும் என்பதற்கே ஏற்படுத்தப்பட்டது. அவனவன் என் மதத்தில் கூறி இருக்கிறது. அதன் உட்பிரிவுகளான பல்வேறு ஜாதிகளைக் காட்டி என்னுடைய ஜாதி பழக்க வழக்கம் என்று கூறி கண் மூடித்தனமாகப் பின்பற்றுதலும் அறிவை உபயோகிக்காததேயாகும்.

எதற்காக அப்படிச் சொல்லி இருக்கிறது என்பதைச் சிந்திப்பதே இல்லை. எனவே இன்றைக்கு நடைபெறும் இதுபோன்ற நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சிக்குக் கூட இங்கு ஒரு பார்ப்பான் வந்து நடத்துவானாகில் இயற்கை எய்தியவர் என்ன ஜாதி, அவர் ஜாதிக்கு என்ன பழக்க வழக்கங்களைக் கைக்கொண்டு வந்தார்கள் என்பதை அனுசரித்தே நடத்துவான்.

இதனால் என்ன விளங்குகிறதென்றால், இயற்கை எய்தியவர் இன்ன ஜாதியைச் சேர்ந்தவர் என்பதையும், அந்த ஜாதிப் பழக்க வழக்கம் என்பதால் அந்த ஜாதி மறைந்துபோகாமல் என்றைக்கும் இருக்க வேண்டும் என்பதற்குமே செய்யப்படுகிறது.

இப்படியே இன்னமும் கல்யாணம், கருமாதி, திவசம், இப்படிப் பலவகைகளை உண்டாக்கி அவைகளில் அந்த ஜாதிக்கு ஒவ்வொரு முறையை உண்டாக்கி அந்த ஜாதிகளை நிலைநாட்டவே செய்யப்படுகின்றன.

இப்படிப்பட்ட நிலை இன்றைக்கு மாற்றமடைந்து கொண்டுதான் வருகின்றது. எங்களின் முயற்சியும் ஓரளவு பயன் அளித்துக்கொண்டு வருகிறது. மக்கள் பெரும்பான் மையினர் முன்பு இருந்ததைப் போன்று பயங்கொள்ளாமல் துணிந்து நடக்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் கூட்டம் என்றால் வருவதற்கே மக்கள் பயப்படுவார்கள். எங்கள் பேச்சைக் கேட்பதற்கே பயப்படுவார்கள். அது மட்டும் அல்ல. நாங்கள் பேச முடியாதபடி தொல்லைகள் கொடுப்பார்கள். கற்களையும், மண்ணையும், சாணியையும் வீசி எறிந்து கஷ்டப்படுத்துவார்கள். அப்படியெல்லாம் செய்த இதே மக்கள் இன்றைக்கு எங்கள் கூட்டம் என்றால் வேறு எந்தக் கூட்டத்திற்கும் இல்லாத முறையில் அதிக அளவு வந்து குவிந்து விடுகின்றனர். நாங்கள் பேசுவதில் என்ன தான் உண்மை இருக்கிறது என்பதைக் கேட்கும் அளவுக்கு வந்து விட்டார்கள். நாங்கள் நாத்திகர்கள்; எங்கள் பேச்சைக் கேட்கக் கூடாது என்று தூற்றிய மக்களே மன தைரியம் கொண்டு எங்கள் கூட்டத்திற்கு வருகிறார்கள்; அது மட்டும் இல்லாமல் இன்றைக்கு எங்கள் கருத்தைக் கடைபிடித்து அதன்படி நடக்கும் பகுத்தறிவு கொண்டவர்கள் மலிந்துவிட்டார்கள். வீண் வெளிப்பகட்டுக்கும், பிறரை ஏமாற்றவும், காசு சம்பாதிக்கவும், மற்றவன் தயவு வேண்டும் என்பதற்காக மட்டும் சாம்பலைப் பூசியும், கொட்டையைக் கழுத்தில் கட்டிக்கொண்டும் திரிகிறார்களே அன்றி உண்மையில் பக்திக்காக என்று கூறுவதற்கு இல்லை. இன்னமும் சிலர் பார்ப்பனத் தெருவில் பொறுக்கித் தின்னலாமே என்பதற்காக எங்களிடம் வெறுப்புக் காட்டுகிறார்களே அன்றி உண்மையில் வெறுப்பு என்று கூற முடியாது.

