Search This Blog

3.1.10

மார்கழி மாதப் பஜனைகள் மூலம் பீடைகள் நீங்கிவிடுமா?


மார்கழிப் பீடை


மார்கழி மாதம், பீடை மாதம்; அமங்கலமான மாதம்; ஆகையால் இந்த மாதத்தில், விடியற்காலத்தில் பஜனைகள் செய்ய வேண்டும்; கடவுள் என்பவர் மேல் தோத்திரங்கள் செய்ய வேண்டும்; காலையில் பொங்கல்கள் செய்து சாமிகளுக்குப் படைக்க வேண்டும்; நாமும் வயிறு நிரம்பச் சாப்பிட வேண்டும்; வீடுகள்தோறும் கோலம் போடவேண்டும்; வாயிற் படியில் புஷ்பங்கள் பரப்ப வேண்டும்; இரவில் தாதன் ஊர் முழுதும் சுற்றிப் பாட்டுப் பாட வேண்டும்; சேமக்கலம் கொட்டவேண்டும்; தப்புத்தட்ட வேண்டும். இப்படியெல்லாம் செய்தால்தான் பீடை நீங்கும் என்று செய்து வருகின்றனர்.

கோயில்களிலும் இந்த மார்கழி மாதத்தில் அதிகாலையிலேயே மேளதாளங்கள் முழங்குகின்றன; பூசைகள் நடைபெறுகின்றன; பொங்கல்கள் நைவேத்தியம் பண்ணப்படுகின்றன, கோயில் அர்ச்சகர்களும், வேலைக்காரர்களும் பொங்கலைப் பங்கு போட்டுக் கொள்கின்றனர். மூக்கால் மூன்று பருக்கை விழும்படி வயிற்றுக்குள் கொட்டுகின்றனர். வண்ணான் சாலைப் போல் வயிற்றைப் பெருக்க வைக்கின்றனர். பின்பு அஜீரணத்தால் அவதி அடைகின்றனர்.

வைதீகர்கள் வீடுகளில் காலையில் எழுந்தவுடன், சைவர்களாயிருந்தால், திருவாசகத்தில் உள்ள திருவெம்பாவை என்னும் பாடல்கள் ஓதப்படுகின்றன. வைணவர்களாயிருந்தால் நாலாயிரப் பிரபந்தத்தில் உள்ள ஆண்டாள் பாடிய திருவெம்பாவைப் பாடல்களை ஓதுகின்றனர்.

இவைமட்டும் அல்ல, மற்றொரு அதிசயமும் உண்டு. அது மிக வேடிக்கையான விஷயம். வைணவர்கள் பஜனைமடம் வைத்திருந்தால் அவர்கள் விடியற்காலை 4 மணிக்கே எழுந்திருப்பார்கள். வாலிபர்கள் மாத்திரம் அல்ல, சிறு குழந்தைகளும், வயதானவர்களும், வாலிபர்களும் விழித்துக் கொண்டு எழுவார்கள். குளிரைப் பொருட்படுத்தமாட்டார்கள்; பனியைப் பாராட்ட மாட்டார்கள்; கால்கைகள் குளிரினால் உதறும்; பற்கள் கப்பிரோட்டில் ஜட்கா வண்டி போவதுபோல் கடகட வென்று குளிரினால் ஆடும். அப்படியிருந்தும், பக்தியென்னும் முட்டாள்தனம், அவர்களை எழுப்பி விடுகிறது. இவர்களில் சிலர் குளிப்பார்கள்; குளிருக்கு அதிகமாகப் பயந்தவர்கள் கால் கைகளைச் சுத்தம் பண்ணிக் கொண்டு பட்டை நாமங்களைத் தீட்டிக் கொள்வார்கள். தாளம், மிருதங்கம், தம்பூரு அல்லது ஆர்மோனியத்தையும் தூக்கிக் கொள்வார்கள், தெருத்தெருவாக பஜனை செய்து கொண்டு வருவார்கள். இதைப் போலவே சைவ பஜனை மடம் வைத்திருக்கின்ற ஊர்களில் சைவர்கள் விபூதியைப் பட்டையடித்துக் கொள்வார்கள். ருத்திராக்கங்களைச் சுமந்து கொள்வார்கள். தங்களுடைய முஸ்தீப்புகளுடன் பாடிக்கொண்டு புறப்பட்டு விடுவார்கள். இந்த பஜனைக் கோஷ்டியினர் அரிசிப் பிச்சை வாங்குவதும் உண்டு.

இக்காட்சிகள், நாகரிகமுள்ள நகரங்களிலும் நாட்டுப் புறங்களிலும் நடைபெறுகின்றன. இப்பொழுது இவைகள் எல்லாவிடங்களிலும் இல்லை என்றாலும் சில இடங்களில் இருக்கின்றன. எந்தக் காலத்திலும் பைத்தியக்காரர்கள் இருந்துதானே தீருவார்கள்? அதற்கு நாமென்ன செய்யலாம்? நமக்குத் தெரிந்த மருந்தைக் கொடுக்கலாம். இவ்வளவுதான் முடியும்.

இச்செயல்களால், சாதாரண மக்களின் மனத்தில் உண்டாகும், பக்தியும், விசுவாசமும் அதிகம். அவர்கள் இந்தப் பஜனைக் கோஷ்டியாரைப் பக்த சிரோன் மணிகளாகக் கும்பிடுவார்கள்! நமஸ்கரிப் பார்கள். என்ன அறிவு! எவ்வளவு கேவலம்!

இது போகட்டும், இவர்கள் காலையில் எழுந்து தண்ணீரில் விழட்டும்; சன்னிபிறந்து சாகட்டும்; விடியற்காலத்தில் பொங்கல் சோற்றையும், பலகாரங்களையும் உண்ணட்டும்; அஜீரணத்திற்கு உள்ளாகட்டும்; காலரா நோய்க்கு ஆளாகட்டும்; பிறருக்கும் அந்நோயைப் பரவ வைக்கட்டும்; எந்தச் சந்தியிலாவது போகட்டும்; அதைப் பற்றி நமக்குக்கவலையில்லை. இதன் மூலமாக மக்கள் மனத்தில் முட்டாள்தனத்தை ஊட்டுகிறார்களே என்றுதான் கவலைப்படுகிறோம்.

மார்கழி மாதச் சனியன் இவ்வளவோடு விட்டதா! இல்லை! இல்லை! திருவிழாவுக்காக, வைகுண்ட ஏகாதசிக்காக, ஆருத்திரா தரிசனத்திற்காக, சீரங்கத்திற்கு ஓடச்செய்கிறது, சிதம்பரத்திற்கு ஓடச் செய்கிறது. குளிர்காலத்தில் பனிக்காலத்தில் காலராக் காலத்தில் எவ்வளவு தொல்லை! எவ்வளவு அலைச்சல்! எவ்வளவு பணச்செலவு! எவ்வளவு மூட நம்பிக்கை! எவ்வளவு முட்டாள்தனம்!

எதற்காகச் சீரங்கப் பயணம், எதற்காகச் சிதம்பர யாத்திரை! எல்லாம் மோட்சம் பெறத்தான்; மோட்சத்திற்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? மோட்சம் என்றால் சாவு என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு சாண் கயிறு கிடைக்கவில்லையா? அல்லது நமது அழகர் சொல்லுவது போல அரையணாவுக்குக் கவுரி பாஷாணம் கிடைக்கவில்லையா? இதுவும் இல்லா விட்டால், ரயில் தண்டவாளத்தில் போய்ப் படுத்துக் கொள்வதுதானே! இந்த மாதிரி சுகாதாரமற்ற பருவ காலத்தில் யாத்திரை செய்வதால் என்ன பலன் கிடைக்கிறது! பணம் செலவாகிறது; உடல் நலம் குன்றுகிறது, காலம் வீணாகிறது, தொற்று வியாதிகள் வருகின்றன; இவைதானே லாபம்! வேறென்ன? அறிவிருந்தால் ஆலோசித்துக் கொள்ளுங்கள்.

இம்மாதிரியான துன்பங்கள் ஏன் வருகின்றன? காரணம் என்ன? யோசித்துப் பார்த்தீர்களா? நீங்கள் யோசிக்காவிட்டாலும் நான் யோசித்துப் பார்த்தேன், சொல்லுகிறேன். மதம் என்னும் மடத்தனம், பக்தி என்னும் முட்டாள்தனம், மோட்சம் என்னும் கிறுக்கு, முன்னோர் வழக்கம் என்னும் மயக்கம், இவைகளால் தான் நாம் கெட்டலைகிறோம்! சீரழிகிறோம்! நான் சொல்லுவதைப் பற்றி திடீரென்று கோபித்துக் கொள்ள வேண்டாம். புத்தியைக் கொஞ்சம் செலவழியுங்கள்! மூளையைக் கொஞ்சம் உருகச் செய்யுங்கள்! விளங்கும்.

மார்கழி மாதத்தில் மேற்படி காரியங்களைச் செய்வதால் சந்தோஷமாகக் காலம் போக்குகிறோம் என்று சொல்ல வரலாம். சந்தோஷமாகக் காலம் போக்க இதுதானா வழி! முட்டாள்தனத்தையும், குருட்டு நம்பிக்கையையும் உண்டாக்கக் கூடிய செயல்களைப் புரிந்துதானா சந்தோஷப்பட வேண்டும்? சந்தோஷப்படுவதற்கு வேறு அறிவு வளர்ச்சியோடு கூடிய வழிகள் இல்லையா?

மார்கழி மாதக் கடைசியில், தை மாத முதலில் பொங்கல் பண்டிகையொன்று! அதற்கு எவ்வளவு தொல்லை! மனிதனுக்கு மாத்திரமா பொங்கல்! பொங்கல் நாலு நாள். பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பண்டிகையாம்! பொங்கலாம்! மாட்டுப் பொங்கலாம்! கன்னிப் பொங்கலாம்! இந்தப் பொங்கல்களில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களை என்ன சொல்லுவது? புதுஉடைகள் வாங்கி அணிந்து கொள்வார்கள் பலர்! சம்பந்தி வீடுகளுக்கு வரிசை அனுப்புவார்கள் பலர்! இவைகளில் ஆகும் செலவு அளவு கடந்தவை. வரிசை கொடுக்கும் வகையில் ஒருவர்க்கொருவர் சொந்தக்காரர்களுக்கு ஏற்படும் மனவருத்தங்கள் பல. எங்கும் படையல், சர்க்கரைப் பொங்கல் வேறு வெண் பொங்கல் வேறு. ஏழைகள் குடும்பங்களில் இந்தப் பொங்கல் சோறுகளை இரண்டு மூன்று தினங்களுக்கு வைத்துக்கொண்டு தின்று வியாதியடைவது வேறு. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வண்ணான், அம்பட்டன், தோட்டி, வேலைக்காரன் வீடுகள் தோறும் சோற்றுப் பிச்சைக்காக அலையும் பரிதாபமான காட்சி வேறு; இவ்வாறு பல வகையில் பொங்கல் பண்டிகை தொல்லைகளை உண்டாக்கி விடுகிறது. போதும் போதாமைக்கு ஆஸ்பத்திரிகளில் மருந்துச் செலவு அதிகம். டாக்டர்களுக்குத் தொல்லை. அட அப்பா! எவ்வளவு தொல்லை! பாழும் பொங்கல் பண்ணுவதைப் பாருங்கள்!