பார்ப்பான்கூட எங்கள் பேச்சுகளை மறுத்துக் கூறமுடியாது; இன்றைக்கு இதுவரை நாங்கள் ஆராய்ச்சி செய்து விளக்கிக் கூறி இராமாயணத்தைப் பற்றிய யாருக்காவது சரியானபடி யார் ஒப்புக் கொடுத்திருக்கிறீர்கள்? சென்னையில் பார்ப்பனத் தெருவில் இராமாயணத்தின் யோக்கியதைகளை எடுத்துக் கூறினோம். அதைக் கேட்ட பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் இராமசாமி உண்மையைத்தான் சொல்லுகிறான். நாம் என்ன செய்ய முடியும்? இராமாயணப் புத்தகத்திலேயே பக்கம் பக்கமாக எடுத்துக் காட்டி அல்லவா சொல்லுகிறான்? நாம் என்ன அதற்குச் செய்ய முடியும்? என்றுதான் கூறினார்களே அன்றி ஆதாரத்துடன் என்னிடம் நேரில் மறுத்துக் கேட்க முடியவில்லை: எனவே இன்றைக்கு எங்களின். பிரச்சாரத்தின் பலனாய், பார்ப்பனர்கள் இனிமேல் நம் அயோக்கியத் தனம் எல்லாம் இவர்களிடம் செல்லாது என்று உணர்ந்து கொண்டது மட்டுமன்றிப் பார்ப்பனப் புரட்டுகளையே நம்பி அறிவற்றவர்களாக இருந்தவர்கள் எல்லாரும் ஒருவாறு தம் சொந்தப் புத்தியை உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள். இனியும் இந்நிலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகும் என்பதில் சந்தேகம் இல்லை.

மனிதன் ஒருவன் இயற்கை எய்தியவுடன் அதற்கு இறந்தார், செத்தார் என்றும், ஈசன் திருவடியை அடைந்தார் பரமபதம் அடைந்தார், வைகுண்ட பதவி அடைந்தார் இப்படிப் பலவிதமான பெயர்களைக் கூறுவார்கள். மனிதன் பிறக்கிறான் என்றவுடன் அவன் இறந்துவிடுதல் என்பதும் அதில் மறைந்துதான் நிற்கிறது. எப்போது பிறப்பு ஏற்பட்டதோ அதற்கு இறப்பு என்பது உண்டு என்பதும் இயற்கையின் தன்மை யாகும். இந்தப் பிறப்புக்கும், இறப்புக்கும் மத்தியில் இருக்கும் சம்பவம் வாழ்வது என்பது. இந்த வாழ்க் கையில் மனிதன் இன்பமடைய விரும்புதல் இயற்கை யாகும். எந்த மனிதனும் சுகமாக வாழ்வதை விரும்பாமல் இருக்க மாட்டான். இந்த இன்பத்தைத் தேடும் பொருட்டே வாழ்க்கையில் ஒவ்வொரு துறையிலும் ஈடுபடுகிறான்.

மேலும் ஜீவராசிகளுக்கு இயற்கையில் பசி, தாகம், காம இச்சை இவைகள் உள்ளன. இவைகள் அத்தனையும் அதனதன் பருவத்திற்கும் சமயத்திற்கும் தக்கபடி உண்டாக்கப்படுகின்றன. மனிதனுக்கு எப்போதும் பசி ஏற்படுவதில்லை. அதைப்போல் எப்போதும் தாகம் எடுப்பதும் இல்லை. அவையவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில்தான் உண்டாகும். காம இச்சை வருவதும், தக்க பருவம் வந்த பின்புதான் வருவது இயற்கையாகும். இப்படி வரும் காலத்தில் பூர்த்தி செய்து கொண்டு வாழ்வதன் மூலம் மனிதன் இன்ப மடைகிறான். இவ்விதம் மனிதன் தன் வாழ்க்கையில் பல்வேறு இச்சைகளைக் கொண்டவனாக இருக்கிறான்.

-----------------------------------வேலூர் திரு. கே. மாசிலாமணி (முதலியார்) (மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.பா. சாரதி அவர்களின் தந்தையார்) இயற்கை எய்தியதை முன்னிட்டு 29-1-1956 அன்று நீத்தார் நினைவு நாள் நிகழ்ச்சியின் போது தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவின் சுருக்கம். - "விடுதலை" : 20.2.1956

31.7.10

பிரேமானந்தா நித்யானந்தாக்களுக்கு முன்னோடி ஜெயேந்திர சரஸ்வதி

நான்தான் ஜெயேந்திரன் பேசுகின்றேன்!


காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதிமீது கொலைக் குற்றம் இருந்தும், காமவெறியர் என்று மக்களால் தூற்றப்பட்டும்கூட அவருக்கு 76ஆம் ஆண்டு பிறந்த நாளை ஜெயந்தியை வெகு விமரிசையாகக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆசாமியும் கொஞ்சமும் லஜ்ஜையின்றி

ராஜ நடை போட்டுத் திரிந்து கொண்டு இருக்கிறார்.

சங்கை கெட்டுப் போன சங்கராச்சாரியாரை பார்ப்பனர்கள் தூற்றுவதில்லை; விட்டுக் கொடுப்பதில்லை. காரணம் இனவுணர்வுதான். தமிழர்களின் நிலை என்ன?

உண்டகலத்தில் ரெண்டுக்குப் போகும் மனிதர்கள் தானே!(தந்தை பெரியார் கூறிய உவமை இது.) நான் யார் தெரியுமா?

இதோ காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பேசுகிறார்:

1) என்மீதுள்ள வழக்குகள் குற்றப்பிரிவு 302, 120பி,34, 201 ஆகிய பிரிவுகள் கொலை செய்யத் தூண்டுதல் கூட்டுச் சதி, பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல், கொலை இந்தப் பிரிவுகளில் என்னைக் கைது செய்துள்ளனர். (11.11.2004). என்மீதுள்ள முக்கிய குற்றச்சாற்று. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் ஆனந்த சர்மா மகன் சங்கரராமனைக் கொலை செய்தது. (3.9.2004)

2) என்மீதுள்ள இன்னொரு குற்றச்சாற்று சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது (இ.பி.கோ. 120பி, 307).

3) மற்றொரு குற்றச்சாற்றும் உண்டு. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது (31.8.2004) நெல்லை மாவட்டம் திருக்கருக்குடி பெருமாள் கோயிலில் இருந்த சிவன் கோயிலை நான் இடித்தேன். இடித்தது தவறு என்றுகூறி இந்த மாதவன் மறுபடியும் சிவன் கோயிலைக் கட்ட முயற்சி செய்தான். அதனால் மாதவனைத் தாக்கியது.

4) 1987 இல் (23.8.1987) காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக தண்டத்தை விட்டு விட்டு தலைக் காவேரிக்கு ஓடினேன் (நேபாள பெண்மணி ஒருவருடன்)

5) தண்டத்தை மடத்தில் விட்டு விட்டு ஓடியதால் மடத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்றாகி விட்டது. காமத்தைத் துறந்த நிலையிலிருந்து விடுபட்டு, காதல் உலகில் சஞ்சரித்ததாக இதன் பொருள். நான் தண்டத்தைத் தூக்கி எறிந்து விட்டு மடத்தைவிட்டு ஓடியதால், காஞ்சிப் பெரியவாள் அவசர அவசரமாக விஜயேந்திரனுக்கு அடுத்த பட்டத்தைச் சூட்டி விட்டார்.

6) அன்றைய குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் முயற்சியால் மீண்டும் காஞ்சி மடத்துக்குக் கொண்டு வரப்பட்டேன். தண்டத்தைத் துறந்து மடத்தைவிட்டு நான் வெளியேறி விட்டதால், மடத்துக்கும் எனக்கும் சம்பந்தா சம்பந்தம் இல்லை என்று சொன்னதை மகா பெரியவாள் கடைசி வரை வாபஸ் வாங்கவேயில்லை. ஆனாலும் விவஸ்தைகெட்டு மடத்தில் இருந்தேன் இருக்கிறேன்.

7) என்மீது வேறு குற்றச்சாற்றுகளும் உண்டு.