மார்கழி மாதச் சனியன் இம்மாதிரி பல வகையில் மக்களை அல்லோல கல்லோலப் படுத்தி விடுகின்றது, படுத்தி விட்டது; என்ன பரிதாபம்! நமது மக்கள் மூடத்தனத்தால், குருட்டுத்தனத்தால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளாகின்றனர். எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கள். இவை பயனில்லாத காரியங்கள்; வீணான காரியங்கள் என்று விளங்காமல் போகாது. இவைகளை நடத்தாவிட்டால் என்ன முழுகிப் போய்விடும். பூமி நடுக்கம் உண்டாகி நாம் பாதாளத்திற்குப் போய்விடுவோமா? கடல் புரண்டு வந்துவிடுமா? ஒன்றுமில்லையே. அப்படியிருந்தும் ஏன் பண்டிகைகளென்றும், விரதங்களென்றும் திரு நாட்களென்றும் அலைகின்றீர்கள். அந்நியர்கள், நாகரிமுடையவர்கள் நகைக்க இடம் கொடுக்க வேண்டாம். பயனுள்ள காரியங்களைச் செய்யுங்கள்! அறிவோடு செய்யுங்கள்! நாம் மற்ற நாட்டினரைப் போலப் பெருமையடையலாம்! சுதந்திரமடையலாம்! செல்வமடையலாம்! சமத்துவமடையலாம்! இது உறுதி! உண்மை! நிச்சயமாக நம்புங்கள்! நம்பாவிட்டால் எக்கேடு கெட்டாவது போங்கள்! மேலே சொல்லிய நமது விரதங்களையும், நமது பக்திகளையும், நமது பஜனைகளையும், நமது பண்டிகைகளையும், பிறர் பார்த்தால் சிரிக்க மாட்டார்களா? நாமே நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? கேலிக்கு இடமாகத் தோன்ற வில்லையா? வைதீகக் கண்ணுக்குப் பரிசுத்தமாகத் தோன்றலாம்! உண்மையாகத் தோன்றலாம்! தெய்வீகமாகத் தோன்றலாம்! அதைப் பற்றிக் கவலை இல்லை. நாகரிகக் கண்ணால் பாருங்கள்! அறிவுக் கண்ணால் பாருங்கள்! உண்மை விளங்கும். நான் பொய் சொல்லவில்லை; உண்மையாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கின்றேன்; நான் ஒரு ஸ்க்குரூஉலூஸ் என்று அலட்சியம் செய்ய வேண்டாம். வந்தனம், பிறகு சந்திக்கிறேன்.

-----------------------ஸ்க்ரூஉலூஸ் என்ற புனைப்பெயரில் தந்தைபெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை - “ குடிஅரசு”, 27-12-1931

கலைஞரும் - உலகத் தமிழ் மாநாடும்


தமிழால் ஒன்றுபடுவோம்!

1995 ஜனவரியில் தஞ்சையில் எட்டாவது உலகத் தமிழ் மாநாடு நடந்து முடிந்து 15 ஆண்டுகளுக்குப்பின் கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது.

தமிழ் செம்மொழி என்ற அறிவிப்புக்குப்பின் நடைபெறும் முதல் மாநாடு என்கிற முறையில் இம்மாநாட்டுக்குத் தனிச் சிறப்பு உண்டு.

எதிலும் அரசியல் என்னும் ஒட்டகமும் நுழையும் தன்மை தமிழ் மண்ணில் இருப்பதால், இதிலும் அதன் வாடை வீசத்தான் செய்கிறது.

முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களைப் பொறுத்தவரை மிகுந்த பொறுப்புணர்ச்சியுடனும், தன்னடகத்துடனும், கட்சிகளைக் கடந்து இம்மாநாடு ஒட்டுமொத்த தமிழர்களின் உண்மை உணர்வுகளை வெளிப்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் அவரின் அணுகுமுறைகள் சிறப்பாக அமைந்துள்ளன என்பது உண்மை.

ஒரு முதலமைச்சர் என்ற அதிகாரத் தோரணை சிறிதும் இன்றி, பங்கேற்க முடியாது என்று கூறுகிறவர்களையும் கூடப் பக்குவமாக எழுதி ஒருமைப்படுத்தும் பண்பாடு சாதாரணமானதல்ல.

இந்த அளவுக்கு இவர்களிடமும் ஒரு முதலமைச்சர் இறங்கிப் போகவேண்டுமா என்ற ஒரு கருத்துகூட ஏற்பட வாய்ப்புள்ளது. அந்தச் சம்பிரதாயங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, நோக்கத்தின் முக்கியத்தைக் கருதி, அதற்கு முதன்மை இடம் கொடுத்து, மிகப்பெரிய அளவுக்குப் பெருந்தன்மையைக் காட்டி நடந்துகொண்டு வருகிறார்.

இதற்கு மேலும் சில கட்சிகள், சில தலைவர்கள் இம்மாநாட்டைப் புறக்கணிக்க எத்தனிப்பது அத்தகையவர்களை வரலாறுதான் முழு அளவு அடையாளம் காட்டும்.

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்து சென்னையில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய காலகட்டத்தில், எதிரும் புதிருமாக அரசியலில் இருந்த நிலைமையை மறந்து காங்கிரஸ் கட்சியும் அதில் பங்கு கொண்டதை ஒரு முன் மாதிரியாகக் கொள்ளவேண்டும்.

தமிழ் செம்மொழி குறித்தும், உலகத் தமிழ் மாநாடுகள் குறித்தும் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் முரசொலியில் எழுதியுள்ள தொடர் கட்டுரைகள் தகவல்களின் ஆவணப் பெட்டகமாகும்.

தமிழ் செம்மொழிபற்றி யார் முதலில் கருத்துக் கொண்டார்கள் என்ற வரிசையில் பார்க்கப் போனாலும் திராவிட இயக்கத்திற்கு முக்கிய இடம் உண்டு.