திருப்பதி தோமலை சேவையின்போது குலசேகரன் படியில் அமர்ந்து ஒரு முகூர்த்த நேரம் (ஒன்றரை மணி) அர்ச்சனை செய்தேன். கோயில் அர்ச்சகரைத் தவிர மற்றவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என்று தெரிந்தும் அதனைச் செய்தேன். அர்ச்சகர் என்னைத் தடுத்தார்; நான் அதைச் சிறிதும் சட்டை செய்யவேயில்லை. (3.11.2000).

8) பெண் விஷயத்திலும் என்மீது ஏகப்பட்ட புகார்கள். இந்த வகையில் பிரேமானந்தா. நித்யானந்தாக்களுக்கு முன்னோடி நான். அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து நான் இழுத்ததாக டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக எடுத்துக்கூறி என் மானத்தைக் கப்பலேற்றிவிட்டார்.

9) திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து அணிவித்தேன் (5.4.2002) இதன் மூலம் கடவுளையும் என் பிராமண ஜாதிக்குள் கொண்டு வந்து விட்டேன்.

10) தாம்ப்ராஸ் என்னும் பார்ப்பன சங்கத்தின் மூலம் வெளியிடப்பட்ட அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் நூல் வெளியீட்டு விழாவில் கடவுளுக்கும் மேலே உயர்ந்தவன் பிராமணன் என்று பேசினேன் (9.10.2002). இதன்மூலம் என் ஜாதி ஆணவத்தை வெளிப்படுத்தினேன். (மும்மலத்தையும் அதாவது ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்தவர்கள் தான் காமகோடி என்று சொல்லப்பட்டாலும், என்னைப் பொறுத்தவரை இவற்றிற்கு ஆட்பட்டவன் தான்).

11) மதுரை மாவட்டம் தும்பைப்பட்டிக்குச் சென்றேன், (10.11.2002). கக்கன் பிறந்த ஊர்அது. ஹரிஜன்கள் என்னைத் தொட்டு விடாதபடி தோளில் தொங்கிய துணியை எடுத்துக் காலில் சுற்றிக் கொண்டேன்.

இதன் மூலம் நான் தீண்டாமையை ஆதரிக்கும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டேன்.

12) எல்லா ஜாதியாருக்கும் ஒரே சுடுகாடு கூடாது என்ற கருத்தைச் சொன்னவன் நான் (விடுதலை 8.3.1982). இதனால் ஜாதி வெறியன் என்று தூற்றப்பட்டேன்.

13) பா.ஜ.க., ஆட்சியின் போது அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டதற்கு எனது பாராட்டுதலை வெளிப்படையாகத் தெரிவித்தேன் (தினமணி 16.5.1998).

இதன் மூலம் உலகில் சாந்தம் தழைக்க வேண்டும் ஹானி நீடிக்கக் கூடாது என்கிற பொதுவான மனிதப் பண்புக்கு எதிரியாக அடையாளம் காட்டப்பட்டேன்.

14) ரஜினியுடன் சேர்ந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று விஜயகாந்துக்கு அட்வைஸ் செய்தேன்.

(குமுதம் 18.1.2001)

இதன் மூலம் ஒரு மதத் தலைவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உடைத்தவன் ஆனேன்.

15) அயோத்தியில் கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. இதற்காக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை என்று கூறினேன் தினமணி (27.11.2000). இதன்மூலம் வன்முறைக்கு வித்திட்டவன்; சட்டத்தை மதிக்க மறப்பவன் என்று விமர்சிக்கப்பட்டேன்.

16) தமிழில் குடமுழுக்கு கூடாது என்றேன்.(இந்தியா டுடே 2.10.2002).

இதன் மூலம் தமிழ் நீஷப்பாஷை என்று என் குருநாதர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் கருத்தில் உறுதியாக நான் இருந்ததால் தமிழர்களால் நான் தூற்றப்பட்டேன்.

17) பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றேன் (தி பயனீர் 17.3.1997)

பெண்களால், எதிர்க்கப்பட்டேன். விதவைப் பெண்களைத் தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டுப் பேட்டி அளித்தேன். வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள் என்றும் கூறினேன்.

மகளிர் உண்டு இல்லை என்று எதிர்ப்புச் சூட்டைக் கிளப்பினார்கள். தி.க. மகளிர் அணியினர் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டமே நடத்தினர் (9.3.1998).

18) கொலை செய்யப்பட்ட சங்கரராமன் என் வண்டவாளங்களை எல்லாம் தண்டவாளத்தில் ஏற்றி விட்டான். எனது இன்னொரு பக்கமான ஆபாச நடவடிக்கைகளை எல்லாம் வண்டி வண்டியாக ஏற்றி விட்டான். (தனிப் பட்டியல் கீழே)

19) குற்றமற்றவன் என்று நீதிமன்றத்தால் நிரூபிக்கப்படும்வரை மடத்தின் பதவியிலிருந்து நான் விலக வேண்டும் என்று துவாரகா பீடம் ஸ்வரூபானந்துகூட கூறினார். (தி இந்து 3.12.2004)

நான் சட்டை செய்யவில்லையே!

ஆனாலும் பார்த்தேளா, எனது 76ஆவது ஜெயந்தி விழா ஜாம்ஜாமென்று நடக்கிறது. பத்திரிகைகளில் எல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள்! பிராமணாள் ஒரு பக்கம் சூத்திராள் இன்னொரு பக்கம் ஜமாயிக்கிறார்கள். எவ்வளவு கேவலமாக எங்கள் நடத்தை இருந்தாலும் எங்களவாள் விட்டுக் கொடுக்க மாட்டவே மாட்டாள். இவ்வளவு நடந்திருக்கே... எங்க மனுஷாள் என்மீதோ, மடத்தின் மீதோ கரித்துக் கொட்டியதுண்டா?

உங்களவாள் மாதிரியா? உண்ட வீட்டுக்கே ரெண்டகம் என்பதெல்லாம் எங்களைப் பொறுத்தவரை இல்லாத ஒன்று. ஆயிரம் பெரியார் தான் வரட்டுமே உங்களில் விபீஷணன்களை நாங்கள் உற்பத்தி செய்து கொண்டே இருப்போம்!

அந்தக் கைத்தடிகள் அனுமார்கள் இனாமாக எங்களுக்குக் கிடைக்கும் போது எங்களுக்கு ஏது பயம்?

ஹி... ஹி....

ஜெயேந்திரரின் ஆபாசப் புழுதிகள்

சங்கரராமன் கடிதம்

(சோம சேகர கனபாடிகள் என்ற பெயரில் சங்கரராமன் (கொலைசெய்யப்பட்டவர்) உயிரோடு இருந்தபோது எழுதிய கடிதத்தில் காணப்படும் ஜெயேந்திரரின் லீலைகள்.)

1.. ஆஸ்ரமஸ்விகரணம் ஆன சில மாதங்களிலேயே பிரதானமாக, வாநாகரம் மற்ற முகாம்கள் இவைகளில் நடந்த பால ஸ்திரி லீலைகள் (உப. நாகங்குடி வைத்தா)

2. வேதபுரி மூலம் தங்கத்திடம் வெள்ளி கேட்ட பிச்சை அதிக ஸ்வாரஸ்யமான அத்யாயம் (உப. தகவல் ஆதாரம்: நா. வைத்தா)

3. இளையாத்தங்குடியில் ஸ்ரீராமசாமி சர்மா சாட்சியாக கொட்டாயில் அடித்த கொட்டங்கள்.

4. கும்பகோணம் பட்டாபிக்கு பாங்க் விசுவநாதன் பார்யை விஜயாவுடன் நிர்வாண ஆலிங்கனம் செய்த கோலத்தில் திவ்ய தரிசனம் கொடுத்த விவரமான அத்தியாயம்பதிலுக்கு காமாக்ஷி கல்யாண மண்டபம்மடம் வாசலில் விஜயாவுடன் கடை கொடுத்த கருணை.

5. குண்டூர் காமாக்ஷி பீட மாமிக்கு பரமானுக்ரகம் செய்து வைத்த நிர்வாண நவாவர்ண வைபவம்.