1918 மார்ச் 30, 31 ஆகிய நாள்களில் நடைபெற்ற தஞ்சை, திருச்சி பார்ப்பனர் அல்லாதார் மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தீர்மானம் 8 (ஆ)

எல்லாப் பழைமையான மொழிகளைப் போல பழைமையான வளமான, உயர்தரமாக உருவாக்கப்பட்ட பலதிறப்பட்ட இலக்கியங்களைக் கொண்டது தமிழ்மொழி. இது பல்கலைக் கழகத்தால் பாரசீக, அரேபிய, சமஸ்கிருத மொழிகட்கு ஈடாக மதிப்பிட்டுச் செம்மொழி என ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.

முன்மொழிந்தவர்: திரு. ஜே.பி. நல்லுசாமி பிள்ளை பி.ஏ., பி.எல்., மதுரை. வழிமொழிந்தவர்: திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார், தமிழ்ப் பண்டிதர், எஸ்.பி.ஜி. கல்லூரி, திருச்சிராப்பள்ளி. ஆதரித்தவர்: திருமதி அலர்மேலு மங்கை தாயாரம்மாள், சென்னை.

இந்தப் பாரம்பரியத்தில் வந்த கலைஞர் அவர்கள் முதலமைச்சராகவிருக்கும் இந்தக் காலகட்டத்தில் தமிழ்மொழி செம்மொழியானதும், உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடப்பதும் வரலாற்றில் என்றென்றும் பேசப்படக் கூடிய புகழ்மிக்க அத்தியாயங்கள் ஆகும்.

வெறும் ஆர்ப்பாட்டம், கலை வண்ணம் என்கிற அளவோடு இம்மாநாடு முடிந்துவிடாமல், இந்திய ஆட்சி மொழிகளின் பட்டியலில் தமிழுக்குச் சிம்மாசனம் கிடைக்கவேண்டும் என்பது உள்பட பயனுள்ள நோக்கங்கள் நிறைவேற்றப்பட இம்மாநாடு உந்து சக்தியாக இருக்கும் என்கிற நன்னம்பிக்கையை முதலமைச்சர் கலைஞர் அவர்களின் உரையும், பேட்டியும் (31.12.2009) அளிக்கின்றன.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இதுவரை 1244 தமிழ்ப் பிரதிநிதிகள் பங்கேற்பர் என்ற செய்தி தமிழர்களின் காதுகளில் தேன் வந்து பாயக் கூடியதாகும்.

இந்தப் பெருமையிலும், சாதனையிலும் அனைத்துத் தரப்பினரும் தங்களுக்கும் பங்கு உண்டு என்று காட்டிக் கொள்ளவேண்டாமா?

வேறு எதிலும் ஒன்றுபட முடியாத தமிழர்கள், தமிழால் ஒன்றுபட்டனர் என்ற புது வரலாற்றைப் பதிவு செய்யவேண்டாமா? எதிர்மறைச் சிந்தனைக்கு விடை கொடுத்து நேர்முகச் சிந்தனைக்கு இடம் கொடுக்கவேண்டுமாய் தாய்க்கழகமும் கேட்டுக்கொள்கிறது.

----------------”விடுதலை” தலையங்கம் 2-1-2010

பெரியாருடைய வாழ்வியல் பல சிக்கல்களுக்கு விடை தரும்

பெரியாருடைய கருத்துகள் வாழ்க்கைக்கு தேவையானவை; பின்பற்றி முன்னேறுங்கள்
சிங்கப்பூரில் பெரியாரை பிரதிபலித்தார் தமிழர் தலைவர்

தந்தை பெரியாருடைய கருத்துகள் வாழ்வியல் கருத்துகள் மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன்படக்கூடிய கருத்துகள் அவருடைய கருத்துகளை பின்பற்றி வாழ்க்கையில் முன்னேறுங்கள் என்று திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.

சிங்கப்பூர் நாட்டில் 8.11.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர்தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மணமக்களுக்கு அறிவுரையில் கூட

தந்தை பெரியார் அவர்கள் மணமக்களுக்கு அறிவுரையில் கூட, சிக்கனமாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துவார். உங்களுக்கு ஒரு ரூபாய் வருமானம் வந்தால் 75 காசை செலவழித்து 25 காசை சேமிக்க வேண்டும் என்று கூறுவார். அதற்கு என்ன வழி என்று கேட்டால் ஆடம்பரத்தைக் குறைத்து வாழுங்கள். தேவைக்கு ஏற்ப செலவழியுங்கள், வாழுங்கள் என்று சொல்லிவிட்டுச் சொன்னார்,

மனிதன் உண்மையான சுயமரியாதையைக் கொண்டவனாக இருக்க வேண்டுமானால் அவன் கடன் வாங்கத் தெரியாதவனாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.

கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாதவனாக இருந்தால் யாருக்காகவும் தலை வணங்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் கடன் வாங்கிவிட்டால் பல பேரைக் கண்டு ஒளிய வேண்டிய அவசியம் ஏற்படும்.

சிறையில் ஒருவருக்கு மட்டும் மகிழ்ச்சி

எங்கள் நாட்டிலே நாங்கள் எல்லாம் மிசா கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். என்ன காரணம் என்று தெரியாமல் அடைத்தார்கள். மிசா காலத்தில் சிறைக்குள் வந்தவர்களில் ஒரே ஒருவர்தான் மகிழ்ச்சியாக வந்தார்.

என்னய்யா? நீ மட்டும் சிறையில் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களே என்ன காரணம் என்று கேட்டேன். அண்ணே, பத்து பேருக்கு மேலே நான் வெளியில் கடன் வாங்கியிருக்கிறேன். நான் வெளியே இருந்தால் அவனெல்லாம் ரொம்ப தொந்தரவு கொடுக்கின்றான். ஆகவேதான் நான் நிம்மதியாக சிறைச்சாலைக்கு வந்துவிட்டேன். அவன் இங்கு வர முடியாது.

எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் நான் சிறையில் இருக்கிறேன். ஏனென்றால் வெளியே போனால் அவ்வளவு கடனையும் என்னால் திருப்பி கொடுக்க முடியாது என்று சொன்னார். சிலபேர் இப்படி நிம்மதியாக இருக்கிறவர்களும் உண்டு.

தவறாகக் கூட்டிவிட்டால்

நாணயத்தோடு இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் சிலர், அப்படி முடியவில்லை என்றால் தற்கொலை கூட பண்ணிக் கொள்கிறார்கள். தவறான ஒரு கூட்டுப் புள்ளி இது. ஒரு இடத்தில் நாம் தவறாக கூட்டி விட்டோம் என்றால் எவ்வளவு பெரிய நிபுணர் வரையிலே கூட்டினாலும் தவறாகத் தான் வரும். எனவே, அடிப்படையிலேயே அந்தப் புள்ளியை வாழ்வியலை அடிப்படையிலே அமைத்துக் கொள்ள வேண்டுமென்று விரும்பியவர் பெரியார்.

எனவே, தந்தை பெரியார் அவர்கள் கண்ட வாழ்வியல் இருக்கிறதே, அது கட்சிக்கு ஒரு ஜாதிக்கு ஒரு இனத்துக்கு ஒரு நாட்டுக்குச் சொந்தமானதல்ல.

மனித இனம் முழுவதற்குமே சொந்தமான தத்துவம். எனவே மனிதகுல மாமேதையாக தந்தை பெரியார் அவர்கள் திகழ்ந்தார்கள்.

அடக்கத்தோடு சொல்லுவார்

இளைய தலைமுறையினருககுச் சொல்லிக் கொள்கின்றேன். அய்யா அவர்கள் பேசும் பொழுதே சொல்லுவார்,

நான் மகான் அல்ல. அவதார புருஷர் என்று பலர் சொல்லுவார்கள். நான் அவதார புருஷரும் அல்லர். நான் ஒரு மனிதன். மனிதர்களுக்குள்ளே பேதம் இருக்கக் கூடாது என்று கருதக் கூடிய ஒரு தொண்டன் என்று தன்னை அடக்கத்தோடு அறிமுகப்படுத்திக்கொள்வார்.

அப்படிப்பட்ட தந்தை பெரியாரின் கருத்துகள் உலகம் முழுவதும் இன்றைக்கு ஒளிவண்ணமாகப் பரவுகிறது. ஒலியாக எங்கு பார்த்தாலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ஒரு கோணத்தில் மட்டும்

பெரியாரைப் பற்றி பல நாள்கள் நாம் பேசலாம். நான் ஒரே ஒரு கோணத்திலே மட்டும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி நேரத்தைக் கருதி எடுத்துச் சொல்லியிருக்கின்றேன்.

எனவே பெரியாரைப் படியுங்கள். ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் சொல்ல மாட்டோம். பெரியாரைப் புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்து கொள்ளவில்லையானால் அது பெரியாருடைய தவறு அல்ல; மனிதர்களுடைய தவறு. பெரியாருடைய வாழ்வியல், பல சிக்கல்களுக்கு உங்களுக்கு விடை தரும்.

பெரியார் ஒரு சூரியன்

எவ்வளவு பெரிய சோதனைகள் ஏற்பட்டாலும் எவ்வளவு பெரிய வேதனைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் பெரியார் தத்துவத்திற்கு முன்னாலே வைத்துப் பார்க்கும் பொழுது சூரியனைக் கண்டு பனி உருகுவதைப் போல என்று சொல்லுவார்கள், அது போலத்தான்.

இங்கே இணைப்புரை வழங்கிய கவிஞர் அன்பழகன், பிறகும் பாராட்டிச் சொன்னார். பாராட்டு கேட்பது எவ்வளவு சங்கடம் என்று நான் முதலிலே சொன்னேன். சூரியன், சந்திரன் என்றெல்லாம் சொன்னார்கள்.

தந்தை பெரியார் என்பவர் ஒரே ஒரு சூரியன் தான். உலகத்திற்கே ஒரு சூரியன். பெரியார் காலத்திலேயே பெரியாரால் உணர்வு ஊட்டப்பட்டவர்கள் இருக்கலாம்; பெரியாரால் தழைத்தவர்கள் இருக்கலாம்; பெரியாருடைய ஒளிக்கதிர்களாக பலர் இருக்கலாம்.

புவி வெப்பமாவதற்கு யார் காரணம்?

புவி இன்றைக்கு வெப்பமயமாவதற்கு என்ன காரணம்? மனிதர்கள் தான், காரணமே தவிர சூரியன் அதற்கு பொறுப்பு அல்ல. நாம் மரக்கன்றுகளை நடுவதில்லை. மரத்தை நாம் வெட்டிக் கொண்டேயிருக்கின்றோம். வெப்பம் எப்பொழுதும் போல் இருக்கிறது. அதே அளவுக்குத் தான் வெப்பம் இருந்து கொண்டிருக்கிறது.

அது போல பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் தத்துவங்களை வாழ்வியலாகக் கொள்ளுங்கள். கடைசியாக ஒன்றைச் சொல்லி விடைபெற விரும்புகிறேன்.

பெரியார் ஒரு பேரங்காடி

தந்தை பெரியார் அவர்கள் ஒரு பேரங்காடி. சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுகிறீர்களே அந்த பேரங்காடியில் எல்லா பொருள்களும் இருக்கும். யாருக்கு எது தேவையோ அதை வாங்கலாம், எடுத்துப் போகலாம். அத்தனைப் பொருள்களையும் வாங்கிக் கொண்டு போங்கள் என்று நாங்கள் வலியுறுத்த மாட்டோம். சில்லறை கடைகளில் வாங்கினால் கடன் கொடுப்பார்கள். அப்படி வாங்கினால் வசதியாக இருக்கும் என்று கருதக் கூடியவர்கள் இருக்கின்றார்கள்.