6. தெனாலியில் நாகசதுர்த்தசி புண்ய காலத்தில் அதிகாலையில் (ஸ்ரீஸ்ரீபரமாசார்யாள் பூஜை செய்துகொண்டிருந்த சமயம்) ஆந்திர சுவாசினிகளுடன் சல்லாப சங்கமம் (பா.பேட்டை கண்ணன் நா.குடி வைத்தா இவர்களால் பந்தனம் செய்யப்பட்டது)

7. விஜயவாடாவில் திருவண்ணாமலை ராமு சாஸ்திரிகளுடன் ஓடியது மார்கழி மாதம் அதிகாலை இதுவரை வெளிவராத புதிய விஷமங்கள் (உ.ப.ப.பேட்டை குப்பு)

8. குருவாயூர் க்ஷேத்திரத்தில் வனஜாவுடன், குருநாதர் செய்த லீலா வினோதங்கள். தம்பிக்கும் பங்கு. (உ.ப.பாட்னா முரளி)

9. திருப்பதி மாமியுடன் தான் அனுபவித்து விட்டு, தாடி நடராஜனையும் அனுபவிக்குமாறு பரமானுக்கிரஹம் செய்த பிறகு அவனுக்கு கல்தா கொடுத்த அத்யாயம்(உப.ராமமூர்த்தி பாட்டு)

10. எத்திராஜ முதலியாரின் உபபத்னி ஸ்தானத்தில் இருந்த மைதிலியுடன் நடத்திய சரச சல்லாப லீலைகள் சரித்திரம்.

11. நட்சத்திரப் பேர் கொண்ட பத்திரிகை அம்மாவுடன் நடத்திய லீலைகள், அதனால் ஏற்பட்ட சிக்கல்கள், சரணாகதி, வாக்குவாதம், த்ரவ்ய நஷ்டம் ஆகிய விவரங்கள் அடங்கிய விசேஷ அத்யாயம்.

12. அனந்தா பிக்சர்ஸ் மாமியுடனும், ஆலங்காடு நவிசம்சாரத்துடனும் பெற்ற ஆனந்த லீலைகள் அத்யாயம் (உப.பாட்னா முரளி)

13. பான்பராக்கு தாண்டவ பத்தினியைத் தொடர்ந்து தற்பொழுதுகூட அருகில் வைத்துக் கொண்டு நடத்தி வரும் சரச சல்லாப அத்யாயம் (உப.தாம்பரம் பாபு)

14. புதுக்கோட்டை திவான் பயிஷ்கார் மாட்டுப்பெண் தாம்பரம் பேபி(எ) ஜெயலக்ஷ்மியுடன் அடித்த மோஹ லீலைகள் அத்யாயம் (உப.தா.பாக்கம் தியாகராஜர்)

15. கூடவே இருக்கும் தாம்பரம் சகோதரர்களின் சகோதரிக்கு விவாகம் செய்துவிட்டு அவள் புருஷனை அடையவிடாமல் ஜெயேந்திரரும் நட்ட காலனும் (திரிசூலம்) அனுபவித்த அத்யாயங்கள்.(உப.தாம்பரம் பாபு)

குறிப்பு: இதன் பலன் நட்ட காலன் தன் ஒரே பிள்ளையையும் பறிகொடுத்துவிட்டுத் தானும் போய்ச் சேர்ந்தான்.

16. காமகோடி லீலா உடனும் அவளால் அறிமுகம் செய்யப்பட்ட இளசுகளுடனும் விதவிதமான லீலா சரச சல்லாப அத்யாயம் (உப. திருவிடைமருதூர் சந்திரா, பெ. வாழ்ந்தான் மௌலி)

17. சேலம் சுந்தரானு அய்யர் பார்வையுடன் பலகாலமாக இன்னும் நடத்தி வரும் கோலாகல லீலைகள் (உப.பாட்னா முரளி)

18. பாங்க் விதவை சரோஜா அவள் பெண்களுடன் நடத்திய சரச சல்லாபம், பெண்களுக்குக் கல்யாணம் செய்து வைத்து திவ்யானுக்ரஹம் செய்த அத்யாயம்(உப. பாட்னா முரளி)

மேலே குறிப்பிட்ட அத்யாயங்கள் தவிர,

1. விசேஷ அனுபந்தங்கள்

2. அந்தே வாசியின் பொண்பாடி லீலைகள் கோயில் ராமு குடும்பத்து ஸ்திரீகளுடன் தொடர்ந்து அடித்துவரும் கூத்துகள், ஸ்திரீகள் விடுதியில் நடைபெறும் விபசாரங்கள் ஆகிய விஷயங்களும் இணைப்புகளாக வெளிவரும். இதில் முக்கியப் பங்கு தம்பி ரகுவிற்கு.