வசதியைக் கருதி இந்தத் தெருவுக்குள்ளேயே வாங்கிக்கொள்ளலாம் என்று நினைப்பவர்கள் இருப்பார்கள். ஆனால் இந்த பேரங்காடி இருக்கிறதே நாணயமாக எல்லா சரக்குகளையும் கொண்டது. அதனுடைய அறிவு நுழையாத துறை இல்லை. அவருடைய சிந்தனை பாயாத துறை இல்லை. ஆகவே அந்த சிந்தனை அறிவு என்பது நமக்காக_அவருக்காக அல்ல. வாழ்வியலில் ஒரு புதிய திருப்பத்தை உண்டாக்கக் கூடிய பெரியார் என்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தத்துவங்களாக இருந்து கொண்டிருக்கின்றார்கள். அதை சிறப்பாக சிங்கப்பூர் நாட்டிலே நீங்கள் செய்வதன் மூலமாக வேறு எவரையும் விட நீங்கள் அருமையாக நடத்தியிருக்கின்றீர்கள்.

கொள்ளுவதற்கு மட்டுமல்ல, தள்ளுவதற்கும் உரிமை உண்டு

தமிழ்நாட்டிலே கூட இவ்வளவு அருமையாக விழா நடந்தது என்று சொல்ல முடியாது. என்கின்ற அளவிற்கு அவ்வளவு அருமையாக அவ்வளவு கட்டுப்பாடாக ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் காட்டி வருகிறீர்கள். உங்களுக்கு என்னுடைய தலை தாழ்ந்த நன்றி. இவ்வளவு நேரம் உங்களை காக்க வைத்திருக்கின்றேன். நான் சொன்ன கருத்துகளை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள்.

நான் சொன்ன கருத்துகளை ஏற்க வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன். அந்தக் கருத்துகளை தள்ளுவதற்கு முழு உரிமை உண்டு. எனவேதான் எனக்கு சொல்லுவதற்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் சொல்லுகின்றோம். தயவு செய்து சிந்தியுங்கள்; சரி என்று பட்டால் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். சரிதான்; ஆனால் என்று போட்டு விடாதீர்கள். பல பேர் சரிதான்; ஆனால் என்று போட்டுவிடுகிறார்கள். தமிழர்கள் வளராததற்குக் காரணமே இந்த ஆனால்தான். ஆனால் போடாதீர்கள்!

ஆகவே தயவு செய்து ஆனால் என்று போடாதீர்கள். சரி என்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். தவறு என்றால் விட்டுவிடுங்கள். அது உங்களைப் பொறுத்தது.

மக்களை முன்னேற்றுங்கள்

உங்களுடைய வாழ்வைப் பொறுத்தது. எனவேதான் பெரியார் கண்ட வாழ்வியல் வழியில் வாழ்வோம், வளர்வோம், முன்னேறுவோம், மக்களை முன்னேற்றுவோம் என்று கூறி முடிக்கிறேன்.

இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.


---------------------"விடுதலை” 2-1-2010

2.1.10

இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி மக்களவையில் தொல். திருமா

இராமன்தான் மிகப்பெரிய பயங்கரவாதி
மக்களவையில் தொல். திருமாவளவன் உரை

மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே நேற்றும் இன்றும் லிபரான் அறிக்கை தொடர்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிற விவாதங்களை நாடே உன்னிப்பாகக் கவனித்து கொண்டிருக்கிறது. இந்த விவாதங்களுக்குப்பின்னர் ,அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்றும் நடுநிலையான அரசியல் ஆர்வலர்கள் மிகுந்த ஆவ-லுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் வழக்கமான கமிஷன் அறிக்கைகளைப் போல இதுவும் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டுவிடுமோ என்கிற அய்யமும் பொது மக்களிடையே உள்ளது. எனவே அரசு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

ஊருக்குத் தெரிந்த உலகத்திற்கே தெரிந்த உண்மையைத்தான் 17 ஆண்டுகளுக்குப்பிறகு ,லிபரான் இந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார் .இதில் புதிய உண்மைகளையோ அதிர்ச்சியடையக்கூடிய புதிய சதிகளையோ கூறிவிடவில்லை இந்த அறிக்கையில் எமக்கு ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. எனினும் துணிவாக சில உண்மைகளை லிபரான் பதிவு செய்துள்ளார்.அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் .குறிப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பேயி, அத்வானி, முரளிமனோகர் ஜோஷி போன்றவர்கள் பாபர் மசூதி இடிப்புக்குக் காரணமானவர்கள் என்றும் ஆர்எஸ்எஸ், சிவசேனா, பாரதிய ஜனதா ஆகிய அமைப்புகளைச்சார்ந்தவர்களும் திட்டமிட்டே மசூதியை இடித்துத் தரை மட்டமாக்கியுள்ளனனர் என்றும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும் லிபரான் கூறியுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு இஸ்லாமியர்கள் அளித்துவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகை யிலாவது ,இந்த அரசு தவறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் இது முஸ்லிம்களுக்கு காங்கிரசு கட்சி துரோகமிழைத்ததாக அமையும், இந்த மண்ணில் ராமனின் பெயரால், பாபர் மசூதியை மட்டுமல்ல பௌத்த ,சமண மடங்களையும் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வன்முறையின் மூலம் இடித்துத் தள்ளி ,அங்கே இந்து கோயில்களை எழுப்பி யுள்ளனர் .ராமனின்பெயரால் சிவபக் தனான இராவணனையே அழித்திருக் கிறார்கள் என்பதை இராமாயணம் என்கிற புராணத்தின் மூலம் அறிய முடிகிறது. இவர்களின் கூற்றுப்படி பார்த்தால் இராமன் தான் மிகப்பெரிய பயங்கரவாதி என்று தெரிய வருகிறது.

அந்த வகையில் இராமனின் வாரிசுகளாகத்தங்களைச் சொல்லிக்கொள்ளும் வாஜ்பேயி ,அத்வானி, ஜோஷி போன்ற இந்துத்துவப் பயங்கரவாதிகள் அனைவரையும் அரசு உடனே கைதுசெய்ய வேண்டும்.

அமெரிக்காவில் இரட்டைக்கோபுர கட்டடங்களை இடித்தவர்கள் பயங்கரவாதிகள் என்கிறபோது, பாபர் மசூதியை இடித்தவர்கள் மட்டும் மிதவாதிகளா? அதனால் தான் லிபரான் தனது அறிக்கையில் வாஜ்பேயி, அத்வானி போன்றவர்களை போலி மிதவாதிகள் என்கிறார். அப்படியென்றால் பயங்கரவாதிகள் என்று தான் மறைமுகமாக கூறுகிறார்.

எனவேஇந்துத்துவப்பயங்கரவாதிகள் 68 பேரையும் உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும். மதவெறியர்களுக்கு இதன்மூலம் ஒரு பாடம் புகட்டவேண்டும் என்று கூறி நிறைவு செய்கிறேன். இவ்வாறு கூறினார்..


-------------------நன்றி:- “விடுதலை” ஞாயிறுமலர் 2-1-2010 பக்கம் - 3

பார்ப்பான் தமிழினத்தின் பரம எதிரி என்பதற்கு இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் தேவை?

துக்ளக் தர்பார்!


கேள்வி: மாவோயிஸ்ட்களின் போராட்ட வழிமுறை தவறாக இருக்கலாம்; ஆனால் போராட்டத்தின் காரணங்கள் நியாயமானவையே என்கிறாரே டாக்டர் ராமதாஸ்?

பதில்: இந்த மாதிரி வாதம் அனேகமாக எந்த வன்முறைக்குமே பொருந்தும். இப்படி வாதிட்டு, எல்லா வன்முறைகளையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், அதற்குப்பின் நாட்டில் அமைதி என்பது அர்த்தமற்ற சொல்லாகி விடும்.

(துக்ளக் 23.12.2009 பக்கம் 13,14)

வன்முறைபற்றி துக்ளக் சோ ராமசாமியின் கருத்து இதுதான் என்றால், இதே கண்ணோட்டம் பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள்மீது பாயாதது ஏன்?

பா.ஜ.க.வும் சங்பரிவார்க் கூட்டமும் பாபர் மசூதியைத் திட்டமிட்டு இடித்தன என்று நீதிபதி லிபரான் ஆணையம் சொன்னால், சாட்சிகள் இருக்கின்றனவா? என்று அதே இதழில் தலையங்கம் தீட்டும் சோ ராமசாமிதான் மாவோயிஸ்ட் விஷயத்தில் அந்தர் பல்டி அடிக்கிறார்.

வன்முறையை எதிர்ப்பது போல் நடிக்கும் திருவாளர் சோ மனுதர்மத்தை மாய்ந்து மாய்ந்து பாராட்டி எழுதுவது ஏன்?

அந்த மனுதர்ம சாஸ்திரம் வன்முறையை எதிர்க்கிறதா? தூண்டுகிறதா?

வர்ணாசிரமபடி சூத்திரன் நடக்கவில்லையென்றால் பிராமணர்கள் ஆயுதம் எடுத்துப் போராட வேண்டும் (அத்தியாயம் 8, சுலோகம் 348) என்றுதானே மனுதர்மம் கூறுகிறது.

சம்பூகன் தவமிருந்தான் என்றுகூறி ராமன் வாளால் வெட்டிக் கொன்றானே அது வன்முறையில்லையா?

இந்து மதக் கடவுள்கள் கைகளில் கொலைகார ஆயுதங்களை ஏந்தி நிற்கின்றனவே அவை எல்லாம் அகிம்சையின் சின்னங்களா?

இந்துமதக் கடவுள்கள் சண்டை போட்டுள்ளனவே - கொலை செய்துள்ளனவே-கற்பழித்துள்ளனவே அவை எல்லாம் எந்த பட்டியலைச் சேர்ந்தவை?

கேள்வி: குஜராத் கலவர வழக்கில் மோடியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டதே! விசாரணையின் முடிவு எப்படியிருக்கும்?

பதில்: நடந்தவற்றை எடுத்துக்கூற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. இதைச் சரியாகப் பயன்படுத்தி உண்மையை ஊருக்கு உணர்த்துவோம்! என்ற நினைப்புடன், குஜராத் முதல்வர் இதை அணுகினால் நல்ல பயன் இருக்கும். ஆனால் விசாரணைக் கமிஷன் பாரபட்சமாக நடந்து கொண்டால் அது பிரச்சினையாகத்தான் முடியும்.

(துக்ளக் 12.8.2009)

எவ்வளவு சாமர்த்தியமான பதில்! ஏற்கெனவே உச்சநீதிமன்றம் மோடியின் மண்டை பொத்துக் கொள்ளும் வகையில் ஆழமாகவே குட்டியிருக்கிறது.

நீரோமன்னன் என்றுகூட விமர்சித்திருக்கிறது. மோடி அரசாங்கம் வேண்டுமென்றே கைவிட்ட வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்களை பேட்டி எடுத்து டெகல்கா ஊடகம் மோடியின் வன்முறைத் தூண்டுதல்களைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறது. சிறுபான்மையினர்களைக் கொன்று குவிக்க, அவர்களின் உடைமைகளை எல்லாம் தீயிட்டுப் பொசுக்க முதல் அமைச்சர் நரேந்திரமோடி எப்படியெல்லாம் ஆணை வழங்கினார் _ காவல்துறைக்கு என்னென்ன ஆணைகளைப் பிறப்பித்தார் என்பதை வெளிப்படையாகவே பேட்டிகளில் கூறியிருக்கின்றனர்.

2000 சிறுபான்மை மக்கள் படுகொலை செய்யப்பட்டது யார் ஆட்சிக் காலத்தில்? மோடி முதல்வராகயிருந்தபோது தானே! அதற்கான தார்மீகப் பொறுப்பு யாரைச் சார்ந்தது? ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சோ ராமசாமி அய்யர் மோடி விஷயத்தில் மட்டும் முரண்பட்டு மோதிக் கொள்வது ஏன்? அடி மனத்தில் ஆர்.எஸ்.எஸ். நஞ்சு பாய்ந்து இருப்பதால் தானே இப்படியெல்லாம் ஆளுக்குத் தகுந்தாற்போல விமர்சனம்?