குருநாதர் நடத்திய லீலைகள்பற்றி புகைப்படங்கள் ஆடியோ, வீடியோ கேசட் பதிவுகள் கைப்பட எழுதிய கடிதங்களின் நகல்கள் இவைகளைக் கொடுத்துதவிய சென்னைராதா மற்றும் நா. குடி வைத்தா இவர்களுக்கும் என்னுடைய கிருத்ஞையை இந்தச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

வரப்போகும் அத்யாயங்களைத் தாங்கள் படிப்பதுடன் பிரதிகள் எடுத்து மற்றவர்களுக்கும் அனுப்பி வைத்து குருநாதர்களின் மகத்துவங்களைப் பலரும் அறிய சகாயம் செய்து ஸ்ரீசந்த்ரமௌலீஸ்வரர் அனுக்கிரஹத்தால் காமமோஹ விவகாரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு பரமஷேமத்தை அடைய பிரார்த்திக்கிறேன், ஈசுவரோரசஷது.

இந்த உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகும் பீடத்தின் சிஷ்யர்களும், அபிமானிகளும், பக்தர்களும், தொடர்ந்து திரவியங்களை அள்ளிக் கொடுத்தும், பீடாரோஹண விழாக்களிலும் பங்கு கொண்டு சம்பந்தப்பட்டால் அது அவர்களுடைய துர்பாக்கியம்தான். இந்த பீடத்தின் அழிவுக்குச் செய்யும் கைங்கர்யமாகும். துணிச்சலுடன் இந்த காமாந்த பீடைகளை விரட்டி அடித்தால் மடம் உருப்பட்டு, நமக்கு நல்ல குரு கிடைப்பார்.

சோமசேகர கனபாடிகள்

ஜம்புகேசவர க்ஷேத்திரம் 6.9.2005 ஆதாரம்: (ஜெயேந்திரரின் ஆன்மீகமும், அரசியலும் எம்.ஆர் ரகுநாதன்)


------------------ மின்சாரம் அவர்கள் 31-7-2010 “விடுத்லை” ஞாயிறு மலரில் எழுதிய கட்டுரை


திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா?

பித்தலாட்ட யானை போட்ட லத்தி!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் கிராமத்தில் கேழ்வரகில் நெய் வடிகிறது என்கிறார்கள். கேட்பார்க்கு மதியில்லாமல் போய் விட்டதால் ஆங்கே மூட நம்பிக்கை முந்திரிக் கொட்டையாகக் குதித்துத் துள்ளுகிறது.

குளத்தினுள் இருந்த காட்டாமணக்குச் செடியை வெட்டும்போது அங்கு வேலை பார்த்த பெண்கள் சாமி ஆடினார்களாம்.

நான் குடிகொண்டுள்ளேன் என்னை வெட்டாதே! என்று அந்தச் சாமியாடிப் பெண்கள் சத்தம் போட்டார்களாம். இந்த நிகழ்ச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டதாம்.

வெட்கம் கெட்ட ஏடுகள் இதனைப் படம் போட்டு வேடிக்கை காட்டுகின்றன.

சாமி குடியிருக்க காட்டாமணக்குச் செடிதான் கிடைத்ததா? அப்படியே சாமி குடிகொண்டிருந்தால் அதனை வெட்டத்தான் முடியுமா?

வெட்ட முடிந்தது என்றால் அந்தச் சாமிக்குச் சக்தியும் இல்லை, வெண்டைக்காயும் இல்லை என்று நிரூபணம் ஆகவில்லையா?

இதன் பின்னணியில் ஏதோ ஒரு தந்திரம் இருக்கும் - அதுதான் அந்த இடத்தில் கோயில் கட்டவேண்டும் என்கிற தந்திரம்.

அவ்வாறே ஆசாமிகள் ஆரம்பித்துவிட்டார்கள். 1001 விளக்குப் பூஜை போடப்பட்டுவிட்டதாம்.

ஊராட்சித் தலைவர் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொண்டுவிட்டார். அவர் கனவில் சாமி வந்து தனக்குக் கோயில் கட்டச் சொன்னதாம்.

விஷயம் அங்கேதான் இருக்கிறது - சொல்லி வைத்த ஏற்பாடு - நாடகம்தான் இதன் பின்னணியில்!

மயிலாடுதுறை பக்கத்தில் கொல்லுமாங்குடியை யடுத்த பாப்பம்மாள் கோயில் என்ற ஊரில் பல ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் ஒரு திருகுதாளம் நடந்தது.

பூமிக்கு வெளியில் கை தெரிந்ததாம். எனக்கு வளையல் போடு என்று அது சொன்னதாம். வளையல்காரர் வந்து வளையல் போட்டாராம். அவ்வளவுதான், ஆங்கே கோயில் கட்டவேண்டும் என்று ஆரம்பித்தார்கள்.

உடனே உண்டியல் வந்து விட்டது. வசூல் மழை கொட்ட ஆரம்பித்தது.

திராவிடர் கழகத்துக்காரர்கள் சும்மா விடுவார்களா? களத்தில் குதித்தார்கள் - பிரச்சாரப் புயலைக் கிளப் பினார்கள் மறியல் என்று அடுத்து அறிவித்தார்கள். அவ்வளவுதான் வளையல்கார மாரியம்மாள் கதை புஸ்வாணம் ஆகிவிட்டது.

1970 செப்டம்பரில் அய்யா, அண்ணா பிறந்த மாதத்தில் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் தியாகராயர் நகரில் சிவா விஷ்ணு கோயில் அருகில் ஒரு திடீர்ப் பிள்ளையாரை உண்டாக்கினார்கள்.

தியாகராயர் நகரைச் சேர்ந்த கே.எம். சுப்பிரமணியம் என்ற பார்ப்பனர் அந்த வேலையைச் செய்தார்.

பூமியைப் பொத்துக் கொண்டு திடீரென்று பிள்ளையார் தோன்றினார் என்று கதை கட்டினார்கள். அப்படி சொன்ன சிறிது நேரத்திலேயே உண்டியல்கள் வந்தன - வசூல் வேட்டை ஆரம்பமாகிவிட்டது.

அந்த இடத்திலேயே பொதுக்கூட்டம் போட்டுப் பேச தந்தை பெரியார் அறிவிப்புக் கொடுத்தார்.

பிரச்சினை பேருரு எடுத்துவிடும் என்ற நிலையை உணர்ந்த முதலமைச்சர் கலைஞர் உண்டியலைப் பறிமுதல் செய்தார். திடீர்ப் பிள்ளையார்பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.

செல்வராஜ் என்ற காவல்துறை கான்ஸ்டபுளைப் பயன்படுத்தி அந்த சுப்பிரமணியம் பார்ப்பான் அந்த எத்து வேலையைச் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இரவோடு இரவாகக் குழியைத் தோண்டி அதில் ஒரு பிள்ளையார் சிலையை வைத்து, சுற்றிலும் பருத்திக் கொட்டையை நிரப்பி, பூமிக்கும் மேலே ஒரு துவாரத்தை ஏற்பாடு செய்து, தண்ணீரை அதன் வழியாக ஊற்றியவுடன் பருத்திக் கொட்டை உப்பி பிள்ளையார் பொம்மையைப் பூமிக்கு வெளியிலே கொண்டு வந்து பிதுக்கித் தள்ளிவிட்டது.

இதில் கடைந்தெடுத்த வெட்கக்கேடு என்ன தெரியுமா?

சுயம்பு - அது தானாகத் தோன்றும் என்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி அந்தப் பித்தலாட்டத்துக்கு வக்காலத்து வாங்கினார்.

ஆனந்தவிகடன் ஆம்! ஆம்! பிள்ளையார் தானாகத் தோன்றியது உண்மைதான் என்று ஒத்தும் ஊதியது.

சில நாள்களிலேயே சாயம் வெளுத்துவிட்டது.

அந்த இடத்தில், மசூதி கட்ட அனுமதியளிக்கப்பட்டு இருந்தது - அதனைத் தடுக்கவே இந்தத் திட்டம்; மதக் கலவரத்தை உண்டாக்குவது அதன் நோக்கம். கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்று தந்தை பெரியார் ஏன் சொன்னார் என்பது இப்பொழுது விளங்கி இருக்குமே.

இப்பொழுது விழுப்புரம் பக்கத்தில் கிளம்பியிருக்கும் அக்கப்போரும், இதுபோன்ற பித்தலாட்டம் என்ற யானை போட்ட லத்திதான்.

விரைவில் அதனை அம்பலப்படுத்துவோம்!

------------------- “விடுதலை”29-7-2010