பாபர் மசூதியை இடித்தால் அது வன்முறையல்ல; இஸ்லாமியர்களைக் கொன்று குவித்தால் அது வன்முறையல்ல; மற்றவர்கள் இதில் ஆயிரத்தில் ஒன்று செய்தால் அய்யய்யோ, அய்யய்யோ வன்முறை! வன்முறை!! என்ற கூச்சல் என்றால், இந்தப் பார்ப்பனத்தனம் - இந்தப் பூணூல்தனம் பெரியார் சகாப்தத்தில் எடுபடாது - எடுபடவே எடுபடாது என்று எச்சரிக்கிறோம்.

விசாரணைக் கமிஷன் என்பது இவர்கள் எதிர்பார்க்கிற மாதிரி வந்தால் பாரபட்சமற்ற தன்மை! மோடி அரசின் சட்ட மீறல்களை அது தோலுரித்தால் படுகொலைகளுக்குக் காரணம் மோடி அரசுதான் என்று ஆணையம் சொன்னால் அது பாரபட்சமாக நடந்து கொண்டதாக அர்த்தம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பிரச்சினையாக முடியும் என்று அச்சுறுத்துகிறார் அக்கிரகாரவாசி.

ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் மனுதர்மப் புத்தி கொண்ட இந்தப் பார்ப்பனர்களை எது கொண்டு சாற்றினாலும் ஜென்மத்தோடு பிறந்த புத்தி சிறிதும் அசைந்து கொடுக்காது. இதற்கு இதைவிட வேறு என்ன சாட்சியம் ஆவணம் தேவை?

கேள்வி: அரிசி, பருப்பு, பூண்டு, சமையல் எண்ணெய் என்று எல்லா சமையல் பொருட்களின் விலையும் தாறுமாறாக ஏறி விட்டதே! கீழ்த்தட்டு மக்களின் நிலைமை என்னவாகும்?

பதில்: அதனால் என்ன? வயிறாரச் சாப்பிட முடியாததால், லிவர் பாதிக்கப்பட்டால் இருக்கவே இருக்கிறது. தமிழக அரசின் உடல் நலப் பாதுகாப்பு இன்ஸுரன்ஸ் திட்டம் அதன்கீழ் சிகிச்சை பெற்று, பிறகு புதிய தெம்புடன் மீண்டும் பட்டினி கிடக்கலாமே!

(துக்ளக் 12.8.2009 பக்கம் 27)

ஏழை எளிய மக்களுக்கு உதவிகரமான இந்தத் திட்டத்தால், இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட குறைந்த கால அளவிலேயே பெரும் பலன் அடைந்துவருகின்றனர். பலன் பெற்ற மக்கள் வாயார மனமார நன்றியுணர்ச்சியுடன் கலைஞர் அரசைப் பாராட்டுகிறார்கள், வாழ்த்துகிறார்கள்.

ஆனால், துக்ளக் பார்ப்பன வயிறு எப்படியெல்லாம் கொதிக்கிறது? ஏழை எளிய மக்கள் பயன் அடைந்தால் அவாளுக்குப் பொறுக்குமா?

ஏழை - எளிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்றால், அது அவாள் அவாள் தலையெழுத்து, பூர்வ ஜென்ம பலன் என்றல்லவா கை விட்டுவிட வேண்டும்?

அவாளுக்குப் போய் உதவி செய்யலாமா என்கிற பார்ப்பனத்தனம்தானே இங்கே பதைபதைக்கிறது?

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டமா? அது தமிழ்நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் திட்டம்; அது கூடவே கூடாது. ராமன் என்றால் சாதாரணமாய்? விஷ்ணுவின் அவதாரம் ஆயிற்றே அவன் பெயரால் உள்ள பாலத்தை இடிக்கலாமா? அபவாதம், அபவாதம் என்று துடிப்பு!

ஈழத் தமிழர் பிரச்சினையா? ஈழத் தமிழர்களாவது, ஈனத் தமிழர்களாவது. அவர்கள் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன? அவர்களுக்கு உதவக் கூடாது, உதவவே கூடாது என்று கூச்சல் போடும் குடுமித்தனம்.

பார்ப்பான் தமிழினத்தின் பரம எதிரி என்பதற்கு இன்னும் எத்தனை எடுத்துக்காட்டுகள் தேவை?

தேவநாதன்களும், திவாரிகளும் பார்ப்பனக் கலாச்சாரத்துக்குக் கண் எதிரே தெரியும் எடுத்துக்காட்டுகள்!

அவாளின் ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் கதையே கூவத்தைவிட குடலைப் பிடுங்கித் தின்கிறது.

அசோக் நகர் அனுராதா, கும்பகோணம் வனஜா, ஆந்திரா ஜெயா, சென்னை சொர்ணமால்யா சிறீரங்கம் உஷா என்று சங்கராச்சாரியாரின் அந்தரங்க உறவுகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

தேவநாதன் கோயிலுக்குள் கர்ப்பக்கிரகத்துக்குள் சரசக் கடலில் நீந்தினார் என்றால், அவரது குருநாதரான சங்கராச்சாரியாரோ மடத்துக்குள்ளேயே காலைக் காட்சி, பகல் காட்சி, மேட்னிக் காட்சி, பகல் - இரவுக் காட்சி என்று புரண்டு எழுகிறார்.

இந்த யோக்கிய சிகாமணிகள் பேனா எடுத்து சிலம்பம் விளையாட எத்தனித்தால் எதிரடி எரிமலைக் குழம்பாகவே இருக்கும், எச்சரிக்கை!

------------------மின்சாரம் அவர்கள் 2-1-2010 “விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை